மணிமேகலையில் பெண்ணடிமைக்கூறுகள்
பெ. ஆனந்தி
தமிழில் அழியாப் புகழ்பெற்ற காப்பியங்களுள் மணிமேகலை தனிச் சிறப்புடையது. மணிமேகலை அறம் போதிக்க வந்த பௌத்த சமயக் காப்பியம் எனத் தமிழ் உலகில் வழங்கப்பட்ட போதிலும் இக்காப்பியத்தில் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் மிகுந்து வருகின்றது. இத்தகைய நிலையை விளக்கும் பொருட்டு இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.
மணிமேகலை - காப்பியச் சூழல்
மணிமேகலைக் காப்பியத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு ஆகும். மணிமேகலையை எழுதிய சீத்தலைச்சாத்தனாரும் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளும் நண்பர்களாவர். சாத்தனார், கண்ணகியின் வரலாற்றை எடுத்துரைக்க அதனை இளங்கோ காவியமாக்கினார். பின்னர் இக்காப்பியத்தின் தொடர்ச்சியை மணிமேகலைத் துறவு எனும் பெயரில் சாத்தனார் வார்த்தளித்தார். இதனை,
“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்” (மணி.பதிகம்: 95-99)
என்ற மணிமேகலையின் பதிக வரிகள் மெய்ப்பிக்கின்றன. மேலும் மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பட்டச் சூழலில் அரசுரிமையும் ஆண்களிடத்திலேயே இருந்தமை தொடிதோட் செம்பியன் என்ற மன்னனைச் சிறப்பிக்கும் பாடலடிகள் (மணி 1:3-5) மூலம் புலப்படுகிறது. எனவே இந்தக் காப்பியம் ஒரு ஆண் கேட்டு ஒரு ஆண் படைக்க ஒரு ஆண் ஆளும் அரசாங்கத்தில் பாடப்பட்டது என்பது தெளிவாகிறது.
மணிமேகலையில் பெண்ணடிமைக் கூறுகள்
பெண்களின் உணர்வினையும் மரபினையும் சித்திரிக்கும் ஆண் எழுத்துகளை அலசி ஆராய்வதும் இன்றைய திறனாய்வு முறைகளுள் அவசியமாகிறது. இதன் படி மணிமேகலையில்,
* பரத்தமை வலியுறுத்தல்
* முற்பிறவி கடமைகளைச் சுட்டுதல்
* சமயவாதிகளால் ஒதுக்கப்படல்
* மறைக்கப்பட்ட பெண் காதல்
* பிற பெண்ணடிமை நிலைகள்
என்ற வகைகளில் பெண்ணடிமைக் கூறுகளை நாம் கண்டறிய முடிகிறது. அதாவது பரத்தையர் குலப் பெண்ணைத் துறவியாக உயர்த்த சாத்தனார் எண்ணிய போதிலும் அவரை அறியாமலே பல பெண்ணடிமைக் கூறுகளைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பரத்தமை வலியுறுத்தல்
மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள். பரத்தையர் குலத்தைச் சேர்ந்த இவள் தன் தகப்பன் இறந்த செய்தி கேட்டு துறவியாகிறாள். துறவியான பின்னும் இவளுக்கு வயந்தமாலை, சித்திராபதி, உதயகுமரன் மற்றும் ஊர்மக்கள் எனப் பலர் வழியிலும் பரத்தமையையே ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு,
“அணியமைத் தோற்றத்து அருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள்” (மணி 3:149-150)
என்னும் பாடலடிகளைச் சான்றாகக் காட்டலாம். எனவே ஒரு பெண் தன்னை பௌத்தத் துறவியாக உலகிற்கு அடையாளம் காட்ட விரும்பிய போதிலும் அவளை எதிர்த்து ‘பத்தினிப் பெண்டிர் அல்லோம்’ எனக் கூறும் சமூக நிலையை அறிய முடிகிறது.
முற்பிறவி கடமைகளைச் சுட்டுதல்
மணிமேகலையின் முற்பிறவி கணவன் இராகுலன். அவனே இப்பிறவியில் உதய குமரனாவான் என்பதை உணர்ந்த மணிமேகலை,
“என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்
தன்னடி தொழுதலும் தகவென வணங்கி” (மணி 18:128-129)
என்று தனது முற்பிறவி கணவனை இப்பிறவியில் வணங்குகிறாள் இதோடு மட்டுமல்லாமல் உதயகுமரனின் சொல்லை எதிர்த்துப் பேசவும் நடுங்குகிறாள் (மணி18 :132-133)
மேலும் முற்பிறவி கணவனை இப்பிறவியில் பெற்றெடுத்த இராசமாதேவியையும் வணங்குகிறாள். இதன் மூலம் பெண் என்பவள் இப்பிறவி மட்டுமல்லாமல் ஏழேழு பிறவிக்கும் தன் கணவனுக்கும் அவன் சார்ந்த உறவுகளுக்கும் அடிமையாகவே கருதப்பட்டு வந்த நிலை புலனாகிறது.
