வற்றுச் சாரியை (தொல்காப்பிய - நன்னூல் ஒப்பீடு)
சு. வினோதா
முன்னுரை
தொல்காப்பியர் வற்றுச் சாரியை என்று கூறியுள்ள சாரியை வடிவத்தை பவணந்தியார் அற்று என்னும் சாரியையாக வரையறை செய்துள்ளார். அவ்விரண்டனுள் மொழியை இடையூறின்றி வழங்க உதவும் வடிவத்தைக் கண்டறிய தொல்காப்பியம் மற்றும் நன்னூல் காட்டும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
தொல்காப்பியர் பார்வையில் வற்றுச் சாரியை
வற்றுச் சாரியை பல முதலான அகர ஈற்றுச் சொற்களை அடுத்தும் ஐகாரத்தை ஈறாக உடைய அவை, இவை, சுட்டுச் சொற்கள் மற்றும் யா என்னும் வினாச் சொல்லை அடுத்தும் எல்லாம் என்னும் சொல்லை அடுத்தும் தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்தாகும்.
பல்லவை நுதலிய அகர ஈற்றுச் சொற்களை அடுத்து வற்றுச்சாரியை இடம்பெறும் என்பது தொல்காப்பியர் கருத்து. பல்லவை முதலான என்பதற்கு உரையாசிரியர்கள் பல்ல, சில்ல, உள்ள, இல்ல என்னும் நான்கு சொற்களைக் காட்டுகின்றனர். இதனை
“பல்லவை நுதலிய அகரஇறுபெயர்
வற்றொடு சிவணல் எச்சமின்றே” (தொல்- எழு- 175)
என்னும் தொல்காப்பிய நூற்பாவும்
பல்லவற்றை, சில்லவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை, பல்லவற்றொடு, சில்லவற்றொடு, உள்ளவற்றொடு, இல்லவற்றொடு என்னும் உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகளும் உணர்த்துகின்றன. இச்செய்தி உயிர் மயங்கியலின் மற்றொரு நூற்பாவில் கூறப்பட்டுள்ளது.
“பலவற் றிறுதி உருபியல் நிலையும்” (தொல் - எழு- நூ. 221)
என்னும் நூற்பா பல என்னும் சொல்லின் இறுதிப் பகுதி உருபியலில் கூறப்பட்டுள்ள பல்லவை நுதலிய அகர இறுபெயர் அடைந்த மாற்றத்தையே அடையும் என்பதனை உணர்த்துகின்றது.
ஐகாரத்தை ஈற்றிலே உடைய சுட்டுச் சொற்களை அடுத்து வற்றுச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதியாகும். இவ்விதியினைத் தொல்காப்பியர் மூன்று நூற்பாக்களில் (184, 282, 379) அமைத்துள்ளார்.
* ஐகாரத்தை ஈற்றிலே உடைய சுட்டுச்சொற்களை அடுத்து வற்றுச் சாரியை தோன்றும்
“சுட்டு முதலாகிய ஐயென் இறுதி
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே” (தொல் - எழு- நூ.178.)
என்னும் இந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் அவையற்றை, இவையற்றை, உவையற்றை ஆகிய சொற்களைச் சான்றுகளாகக் காட்டியுள்ளனர்.
* அவ்வாறு தோன்றும் ஐகரர ஈற்று சுட்டுச்சொற்களில் ஐகாரம் தான் கூடியுள்ள மெய்யோடு சேர்ந்து கெடும்.
“சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யும்
கெட்ட இறுதிஇயல் திரிபின்றே” (தொல் - எழு- நூ.184)
அவை + வற்று + ஐ = அவற்றை
இவை + வற்று + ஐ = இவற்றை
உவை + வற்று + ஐ = உவற்றை
மேற்கண்ட சான்றில் ஐகாரம் தான் கூடியுள்ள மெய்யோடு கெட்டுள்ளது. வற்றுச் சாரியையின் ஈற்று றுகரம் அதனை அடுத்துள்ள இரண்டாம் வேற்றுமை உருபிற்கு முன்னர் கெடுகின்றது. இவ்விருவகைப் புணர்ச்சி மாற்றங்களுள் முதலில் உள்ள சுட்டு முதல் ஐகாரத்தின் ஐயும் மெய்யும் அடையும் மாற்றமே தொல்காப்பிய நூற்பாவிலும் உரையாசிரியர் தரும் விளக்கத்திலும் பதிவாகியுள்ளது. ஏனைய மாற்றம் சான்றுகளின் மூலமாகவே அறியப்படுகின்றது.
