மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு
மு. பூங்கோதை
சங்க இலக்கிய வரிசையில் இடம் பெற்றுள்ள பத்துப்பாட்டு பண்பாடும் கலையும் நிரம்பிய வரலாற்றுப் பெட்டகமாகும். அவற்றுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், சங்ககால மக்கள் வாழ்ந்த சூழலில் எழுந்த, எழுப்பப்பட்ட ஒலிகளை அறிவதை ஆய்வு நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.
மதுரைக்காஞ்சி
சங்க இலக்கிய பத்துப்பாட்டு நூல்களில் ஆறாவதாக இடம் பெறுவது மதுரைக்காஞ்சி ஆகும். 782 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. இடையிடையே வஞ்சியடிகளும் விரவி வந்துள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமை தத்துவங்களை அறிவுறுத்துவதற்காக மாங்குடி மருதனார் பாடியது ஆகும். மதுரையை ஆண்ட மன்னனுக்கு காஞ்சித்திணை கூறப்பட்டதால் மதுரைக்காஞ்சி எனப்பெயர் பெற்றது.
ஒலிச்சூழல்கள்
மதுரைக்காஞ்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிகளை,
* அஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்
* உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்
என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.
அஃறிணை சார்ந்து எழும் ஒலிகள்
கடல்
அகன்ற நீர்ப்பரப்பில் உயர்ந்து வருகின்ற அலைகளைக் கொண்டது கடலாகும். பேரோசையைக் கொண்டது கடல் என்பதை ஒலி, முழங்கு போன்ற சொற்களைக் கொண்டு மாங்குடி மருதனார் பதிவு செய்திருப்பதை,
“ஓங்குதிரை வியன்பரப்பின்
ஒலி முந்நீர் வரம்புஆக” (மது.கா,1-2)
“முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு” (மது.கா.,199)
“முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்” (மது.கா.,315)
என்ற அடியின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
பறவை
பறவைகள் எழுப்புகின்ற ஒலியானது இசையாக இருந்தது மகிழ்ச்சியை அளித்தது என்பதை,
“புள்இமிழ்ந்து ஒலிக்கும் இசையே” (மது.கா.,111)
என்ற அடியின் வாயிலாக மருதனாரின் ஒலிகளை உற்று நோக்கிய திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது. உயர்ந்த மலைகளில் மயில்கள் ஓசை எழுப்பி மகிழும் என்பதை,
“…………….உயர்சிமையத்து
மயில்அகவும் மலிபொங்கர்” (மது.கா.,332-333)
என்ற அடி உரைக்கின்றது. மருத நிலத்தில் பலவகையான ஒலிகள் எழுந்த சூழலில் குருகுப் பறவையின் ஒலி எழுந்ததை,
“குருகுநரல மனைமரத்தான்” (மது.கா.,268)
என்ற அடியின் வாயிலாக பறவைகளின் ஒலியை மதுரைக்காஞ்சியில் ஆசிரியர் கூறியுள்ள திறத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.
வண்டு
மென்மையான இலைகளையுடைய ஆம்பல் பூக்களில் வண்டுகள் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன என்பதை,
“மெல்லிலை அரிஆம்பலொடு
வண்டுஇறை கொண்ட கமழ்பூம் பொய்கை” (மது.கா.,252-253)
என்ற அடியின் வாயிலாக வண்டின் ஒலியை அதன் சூழலோடு கூறிய முறையை அறிந்து கொள்ள முடிகின்றது.
அருவி
மலையில் இருந்து வீழ்கின்ற அருவியின் ஒலி மலையில் எதிரொலித்து ஒலித்தது என்பதனை,
“இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட” (மது.கா.,299)
என்ற அடியின் வாயிலாக அருவி எழுப்புகின்ற ஒலியை உற்றுநோக்கி பதிவு செய்துள்ள மருதனாரின் செவித்திறனை அறிந்து கொள்ள முடிகின்றது.
