நற்றிணை உவமைகள் புலப்படுத்தும் துன்ப மனநிலை
பெ. ஆனந்தி
எட்டுத்தொகை நூல்களுள் சிறப்பு பெற்றது நற்றிணை. இந்நூலில் வரப்பெறும் உவமைகள் வாழ்த்தல், இடித்துரைத்தல், தொழில், அரசியல், நம்பிக்கை போன்ற பல கருத்துப் புலப்பாடுகளுக்கு உதவி நிற்கின்றன. நற்றிணையில் வரப்பெறும் உவமைகள் தலைவன், தலைவி, தோழி, தாயின் துன்ப மனநிலையையும் வெளிப்படுத்துகின்றன.
1. பிரிவுத்துயர்
2. வரைவு வேண்டல்
3. வருவழி ஏதம் கூறல்
4. அலர் தூற்றல்
5. இற்செறிப்பு
முதலான பல துயர நிலைகளையும் நற்றிணை உவமைகள் புலப்படுத்தியுள்ளன. “கவித்துவ உண்மையை நன்கு முற்றும் தெரிந்ததற்கே உவமைகள் கையாளப்படுதல் வேண்டும்” என்ற எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கொள்கைக்கு ஏற்ப நற்றிணையின் உவமைகளும் பொருட் புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
1. பிரிவுத் துயர்
சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படுவது பிரிவுத் துயராகும். அவ்வகையில் நற்றிணையின் உவமைகளின் வழி
1. பொருள்வயிற் பிரிவு
2. பரத்தையற் பிரிவு
3. களவு காலப் பிரிவு
ஆகிய மூன்று வகைப் பிரிவுகளையும் குறித்து அறிய முடிகிறது.
1.1 பொருள்வயிற் பிரிவு உணர்த்தும் உவமைகள்
பொருள்தேடிப் பிரிந்திருந்த வேளையில் தலைவனும் தலைவியும் படும் துயரினைப் பல உவமைகள் விளக்கி நிற்கின்றன.
“ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே” (நற். 113: 11-12)
எனத் தான் பொருள்வயிற் பிரிந்தமையால் தன் தலைவி அழுது புலம்புவதை ஆம்பல் பண் ஓசைக்கு தலைவன் ஒப்பிடுகிறான். மேலும்,
“இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல மின்னி” (நற்.214: 10-11)
என தலைவி உவமைப்படுத்துகிறாள்.
மேற்கண்ட பாடலடியில் தலைவனைப் பிரிந்து, தலைவி வருந்துவது குறித்தும், குறித்தப் பருவம் தவறியும் தலைவன் வாராதிருத்தல் குறித்தும், மழைமேகம் எள்ளி நகைப்பது போல மின்னுவதாகத் தலைவி குறிப்பிடுகிறாள். இவ்வகையிலான உவமைகளின் வழித் தலைவன், தலைவியின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1. 2 பரத்தையற் பிரிவு உணர்த்தும் உவமைகள்
கற்பு வாழ்வில் தலைவன் பரத்தையரை நாடிச் செல்வது தலைவிக்கு துயரைத் தரும். அவ்வேளையில்,
“மாஇருள் முள்ளுர் மன்னன் மா ஊர்ந்து
எல்லித் தரீஇய இன நிரைப்
பல்ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே” (நற். 291: 7-9)
எனத் தலைவி முள்ளூர் மன்னன் முன் எதிர்த்து நிற்க ஆற்றாது, அவன் பகையெல்லாம் அழிந்தது போலத் தன் நலத்தையெல்லாம் இழந்து விட்டதாகத் தலைவி தன் வருத்தத்தைக் கூறுவது குறிப்பிடத் தக்கது. மேலும்,
“வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே” (நற்.270: 9-10)
எனத் தலைவனின் பரத்தையற் பிரிவு, வெற்றி பெற்ற நன்னன் தோல்வி அடைந்த எதிரி நாட்டுப் பெண்களின் கூந்தலை அறுத்து வருவதை விடக் கொடுமையானது என உவமைப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக பரத்தையற் பிரிவால் ஏற்படும் தலைவியின் மனத்துயரை வெளிப்படுத்தும் பல உவமைகளும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
1. 3 களவு காலப் பிரிவு
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தப் பின் ஏற்படும் பிரிவு களவு காலப் பிரிவு ஆகின்றது. இப்பிரிவு குறித்து நற்றிணையிலும் பல உவமைகள் அமையப் பெற்றுள்ளன.
