Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பாண்டிய மன்னர்களின் புலமைத்திறம்

முனைவா் ஜெ. புவனேஸ்வரி


முடியுடை மூவேந்தர்களுள் சிலர் வீரமும் கொடைத்திறமும் பெற்று விளங்கியதோடு நுண்ணிய புலமைத்திறமும் பெற்று விளங்கியுள்ளனர். அவர்களுள் பாண்டியர்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தனர் என்றே கூற வேண்டும். இருபத்து நான்கு பாண்டிய வேந்தரில், பதின்மூன்று பேர் புலவராக விளங்கியுள்ளனர். இது இவரின் மொத்த எண்ணிக்கையில் 54 விழுக்காடு ஆகும். புலவராக விளங்குவதில் சேர, சோழரை விடப் பாண்டிய வேந்தரே மிகுதியாக உள்ளனர். பாண்டிய வேந்தருள் சரிபாதிக்கு மேல் புலவராக விளங்குவது குறிப்பிடத்தக்கது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மரபினராதலால், இப்பாண்டிய வேந்தர் பலர் கவியரங்கேறினர் (1) எனத் தெரிகிறது.

அண்டர்மகன் குறுவழுதியார்

இப்பாண்டிய வேந்தனைப் பற்றிய அரசியல் செய்திகள் ஏதும் தெரிந்தில. இவன் பாடிய மூன்று பாடல்கள் தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்கள் மூலம் இவனது மனநிலையினை அறிய முடிகிறது. இவன் சிறந்த தமிழறிஞனாக விளங்குகிறான். மகட்பாற் காஞ்சித் துறையில் இவன் பாடிய புறப்பாட்டு அன்றைய சமுதாய நிலையினை எடுத்துக்காட்டுகிறது. மறக்குடி ஒன்றில் தோன்றி மணப்பருவம் எய்திய மகளொருத்தியை நயந்து பலர் மகட்கொடை வேண்டி நின்றனர். அவளுடைய தந்தையும், தனயரும் மறுத்தனர். அதனால் போர் நிகழ்தல் உறுதியாயிற்று. போரினால் அவ்வூர் பெரும் பாழாகும் என்பதனை,

‘புன்றலைப் பெரும்பாழ் செயுமிவ ணலனே’ (2)

எனக் குறிக்கிறான்.

ஒரு பெண்ணின் பொருட்டு, ஊரும், மக்களும் பாழாகும் நிலையில், அக்காலச் சமுதாயம் இருந்த நிலையினை வழுதியின் பாடல் உணர்த்துகிறது.

தலைவன் வரும் வழியில் இருக்கும் இடத்திற்கு அஞ்சிப் பகலிலே தன்னுடன் இருந்து, இரவிலே பிரிந்து சென்று விடுதல் நன்று என நினைக்கும் தலைவியின் அன்புள்ளத்தை,

‘பகலே யினிதுடன் கழிப்பி யிரவே
செல்வ ராயினும் நன்றுமற் றில்ல’
(3)

என்ற பாடல் வினக்கும்.அறிவுடை நம்பி

அறிவிற் சிறந்து விளங்கியமையால், இவன் அறிவுடை நம்பி என அழைக்கப் பெற்றிருக்கலாம். இவன் பாடிய நான்கு பாடல்கள் தொகை நூலில் இடம்பெற்றுள்ளன. இவனைப் பற்றிய வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இவன் பாடிய பாடலொன்று மக்கட் செல்வத்தின் பயனை உணர்த்துகிறது.

பல கோடி செல்வத்தைக் குவித்து வைத்து, அச்செல்வத்துப் பயனாம் பலரோடு இருந்து பகுத்துண்ணும் பெரு வாழ்வு பெற்ற மிகப்பெரிய செல்வர்க்கு மக்கட்பேறு இல்லாதாயின், அவர்தம் பெருவாழ்வு, பயனுடைய பெருவாழ்வு எனப் போற்றப்பட மாட்டாது.

‘படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறு குறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசின் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லை தாம் வாழு நாளே’
(4)

என அறிவுடை நம்பி பாடியிருப்பது, எண்ணி இன்புறத்தக்கதாகும். மழலை தரும் இன்பத்தை இப்பாட்டில் அழகாக வடித்துள்ளான் அறிவுடை நம்பி.

