இந்தியாவில் வேலை நிறுத்தமும் கதவடைப்பும்
உ. தாமரைச்செல்வி
வேலை நிறுத்தம்
தொழிலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் வேலை நிறுத்தம்தான். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் மூலம் நிர்வாகத்தைப் பணிய வைத்துத் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளைப் போன்று இந்தியாவிலும் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழுமையானது அல்ல. ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன்பும், செய்யப்பட்ட பின்பும் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றாவிட்டால் வேலை நிறுத்தம் சட்டவிரோதமாகி விடும். இந்தியாவில் வேலைநிறுத்தம் என்பதைத் தொழிற்தகராறுகள் சட்டம் பிரிவு-2(q)ன்படி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி வைத்தல் அல்லது பொதுவான நோக்கத்துடன் திட்டமிட்டு வேலையைச் செய்ய மறுத்தல் என்று வரையறை செய்யப்படுகிறது. இதன்படி
1. தொழிலாளர்கள் அனைவரும் பொதுக்கருத்துடன் ஒன்று சேர்ந்து வேலையை நிறுத்தி இருக்க வேண்டும் அல்லது வேலை செய்ய மறுத்திருக்க வேண்டும்.
2. வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும்.
3. வேலை செய்ய மறுப்பது தொழிலாளர்களின் திட்டமிட்ட கூட்டுச் செயலாக இருக்க வேண்டும்.
4. வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் செய்யும் வேலையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
வேலை நிறுத்த வகைகள்
வேலை நிறுத்தத்திற்கென்று குறிப்பிட்ட வகைகள் எதுவுமில்லை. இருப்பினும் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். இதனடிப்படையில் வேலை நிறுத்தம் கீழ்காணும் வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. பொது வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நேரத்தில் செய்யும் வேலை நிறுத்தம் பொது வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
2. அடையாள வேலை நிறுத்தம்
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிர்வாகங்களுக்கு தங்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காகவும், தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்காமல் விடப்பட்டால் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதன் அடையாளமாகவும் ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மாற்றுமுறையில் மட்டும் வேலை நிறுத்தம் செய்வது அடையாள வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
3. உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
தொழிற்சாலைக்கு உள்ளே இருந்து கொண்டு வேலை செய்ய மறுக்கும் நிலைக்கு உள்ளிருப்பு வேலை நிறுத்தம் என்று பெயர்.
4. அனுதாப வேலை நிறுத்தம்
ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றொரு தொழிற்சாலையில் நடக்கும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது அனுதாப வேலை நிறுத்தம் எனப்படுகிறது.
5. உண்ணாவிரதப் போராட்டம்
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான மூரையில் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது உண்ணாவிரதப் போராட்டம் எனப்படுகிறது.
6. சட்டப்படியான வேலையை மட்டும் செய்யும் போராட்டம்
சாதாரணமாக தொழிலாளர்கள் தங்கள் வேலையைச் செய்யும் போது அதனோடு தொடர்புடைய மற்ற வேலைகளையும் செய்வார்கள். ஆனால் இவ்வகையான வேலை நிறுத்தத்தின் போது தங்களுக்கு இடப்பட்ட சட்டப்படியான வேலையை மட்டும் அவர்கள் செய்வதால் வேலை தாமதமாகி உற்பத்திக் குறைவு ஏற்படுகிறது. இவ்வகை வேலை நிறுத்தம் பொதுப்பணிகளில் அதிகம் நடைபெறும்.
7. முற்றுகைப் போராட்டம்
தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்நிறுவனத்தின் முதலாளி அல்லது நிர்வாகியை ஒரு இடத்திலிருந்து செல்ல விடாமல் தடுத்து அவரைச் சுற்றி அமர்ந்து முற்றுகையிடுவதாகும். ஆனால் இது ஒரு நபரை அவருடைய பணியைச் செய்யவிடாமல் சட்டவிரோதமாகத் தடுத்து சிறைவைப்பது போன்றதாகக் கருதப்படுவதால் இது சட்டத்தின் மூலம் தண்டிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
வேலை நிறுத்த உரிமையின் மீதான கட்டுப்பாடுகள்
இந்தியாவில் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை முழு உரிமையுடையது அல்ல. தொழிற்தகராறுகள் சட்டம் - 1947 வேலை நிறுத்தத்தின் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. வேலை நிறுத்தம் கட்டுப்பாடுகளின்றி இருந்தால் நாட்டின் தொழில் அமைதி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து போகக் கூடும் எனும் அச்சமே இக்கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழிற்தகராறுகள் சட்டம் வேலை நிறுத்தத்தின் மீது பொதுவாகச் சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்வதற்கு சில கூடுதல் நிபந்தனைகளை விதிக்கிறது.
I. பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள்
பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செய்வதற்கு முன்பு சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை.
1. வேலை நிறுத்தம் செய்வதற்கு 6 வாரங்களுக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு ஒன்றை நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.
2. இத்தகைய அறிவிப்பு தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்னரே வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
3. அந்த அறிவிப்பில் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது.
4. ஒரு கோரிக்கை குறித்து சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அந்த சமரச பேச்சுவார்த்தை முடிந்து 7 நாட்களுக்குள்ளாக, அதே கோரிக்கை குறித்து வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
சட்டவிரோதமான வேலை நிறுத்தம்
மேற்காணும் 4 நிபந்தனைகளில் ஒன்றில் மீறினாலும் அது பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் சட்டவிரோதமான வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
II. பிற தொழில்களில் கட்டுப்பாடுகள்
1. பொதுப்பயன்பாட்டுப் பணிகள் தவிர இதர தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித அறிவிப்பும் தராமல் தாமாகவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆனால் அது கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
2. சில கோரிக்கைகள் குறித்து சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7 நாட்கள் நிறைவடையும் முன்பாக வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
3. தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அல்லது அவை முடிவுக்கு வந்து 2 மாதங்கள் நிறைவடையும் முன்பாக அதே கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தத்தில் செல்லக் கூடாது.
4. வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்து அத்தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அத்தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்யக் கூடாது.
சட்டவிரோதமான வேலை நிறுத்தம்
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்படும் போது அத்தகைய வேலை நிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம் என்றாகி விடும்.
சட்டவிரோத வேலை நிறுத்தத்தின் விளைவுகள்
1. சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அந்த வேலை நிறுத்த காலத்திற்கு உரிய சம்பளம் பெற தகுதியற்றவர்களாகின்றனர்.
2. நிர்வாகம் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
3. சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் போது வேலை செய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களைத் தடுக்கும் நோக்குடன் வன்முறையில் ஈடுபடும் தொழிலாளர்களை நிர்வாகம் வேலை நீக்கம் செய்யலாம்.
4. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கம் தனக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்புகளை இழந்து விடாது.
5. சட்ட விரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்தினால் மட்டுமே தொழிலாளி - முதலாளி உறவு முடிவுக்கு வந்து விடாது.
கதவடைப்பு
கதவடைப்பு எனப்படுவது தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வாகம் தானாகவே தொழில் நிறுவனத்தை மூடிக் கொள்ளும் நிலை. இந்தியத் தொழிலாளர் நலச் சட்டம் 2(L) பிரிவின்படி தொழில் நடக்கும் இடத்தைத் தற்காலிகமாக மூடுவது அல்லது தற்காலிகமாக தொழிலை நிறுத்தி வைத்தல் அல்லது தற்காலிகமாகத் தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்தல் கதவடைப்பு எனப்படும்.
கதவடைப்பு உரிமை மீதான கட்டுப்பாடுகள்
கதவடைப்பு உரிமையானது தொழில் தொடங்கும் உரிமையைப் போன்று அடிப்படை உரிமையல்ல. எனவே கதவடைப்பு உரிமையின் மீது இந்தியத் தொழிற் தகராறுகள் சட்டம் -1947 பொதுப் பயன்பாட்டுப் பணிகளிலும், மற்ற பணிகளிலும் சில நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது.
I. பொதுப்பயன்பாட்டுப் பணிகளில் கட்டுப்பாடுகள்
பொதுப்பயன்பாட்டுப் பணிகளில் வேலை நிறுத்தம் செய்வதற்குரிய நிபந்தனைகளே கதவடைப்பு செய்வதற்கும் பின்பற்றப்பட வேண்டும். அவை
1. கதவடைப்பு செய்வதற்கு 6 வாரங்களுக்கு முன்பாக அதுகுறித்த அறிவிப்பு ஒன்றினை வழங்க வேண்டும்.
2. அத்தகைய அறிவிப்பு தந்து 14 நாட்கள் முடிவதற்கு முன்பு கதவடைப்பு செய்யக் கூடாது.
3. கதவடைப்பு செய்யப் போவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட நாளுக்கு முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.
4. ஒரு கோரிக்கை அல்லது சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அந்த சமரச பேச்சுவார்த்தை முடிந்து 7 நாட்களுக்குள்ளாக அதே கோரிக்கை குறித்து கதவடைப்பு செய்தல் கூடாது.
