எட்டுத்தொகை நூல்களில் நாட்டுப்புறக் கூறுகள்
முனைவர் செ. கென்னடி
அறிமுகம்
மனித வாழ்வில் நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனை எவராலும் தடுத்து நிறுத்தி விடமுடியாது. இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதற்கு எத்தனையோ வகையான காரணங்கள் இருக்கின்றன. பெருகி வரும் மக்கள் தொகையும், வளர்ந்து வரும் அறிவியலும், மக்களுக்கு இருக்கும் புதுமை நாட்டமும், பொருளாதார வளர்ச்சியும், கல்வி மேம்பாடும், உலக ஒருமைப்பாட்டு உணர்வும் இவ்வகை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளில் சில. ஆனால் எவ்வளவுதான் நாகரீகங்கள் மாறிக் கொண்டே வந்தாலும் மக்களிடத்தில் இருக்கும் சில அடிப்படைப் பண்புகள் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன. நாகரீகப் புயற்காற்று அவற்றின் ஆணிவேரைக்கூட அசைக்க முடியவில்லை. அந்த ஆணிவேருக்கு இருக்கக்கூடிய அழுத்தத்திற்குப் பெயர்தான் மரபு அல்லது பண்பாடு என்று அழைக்கிறோம். குறிப்பாகத் தமிழகத்தைப் பல்வேறு நாட்டவர்கள் ஆண்டிருக்கின்றனர். அவர்கள் ஆண்ட காலங்களில் அவர் தம் பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கம், மொழி ஆகியவற்றைத் தமிழ் இனத்தவரிடையே புகுத்தவும் செய்திருக்கின்றனர். ஆனாலும் நம் பழமையான மரபுகள் மாறாமல் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய பழைய பண்பாட்டு மரபுகளில் ஒன்றுதான் நாட்டுப்புற மரபு. இத்தகைய நாட்டுப்புற மரபுகள் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களில் எவ்வாறு வெளிப்பட்டு இருக்கின்றன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலக்கியம் குறித்த விளக்கங்கள்
இலக்கியம் என்றால் என்ன என்பது குறித்து பல்வேறு அறிஞர்கள் தத்தம் நூற்களில் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளனர். ஆபர்கிராம்பி என்பவர், “மனித வாழ்வின் சிறப்பியல்பாகவுள்ள மொழியோடு தொடர்புகொண்டதாய், மனிதனின் சிந்தனைக்கும் உணர்வுக்கும் கற்பனைக்கும் விருந்தாய் அமைந்து, ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வெளிப்படுவதே இலக்கியம்” என்று கூறுகிறார்.
ரெனாவெல்லத் என்னும் அறிஞர், ‘கற்பனைத் தொடர்புடன் ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டை அவர்தம் மொழியில் செப்புவதே இலக்கியம்’ என்று கூறுகிறார்.
டாக்டர் மு. வ. அவர்களோ, “வெவ்வேறு மனநிலைக்கு வெவ்வேறு வகை உணர்ச்சிகளை எழுப்ப வல்லதே இலக்கியம்” என்று தம்முடைய இலக்கியத்திறன் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொருகோணத்திலிருந்து இலக்கியத்திற்கு பல்வேறு விளக்கங்கள் கூற முற்பட்டாலும், இவற்றிலிருந்து நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளமுடியும். அதாவது இறந்த காலத்தை நினைவூட்டி எச்சரிக்கைப்படுத்துவனவாகவும், நிகழ்காலத்தின் பிரதிபலிப்பாகவும் வருங்காலத்தின் கனவுகளாகவும் மிளிர்பவைகளே இலக்கியங்கள்.
இத்தகைய இலக்கியங்கள் பின்வரும் நான்கு காரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகுவதாக அறிஞர் ஹட்சன் குறிப்பிடுகின்றார். அவை;
1. ஒருவனுக்குத் தன்னுடைய எழுச்சியை வெளியிட வேண்டும் என்பதால் ஏற்றபட்ட விருப்பம்.
2. பிறருடைய வாழ்வு, செயல் என்னும் இரண்டிலும் ஒருவனுக்கு ஏற்பட்ட அக்கறை.