குறுந்தொகையில் உள்ள அவன் பாடிய பிறிதொரு பாடல், இவனுடைய புலமை நலத்தை அறிய உதவுகிறது. தோழியின் அறிவுக் கூர்மைக்குச் சான்றாக இப்பாடல் அமைந்துள்ளது. தன்னிடம் வலிதாகக் குறை நயப்பித்த தலைவனை ஏற்றுக் கொள்ளும்படி, தலைவியிடம் கூற நினைக்கிறாள் தோழி. ஆனால், தலைவி எளிதில் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. தலைவியின் உள்ளத்தையும் பெண்களின் உளவியலையும் நன்கு உணர்ந்த தோழி, தலைவி துண்ணெண்ணும்படித் தலைவனைப் பற்றி வன்மையாகக் கூறி அதன் மூலம் இருவரையும் சேர்த்து வைக்கிறாள்.

‘அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீ ரத்தம்
சின்னா ளன்ன வரவறி யானே’
(5)

எனப் பழியைத் தன் மேல் சார்த்திக் கொண்டு அன்புள்ளங்களை இணைத்து வைக்கும் அறிவுடைத் தோழியைப் படைத்துக் காட்டிய அறிவுடை நம்பியின் புலமை குறிப்பிடத்தக்கது.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் தவிர, ஏனைய பழந்தமிழ் நூல்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் இல்லை. இவன் பாடிய பாடலொன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூற்றில் நெடுஞ்செழியன் என்ற பெயரில் மூவர் இடம்பெற்றுள்ளனர். இவனது ஆரியப் படையெடுப்பைச் சிறப்பித்து, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனக் குறிப்பிட்டனர். இவன் பாண்டிய வேந்தருள் காலத்தால் பிற்பட்டவன். கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்தவன். அன்னை, அரசன் முதலிய அனைவராலும் பாராட்டப்படும் சிறப்பைக் கல்வியினால் மட்டுமே பெற முடியும். எனவே, இச்சிறப்புக்குரிய கல்வியை எப்பாடுபட்டேனும் கற்க வேண்டும்.

‘உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றனன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே’
(6)

என்னும் பாட்டில் மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க முயல்கிறான். தன் நாட்டு மக்களும், பிற மக்கள் சமுதாயமும் அறிவுடையவர்களாக விளங்க வேண்டும் என்று விரும்பும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் உள்ளவேட்கை இப்பாட்டில் புலனாகிறது.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

பூதப்பாண்டியன் அறிவும், ஆற்றலும், ஒழுக்கமும் நிரம்பியவன். நண்பர்களைப் போற்றும் பண்பினன். மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோரை நண்பராகப் பெற்றவன். மனைவி கோப்பெரும் பெண்டின்பால் பேரன்பினன். இவனும் இவன் மனைவியும் தேர்ந்த புலமையாளர். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதுபவன் என்பதை, இவன் கூறிய வஞ்சினத்திலிருந்து அறிய முடிகிறது. இவன் பாடிய இரண்டு பாடல்கள் தொகை நூலில் இடம்பெற்றுள்ளன. இவன் திதியன் என்பானுடன் கொண்டிருந்த நட்பினை,

‘... ... ... ... ... பொருநர்
செல்சமங் கடந்த வில்கெழு தடக்கைப்
பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன்’
(7)

எனப் பாராட்டியுரைப்பதன் மூலம் அறிய முடிகிறது.

பாண்டியன் குடியில் பிறந்ததைப் பெருமையாகக் கருதுபவன். தன்னை எதிர்த்து வந்த பகைவரை வெல்லாவிடின்,

‘மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த
தென்புலங் காவலி னொரீஇப் பிறர்
வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே’
(8)

என வஞ்சினம் உரைக்கிறான். வேந்தர் குடிகளைப் புலவர்கள் வாழ்த்துதல் மரபு. தன் குடியின் பெருமையினைத் தானே எடுத்துக் கூறி, இத்தகு சிறப்புமிகு குடியில் மீண்டும் பிறக்க விரும்பும் இவன் வேட்கை குறிக்கத்தக்கது.கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

