இசுலாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் புதுமைகளும்
செ. சாந்தி
முன்னுரை
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருட்களுள் ஏதேனும் ஒன்று குறைந்து காணப்படும் இலக்கியம் சிற்றிலக்கியம் எனப்பட்டது. இது 96 வகைப்படும். சிற்றிலக்கியம் என்ற சொல்லாட்சி வழக்கிற்கு வருவதற்கு முன்னர் ‘பிரபந்தம்’ என்ற வடமொழிச் சொல்லாட்சி காணப்பட்டது. இது ‘கட்டப்பட்டது’ என்ற பொருளைத் தருகிறது. கிடைக்கப்பெற்ற இலக்கியங்கள் அனைத்துமே ஏதோ ஓர் இலக்கை முன்னுறுத்திக் கட்டப்பட்ட நிலையில் பிரபந்தம் என்ற சொல்லாட்சி சிற்றிலக்கிய வகையை மட்டும் சுட்டவில்லை. எனவே ‘சிறுபிரபந்தம்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தும் முறை வழக்கிற்கு வந்தது. சிற்றிலக்கியங்களுள் காலந்தோறும் மாற்றங்களையும் புதுமைகளையும் கொண்டு விளங்குவதாக பிள்ளைத்தமிழ் மட்டுமே அமைந்துள்ளது.
இதற்கான தோற்றத்தினைத் தொல்காப்பியம்;
“குழவி மருங்கினும் கிழவதாகும்” (1) (தொல்.புறத்.24)
என்று குறிப்பிடுகிறது.
இசுலாமும் பிள்ளைத்தமிழும்
‘இஸ்லாம்’ என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபு வேர்ச்சொல்லிருந்து பெறப்பட்டதாகும். அதற்குச் சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்ப்படிதல் போன்ற பல பொருள்கள் காணக்கிடைக்கின்றன. எனினும், “இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும் அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்றும் பொருள்” (2) என்ற குலாம் முகம்மதுவின் கூற்றும் இங்கு உணரத்தக்கதாகும்.
இசுலாமியர்கள் மாலை, சிந்து, கும்மி, தாலாட்டு, ஞானப்பாடல்கள், கீர்த்தனைகள் முதலிய இலக்கிய வகைகளைப் படைத்துத் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். இவ்விலக்கிய வகைகள் தவிர, பிள்ளைத்தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளனர். இவ்வகையில் ஏறத்தாழ 32 பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது. அவற்றுள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் மூன்று மட்டுமேயாகும். மீரான் சாஹிபு அவர்களால் ‘பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழும்’ (1920), கவிஞர் கா.மு.ஷெரிப் அவர்களால் ‘ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழும்’ (1991), ஆதிரை தாஹா அவர்களால் ‘நாகூர் செய்யது சுல்தான் பீவி பிள்ளைத்தமிழும்’ (1994) இயற்றப்பட்டுள்ளன. இப்பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் புதுமைகளையும் எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
மாற்றங்கள்
பழமையைக் கைவிடாது, புதுமையை ஏற்றுக் கொள்ளும் மாற்றமானது வளர்ச்சியின் அடையாளமாகும். “நூலாசிரியர்கள், காலமாற்றம், சமூக மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றியதோடு மட்டுமல்லாமல் நூலின் அடிப்படைக் கோட்பாடுகளையும் மாற்றியுள்ளனர்” (3) என்னும் கா. மீனாட்சி சுந்தரம் அவர்களின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
இம்மூன்று பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களும், பாடல் எண்ணிக்கையிலோ, பருவ வைப்பு முறைகளிலோ மாற்றங்களின்றி கருத்தமைவுகளில் மட்டும் மாற்றத்தோடு காணப்படுகின்றன.
காப்புப்பருவம்
பாட்டுடைத் தலைமக்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது காப்புப்பருவம் ஆகும். இப்பருவத்தில் காக்கும் தொழிலைச் செய்யக்கூடிய திருமாலை இப்பருவத்தின் முதற் காப்புக் கடவுளாகக் கொண்டு பாடப்படுவது பிள்ளைத்தமிழின் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவரையடுத்து விநாயகர், சிவன், முருகன், அம்மன் முதலியோரைப் பாட வேண்டுமென்று ‘பன்னிரு பாட்டியல்’ எடுத்துரைக்கிறது. ஆனால் இசுலாமியப் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற சமயக் கடவுளரை, இஸ்லாத்தோடு தொடர்புடையோரைக் காக்குமாறு குறிப்பிடுவது மார்க்கக் கொள்கைக்கு மாறானது என்பதால், இந்நிலை இஸ்லாமியப் பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம் பெறவில்லை. இதனால் இறைதூதர் மற்றும் பாட்டுடைத் தலைவியரின் உறவினர்களிடம் காப்பு வேண்டுவதான மரபு காணக்கிடைக்கின்றது. சான்றாக, சுல்தான் பீவி பிள்ளைத்தமிழின் காப்புப் பருவமானது அவரது கணவரான யூசுபின் பரம்பரையினரைக் கூறி அவரிடம் காப்பு வேண்டுமாறு பாடப்பெற்றுள்ளது.
