விளையாட்டாக இருந்து கூத்துவடிவம் பெற்றவை
வீ. முத்துலட்சுமி
முன்னுரை
சங்க காலத்திலும், சங்க மருவிய காலத்திலும்ம் அதற்குப் பின்னர் பல்லவ, சோழப் பேரரசுகளின் காலத்திலும், பல்வேறு வகையான கூத்துக்கள் பல்கிப் பெருகிக் காணப்பட்டன. நாயக்கர் காலத்திலும் தஞ்சை மராட்டியர் காலத்திலும் புதுவகையான கூத்துக்கள் தமிழகத்தில் நுழைந்தன. அப்படிப்பட்டக் கூத்துக்களாலும் அக்கூத்துக்களை நிகழ்த்திய கூத்தர்களாலும் சமுதாயத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அக்கூத்துக்கள் காலத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளன. பல விளையாட்டுக்கள் கூத்துக்களாக உருவாகியுள்ளன. கூத்துக்கள் பல அழிந்துபட்டுள்ளன. பல கூத்துக்கள் வேறு பெயர் பெற்றுள்ளன. புதிய வகைகள் பலவும் உருவாயுள்ளன. அவற்றை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
கூத்துக்களாக மாறிய விளையாட்டுக்கள்
சங்ககாலக் கூத்துக்களை ஆராய்ந்து பார்த்தால், அவைகளில் சில விளையாட்டுக்களில் இருந்து தோன்றியுள்ளன என்பதை அறிய முடிகின்றது. சங்க காலத்தில் தழுஉ விளையாட்டுகளாக இருந்தவை பின்னர் கூத்துக்களாக வடிவம் பெற்றுள்ளன.
இசைநயத்தைக் கருதிச் சில விளையாடல்களும் கூட இசைப் பின்னணியில் நிகழ்ந்துள்ளன. ஊசல், பந்து, கழங்கு என்பன இசையினை இணைத்துக் கொண்டு கூத்துக்கள் ஆயின. ‘தழூஉ’ என்னும் விளையாடல் இசைபுணர்ந்து ‘தழூஉஅணி’ என்று சங்ககாலத்திலேயே கூத்தாயிற்று. பெரும்பாலும் விளையாடல்கள் கூத்துக்களாக மாறுவதற்கு இசையே காரணமாயிற்று எனலாம். இசைப் பொருண்மையுடன் விளங்கிய வள்ளைப்பாட்டு போன்றவை அக்கால கட்டத்திலேயே கூத்துக்களாக மாறின. உலக்கைப் பாட்டை அடுத்தே உரற்கூத்து நிகழத் தொடங்கியிருக்க வேண்டும்.
“துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த” (சோமசுந்தரனார் உ. ஆ பெரும்பாணாற்றுப்படை, பா.எ54-55)
கும்மியாட்டமாக மாறிய கொம்மை கொட்டல்
இரு கைகளையும் கொட்டியவாறு ஆடிப் பாடுவதைக் ‘கும்மிப்பாட்டு’ என்று கூறுவர். பெரும்பாலும் பெண்களே அக்கூத்தே ஆடுவர். கைக்கொட்டிப் பாடிக் கொண்டே சுற்றி வருவர். ஒரு பாடலுக்கு மாத்திரமன்றிக் கதை தொடர்பான பல பாடல்களுக்கும் அபிநயம் செய்து ஆடுவதைக் காணலாம். வாய்மொழியாக இருந்த பல கும்மிப்பாடல்கள் இப்பொழுது அச்சாகியுள்ளன. அவற்றை நோக்கும் போது, அங்கு பொதிந்து காக்கப்பட்டுள்ள நாடகப்பண்புகள் நன்கு புலனாகின்றன.
பெண்கள் வயது வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து, ஒருவர் பாட ஏனையோர் பின்பாட கைகுவித்தடித்துக் கொண்டே வட்டமாகச் சுற்றி வந்து ஆடும் ஆட்டத்தினைக் ‘கும்மி’ என்று இன்று சுட்டுகின்றோம். சங்க காலத்தில் கும்மியை ‘கொம்மை’ என்றே இலக்கியங்கள் சுட்டியுள்ளன.
