இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

புறத்துறையில் பாணர்கள்

ச. பாலசுப்பிரமணியன்


சங்க இலக்கியங்கள் தன்னுள் பல்வேறுபட்ட கருத்தாக்கங்களையும் பண்டைய தமிழரின் வாழ்வியல் கூறுகளையும் தன்னகத்தேக் கொண்டது. சங்க இலக்கியங்கள் ஒரே நாளில் ஒருவரால் முகிழ்ந்ததன்று. வாய்மொழி மரபினரால் தோற்றம் பெற்று, புலவர் மரபுகளால் போற்றிப் பாதுகாப்பட்டது. அவ்வாறு வாய்மொழி மரபால் உருப்பெற்ற திணை இலக்கியங்களை வாய்மொழி மரபுகளாகவே எடுத்துச் சென்று, ஐந்திணை நிலப்பரபையும் பாடித் திரிந்தவர்கள் பாண் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இசையும், பாட்டும், கூத்தும் கலந்து ஒன்றிய நிலையில் இலக்கியம் தோன்றியது. இவ்வாறு இலக்கியம் அரும்பத் தொடங்கிய காலத்தையும் வாய்மொழி மரபு இலக்கியம் தோன்றிய காலத்தையும் ‘பாணர்-பாடினியரின் காலம்’ என்று குறிப்பிடலாம். எனவே தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் பாணரின் காலந்திலிருந்தே தோன்றுகிறது என்றால் தமிழ் இலக்கியத்திலிருந்து பாணர்களின் வாழ்வியல் கூறுகளைத் தனித்துப் பார்க்க இயலாது.

பாணர் சமூகம்

சங்ககாலத்தில் பாண் சமூகம் என்பதற்குள் பல்வேறு சமூகக் குழுக்கள் இருந்தன. பாணர் தொடங்கி அகவுநர் வரை இக்குழுக்கள் ஒரு படிநிலையில் காணப்பட்டன. பாண் சமூகத்திற்கான அறிவுத் திறன், அவர் வைத்திருக்கின்ற இசைக் கருவிகள், அவருடைய சுற்றத்தாரின் எண்ணிக்கை, பாடினி, விறலி போன்ற பெண்பாற் கலைஞரின் ஆட்டத்திறம், அவருடைய புரவலர்கள் முதலிய கூறுகளை முன்வைத்து அவருடைய சமூகக் குழுவில் அவருக்கான சமூக அடுக்கமைவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

“துடிய பாண பாடுவல் விறலி” (புறம். 280)

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்” (தொல். பாடாண். 28)

என்ற அடிகள் பாண் சமூகத்தாரின் துல்லியமான வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.

சங்ககாலப் பாண் சமூகத்தார் மிகவும் விரிவான சமூக அமைப்புக்குரியவர்கள. அவர்கள் பல்வேறு வகையான தொழில்களைச் செய்து வந்தனர். அவர்களுக்குள் தொழிற்பகுப்பும் படிநிலைகளும் தனித்த அடையாளங்களும் இருந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் அவர்கள் தொழில் செய்து வந்தனர். சங்ககாலத்தில் எண்ணற்ற ஊர்சுற்றும் கலைஞர்கள் வெவ்வேறு பணிகளைச் செய்து வந்தார்கள். அவர்களில் பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அயவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், குறுங்கூளியர், நகைவர், அகவலன், அகவர், இயவர் போன்றோர் முக்கிய மானவர்களாக இருந்தனர். அவர்கள் இசைக் கருவியாலும், பாடும் பண்முறையாலும், உத்தி முறையாலும், இன்னும் பிற வகையான வினைநுட்பங்களாலும் பாண் குடியினர் பல்வேறுபாட்ட சமூகத்தாராகக் காணப்பட்டனர் என்பதை, “பல்வேறு கலைத் தொழில்களில் ஈடுபட்ட பாண் சமூகத்தார் பாணர், கூத்தர், பொருநர், அகவுநர், இயவர், வயிரியர், கண்ணுளர் முதலான எட்டுக்கும்; மேற்பட்ட குழுக்களாக வேறுபட்டு நிற்கின்றனர். இக்கலைச் சமூகத்தாரின் வாழ்வியல் பாங்கும் பொருளாதார நிலையும் சில பொதுமைகளைக் கொண்டிருப்பதால் இவர்களைப் ‘பாண் சமூகத்தார்’ என்று சுட்டலாம். ஆனால் ஒவ்வொரு சமூகத்தாரும் தாம் செய்யும் தொழிலால் வேறுபாட்டுக் காணப்படுகின்றனர்.” என்று ராஜ்கௌதமன் குறிப்பின் மூலமாக அறியலாம்.



