Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

வேந்தனது கடமைகள்

முனைவா் ஜெ. புவனேஸ்வரி


முகவுரை

நாடாள் வேந்தன் குடிகளுக்கு நன்மைகள் புரிவதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அந்நாட்டில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். மக்கள் மன்னனைப் போற்றுவர். இதனை வேந்தன் நன்குணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கேற்றாற் போலத் தன் கடமைகளைச் செவ்வனே செய்தல் இன்றியமையாததாகும். தொல்காப்பியம் அரசரின் கடமைகள் ஐந்தைச் சுட்டுகிறது. ‘ஐவகை மரபின் அரசர் பக்கமும்’ என்ற தொல்காப்பியத் தொடருக்கு உரையாசிரியர் இளம்பூரணர் ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் என்னும் ஐந்து கடமைகள் எனப் பொருள் உரைக்கிறார். (1) இவ்வாறு வேந்தர் தமக்கு வரையறுத்த கடமைகளைப் புரிந்து வந்தமையைப் புறநானூறு மூலம் உணர முடிகிறது. குடிமக்களின் தந்தையாக வேந்தன் கருதப்பட்டான். உயிருக்கு உறுதி பயப்பனவாகிய உண்ணும் உணவும், பருகும் நீரும் உலகத்துக்கு உயிராகக் கருதப்படவில்லை. வேந்தனின் இயக்கமே உலகத்தின் இயக்கம் என்பதை,

‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே”
(2)

எனும் பாடல் நன்குணர்த்தும். வேந்தன் மக்களைப் பாதுகாப்பதையும், வீரர்களுக்குச் சிறப்புச் செய்வதையும் முதற்கடமையாகக் கொண்டிருந்தான் என்பதை இது விளக்கும்.பாதுகாப்பளித்தல்

பழந்தமிழ் வேந்தர் குடிமக்களைக் காப்பாற்றியத் திறத்தைச் சங்க இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. புலி, தன் குட்டிகளைப் பேணுவதைப் போல் வேந்தன் மக்களைப் பேணிக் காத்தான். (3) தாய்ப்புலி உயிரோடு இருக்கும் வரை தன் குட்டிகளைப் பிறர் கொண்டு போக விடாதது போலத் தம் மக்களைப் பகைவேந்தர் அடிமையாக்கி விடாமல் பாதுகாத்தனர். (வெற்றி பெற்ற வேந்தன் பகை வேந்தனின் படைவீரர்களை அடிமைகளாக நடத்துதல் மரபு)

படையும் நிலமும் பொருளும் வழங்கல்

வேந்தர் வீரர்க்குப் படை வழங்குதலைத் தம் கடமையாகக் கருதினர். இளம்பூரணர் படை வழங்குதலுக்குச் சான்றாகப் புறநானூற்றின் 14 - வது பாடலைக் காட்டுகின்றார். இப்பாடலில் யானையைப் பிடிக்கவும், குதிரையைப் பிடிக்கவும் ஆயுதங்களையும் அம்புகளையும் அளித்த செய்தியை அறிய முடிகின்றது. அடுத்து,

‘நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (4)

என்ற புறப்பாடலடி, நல்லொழுக்கத்தை நல்கல் வேந்தனின் கடமையெனச் சுட்டுகிறது. ஆயின் இங்கு ‘நன்னடை’ என்ற இடத்தில் ‘தண்ணடை’ என்ற சொல் இருந்திருக்க வேண்டும்; இது பாட வேறுபாடு என்பர் உ. வே. சாமிநாத ஐயர். பண்டைக் காலத்தில் வீரர்க்கே முதலிடம் தரப்பட்டது. வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்ற வீரர்க்கு வேந்தன் நிலம் கொடுப்பது வழக்கமாய் இருந்தது. எனவே ‘நன்னடை’ என்பதற்கு பதிலாகத் ‘தண்ணடை’ என்பது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து கூறப்படுகின்றது. (5) அக்காலத்தில் வெற்றி வீரர்க்கு நிலம் வழங்கியதை,

‘நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும் தண்ணடை பெறுதல்” (6)

எனப் புறம் சுட்டுகிறது. எனவே வேந்தர் வீரர்க்கு நிலம் வழங்குதலைக் கடமையாகக் கொண்டிருந்தனர் என அறியலாம்.

