போர்ப் பின்புலத்தில் இசை
முனைவர் பா. பொன்னி

இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை எனலாம். பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் இசை மனிதனுடைய வாழ்வில் உடன் இணைந்துள்ளது. மனிதன் வேட்டைச் சமூகத்தில் இருந்த நிலையிலேயே இசை தோற்றம் பெற்றது எனலாம். மூங்கில் துளையில் உள்ளே சென்ற காற்று இசையாக மாறுவதனையும், இறந்த விலங்குகளின் தோல்கள் காய்ந்து கீழே வீழ்ந்த நிலையில் அதன் மீது எழும் ஓசையினை உணர்ந்த நிலையிலும், வில்லில் இருந்து நாணை இழுக்கும் போது ஏற்படும் ஓசை அடிப்படையிலும் மனிதன் இசைக் கருவிகளைக் கண்டறிந்து பயன் படுத்தி இருக்க வேண்டும் எனலாம். சங்க காலத்தில் போர்ப்பின்னணியில் இசை எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழர்தம் இசை ஆர்வம் தொல்காப்பியர் கருப்பொருட்களைக் குறிப்பிடும் போது,
“தெய்வம் உணாவே மா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப”
(அகத்திணையியல் - 20)
என்று குறிப்பிடுகிறார்.
கருப்பொருட்களுள் யாழ் பறை ஆகிய இசைக் கருவிகளைக் குறிப்பிடுவதனை இதன் வாயிலாக அறியமுடிகிறது.மேலும் மன்னனுக்கு உரிய அடையாளங்களைக் குறிப்பிடும் போது
“படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய”
(மரபியல் - 72)
என்று கொடி, குடை, தார் ஆகியவற்றோடு முரசினையும் குறிப்பிட்டிருப்பதனை அறிய முடிகிறது. இதன் வாயிலாகத் தமிழர்க்கு இசையின் மேல் உள்ள ஈடுபாட்டினை அறிய முடிகிறது.
போர்ப் பின்புலத்தில் இசை
போர் மனிதனுக்கு இயல்பானது. வாழ்வின் ஒரு பகுதியாக அமைவது. ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்தியற்கை என்பது சங்கப்புலவர் கூற்று. போர் தொடர்பான நெறிமுறைகளிலும், பழந்தமிழர் இசையினைப் பயன்படுத்தி இருப்பதனை அறிய முடிகிறது. போர்ப்பின்னணியிலான இசையினை
* போர்க்களத்தில் பாடும் இசைக்கலைஞர்கள்
* போரின் பொருட்டு இசைக்கப்படும் இசைக்கருவிகள்
* போர்க்களத்தில் பாடப்படும் பண்கள்
* போர்க்களத்தில் நிகழ்த்தப்படும் கூத்துகள்
எனும் நிலையில் ஆராய இயலுகின்றது.
போர்க்களத்தில் பாடும் இசைக்கலைஞர்கள்
சங்க இலக்கியங்களில் பாணர் ( பண் இசைப்பதால்) சிறுபாணர் (சீறியாழை இசைப்பவர்), பெரும்பாணர் (பேரியாழை இசைப்பவர்), பறையர் ( பறை இசைப்பவர்), துடியர் ( துடி இசைப்பவர்), கடம்பர் (கடம் இசைப்பவர்), இயவர் ( இசைப்பவர்), கூத்தர் (கூத்தாடுவதால்), வயிரியர் (வயிர் என்னும் கருவியை இசைப்பவர்) போன்ற இசைக் கலைஞர்களை அறிய முடிகிறது.
பொருணர்களை ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று மூன்று நிலைகளில் குறிப்பிடுவர். போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காக, அவர்களின் ஓய்வு நேரத்தின் போது, போரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேண்டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்கப்படுவர். இவர்கள் தண்டகப்பறை எனும் கருவியை இசைப்பர் என்றும் குறிப்பிடுவர்.
பாணர்களை இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகக் குறிப்பிடுவர். யாழ்ப்பாணர் என்போர் கையில் யாழைக் கொண்டு இசைக்கும் பாணர் ஆவார்.
“பாசறையீரே பாசறையீரே
துடியன் கையது வேலே அடிபுணர்
வாங்க இரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்
பாணன் கையது தோலே”
(புறம் 285 1-4)
என்ற அடிகள் துடியன், பாணன் போன்றோர் பாசறையில் இருந்தமையைக் குறிப்பிடுகின்றன.