அகநானூறு, குறுந்தொகை போன்ற சங்க நூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் ‘கொம்மை’ என்ற சொல்லானாது ‘திரட்சி அல்லது பருத்த’ என்னும் பொருளில் வருகிறது.
பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பழமொழியில்,
“நோயற்ற பெருமை யுடையாருங் கூற்றம்
புறங் கொம்மை கொட்டினார் இல்” (1)
என வருகிறது.
இங்கு ‘கொம்மை’ என்ற சொல் ‘கைகளைக் குவித்துக் கொட்டுதல்’ என்ற பொருளைத் தருகிறது.
சீவக சிந்தாமணியில்,
“குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ” (2)
என வரும் இடத்திலும்
“கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்
குலத்தொடு முடியுமென்பார்” (3)
என வரும் இடத்திலும்,
நைடத்தில்,
“கூற்றொடுங் கொம்மை கொட்டி குவிக்கும்” (4)
என்று கூறும் இடத்தில் கொம்மை என்ற சொல் ‘கைகளைக் குவித்துக் கொட்டுதல்’ என்ற பொருளிலேயே வந்திருக்கின்றன.
பாரதியார் கும்மி பற்றித் தம் கவிதையில்,
“வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுவோர் கூட்டமுதப்பாட்டு” (5)
என்று பெண்கள் வட்டமாக நின்று குனிந்து நிமிர்ந்தடிக்கும் கும்மியைக் குறிப்பிடுகின்றார்.
எனவே சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்ட ‘கொம்மை’ பின்னாளில் ‘கும்மி’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது.
பொம்மலாட்டமாக மாறிய பாவைக்கூத்து
உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி மனிதரால் நிகழ்த்தப்படும் கூத்து பாவைக்கூத்து என்றழைக்கப்படுகிறது. இது தோற்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என்று இரு வகைப்படும். பாவைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே பெயர்கள் வேறுபடுகின்றன. ‘கையுறைபாவை’ கூத்து என்றொரு கூத்தும் தமிழகத்தில் நடந்திருக்கிறது. பாவைக்கூத்தே இன்று ‘பொம்மலாட்டம்’ என்றழைக்கப்படுகின்றன.
பாவையை ஒப்பனை செய்த செய்தியை,
“பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்” (6)
என்று குறிப்பிடுகின்றது.
திருக்குறளானது,
“நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று” (7)
எனவும்
“இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று” (8)
எனவும் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட உயிரற்ற பொருட்களின் துணை கொண்டு செய்து காட்டப்பட்ட பாவைக்கூத்தே இன்று ‘பொம்மலாட்டம்’ என்ற சொல்லாடலால் சுட்டப்படுகிறது.
சங்க காலத்திலிருந்த பாவை விளையாட்டைத் தான் பாவைக்கூத்து என்று வழங்கியிருக்க வேண்டும்.
கரகாட்டமாக மாறிய குடக்கூத்து
மண்ணாலோ, செம்பு, பித்தளை முதலான உலோகத்தாலோ சிறுபானை வடிவில் உருவாக்கப்பட்டு சூழல்களுக்கேற்ப ஒப்பனை செய்யப்படும் கரகத்தினைத் தலையில் வைத்துக் கொண்டு கீழே விழுந்து விடாமல், இசைக்கருவிகளின் இசைக்கேற்ப ஆடப்படும் ஆட்டத்தினைக் கரகாட்டம் என்று சுட்டுகின்றனர். சங்க காலத்தில் இதனைக் குடக்கூத்து என்று அழைத்துள்ளனர்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதலே கரகத்தைத் தலையில் வைத்து ஆடும் கரகாட்டம் மக்களிடையே இருந்து வந்துள்ளது.
புறநானூறானது,
“எல்லா உயிh;க்கும் ஏமம் ஆகிய,
நீர் அறவு அறியாக் கரகத்து” (9)
எனக் குறிப்பிடுகிறது.
கலித்தொகை,
“எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்,
உறித்தாழ்ந்த கரகமும்” (10)
என்று கரகம் பற்றிய செய்திகளை எடுத்தியம்புகின்றது.