சமயவாதிகளால் ஒதுக்கப்படல்
சமயங்கள் யாவற்றிலும் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், உரிமைகளில் பாதி கூட பெண்களுக்கு இருந்ததில்லை. மணிமேகலை பௌத்த சமயத் துறவியான பின்பு எல்லாச் சமயங்களின் அறங்களையும் தெரிந்து கொள்ளத் துணிகிறாள். ஆனால்,
“இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்கென” (மணி26: 68-69)
என கண்ணகி மற்றும் மணிமேகலாத் தெய்வத்தாலும் (மணி 10: 77-80) அறிவுறுத்தப்படுகிறாள். எனவே சமயங்கள் பலவற்றிலும் பெண் எதிர்ப்பு நிலை இருந்துள்ளதை அறிய முடிகிறது. சமயவாதிகள் தத்துவங்களை அறிந்திருந்த போதிலும் பெண் பற்றிய உண்மையை உரிமையை அறியாதிருந்த நிலை புலப்படுகிறது.
மறைக்கப்பட்ட பெண் காதல்
மணிமேகலைத் துறவு எனப்பெயரிட்ட இக்காப்பியம் மணிமேகலையின் துறவினைக் குறித்தது மட்டுமல்ல. அவள் தம் காதல் உணர்வுகளை மறைத்ததுமாகும். பெண்ணின் இயற்கை உணர்வுகளை மணிமேகலையும் பெற்று,
“புதுவோன் பின்றை போனது என்னெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை” (மணி 5:89-90)
என்று கூறுகிறாள். உதய குமரன் தன் அன்பு நெஞ்சைப் பறித்துச் சென்றதை அவள் கூறும் முன்னே சாத்தனார்,
“இதுவே ஆயின் கெடுக தன் திறமென” (மணி 5: 91)
கூறச் செய்கிறார். எனவே ஒரு பெண் தன் காதலைக் கூட வெளிப்படுத்த முடியாத விதிக்கப்பட்ட வாழ்விற்குள் அது துறவோ கைம்மையோ இல்லறமோ அதற்குள்ளேயே வாழ வேண்டுமென கட்டளை பிறப்பித்திருந்தமைத் தெரிய வருகின்றது.
பிற பெண்ணடிமை நிலைகள்
மணிமேகலைக் காப்பியத்தின் வழி மேற்சொன்னவை மட்டுமின்றி இன்னும் பிற பெண்ணடிமை நிலைகளையும் நாம் காண முடிகிறது.
* உதய குமரனைக் கொன்றவன் காஞ்சனன். இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்தவள் மணிமேகலை. ஆயினும் கொலை செய்த காஞ்சனனை விடுத்து மணிமேகலை மட்டுமே கைது செய்யப்படுவது கவனிக்கத்தக்கது.
* உதய குமரனின் பெற்றோர் மாவண்கிள்ளி, இராசமாதேவி ஆவர். உதய குமரன் இறந்ததையும் அதற்குக் காரணம் மணிமேகலை என்பதையும் அறிந்த இவர்களில் இராசமாதேவி மட்டுமே பழிவாங்கத் துடிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. எனவே பெண்ணே பெண்ணுக்கு எதிரி, சூழ்ச்சி செய்பவளாகப் படைக்கப்பட்டுள்ளாள்.
* மணிமேகலை முற்பிறவியில் இலக்குமியாகப் பிறந்து துயரத்திற்கு உள்ளானாள். இப்பிறவியிலும் பெண்ணாகப் பிறந்து பல பாடுகளைப் பட்டுவிட்டாள். அடுத்தப் பிறவியில் இவள் ஆணாகப் பிறந்தால் மட்டுமே (மணி 21: 15-176) இவள் வாழ்வு சிறக்கும் என எண்ணிய சாத்தனாரின் எண்ணம் சிந்திக்கத் தக்கது.
* பெண்களை விருந்து பொருளாக மது மாமிசத்தோடு விருந்தினருக்கு தரும் நிலையை நாம் சாதுவன் வழி (மணி 16:76-77) அறிய முடிகிறது.
எனவே மணிமேகலைக் காப்பியத்தின் வழி பெண்ணை அடிமையாகப் பாவித்த பல சூழல்களைக் காண முடிகிறது.
முடிவுரை
மணிமேகலைக் காப்பியத்தின்வழிப் பெண்ணடிமை நிலைகள் பல அறிய வருகின்றன. அதாவது பரத்தையர் குலப் பெண்கள் தாங்கள் விரும்பாத போதிலும் அத்தொழிலையே செய்ய வற்புறுத்தப்பட்டமை, அனைத்துப் பிறவியிலும் கணவனுக்கு அடிமையாதல், சமயவாதிகளால் ஒதுக்கப்படல், பெண் மனம் மறைக்கப்படல், சூழ்ச்சி வஞ்சகம் செய்பவளே பெண் எனல், செய்யாத குற்றத்திற்காகக் கைது செய்யப்படல், விருந்துப் பொருளாதல் முதலிய பல பெண்ணடிமைக் கூறுகளை நாம் மணிமேகலைக் காப்பியத்தில் காண முடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.