3. உண்மை உலகத்தில் உள்ள ஆசை, அதனைப்போலவே கற்பனை உலகத்தைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம்.
4. ஒலிகளுக்கும் சொற்களுக்கும் ஓர் அழகிய உருவம் அமைக்கவேண்டும் என்ற உந்துதல்.
இலக்கியப் பிரிவுகள்
தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஏட்டிலக்கியங்கள். மற்றொன்று எழுதா இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும். ஏட்டிலக்கியங்களை மரபின் அடிப்படையில் அக இலக்கியங்கள் என்றும், புற இலக்கியங்கள் என்றும், நுவல்பொருள் அடிப்படையில் அறவுரை இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், புராண இலக்கியங்கள், காதல் இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள் என்றும், அளவின் அடிப்படையில் சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்கள் என்றும், காலத்தின் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் என்றும் பிரிக்க முடியும். இத்தகைய ஏட்டிலக்கியங்கள் தோன்ற அடிப்படைக் காரணமாக அமைவது எழுதா இலக்கியங்களான நாட்டுப்புற இலக்கியங்களே. நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள், அது கொடுத்த இசை, அது படைத்துக் கொண்ட கொள்கை, அதன் அமைப்பு ஆகிய எல்லாவற்றையும் இன்று நாம் காணும் ஏட்டிலக்கியங்களில் ஊடுபொருள்களாக உலா வருவதைக் காணலாம். என்னதான் மாற்றங்கள் வந்தாலும் நாட்டுப்புற இலக்கியங்கள் போட்ட அடிப்படையிலேயே நாகாpக இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற ஏட்டிலக்கியங்கள் கோட்டை கட்டி இருக்கின்றன. இந்த உண்மையை எட்டுத்தொகை நூல்களில் இடம் பெறும் பாடல்களின் வாயிலாக அறியலாம்.
தாலாட்டுப் பாடல்கள்
தாலாட்டு என்பது தால் + ஆட்டு என்னும் இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது. இவற்றில் தால் என்பதற்கு நாக்கு என்பது பொருள், ஆட்டு என்பதற்கு அசைத்தல் என்பது பொருள். ஆட்டுதல் என்னும் தொழிற்பெயரே ஆட்டு என முதல் நிலைத்தொழிற்பெயராக நின்றுள்ளது. எனவே, தாலாட்டுதல் அல்லது தாலாட்டு என்பதற்கு ‘நாவினை அசைத்தல்’ என்பது பொருள்.
பொதுவாகத் தாலாட்டுப் பாடல்கள் குழந்தைகளைப் பற்றியும், குழந்தைகளின் கருவிகளைப் பற்றியும், குழந்தைகளின் உறவினர்கள் குறித்தப் பெருமைகளையும் எடுத்துக் கூறுவதாக அமைகின்றன. அதிலும் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடல்களில் தாய் வீட்டுப்பெருமையும், தாய்மாமன் பெருமையும் மிகுதியாகப் பாடப் பெற்றிருப்பதைக் காணலாம். பின்வரும் தாலாட்டுப் பாடலில் தாய் தான் வாழ்ந்த பகுதியின் சிறப்பைத் தன் குழந்தைக்கு எடுத்துக் கூறுகிறாள். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், தன் மகனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை எல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள்
“ஏலக்காய் காய்க்கும்
இலை நாலு பிஞ்சு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய்மாமன் வாசலிலே
தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்ன விட்டு - உன் மாமன்
தாசிக்கே விட்ட பணம் - ரெண்டு
தங்க மடம் கட்டலாமே
முத்தளக்க நாழி
முதலளக்க பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசை யிட்டார் தாய் மாமன்.
என்று தான் பிறந்த வீட்டின் பெருமையினைத் தன் மகனுக்குத் தாலாட்டுப் பாடல் மூலம் எடுத்துக் காட்டுகிறாள். சங்க இலக்கியங்களில் ஒன்றான நற்றிணையில் இடம்பெறும் பாடல் வாயிலாக இதே கருத்து வெளிப்படுவதைக் காணலாம்.