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே” (நற். 136: 2-4)
என்ற பாடலடி உவமைகள் தலைவியின் களவு காலப் பிரிவினைத் தெரிவிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளன. அதாவது தலைவனின் பிரிவால் வருந்தி இருக்கும் தலைவியின் தொடி வாட்டத்தால் நெகிழ்ந்தது. இதனைக் கண்ட தந்தை நெகிழாத சிறிய தொடியை செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் தலைவி, தன் தந்தையை மருத்துவருக்கு ஒப்பிடுகிறாள். இதனைத் தலைவன் கேட்க சிறைப்புறமாகக் குறிப்பிடுகிறாள். இதன் வழி களவுகாலப் பிரிவைத் தவிர்த்து விரைந்து மணமுடிக்க வேண்டுகிறாள் எனும் பொருள் புலப்படுகிறது.
2. வரைவு வேண்டல்
சங்க இலக்கியங்களில் களவினைக் கற்பாக்க பல்வேறு முயற்சிகள் தோழியாலும் தலைவியாலும் மேற்கொள்ளப்படும். இத்தகைய முயற்சியில் உவமைகள் வரைவு வேண்டல் எனும் பொருளைப் புலப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
“நீர் அன நிலையன் பேர் அன்பினன் என” (நற். 347: 8)
என்ற பாடலடியில் உள்ள உவமை தலைவனை நீருக்கு ஒப்பிடுகிறது. தன் எதிர்காலம் பற்றித் தலைவி தானும், தலைவனும் சேர்ந்து விருந்து படைக்க, விருந்துண்டவர்கள் தலைவனை மேற்கண்டவாறு வாழ்த்துவதாக எண்ணி மகிழ்கிறாள். இவ்வுவமை வழி தலைவி வரைவு வேண்டுதலையும், தன் எதிர்கால வாழ்வு குறித்துச் சிந்திப்பதுமான பொருள் புலப்படுகிறது. மேலும்;
“வளராப் பார்ப்பிற்கு அலகு இரை ஒய்யும்
அசைவு இல் நோன் பறை போல செல வர” (நற். 356: 5-6)
என்ற பாடலடியின் உவமை வரைவு மறுக்கப்பட்டத் தலைவனின் துயர நிலையை மிக அழகாகப் புலப்படுத்தியுள்ளது. இது தவிர,
“கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண்” (நற். 88: 4-5)
எனத் தலைவி வரைவு வேண்டி உருகுவதை மழையில் கரையும் உப்போடு உவமைப்படுத்தியுள்ளனர். இவ்வாறாக வரைவு வேண்டல் எனும் பொருண்மையை வெளிப்படுத்தும் உவமைகளும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
3. வருவழி ஏதம் கூறல்
சங்க இலக்கியத்தில் தலைவிக்கும் தோழிக்கும் நிகழக்கூடிய துன்ப மன நிலையில் தலைவன் வரும் வழியின் கொடுமையை நினைத்தலும் ஒன்றாகும்.
“பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே” (நற். 154: 8-10)
எனத் தலைவி நீர் தெளித்த நெருப்பு சிறிது தணிதல் போல, இவ்வளவு கொடிய வழியில் தலைவர் வாராது இருத்தலே நன்று என தன் மன வேதனையைக் குறிப்பிட்டு கொடுமையான காட்டுவழி குறித்துச் சிந்திக்கின்றாள்.
“குவளை குறுநர் நீர் வேட்டாங்கு
நாளும் நாள் உடன் கவவும் தோளே
தொல்நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண்” (நற். 332: 2-4)
என்ற அடிகளில் நீர் வாழ் குவளை மலரைக் கொய்பவருக்கே நீர் வேட்கை எடுத்தாற் போல, தலைவன் நாளும் வந்து உன்னைக் காணவும் ஏன் உன் தொடி நெகிழ்கிறது? எனத் தோழி வினவ தலைவி அவன் வருவழியின் ஏதமே என்னை நோகச் செய்கிறது எனப் பதிலுரைக்கிறாள்.
எனவே இவ்வுவமைகளின் வழி, தலைவனைக் காணலும் அவனோடு மகிழ்ந்திருத்தலுமே தலைவிக்கு மிக்க மகிழ்வைத் தரக்கூடியது. ஆயினும் அம்மகிழ்வை விடத் துயரமே மிகுதலால் தலைவன் வரும் வழியின்கண் இருக்கின்ற கொடுமைகளின் திறம் உய்த்துணரப்படுகிறது.
