மூதுரை புலப்படுத்தும் நல்லறங்கள்
வீ. முத்துலட்சுமி
முன்னுரை
தீய வழியில் செல்லும் மக்களை நல்வழிப்படுத்துவே அறநூல்கள் தோன்றின. மக்கள் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய அறங்களைத் தொகுத்தும் வகுத்தும் உணர்த்தும் நூல்கள் “அறநூல்கள்” எனப்படும். இத்தகைய அறநூல்கள் தோற்றம் பெற்று மனிதனின் கைகளில் தவழ்வதற்கு முன்பு அவை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளன. அறத்தின் வளர்ச்சி நிலைகளை வாழ்வியற் களஞ்சியம் “இயல்பூக்க நிலை, மரபொழுக்கநிலை, மனச்சான்று நிலை” என மூன்று வகைப்படுத்திக் கூறியுள்ளது.
இதில் இயல்பூக்கநிலை என்பது, அறவாழ்க்கையின் உயர்நிலையான சமூக அமைப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்றும், மரபொழுக்க நிலை என்பது சமூக மரபுகளுக்குக் கட்டுப்பட்டுப் பொதுநலக் குறிக்கோளுக்காக வாழ்வது என்றும் கூறப்பெறும். பின்னர், சமூக மரபுகள் விதிகளாக மாற்றி அமைக்கப்பட்டன என்றும் மனச்சான்று நிலையே அறவுணர்வு வளர்ச்சியின் இறுதிநிலை என்றும் கொள்ளலாம்.
திருக்குறளும் அறம் என்பதை,
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”
என்று அறத்திற்கு விளக்கம் அளிக்கின்றது.
அறங்கூறவையம்
நீதி வழங்கும் மன்றம் அறங்கூறு அவையம் எனப்பட்டது. இவ்வவை அரசினால் நியமிக்கப்பட்டதற்குப் புறநானூறு (39,71,79) ஆகிய பாடல்கள் சான்று தருகின்றன. அறங்கூறும் அவை நீதி தவறினாலும் அப்பழி தன்னைச் சாரும் என அரசர்கள் உணர்ந்து வைத்திருந்தனர்.
அறங்கூற வையம் பற்றிச் “சிறந்த கொள்கை யறங்கூறவையம்” என மதுரைக்காஞ்சி சிறப்பிக்கின்றது. இவ்வாறு பண்டையத் தமிழர்கள் தமது அகம் மற்றும் புறவாழ்க்கையில் அறநெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதை அறியலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
கி. பி. 250 முதல் கி. பி. 600 வரை உள்ள காலகட்டத்தைச் ‘சங்கம் மருவிய காலம்’ என்று குறிப்படுவர். இக்கால கட்டத்தில் ஆட்சி செய்த களப்பிரரும் பல்லவரும் பௌத்த சமண சமயங்களைப் போற்றினர். இச்சமயங்களின் செல்வாக்கால், பல்வேறு நோன்பு வாழ்க்கை மேற்கொள்ளப்பட்டது. அற இலக்கியம் மிகுதியாகத் தோன்ற இதுவும் ஒரு காரணமாகும். இக்காலத்தில் ஆரியர்களுடன் தமிழகம் கொண்ட தொடர்பினால், நால்வகை வருணப்பாகுபாடும் வடநூற்கருத்துகளும் கதைகளும் புகுந்தன.
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய பதினொரு நூல்களும் அறக்கருத்துக்களை கூறும் நூல்கள் ஆகும்.
பிற்கால வளர்ச்சி நிலைகள்
பிற்காலத்தில் திருக்குறள் கருத்துக்களை மையமாக வைத்து, சினேந்திர வெண்பா, இரங்கேச வெண்பா, வள்ளுவர் நேரிசை, முதுநெறி வெண்பா போன்ற நூல்கள் எழுதப்பட்டன. அறநூல்களுள் பெரிதும் போற்றப்பெறும் நூல் ஆத்திச்சூடி ஆகும். கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் இதனைப் பாடியுள்ளார். இவரைத் தொடர்ந்து எழுதப்பட்ட அறநூல்கள் வருமாறு;
1. அருங்கலச்செப்பு - * * * * * * * * * * - 12 ஆம் நூற்றாண்டு
2. அறநெறிச்சாரம் - முனைப்பாடியார் - 13 ஆம் நூற்றாண்டு
3. நறுந்தொகை - அதிவீரராமபாண்டியர் - 16 ஆம் நூற்றாண்டு
4. நீதிநெறிவிளக்கம - குமரகுருபரர் - 17 ஆம் நூற்றாண்டு
5. நன்னெறி - சிவப்பிரகாசர் - 17 ஆம் நூற்றாண்டு
6. உலகநீதி - உலகநாதர் - 18 ஆம் நூற்றாண்டு
7. நீதிமாலை, பெண்மதிமாலை - வேதநாயகம் பிள்ளை - 19 ஆம் நூற்றாண்டு
போன்ற அறநூல்கள் மக்கள் தமது வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை உணர்த்தகின்றன.