பொருநர்

பாணர்களில் ஒரு பிரிவினராகிய பொருநர்களில் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனும் மூவகையினர் இருந்தனர். இவர்கள் பாடிய வீரயுகக் கவிதைகளில் அந்நாட்டு வயல்வெளிகளின் சிறப்பையும் அறுவடைத் திருநாள் சிறப்பையும் அறியமுடிகின்றது. பொருநர்கள் பிறவகைக் கலைஞர்களிடமிருந்து சற்று வேறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் அரசர்களோடும் தலைவர்களோடும் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். போரிலும் அரண்மனையிலும் அரசர்களுடன் அருகில் இருந்தனர். மற்ற கலைஞர்களைவிடப் பொருநர்கள் குறைவாகவே வெளியிடங்களில் அலைந்து திரிந்துள்ளனர் என்பதை;

”கடல்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்;
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என்”
(புறம். 382)

என்ற பாடலில்,

நான் வளமான சோழநாட்டுப் பொருநன். கடலில் பகைவரை வென்று அவர்கள் கலங்கிலிருந்து கொண்டு வந்த பொருள்கள் எங்களிடம் உள்ளன. தலையணி உடைய நல்ல குதிரைகளின் தலைவனாகிய நலங்கிள்ளியின் பொருநராவோம். நாங்கள் பிறரைப் பாடுவதில்லை. பிறரிடமிருந்து பரிசில் பெறுவதில்லை. எங்கள் அரசனின் புகழை மட்டுமே நாங்கள் எப்போதும் பாடுவோம் என்று ஒரு பொருணன் கூறுவதாக புறப்பாடல் தெரிவிக்கிறது.

இயவர்

போர்க்களத்திற்குச் செல்லும் முன்னர் முரசிற்கு வழிபாடு செய்யும் முறைமையை இயவர்கள் செய்தனர். இயவர்கள் போர்க்களத்தில் ஆம்பல் பண்கொண்டு குழலில் இசைப்பார்கள் என்பதை,

“இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்
ஆம்பல்அம் குழலின் ஏங்கி”
(நற்றி. 113)

என்ற அடியும், அவ்வாறே பகைவரை வென்று கொண்டுவரும் முரசிற்குக் குருதிப் பலி கொடுத்து முதலாவதாக இசைக்கும் தகுதியையும் இயவர்கள் கொண்டிருந்தனர் என்பதை,

“மண்ணுறு முரசம் கண் பெயர்த்து, இயவர்,
கடிப்புடை வலத்தர், தொடித் தோள் ஓச்ச”
(பதிற்று. 19)

என்ற அடியும் கூறுகின்றன. மேலும், மன்னருக்கு அருகிலிருந்து இசைக் கருவிகளை இசைக்கும் தகுதியைப் பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இயவர்களின் இசை யானைகள் மூங்கிலை உடைத்துச் செல்லும் ஒலியைப் போல இருந்தது என்பதை,

“நிழத்த யானை மேய் புலம் படர,
கலித்த இயவர் இயம் தொட்டன்ன”
(மது.காஞ்சி. 303-304)

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் குறிப்பிடுகின்றன.

ஆகவே இயவர்கள் பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கும் திறனையும், முரசுக்குப் பலியிடவும், முரசு அடிக்கவும், அரசனுக்கருகில் நின்று இசைக்கவும், போர்க்களங்களில் இசைக்கவும் உரிமை பெற்றவர்களாகவும் விளங்கியுள்ளனர்.



