Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

புலவர் புரவலரைப் புரத்தல்

முனைவா் ஜெ. புவனேஸ்வரி


வேந்தரிடம் பரிசில் பெற்ற புலவர்கள் பரிசிலுடன் வறிதே மீளாது, தக்க அறிவுரையினைக் கூறிச் செல்லுதல் மரபு. வேந்தனிடம் தவறு கண்ட பொழுது தமக்குப் பரிசில் நல்கியவனே எனத் தாழ்ந்து விடாமல் கடுமையாக அறிவுறுத்தும் நெஞ்சுரத்தைப் புலவரிடத்தில் காண முடிகிறது. இம்மரபினையே வள்ளுவர்,

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்”
(1)

எனக் குறிப்பிடுகிறார்.

சேரமான் கருவூர் ஔவாட் கோப்பெருஞ் சேரலிரும் பொறைக்குப் புலவர் நரிவெரூஉத்தலையார் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்.

ஆளும் வேந்தனிடத்து அன்பும் அருளும் நீங்காது நிறைவுற்றிருத்தல் வேண்டும். அவை அவன்மாட்டு இல்லையாயின், அவன் ஆட்சி நெடிது நாள் நிலைபெற்றிராது. அன்பையும் அருளையும் அடிப்படையாகக் கொண்ட ஆட்சியினையே மக்கள் விரும்புவர். இவற்றின் அடிப்படையில் அமையாதது அறநெறியற்ற ஆட்சியாகும். அறனற்ற ஆட்சி அழியும், எனவே பெற்ற குழந்தையைத் தாய் பேணுவது போல நாட்டைக் காக்க வேண்டும்.

‘அருளு மன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவாp னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே”
(2)

எனக் குறிப்பிடும் புலவரின் கருத்து இன்றும் கொள்ளத்தக்கது. வேந்தர்களுக்கு அன்பின் ஆழத்தையும், அருளின் ஆற்றலையும் உணர்த்தி, அறநெறியில் பற்றுக் கொள்ளச் செய்து, மற வேந்தரை அற வேந்தராக மாற்றிய பெருமை பழந்தமிழ்ப் புலவருக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் அருமை பெருமைகளை எல்லாம் சிறக்க எடுத்தோதிய பாலைக் கௌதமனார், அவன் ஆட்சி நல்லாட்சியாக அமையும் பொருட்டு, பின்வரும் அறிவுரையினைக் கூறுகிறார்.

நல்லரசைப் பல்லோர் பழிக்கும் கொடுங்கோல் அரசாக ஆக்குதல் அவ்வரசுடையான் கொள்ளும்

1. சினம்

2. காமம்

3. கையிகந்த கண்ணோட்டம்

4. அச்சம்

5. பொய்

6. அளவிற்கு மீறிய அன்புடைமை

7. கையிகந்த தண்டம்

ஆகியவற்றால் ஆகும்.

எனவே, தீச்செயலை நின் மனத்தாலும் நினையாது, நல்வினைகளை நாள்தோறும் செய்க. நாட்டு மக்களை ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், பிறர் பொருளைத் திருட விரும்பாமலும், கடலும், கானலும் பயன்பல ஈனுமாறும் நல்லாட்சி நடத்துக. குற்றமறக் கற்றுத் துறைபோகிய அறிவுடையோர் கூறும் அறநெறிவழி ஆட்சி நடத்துக. நின் அன்பு மனைவியரோடு மகிழ்ந்து பிரிவின்றி வாழ்க. உள்ள பொருளை ஊராரோடு உண்டு மகிழ்க (3) எனப் புலவர் பாலைக் கௌதமனார் அறிவுரை புகல்கிறார்.வேந்தர்க்கு அறத்தின்பால் நம்பிக்கை ஏற்படும் பொருட்டு, நிலையாமையை எடுத்துக்காட்டி அறிவுரை வழங்குதலும் உண்டு.