ஓளவையார் பாடிய ஆத்திசூடியை மையமாக வைத்து, 20 ஆம் நூற்றாண்டில்,
1. புதிய ஆத்திசூடி - பாரதியார்
2. தமிழ் சூடி - வ. சுப .மாணிக்கம்
3. அறிவியல் சூடி - ச. மெய்யப்பன்
4. நீதி சூடி - சோம. இளவரசு
போன்ற நூல்கள் படைக்கப்பட்டன.
காப்பியங்களில் அறம்
காப்பியம் என்பது கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுள் ஆகும். அறக்கருத்துக்கள் காப்பியங்களில் ஆங்காங்கே காப்பிய ஆசிரியரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதனை,
“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளுமல் லதுகண்டதில்”
என்ற மணிமேகலைப்பாடல் வரிகளின் வாயிலாக அறியலாம்.
பக்தி இலக்கியங்களில் அறம்
எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டுதல், பசித்தவர்க்கு உணவிடுதல், தண்ணீர்ப் பந்தல் அமைத்தல் போன்ற அறச்செயல்களைச் செய்யுமாறு வலியுறுத்தியும், மக்களை வாழ்க்கையின் சீரிய பாதைக்கு வழி நடத்தியும் சென்ற பெருமை பக்தி இலக்கியத்தைச் சாருமெனலாம். இவ்வகையான இலக்கியங்களில் அறக்கருத்துக்கள் பக்தி நெறியோடு கலந்தே உரைக்கப்படுகின்றன. இதற்குச் சான்றாக,
“யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே”
என்று திருமூலர் எழுதிய பாடலைக் குறிப்பிடலாம்.
சிற்றிலக்கியங்களில் அறம்
தமிழில் நெடும் பாடல்களாய் அமைந்த பிரபந்த வகைகளைச் “சிற்றிலக்கியம்” என்று குறிப்பிடுகின்றோம். இச்சிற்றிலக்கியங்களில் ஒரு சிலவே அறக்கருத்துக்களைக் கூறும் பாணியில் அமைந்துள்ளன. சான்றாக ஆற்றுப்படை நூல்கள் ஈகையறத்தையும், சதக இலக்கியங்கள் அறநெறிகளையும் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.
மூதுரையில் நல்லறம்
மூதுரை என்ற சொல்லுக்கு, வாழ்வியற் களஞ்சியம், “மக்களை நெறிபிறழா வகையில் நடத்திச் செல்வது” என்று விளக்கம் அளிக்கின்றது. மூதுரைக்கு ‘வாக்குண்டாம்’ என்னும் மற்றொரு பெயரும் உண்டு. ‘வாக்குண்டாம்’ என்னும் சொல்லால் தொடங்கும் இந்த நூல் நல்லறங்களை முப்பது பாடல்களில் தொகுத்துக் கூறுகிறது. அவையாவன,
1. மேன்மக்களின் ஈகை அறம்
2. நற்குடிப்பிறந்தாரின் நல்லறம்
3. சான்றோர்கள் பின்பற்றும் நல்லறம்
4. கல்வியைப் போற்றி உயர்த்திய நல்லறம்
5. எதார்த்த வாழ்க்கையில் கடைபிடிக்கும் நல்லறம்
6. வறுமையிலும் செம்மையைப் போற்றும் நல்லறம்
7. எதிர்பாராது உதவும் நல்லறம்
மேன்மக்களின் ஈகை அறம்
‘செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே’ எனவே, பொருள் நிலையற்றது என்பதை உணர்ந்து செயல்படுபவர் மேன்மக்கள். தங்களிடம் பொருள் இல்லாது போயினும், தம்மை வறுமை வந்து சூழ்ந்த போதினும் அவர்கள் தங்கள் ஈகையில் இருந்து மாறமாட்டார்கள் என்பதை நல்வழி,
“ஆற்றுப் பெருக்குஅற்று அடிசூடும் அந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து”
என்கின்றது.
மேன்மக்கள் கெட்டாலும் ஈகையறத்திலிருந்து பிறழாது செயல்படுவர் என்பதைப் பாலின் தூய்மைத் தன்மையுடனும், சங்கின் வெண்மைத் தன்னையுடனும் ஒப்பிடுவதை,
“அட்டாலும் பால்சுவையில் குன்றாது அளவளவாய்
நட்டாலும் நண்புஅல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்”
என்ற பாடல் வழி மூதுரை நவில்தலைக் காணலாம்.