கிணைவர்

கிணைப்பறையை இசைப்பவர்கள் கிணைவர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் கிணையர், கிணைமகள், கிணைவன் என்று சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். வள்ளல்களைப் பாடித் துயில் எழுப்பவும், போர் வீரார்களுக்கு ஊக்கமூட்டவும் இவர்கள் கிணைப்பறை அடித்தனர். மலைநிலத்தில் யானையை விரட்டக் கிணையர்கள் பறையினை முழங்கியுள்ளனர். என்பதை

“கணையர், கிணையர், கை புனை கவணர்,
விளியர், புறக்குடி ஆர்க்கும் நாட!”
(நற்றி. 108)

என்று நற்றிணை கூறுகிறது.

துடியன்

போரின் தொடக்கத்தைத் தெரிவிப்பதற்குத் துடி என்னும் கருவியை இசப்பவன் துடியன் என்றழைக்கப்பட்டான். துடியன் போர்க்களத்தில் துடியினை இசைத்து வீரர்களுக்கு வீர உணர்வு ஏற்றுபவன். துடியன், பாணன், விறலி எனப் பாண் மக்கள் ஒன்று சேர்ந்து வள்ளல்களைக் கண்டு பரிசில் பெற்றுள்ளனர். துடியன்கள் போர்க்களத்தில் மன்னனின் மார்பில் துளைத்த வேல் துடியனின் கையில் இருந்தது என்று புறநானூறு சுட்டுகிறது. இதிலிருந்து துடியர்கள் பெரிதும் போர்க்களத்தோடும் அரசர்களோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதை,

“துடியன் கையது வேலே” (புறம். 285: 2)

“உவலைக் கண்ணித் துடியன் வந்தென”(புறம். 269:6)

“சிறாஅ அவர் துடியர் பாடுவல் மகாஅ அர்” (புறம்;. 269:1)

மேற்கண்ட புறப்பாடல் மூலம் அறியலாம். முல்லை நிலத்துச் சிறப்பைப் பாடும் மாங்குடி கிழார், “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை”
(புறம். 335: 7-8)

என்று துடியன், பாணன், பறையன், கடம்பன் எனும் நான்கு தொல்குடிகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அதில் துடியனை முதலிடத்தில் வைத்துப் பேசுகின்றார். துடியன்கள் தொல்குடிகளில் ஒருவர் என்றும், மன்னர்களின் நேரடி ஆதரவைப் பெற்றவர்கள் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது.



புறத்துறையில் பாணர்களின் செயல்பாடு

பாணர்கள் முரசறைதல்

பாண் சமூகத்தின் ஒரு பிரிவினர் முரசறையும் தொழிலைச் செய்து வந்துள்ளனர். பாண் சமூகத்தார் ஒரு பிரிவினர் அக்காலத்தில் ‘முதுகுடியினர்’ என்று சிறப்பாகப் போற்றப்பட்டுள்ளனர். பாணர் இனத்தைச் சார்ந்தோர்களில் சிலர் முரசறைவேனாகவும் இருந்துள்ளனர்.

“வச்சிறக் கோட்டத்து மணங்தெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
... ... ... ... ...
முரசுககடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”
(மேகலை.விழா. 27-37)

என்று திருவிழாச் செய்தியைப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட முரசு மூலம் ஊராருக்குப் பழைய முதுகுடியைச்சேர்ந்த பறையறைவோன் தெரிவித்தான் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது.

முதுகுடியில் பிறந்த ஒருவன் குறுந்தடியால் முரசடித்துத் திருவிழாச் செய்தியை ஊராருக்கு அறிவித்தான் என இதன்மூலம் அறிகிறோம். இந்த முரசானது வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டது, இடி போன்ற முழக்கத்தைக் கொண்டது, எமனை அழைக்க வல்லது, இரத்தப்பலி கொள்கின்ற விருப்பமுடையது என மணிமேகலை வருணிக்கிறது. ஆனால் சங்க காலத்தில் நொச்சி மாலையணிந்து கொண்டு குயவர்களே தெருத்தெருவாகச் சென்று விழாச் செய்தி உரைத்ததை

“திருநாள் படைநாள் கடிநாள் என்றிப்
பெருநாட் கல்லது பிறநாட் கறையாச்
செல்வச் சேநை வள்ளுவ முதுமகன்”
(நற்றி. 200)