மேலும் பொன் வழங்கியதற்கும் சான்று கிடைக்கின்றது. வெற்றி பெற்ற வேந்தன் தோற்ற வேந்தனிடமிருந்து பெற்ற பொற்கலன்களை உருக்கி அவற்றைப் பொற்கட்டிகளாகச் செய்து, பின் அக்கட்டிகளை, வீரர் போரில் ஆற்றிய செயலுக்கேற்பப் பகிர்ந்து பரிசளித்த செய்தியினை,

‘நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்ப நின்தானை யுதவி”
(7)

என்ற பதிற்றுப்பத்துப் பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது. இதிலிருந்து பழங்கால வேந்தர் தம் வீரர்க்கு நிலம், பொன் முதலியவற்றை வழங்குதலைக் கடமையாகக் கொண்டிருந்தமை புலனாகிறது.அரசுறுப்புகள்

சங்க இலக்கிய வேந்தர் தம் ஆட்சியின் கீழ் உள்ள மக்களின் நல்வாழ்வு குறித்த திட்டங்களைத் தாமே நேரடியாகச் செயல்படுத்தாமல் அவற்றைச் செயல்படுத்த ஒரு சில குழுக்களைத் தமக்குத் துணையாகக் கொண்டிருந்தனர். அவை சுற்றம், அமைச்சர், காவிதி மாக்கள் ஆகியோராவர். அக்குழுக்களின் கருத்துரையுடன் வேந்தர் கடமையாற்றி வந்தனரென அறிய முடிகின்றது.

சுற்றம்

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் ‘சுற்றம்’ என்ற சொல் வேந்தரின் உறவினரையும், அவரைச் சுற்றி இருப்பவரையும் குறிக்கும். வேந்தனின் நலத்தில் நாட்டம் கொண்டு இடைவிடாது அவனைச் சுற்றியிருப்போரைச் சுற்றம் என இலக்கியங்கள் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். வேந்தனின் கருத்துக்கும், கடமைக்கும் முரண்படாமல் வேந்தன் எண்ணியதையே தாமும் எண்ணி அவன் செயலுக்கு மேவுதலைச் செய்யும் சுற்றத்தைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. (8) அமைச்சர்

அரசுறுப்புகளில் அமைச்சர் குழுவும் ஒன்று. சங்க இலக்கியங்கள் அமைச்சர் என்னும் சொல்லை ஆளவில்லை. ஆயின், அக்காலத்தில் வேந்தர்க்கு உதவியாக அமைச்சர் விளங்கினர் என்பதைச் சங்க காலத்தை ஒட்டிய திருக்குறளும் சிலப்பதிகாரமும் சுட்டுகின்றன. திருக்குறளில் வள்ளுவர் ‘அமைச்சு’ என்று ஓர் அதிகாரமே அமைத்துள்ளார். அமைச்சரை வள்ளுவர் ‘உழை இருந்தான்’ எனக் குறிப்பிடுகின்றார். அவ்வதிகாரத்தில் அமைச்சர்க்கு வேண்டிய தகுதி, திறமை, பண்பு ஆகியவற்றை விளக்குகின்றார். அழும்பில் வேள் என்னும் அமைச்சர் செங்குட்டுவன் அரசவையில் நிதித்துறையைக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. ஆயின் இதற்குச் சான்றுகள் இல்லை என்பர். (9) ஆனால், செங்குட்டுவன் அமைச்சர்களைக் கொண்டிருந்தான் என்பதை மட்டும் அறிய முடிகின்றது.காவிதி மாக்கள்