நற்குடிப் பிறந்தாரிடம் காணப்படும் நல்லறம்
ஒருவருக்குக் குணம் என்பது அவரின் பரம்பரையைச் சார்ந்து அமையும் என்பது உலக உண்மை ஆகும். வழிவழியாக வரும் தொழிலோ, கல்வி சார்ந்த அறிவோ ஒருவருக்கு இயல்பாகவே அமையும். குணம் அமைவது குலத்தை ஒட்டியே என்பதைப் பழமொழி நானூறு,
“சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்”
என்கிறது.
ஒருவருடைய உள்ளத்தின் உயர்வைப் பொறுத்தே அவரது வாழ்க்கையும் உயரும் என்பதை வள்ளுவரும்,
“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு” என்கிறார்.
ஒருவர் நற்குடியில் பிறந்து வளர்ந்து இருப்பாரேல், அவருடைய குடியின் உயர்விற்கேற்ப அவருடைய அறிவும் உயரும். நல்லறமும் உயரும், கல்வியும் உயர்ந்து காணப்படுமென்பதை,
“நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்அறிவு மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்”
என நற்குடிப் பிறந்தாரிடமும் இயல்பாகவே காணப்படும் நற்குணத்தை ஒளவை எடுத்துரைக்கிறார்.
சான்றோரிடம் காணலாகும் நல்லறம்
‘கோபம்’ என்பது எல்லா மனிதர்களிடமும் காணப்படும் பொதுவான குணம். ஆனால் அது தோன்றும் சூழல், நேரம், அளவு இவையே ஒருவரை நல்லவர் என்றோ, தீயவர் என்றோ தீர்மானிக்கிறது. கோபமானது, கட்டுப்படுத்தாதவரின் உயிருக்கு எமனாவதை வள்ளுவமும்,
“தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்”
என்கிறது.
சான்றோருக்கு ஏற்படும் கோபமாக இருந்தாலும், அதிலும் அறத்தின் சாரம் காணப்பட்டது. சான்றோரது கோபமானது, நீரிலே பட்ட அம்பின் வடுப் போல உடனே மறைந்து விடும். அதனால் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்பதை,
“கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடும் சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் குணம்”
என சான்றோர் கோபத்திலும் நற்குணம் காணப்பட்டதை மூதுரை எடுத்துரைக்கிறது.
கல்வியைப் போற்றி உயர்த்தும் நல்லறம்
உலகத்தின் கண் நடக்கும் எல்லா நல்லறத்திற்கும் அடிப்படைக் காரணம் கல்வியே ஆகும். கல்வி ஒருவருக்கு கண் போன்றது. கண் இல்லாதான் எவ்வாறு உலக இன்பங்களை பார்த்து அனுபவிக்க முடியாதோ அதுபோல, கல்வி இல்லாதான் உலக நல்லறங்களோடு தம்மை இணைத்து இன்புற முடியாது. கல்வியில்லாதான் கூறும் அறிவார்த்தமான கருத்துக்களும் சபை ஏறாது. அது பயனின்றிக் கழியும் என்பதை, வள்ளுவர்,
“கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடையார்”
எனக் கூறியுள்ளார்.
மேலும் மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் எவ்வாறு வேறுபாடு இருக்கிறதோ அவ்வளவு வேறுபாடு கல்வியறிவு உடையவர்கட்கும், அஃதில்லாதவர்கட்கும் உண்டென்பது விளங்க திருவள்ளுவரும்,
“விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றா ரோடு டேனை யவர்”
என்கிறார்.
ஒருவன் கல்வி கற்று இருந்தாலும், குறிப்பினால் அறியும் இயல்பு இல்லாது போனால், அவனுக்கும் மரத்துக்கும் வேறுபாடு இல்லை. இதனை மூதுரை,
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
நீட்டுஓலை வாசியா நின்றான் குறிப்புஅறிய
மாட்டாதவன் நன் மரம்”
என்ற பாடல் வழி எடுத்துரைக்கின்றது.
எதார்த்த வாழ்விலும் நல்லறம்
எதார்த்த வாழ்விலும் அறிவுடையோர் அறிவுடையோரையே சார்ந்தும், தொடர்பு கொண்டும் வாழ்ந்திருந்தனர். தீயவர்களைத் தீயவர்களையே சார்ந்து வாழ்ந்தனர். இதனால் நல்லவர்கள் தம் நல்லறச் செயல்களை விட்டு நீங்காது தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்ட நல்லறம் புலனாகிறது. இக்கருத்தைப் பழமொழி நானூறும்,
“புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்கு ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்”
என்கிறது.