என்ற நற்றிணைப் பாடல் வரிகள் மூலம் அறியலாம். அரசனுடைய பிறந்தநாள், போரில் வெற்றி பெற்ற நாள், மணநாள் போன்ற பெருநாட்களை வள்ளுவப் பெருங்குடியினர் முரசறைந்து தெரிவித்துள்ளனர் என்பதைப் பெருங்கதையும் குறிப்பிடுகிறது. இவர்களும் சங்ககாலப் பாண்குடியின் வழிவந்தவர்களே ஆவர். மேற்கூறிய பாடல்களில் பாண்குடியினர் முதுகுடியினர் என்று சிறப்பிக்கப்படுவது அவர்களுடைய உயர்ந்த சமூகத் தகுதியைக் காட்டுகிறது.



நாடாளும் பாணர்கள்

பாணர்கள் ஒரு காலத்தில் நாடாளும் மன்னர்களாகவும் இருந்துள்ளனர். பாணன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு ஒன்று இருந்ததை அகநானூறு கூறுகின்றது.

“விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்”
(அகம். 113)

பாணன் நாடு தமிழகத்திற்கு வடபுலம் சார்ந்திருந்தது. அந்நாடானது பாலியாற்றின் வடகரையில் இருந்ததென்று பாண்மலை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. “பாணர் நாட்டினர் வாணர், வாணாதிராயர், வாணதரையர் எனறெல்லாம் பெயர்பெற்றுப் பின்னர் தமிழகமெங்கும் பரவியள்ளனர். இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் வல்லம் கோயிலில் இருப்பதாக இரா.இளங்குமரன் குறிப்படுகிறார்.

உறையூர் வெளியன் தித்தன் என்பான் நாட்டில் பாணன் ஒருவன் இருந்தான். கங்க நாட்டுக் கட்டி என்பான் அப்பாணனோடு மோத வந்துள்ளான். ஆனால் தித்தனும் பாணனும் கட்டிய பறையார்ப்பு, படையார்ப்பு இரண்டையும் கண்ட கட்டி தோற்று ஓடிவிட்டான் என்ற செய்தியை அகநானூறு குறிப்பிடுகிறது. இதனை,

“வலிமிகு முன்பின் பாணனொடு
மலிதார்த் தித்தன் ஆர்ப்பு”
(அகம். 226)

என்று குறிப்பிடுகின்றது.

பாணர்களின் மறத்திலும் சிறப்புற்றிருந்துள்ளனர் என்பதை,

“பாணன், மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்”
(அகம். 386)

ஆரிய நாட்டைச் சேர்ந்த பொருநன் ஒருவனும், குட்ட நாட்டைச் சேர்ந்த கணையன் ஒருவனும் ஒன்றுகூடி அப்பாணனோடு போருக்கு வந்தனர். இருவரும் பாணனிடம் தோற்றுள்ளனர் என்பதை இப்பாடல் அடிகள் காட்டுகின்றன. பாணர்கள் தம்முடைய திறனாலும் சிறப்பாலும் வேந்தாகளிடமிருந்து நாடுகளைப் பெற்றுள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளான். அந்நாட்டுத் தலைவன் வாணன் மதுரையைக் கைப்பற்றி அதனைப் பாணன் ஒருவனுக்கு வழங்கிய குறிப்பையும் கல்வெட்டுகள் வழி அறிய முடிகின்றது. இதனை,

“பொன்னி வளநாடு பாணன் பெறப் புரிந்தான்
பாணன் மதுரைப் பதியினை வைத்த பிரான்”
(பெருங். 1188-91)

என்ற பெருங்கதை வரிகளும் குறிப்பிடுகின்றன. “பாணன் என்பான் பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டில் அரசு புரிந்து வந்தான். அந்நாட்டில் பலியாற்றின் கரையில் உள்ள பெரும்பாணப்பாடியும் பாண்மலையும் அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களால் குறிக்கப்படுகின்றன. அவன் வழி வந்தோர் வாணர் எனவும், வாணாதிராயர் எனவும், வாண தரையர் எனவும் நிலவினர். வடார்க்காடு வட்டத்துத் திருவல்லம் கோயிலில் அவர்களுடைய கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. பிற்காலத்தே அவர்கள் தமிழகம் முழுவதும் பரவியிருந்தனர் வாணகோவரையர் என்பாரும் பண்டைய பாணன் வழி வந்தோரே யாவர்” என்று இளங்குமரன் குறிப்பிடுகிறார்.