முத்தப்பருவம்
பாட்டுடைத் தலைமக்களிடம் முத்தம் தருமாறு அமைத்துப்பாடுவது முத்தப் பருவமாகும். இசுலாமியச் சமயத்தோடு தொடர்புடைய பாட்டுடைத் தலைவியரிடம் ‘முத்தம் தருக’ என்று பாடுவது மரபு மீறிய செயலாகக் கருதப்படுவதால், இசுலாமியப் புலவர்களுக்குப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் முத்தப்பருவம் பாடுவது சிக்கலானப் பணியாக இருந்துள்ளது. எனவே,
1. ‘பாட்டுடைத் தலைவியின் முத்தத்திற்கு விலை இல்லை’ என்று உயர்வாகக் கூறியும்
2. ‘பாட்டுடைத் தலைவியின் முத்தம் அவர்தம் கணவருக்கு உரித்தாகுக’.
என்றவாறு கூறிச் செல்வதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
“மகரசலராசியில் விளைகின்ற முத்துக்கு
மண்மீது விலையுண்டு
... ... ... ... ...
பச்சை மயிலொத்த திருபாத்திமா நங்கையே
பதுமவாய் முத்தமருளே”(4)
என்றவாறு பாத்திமாநாயகி பிள்ளைத்தமிழிலும், சுல்தான் பீவி பிள்ளைத்தமிழிலும் அமைந்துள்ளதைச் சான்றுகளாகக் காட்டலாம்.
“யூசுபு சீர் கரம் பற்றிச் சேர்ப்பீர் முத்தமே”
என்றவாறு சுல்தான் பீவி பிள்ளைத்தமிழ் அமைந்துள்ளதைச் சான்று காட்டலாம்.
அம்புலிப்பருவம்
பாட்டுடைத் தலைமக்களையும், அம்புலியையும் ஒப்பிட்டுச் சாம, பேத, தான, தண்ட முறைகளால் அமைத்துப் பாடுவது அம்புலிப் பருவம் எனப்படும். இம்முறையே பாத்திமாநாயகி பிள்ளைத்தமிழிலும் சுல்தான் பீவி பிள்ளைத்தமிழிலும் காணப்படுகிறது. ஆனால், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழில் நபிபெருமானின் முகத்தையும், ஆயிஷா பிராட்டியாரின் முகத்தையும், ஆசிரியர் இரு நிலவிற்கு ஒப்பாகக் கூறியுள்ள திறம் மாற்றமுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை,
“அகமதர் முகமெனும் முழுநிலா முன்னே
ஆடிமகிழும் பெண் ஆயிஷாப்பெண்
செகம்புகழ் அறிவுள ஆயிஷப் பெண்நல்
திருநபி முன்னம் நிற்குங்கால்
இகமதில் இருநிலா இலங்கிடக் காண்பதாய்
இயம்புவார் நோக்கிடும் மாந்தரெல்லாம்” (5)
என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
புதுமைகள்
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே” (6)
என்பதற்கிணங்க இசுலாமியப் புலவர்கள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களில் பருவ வைப்பு முறையில் மாற்றங்களின்றி, ஆனால் பொருண்மைகளில் புதுமையைப் புகுத்தியுள்ளனர். செங்கீரை, சப்பாணி, வருகை முதலான பருவங்களில் முறையே பாட்டுடைத் தலைவியை ஒரு காலை மடக்கி ஒரு கையை ஊன்றி ஆடுக என்றும், இரு கைகளைக் கொட்டியும் தளர்நடையிட்டும் வருக என்றும், அழைப்பதாகப் பாடுவதே மரபு. ஆனால் இசுஸாமியப் பிள்ளைத்தமிழில் பாட்டுடைத் தலைவியரின் குடிச்சிறப்பு, அவர்தம் கணவர் மற்றும் உறவினர்களின் வளமை, வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யுமாறு பாடியிருப்பது புதுமையானதாக அமைந்துள்ளது. இதனைக் கீழ்வரும்
“சூரர் ஜீபையரின் மனைவி தமக்கும் சோதரி” (ஆயிஷா-செங்.3)
“வெற்றி மகளப்துல்லா நற்றவப்பாலராம் வேதமஹ்மது மகளாய்” (பாத்திமா-செங்.4)
“பெருங்குடிப் பிறந்தே பெருமரும்சோதி
பெம்மான் யூசுபின்
பெருமனை இருந்தே அரும் அறம்புரிந்த
