ஆற்றுப்படை காட்டும் தமிழர் பழக்க வழக்கங்கள்
முனைவர் கா. ஸ்ரீதர்
தமிழரின் மரபையும் தொன்மையையும் அறிவதற்கான வரலாற்றுச் சான்றாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் ஆற்றுப்படை இலக்கியங்கள், ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற பரந்துபட்ட மனத்துடன் வாழ்ந்த பழந்தமிழனை அடையாளம் காட்டுவதாய் உள்ளன. அறிவியல் வளர்ச்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மேற்கத்தியத் தாக்கம் போன்றவற்றால் தமிழரின் தனித்துவமான அடையாளங்களை இழந்தும், மறந்தும், தவிர்த்தும் வரும் நிலையில் சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் அன்றும் இன்றும் என்ற பொருண்மையிலான சிந்தனை ‘காலத்தின் கட்டாயம்’ என்றே கூறலாம்.
ஆற்றுப்படை இலக்கியம்
பத்துப்பாட்டில் பெரும்பான்மை பெற்றதாக ‘ஆற்றுப்படை’ இலக்கியங்கள் உள்ளன. ‘பகிர்ந்து உண்டு பல்லுயிர் ஓம்புவோம்’ என்ற கோட்பாட்டைத் தமிழன் பேச்சளவில் அன்றி, வாழ்க்கையில் பின்பற்றி செயல்படுத்தியவன் ஆவான். பொருளின்றி வாடும் வறுமை நிலையிலும் பொருளின்றி வறுமையில் வாடுபவனிடம் பரிவோடு பேசி, தக்க வள்ளலையும் மன்னனையும் குறிப்பிட்டு அவரிடம் சென்றால் உனது வறுமை தீரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறவனாகப் பரிசு பெற்றவன் இருந்திருக்கிறான் என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
தன்னையொத்த சகக் கலைஞனிடம் பொறாமை கொள்ளாமல் அன்பு கொண்டு தானாகவே சென்று பரிசில் கிடைக்கும் இடத்தைக் கூறி, போக வழியும் சொல்லும் பண்பாடும், தான் பெற்ற செல்வத்தைப் பிறரது பசியைத் தீர்க்கக் கொடுத்து உதவும் ஈகையையும் காண்கையில் இவர்கள் வள்ளல்களை விட ஒரு வகையில் மேலும் உயர்ந்தவர்கள்; மேன்மைமிக்கவர்கள் என்ற எண்ணத்தை எழச் செய்கிறது.
பழக்கவழக்கங்கள்
‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று மன்னிடம் கூறும் அளவிற்குத் தன்மானம் வாய்க்கப் பெற்றவர்களாக அக்காலப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இத்தகைய மாண்புமிக்க புலவர்களின் இலக்கியப் பதிவில் இடம் பெற்றுள்ள அக்காலத் தமிழர்களின் பழக்க வழக்கங்களைத் தற்பொழுது மறுவாசிப்பு செய்கையில் நிகழ்காலத்திலும் பழக்கத்தில் உள்ள பழங்காலத்தவர்களின் பண்பட்ட செயல்களை அடையாளம் காண முடியும்.
ஒருவரது செயல்பாட்டிலோ அல்லது பின்பற்றலிலோ தொடர்ந்து இருக்கும் ஒன்றைப் பழக்கம் எனலாம். ஒரு கூட்டத்தினர்; ஊரார்; சமூகத்தினர் என குறுகிய வட்டத்தினரின் பின்பற்றலில் இருப்பதை வழக்கம் எனலாம். பெருத்த கூட்டத்தினரின் தொடர்ந்த மற்றும் நெடுங்காலப் பின்பற்றலுக்குரிய செயலைப் பண்பாடு என வரையறுக்கலாம்.