பாணரும் அரசியல் பணியும்

பாண்குடியைச் சார்ந்தவர்களான காக்கையூர்ப் பாடினியான நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடமும் ஔவையார் அதியமானிடமும் அறிவுத்துறையிலும், அரசுத் துறையிலும் பணியாற்றினர் என்பதைப் பதிற்றுப் பத்தும் புறநானூறும் கூறுகின்றன. காக்கையூர்ப் பாடினியார் பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்தைப்பாடியவர். அவர் பாட்டை ஏற்று மகிழ்ந்த சேரலாதன் நச்செள்ளையார்க்கு அணிகலனுக்காக ஒன்பது காப்பொன்னும் இலட்சம் பொற்காசும் வழங்கியதோடு, தன் அரசவைப் புலவராகவும், அமைச்சராகவும் தம் பக்கத்தே இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டான். நச்செள்ளையாரும் அதற்கிசைந்து அரசியல்பணி ஆற்றி வந்தார்.

ஒருகால் சேரலாதன் ஆடுகள மகளிர் ஆடல் பாடல்களில் பெரிதும் ஈடுபட்டுக் கழிகாமத்தனாய் இருக்கக் கண்டார். அச்செயல் அவனின் அரசியல் தலைமைக்கு அவலம் விளைவிக்குமென்பதைக் கருதி ‘வேந்தே! ஒளி திகழும் நெற்றியினையும் மடப்பம் பொருந்திய பார்வையினையும், ஒளிவீசும் பற்களையும், அமுதம்போன்ற சொற்களையும், ஒசிந்து அசைந்த நடையினையும் உடைய விறலியரின் ஆடல்பாடல்களில் அளவுகடந்து ஈடுபடுகின்றாய். இதனால் ஒளி தங்கும் வேலேந்திய அண்ணலாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சிற்றின்பத்துறையில் சிக்கிக் கொள்ளும் மெலியன்போலும் என எண்ணுவர் உன்னை உணராதவர். அதனால் தீமை உண்டாகும் என்பதை நயக்கும் முறையில் நச்செள்ளையார் உணர்த்தியுள்ளார் என்ற பாடல் அடிகள்

“ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஔ இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப,
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை”
(பதிற்று. 52)

தொண்டைமான் தன்படைப் பெருமையினைத் தூது வந்த மாதிடம் காட்டினான். தம் அரசனின் மேம்பாட்டை அரசியல் விரகுடன் அயல்வேந்தனிடம் எடுத்துக் கூறிய வன்மை மிகவும் போற்றத்தக்கதாய் உள்ளது. அப்படைக் கருவிகளைக் கண்ட ஔவையார், இவை பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, அழகுபடச் செய்யப்பட்ட வலிய காம்பை உடையனவாய். நெய் பூசப்பட்டுக் காவலை உடைய கோயிலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் கருவிகளோ பகைவரைக் குத்தியதால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது ‘பணிக்களரி’ யில் எந்நாளும் கிடக்கின்றன. எம்தலைவனாகிய அதியமான் வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் (இல்லோர் ஒக்கல் தலைவன்). செல்வமுள்ள போது அனைவர்க்கும் உணவு படைத்து, இல்லையாயின் உள்ளதனைப் பலரொடு கூட உண்ணும் பண்பாளன் என நயம்படப் பேசி அவனைச் சிந்திக்கத் துhண்டினார். நிகழவிருந்த போர் கைவிடப்பட்டது. இந்நிகழ்வை

“இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
... ... ... ... ...
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.”
(புறம். 95)

என்ற புறப்பாடல் எடுத்தோதுகிறது.