தம்மோடு ஒத்த வேந்தர் எவருமிலர் எனப் பெருமை பேசிய புலவர் பலரும் தம் புகழ் மட்டும் நின்று நிலவ மறைந்து போயினர். சோலைகள் தோறும் நிலவும் வெறியாட்டையற் களத்தில் இனி இடமில்லையெனக் கூறுமாறு நெருங்க நிற்கும் ஆடுகள் அனைத்தும் அழிந்து போவது உறுதியாவதைப் போன்றே உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் ஒரு நாள் அழிந்து போவது உறுதி. அவ்வுலக வாழ்வு நிலையற்றது. அவ்வுண்மையினை நினைவில் நிறுத்தி, ‘நல்லது ஆற்றி நெடிதே வாழ்’ (4) என வாழ்த்தும் பழந்தமிழ்ப் புலவரின் கருத்துரை நினையத்தகும்.

வில்லேருழவர் பெறும் வெற்றி, நல்லேருழவர்களின் கையில் உள்ளது. எனவே, புலவர்களைப் பேணிக் காக்க வேண்டும் என்னும் கருத்துப்பட, புலவர் வெள்ளைக் குடி நாகனார், கிள்ளி வளவனுக்குக் கூறும் அறிவுரை குறிப்பிடத்தக்கதாகும்.

வேந்தன் காட்சிக்கு எளியனாதல் வேண்டும். கடமையில் தவறாமை வேண்டும். இவையிரண்டும் அவன் கீழ்ப் பணியாற்றும் பணியாளரிடமும் இருக்க வேண்டும். தன் நாட்டு மக்கள் நல்வாழ்விற்கான பொருளிற்குப் பிற நாடுகளை எதிர்நோக்காத நிலையில் ஆட்சி அமைந்திருத்தல் வேண்டும். இத்தகு வளம் பெற வழிசெய்யும் ஆட்சி அழிவதை நாட்டு மக்கள் விரும்ப மாட்டார்கள். தன் நாட்டிற்குக் கேடு உண்டாகும் என அறியின், அதை இழந்து வாழ்வதினும் அழிவதே சிறப்புடைத்து என எண்ணிக் களம் புகுவர். இவ்வெண்ணம் உடையார் மதம் உள்ள உரனை அழிக்கும் ஆற்றல் உலகில் எத்துணைச் சிறந்த படையாளர்க்கும் இல்லை. போரில் வில்லேருழவர் பெறும் வெற்றி நாட்டில் நல்லேருழவர் தரும் நற்பயனின் விளைவாகும். எனவே தம் நாடு வளம் பல செறிந்த நல்ல நாடாதல் காணும் பிற நாட்டு மக்களும், இத்துணை வளங்கொழிக்க ஆளும் வேந்தனே, தங்கள் நாட்டையும் ஆட்சி புரிய வேண்டும் என விரும்புவர். இத்தகைய எண்ணங் கொண்ட மக்கள் நிறைந்த ஆட்சியைப் போர்புரிந்து கைப்பற்ற வேண்டியதில்லை. மக்களே முன்னின்று உள்ள ஆட்சியினை அழித்து விட்டு, இவனிடம் ஆட்சியினைத் தருவர். ஆகவே, உலகமெலாம் ஆள ஆசை கொள்ளும் வேந்தர்க்கும் உறுதுணை புரிவோர் உழவர். நாட்டிற்கு அரணாக நிற்கும் உழவர்களுக்கு நல்லன செய்தலை வேந்தன் நாள்தோறும் அறிந்து தக்கன செய்தல் வேண்டும் (5) என்பர் புலவர் வெள்ளைக்குடி நாகனார். வேந்தர்கள் மண்ணாசை கொண்டு போரிடுவதை நிறுத்தி விட்டு, உழவரைப் பேணி, நாட்டுமக்கள் நல்வாழ்வில் கருத்து செலுத்தினால், மக்களே விரும்பித் தம்மை ஆளும் உரிமையை இவ்வேந்தனுக்குக் கொடுப்பர் என்னும் கருத்தை இது அறிவுறுத்துகிறது.உழவுத் தொழிலுக்கு அடிப்படைத் தேவையாக அமைந்திருப்பது நீர். உழவுத்தொழிலைப் போற்ற நினைக்கும் வேந்தன் முதலில் நீர்நிலைகளைப் பெருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் புலவர் குடபுலவியனார். பசியும், பகையும் இன்றி மக்கள் வாழும் நாடே சிறந்த நாடாகக் கருதப்படும். பசியும், பிணியும், பகையுமின்றி மக்கள் வாழ வேண்டுமானால், உணவுக்குறை உண்டாதல் கூடாது. உணவு நன்னிலமும், நிறை நீரும் உண்டாய வழியே உண்டு. நீர் அற்றவழி நிலம் இருந்தும் பயன் இன்று. எனவே நீர் நிறையக் கிடைக்குமாறு நீர்நிலை பலவற்றை ஆங்காங்கே ஆக்கித் தருதல் வேந்தனுடைய தலையாய கடமை. இம் மண்ணுலகில் நிலைத்த புகழை விரும்புவோர், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து அதற்கு வேண்டுவன செய்வர் என்பதை,