புரவலர்களும் கலைஞர்களும்
‘மக்களைக் காப்பதே கடமை’ என்பதை மனத்தே கொண்டு செயல்படக் கூடியவர்களாக அக்கால மன்னர்களும் நிலக்கிழார்களும் இருந்ததைப் புறநானூறு, பதிற்றுப்பத்து வாயிலாக அறியலாம். அதேபோல் புலவர்களும் கலைஞர்களும் புலன்களாகிய அறிவில் அழுக்கு இல்லாத சான்றோர்களாக வளர்ந்திருக்கின்றனர். பண்புகளால் உயர்ந்தவர்களை மட்டுமே பாராட்டுவதும், பெற்ற பரிசில் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதும் வியக்கத்தக்கதாகும். அக்காலப் புரவலர்களிடம் பரிசு பெற்றுத் திரும்பும் கலைஞன், ஒரு சிற்றரசனிடம் படைகளோடு சென்று அவன் செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பெரிய மன்னனைப் போன்று காட்சியளிப்பதாய் இலக்கியப் பதிவு உள்ளது.
கலைஞனைப் போற்றல்
‘வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள்’ என்ற அடைமொழி 21ஆம் நூற்றாண்டிலும்; புழக்கத்தில் நிலைத்ததன் வாயிலாக விருந்தினரை அக்காலப் புரவலர்கள் எங்ஙனம் போற்றிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். புரவலன் பொருள் வேண்டி வந்த கலைஞனைக் கண்ணால் பருகி, அண்மையில் அமரச் செய்து, ஊனை வெறுக்கும் அளவிற்கு உண்ணச் செய்து, புத்தாடை வழங்கியதை ஆற்றுப்படை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
“விளங்கு பொற் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி” (சிறுபாண். 244-245)
“ஈற்றுஆ விருப்பின் போற்றுடி நோக்கிலும்
கையது கேளா அளவை” (பொருநர். 151-152)
“பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க என
பூக்கமல் தேறல் வாக்குழ தரத்தர
வைகல் வைகல் கைவி பருகி” (பொருநர் 156-157)
“மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”(பெரும்பாண்.478-479)
மேற்கண்ட ஆற்றுப்படை வரிகளின் வாயிலாகப் புரவலன் கலைஞனை முகமலர்ச்சியுடன் வரவேற்று, அருகிலேயே அமர்ந்து பரிமாறியதோடு, ஊட்டி விடவும் துணிகிறான். கலைஞனே, ‘போதும் போதும்’ என்று கூறும் அளவிற்கும் பல்லின் கூர்மை மழுங்கும் அளவிற்கும் புரவலன் விருந்து அளித்து மகிழ்ந்ததை அறிய முடிகிறது.
இதன் நீட்சியாக, மரபாக இன்றும் தமிழகத்தில் விருந்தினருக்கும், யாசகம் கேட்போருக்கும் அருகிலேயே அமர்ந்து அவர்களின் முகம் மகிழ்வு கொள்ளும் வகையில் உணவு பரிமாறுவதைக் காணலாம். விரும்பும் உணவுப் பொருளை அதிகம் வைத்தும், தவிர்க்கும் பொருளை விடுத்தும் பரிமாறுவதே விருந்தளிப்பின் மரபாக இருப்பது பழந்தமிழனின் விழுமியமாகவும் எச்சமாகவும் கருதலாம்.
உணவு முறைகள்
பொதுவாக உயிரினங்களின் உணவு முறையானது நிலம் சார்ந்ததாகவும், உடல், தட்பவெப்பம் மற்றும் தொழில் சார்ந்ததாகவும் அமைந்திருக்கும். தனித்து வாழும் ஆற்றலின்றி கூடி வாழும் சமூகப்பிராணியான மனிதனின் உணவுப் பழக்கமும் அவ்வாறேயாகும். பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் காய்கறியையும் சற்று உயர்வாக இருந்தாலும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் திருவிழா மற்றும் இல்லத்து விழாக்களின் பொழுது மாமிசத்தையும் உணவாக உட்கொள்வது வழக்கமாகும்.
ஆற்றுப்படை நூல்களின் வாயிலாகப் புளியங்கறி, கருவாடு, நெல், வரகு, தினைச்சோறு, வீட்டில் வளர்க்கப்பட்ட கோழி, சுட்டமீன், இறைச்சி, நண்டுக் கலவை, மாதுளங்காய் மற்றும் மாவடு ஊறுகாய் போன்றவற்றைத் தமிழன் உணவாக உட்கொண்டதை அறிய முடிகின்றது.