சூதர் பணி

அதிகாலைப் பொழுதில் மன்னனைத் துயிலெழுப்புதல் பணியைப் பாணர்களில் ஒரு சாராராகிய சூதர்கள் செய்துவந்துள்ளனர். இதனை,

“தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்”
(தொல். புறத். 36)

என்னும் நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் உணர்த்துகிறார். “தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்” என்று இளம்பூரணர் விளக்கம் தருகிறார். நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல, வைதாளிகர் தத்தம் துறைக்குரியனவற்றை இசைப்ப, நாழிகை சொல்வார் நாழிகை சொல்ல, ஒலிக்கின்ற பள்ளியெழுச்சி முரசு ஒலிப்ப மன்னர் காலையில் எழுவர் என்பதை மாங்குடி மருதனாரும்,

“சூதர் வாழ்த்த மாகதர் நுவ
வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முர சிரங்க... ... ...”
(மது.காஞ்சி. 670-72)

என்ற வரிகளில் குறிப்பிட்டுள்ளார். ஊறையூர் முதுகண்ணன் சாத்தனார், சோழவேள் தன் நலங் கிள்ளியைப் பாராட்டிய போது

“வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து,
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்குபுறம்”
(புறம். 29)

“அரசே நாட்காலை மகிழ்ந்திருக்கும் நினது திருவோலக்கத்தைப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூச்சூடிய பாண் மகனும் பொன்னரிமாலை அணிந்த விறலியுமாகிய பாண் சுற்றம் சூழ்க! பின்பு நின் சந்தனம் பூசிய மார்பினை நின் உரிமை மகளிர் தோள் சூழ்க” என்று புறநானூறு சுட்டுகிறது.

எனவே, அதிகாலையில் மன்னனைத் துயில் எழுப்பும் பணியை பாணர் இனத்தைச் சார்ந்த சூதர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது அறியப்படுகிறது.



மறத்துறையிலும் பாணர்கள்

போருக்குச் செல்லும் முன்பாக துடியன், துடிப்பறையைக் கொட்டி அனைவரையும் போருக்கு அழைக்கும் பொறுப்பு அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. துடியன், பசியதழையை விரவித் தொடுத்த கண்ணியைச் சூடித் துடியைக் கொட்டி வெட்சிப் போர்க்கு எழுதல் வேண்டுமென்று தெரிவிப்பது வழக்கம் என்று தொல்காப்பியர் கூறுகிறார். இதனை,

“மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே!”
(புற.வெண்.கரந்தை. 19)

என்ற நூற்பாவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிரை கொள்ளுதற்கும் நிரை மீட்டற்கும் துடிகொட்டிச் செல்லுதல் வழக்கம் என்பதை,

“முந்தை முதல்வர் துடிய ரிவன்முதல்வர்
எந்தைக்குத் தந்தை யிவனெனக்கு - வந்த
குடியொடு கோடா மரபினோற் கின்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.”
(புற.வெண்.கரந்தை. 24)

என்று புறப்பொருள் வெண்பாமாலை இயம்புகிறது.

அது மட்டுமன்றி, நிரை கவரும் போதும்; தோற்றவர்க்கு வெற்றி வேண்டியும், வென்றோர்க்கு மீண்டும் செல்லும் போது வெற்றி வேண்டியும், கொற்றவைக்குக் குருதிப்பலி கொடுத்து வழிபாடு செய்துள்ளனர். அப்போது பாடினி பாடுவதுண்டு என்பதை,

“ஆடிப்பண் பாடி அளவின்றிக் கொற்றவை
பாடினி பாடல் படுத்துவந்தாள் - நாடிய
தோளுழலை ஆடுவோன் தோளிலும் தூக்கமைந்த
தாளிழலை ஆடுவோன் தான்.”
(புற.வெண். தும்பை. 27)

என்று புறப்பொருள் வெண்பாமாலை இயம்புகிறது.