‘நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே’
(6)

எனப் புலவர் குடபுலவியனார், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துவது எல்லாக்கால அரசுக்கும் பொருந்தும் அறிவுரை ஆகும். இவ்வாறாக வேந்தர்கள் வாழும் நாளில் எல்லா புகழும் நிறைந்தவர்களாக வாழ்ந்ததில் புலவர்களின் பங்கும் பெரும்பான்மை உண்டு.

நீர் நிலைக் கண்டு, உழவுத் தொழிலைப் பேணி, வளர்ச்சியடையச் செய்வதோடு வேந்தனது கடமை முடிந்து விடுவதில்லை. விளைந்த விளையுளுள், தனக்குச் சேர வேண்டியவற்றை முறையறிந்து அறவழியில் வாங்க வேண்டும். முறையோடு வரி வாங்க முடியாத வேந்தன் நீர்நிலை கண்டு, உழவரைப் பேணியது பொருளற்றதாகி விடும். எனவே வேந்தன் தன் குடிகளிடம் எவ்வாறு வரி கொள்ள வேண்டும் என்பதைப் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்குப் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்.

விளைநிலம், மாஅளவு மிகச்சிறிது என்றாலும், அதையும் முறையாகப் பயிரிட்டு அதில் விளையும் உணவுப்பொருளை, நாள்தோறும் கணக்கிட்டுத் தந்து வந்தால், அச்சிறு நிலத்தில் விளைந்த உணவே, யானைக்குப் பல நாள் உணவாகும். பல வேலியளவு பரந்துள்ள விளைநிலத்தில் யானை ஒன்றை அது விரும்பிய வண்ணம் உண்ணச்செய்தால், விளைந்த பயிர் அனைத்தும் ஒரே நாளில் பாழாகி விடும். யானையின் வாயுட் சென்று உணவாகிப் பயன்படுவதினும், அதன் கால்களால் மிதியுண்டு அழிவனவே மிகுதியாகும். இதனைச் சான்றாகக் கொண்டு, ஆளும் வேந்தன் அறிவுடையோனாகிக் குடிகளிடமிருந்து எவ்வளவு பெறலாம், எவ்வளவு பொருட்களை அவர்களால் கொடுக்க முடியும் என்பதறிந்து ஒழுங்கான ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டு வரி வாங்க வேண்டும். இவ்வாறு முறையறிந்து வரி வாங்கினால் நாட்டு மக்கள் வேந்தனுக்குக் கொடுக்க வேண்டிய பொருளை விரும்பிக் கொடுத்து வேந்தனையும் வாழ வைத்துத் தாங்களும் நன்கு வாழ்வர். இவ்வாறில்லாமல் அறநெறியறியாத அமைச்சரின் சொல் கேட்டுக் குடிமக்கள் அழ, அழ வரி வாங்கப்பட்டால், அம் மக்கள் துன்புறுவர். குடிமக்கள் துன்புறின், அந்நாட்டுக்குரிய வேந்தன் நெடிது நாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது (7) எனப் புலவர் பிசிராந்தையார் அறிவுறுத்துவது இந்நாளைய ஆட்சியாளர்களும் கருதத்தக்க ஒன்றாகும். ஆட்சித்துறையில் புலவர்களுக்குள்ள ஈடுபாட்டையும், தங்கள் கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் அளவிற்குப் புலவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையும் பிசிராந்தையார் பாடல் புலப்படுத்துகிறது.