வேந்தனுக்கு உறுதுணையாய் நின்றோருள் காவிதி மாக்களும் குறிப்பிடத்தக்கோர் ஆவர். மதுரைக்காஞ்சி காவிதி மாக்களையும் அவர்களது பணியையும் குறிப்பிடுகின்றது. காவிதி மாக்கள், யாகங்கள் புரிந்து சுவர்க்கம் புகும் சான்றோர் போல் வேந்தனிடத்துக் காணப்படும் நன்மை, தீமைகளைத் தம் அறிவாலே கண்டு மேலும் ஆராய்ந்து தெளிந்து, அவர் மனத்தைத் தீதின்பால் செல்லாதவாறு தடுத்து, அன்பு நெறியையும், அறச்செயலையும் மேற்கொள்ளச் செய்து, தீவினையினின்றும் விலக்கி, வேந்தன் புகழை நிலைக்கச் செய்தவர்கள் என்பதை,

‘ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்”
(10)

என்னும் பாடலடிகள் சுட்டுகின்றன.

மேற்கண்ட கருத்துகளை நோக்குமிடத்து, அரசர்கள் அரசாட்சி நடைபெறுவதற்குத் துணையாக ஒரு சில குழுக்களைக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வருகின்றது. அரசனின் ஆட்சி செம்மையுறுவதற்கு அவர்கள் தக்க துணையாக நின்றனர் என்பதை உணர முடிகிறது.


அறங்கூறவையம்

நீதி வழங்குவதற்கென்று இயங்கிய ஓர் அமைப்பே அறங்கூறவையமாகும். இது இக்கால நீதிமன்றத்தைப் போன்று அக்காலத்து நீதி வழங்கும் இடமாய்த் திகழ்ந்தது. இந்த அவையம் பேரூர்களில் செயல்பட்டதெனத் தெரிய வருகிறது.

‘மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற்று”
(11)

என்னும் பாடல் உறையூரில் அறங்கூறவையம் இருந்ததைச் சுட்டுகிறது. மதுரையில் இது போன்றே அறங்கூறவையம் இருந்தமையை மதுரைக்காஞ்சியால் அறிகின்றோம். இவ்வறங்கூறவையங்களில் சான்றோர்கள் இருந்து நீதி வழங்கினர். அச்சம், துன்பம், பற்று இவற்றினின்று விடுதலை பெற்று வெகுளாது, விரும்பாது, துலாக்கோலையொத்த நடுநிலை பேணி, சிறந்த ஒழுக்கமுடையோராய் இச்சான்றோர் விளங்கினர். இவர்கள் நீதி கேட்டுச் சென்ற மக்களுக்கு அவர்கள் வழக்கு மிகவும் சிக்கலுடையதாயிருப்பினும் அவற்றை விரைவில் தீர்த்து நீதி வழங்கினர்.

இவ்வறங்கூறவையத்துக்குச் சான்றோரைத் தேர்ந்தெடுத்தல் வேந்தனின் கடமையாகும். அவர்கள் நீதியினின்று பிறழின் அப்பழி வேந்தனையே சாரும் என்றும், நெறி பிறழ்ந்து முறை செய்த செயலால் செங்கோல் கொடுங்கோல் ஆகும் என்றும், ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் (12) புறநானூற்றில் குறிப்பிடுகின்றான். நீதி நிலைக்கச் செய்வதைத் தலையாய கடமையாகக் கருதிய இவ்வேந்தனது நேர்மை நெஞ்த்தைச் சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.

சிற்றூர்களில் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்கவும், குறைகள் அனைத்தையும் வேந்தன் ஒருவனே பார்ப்பின் வேந்தனின் மற்ற பணிகள் தடைப்படும் எனக் கருதியும், அறங்கூறவையம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வறங்கூறவையம் அரசுறுப்புகளுள் ஒன்றாகச் செயல்பட்டு அக்கால ஆட்சிமுறைக்குப் பேருதவி புரிந்ததெனலாம்.