சிலப்பதிகாரத்தில் வரந்தருகாதையில்,
“உறித்தாழ் கரகமும் உன்கைய தற்றே
குதிரொழி காறுங் கடவுட் டன்மை” (11)
எனவும்,
அதே காதையில்
“அங்குறை மறையோ னாகத் தோன்றி
உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து” (12)
என்றும் கரகாட்டத்தை விளக்குகிறது.
பௌத்த காப்பியமான மணிமேகலையிலும் கரகம் பற்றிய செய்தி பதிகத்திலேயே இடம்பெறுகிறது.
“அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை” (13)
என சங்க காலத்தில் நீர் நிரம்பி செப்பு கரகம் என அழைக்கப்பட்டதை அறிகின்றோம். இதனை நின்றாடும் கூத்து என்றும் குறிப்பிடலாம். மாதவியாடிய பதினோராடல்களுள் ஒன்றாக சுட்டப்படும் குடக்கூத்து என்பதற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், உலோகத்தையும் மண்ணையும் கலந்து செய்யப்பட்ட குடத்தின் மேல்நின்று ஆடிய கூத்து குடக்கூத்தாகும் என்றும், மாதவி மாயோன் வடிவம் கொண்டு தலையிலும் தோளிலும் கையிலும் குடம் கொண்டு ஆடியிருக்கலாம் என்றும் இக்குடக்கூத்தே கரகாட்டமாக மாறியுள்ளது. இதனை, நின்றாடும் ஆட்டம் என்று அடியார்க்கு நல்லார் விளக்கம் அளிக்கிறார்.
கண்ணன் குடக்கூத்து ஆடியதற்கான சான்றுகளும் சிலம்பில் உள்ளன. ஆக குடக்கூத்தை ஆண்களும் (கண்ணன்) பெண்களும் (மாதவி) ஆடியிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் ஆராயும் போது சங்க இலக்கியத்தில் சுட்டப்படும் பழஞ்சொல்லான, குடக்கூத்து இக்காலத்தைய ‘கரகாட்டமே’ என்பதைப் புலப்படுத்துகின்றது.
குறவன் குறத்தி ஆட்டமாக மாறிய குறவஞ்சி
குன்றில் வசித்த குறவர்களைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவர்கள் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் பண்டிகைக் காலங்களிலும் உடும்புத் தோலான கஞ்சீரக் கட்டை என்னும் தோற்கருவியையோ தகர டப்பாவையோ தட்டிக் கொண்டு வயது வேறுபாடில்லாமல், ஆடிக்களிப்பது உண்டு. தொழில் அடிப்படையில் இவர்கள் ஆடுவது இல்லை. தமிழில் ‘குறவஞ்சி’ என்னும் தனி இலக்கியவகையே உள்ளது. குறவர் குலப்பெண் குறி கூறுவதாக குறவஞ்சிக்கு இலக்கணம் அமைந்துள்ளது.
இத்தகைய குறவஞ்சி தற்போது குறவன் குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகிறது. திருமணச்சடங்கு, காதுகுத்து, புதுமனைப்புகு விழா முதலான வாழ்வியல் சடங்குகளிலும் வெற்றிவிழா, வரவேற்பு விழா, அரசியல் விழாக்களிலும் விளம்பரங்களிலும் குறவன் குறத்தி ஆட்டமானது இடம்பெறுகின்றது.
கொக்கலிக்கட்டை ஆட்டமாக மாறிய மரக்காலாடல்
நீண்ட கால்களையுடைய கொக்கினைப் போன்று நீண்ட மரக்கட்டைகளைக் காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டத்தினைக் ‘கொக்கலிக்கட்டை ஆட்டம்’ என்று சுட்டுகின்றார். மூன்று, நான்கு கால்களையுடைய இருக்கைகள் முறையே முக்காலி, நாற்காலி என்று சுட்டுவதைப் போன்று கொக்குக்கால்களைப் போல உயரமான கால்கள் ‘கொக்காலி’ என்று சுட்டப்பட்டுப் பின்னர் ‘கோக்கலி’ என வழங்கியிருக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் வைகாசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை கெங்கையம்மன் கோவிலுக்குக் காப்பு கட்டி அடுத்த செவ்வாயன்று அதாவது காப்பு கட்டிய எட்டாம் நாள் இத்திருவிழா நடைபெறுகிறது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.