* மேற்கண்ட இரண்டு நூற்பாக்களின் செய்திகளையும் குறிக்கும் வகையில் தொல்காப்பியர் ஒரு நூற்பா அமைத்துள்ளார்.
“சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்” (தொல் - எழு- உயி.மயங்- 282)
என்னும் நூற்பா மேற்கண்ட இரண்டு நூற்பாக்களில் சுட்டு முதல் ஐகாரம் கெட்டும் கெடாமலும் புணரும் இயல்பைக் குறிப்பிடுகின்றது.
அவை + வற்று + ஐ = அவற்றை
- சுட்டு முதல் ஐகாரம் கெட்டுள்ளது.
அவை + வற்று + ஐ = அவையற்றை
- சுட்டு முதல் ஐகாரம் கெடாமல் புணர்ந்துள்ளது.
* சுட்டெழுத்தை முதலாக உடைய வகார ஈற்றுச்சொல் உருபியலில் கூறிய விதியின் அடிப்படையில் வற்றுப் பெற்றுப் புணரும்.
“சுட்டுமுத லாகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபியல் நிலையும்” (தொல்-எழு-புள்ளி.மயங்- 379.)
என்னும் நூற்பாவிற்கு சுட்டெழுத்தை முதலாக உடைய வகார ஈற்றுச்சொல் உருபியலில் கூறிய விதியின் அடிப்படையில் வற்றுப் பெற்றும், அல்வழிப் புணர்ச்சியில் வற்றுப் பெறாமல் ஆய்தம் பெற்றும் புணரும் என்று உரையாசிரியர்கள் கருத்துரைத்துள்ளனர்.
அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு
- வேற்றுமைப் புணர்ச்சியில் சுட்டு முதல் வகர இறுதி தான் கூடிய உயிரெழுத்தோடு கெட்டுள்ளது.
அவை + கடிய = அஃகடிய
- அல்வழிப் புணர்ச்சியில் சுட்டு முதல் வகர மெய் தான் கூடிய ஐகார உயிரோடு கெட்டு வற்றுச் சாரியை தோன்றாமல் ஆய்தம் தோன்றப் புணர்ந்துள்ளது.
மேற்கண்ட நூற்பாக்களில் சுட்டு முதல் ஐகாரம், சுட்டு முதல் வகரம் என்னும் இருவேறு வழக்குகள் பின்பற்றப்பட்டாலும் இரண்டும் அவை, இவை, உவை என்னும் ஒரு வழக்கையே சுட்டுகின்றது என்பதனை உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகள் நிறுவுகின்றன.
யா என் வினாவின் ஐயென் இறுதி மேற்கண்ட நூற்பாக்களில் சுட்டு முதல் வுகரமும் சுட்டு முதல் ஐகாரமும் புணரும் முறையிலேயே ஐகாரவகரம் கெட்டு வற்றுச் சாரியை பெற்றுப் புணரும்.
“யாவென் வினாவி ஐயென் இறுதியும்
ஆயியல் திரியாது என்மனார் புலவர்
ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே” (தொல்-எழு-உருபியல்- 179.)
என்னும் நூற்பா ‘யா’ என்று தொடங்கும் ஐகாரவகர ஈற்று வினாச் சொல்லானது சுட்டு முதல் ஐகாரவகர ஈற்றுச் சொல் போன்று ஐகாரவகரம் கெட்டு இடையில் வற்றுச் சாரியை பெற்றுப் புணரும் என்பதை உணர்த்துகின்றது.
யாவை + வற்று + ஐ = யாவற்றை
- யா என்னும் வினா முதல் ஐகாரச் சொல்லில் ஐகாரவகரம் கெட்டுள்ளது. ஐகார ஈற்று சுட்டுச் சொல்லை ஒத்தது என்று குறிப்பிட்டுள்ளமையால் சுட்டு முதல் ஐகாரவகரம் கெட்டும் கெடாமலும் புணரும் என்னும் விதி இங்கு பொருந்தவில்லை. மாறாக ஐகாரவகரம் கெட்டு மட்டுமே இங்கு புணர்ந்துள்ளது.