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென்று ஓக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தந்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரிமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறத்துண்ணும் சிறுமது கையளே”
இப்பாடலில் வரும் தலைவி சிறுமியாக இருந்த போது, தங்கக் கிண்ணத்தில் இடப்பட்ட பால்சோற்றைச் செவிலியர் ஊட்ட முற்பட்ட போது ‘உண்ண மாட்டேன்’ என்று அடம் பிடித்து ஓடியவள். ஆனால் இவள் புகுந்த வீடோ, மிக்க வறுமையில் கிடந்தது. உழைக்கக்கூடிய கணவனையே இவள் பெற்றிருந்தாள். ஆனாலும் மூன்றுவேளைப் பசியின்றி உண்ணுவதற்கே, அவனுடைய வருமானம் போதவில்லை. ஆதலால் இவள் நாள்தோறும் ஒருவேளை விட்டே ஒரு வேளையே உண்கின்றாள். ஆனாலும் இவளுடைய தாய்வீடோ இதற்கு நேர்மாறாக இருக்கின்றது. அங்கே எல்லா வளங்களும் நிறைந்துள்ளன. கேட்பதைக் கொடுப்பதற்கு இவளுடைய தந்தை காத்துக்கிடக்கிறார். ஆனாலும், இவளுக்கு இவளுடைய தன்மானம் தடையாய் இருக்கிறது. புகுந்த வீடு வறுமையுற்ற போதும் பிறந்த வீட்டிலிருந்து பொருள் வாங்கி உண்ணுவதைத் தன்மானம் மிக்க எந்த தமிழச்சியும் விரும்புவதில்லை. இத்தகைய தாலாட்டுப் பாடல்களை முதன்முதலாக ஏட்டிலக்கியத்தில் ஏற்றுக் கொண்டவர் பெரியாழ்வாரே என்று மு.அருணாசலம் குறிப்பிடுகின்றார். அதன் பின்னரே, பிள்ளைத்தமிழ் நூற்கள் இத்தாலாட்டுப் பாடல்களைப் போற்றி வரலாயின. அதனைத்தொடர்ந்து கம்பர், மாணிக்கவாசகர் போன்றோர் தாலாட்டுப்பாடலின் வடிவத்தைத் தம் கவிதைகளில் பயன்படுத்திக் கொண்டனர்.
காதல் பாடல்கள்
ஆணும் பெண்ணும் மனதால் ஒன்றுபடுவதே காதல். அடியர் ஆண்டவனிடத்தில் கொள்வதும், அன்னை மகனிடத்தில் காட்டுவதும், நண்பன் இன்னொரு நண்பனிடத்தில் செலுத்துவதும், கணவன் மனைவியிடத்தில் வைப்பதும், மனைவி கணவனிடத்தில் கொள்வதும் காதல்தான். காதல் என்பதற்கு அன்பு என்பது பொருள். தற்போது இக்காதல் என்னும் சொல் ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தோன்றும் நட்பினையே குறிக்கின்ற அளவிற்குத் தன் பொருள்வளம் குறைந்து சுருங்கிவிட்டது. மனித சமூகத்தின் ஆணிவேரான காதல் குறித்து பாரதி தனது குயில் பாட்டில்
”காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்”
என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் ஏழு திணைகளிலும் காதலைப் பற்றி இலக்கணம் வகுத்திருக்கிறார். தெய்வப்புலவர் திருவள்ளுவரோ திருக்குறளில் 25 அதிகாரங்கள் வாயிலாக காதல் உணர்வை மென்மையாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
“மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்பட வார்” (காமத்துப்பால் 1289)
என்று காதலை மலரினும் மெல்லியதாகக் கூறியிருக்கிறார். இப்படி தொல்காப்பியம் தொடங்கி இன்றைக்கு இலக்கிய உலகில் உலா வரும் இக்கால இலக்கியம் வரை காதலைப் பாடாத இலக்கியம் எதுவும் இல்லை என்று துணிந்து கூறலாம். இத்தகைய காதல் உணர்வுகளை ஏட்டிலக்கியங்கள் வெளிப்படுத்துவதற்கு முன்னரே நாட்டுப்புற மக்கள் தங்களின் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஏட்டிலக்கியக்கியக் கவிஞர்கள் தங்கள் படைப்புக்களை அமைத்திருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் இத்தகைய நாட்டுப்புறக்காதல் உணர்வுகள் மிகுதியாகக் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.