இப்பாண்டியன் சிறந்த புலமையாளனாகவும் சிந்தனையாளனாகவும் விளங்குகிறான். இவன் அரசனாய் நாடாண்ட வரலாறு எதுவும் கிடைக்கவில்லை. இவன் பாடிய பாடல்கள் பரிபாடலில் ஒன்றும் (15), புறநானூற்றில் ஒன்றும் (182) இடம் பெற்றுள்ளன. திருமாலை வழிபடும் உள்ளத்தினன். கண்ணனாகவும், பலதேவனாகவும் இருவேறு உருக்கொண்டு சொல்லும் பொருளும் போலப் பிரிவின்றித் திருமாலிருங்குன்றத்தே வீற்றிருக்கும் திருமாலைச் சிறக்கப் பாடியுள்ளான்.

நறுமணம் நாறும் துழாய் அணிந்தோனாகிய திருமால் அளித்தால் அன்றி துறக்க இன்பம் கிட்டாது. எனவே மனைவியரொடும், துய சிந்தையரொடும், மக்களொடும், மாபெருஞ் சுற்றத்தினரோடும் கூடிச் சென்று அவன் உறையும் மலையை வணங்கி வழிபடுதல் வேண்டும்.

‘தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
கைமக வோடுங் காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்’
(9)

என்னும் பாட்டு மணிவண்ணன்பால் இளம்பெருவழுதி கொண்டிருந்த ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது.


உலகில் உயிர்கள் தோன்றுகின்றன. அழிகின்றன. மக்கள் பிறக்கின்றனர். மாள்கின்றனர். ஆனால் உலகு மட்டும் அழியாது நின்று நிலை பெறுகின்றது. இவ்வாறு உலகியல் அழியாது இயங்குவதற்குக் காரணம் சான்றோர் சிலராவது இருத்தலால் தான் எனக் கூறும் இளம்பெருவழுதி அவர்தம் இயல்புகளைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

1. இந்திரருக்குரிய அமுதமே கிடைப்பதாயினும், அது தமக்கு இனியது எனக் கருதி, தாமே தனித்து உண்ணாதவர்.

2. சினமற்றவர்

3. பிறர் அஞ்சும் துன்பத்திற்குத் தானும் அஞ்சி அது தீர்த்தற் பொருட்டுச் சோம்பியிருக்கும் இயல்பு இல்லாதவர்.

4. புகழ் எனின் உயிரையும் கொடுப்பவர்.

5. பழி எனின், அதனால் உலகம் முழுதும் பெறினும் கொள்ளாதவர்.

6. மனக்கவற்சியை அறுத்தவர்.

7. தமக்கென எதையும் செய்து கொள்ளாதவர்.

8. பிறருக்காக உண்மையாக உழைக்கும் இயல்பு உடையவர்.

இந்த எண்வகைப் பண்புகளை உடையவர் சிலராவது இருப்பதனால் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது.(10) பிறருக்கென உண்மையாக உழைக்கும் பண்புடையோர் பலர் இருப்பின் அவரால் வீடும், நாடும் நலமடையும். வேந்தனாக இருந்து பலரைக் கண்டு பேசி, பழகி வாழ்வியல் உண்மைகளை உணர்ந்தவன். நாடு நலம் பெற, உலகியல் வாழ, சான்றோர் சிலராவது வாழ வேண்டும் என்னும் தன் விழைவைப் பாட்டாக்கியுள்ளான் வழுதி.

கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

தனக்குப் பகைவனாக விளங்கிய வேங்கை மார்பனை வென்று அவனுக்குரிய கானப்பேரெயில் (காளையார் கோயில்) என்னும் ஊரைக் கைப்பற்றியதனால் கானப்பேரெயில் கடந்த பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என அழைக்கப்பட்டான். இவன் பாடிய இரண்டு பாடல்களும் தொகை நூலுள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சியையும், மருதத்தையும் புனைந்து தன் பாடல்களில் பாடியுள்ளான்.

இப்பாண்டிய வேந்தன் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு குறிப்பிடத்தகுந்தது. நெடுந்தொகை எனும் அகநானூற்றைத் தொகுப்பித்த பெருமைக்குரியவன். தமிழ்மொழியின்பால் இவன் கொண்டிருந்த பற்றைப் போலவே, தமிழ் வேந்தர் மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியவன். இவன் காலத்தில் வாழ்ந்த சேரன் மாரிவெண்கோவுடனும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடனும் நட்புப் பாராட்டிப் பகை நீக்கி வாழ்ந்திருந்தவன்.

