பழந்தமிழரின் சூழலியல் அறிவு
முனைவர் மா. பத்மபிரியா
மனிதன் தன் தேவைகளுக்காகத் தாவரங்களையும் விலங்குகளையும் அழிக்கிறான். காடுகள் அழிவதால் பூமியில் உள்ள சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசு (Water Pollution), காற்று மாசு (Air Pollution) போன்றவைகள் சமுதாயத்திற்குக் கேடுவிளைவிப்பன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மேற்கண்ட காரணிகளால் பூமியின் மேலுள்ள ஓசோன் படலம் துளையிடப்பட்டு (Ozone Depletion) பூமி வெப்பமயமாகி (Global Warming) ‘அபாயத்தை நோக்கி பூமி’ இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் பழந்தமிழரின் இயற்கைப் பாதுகாப்புச் சிந்தனைகளைச் சங்கஇலக்கியங்கள் வழி எடுத்துரைத்து இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தல் கட்டுரையின் நோக்கமாகும்.
சூழலியல் திறனாய்வு (Eco Criticism)
‘இலக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவினைக் கற்பதே சூழலியல் திறனாய்வாகும்’
மக்கள்தொகைப் பெருக்கம், தொழிற்சாலைப் பெருக்கம், எரிசக்தியின் தேவைக்கான அணு உலையின் பெருக்கம் போன்றன நம்மை எதிர் நோக்கியுள்ள சிக்கல்கள். சுற்றுப்புறத்தை நச்சடைய வைக்கும் திட, திரவ மற்றும் வாயுக் கழிவுகள் போன்றவற்றால் நிலம், நீர், காற்று, வெளி என ஐம்பூதங்களின் மாசுபாடுகள் இன்று தவிர்க்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்குண்டுள்ளோம். ‘இந்தப் பூமியைக் காப்போம்’, ‘வரும் தலைமுறைக்கு வாழ்விடம் அளிப்போம்’ என்ற கருத்தாக்கத்தின் விளைவால் இலக்கியங்களைச் சூழலியலுக்கு உட்படுத்தி உருவான நவீனத் திறனாய்வே ‘சூழலியல் திறனாய்வு’ ஆகும். இத்திறனாய்வு முறையைச் சங்கஇலக்கியங்களில் பொருத்திப் பார்த்தால் பழந்தமிழரிடம் காணப்படும் பல்லுயிரின வேறுபாடும் அதன் பாதுகாப்பு (Biodiversity and it’s Conservation), பேரிடர் மேலாண்மை (Disaster Management), நீர்த்தேக்க மேலாண்மை (Watershed Management), நிலச்சரிவு மேலாண்மை (Land Slides Management) போன்ற சூழலியல் மேலாண்மைகள் வெளிப்படும்.
காற்று மாசுபாட்டினைத் தடுத்தல்
காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டமாக ‘ஒவ்வொரு நகரத்தைச் சுற்றிலும் பசுமை வளையங்கள் ஏற்படுத்துதல் வேண்டும்’ என்று சுற்றுச்சூழலறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பழந்தமிழரிடம் காற்று மாசுபாட்டினைத் தடுக்கும் செயல் திட்டம் இருந்தமையைப் பட்டினப்பாலை பதிவு செய்துள்ளது.
கார்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின் கவின்வாடி
நீர்ச்செறுவின் நீள்நெய்தல்
... ... ... ... ...
கோள்தெங்கின் குலைவாழைக்
காய்க்கமுகின் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளைஇஞ்சி.” (பட்டினப்பாலை: 9-19)
“மரங்கள் தங்கள் இலைப்பரப்பு மூலம் காற்றிலுள்ள தூசுக்களையும், பிற வாயு மாசுக்களையும் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஒரு ஹெக்டேர் பரப்பிலுள்ள வளமான காடுகள் ஆண்டொன்றுக்கு முப்பது டன் தூசுக்களைத் தன் இலைப் பரப்பில் பிடித்துக் கொள்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.” (ஜே.தர்மராஜ், சுற்றுச்சூழல் இயல், ப.164) இத்தகைய அறிவியல் உண்மையைப் பட்டினப்பாலை பதிவு செய்யத் தவறவில்லை. கரும்பு ஆலைகளில் இடையறாது புகை வந்து கொண்டிருப்பதால் அருகில் உள்ள நெய்தல் மலர் அழகிழந்து காணப்படுதல் ‘கவின்வாடி நீர்ச்செறுவின் நீள்நெய்தல்’ என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. காற்றில் கலந்த மாசுக்களை நெய்தல் பிடித்து வைத்தமை இதன் மூலம் தெளிவாகின்றது. காற்று மாசடைதல் இத்தகைய பசுமை வளையங்களால் தடுக்கப்பட்டுள்ளன என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது.
நிலச்சரிவு மேலாண்மை (Land Slides Management)
இன்றைய சூழலில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் நிலச்சரிவினால் மனித குடியிருப்புகள் அழிந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் ஆற்றுப் பெருக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு மக்களை மரங்கள் தடுப்புகளாக இருந்து பாதுகாத்தமை பரிபாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி,
விளிவு இன்று,கிளையோடு மேல்மலை முற்றி,
தளிபொழில் சாரல் ததர் மலர் தாஅய்
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு, வாழை,ஞெமை,ஆரம்,இனைய,
தகரமும்,ஞாழலும்,தாரமும்,தாங்கி,
நனிகடல் முன்னியது போலும், தீம் நீர்
வளிவரல் வையை வரவு.” (பரிபாடல்.பா.எண்.12)
மலையின் மேலிடமெல்லாம் மழைபெய்து வையை ஆறு கடல்போல் விரைந்து வந்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக இலக்கியம் பதிவு செய்யவில்லை. காரணம், மலைச்சாரலில் வளர்ந்திருக்கும் காடுகள் ஆகும். நாகம், அகில், சுரபுன்னை,ஞெமை, சந்தனம், தகரம், தேவதாரம், ஞாழல் போன்ற மரங்கள் நிற்பதால் காற்றுப்போல் விரைந்த வையை வரவு நிலச்சரிவை ஏற்படுத்தவில்லை. மேற்கண்ட சான்று பழந்தமிழரின்; நிலச்சரிவு மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒலி மாசுபாட்டினைத் தடுப்பு (Noise Pollution)
ஒலி மாசுபாட்டினைத் தடுக்கும் சூழமைவுகள் பழங்காலத்தில் இருந்தமை மதுரைக்காஞ்சியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
“புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும்
அகலிரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
... ... ... ... ... ...