பருவம் கண்டு வருந்துதல்
பஞ்ச காலத்தில் வேலை தேடித் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றான் காதலன். மழை பெய்து பயிர் செய்யும் காலம் வந்ததும் திரும்புகிறேன் என்று சொல்லிச் சென்றான். மழை வந்தது. புஞ்சைக்காட்டு வேலைகளும் தொடங்கிவிட்டன. காதலனை இன்னும் காணவில்லை. காதலியோ அவனது வாக்குறுதியை எண்ணி வருந்துகிறாள். இதை,
“கழுகு மலைக் குருவி குளம்
கண்டெடுத்தேன் குண்டு முத்து
குண்டுமுத்தைக காணாமல்
சுண்டுதனே கண்ணீரை
வேப்பம்பூ புராதோ
விடிந்தால் மலராதோ
நேற்று வந்த நேசருக்கு
நேரம் தெரியாதோ!
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ
வீசுங் கொம்பு மேலிருந்து
வெள்ளை தெரியாதோ
எலுமிச்சம் பழம் போல
இருபேரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்” (தமிழர் நாட்டுப்பாடல்கள் பக் 151-152)
என்ற நாட்டுப்புறக்காதல் பாடல் வாயிலாகத் தன் மன உணர்வுகளைக் காதலி வெளிப்படுத்துகிறாள். இதே கருத்தினைப் பின்வரும் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்குவதைக் காணலாம். பிரிந்த தலைவன் மீண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற இளவேனிற் பருவமும்; வந்துவிட, தலைவன் வராதது கண்டு தலைவி வருந்திக் கூறுவதாக அமையும்; பாடல்.
“கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதலர் அகலக் கல்லென்றவே” (குறுந்தொகை -24)
ஆக, நாட்டுப்புறத்;தில் வாய்வழியாகப் பாடப்படும் பாடல்களின் அடிப்படையிலேயே ஏட்டிலக்கியப் பாடல்களும் அமைந்திருக்கின்றன.
உடன்போக்கு
தமிழிலக்கியங்களில் உடன்போக்குப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதைக் காணலாம். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் உடன்போக்குப் போன தலைவியைச் செவிலித்தாய் தேடிப்போவதையும், இடையிலே முக்கோற் பகவரைக் கண்டு தன் மகளைப் பற்றிக் கூறுவதையும் அதற்கு அவர்கள் பதில் கூறுவதையும் பின்வரும் பாடல் விளக்குகிறது.
“எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
... ... ... ... ... ... ... ... ... ...