புறம் 370 வது பாடல் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி வடுகரை வென்ற போது போர்க்களத்தில் அவனைப்பாடி அவன் பகைவர்பால் பெற்ற களிறுகளை தனக்குப் பரிசாகத் தரும்படிப் பாடியபாடல்.
(புறம் 369 372)
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிற் கிள்ளியும் திருப்போர்ப் போர்க்களத்தில் போரிட்டனர். இருபெரு வேந்தரும் விழுப்புண் பட்டு வீழ்ந்தனர். அப்போது கழாத்தலையார் அங்கு சென்றார். தன்னைப் பாடி வந்த புலவர்க்குத் தன் கழுத்தில் உள்ள ஆரத்தை எடுத்துக் கொள்ளும்படி சேரமான் குறிப்பால் உணர்த்தினான். அதைக்கண்டு புலவர் வருந்திப் பாடியதாக 368 ஆம் பாடல் அமைந்துள்ளது.
“களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறமழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
... ... ... ... ...
தடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
பாடி வந்த தெல்லாம் கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே”
(புறம் 368)
என்ற பாடல் வரிகளால் இதனை அறியலாம்.
இசைக்கருவிகள்
சங்க காலத்தில் முழவு, முரசு, யாழ், தூம்பு, எல்லரி, ஆகுளி, குளிர், தண்ணுமை, சங்கு, பறை போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
“மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
கண்விடு தூம்பின் களிற்றுஉயிர் தொடுமின்
எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
பதலை ஒருகண் பையென இயக்குமின்”
(புறம் 152 14-17)
என்ற அடிகள் முழா, யாழ், தூம்பு, யாழ் ஆகுளி போன்ற இசைக் கருவிகளைச் சுட்டுவதாக அமைகின்றன. போரின் போது முரசு, பறை, தண்ணுமை, சங்கு பறை, ஆகுளி, யாழ் போன்ற இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் இசைக்கருவிகளது பயன்பாட்டினை
* போருக்கு முன்
* போரின் போது
* போரின் முடிவில்
என்ற மூன்று நிலைகளில் காணமுடிகிறது.
போருக்கு முன்
போருக்கு முன்பான இசைக்கருவிகளின் பயன் பாட்டினை
* முரசினை நீராட்டுதல்
* போரினை அறிவித்தல்
* போருக்குச் செல்ல பூவை பெற்றுக் கொள்ள அழைத்தல்
* பகை மன்னர் முரசைக் கைப்பற்றுதல்
என்ற நிலையில் காணமுடிகிறது.
முரசினை நீராட்டுதல்
முரசு மன்னனுக்குரிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக அமைகிறது. வலம் படு முரசின் வெல்போர் வேந்தன் ( புறம் 304 9) என்று மன்னன் முரசுடன் சிறப்பிக்கப்படுகிறான். மன்னன் போருக்குப் புறப்படும் முன் அவனது முரசினை நீராட்டும் முறைமை காணப்படுகிறது.
“மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணிவாரா அளவை” ( புறம் 50 1-6)
என்ற பாடல் அடிகள் முரசினை நீராட்ட எடுத்துச் செல்லும் முறைமையை விளக்குகின்றன.
போரினை அறிவித்தல்
போரினை அறிவிக்க முரசு தண்ணுமை கிணை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
“மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை” (புறம் 270 8)
“பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்ஐயும் உளனே” (புறம் 89 7-9)
“திண்பிணி முரசம் இழுமென முழங்க” (புறம் 93 1)
என்ற அடிகள் தண்ணுமை முரசு ஒலிக்கப் போருக்குச் சென்றமையைக் குறிப்பிடுகின்றன.
போருக்குச் செல்லப் பூவை பெற்றுக் கொள்ள அழைத்தல்
சங்க காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் தமக்குரிய பூவைச் சூடிக் கொண்டு செல்வது மரபாக இருந்துள்ளது. அப்பூவினைப் பெற்றுக் கொள்ள வருமாறு தண்ணுமையை முழக்கியமையை
“நிற்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை” (புறம் 293 1-2)
“கேட்டியோ வாழி - பாண! பாசறைப்
பூக்கோள் இன்று என்று அறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” (புறம் 289 8-10)
என்ற அடிகள் பறை அறைந்து போர்ப்பூ பெற்றுக் கொள்ளுமாறு ஒலிப்பதனைக் குறிப்பிடுகிறன.