நீர்நிலை கண்டு விளைநிலம் பேணி, உழவரைக் காத்து, முறையறிந்து வரி வாங்கப்பட்டாலும், வேந்தனிடம் இருக்க வேண்டிய அடிப்படையான பண்புகள் இல்லையானால் அவ் வேந்தன் ஆட்சிப் பொறுப்பில் நீண்டநாள் நிலைக்க முடியாது. எனவே நாடாளும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் சிலவற்றைப் புலவர் மதுரை மருதனிளநாகனார், பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனுக்குப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார்.

பிழைபுரிந்தவர் நம்மவர் எனவே, பிழைத்துச் செல்க என ஒறுக்காது விடுத்தலும், இவர் நம் பகைவர் எனவே, பிழை புரியாராயினும் பெருந்தண்டம் கொடுக்க என ஒறுத்தலும் அறத்தின்பாற் பட்டதன்று. வேந்தனாய் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவனுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு இருத்தல் கூடாது. இவ்வறனல்லாத செயல், தன்பால் நிகழா வண்ணம் வேந்தன் காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடுநிலை நின்று, நாடு காப்பவர்பால் ஆண்மையும் அருளும், அருட்பெருங்கொடையும் ஆகிய பண்புகள் இன்றியமையாது இருத்தல் வேண்டும் (8) என வேந்தனுக்கு இருக்க வேண்டிய பண்புகளை எடுத்தியம்பிய புலவரின் அறிவுரை உணரத்தக்கது. சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் ஒருபால் கோடாமைப் பண்பே, வேந்தர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளுள் தலையாயது எனக் கருதுகிறார், புலவர் மதுரை மருதனிளநாகனார்.தன்னை நாடி வரும் பரிசிலருக்கு, அவரவர் தகுதியறிந்து பரிசில் நல்க வேண்டும். தன்னிடம் வருவோரின் தகுதியறியாத வேந்தனால் புகழ்பெற்றுச் சிறக்க முடியாது. தகுதியறியாது, காணாது ஈந்த பரிசிலை மறுத்து.

‘காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன்”
(9)

எனக் கூறுமளவிற்குப் புலவர்கள் நெஞ்சுரம் மிக்கோராய் விளங்கினர். ஆனால் இதே காலத்தில் வாழ்ந்த புலவர் முதுகண்ணன் சாத்தனார், சோழன் நலங்கிள்ளிக்குப் பரிசில் நல்கும் முறையை எடுத்துக் கூறியுள்ளார். நின்பால் வருவோர்தம் தகுதி, தகுதியின்மைகளை நோக்கி அளிப்பதும், மறுப்பதும் செய்யாது, அவ்வாறு வருவார்தம் வாடி வதங்கிய வயிறு ஒன்றையே நோக்கி, எல்லோர்க்கும் வழங்க வல்லவனாகுக எனும் பொருளில்,

‘வல்லா ராயினும் வல்லுந ராயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி”
(10)

எனக் கூறும் புலவரின் கருத்து ஆழ்ந்து நோக்கத்தக்கது. தகுதியுடையவர்க்கும், தகுதியற்றவர்க்கும் வயிறு ஒன்று தான். எனவே பசித்த வயிறு நோக்கிப் பரிசில் கொடு எனப் புலவர் உரைக்கும் அறவுரை ஒருவகையில் புரட்சியானது எனலாம்.