திருமகள் சுல்தானீ” (சுல்தான்-வரு.4)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
ஊசற்பருவம்
ஊசற்பருவத்தில் பாட்டுடைத் தலைவியரை ஊசலாட வருமாறு அழைக்கும் நிலையில் ஊசல் குறித்த வருணனைகள் இடம் பெறா. ஆனால், இசுலாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் பாட்டுடைத்தலைவி ஊசலாட உருவாக்கப்பட்ட ஊசலானது தந்தம், முத்து, வைரம் முதலான பொருள்களால் அணி செய்யப்பட்டுள்ளது என்றவாறு ஊசலின் பெருமை சிறப்புறக் கூறியுள்ள முறை புதுமையானதாகக் காணப்படுகின்றது. இதனை,
“சாமெனும் தேயத்துச் சந்தைதனிலே
தமனியம் சேர்த்திழைத்த தந்தப் பலகை
தக்கதாய் பார்த்து வாங்கி முத்துகள் கோர்த்த
தரமுள நல்ல வடம் சேரப் பிணைத்து
ஏம நன்னாடு விளைபச்சை வைரம்
இணைத்துள தூண்விட்டம் தேடிக் கொணர்ந்து
இந்திய வல்தொழிற் கம்மியர் கையால்
எழில்தரு பொன்னூசல்” (7)
என்ற ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழின் பாடலடிகள் சான்றுரைக்கின்றன.
நீராடற் பருவம்
புதுப்புனலின் வருகையைக் கூறிப் பாட்டுடைத் தலைவியை நீராட அழைத்துப் பாடுவது நீராடற்பருவமாகும். ஆனால் ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழில் பேரீச்ச மர வருணனை, ஈச்ச மரங்களின் அணிவகுப்பு (நீரா.6) முதலான செய்திகள் இடம் பெற்றிருப்பது புதுமையானதாக அமைந்துள்ளது. மேலும் யூசுபு அவர்கள் சந்தனம் பொழிய சீனத்தூர் சீர்துகில் அணிந்து தலையில் நெய் பூசி திகழுவதாகவும்,
“சுல்தான் பீவியே கானம்
பாடி தோழியர் சூழ நின்றாடுக” (நீரா.2)
என்றவாறும் அவரது வழி மரபினை (நீரா.4,5,6) பாடல்களிலும் கூறியிருப்பது புதுமையானதாக உள்ளது.
முடிவுரை
* தொல்காப்பியர் பிள்ளைத் தமிழுக்கான தோற்றத்தைக் கூறிச்சென்றுள்ளார்.
* 32 இஸ்லாமியப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றுள் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் மூன்று மட்டுமே அமைந்துள்ளன.
* பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல் எண்ணிக்கை பருவ அமைப்பில் மாற்றங்களின்றிப் புதுமைகளுடன் இயற்றப்பட்டுள்ளன.
* காப்பு, முத்தம், அம்புலிப் பருவங்களில் கருத்தமைவுகளில் மட்டும் சிறு மாற்றங்களையும் செங்கீரை, சப்பாணி வருகைப் பருவங்களில் வரலாற்று நிகழ்வுகளை இணைத்தும் ஊசல், நீராடற் பருவங்களில் பாடும் பொருண்மைகளில் சில புதுமைகளையும் இணைத்துப் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.
அடிக்குறிப்பு
1. இளம்பூரணர் (உ.ஆ), தொல் (புறத்) நூ. 24
2. குலாம் முகம்மது. மு, இஸ்லாம் ஓர் அறிமுகம் (பாகம்.1), ப. 1
3. புவனேஸ்வரி. வெ., 20-ம் நூற்றாண்டில் பிள்ளைத்தமிழ் நூல்கள், ப. 11
4. மீரான் சாஹிபு, பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ், முத். 1
5. ஷெரிப்.கா.மு., ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், அம்பு. 9
6. ஆறுமுகநாவலர், நன்னூல் (காண்டிகையுரை), நூ. 462
7. ஷெரிப்.கா.மு., ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ், ஊசல். 3
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|