பகை மன்னர் முரசைக் கைப்பற்றுதல்
மன்னர்க்குரிய அரசுச் சின்னங்களுள் ஒன்றாக முரசம் திகழ்வதால் மன்னர்கள், தன்னுடைன் போரிடும் பகை மன்னர்களை முரசுடன் சிறைப் பிடிக்கவும் அவர்களது முரசுகளை அழிக்கவும் விருப்பம் கொள்வர்.
“அரைசுபட அமர் உழக்கி
உரைசெல முரசு வௌவி” (புறம் 26 6-7)
என்ற அடிகளும்
“அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்கு அகப்படேன் ஆயின்” (புறம் 72 8-9)
என்ற அடிகளும் முரசைக் கவர்வதில் மன்னர்களுக்கு இருந்த விருப்பினைத் தெரிவிக்கின்றன.
போரின் போது
போரின் போதான இசைக்கருவிகளின் பயன்பாட்டினை
* பாசறையில் மன்னனைத் துயில் எழுப்புதல்
* போர்க்களத்தில் முரசு ஒலித்தல்
* பரிசிலர் இசைத்து வருதல்
என்ற நிலையில் காணமுடிகிறது.
பாசறையில் மன்னனைத் துயில் எழுப்புதல்
மன்னனை அதிகாலையில் துயில் எழுப்பும் பொழுது, இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்து துயில் எழுப்பியுள்ளனர். பாசறையிலும் மன்னனை முரசு மற்றும் சங்கு போன்ற இசைக்கருவிகள் மூலம் துயில் எழுப்பியமையை
“சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப” (புறம் 397 4-5)
என்ற அடிகள் புலப்படுத்துகின்றன.
போர்க்களத்தில் முரசு ஒலித்தல்
போர்க்களத்தில் முரசுகள் முழங்கவும் அம்புகள் பகைவர் மேல்பட்டு போர்க்களத்தில் தலைகள் இன்றி உடல்கள் கிடந்தமையையும் புறநானூறு பதிவு செய்துள்ளது.
“இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை” (புறம் 371 12)
என்ற அடி இதனை விளக்குகின்றது.
பரிசிலர் இசைத்து வருதல்
மன்னனைப் பாடி பரிசில் பெறுவதற்காக பொருநன் தடாரி மற்றும் ஆகுளி பறையை அடித்துக் கொண்டு வந்தமையை
“மதியத்தன்ன என் விசியுறு தடாரி
அகன்கண் அதிர ஆகுளி தொடாலின்” (புறம் 371 16-17)
என்ற அடிகளால் அறிய முடிகிறது.
போரின் முடிவில்
போரின் முடிவில் வெற்றியை அறிவித்தல், தோல்வியைச் சுட்டுதல் என்ற நிலையில் முரசு பயன்படுவதனைக் காணமுடிகிறது.
வெற்றியை அறிவித்தல்
“மன்னர்கள் தம் வெற்றியை பறையினை ஒலித்துத் தெரிவித்தமையை
இன்னிசைப் பறையொடு வென்றி நுவல” (புறம் 225 10)
என்ற அடியால் அறியலாம்.
தோல்வியைச் சுட்டுதல்
“தோல்வி அடையும் நிலையில் முரசுகள் ஒலி இழந்து நிற்பதனை
சிலைத்தார் முரசம் கறங்க” (புறம் 36 12-13)
என்ற அடியால் அறியலாம்.
போர்க்களத்தில் பாடப்படும் பண்கள்
பாக்களோடு இயைந்து உரைக்கப் பெற்ற இசையினை நெஞ்சு, மிடற்று, நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டு இடங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழிலால் ஒழுங்குறப் பண்ணிப் பாடப்படுவது ‘பண்’ எனப்பெறும் என்று இசைப் புலவர்கள் கூறுகின்றனர். புறநானூற்றில் “விளரிப் பண், படுமலைப் பண், செவ்வழிப் பண், மருதப்பண், நெய்தற்பண், காஞ்சிப்பண்" முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன.
விளரிப்பண்
பருந்தின் சுழற்சி போல வட்டமிட்டுப் பாடுவது விளரிப்பண் என்று குறிப்பிடுவர். இது இரங்கற் பண்ணாகும். இப்பண்ணைப் பாடி நரிகளை ஓட்டிய நிகழ்ச்சியினை,
“சிறா அர் துடியர் பாடுவன் மகா அ அர்
தூ வெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்பூட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்டின் வெண்ணகி கடிகுவென்" (புறம்-291 : 1 - 4)
என்ற அடிகள் குறிப்பிடுகிறன.