நாளவை, ஊரவைகள்

மேற்கண்ட அறங்கூறவையமன்றி வேறு பிற அவைகளும் அரசனுக்கு உறுதுணையாய் நின்றன. அவை நாளவை, ஊரவை என்பனவாகும்.

நாளவை

குடிகளின் குறையைக் கேட்பதற்கும், கேட்டு முறை செய்வதற்கும், தன்னை நாடி வரும் புலவர்க்கும், வறியவர்க்கும் பரிசில் நல்குவதற்கும் வேந்தன் வீற்றிருக்கும் அவையை ‘நாள் மகிழிருக்கை’ எனவும், ‘நாளவை’ எனவும் வழங்குவர். மதுரைக்காஞ்சி இந்த அவையைப் ‘பொற்பு விளங்கு புகழவை’ (13) எனப் புகழ்கிறது. பொன்னால் செய்யப்பட்ட பொற்றாமரை மாலையினைத் தலையில் சூடி, பாணர் சுற்றத்தோடு நாள் மகிழிருக்கையில் வீற்றிருந்த சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (14) புறநானூற்றில் குறிப்பிடுகின்றார். நாளவை என இலக்கியங்கள் குறிப்பிடுவதை ‘நாளோலக்கம்’ என உ. வே. சாமிநாதையரும், ஔவை சு. துரைசாமிப் பிள்ளையும் எழுதியுள்ளனர். (15) இந்நாளவையில் மன்னர்கள் காலையில் மதுவையுண்டு மகிழ்ச்சியோடு வீற்றிருப்பர் என்றும் அறிய முடிகிறது.

அரண்மனையுள் கூடும் புலவர், பாணர் முதலானோர்க்குப் பரிசில் வழங்குதலும், குறை களைதலும் நாளவையின் பணிகள் ஆகும்.

ஊரவை

நீதி வழங்கும் அறங்கூறவையம், வேந்தனது நாளவை ஆகியவையன்றி, வேறு சில அமைப்புகளும் அக்காலத்தில் அமைந்திருந்ததாகத் தெரிகின்றது. அவையானது மன்றம், அம்பலம், பொதியில் என்று கூறப்பட்டன. இம்முன்றும் வேறு வேறானவையல்ல. இவை ஊரவை என்று அழைக்கப்பட்டன. மதுரைக்காஞ்சி ‘அவையிருந்த பெரும் பொதியில்’ (16) என்று இவ்வவையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

ஊரவைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறையை அகநானூறு பின்வருமாறு குறிப்பிடுகிறது. பனை ஓலை வாக்குச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளைப் போட்டு வைக்கப் பானை பயன்பட்டது. அப்பானையினைக் கயிற்றினால் கட்டி வாக்குச்சீட்டுகள் போடப்பட்ட பின் அதற்கு இலச்சினையிடப்பட்டது. வாக்குச்சீட்டுகளை எண்ணுவதற்கு இலச்சினையை நீக்கும் ஆவண மாக்கள் இலச்சினை சரியாக இருக்கிறதா என்று பார்த்து நீக்குவர். இதனை,

‘கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்”
(17)

என்று மருதநில நாகனார் குறிப்பிடுகின்றார். பிற்காலச் சோழர் காலத்தில் ஊரவைப் பொறுப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலைமுறை இதனோடு ஒப்பிடத்தக்கது என்பார் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி.(18) இதிலிருந்து ஊரவை உறுப்பினர் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அறிய முடிகிறது.


முறை வழங்கல்

முறை வழங்குதல் என்பது நீதி வழங்குதலாகும். தன் குடிமக்களுக்கு முறைவழங்குதல் அரசவையில் நாள்தோறும் நிகழும்.

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியின் இயல்பினை விளக்கும் ஊன்பொதி பசுங்குடையார், சோழன் முறைவழங்குதலைச் ‘சோழன் மெய்யாக, மனத்தான் ஆராய்ந்து பார்க்கும் இயல்பினன். ஒருவனிடம் அறுதியிடப்பட்ட கொடுமையைக் காணின் அத்தீமைக்குத் தக்க தண்டனை வழங்குவான்” (19) என்பார்.