ஆதிதிராவிடர்கள் இந்த ஆட்டத்தில் ஆட்டக்காரர்களாகக் கலந்து கொள்வதில்லை. அகமுடைய முதலியார் நாயக்கர், பிள்ளை, கோனார், வன்னியர் போன்ற சாதியினர் ஆடுகின்றனர்.
இந்த ஆட்டத்தின் மிக முக்கியமான பொருள் காலில் கட்டிக்கொண்டு ஆடும் மரக்கட்டைதான். இக்கட்டை இரண்டரை அடி முதல் ஐந்து அடி உயரங் கொண்டதாக இருக்கும். கட்டையின் தோற்றம் மேலே செல்லச் செல்லக் கனமாகிப் பாதம் வைக்குமளவு இருக்கும். பாதம் வைக்குமிடத்திற்கு மேலே சற்று மெலிதாக அரையடி உயரம் நீட்டிக் கொண்டிருக்குமாறு செய்யப்பட்டிருக்கும். காலோடு கட்டையை வைத்துப் பிணைத்துக் கொள்வதற்கு இப்பகுதி உதவுகிறது.
உறுதியாகவும் அதே நேரத்தில் கனமற்றதாகவும் கட்டை அமைய வேண்டும். பல ஆண்டுகள் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க எளிதில் உலுத்துப் போகாத மரங்களால் கட்டை முதலான மரங்கள் இத்தகைய கட்டை செய்யச் சிறந்த மரங்களாகக் கருதப்படுகிறது.
இந்த ஆட்டத்தினை மாதவி ஆடியதாகச் சுட்டும் பதினொரு ஆடல்களுள் ஒன்றான ‘மரக்காலால்’ கொக்கலிக்கட்டை ஆட்டத்தோடு நினைத்துப் பார்க்கத்தக்கதாக உள்ளது.
“காய்ச்சின அவுணர் கருந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடல்” (14)
என்ற மாயவன் ஆடிய மரக்காலாடல் பின்னாளில் கொக்கலிக்கட்டையாக வளர்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வர உதவுகிறது.
கோமாளிக்கூத்தாக மாறிய வசைக்கூத்து
இது நகைச்சுவைக்கூத்து எனப்படுகிறது. இதனை ‘வசைக்கூத்து’ என்றும் கூறுவர். இது, இந்நாட்களில் ‘கோமாளிக்கூத்து’ என வழங்கப்படுகிறது.
“பல்வகை உருவமும் பழித்துக் காட்ட
வல்லவனாதல் வசையெனப்படுமே” (15)
வெற்றி பெற்ற மன்னன் தோல்வியடைந்த மன்னனின் செயல்பாடுகளைப் பழித்துக்காட்டி ஆடியதால் இது வசைக்கூத்து எனவும், அவ்வாறு பழித்துக் காட்டும் போது நகைச்சுவையுணர்வு வெளிப்பட்டதால் இது நகைச்சுவைக் கூத்து எனவும் பெயர் பெற்றிருக்க வேண்டும். இக்காலத்தில் அரசியல்வாதிகளையும் பிறரையும் பழித்துக்காட்ட, நகைச்சுவைக் கூத்து ஆடப்படுகிறது.
சாமியாட்டமாக மாறிய வெறியாடல்
இது தெய்வம் ஏறியாடும் கூத்தாகும். சிலப்பதிகாரத்தில் சாலினி ஆடிய கூத்து. வெறிக்கூத்து என்று கூறலாம். சங்கஅகப் பாடல்களில் ‘வெறியாட்டு நிகழ்ச்சிகள்’ பல உள்ளன. சங்கப் புலவர்களுள் ஒருவர் ‘வெறிபாடிய காமக்கண்ணியார்’ என்று பெயர் பெற்றுள்ளனர். சாலினி தெய்வமேறி ஆடியதைச் சிலம்பு,
“பழங்கட னுற்ற குழங்குவாய்ச் சாலினி
தெய்வமுற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப” (16)
எடுத்தியம்புகிறது. இன்றும் கோயிற்திருவிழாக்களின் போது பெண்களும் ஆண்களும் தெய்வமுற்று ஆவதைக் காண முடிகிறது.