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ?” (கலித்தொகை 9)
இதே கருத்து பின்வரும் நாட்டுப்புறப்பாடலிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
“பூ மரம் வச்சவன்
பொன்னாலே சேவகன் பொய்கையிலே - இந்த
மாமரம் வச்சவன்
தருவான் தருவான்என் மக பழியை
வெட்டின பஞ்சை மிதிக்கக் கூசுவாள் என் மகள் - மெல்லியரே
கல்லாலே கோட்டையும்
காண்டாவனமும் கடந்திட்டாளே
அருபுனக் கள்ளி
அண்டா நடைக்கள்ளி - ஆசைக் கள்ளி
திருகுபுனக்கள்ளி
தேசக்கள்ளி என் மகள்
கள்ளி போன திசை காணீங்களோ”
உணவு சமைக்கும் பாங்கு
கணவனுக்குச் சமையல் செய்யும் தலைவியின் அழகைப் புனைந்துரைக்கிறது குறுந்தொகைப்பாடல் ஒன்று. தலைவி ஒருத்தி காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் கெட்டியான தயிரைப் பிசைந்து தலைவனுக்குப் புளிக்குழம்பு வைக்கிறாள். குழம்பைத் தாளிக்கும் போது எழும் புகை, தலைவியின் குவளை போன்ற அழகிய கண்களில் நிறைகின்றன. புகை மூட்டத்தில் தானே துலாவிச் சமைத்த புளிக்குழம்பை ‘இனிது இனிது’ எனக் கணவன் உண்டதைக் கண்ட தலைவியின் முகம் நுண்ணிதின் மகிழ்கின்ற காட்சியைக் கூடலூர் கிழார் காட்சிப்படுத்தியுள்ளார்.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
குவளை உண்கண குய்ப்புகை கழுமத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” (குறுந்தொகை 167)
நாட்டுப்புற பாடல்களும், பெண்கள் கணவனுக்குச் சமையல் செய்த அழகைப் புனைந்து பாடுகின்றன. ஒரு மனைவி உரலில் நெல்லைப் போட்டு உலக்கையில் குத்தினால் அரிசி உடைந்து போகுமென்று தன் உள்ளங்கையை உரலாக்கித் தன் பெருவிரலை உலக்கையாக்கி ஆவாரம் பூ நிறத்தில் அரிசியைப் புடைத்தெடுத்துக் கணவனுக்கு உணவு சமைக்கிறாள்.
“மூலரெண்டு முறம் எடுத்து
ஏலேலோ கும்மி ஏலேலோ
முறத்துக்கொரு நெல்லெடுத்து
ஏலேலோ கும்மி ஏலேலோ
குத்திநல்லா புடைச்செடுத்தா
ஏலேலோ கும்மி ஏலேலோ
ஒன்னுரெண்டா போகுதுன்னு
ஏலேலோ கும்மி ஏலேலோ
உள்ளங்கையை உரலு பண்ணி
ஏலேலோ கும்மி ஏலேலோ
பெருவிரலை உலக்கை சாத்தி
ஏலேலோ கும்மி ஏலேலோ
அள்ளி நல்லா புடைச்செடுத்தா
ஏலேலோ கும்மி ஏலேலோ
ஆவாரம்பூ தன் நிறமா
ஏலேலோ கும்மி ஏலேலோ”
என்று பாடுகிறார். கணவனுக்குச் சுவையான உணவைச் சமைத்துப் பரிமாறுவதும் அவன் சுவைத்து உண்பதை எட்டி நின்று பார்த்து அகமகிழ்வதும் அவன் வயிறார உண்டு முடித்த பிறகு எஞ்சியதை உண்டு வாழ்வதும் நம் கிராமப்புறங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் வழக்கம். இத்தகைய வழக்கம் ஏட்டிலக்கியங்களிலும் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஒப்பாரிப் பாடல்கள்
இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒருவகை இசைப்பாடலே ஒப்பாரி என்பர். ஒப்பாரி என்பதை ஒப்பு+ஆரி என்று பிரிக்கலாம். இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பது என்பது பொருள். ஒப்பாரியின் கருப்பொருள் பற்றிச் சு. சண்முகசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இதில் இறப்பும், இறப்பால் வந்த இழப்பும் கருப்பொருள் ஆகின்றன. இழப்பு என்பது பாதுகாப்பினை இழப்பது, பாதுகாக்கப்பட வேண்டியவற்றை இழப்பது என்று இருவகைப்படும்”
திருமணம் ஆவதுவரை பெற்றோரின் துணையோடு வாழும் ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவனின் துணையுடன் வாழ்கிறாள். தன் பாதுகாப்பாக விளங்குகின்ற கணவன் இறந்த போதும் தான் பாதுகாக்க வேண்டிய குழந்தை இறந்த போதும், அவளுடைய மனம் ஆற்றாச் சோகத்தில் அல்லலுறுகின்றது. துன்பம் அவளுடைய நெஞ்சை அழுத்துகின்ற போது, அதனைத் திறந்துவிடும் வாய்க்காலாக ஒப்பாரி அவளுக்குப் பயன்படுகிறது.