சட்டவிரோதக் கதவடைப்பு
இந்த 4 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினாலும் அக்கதவடைப்பு சட்டவிரோதமான கதவடைப்பு ஆகிவிடும். ஒரு வழக்கில் பொதுப் பயன்பாட்டுப் பணிகளில் ஒப்பந்தத்தை மீறி செய்யப்படும் வேலை நிறுத்தமும், சமரச நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது அல்லது அது முடிவடைந்த 7 நாட்களுக்குள் செய்யப்படும் கதவடைப்பும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பிற தொழில்களில் கதவடைப்பு
1. பிற தொழில்களில் வேலைநிறுத்தம் செய்வதற்குரிய நிபந்தனைகள் கதவடைப்பு செய்வதற்கும் பொருந்தும்.
2. சில கோரிக்கைகள் குறித்து சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது அல்லது அவை முடிவு செய்யப்பட்டு 7 நாட்கள் நிறைவடையும் முன்பாக கதவடைப்பு செய்யக் கூடாது.
3. தொழிலாளர் நீதிமன்றம், தொழில் தீர்ப்பாயம், தேசியத் தீர்ப்பாயம், இசைவுத் தீர்ப்பாயம் ஆகியவற்றில் வழக்கு நிலுவையிலுள்ள போது அல்லது அவை முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் முடிவடையும் முன்பாக அதே தாவாவின் காரணமாக கதவடைப்பு செய்யக்கூடாது.
4. சில தாவாக்கள் குறித்து உடன்பாடுகள் அல்லது முடிவுகள் ஏதேனும் ஏற்பட்டு அது செயலில் இருக்குமானால் அதே பிரச்சனைகளுக்காக நிர்வாகம் கதவடைப்பு செய்யக் கூடாது.
சட்டவிரோதக் கதவடைப்பு
இந்த 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றினை மீறினாலும் அக்கதவடைப்பு சட்டவிரோதமான கதவடைப்பு ஆகிவிடும்.
சட்டவிரோதமான கதவடைப்பின் விளைவுகள்
1. சட்டவிரோதமான கதவடைப்பு செய்யப்பட்ட காலம் முழுமைக்குமான சம்பளத்தை தொழிலாளர்களுக்குத் தர நிர்வாகம் கடமைப்பட்டுள்ளது.
2. ஒரு வழக்கில் சட்டவிரோதமான வேலை நிறுத்தத்தின் காரணமாகச் செய்யப்பட்ட கதவடைப்பு காலத்திற்குரிய சம்பளத்தைத் தொழிலாளர்கள் பெறமுடியாது. ஆனால் சட்டப்படியான வேலை நிறுத்தத்தின் காரணமாகச் செய்யப்படும் கதவடைப்பு காலத்திற்குரிய சம்பளத்தைத் தொழிலாளர்கள் பெறலாம் என முடிவு செய்யப்பட்டது.
வேலைநிறுத்தமும் கதவடைப்பும்
1. வேலை நிறுத்தமும், கதவடைப்பும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன.
2. வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் தரப்பு நடவடிக்கை. ஆனால் கதவடைப்பு என்பது நிர்வாகத்தின் நடவடிக்கை.
3. வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை செய்ய மறுப்பது. ஆனால் கதவடைப்பு என்பது நிர்வாகம் தொழில் நடக்கும் இடத்தைத் தற்காலிகமாக மூடுதல் அல்லது தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் அல்லது தற்காலிகமாக தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்தல்.
4. வேலை நிறுத்தம் என்பது நிர்வாகத்தைப் பணிய வைக்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஆயுதம். ஆனால் கதவடைப்பு என்பது தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வாகம் பயன்படுத்தும் ஆயுதம்.
5. வேலை நிறுத்தம் என்பது தொழிற் தகராறு காரணமாக ஏற்படுகிறது. ஆனால் கதவடைப்பு என்பது ஏற்கனவே உள்ள தகராறு அல்லது தகராறு எழக்கூடிய அபாயம் காரணமாக எழுகிறது.
6. வேலை நிறுத்தம் பொது வேலை நிறுத்தம், அடையாள வேலை நிறுத்தம் போன்று பல வகைகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கதவடைப்பில் அத்தகைய வகைப்பாடுகள் இல்லை.
7. வேலை நிறுத்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும் நிலையில் வேலை நிறுத்தக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் கதவடைப்பு சட்டப்பூர்வமானதாக இருக்கும் நிலையில் நிர்வாகம் கதவடைப்புக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதில்லை.
8. வேலை நிறுத்தம் சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் வேலை நிறுத்தக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதில்லை. ஆனால் கதவடைப்பு சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் நிர்வாகம் கதவடைப்புக் காலத்திற்குத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.