பகை கடிதல்

வேந்தரின் வீரத்தையும் அவர்தம் போர் வெற்றியையும் சிறக்கப் பாடிய பழந்தமிழ்ப் புலவர்கள் போரைத் தடுத்தும் அமைதி ஏற்படுத்தியுள்ளனர். போரின் கொடுமையையும் அறத்தின் அடிப்படையில் விளங்கும் மறப்பண்பையும் விளக்கிப் போரைத் தடுத்துள்ளனர்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சேரமான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடன் பகை கொண்டு சேரனின் கருவூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். சோழனை எதிர்க்குமளவிற்குத் தன்னிடம் படைவலிமையில்லை என்பதை அறிந்த சேரன், கோட்டைக்குள்ளேயே அடங்கியிருந்தான். சோழர் படை கருவூர்க் கோட்டையைச் சுற்றியுள்ள காவற்காட்டை அழித்தொழித்தது. தன் காவல் மரம் வெட்டப்படும் ஓசை கேட்டும் வெளிவராது கோட்டைக்குள்ளேயே அடைந்திருந்தான் சேரன். போர் நடைபெறாது காலம் நீட்டித்தலால் இருபெரும் படைகளும் மக்களும் துன்புறுவதைக் கண்டார் புலவர் ஆலத்தூர்கிழார்.

கிள்ளிவளவனிடம் சென்று, வேந்தரின் மறப்பண்பைக் கிளத்திப் போரைத் தவிர்க்க விழைந்தார் புலவர். நின்படை கோட்டையில் பலகால் முற்றுகையிட்டிருந்தும், அவன் காவல் மரங்களை வெட்டி வீழ்த்திய ஓசை கேட்டும் வெளிவராது இருக்கும் சேரன் வீரனல்லன். வீரர் தம்மை நிகர்த்த வீரரோடே போரிடுவர். பெருவீரனாகிய நீ வீரனல்லாத சேரனுடன் போரிடுவது பெருமை தருவதன்று.

‘கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப
ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே”
(11)

எனச் சோழனுக்கு வீரத்தின் தன்மையை உணர்த்திப் போரைத் தடுத்து நிறுத்தக் கருதிய புலவரின் பணி குறிப்பிடத்தக்கது.


பழிகாத்தல்

வேந்தர்கள் தவறு செய்ய நேர்ந்த பொழுது, உரிய நேரத்தில் அவர்களது தவற்றினை உணர்த்தி, அதனால் அவர்களுக்கு ஏற்பட இருந்த பழியினின்று காத்துள்ளனர் புலவர் பெருமக்கள். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, மலைநாட்டை ஆட்சி புரிந்த மலையமானுடன் பகை கொண்டு போரிட்டான். வெற்றி பெற்ற வளவன் மலையமான் மக்கள் இருவரையும் கைப்பற்றிக் கொணர்ந்து யானைக் காலின் கீழிட்டுக் கொல்லத் துணிந்தான். இச்செயலால் கிள்ளிவளவனின் புகழ் குன்றும்; வரலாற்றில் நிலைத்த பழி நேரும் என்பதை உணர்ந்த கோவூர்க்கிழார் உள்ளம் பதறினார். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த விரைந்தார். வளவனின் முன்னோர் செயலை எடுத்துக்காட்டி அவனை முறைப்படுத்தினார்.

புறாவுக்காகத் தன் ஊனைக் கொடுத்துப் புரந்த முன்னோன் மரபில் வந்தவனே! நீ கொல்லத் துணிந்திருக்கும் மக்களோ சிறுவர்கள். தம்மை நாடி வந்தோர்க்கு வாரி வாரி வழங்கிய வள்ளலின் மக்கள். எதிர்த்து நிற்கும் பருவமும் ஆற்றலும் அற்றோர். இவர்களைக் கொல்லுதல் நினக்கு அருளாகாது.

‘நீயே, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே”
(12)

எனக் கூறி, வளவனின் கொலைச் செயலைத் தவிர்த்த புலவர் கோவூர்க்கிழாரின் அருள் உள்ளம் போற்றத்தக்கது. இக்கொலையைப் புலவர் தடுத்து நிறுத்தியதால், கிள்ளிவளவனின் வாழ்வில் மாசு படியவில்லை. இல்லையெனில், தன்னிடம் தோற்ற மன்னனின் குழந்தைகளைக் கொன்ற பழி வளவனுக்கு ஏற்பட்டிருக்கும். மலையமானின் மக்களைக் காப்பாற்றி, பிறர் நலம் கருதும் பெருந்தகைமையோடு தொண்டாற்றிய புலவரின் பணி நிலைத்த புகழுக்குரியது.