தேர்க்குரவைகள்
தொல்காப்பியப் பொருளதிகாரத்துப் புறத்திணையியலில் வாகைத்திணையின் பல்வேறு துறைகள் பேசப்படும் போது தேர்க்குரவைகள் சுட்டப்படுகின்றன. ‘தேரோர் வென்ற கோமான் முன்தோ;க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும்’ என்ற நூற்பா அடிகளால் இருவகைத் தேர்க்குரவைகள் இருந்தமையை அறிவிக்கிறது. “வென்றாடு குரவையாக இருந்த முன்தேர்க்குரவையும், வெற்றியால் பயனடைந்தவர்கள் மகிழ்ந்தாடுவதாகப் பின்தேர்க்குரவையும் அமைந்தது” (17) இந்த இரண்டு குரவைகளும் கோயில் திருவிழாக்களில் இறைவன் ஊர்வலம் வரும்பொழுதும் வெற்றி விழாக்களின் போதும் தேரின் முன்னும் பின்னும் குரவைக்கூத்துக்கள் இன்றும் ஆடப்படுகின்றன.
சங்ககாலக் காவடியும் இக்காலக் காவடியாட்டமும்
காவடியைத் தோளில் சுமந்து, நையாண்டி மேள இசைக்கேற்ப ஆண் ஒருவரால் ஆடப்படும் ஆட்டம் காவடியாட்டம் என்று இன்று அழைக்கப்படுகிறது. காவடி என்ற சொல்லுக்கான விளக்கத்தை இலக்கிய அடிப்படையில் ஆராய்ந்தால், ‘கா’ என்ற சொல் அடியாகவே காவடி என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
‘கா’ என்பது ‘பாரந்தாங்குகோல்’ ‘இரு முனைகளிலும் எடைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு தண்டினைத் தோளில் வைத்துச் சுமத்தல்’ என்ற பொருளில் ‘கா’ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. காத்தண்டில், பதலை, முழவு போன்ற இசைக்கருவிகள் தூங்கின என்பதும், வீழ்ந்துபட்ட பன்றியின் தசைகளைச் சுமக்கவும் காத்தண்டு பயன்படுத்தப்பட்டதாகவும் மலைபடுகடாம் கூறுகிறது.
“கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோட் பலவின் காய்ந்துணர் கடுப்ப
நேர்ச்சீர் சுருக்கில் காய கலப் பையிர்” (18)
பலாமரங்களில் பலாப்பழங்கள் தூங்குவதுபோல, இசைக்கருவிகள் காவடித்தண்டில் தூங்கின என மலைபடுகடாம் கூறுகிறது.
இன்றும் ஒரு கோலின் இருமனைகளிலும் நீர்க்கலயங்களைத் தொங்கவிட்டுத் தோளில் தூக்கிச் செல்வதைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காண்கிறோம். அக்கோல் ‘காக்கட்டை’ (கா + கட்டை) எனப்பெறுகிறது. சமீபகாலம் வரை கிராமப்புறங்களில் பதநீர் விற்போர் பழநீர்க் குடங்களைக் காவடி கட்டிச் சுமந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிச்சை எடுக்க வரும் சாமியார்களும் காவடியின் ஒரு புறம் சமைத்த உணவைப் பெறும் பாத்திரத்தையும் மறுபுறம் அரிசிப்பாத்திரத்தையும் சுமந்து வரும் பழக்கம் காணப்பட்டது. இது ‘அன்னக்காவடி’ எனப்பட்டது.
பொருள் இல்லாதவரைப் பிச்சைக்காரன் ‘அவன் ஒரு அன்னக்காவடி’ என்று குறிப்பிடும் பழக்கம் காணப்படுகிறது. சாமியார்கள் அல்லது யாசகர்கள் காவடியைத் தோளில் சுமந்து சென்று உணவு மற்றும் பொருட்களை யாசகம் கேட்ட காரணத்தால் காவடி யாசகர் என்ற பொருள் வந்துள்ளதை அறிய முடிகிறது. இவையனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது, ‘காவடி’ என்ற சொல் ‘பரந்தாங்கும் கோல்’ என்ற பொருளையே தருகின்றது.
