சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல்
ச. தனலெட்சுமி
முன்னுரை
சங்கப் புலவர்கள் தமது பாடல்களை சமுதாய நோக்கில் பாடிச் சென்றனர். பின்னர் அகம், புறம் என வகைப்படுத்தி, திணை, துறை மரபுக்குள்ளாகப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மருதத்திணையில் உள்ள “வாயில் மறுத்தல்” என்னும் துறை ஆய்வுக்குரிய பொருளாகும்.
சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல்
• வாயில் மறுத்தல் - விளக்கம்
• வாயில் மறுத்தல் - பாடல்கள்
• வாயில் - இலக்கணம்
• வாயில் மறுக்கும் சூழல்
• வாயில் மறுத்தலில் தோழி
• தலைவனின் கொடுமை கூறல்
• தலைவியின் இல்லற மாண்பு
• வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்
வாயில் மறுத்தல் - விளக்கம்
மருதத்திணையில்; ஊடலும் ஊடல் நிமித்தமும் உரிப்பொருளாக அமைகிறது. அதனுள் ஊடலுக்குக் காரணமாகப் பரத்தமை ஒழுக்கம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பரத்தமையை நாடிச் செல்லும் தலைவனைத் தோழி மூலமாக வாயில் மறுக்கின்றாள் தலைவி. களவு வாழ்க்கையின் போது பல அன்பான இனிய சொல்லைக் கூறித் தலைவியின் அன்பைப் பெற்றவன் கற்பு வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே பரத்தையை நாடிச் செல்கிறான். அவ்வாறு செல்லும் தலைவன், வாயிலாக பாணன், விறலியர், கூத்தர் போன்றோரை அனுப்புகிறான். அவர்களும் தலைவனின் கொடுமையை மறந்து அவனுக்குச் சார்பாகவே வாயில் வேண்டுகின்றனர். இதைத் தொடர்ந்து தலைவனும் வாயில் நேர்வதுண்டு. அதற்குத் தலைவி நேரடியாக வாயில் மறுக்காமல் தன் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தோழியின் மூலம் வாயில் மறுக்கின்றாள்.
வாயில் மறுத்தல் - பாடல்கள்
சங்க இலக்கியத்தில் மொத்தம் 138; பாடல்களை 43 புலவர்கள் பாடியுள்ளனர்.
அகநானூறு - 24
நற்றிணை - 13
குறுந்தொகை - 12
ஐங்குநுறூறு - 77
கலித்தொகை - 10
பரிபாடல் - 2
வாயில் - இலக்கணம்
வாயில் இலக்கணமாக தொல்காப்பியர்,
“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்களென்ப”
ஆகிய பன்னிருவரும் வாயில்கள் என்று சொல்லுவார்.
அகவொழுக்கம் நிகழ்தற்கு வாயில் போன்று விளங்குதலால் வாயில்கள் எனப்பட்டனர்.
“எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருளவென்ப”
மேற்சொன்ன பன்னிரு வாயில்களும் தலைவனும் தலைவியும், இன்பமாக வாழும் வாழ்க்கைக்கு உதவுவர். புதல்வனும் தலைவனுக்கு வாயிலாவதைக் காட்டும் பாடலும் உள்ளது.
வாயில் மறுத்தல் என்னும் இத்துறை,
1. வாயில் வேண்டல்
2. வாயில் மறுத்தல்
3. வாயில் நேர்வித்தல்
4. வாயில் நேர்தல்
என்னும் நான்கு அகத்துறைகளை உள்ளடக்கியது.
பரத்தையிற் பிரிவு பற்றிக் கூறும் நம்பியகப் பொருள்,
“வாயில் வேண்டல் வாயில் மறுத்தல்
வாயில் நேர்வித்தல் வாயில் நேர்தல்என்
றாய பரத்தையின் அகற்சிசால் வகைத்தே”
என இந்நான்கு வகையைப் பற்றிக் கூறுகின்றது. எனவே இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என அறியலாம்.
வாயில் மறுக்கும் சூழல்
வாயில் மறுக்கும் சூழலில் பெரிதும் பங்கு கொள்பவள் தோழியே. அவள் தலைவன்இதலைவி, இருவரின் களவு கற்பு ஆகிய இரு காலகட்டத்திலும் உடனிருந்து தலைவனின் தீய செயலை இடித்துரைத்துக் கொண்டே இருப்பவள். தலைவியின் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டவளாய், தலைவனை உரிமையோடு கண்டித்தாள். “தலைவன் பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கிப் பின்னர் தலைவியைக் காண வரும் போது அவன் உள்ளுர அஞ்சினான். இதனால் வீட்டினுள் புக அஞ்சினான். அகத்தினுள் புகுவதற்குத் தலைவன் பாணணை முதலில் வாயில் வேண்டும் பொருட்டு அனுப்பினான். சில சமயம் தலைவனே வாயில் வேண்டுவதாய்ப் பாடல்கள் உள்ளன. அப்படி வாயில் வேண்டும் போது தலைவியின் சார்பாகத் தோழி வாயில் மறுப்பாள்.