கோப்பெருஞ்சோழனுக்கு எதிராக அவன் பெற்ற மக்களே போருக்கு எழுந்த புன்மை நிலையினைக் காண முடிகிறது. தமிழ்நாட்டு வேந்தர்களின் குடும்பங்களில் தலைகாட்டாத குறை எவ்வாறோ அச்சோழனின் குடும்பத்தில் புகுந்தது. (13) பகைவேந்தர் இருவர் போரிட்டுக் கொள்வது மரபு. தந்தையை மகன் எதிர்ப்பது தமிழர் வரலாற்றில் புதுமை. பழிக்கு இடம் தருவது. இப்பழி நேராவண்ணம் தடுத்து நிறுத்தக் கருதினார் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார். அவர் சோழனுக்குக் கூறிய அறிவுரையில்,

நின்னோடு போருக்கு வந்திருப்பவர் நின் பகைவராகிய சேரரோ, பாண்டியரோ அல்லர். உனக்குப் பின்னால் ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் நின் மக்கள். நீ வெற்றி பெற்றால் உனக்குப் பிறகு ஆட்சியினை யாருக்கு வழங்குவாய்? நீ தோற்றாலும் அது நின் புகழுக்கு மாசு உண்டாக்கும். எனவே, போரைத் தவிர்த்து அமைதியடைக என்று கூறும் பொருளில்,

‘எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
அதனால், ஒழிகதி லத்தைநின் மறனே”
(14)

எனப்பாடி கோப்பெருஞ்சோழனின் மறத்தைக் கெடுத்து, அறத்தில் நாட்டம் ஏற்படச் செய்த புலவரின் பணி குறிப்பிடத்தக்கது.

நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்று, நெடுங்கிள்ளியிடம் பரிசில் பெறும் பொருட்டு இளந்தத்தன் என்ற புலவர் உறையூர் சென்றார். நலங்கிள்ளியிடமிருந்து வந்தமையால் அவரை ஒற்றன் எனக் கருதி கொல்லத் துணிந்தான் நெடுங்கிள்ளி. புலவரைக் கொன்ற பெரும்பழி நெடுங்கிள்ளிக்கு வந்து விடுமே எனக் கருதிய கோவூர்க்கிழார், நெடுங்கிள்ளிக்கு உண்மையை உணர்த்திப் புலவரைக் காப்பாற்றினார். இவ்வுண்மையை உணர்த்தும் போது புலவர்களின் இயல்பினைத் தெள்ளிதின் உணர்த்துகிறார் கோவூர்க்கிழார்.

பழுமரம் நாடிச் செல்வன பறவைகள். அவைப் போலத் தமக்குப் பரிசில் வழங்குவோரை நாடிச் செல்பவர் புலவர்கள். அங்கும் தம் வல்லமைக்கு ஏற்பப் பாடிப் பெறும் பரிசிலால் மகிழ்வர். தாம் மகிழ்வதோடு அன்றி தாம் பெற்ற பொருள் கொண்டு தம் சுற்றத்தாரையும் மகிழ்விப்பர். தாம் பெறும் பொருட்களைப் பேணிக் காக்கும் இயல்பும் அல்லாதவர். தம்மைப் புரப்போரால் பெறும் சிறப்புக்காக இவ்வாறு வருந்தி நாளும் அலைவதே அப்பரிசிலர்களுடைய வாழ்க்கையின் தன்மையாகும். பிறருக்குக் கொடுமை செய்ய அறியாதவர். கல்வியால் தம்முடன் மலைத்தவரை அவர் நாண வென்று, செம்மாந்து நடந்து, அவ்விடத்தில் இனிதாக ஒழுகும் இயல்பினர். அவ்வாறு ஒழுகும் போது, ஓங்கு புகழுடன் நிலம் ஆளும் வேந்தரைப் போன்ற சீரும் உடையோராய் விளங்குவர் எனப் புலவரின் உயர்ந்த வாழ்க்கையினை எடுத்துரைக்கிறார் கோவுர்க்கிழார். (15)

புலவர்தம் செம்மாந்த புலமைச் செருக்கை வேந்தரின் நிலமாளும் ஆட்சிச்செருக்குடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது கருத்தூன்றிக் காணத் தகும்.