4. அலர்
தலைவன் தலைவியின் களவு வாழ்வை அறிந்த ஊர்ப் பெண்கள் தூற்றுவது அலராகிறது. இதை “அம்பல் என்பது மெய்ப்பாட்டால் தூற்றலாகும், அலர் என்பது சொல்லால் தூற்றலாகும்” என விளக்குவர். இதனை நற்றிணையில்,
“அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து
ஆனாக் கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற். 36: 6-9)
என்ற பாடலடி பதிவு செய்துள்ளது. அதாவது தலைவி பெண்டிர் பலரும் அலர் தூற்றுவதால் துயிலாது இருக்கிறாள். தலைவியைப் போல இவ்வூரும் அலர் தூற்றும் செயலை ஓய்வின்றி செய்வதால் துயிலாது இருக்கிறது என்ற பொருளை இவ்வுவமை நன்கு புலப்படுத்தியுள்ளது. மேலும்,
“கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு
நெடுநெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்
அளம்போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே” (நற். 354: 8-11)
என வரும் பாடலடி உவமைகள் அலரின் வீச்சினை எடுத்துரைக்கின்றன. அதாவது உப்பு வணிகர்கள் வியாபாரத்தின் போது எழுப்பும் ஒலி போல அலர் எழுகின்றது. எனவே ஊரில் இருக்கும் அனைவருக்குமே களவு வாழ்வு தெரிந்து விட்டது என்ற பொருளைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறாகக் களவு காலத் துன்ப நிலை தலைவியை வாட்டிய நிலையைப் பல உவமைகளும் எடுத்துரைக்கின்றன.
5. இற்செறிப்பு
அன்னை, தலைவியின் களவு அறிந்தோ அல்லது களவினால் ஏற்பட்ட மேனி வேறுபாடு கண்டோ அவளை வீட்டினுள் காவல்படுத்துதல் இற்செறிப்பு ஆகின்றது. இந்த இற்செறிப்பு நிகழ்வின் தன்மைகளை நற்றிணை உவமைகள் பதிவு செய்துள்ளன.
“கலிமடைக் கள்ளின் சாடி அன்ன எம்
இள நலம் இற்கடை ஒழிய” (நற். 295: 7-8)
என்ற பாடலடி உவமையில் கள்சாடி போன்ற மயக்கம் தரும் தன் இளமையும் நலனும் இற்செறிப்பினால் அழிதாகத் தலைவி கூறுகின்றாள். இதில் தலைவியின் காம வேட்கையும் பல நாளாக நீட்டித்த காவல்திறமும் புலனாகிறது. மேலும் இற்செறிப்புற்ற தலைவி
“நல் எயிலுடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல” (நற். 287: 3-4)
எனத் தன் நெஞ்சம் தலைவனைத் தேடிச் செல்கிறது என்கிறாள். அதாவது, பகை வீரர்கள் புறத்தே வந்து தங்கியிருக்கும் போதும் ‘நல்ல மதிலை உடையேம்’ என வலிமை குன்றாதிருக்கும் வீரன் போல தலைவியின் நெஞ்சமும் தாயின் கொடுமையை எதிர்த்து நிற்கும் மன வலிமையோடு இருத்தலைத் தலைவி இவ்வுவமை வாயிலாகக் குறிப்பிடுகிறாள்.
இவ்வாறாக இற்செறிப்பின்கண் நிகழும் துயரங்களும் தலைவியின் எண்ணங்களும் உவமைகள் வாயிலாகப் புலப்படுகின்றன.
நற்றிணையில் வரப்பெறும் உவமைகளின் வாயிலாகப் பொருட்புலப்பாடு பெறப்படுகின்றது. அதிலும் குறிப்பாகப் பல்வேறு மனநிலைகளையும், குறிப்புப் பொருள்களையும் தருவதாக உவமைகள் அமையப் பெறுகின்றன. அலர், இற்செறிப்பு போன்ற நிகழ்வுகளையும் தலைவன் வரும்வழியின் துயரையும் பல்வேறு வகையான பிரிவுத்துயரினையும் வரைவு வேண்டுதலையும் எடுத்துரைப்பதாகவும் நற்றிணை உவமைகள் அமையப் பெறுகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.