ஆற்றுப்படைகளில் உணவும் தொழிலும்
ச. தனலெட்சுமி
ஆற்றுப்படை இலக்கியங்கள் தமிழரின் கொடை மாட்சி, விருந்தோம்பல், மனிதநேயம், கலைத்திறம் போன்றவற்றைப் பறைசாற்றும் கருவூலங்கள்.
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்” (தொல்.பொருள்.நூற்.1037)
தொல்காப்பியர், “பரிசில் பெற்று வளத்தோடு வரும் கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் வழியில் எதிர்ப்படும் வறுமையுற்ற, கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோரை பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்துவது” என்று விளக்கம் தருகிறார். இவ்வாறு வளம் பெற்றவன், வளம் இல்லாதவன் என்ற இணைப்பில் மிகையாகப் பேசப்படுவது ‘உணவு’. உணவோடு பேசப்படுவது உணவிற்கு ஆதாரமான தொழில்.
குறிஞ்சி - உணவும் தொழிலும்
ஆற்றுப்படை இலக்கியங்களில் குறவர் வாழ்வியல் ‘மலையும் மலை சார்ந்த நிலமாகும்’. இவர்கள் பகற்பொழுதில் ‘தேன் எடுத்தலை’ மேற்கொண்டுள்ளனர். குறவர் தினைச்சோறு, இறைச்சி, பலாப்பழம் போன்றவற்றை உண்டுள்ளனர். ‘பலாப்பழம் அதன் விதைகள்’ குறவருக்கு எளிதாகக் கிடைத்த உணவு வகையாகும்.
மலைப் பகுதியில் இயற்கையாக விளைந்து நிற்கும் கிழங்குகளை அகழ்ந்தெடுப்பர். தினை விதைத்தல், தினை காத்தல், தினை அறுத்தல், தினை குற்றல் போன்ற உணவுக்கான தொழிலை இருபாலரும் மேற்கொண்டுள்ளனர். தினைக்காத்தலில் மகளிர் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. கானவர் பகற் பொழுதின் பெரும்பகுதியை வேட்டையாடி கழித்துள்ளனர். பன்றி வேட்டை, முயல் வேட்டை அவர்களின் உணவுக்கு ஆதாரமாக இருந்துள்ளது.
“அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
... ... ... ... ...
கருங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்” (பெரும்.111-116)
வேட்டை நாய்களைக் கொண்டு வலைகளைக் கட்டி குறு முயல்களை வலையகத்தே வளைத்துப் பிடித்துள்ள செய்தியை பெரும்பாணாற்றுப்படை சான்று பகர்கின்றது.
பண்டமாற்று
குறிஞ்சி நில மக்கள் தமது நிலத்தில் கிடைத்த பொருட்களை நெய்தல் நிலத்தில் பண்டமாற்றி தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்றுள்ளனர்.
“தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்” (பொருந. 214-215)
தேனையும், கிழங்கையும் நெய்தல் நிலத்துக்குக் கொண்டு வந்து பண்டமாற்றி அதற்கு விலையாக மீன், நெய், நறவு பெற்றுள்ளனர் என்பதைப் பொருநராற்றுப்படை மூலம் அறியலாம்.
முல்லை - உணவும் தொழிலும்
முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ‘காடும் காடு சார்ந்த இடத்தையும்’ ஆதாரமாகக் கொண்டனர். இவர்கள் ‘ஆயர்’ எனப்படுவர். ‘ஆ’ என்பது பசு. ‘ஆயம்’ என்பது ‘பசுத்திரளை ஓம்பி வாழ்ந்தவர்’ எனப் பொருள் பெறும். ஆயர், ஆய்ச்சியர் ஆகிய இருபாலரும் ஆநிரைகளை ஓட்டிச் சென்று மேய்த்துள்ளனர்.
ஆயர் மகளிர் வரகுச் சோற்றையும் வேளைப் பூவைத் தயிரில் பெய்து செய்த புளிங் கூழையும் உணவாக உண்டுள்ளனர்.
“நெடுங்குரல் பூனைப் பூவின் அன்ன
... ... ... ... ...
இன் சுவை மூரல்”(பெரும்.192-196)
பெரும்பாணாற்றுப்படை ஆயர்களின் உணவினைப் பதிவு செய்துள்ளது. வரகினது அவிழாத சோறு, அவரை விதையின் பருப்பு உணவாக உட்கொண்டுள்ளனர்.