வாயில் மறுத்தலில் தோழி
களவுக் காலத்தில் தோழி பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் தலைவன் தலைவியைக் காண வரும் போது திருமணம் செய்து கொண்டு இந்த ஊர் தூற்றுவதை நீக்கிப் பின் தலைவியை அழைத்துச் செல்லுமாறு கூறுவாள். கற்புக் காலத்தில் தலைவன் குறிப்பறிந்து வாயில் மறுப்பதுண்டு. தலைவனுக்குத் தலைவி வாயில் மறுப்பதும் உண்டு. தலைவனையும் தலைவியையும் இணைத்து வைப்பது தோழியின் நோக்கமாக இருந்தது. களவுக் காலத்தில் தலைவன் தலைவியிடம் கொண்ட அன்;பு கற்புக் காலத்தில் குறைகிறது. இதனை இடித்துரைத்தும் தோழி வாயில் மறுக்கிறாள்.
தலைவனின் கொடுமை கூறல்
“பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
மடத்தகு கிழமையுடைமையானும்
அன்பிலை கொடியை என்றலு முரியன்”
என்ற தொல்காப்பிய நூற்பாவில் பரத்தையொழுக்கத்தைப் போக்குதல் வேண்டியும், தலைவன் கூறியதை உண்மையெனக் கொள்ளும் மடைமைக் குணம் கொண்ட தலைவிக்குத் தன் தோழி தலைவனின் கொடுமையை எடுத்துக் கூறுவாள் என்று கூறுகிறார்.
தலைவன் தான் பரத்தையிடம் இருந்து வந்ததைத் தலைவியிடம் மறைக்கின்றான். தலைவியும் தன் பேதைமையால் அதனை அறியாது கற்பு வாழ்வின் தொடக்கத்தில் தலைவன் கூறுவதையெல்லாம் நம்பி விடுகின்றாள். பின் தலைவன் பரத்தையோடு புனலாடியதைத் தோழி பார்த்துத் தலைவியிடம் கூற தலைவி தலைவனுடன் ஊடல் கொள்கிறாள்.
தலைவியின் இல்லற மாண்பு
தலைமகன் தலைவியைப் பிரிந்து பரத்தையருடன் தங்கி வரும் போது அவனுக்குத் தோழி தலைவியின் இல்லற மாண்புகளையெல்லாம் அவனிடம் எடுத்துக்கூறி, அதாவது “அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், அரசர் முதலானோரை வழிபடுக எனக் கணவன் கற்பித்தவற்றால் அவளும் அதன்படியே வழிபடுகின்றாள். இல்லத்தில் இருப்பவர்களுக்கும், உறவினர்களாக வருபவர்களுக்கும், விருந்தோம்பல் செய்வதும், இரவலர்க்குப் பொன் முதலான கொடுத்தும் அறச்செயல்களுடன் இருக்கும் தலைவியை விடுத்துப் பரத்தையை நாடிச் செல்கின்றாயே எனத் தலைவனைத் தோழி கடிந்துரைக்கின்றாள்.
வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்
• அலராதல்
• புனலாடல்
• பரத்தமை ஒழுக்கம்
• நலனழிதல்
• அன்பிலனாதல்
• ஈன்றணிமை
• முதுமை
• சூள் பொய்த்தமை
ஆகியவற்றைக் காரணங்களாகக் கூறி வாயில் மறுக்கின்றனர்.
முடிவுரை
சங்ககாலப் பெண்கள் முதல் இன்று உள்ள பெண்கள் வரை தங்கள் கணவனை ஒழுக்கமுடையவனாகவும் கற்புடையவனாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதிலிருந்து வேறுபடுமாயின் வீட்டில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, சங்க இலக்கியங்களில் தலைவியின் பால் அன்பு கொண்ட தோழி தலைவனுக்கு வாயில் மறுப்பதாக அமைகிறது. இல்லற நெறிக்குப் புறம்பான புறஒழுக்கத்துக்கு எதிர்ப்புக் குரலாகவே வாயில் மறுத்தல் துறை அமைந்துள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.