இவ்வொப்பாரியைப் பற்றிய குறிப்புகள் சங்க நூற்களில் காணப்படுகின்றன. சங்க நூல்களில் ஒன்றான புறநானூற்றில்
“தீங்கனி இரவமொடு வேம்புமனைச செரீஇ
வாங்கு மருப்பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் காநறை புகைஇக்
காக்கம் வமமோ காதலங் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே” (புறம்-281)
என்று வரும் இப்பாடலில் ‘காஞ்சிபாடி’ என்னும் சொல் வந்திருப்பதைக் காணலாம். காஞ்சி என்பது நிலையாமையைக் குறிப்பது என்று தொல்காப்பியம் கூறுகிறது. எனவே காஞ்சி பாடுதல் என்பது நிலையாமையைப் பற்றிய பாடலாகும். நிலையாமையைப் பற்றிய பாடல் என்பது ஒப்பாரியைத்தான் குறிக்கிறது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதே புறநானூற்றில் பறம்புமலையை இழந்த பாரியின் பெண்மகளிர் இருவர் நிலவினை நோக்கிப் பாடியிருப்பதாக ஒரு பாடல் உள்ளது.
“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையோம் எங்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெரி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே” (புறம் 112)
என்ற இப்பாடலுக்குத் துறை வகுத்த சான்றோர்கள் இதற்குக் ‘கையறுநிலை’ என்று பெயரிட்டுள்ளனர். கையறுநிலை என்பது ஆதரவற்ற நிலை ஆகும். ஆதரவற்ற நிலையில் சோகம் மேலிடுவதும், அப்போது பாடல்கள் தோன்றுவதும் இயற்கை என்றால் இவ்வகைப் பாடல்கள் ஒப்பாரியாகத்தானே இருக்கவேண்டும். நாட்டுப்புறப்பாடல்களில் இவ்வொப்பாரிப்பாடல்கள் மிகுதியாகப் பாடப்படுவதைக் காணலாம்.
‘பனைமரத்து நிழலில் பறவைகள் வந்து தங்கி இளைப்பாறுவது வழக்கம். அந்த மரம் புயலில் சாய்ந்து விட்டால் பறவைகள் தங்க நிழலின்றித் தவிக்கும் அது போல தந்தையை இழந்து நாங்கள் தவிக்கிறோம் என்று இரு பெண்கள் புலம்பிப்பாடும் பாடல் இது
“கூந்தல் பனஞ்சோலை
குயிலடையும் மண்டபங்க - நீங்க
கூந்தல் பனைசாஞ்சா - நாங்க
குயிலடைய அஞ்சுறோம்பா
மட்டை பனஞ்சோலை
மயிலடையும் மண்டபங்க - நீங்க
மட்டை பனைசாஞ்சா - நாங்க
மயிலாட அஞ்சுறோம்பா
என்று தந்தையின் மறைவை நினைத்து அழும் பெண்களின் பாடல்களில் சோகம் நிறைந்து காணப்படுகிறது.
நிறைவாக
தாலாட்டுப்பாடல்கள், காதல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்களில் மட்டுமல்லாது நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், போன்ற நாட்டுப்புற மரபுகள் ஏட்டிலக்கியங்களில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக கலித்தொகை, புறநானூறு, ஐங்குநுறூறு, குறுந்தொகை, பரிபாடல், நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இத்தகைய நாட்டுப்புறவியல் கூறுகள் மிகுதியாக இடம் பெற்றிருப்பதைக் காணலாம். எனவே வாய்மொழியாகப் பாடப்பட்ட பாடல்களை அடியொற்றித்தான் சங்க இலக்கியப்பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
துணை நின்ற நூல்கள்
1. அறிஞர் ச.வே. சுப்பிரமணியன் - சங்க இலக்கியம் (தொகுதி 1,2,3)
2. நா. வானமாமலை - தமிழர் நாட்டுப்பாடல்கள்
3. டாக்டர் சு. சக்திவேல் - நாட்டுப்புற இயல் ஆய்வு
4. பாரதியார் கவிதைகள்
5. திருக்குறள் - சாரதா பதிப்பகம்
6 புலவர் மு. அண்ணாமலை - நமது பண்பாட்டில் நாட்டுப்புற இலக்கியம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.