“வாராது அட்டவாடு ஊன், புழுக்கல்” (பெரும்பாண். 100)
“குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி…
அவரை வான்புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவீர்” (பெரும்பாண் 193-194)
என்ற பாடல் வரிகள் இன்றும் உணவுப் பழக்கத்தில் உள்ள கருவாடு, வரகுச்சோறு, பருப்புக் குழம்பு போன்றவை அன்றைக்கும் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
போக்குவரத்துக் காவல்
சாலைப் போக்குவரத்திற்குச் சுங்கவரி வசூல் செய்யும் முறை சங்க காலத்திலேயே இருந்ததை,
“அணர்ச் செவி; கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்” (பெரும்பாண். 80-82)
என்ற பெரும்பாணாற்றுப்படை வரிகள் வாயிலாக அறியலாம். மேலும் சுங்கப் பொருள் பெறும் இடத்தையும், இடம்பெயரும் விற்பனைப் பொருட்களையும் பாதுகாக்கும் பொருட்டு வில் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. தற்பொழுது ‘நெடுஞ்சாலைக் காவல்’(Highway Patrol) என்று எழுதப்பட்ட வாகனத்தில் காவல் துறையினர் நெடுஞ்சாலையில் திருட்டு, கடத்தல், கொள்ளை, விபத்து போன்றவை நடைபெறா வண்ணம் காத்து வணிகர்களும், மக்களும் பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்றனர். இந்நடைமுறை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது என்பது வியப்பளிப்பதாகவே உள்ளது.
காவல் காத்தல்
‘சங்க காலம் ஒரு பொற்காலம்’ என்ற சொல்லடையை இலக்கிய வரலாற்றில் பரவலாகக் காணலாம். ஆனால் அக்காலத்தில் வீடு மற்றும் உடைமைகளைக் காக்கும் பொருட்டு வாழ்விடங்களைச் சுற்றி வேலி அமைத்து இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை வழி அறியலாம்.
“... ... ... முன்உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்” (பெரும்பாண்.184-1485)
என்ற வரிகள் மூலம் அக்கால மக்கள் முள்ளுடைய மரங்களை வரிசையாக வளர்த்து வேலி போன்று அமைத்திருந்ததை அறியலாம். இன்றும் கிராமம் மட்டுமின்றி நகரங்களிலும் முட்செடிகளை வேலி போன்று வீடு மற்றும் வயல்வெளியைச் சுற்றி வளர்ப்பதைக் காணலாம். வீடு மற்றும் விளைச்சல் நிலங்களைக் காவல் காப்பதற்கு ஆங்காங்கே நாய்கள் கட்டப்பட்டிருந்தையும், “தொடர்நாய் யாத்த துன்அருங் கடிநகர்” என்ற பாடல் வரிமூலம் அறியலாம். மேலும், மனிதனின் அடிப்படைத் தேவையான நீர் நிலைகளைக் காவல் காப்பதற்கு வீரர்களை நிறுத்தியதையும்,
“கோடை நீடினும் முறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடிவயிற் சேப்பின்”
என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
கைக்குற்றல் அரிசி
இயந்திர மயமாகிவிட்ட இக்காலத்தில் ‘நெல்’ ஆலைகளில் இயந்திரங்களின் மூலம் பதப்படுத்தப்பட்டு, அரிசியாகி மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. அரிசியின் முனைகளில் தான் நல்ல சத்து இருக்கிறது. இயந்திரங்களுக்குள் நெல் சுழலும் பொழுது அவை மழுங்கடிங்கப்படுகிறது. அதனால் இன்றும் சிலர் உரலில் உலக்கை கொண்டு கையால் முற்றிய நெல்லில் சமையல் செய்து உண்பதைக் காணலாம். இவ்வழக்கமும் பழங்காலத்தில் இருந்ததை,
“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”
என்ற ஆற்றுப்படை வரி மூலம் அறியலாம்.
முடிவுரை
சமூகப் பிராணியான மனிதன் ‘போலச் செய்தல்’ பண்பிற்கு உட்பட்டவன் ஆவான். பழங்காலத் தமிழனின் பழக்கத்தில் இருந்த பல செயல்பாடுகள், செயல் முறைகள் அறிவியல் வளர்ச்சி கண்ட நிலையிலும் நாகரீகம் மேன்மை கண்ட பின்னும் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இது பழங்காலத் தமிழனின் பண்பட்ட வாழ்க்கை முறையையே பறைசாற்றுவதாய் உள்ளது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.