பாணர்களில் பலர் நேரடியாக மறத்துறையிலும் மாண்புற்று விளங்கியுள்ளனர். மற்போர் செய்வதில் வல்லமை பெற்ற பாணன் ஒருவன் பண்டைக்காலத்தில் இருந்தான் என்பது அகப்பாடலில் பரணர் குறிப்பிட்டுள்ளார். ஆற்றலும் வலிமையும் உடைய பாணன் என்பானொடு போர் உடற்றும் வல்லமை உடைய கட்டி என்பான், தித்தன் வெளியன் என்பானின் உறையூரிலுள்ள நாளோலக்கத்தின்கண்ணே மற்போர் புரிதற்கு வந்தான். அப்போது அங்கு ஒலித்த தெளிவான கிணையினது இனிய ஓசையைக் கேட்டுப் பாணனது பெருமையை உணர்ந்து அஞ்சிப் போர் செய்யாது ஓடினான். இதைக் கண்ட மக்கள் பேராரவாரம் செய்தனர். என்பதை,

“நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன்
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்”
(அகம். 386)

‘இப்பாணன், ஆரியப் பொருநன் ஒருவனுடன் மற்போர் புரிந்த ஞான்று, பொருநனது முழவு போன்ற திரண்ட தோள்கள் அப்பாணனது கையில் அகப்பட்டுத் திறன் ஒழிந்து கிடந்த கிடக்கையைப் பார்த்த, போரில் வல்ல கணையன் என்பான் நாணியது போல, மறைந்து மெல்ல வந்து முகமன் கூறி, ‘கரிய பெரிய கூந்தலை உடையளே, யானும் நின் சேரியில் உள்ளவளே! உனக்குத் தங்கையாவேன் என்று சொல்லி மோதிரம் அணிந்த தன் மெல்லிய விரலால் என் நெற்றியையும் கூந்தலையும் தடவிப் பகலில் வந்து மீண்ட நின் பரத்தையைக் கண்டு யான் நாணினேன்.’ எனத் தோழி கூற்றாக அமைந்துள்ள மற்றொரு பாட்டினும் பாணர்கள் போர்த் தொழிலிலும் வன்மை பெற்று வாழ்ந்தனர் என்பதை அறியலாம்.



போர்க்களம் பாடும் பாணர்

பாணர்களில் சிலர் அரசுத்துறையில் பணிபுரிவதோடு மன்னர்கள் போருக்குச் செல்லும் போது, தானும் அவர்களோடு போர்க்களம் சென்று போர் நிகழ்வுகளைப் பாடுவதைத் தம் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனை, புறப்பொருள் வெண்பாமாலையில் தும்பைப் படலத்தில் ‘பாண்பாட்டு’ என்னும் துறையில் விரிவாகப் பேசுகிறது.

“வெண் கோட்ட களிறெறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல் யாழ்பாணர் கடனிறுத் தன்று”
(புற.வெண்.தும்பை.5)

வெண்மையான கொம்பினை உடைய யானையை எறிந்து பறந்தலையில் பட்டார்க்கு யாழ் வாசிக்கும் கைத்தொழிலில் வல்ல பாணர் உரிமை செய்தது என்று பொருள் விளக்கம் தருகிறது.

போர்க்களம் சென்று, போர் நிகழும் போது, அதைப் பார்த்த வண்ணம் அந்நிகழ்ச்சிகளைப் பாணர் பாடுவதை, ‘தலைவன் தண்ணளி செய்த நாட்கள் மிகச் சிலவேயாகும். ஆயினும் ஊரவர் அலரோ விற்களைக் கொண்ட படைகளை உடைய விச்சியர்களுக்குத் தலைவன் வேந்தரொடு பொருத காலத்தில் பாணர் சிங்க நோக்குப் போல் இரு படைகளையும் பார்த்துப் பாடிய தன்மை, ஆரவாரம் மிக்க குறும்பூரில் உள்ளார் செய்த முழக்கத்தினும் பெரிய முழக்கத்தை உடையதாயிற்று என்று குறுந்தொகையில் பரணர் குறிப்பிட்டுள்ளார்.

போர் முனையில் வெற்றி கொண்டு வாகை சூடிய மன்னன் வரும்போது, அவன் தேரின் முன்னும் பின்னும் ஆடல் பாடல் வல்ல வீர மகளிர் அவன் வெற்றியைப் பாடிப் புகழ்தலும், கூத்தாடுவதை மரபாகக் கொண்டுள்ளனர். அவ்வாறே, அரசன் படையெடுத்துப் போகும் போது, பாடினி படையெடுப்பைப் பாடுவதும், அரசன் பாசறையில் தங்கி இருக்கும் போதும் பாடினி அவன் வேற்படையைப் புகழ்ந்து பாடுதலும் உண்டு. இதனை,

“உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
நிலவின் அன்ன வௌ; வேல் பாடினி”
(பதிற்று. 61)

என்ற பாடல் அடிகளில் காணலாம்.