மகளிரின் மன இயல்பை நன்றாக உணர்ந்துள்ளான் உக்கிரப் பெருவழுதி. மகளிர் இயல்பிலே பெண்மையும், மென்மையும் உடையவர். இவர்தம் உள்ள உறுதி, மென்மை காரணமாகத் தளர்ந்து விடும் நிலையினை, உளவியல் நிலையோடு எடுத்துக் காட்டியுள்ளான். பரத்தையர் உறவால் பிரிந்திருந்து மீண்டும் இல்லம் நோக்கி வந்த தலைவனிடம் ஊடக் கருதுகிறாள் தலைவி. அவனிடம் அன்பு கண்டு அன்பில்லாதவன், கொடியவன் என்றெல்லாம் அவனைக் கடிந்துரைக்கவும் எண்ணுகிறாள். ஆனால் நன்கு உழப்பெற்று, உலர்ந்து புழுதியான ஒரு நிலத்தில் பெருமழை பெய்தக்கால், அப்புழுதி கரைந்து, குழைந்து போவதே போல், தலைவன் செய்யும் பெருந்தலையளியைக் கண்டு உளம் நெகிழ்ந்து, அவன் செய்த தவற்றினையும் மறந்து தன் ஊடல் கொள்கையையும் மறந்து அவனோடு மறந்து ஒன்றி விடுகிறான். இதனை,

‘சிறுபுறங் கவையின னாக வுறுபெயற்
றுண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
மண்போ னெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
செஞ்சறை போகிய யறிவி னேற்கே’
(11)

எனப் பாடுகிறான் பெருவழுதி. தலைவன் பால் தான் கொண்ட அன்பின் மிகுதியால் தன்னுறுதி குலைந்து விட்டதை ‘நெஞ்சறை போகிய அறிவினேற் கே’ என்னும் கூற்றால் தலைவி உணர்த்துகிறாள். பெண்களின் இம்மனநிலையினை,

‘எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து” (குறள். 1285)

எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர்.


குறுவழுதியார்

பாண்டியர் குடியில் பெருவழுதி, குறுவழுதி என்ற பெயர்களை வைத்துக் கொள்ளுதல் இயல்பு. இவன் அண்டர் மகன் குறுவழுதியிலும் வேறானவன். இவன் பாடிய பாடலொன்று அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. வரையாது வந்து செல்லும் தலைவனை விரைவில் வரைந்து கொள்ளச் சொல்லும் தோழியின் கூற்றாக அமைந்துள்ளது இவன் பாடல். தலைவனால் தலைவி பெற்ற பேரழகினைக் கண்ட தாய் தலைவியை இற்செறித்து விடுகிறாள். கழியையும், கானலையும். காண்டொறும் எம்பெருமான் கொல்லோ, எனத் தலைவனின் வரவெதிர் நோக்கி இரங்கும் தலைவியின் நிலையினை,

‘மாலை மணியிதழ் கூம்பக் காலைக்
கண்ணாறு காவியொடு தண்ணென மலருங்
கழியுங் கானலுங் காண்டொறும் பலபுலந்து
வாரார் கொல்லெனப் பருவருந்
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே’
(12)

எனப் புனைகிறான் குறுவழுதி.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் ஆலங்கானத்தில் இருபெரு வேந்தரையும் எழுபெரு வேளிரையும் வெற்றி கொண்ட சிறப்பின் காரணமாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என அழைக்கப்பெற்றான். இவன் பாடிய வஞ்சினப் பாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. பழந்தமிழ் வேந்தருள் மிகப் பல புலவர்களின் பாராட்டைப் பெற்ற சிறப்புக்குரியவன். பத்தொன்பது புலவர்கள் இவனது வெற்றிச் சிறப்பையும், பண்பு நலன்களையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். புலவரைப் போற்றுவதிலும், தனி மனித ஒழுக்கத்திலும், தன் குடிமக்களைப் பேணுவதிலும் மிகுந்த நாட்டமுடையவன் என்பதை இவன் உரைத்த வஞ்சினத்தால் அறியலாம்.

