அத்துச்சாரியை
சு. வினோதா
முன்னுரை
தொல்காப்பியர் வரையறுத்துள்ள சாரியைகளுள் மூன்றாவதாக இடம்பெறுவது அத்துச்சாரியை. அத்துச்சாரியை பெரும்பான்மை மகர ஈற்றுச் சொற்களை அடுத்துத் தோன்றுகின்றது. அத்துச்சாரியை சில குறிப்பிட்ட சொற்கள், மற்றும் குறிப்பிட்ட ஈறுகளை அடுத்துத் தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்தாகும். மேலும் அத்துச் சாரியை வேற்றுமை உருபுகளோடு புணரும் தன்மைகளையும் பிற சொற்களோடு அவை புணரும் போது ஏற்படும் மாற்றங்களையும் பிற சாரியைகளோடு இணைந்து வரும் தன்மைகளையும் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். அவ்வாறு அத்துச் சாரியை தோன்றும் சூழல், புணரும் தன்மை, உறும் மாற்றங்களாகத் தொல்காப்பியர் வரையறுத்துள்ள செய்திகளை ஆராய்வதாக இப்பகுதி அமைகின்றது.
அத்துச் சாரியையின் இடங்களும் உறும் மாற்றங்களும்
அத்துச் சாரியை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியர் சில ஈறுகளையும் பெயர்களையும் வரையறுத்துள்ளார்.
* மகர ஈற்றுச் சொற்களை அடுத்தும்
* அழன், புழன், கலம் என்னும் அளவுப் பெயர்கள், மகப்பெயர், ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர், நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள் என்னும் பெயர்கள் நாட்பெயர்கள் ஆகிய பெயர்ச்சொற்களை அடுத்தும்
* மகர ஈற்றுச் சொற்கள், அ, ஆ என்னும் ஈற்றையுடைய மரப்பெயர்ச்சொற்கள் ஆகிய ஈற்றுச் சொற்களை அடுத்தும் அத்துசாரியை தோன்றும் என்பது தொல்காப்பியரது கருத்தாகும்.
அத்துச்சாரியையின் செயல்பாடுகள்
அத்துச்சாரியை, ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன.
* வரையறுக்கப்பட்ட பெயர்கள்
* வரையறுக்கப்பட்ட ஈறுகள்
* பிற சாரியைகளோடு இணைந்து வரல்
* உருபுகளொடு இணைந்து செயல்படல்
* புணர்ச்சியின் போது உறும் மாற்றங்கள்
என்னும் ஐந்து நிலைகளில் அத்துச் சாரியை செயல்படுவதைத் தொல்காப்பிய விதிகள் உணர்த்துகின்றன.
வரையறுக்கப்பட்ட பெயர்கள்
அழன், புழன், என்னும் பெயர்கள் கலம் என்னும் அளவுப் பெயர், மகப்பெயர், ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர், நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள் என்னும் பெயர்கள் நாட்பெயர்கள் ஆகிய பெயர்ச்சொற்களை அடுத்து அத்துச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பியரது கருத்தாகும்.
‘அழன் புழன்’ என்னும் சொற்களை அடுத்து அத்துச்சாரியை அல்லது ‘இன்’ சாரியை தோன்றும்.
“அழனே புழனே ஆயிரு மொழிக்கும்
அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்தது என்ப உணரு மோரே” (தொல் -எழு-உரு-194)
என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.
அழன் + ஐ , அழன் + அத்து+ஐ = அழத்தை
புழன் + ஐ , புழன் +அத்து+ஐ = புழத்தை
என்னும் சொற்புணர்ச்சி அழன், புழன் என்னும் சொற்களை அடுத்து ஐ என்னும் வேற்றுமை உருபு தோன்றும் போது இரண்டையும் இணைத்து ஒலிப்பதற்கு எளிமையாக அத்துச் சாரியை தோன்றுவதனைக் காட்டுகின்றது.
‘மக’ என்னும் பெயர்ச்சொல்லை அடுத்து ‘இன்’ சாரியை அல்லது ‘அத்து’ச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதியாகும்.
“மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை” (தொல் -எழு-உரு-219)
“அத்து அவண் வரினும் வரைநிலை இன்றே” (தொல் -எழு-உரு-220)
என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.
மக +கை , மக+அத்து+கை = மகத்துக்கை
என்னும் சொற் புணர்ச்சி ‘மக’ என்னும் சொல், கை என்னும் சொல்லோடு புணரும் போது அவ்விரண்டையும் இணைத்து ஒலிக்க இடையில் அத்துச் சாரியை தோனறுவதனைக் காட்டுகின்றது.
‘ஆயிரம்’ என்னும் மகர ஈற்று எண்ணுப்பெயரை அடுத்து வேறு எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதி
“அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
ஒத்த எண்ணும் முன்வரு காலை” (தொல் -எழு- புள்ளி மயங் -219)
என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.
அந்த ஆயிரம் என்னும் சொல் அடையொடு தோன்றினும் அத்துச் சாரியை தோன்றும் நிலையில் எவ்வித வேறுபாடும் இருக்காது.
(தொல் -எழு- புள்ளி மயங் -220)
பதின் +ஆயிரம்+ஒன்று , பதினாயிரம் +அத்து+ ஒன்று = பதினாயிரத்தொன்று
என்னும் சொற் புணர்ச்சி ஆயிரம் என்னும் சொல் அடையொடு தோன்றி, பிற எண்களுடன் புணரும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும் அமைப்பிற்குச் சான்றாகின்றது.