நெற்பயிர்
மதுரையில் உள்ள முதுவெள்ளிலை என்ற ஊரில் மழை வளத்தால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழுப்புகின்றன. இதனை,
“வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை……” (மது.கா.,110-111)
என்ற அடியின் வாயிலாக நெற்பயிர்கள் அதிகமாக வளர்ந்து ஓசை உண்டாக்குவதையும், மதுரையின் இயற்கை வளத்தையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
புலி
கரிய நிறத்தினை உடைய பன்றியை புலி அடித்துக் கொன்று வேட்டை ஆடுகின்ற போது உண்டாகின்ற ஒலியினை,
“……….இருங்கேழ்
ஏறுஅடு வயப்புலி பூசலோடு” (மது.கா.,297-298)
என்ற அடியின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள்
“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே“ என்ற தொல்காப்பிய வரிப்படி மக்கள் எழுப்புகின்ற ஒலிகள் உயர்திணை சார்ந்து எழும் ஒலிகள் என்று குறிப்பிடப்படுகின்றது.
வேலை செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்
நீரை முகந்து இறைக்கின்ற தொழிலாளர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக பாட்டு பாடி வேலை பார்ப்பதால் எழும் ஓசையை,
“நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்
பாடுசிலம்பும்……..” (மது.கா.,89-90)
என்ற வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. வயல் நிலங்களில் செழிப்பாக வளர்ந்த நெற்பயிர்களை கதிர் அறுப்போர் எழுப்புகின்ற ஆராவாரத்தை,
“…………..அரிநர் கம்பலை” (மது.கா.,110)
என்ற அடி உணர்த்துகின்றது. கடலிலே சென்று மீன்களை வேட்டையாடி கரைவந்து சேரும் மீனவர்கள் ஆரவாரம் செய்வதை,
“நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை” (மது.கா.,116)
என்ற அடி உணர்த்துகின்றது.
போர் செய்பவர்கள் எழுப்பும் ஒலிகள்
மதுரையின் தென்பகுதியில் வஞ்சினங்களைக் கூறிக்கொண்டு ஆரவாரம் செய்யும் மக்கள் இருப்பதை,
“ஒன்றுமொழி ஒலிஇருப்பின்
தென்பரதவர் போர்ஏறே” (மது.கா.,143-144)
என்ற அடி உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் பகைவர்கள் நடுங்கும் வண்ணம் அகன்ற வானில் ஆரவாரம் முழங்க மழை போல் அம்புகளை எய்தான் என்பதை,
“அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயல் உறழக் கணைசிதறி” (மது.கா.,182-183)
என்ற அடி விளக்குவதை அறியமுடிகின்றது.
உயிரினங்களை விரட்டுகின்ற போது எழும் ஒலிகள்
மணி போன்ற நிறமுடைய அவரையினது தளிரை மேய வருகின்ற காட்டுப்பசுவை விரட்டுகின்ற கானவர்கள் ஆரவாரம் செய்வதை,
“மணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்” (மது.கா.,292-293)
என்ற அடியானது விளக்குகின்றது.
வியாபாரம் செய்யும் போது எழும் ஒலிகள்
பெரிய உப்பங்கழியில் உப்பு வயல்களில் வெள்ளை உப்பை விற்கின்ற வியாபாரிகள் எழுப்புகின்ற ஓசையை,
“இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு
ஒலிஓவாக் கலியாணர்” (மது.கா.,117-118)
என்ற அடி உணர்த்துகின்றது.
விழாக்கள் கொண்டாடுவதால் எழும் ஒலிகள்
திருவிழாக்கள் கொண்டாடும் போது ஏழாம் நாள் திருவிழாவின் போது விழாவின் நிறைவாக தீவினைகளைக் கழுவ நீராடல் இருக்கும். அந்நாளில் மிகுந்த ஆராவாரம் நிகழும் என்பதை,
“கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே” (மது.கா.,427-428)
என்ற வரியின் வழி அறிய முடிகின்றது.
கூத்து நிகழ்வதால் உண்டாகும் ஒலி
குரவைக்கூத்து
மணல் பரந்து இருக்கின்ற கடற்கரைச் சோலையில் பரதவர் மகளிர் ஆடும் குரவைக் கூத்தினால் எழும் ஓசை,
“மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப” (மது.கா.,96-97)
என்ற வரியின் வழி அறியமுடிகின்றது.
முடிவுரை
மாங்குடி மருதனார் அஃறிணை சார்ந்து எழும் ஒலிகளையும், உயர்திணை சார்ந்து எழுகின்ற ஒலிகளையும் உற்றுநோக்கி மதுரைக்காஞ்சியில் பதிவு செய்துள்ள திறத்தினை அறியமுடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.