‘எல்லாம்’ என்னும் இறுதியை அடுத்து வற்றுச் சாரியை தோன்றும். அதனை அடுத்து உம்மை நிலைபெறும் என்பது தொல்காப்பியர் உணர்த்தும் செய்தியாகும்.
“எல்லாம் என்னும் இறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையும் இறுதியான” (தொல்-எழு-உருபியல்- 190.)
என்னும் நூற்பா ‘எல்லாம்’ என்னும் சொல்லை அடுத்து வற்றுச் சாரியை தோன்றும். அதனை அடுத்து உம்மை நிலைபெறும் என்பதனை உணர்த்துகின்றது.
எல்லாம் + ஐ = எல்லாம் + வற்று + ஐ + உம் = எல்லாவற்றையும்
மேற்கண்ட சான்று ‘எல்லாம்’ என்னும் சொல்லை அடுத்து வற்றுச் சாரியை தோன்றும். அதனை அடுத்து உம்மை இடம்பெறும் என்பதனை உணர்த்துகின்றது.
பவணந்தி முனிவர் பார்வையில் வற்றுச் சாரியை
தொல்காப்பியர் குறிப்பிடும் ‘வற்று’ என்னும் சாரியை வடிவத்தை (நன்னூலை எழுதிய) பவணந்தி முனிவர் ‘அற்று’ என்னும் சாரியையாகக் குறிப்பிட்டு அதற்கு இரண்டு நூற்பாக்களை வகுத்து இரண்டு விதிகளையும் வகுத்துள்ளார். எல்லாம் என்னும் சொல் அஃறிணையைக் குறிக்கும் பொழுது அதனை அடுத்தும், வகர ஈற்றுச் சுட்டுச் சொல்லை அடுத்தும் அற்றுச் சாரியை தோன்றும் என்பது நன்னூல் உரைக்கும் செய்தியாக அமைகின்றது.
எல்லாம் என்னும் சொல் அஃறிணையாக இருப்பின் அதனை அடுத்து அற்றுச் சாரியை தோன்றும் என்பது நன்னூல் உரைக்கும் செய்தியாகும்.
“எல்லாம் என்பது இழிதிணை ஆயின்
அற்றொரு உருபின் மேல் உம் உறுமே
அன்றேல் நம்மிடை அடைந்து அற்றாகும் (நன் - எழு- 245)
என்னும் நூற்பா ‘எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர் அஃறிணையைக் குறிக்கும் சொல்லாக நின்று உருபுகளுடன் புணரும் போது அற்றுச் சாரியை பெற்று ஈற்றில் முற்றும்மையும் பெறும்’ என்னும் செய்தியை உணர்த்துகின்றது.
எல்லாம் + ஐ , எல்லாம் + அற்று + ஐ + உம் , எல்லாவற்றையும்
என்னும் புணர்ச்சி எல்லாம் என்னும் சொல்லை அடுத்து ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு கூடும் போது எல்லாமை என்று உச்சரிக்கப்படுகின்றது. இவ்வாறு உச்சரிப்பது இடர்ப்பாட்டை ஏற்படுத்துகின்றது. எனவே உச்சரிப்பு எளிமையை ஏற்படுத்துவதற்கு இடையில் அற்றுச் சாரியை தோன்றுகின்றது. பின்னர் எல்லாவற்றை என்று பொருள் முழுமையின்றி நிற்கின்றது. இத்தகைய பொருள் முழுமையற்ற தன்மையை நிறைவு செய்ய இறுதியில் உம் சேர்த்து எல்லாம் அற்று ஐ உம் ஆகிய நான்கு கூறுகளும் கூடி எல்லாவற்றையும் எனப் புணர்கின்றது.
சில சூழல்களில் அற்றுச் சாரியையோடு இன் சாரியையையும் இடம் பெறும். (எல்லாவற்றினையும்)
வகர ஈற்றுச் சுட்டுச்சொற்களை அடுத்து அற்றுச் சாரியை இடம்பெறும் என்பது அற்றுச் சாரியை குறித்து நன்னூல் வகுத்த இரண்டாவது விதியாகும்.
“வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே”
(நன் -எழு-250.)
என்னும் நூற்பா வகரத்தை இறுதியாக உடைய சுட்டுப்பெயர்கள் அற்றுச் சாரியை பெறும் என்பதனை அறிவிக்கின்றது. இதன்மூலம் அஃறிணைப் பன்மைப்பாலினை உணர்த்தக்கூடிய அவ், இவ், உவ் என்னும் சுட்டுச்சொற்களை அடுத்து அற்றுச் சாரியை தோன்றும் என்பதனை அறிய முடிகின்றது.
அவ் + ஐ , அவ் + அற்று + ஐ + , அவற்றை
என்னும் சொல், வகர ஈற்று சுட்டுச்சொற்கள் இரண்டாம் வேற்றுமை உருபோடு புணரும் போது இடையில் அற்றுச் சாரியை தோன்றும் தன்மைக்கு சான்றாகின்றது.
வற்று அற்று -வேறுபாடு
தொல்காப்பியர் வற்று என்று வரையறுத்துள்ள சாரியை வடிவத்தை பவணந்தியார் அற்று என்று வரையறுத்துள்ளார். இதில் மொழிப்பயிற்சிக்கு உதவும் பணியை வற்று என்னும் வடிவம நிறைவு செய்கின்றதா? அல்லது அற்று என்னும் வடிவம் நிறைவு செய்கின்றதா? என்று கண்டறிவது அவசியமாகின்றது.
தொல்காப்பியர் ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர்களை அடுத்தும் எல்லாம் என்னும் சொல்லை அடுத்தும் பல்லவை நுதலிய அகர இறு பெயர்களை அடுத்தும் யா என்னும் வினாவை அடுத்தும் வற்றுச் சாரியை தோன்றும் என்ற கூறியுள்ளார். இவற்றுள்
யா + அற்று : உள்ள + அற்று : இல்ல + அற்று : பல்ல + அற்று
சில்ல + அற்று : அவை + அற்று
ஆகிய சொற் புணர்ச்சி உயிரிறு உயிர் முதல் புணரும் புணர்ச்சி. எனவே இரண்டு உயிர்களையும் உடம்படுத்த வகர உடம்படுமெய் பயின்றுள்ளது என்று கொண்டால் யா (ய் + ஆ + அற்று) ஆ + அ இரண்டும் உயிரெழுத்தாக இருக்கின்றமையால் அவற்றை உடம்படுத்த வகர உடம்படுமெய் தோன்றி அற்று வ் + அ = வ , வற்று என மாற்றமடைந்துள்ளது என்று கொள்ள இடமளிக்கின்றது.
எஞ்சி நிற்கும் எல்லாம் என்னும் சொல்லும் எல்லா என மகரம் கெட்டு ஆகார ஈறாக நிற்கின்றது. அவ் ஆகார ஈறு அற்று என்னும் அகர முதலோடு புணர இடையில் வகர உடம்படுமெய் தோன்றி வற்றுச் சாரியையாக மாற்றம் அடைந்துள்ளது.
எனவே தொல்காப்பியர் வகர உடம்படுமெய் புணர்ந்த நிலையின் அடிப்படையில் வற்றுச் சாரியை என்று கூறியுள்ளார்.
பவணந்தியார் அற்றுச் சாரியை புணராமல் நிற்கும் நிலையின் அடிப்படையில் வகர உடம்படு மெய்யை நீக்கி அற்றுச் சாரியை என்றே கூறியுள்ளார்.
இதுவே இரண்டு வேறுபட்ட சாரியைகளாகத் தோற்றம் அளிப்பதற்கான காரணமாக அமைகின்றது.
முடிவுரை
* அற்றுச் சாரியை இரண்டு உயிரெழுத்துக்கள் கூடி வற்றுச் சாரியையாக புணரும் நிலையின் அடிப்படையில் தொல்காப்பியர் வற்றுச் சாரியையை வரையறுத்துள்ளார்.
* சாரியை எனத் தனியாக வகைப்படுத்தும் இடங்களில் அற்று என்றும் வகர உடம்படுமெய் தோன்றும் புணர்நிலைகளில் வற்று என்றும் பவணந்தியார் வரையறுத்துள்ளார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.