பண்டமாற்று
ஆயர்கள் மருத நிலத்தில் மாற்றாகப் பொருள் பெற்றுள்ளனர். மோரை விற்று அதற்கு ஈடாக நெல் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். நெய் விற்ற விலைக்குப் பசும் பொன்னை விரும்பி ஏற்காது எருமை அவற்றின் கன்றுகளைப் பெற்றுள்ளனர்.
“புகர் வாய்க் குழிசி பூஞ் அமட்டு இரீஇ
... ... ... ... ...
எருமை நல் ஆன் கரு நாகு பொறூஉம்” (பெரும்.159-165)
ஆயர் வாழ்விடம் - குடில்
ஆயர் குடில்கள் புல்லால் வேயப் பெற்றுள்ளன. சிற்றில் முள்ளிட்டுக் கட்டிய வேலியை உடையன. வளைந்த கால்களை உடைய பந்தரைக் கொண்டன. குடில் முழுவதும் புதுக்கலம் போன்ற செம்மண் பூசப் பெற்றிருக்கும்.
“முரண் தலை கழிந்த பின்ளை மாறிய
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை”(பெரும்.147-148)
குடிசைகளில் ஆடுகள் தின்னும் பொருட்டுச் சிறிய கால்களில் தழைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்.
மருதம் - உணவும் தொழிலும்
மருத நிலம் வயல் சார்ந்த இடமும். இங்கு வாழும் மக்கள் ‘உழவர்’ எனப் பெறுவர். இவர்கள் பண்பட்ட வேளாண்மை செய்துள்ளனர்.
நிலத்தை உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், காவல் காத்தல், அறுவடை செய்தல், நெற்கட்டுகளைக் களங்களுக்கு கொண்டு வருதல், கடாவிடுதல், நெல் அளத்தல் ஆகிய உழவு சார்ந்த நடைமுறை வாழ்வினை மேற்கொண்டுள்ளனர்.
“குடி நிறை வல்சி செஞ்சால் உழவர்
... ... ... ... ...
அரிபுகு பொழுதின் இரியல் போகி” (பெரும்.197-202)
“உழா அ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்” (பெரும்.211-212)
“களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்” (பெரும்.213)
மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடல்கள் உழுதல், நடுதல், களையெடுத்தல், குறித்துப் பதிவு செய்துள்ளது.
உழவர் மகளிர் நெல்லினைக் குற்றி அரிசியாக்கி உண்டுள்ளனர்.
“இரும்பு காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்து
அவைப்பு மாண் அரிசி அமலை”(சிறு.193-194)
வெண்ணெய் அரிசிச் சோற்றை நண்டின் கலவையோடு உண்டுள்ளனர். மேலும், சோற்றோடு கோழிப்பெடை பொரியல் சேர்த்து உண்டுள்ளனர்.
“கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்” (சிறு.195)
பண்டமாற்று
மருத நிலத்தில் கிடைக்கும் கரும்பையும் அவலையும் விற்று, அவற்றிற்கு மாற்றாக மான் தசைகளையும் கள்ளையும் பெற்றுள்ளனர் என்று பொருநராற்றுப்படை சான்று பகர்கின்றது.
“தீங்கரும்போடு அவல் வகுத்தோர்
... ... ... ... ...
மான் குறையொடு மது மறுகவும்”(பொருந.216-217)
நெய்தல் - உணவும் தொழிலும்
பரதவர் வாழ்க்கை முழுவதும் கடலொடு தொடர்புடையதாகும். பரதவர் மீன் பிடித்தலோடு உப்பு விளைத்தல், முத்தெடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சிய மீன்களைக் காய வைத்துப் பயன்படுத்தியுள்ளனர்.
இறால் மீன்களின் சுடப்பட்ட தசையினையும் ஆமைப் புழுக்கினையும் உண்டுள்ளனர்.
நுளையர் மகளிர் காய்ச்சி அரித்த தேறலையும் உலர்ந்த குழல் மீனையும் எப்பொழுதும் தம் மனையில் வைத்து உண்டுள்ளனர்.
“நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர்” (சிறு.158-159)
நிலத்தின் தன்மைகளுக்கு ஏற்ப அங்கு வாழும் மக்களின் உணவும் தொழிலும் அமைந்திருந்தன. பாலை நிலத்தைச் சார்ந்த எயினர்கள் புல்லரிசி திரட்டி உண்டுள்ளனர். பாலைக்குத் தனி நிலம் இல்லை என்பதால் முல்லை நில மக்களின் வறட்சி வாழ்க்கையும், குறிஞ்சி நில மக்களின் வறட்சி வாழ்க்கையும் பாலையின் இயல்பாகக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.