‘ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை’
(13)

என்னும் கூற்றிலிருந்து புலவர் கூறும் புகழ்ச்சியைப் பெரிதாகக் கருதினான் என அறியலாம். பத்துப்பாட்டுள் மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை இரண்டும் இவன் புகழ் எடுத்துரைக்கும் நூல்களாகும். வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்துள்ளான். பாண்டிய வேந்தர்களிலே மிகச் சிறந்த வீரனாகவும் இவன் விளங்கியுள்ளான்.

நல்வழுதி

பாண்டியர் குடியில் தோன்றிய இந்நல்வழுதியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. வையை ஆறு குறித்து வந்த பரிபாடல்கள் எட்டனுள் நல்வழுதி பாடிய பரிபாடலும் ஒன்று. அவன் பாடிய பாட்டில் ஆற்றில் புதுப்புனல் வருங்கால் பண்டைத் தமிழ் மக்கள் விரும்பி மேற்கொள்ளும் புனல் விழா நன்கு விளக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைவி, புனல்விழாக் காணத் தன்னொடு வந்திருக்கும் தன் கணவனை வேறு ஒருத்தி நோக்கினாள் என்பதைக் கொண்டு, பிறிதொருத்தி நோக்குமளவிற்குப் பிழையுடையான் போலும் எனக் கருதி அவனை முத்து வடத்தாலும், மலர்மாலையாலும் ஒறுத்தாள். தான் செய்த பிழையினை அறியாது, அவளைத் தொழுது பிழை பொறுக்க வேண்டுகிறான் காதலன்.

‘அமிர்தன நோக்கத் தணங்கொருத்தி பார்ப்பக்
கமழ்கோதை கோலாப் புடைத்துத்தன் மார்பில்
இழையினைக் கெயாத் திறுகிறுக்கி வாங்கிப்
பிழையினை என்னப் பிழையொன்றுங் காணான்
தொழுது பிழைகேட்குந் தூயவன்’
(14)

என அக்காட்சியைக் குறிப்பிடும் நல்வழுதியின் புலமை நலம் போற்றத்தக்கது.


மதிவாணன்

இப்பாண்டிய வேந்தன் ஆட்சி பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. இவனொரு சிறந்த கவிஞன், கடைச்சங்கத்தில் கவியரங்கேறிய பாண்டியர் மூவருள் ஒருவன், நாடகத் தமிழ் வளர்த்த அறிஞன். இவன் இயற்றிய நூலுக்கு ‘மதிவாணன் நாடகத் தமிழ் நூல்’ என்று பெயர். இந்நூல் வெண்பாவாலும், நூற்பாவாலும் இயற்றப்பட்டிருந்தது. ‘கடைச்சங்கம் இயற்றிய பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதல் நூல்களில் உள்ள வகைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் என இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும், ஒரு புடை யொப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரை’ (15) எனக் குறிப்பிடும் அடியார்க்கு நல்லார் உரையிலிருந்து இவன் வரலாற்றை அறிய முடிகிறது.

பாண்டியன் மதிவாணன் எழுதிய நாடக நூல் முழுமையும் கிடைக்கவில்லை. அடியார்க்கு நல்லார் தம் உரையினூடே எடுத்தாளும் சிற்சில நூற்பாக்களை மட்டுமே அறிய முடிகிறது.

மாலை மாறன்

இவரைப் பற்றிய செய்திகள் தெரிந்தில. இவன் பாடிய பாடலொன்று குறுந்தொகையினுள் இடம்பெற்றுள்ளது. தலைவன் பிரிவால் தன் நலன் அழிந்த கொடுமையினும், அத்தலைவன் செய்த தலையளி கண்டு, ஊரார் தூற்றும் அலரால் உண்டாகும் கொடுமையே தனக்குத் துன்பம் தருகிறது என்கிறாள் தலைவி.

‘கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடற் றாழை
மாலை வேணாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோ ரறியப் பரந்துவெளிப் படினே’
(16)

எனத் தலைவி கூறுவதாக மாறன் பாடல் அமைந்துள்ளது. வாள் போல் விளிம்புகளையுடைய மடல்களைக் கொண்ட தாழை மரங்கள் வரிசையாக வளர்ந்து நிற்கும் காட்சிக்கு, வேலியாக நாட்டப் பெற்ற வேற்படைகளை உவமை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாறன் வழுதி

இவன் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. குறிஞ்சியையும், முல்லையையும் உணர்ந்து பாடும் திறன் பெற்றவன்.

தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துன்பத்திற்கு இவன் கூறியிருக்கும் உவமை புதுமையானது. நெடுங்காலத்திற்கு முன் மார்பில் பகைவர் வேல்பட்டுப் புண்ணுண்டாகியது. புண்ணின் வாய் அகன்று, ஆழ்ந்து பெரிதாகி விட்டது. நெடுங்காலமாகி விட்டதால் ஈரம் காயாமல் துன்பத்தினைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மார்பில் உள்ள புண்ணில் வேற்படையைக் குத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு எல்லையேது! இப்படிப்பட்ட எல்லையில்லாத துன்பத்தினைத் தலைவி அடைகிறாள் என்பதை,

‘அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகெறிந் தாங்குப்
பிரிவில புலம்பி நுவலுங் குயிலினுந்
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே’
(17)

எனக் குறிப்பிடும் மாறன் வழுதியின் உவமை நலம் போற்றத்தக்கது.

முடத்திருமாறன்

இவன் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து இடைச்சங்கத்தைக் கட்டிக் காத்த ஐம்பத்தொன்பதின்மருள் இறுதியில் வாழ்ந்தவன்; இப்பொழுதுள்ள மதுரையில் கடைச்சங்கத்தைத் தோற்றுவித்த பெருமைக்குரியவன் என இறையனார் களவியல் உரை (18) இவனைக் குறிப்பிடுகின்றது.

பாலையையும், குறிஞ்சியையும் தன் பாடல்களில் சிறக்கப் பாடியுள்ளான். குட்டுவன் மலையின் இயற்கை எழிலை,

‘... ... ... ... ... குட்டுவன்
குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை’
(19)

என முடத்திருமாறன் பாராட்டியுள்ளான். கண்ணொளி மறையும்படிப் படரும் மாரிக்காலத்துப் பேரிருளை,

‘... ... ... ... ... மின்னுவசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்
கண்டூர்பு விரிந்த கனையிருள் நடுநாள்’
(20)

என இயற்கை நலம் தோன்றப் பாடியுள்ளான் முடத்திருமாறன். தன்னாட்டுச் சிறுகுடிப் பண்ணனை வாழ்த்திய கிள்ளிவளவன் போன்று, முடத்திருமாறன் சேரனின் மலையினைப் புகழ்ந்துள்ளமை போற்றத்தக்கது.

புலவராக விளங்குவதில் சேர, சோழரை விடப் பாண்டியர் எண்ணிக்கையில் முதன்மை பெற்று விளங்குகின்றனர். பாண்டிய வேந்தருள் சரிபாதி புலவர்களாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்தம் பாடல்கள் உலகியல், கல்வியின் சிறப்பு, சான்றோர் இயல்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை முதலியவற்றை எடுத்தியம்புவன. குறிப்பாகத் தோழியின் கூற்றாக வரும் பாடல்கள் பெண்களின் மன உணர்வினை, நுட்பமாக உணர்ந்து பாடப்பட்டவை. ‘நெஞ்சறை போகிய அறிவினேற் கே” முதலான தொடர்கள் ஆழ்ந்து உணரத்தக்கன.

சான்றெண் விளக்கம்

1. உ.வே. சாமிநாதையர், சிலப்பதிகாரம், ப. 7

2. புறம். 346 : 7

3. அகம். 228 : 6 - 7

4. புறம். 188

5. குறுந். 230

6. புறம். 183

7. அகம். 25 : 18 - 20

8. புறம். 71 : 17 - 19

9. பரி. 15 : 46 - 48

10. புறம். 182

11. அகம். 26 : 23 - 26

12. அகம். 150 : 10 -14

13. புறம். 72 : 13 -16

14. பரி. 12 : 57 - 61

15. உ.வே. சாமிநாதையர் (பதி), சிலப்பதிகாரம், ப. 10

16. குறுந். 245

17. நற். 97 : 1 - 4

18. இறையனார் களவியல். பக். 5, 6

19. நற். 105 : 7 - 8

20. மேலது. 228 : 1 - 3

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p121.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License