காஞ்சிப்பண்
விழுப்புண் பட்டவர்கள், பேயால் பிடிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வருத்தம் தீரக் காஞ்சிப்பண் பாடுவது சங்ககால வழக்கம். விழுப்புண் பட்ட வீரனைக் காக்க ஐயவி (வெண்கடுகு) அப்புதல், அகிற்புகைத்தல், மணி அடித்தல், வேம்பினை மனையில் செருகுதல் முதலான செயல்பாடுகளில் ஈடுபடுவர். அப்போது ஆம்பல் ஊதி காஞ்சிப்பண்ணை மகளிர் பாடியதாக,
“வேம்பு சினையொடிப்பவும் காஞ்சிபாடவும்
நெய்யுடைக் கையரைவி புகைப்பவும்
எல்லா மனையுங் கல்லென்றனவே” (புறம்-1: 296)
என்ற வரிகள் குறிப்பிடுகிறது.
இவற்றால் சங்ககால மக்கள் பண்ணை பேயினை விரட்டவும், நரிகளை விரட்டவும் பண்ணைப் பயன்படுத்திய செய்தியை அறிந்து கொள்ளமுடிகிறது.
போர்க்களத்தில் நிகழ்த்தப்படும் கூத்துகள்
கூத்தினை குன்றக் கூத்து, குரவைக் கூத்து, பாவைக்கூத்து, வெறியாட்டு உள்ளிட்ட 11 வகைப்படுத்தப்படுள்ளது.
குரவையை
1. முன்தேர்க்குரவை
2. பின்தேர்க்குரவை
என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
பாவைக்கூத்தினை
1. அல்லிப்பாவை
2. தோற்பாவை
என்று பிரிப்பர்.
இக்கூத்துக்களை நிகழ்த்துவோர் கூத்தர், விறலியர், வயிரியர், தோடியர் என்று குறிக்கப்பட்டனர்.
குரவைக்கூத்து என்பது கூத்தின் ஒரு வகையாகும். போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்தது. போர்க்காலக் குரவை, தண்குரவை என்று இதனை இரண்டு வகையாகக் குறிப்பிடுவர். போர்க்காலத்தில் ஆடப்படும் குரவையை போர்க்காலக் குரவை என்றும், போரில்லாத காலங்களில் அமைதியாக நடைபெறும் குரவையை தண்குரவை என்றும் சுட்டுவர். போர்க்களத்தில் வீரர்கள் குரவைக் கூத்து ஆடியமையை புறநானூறு பதிவு செய்துள்ளது.
“குற்றானா உலக்கையால்
கலிச்சும்மை வியல் ஆங்கண்
பொலந்தோட்டுப் பைந்தும்பை
மிசைஅலங்கு உளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக் குரவை”
(புறம் 22 18-22)
என்ற அடிகள் இதனை விளக்குவதாக அமைகின்றன.போர்க்களத்தில் பேய்மகளிரும் குரவைக்கூத்து ஆடிய தன்மையினை
“களிற்றுக் கோட்டன்ன வாலெயி றழுத்தி
விழக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள்
குடரத்தலை மாலை சூடி யுணத்தின
ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர் புலவென.
உருக்கெழு பேய்மக ளயர்”
(296)
என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார் பாடியுள்ளார். பன்றியின் கோடு போன்ற வெள்ளிய பற்களாற் கடித்து ஈர்த்து, தசையோடு கலந்த வெள்ளிய கொழுப்பைத் தின்று சுவை காண்பவளாய், குடர்களைத் தன் தலையில் மாலையாக அணிந்து, ‘யாம் நிரம்ப உண்ணவும் தின்னவும் குறையாதவாறு மிக்க பிணங்களாகிய பெரிய வளங்களைக் கொடுத்த அரசன் பல்லாண்டு வாழ்வானாக’ என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவாள் என்ற செய்தியினை இதன் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அனைத்து நிலைகளிலும் உடன் பயணப்பட்டு வருவது இசை. அந்த இசை, போர்ப் பின்புலத்தில் எவ்வகையில் அமைகிறது என்பதனை இதன்வழி அறியமுடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.