இயற்கைப் பொருள்களைக் குறிக்கும் நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள், என்னும் பெயர்களையும் நாட்பெயர்களையும் அடுத்து அத்துச்சாரியை தோன்றும் என்பது தொல்காப்பிய விதியாகும். இவற்றுள் பனி, வளி, மழை, ஆகிய சொற்கள் அத்துச் சாரியை அல்லது இன் சாரியை பெற்றுப் புணரும்.
(தொல் -எழு-229, 242, 243, 288, 306, 378, 403, 332)
* பனியிற் கொண்டான்; பனியத்துக் கொண்டான்
* நிலாத்துக் கொண்டான்
* மழையிற் கொண்டான்; மழையத்துக் கொண்டான்
* வளியிற் கொண்டான்; வளியத்துக் கொண்டான்
* மழையத்துக் கொண்டான்
* விண்ணத்துக் கொட்கும்
* வெயிலத்துக் கொட்கும்
* இருளத்துக் கொட்கும்
* மகத்தாற் கொண்டான்
ஆகிய சொற்கள் இடையில் அத்துச் சாரியை பெற்றுப் புணர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.
இகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் ஆன் சாரியை பெற்றுப் புணரும்.
“நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆனிடை வருதல் ஐயமின்றே” (தொல் -எழு- உயிர். மயங் -248)
அதைப் போல மகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் அத்துச் சாரியையம் ஆன் சாரியையும் பெற்றுப் புணரும் என்பது தொல்காப்பிய விதியாகும். இதனை
“நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்றே
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்” (தொல் -எழு- புள்ளி.மயங் -332)
மகர ஈற்று நாட்பெயர்ச்சொற்கள் அத்துச் சாரியையும் ஆன் சாரியையும் பெற்றுப் புணரும் போது நாட்பெயரின் மகர ஈறு கெடும். இதனை
மகம் + கொண்டான் > மகம் +அத்து+ஆன்+கொண்டான் = மகத்தாற் கொண்டான்
என்னும் சான்று உணர்த்துகின்றது. மேற்கண்ட செய்திகளில் அத்துச் சாரியை அல்லது இன் சாரியை , அத்துச் சாரியை அல்லது ஆன் சாரியை என்று ஒரு சாரியைக்குப் பதிலாக இன்னொரு சாரியை இடம்பெறுவதே புணர்ச்சி அமைப்பாக இருந்தது. ஆனால் மகர ஈற்று நாட்பெயர்ச்சொற் புணர்ச்சிகளில் அத்துச் சாரியையும், ஆன் சாரியையும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது. எனவே, இங்கு இடம்பெறும் ஆன்- சாரியையா? அல்லது மூன்றாம் வேற்றுமை உருபா? ஏன்ற வினா எழுகின்றது. சொற் புணர்ச்சியில் பொருளற்ற இரண்டு சாரியைகள் அடுத்தடுத்து தோன்றியுள்ளது என்று கொள்வதைக் காட்டிலும், பொருள் முழுமைக்காக ஆன் வேற்றுமை உருபம் ஒலிப்பு எளிமைக்காக அத்துச் சாரியையும் தோன்றியள்ளது என்று கொள்வதே இங்கு பொருத்தமுடையது என்று கருத இடமளிக்கின்றது.
வரையறுக்கப்பட்ட ஈறுகள்
மகர ஈற்றுச் சொற்களை அடுத்து அத்துச் சாரியை தோன்றும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
“மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை” (தொல்- எழு- 186)
என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது. மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு புணரும் போது, இடையில் அத்துச் சாரியை தோன்றும். இந்நிலை மகர ஈற்றுப்பெயர்ச்சொற்களை ஒலிப்ப எளிமைக்கு உட்படுத்துவதாக அமைகின்றது.
அகர ஆகார ஈற்றையுடைய மரப்பெயர்ச்சொற்கள் கண் என்னும் ஏழாம் வேற்றுமை உருபோடு புணரும் போது இடையில் அத்துச் சாரியை தோன்றும்.
“அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு
அத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே” (தொல் - எழு- 182)
என்னும் நூற்பா அதனை உணர்த்துகின்றது.
விள + கண் , விள + அத்து+கண்; = விளவத்துக்கண்
என்னும் சொற் புணர்ச்சியில் விள+கண் = விள கண் என்று புணர்ந்தால் ஒலிப்பு இடர்ப்பாடு ஏற்படும். எனவே அவ்வொலிப்பு இடர்ப்பாட்டை நீக்க, இரண்டிற்கும் இடையில் அத்துச் சாரியை தோன்றுகின்றது.
தொகுப்புரை
* அத்துச் சாரியை மகர ஈற்றுச் சொற்களை அடுத்துப் பெரும்பான்மையாகத் தோன்றுகின்றது.
* அத்துச் சாரியை நிலா, பனி, வளி, மழை, விண், வெயில், இருள், அழன், புழன், ஆயிரம், நாட்பெயர்கள், மக என்னும் பெயர் ஆகிய சொற்களை அடுத்துத் தோன்றுகின்றது.
* அத்தும் ஆனும் அடுத்தடுத்து இடம்பெறும் சூழலில் அவ் ஆன் வடிவத்தை வேற்றுமை உருபாகக் கொள்வதே பொருத்தமுடையதாகின்றது.
* குறிப்பிட்ட ஈறுகளின் அடிப்படையிலும் பெயர்களின் அடிப்படையிலும் அத்துச் சாரியை வரையறுக்கப்பட்டதைக் கொண்டு ஒலிப்ப எளிமைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தன்மையை அறிய முடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.