மருதம் சான்ற தண்பணை சுற்றி,ஒருசார்.” (மதுரைக்காஞ்சி:266-270)
“மரங்கள் ஒலி தாங்கும் மண்டலமாக அமைகின்றன. இவை ஒலிஆற்றலைக் கிரகித்துச் சிதறடிக்கக்கூடிய வல்லமை பெற்றுள்ளன. நெடுஞ்சாலை, தெருவோரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் நெட்டிலிங்கம், வேப்பமரம், புளியமரம், தென்னை போன்ற மரங்களை ஒலி கிரகிக்கும் அமைப்பாக நடவேண்டும். வீட்டிற்கு ஒரு மரம், குழந்தைக்கு ஒரு மரம் என்று மரத்தின் முக்கியத்துவத்தை அரசும் போதித்து வருகிறது. இவ்வாறு வாகனப்போக்குவரத்து இரைச்சல் மற்றும் பல்வேறு வழிகளில் எழும் இரைச்சலை மரம் வளர்ப்பதால் விளையும் பசுமை அடைப்புகள் (Green Covers) கிரகித்துக் கொள்கின்றன. ( ஜே.தர்மராஜ், சுற்றுச்சூழல் இயல், ப.199)
மருத நிலப் பகுதியில் இயற்கையாக அமைந்த வயல் வளம் பேரொலியை இனிய ஒலியாக மாற்றுகிறது. அதனால் பேரொலி ‘விழைவு கொள் கம்பலை’ (மதுரைக்காஞ்சி:526) என்று மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை (Disaster Management)
கடல்நீர் நிலப்பரப்பில் உட்புகாதவாறு மரங்கள் தடுப்புகளாக நின்று முன்னோர்களைக் காத்துள்ளன. கடற்கரையோர அடர்ந்த மரங்களால் தான் கடல்நீர் தடுக்கப்படுகின்றன என்ற உண்மையும் பழந்தமிழருக்குத் தெரிந்துள்ளது. இதற்கான சான்றாதாரங்கள் அகநானூறு, பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
“வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
... ... ... ... ... ...
முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை.” (அகநானூறு:பா.எண்10)
கடல்நீரின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்கும் தன்மையாக புன்னை மரம் நின்றமை மேற்கண்ட பாடலில் புலனாகியுள்ளது.
“தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடந்தாள் புன்னை.” (அகநானூறு:பா.எண்180)
கடற்கரையோரங்களில் தாழை, ஞாழல், புன்னை போன்ற மரங்கள் அடர்ந்து நின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொரா
விளங்கு இரும் புணரி உரும்என முழங்கும்
... ... ... ... ... ...
குவிஇணர் ஞாழல் மாச்சினை...
அடும்பு அமல் அடைகரை... ... ... ” (பதிற்றுப் பத்து:பா.எண.;51)
ஆழிப்பேரலையின் சீற்றத்தினை புன்னை, ஞாழல், அடும்பு போன்ற தாவர இனம் தடுப்புகளாக அமைந்து தடுத்தமையை மேற்கண்ட பாடல் பதிவுசெய்துள்ளது.
‘அடும்பு அமல் அடைகரை’ என்ற பதிவு அடும்பு சூழப்பெற்ற கடற்கரையைக் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழந்தமிழர்கள் பேரிடர் மேலாண்மையைத் (Disaster Management) தெரிந்து கொண்ட செய்தி புலனாகின்றது.
நீர்த்தேக்க மேலாண்மை (Watershed Management)
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. இந்தப் பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் கடல் நீரால் மனிதர்களின் தண்ணீர் பிரச்சினை தீராது. நமது நன்னீர்த் தேவைகளை மழைநீரும், ஆறுகளும், நிலத்தடிநீரும் பூர்த்தி செய்கின்றன. இன்றைய சூழ்நிலையில் நீரின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நீர்வளத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் குளம் அமைத்துத் தண்ணீர் சேமிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டமை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளம் அமைத்து தண்ணீர் சேமிக்கும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்தமையை அகநானூறு பதிவுசெய்துள்ளது.
“... ... ... ... ... ஈங்கைத் -
தூய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில்மறந் தன்ன?
... ... ... ... ...” (அகநானூறு:252:9-14)
நீர்ப்பெருக்கால் குளம் உடையும் அபாயம் ஏற்படும் தருணம், அதைக் கண்காணிக்க காவலர் அமைத்துப் பாதுகாத்தமை மற்றும் பழந்தமிழரின் நீர்ப் பாதுகாப்பும் பேரழிவு மேலாண்மையும் புலனாகின்றது.
‘சுற்றுச்சூழல் கல்வியை எதிர் காலச் சந்ததியினருக்கு அளிக்கும் சங்க இலக்கியங்கள்’ என்றால் மிகையாகாது. இயற்கைப்பாதுகாப்பிற்கு முன்னோர்கள் மேற்கொண்ட அறவாழ்வு மேற்கண்ட சங்க இலக்கியச் சான்றாதாரங்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.