சோழன் நலங்கிள்ளி அரண்மனையில் முரசு இனிதாக ஒலிக்கத் தீயோரைத் தண்டித்தலும் நடுவு நிலையோர்க்கு அருள் செய்தலுமாகிய முறைமையில் சோம்புதல் இல்லாதவனாக இருப்பான். இதனை,

‘கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி”
(20)

என்ற பாடல் வரிகள் புலப்படுத்தும்.

அரசன் தனக்கு வேண்டியவர் என்ற காரணத்தினால் ஒருவர் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக் கொண்டு, அவரைப் பழியினின்று காக்கவில்லை என்பதனையும் தனக்கு அயலவர் என்பதனால் அவரது நற்செயல்களை மறைத்து அவர்க்குத் தண்டனை வழங்கவில்லை என்பதனையும் இச்சங்க இலக்கியவரிகள் எடுத்துரைக்கின்றன.

திறை பெறுதல்

போரில் ஈடுபட்டு இழப்பு ஏற்படுவதை விரும்பாதவர்கள் அருங்கலங்களைத் தந்து பகைமையைக் குறைத்துக் கொள்வர். இவ்வாறு பெறப்படுவது திறை எனப்படும். வேந்தருக்கு அவன் கீழ் உள்ள மன்னர் திறையாகப் பலவகையான கலன்களையும் கொடுத்து வணங்கிச் செல்வர்.

பாண்டிய நெடுஞ்செழியனுக்குச் சிற்றரசர்கள் நாள்தோறும் செல்வம் மிகும்படி அவனைக் கையால் தொழுது வாழ்த்தி நாட்காலத்தே சீரிய கலன்களைத் திறையாகக் கொடுப்பர். இதனை,

‘நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கலம்”
(21)

என்ற கருத்து வெளிப்படுத்துகின்றது.

அரசனுக்குத் திறை கொடுத்தால் அவன் போர் தொடுக்க மாட்டான் என்பதும் திறைப்பொருளாக அணிகலன்களும் களிறும் கொடுக்க வேண்டும் என்பதும் சங்க காலத்து நடைமுறையாக இருந்தது. இவ்வாறு பகைவர் அரசனுக்குத் தாம் கொடுக்க வேண்டிய திறையைக் கொடுத்து அவனுக்குச் சுற்றமாக இருந்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

இவ்வாறாக குடிமக்களைப் பாதுகாத்தல், நீதி வழங்குதல், மக்கள் நலனில் நாட்டம் கொள்ளல் ஆகியன வேந்தரின் கடமைகளாகக் கருதப்பட்டன. அரசுறுப்புகளாக அறங்கூறவையம், நாளவை, ஊரவை ஆகியவை கருதப்பட்டன.

சான்றெண் விளக்கம்

1. இளம்பூரணர் (உரை) தொல். பொருள். 74

2. புறம். 186

3. மேலது. 42 : 10 - 11

4. புறம். 312 : 4

5. கோ. கேசவன், மண்ணும் மனித உறவுகளும் ப. 5

6. புறம். 287 : 9 -10

7. பதிற். 81 : 15 - 17

8. பதிற். 15 : 28

9. V. R. Ramachandra Dikshitar, Studies in Tamil literature and History, p.209

10. மதுரை. 494 - 499

11. புறம். 39 : 8 - 9

12. மேலது . 71 : 7 - 9

13. மதுரை. 778

14. புறம். 29 : 1 - 5

15. உ. வே. சாமிநாதையர், புறநானூறு மூலமும், பழைய உரையும் பக். 130

16. மதுரை. 161

17. அகம். 77 : 7 - 8

18. K. A. Nilakanda sastri ,Studies in chola History and Administration p. 140

19. புறம். 10 : 3 - 4

20. மேலது. 29 : 9 - 10

21. மதுரை. 694 - 695

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p127.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License