பாரஞ்சுமக்க உதவும் காவடி பின்னர் வழிபாட்டோடு தொடர்புபடுத்தப்பட்ட நிலையை அறிய முடிகிறது. பாரஞ் சுமக்கும்போது சுமை தெரியமாலிருக்கப் பாடல் பாடுவது தொடங்கி, மலை மீது பாரஞ்சுமத்தல் இன்னும் கடினமானதாகையால் மலைமீதுள்ள முருகனைத் தொழுது பாடும் பழக்கம் உருவாகிப் பின்னாளில் முருகனோடு காவடி தொடர்புபடுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தொகுப்புரை
* தமிழ்மொழியின் தோற்றத்தை எவ்வாறு அறுதியிட்டு கூற இயலாதோ, அதைப்போல கூத்துக்களின் தோற்றத்தினையும் வரையறுத்துக் கூற இயலாது. அப்படிப்பட்ட பழமை வாய்ந்த கூத்துக்கள் தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரையில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு காணப்படுகின்றது.
* பொழுதினைப்போக்கவும் மகிழ்ச்சிக்காகவும் விளையாடப்படும் விளையாட்டுக்களில் சில கூத்துக்களாக மாறியுள்ளன. அப்படி கூத்துக்களாக மாறிய விளையாட்டுக்களும் காhலமாற்றத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டுள்ளன. பாவை, தழுவணி போன்றவை விளையாட்டுக்களாக இருந்து பின்னாளில் கூத்து வடிவம் பெற்றன. சங்க காலத்தில் இருந்த கூத்துக்களில் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப சங்ககாலத்தில் இல்லாத பல கூத்துக்கள் புதிதாகத் தோன்றியுள்ளன.
* ஏற்கனவே இருந்த கூத்துக்கள் கால வளர்ச்சிக்கு ஏற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களின் வருகையாலும் மக்கள் அதற்கு கொடுக்கும் ஆதரவாலும் பல கூத்துக்கள் அங்கே தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுகின்றன.
* தற்காலத்தில் கோயில் திருவிழாக்கள், அரசியல், பொதுக் கூட்டங்கள், குடும்ப விழாக்கள், இறப்புச் சடங்குகள் ஆகியவற்றால்தான் கூத்துக்கள் தம் உயிரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
* இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழும் தற்கால மனிதனுக்கு கூத்துக்களைக் கண்டு ரசிக்க மனமும் இல்லை. நேரமும் இல்லை. எனவே கூத்துக்கலையை நம்பி பிழைப்பு நடத்தும் கலைஞர்கள், வாழ்க்கையை நகர்த்திச் செல்ல விரும்பி தகவல்தொடர்பு ஊடகங்களில் தம் நிகழ்ச்சியைக் கொண்டு செல்கின்றனர். தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் மட்டுமே இன்றும் கோயில் கொடை நிகழ்ச்சியில் கூத்துக்கள் வளமையாக வாழ்ந்து வருகின்றன. மற்ற இடங்களில் கொலை உயிரும் குற்றுயிருமாக, தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுள்ளது. அத்திபூத்தாற் போல, அங்கொன்றும் இங்கொன்றும் காணப்பட்ட நிலையும் இப்போது மாறி, எங்கோ ஒன்று என்ற பரிதாப நிலையில் கூத்துக்கள் காணப்படுகின்றன.
குறிப்புகள்
1. பழமொழி நானூறு,126
2. சீவகசிந்தாமணி-மண்மகள் இலம்பகம்-2102
3. சீவகசிந்தாமணி-குணமாலையார் இலம்பகம்
4. நைடதம்
5. பாரதியார் ,குயில்பாட்டு,39-40
6. நற்றிணை 319:7
7. திருக்குறள் 1020
8. மேலது, 1058
9. புறம்1:11-12
10 . கலித் 9:1-2
11. சிலம்பு30: 64-65
12. மேலது, 79-90
13. மணிமேகலை,பதிகம்,12
14. பாக்யமேரி, காலந்தோறும் தமிழர் கலைகள், ப.51
15. சிலம்பு,3:13 வரை
16. சிலம்பு,12:7-9
17. சிலம்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம்,ப.80
18. மலைபடுகடாம்,10-14
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.