மேலும் போர்க்களத்தில் புண்பட்டுத் துன்புறும் வீரர்களுக்கு இசைபாடி அத்துன்பத்தை மறக்கும் படியும் செய்தனர். போரில் உடலில் புண், ஏற்பட்டால் அதனை உண்ணப் பேய்கள் வரும் என்றும் அவற்றை விரட்டக் காஞ்சிப்பண்ணைப் பாடி யாழையும் குழலையும் பாணர்கள் இசைத்தார்கள் என்பதை,

“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக்
... ... ... ... ...
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலங் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!”
(புறம். 282)

என்ற புறப்பாட்டு கூறுகிறது.



பாணர்கள் நிலைக்குடிகளுடன் கொண்டிருந்த தொடர்பு

பாணர்கள் நிலைகுடிகளிடமும், கிழார்களிடமும், குறுநில மன்னர்களிடமும், வேந்தர்களிடமும் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். பாண் சமூகத்தினர் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களைக் காட்டிலும் குறுநில மன்னர்களையும், சீறூர்த் தலைவர்களையும், ஊர்க் கிழார்களையுமே மிகுதியாக நாடியுள்ளனர். சீறூர் மன்னர்கள் வன்புலச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏறக்குறைய அனைத்து வல்லாண்முல்லைப் பாடல்களும் சீறூர் மன்னர்களைப் பற்றியே பாடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் வழி வனபுலச் சமுகாயத்தின் வாழ்க்கை முறையை அறியமுடிகிறது. பாணர்கள் கானவர், குறவர், கொடிச்சியர், எயினர் போன்ற பல வன்புலச் சமூகத்தாரின் வாழ்விடங்கள் வழியாகச் செல்லும்போது அவர்களிடம் உண்டு உறங்கியிருக்கிறார்கள் என்பதை,

“எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ் ஞிணம் பெருத்த பசு வௌ; அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்”
(புறம். 177)

என்ற புறநானூற்று அடிகள் தெரிவிக்கின்றன.

“சங்ககாலத்துச் சமூக முறையைப் பார்க்கும் பொழுது பாண் சமூகத்தார் சங்கச் சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டார்கள். அரசவையானாலும், அகத்துறையானலும், பாசறையானலும், பரத்தையர் இல்லமானாலும் எல்லாத் திசைகளிலும் எல்லா இடங்களிலும் இவர்கள் நீக்கமற இடம் பெற்றிருந்தார்கள்.” என்று பழனிவேல் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், பாணர்கள் தம் நாட்டு மன்னர்களோடு நெருங்கி செயல்பட்டுள்ளனர். அவர்களுக்காக அரசியல் தூதுவராகவும் இருந்துள்ளனர். இதனை ஔவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற நிகழ்வு உறுதிபடுத்துகிறது.

முடிவுரை

பாணர் சமூகத்தினர் கலைசேவை புரியும் கலைஞர்களாக மட்டுமின்றி, சங்ககால அரசியலிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அரசியலில் அவர்களின் பங்கும் பணியும் மகத்தானது. அரசனை நேராகச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர்களாக அவர்கள் இருந்தமையால் அரசருக்கு அறிவுறுத்தும் பணியை அவர்களால் எளிமையாக செய்ய முடிந்தது. மேலும், அவர்கள் அரசர்களின் வெற்றியை தம் வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்ததோடு, அவர்களின் இறப்பையும் தாழ முடியாது வருந்த சூழலாக இருந்தமையைச் சங்க இலக்கிய பதிவுகள் காட்டுகின்றன. பாணர்களில் பெண்ணியக் கலைஞர்களும் சிறந்த இடத்தைப் பெற்று வந்துள்ளனர். அவர்கள் மன்னர்களின் ஆட்சிப் பீடத்தில் அருகாமையில் இருக்கும் பேற்றையும் மன்னர்களை அறிவுறுத்தும் பணியிலும், தூது செல்லும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையாகாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p140.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License