அதுபோல நல்லவர்களின் நுட்பமான அறிவை அவரைப் போலக் கற்றுத் தேர்ந்தவர்களே அறிவார். பிறர் அறிய மாட்டார்கள். கீழ்த்தனமான குணத்தைக் கீழ்க்குண மக்களே அறிவர். நல்லவர் அறிவது கடினம் என்பதை மூதுரையும் வலியுறுத்துவதை,
“நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்”
என்ற பாடலில் இருந்து அறியமுடிகிறது.
வறுமையிலும் செம்மையைப் போற்றும் நல்லறம்
அன்றாடத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையை வறுமை எனலாம். அதிலும் கொடுமையானது, இளமையில் வறுமை என்பதை வள்ளுவம்,
“இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”
என்ற குறட்பா மூலமாகப் புலப்படுத்துகிறது.
ஒளவையும் வறுமையைக்,
“கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
எனத் தெளிவுபடுத்துகின்றார்.
அதே போல மூதுரையில்,
“இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கையர்க்கு அழகு”
என்ற பாடல் புலப்படுத்துகின்றது.
மேலும் வறுமை வந்துற்ற காலத்தேயும் தத்தம் கொள்கை நெறியிலிருந்து பிறழாதவர்களாக அக்காலத்தார் இருந்துள்ளனர். பெண்கள் தங்களை ஒப்பனை செய்து கொள்வதிலும் அறத்தைப் பின்பற்றி இருந்திருக்கின்றனர். கணவனோடு கூடியிராத பெண்கள் தம்மை ஒப்பனையே செய்து கொள்ளாத ஒழுக்க நெறியையும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
எதிர்பாராது உதவும் நல்லறம்
எவருக்கும் எந்த ஒரு உதவியைச் செய்தாலும், அதனால் நமக்கு என்ன பயன் கிட்டும் எனச் சிந்தித்துச் செயல்படும் உலகமாகிவிட்டது. கொடை, தருமம், கருணை என்பவை எல்லாம் கடல் கடந்து போய்விட்டன. இன்று எந்த ஒரு சிறு உதவிக்கும் பிரதிபலனானது எதிர்பார்க்கப்படுகின்றது. மழையைக் கைமாறு கருதாக் கடப்பாடு உடையது என்பார்கள். அது தவிர்த்த அனைத்தும் கைமாறு எதிர்பார்ப்பவையே என்பதை அறிந்த வள்ளுவர் எதிர்பார்க்காமல் செய்யும் உதவியே ஈகை என்கிறார்.
“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து”
என்று பிரதிபலனை எதிர்பாரா உதவியின் தன்மையைச் சுட்டுகிறார்.
மூதுரையானது, பிரதிபலனின்றிச் செய்யும் உதவியை,
“நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்? எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்”
என்ற பாடலின் வழியாக, நாம் ஒருவருக்கு ஓர் உதவி செய்தால் எவ்வாராயினும், நமக்கு அதன் பயன்கிட்டும் என்பதை உணர்ந்து பிரதிபலனை எதிர்பாராது உதவும் நல்லறம் உடையவராக அக்காலத்தார் செயல்பட வேண்டும் என மூதுரை வலியுறுத்துகின்றது.
இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட நல்லறம்
இல்வாழ்க்கை சிறப்பாக அமையக் காரணம் நற்பண்பு கொண்ட மனைவியே ஆவாள். மனைவி நற்பண்பு கொண்டவளாக அமையவில்லையெனில், இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது என்பது திண்ணம். எனவே தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்கிறார்கள். மனைவி நற்பண்புள்ளவளாக இருந்தால் வாழ்க்கையில் இல்லாத செல்வம் ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்,
“மனைமாட்சி இல்லவள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனை மாட்சித்து ஆயினும் இல்”
என்கிறார்.
குணவனின் இயல்பறிந்து ஏழுகும் மனைவியே சிறப்பானவள் என்பதைச் சிறுபஞ்சமூலம்,
“கொண்டான் வழி ஒழுகல் பெண்”
என்று புலப்படுத்துகின்றது. இதனை ஒளவையாரும்,
“இல்லாள் அகத்துஇருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்”
என்பதிலிருந்து நல்ல மனைவியால் மட்டுமே, இல்லறத்தை நல்லறப்பாதைக்கு கொண்டு செலுத்த இயலும் என்று இல்லறத்தின் வழியாக எடுத்துரைக்கிறார்.
முடிவுரை
மூதுரையானது மக்களின் வாழ்க்கைத் தேவையான பல்வேறு நல்லறங்களை வெளிப்படுத்தியுள்ளதையும் அதனைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கையில் உயர்வடையலாம் என்பதையும் இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.