புரவலனைக் காத்த புலவர்

வேந்தர் புலவர்க்குப் பரிசில் தந்து புரத்தல் இயல்பு. அவ்வாறு பரிசில் பெற்ற புலவர், தம்மைப் புரந்த வேந்தனுக்குத் துன்பம் நேர்ந்துழி அவனைக் காப்பாற்றும் கடமையினையும் மேற்கொண்டிருந்தனர். புரவலனைக் காப்பாற்றிய புலவராகப் பொய்கையார் விளங்குகிறார். சேரமான் கணைக்காலிரும் பொறை சோழன் கோச்செங்கணானிடம் பொருது தோல்வியுற்று, அவனிடம் சிறைப்பட்டான். வேந்தன் சிறைப்பட்ட செய்தியை அறிந்த புலவர் பொய்கையார் அவனை மீட்கும் பொருட்டு, கோச்செங்கணானின் வெற்றியைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்னும் நூலைப் பாடினார். பாடலுக்குப் பரிசிலாகச் சேரமானின் விடுதலையைக் கேட்டுப் பெற்றார். பொய்கையார் சேரனை சிறைவீடு செய்த செய்தியினைச் சங்கஇலக்கியங்கள் குறிப்பிடவில்லை. பிற்கால இலக்கியங்களான கலிங்கத்துப் பரணியும், விக்கிரமச்சோழனுலாவும், பொய்கையார் சிறைவீடு கண்ட செய்தியினை முறையே,

‘களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட பரிசும்”
(16)

என்றும்

‘இன்னருளின்
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திபனும்”
(17)

என்றும் குறிப்பிடுகின்றன.

சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போரில் போரிட்டுத் தோற்று, குடவாயிற் கோட்டத்தில் சிறைப்பட்டுத் தண்ணீர் கேட்டு, அது காலந்தாழ்த்தித் தரப் பெற்றதனால் உண்ணாது, துஞ்சினான் எனப் புறநானூற்றுப் பாடலின் கீழுள்ள குறிப்பு குறிப்பிடுகிறது. (18) சேரமானைச் சிறை மீட்டப் பொய்கையாரின் செயலைப் பிற்கால இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வேந்தனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டு பொறாது அவனைச் சிறை மீட்ட செய்கை வேந்தர்பால் புலவர்க்கு இருந்த நெருக்கத்தை விளக்கும்.

சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி என்பான், சேரன் அந்துவஞ்சேரல் இரும்பொறையுடன் பகை கொண்டு, சேரனின் கருவூரை முற்றுகையிட்டான். முற்றுகையிட்டிருந்த நேரத்தில் ஒரு நாள் இவன் ஊர்ந்து சென்ற களிறு, பாகர் அடக்கவும் அடங்காது, இவன் பாசறையின் நீங்கிப் பகைவரின் பாசறையிடத்தே சென்றுவிட்டது. இக்காட்சியினைக் கண்டார் உறையூர் ஏணிச்சரி முடமோசியார். எதிர்பாராமல் தனிமைப்பட்டு விட்ட சோழனைச் சேரப்படை வீரர் சூழ்ந்து அழித்து விடலாம். அதனால் தனித்து வந்தவனை அழித்த பழி சேரனுக்கு வந்து விடும். எனவே சோழன் உயிர் பிழைத்துச் செல்லவும், சேரனுக்குப் பழி ஏற்படாமல் இருக்கவும் புலவர் முயன்றார். சேரனுக்கு நிலைமையை விளக்கிப் பழி நேராமல் காத்தார்.

‘மரீ இயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம”
(19)
எனப் புலவர் குறிப்பிடுகிறார். ‘நோயிலனாகிப் பெயர்கதில்லம்ம’ எனப் புலவர் இரங்கியுரைக்கும் கூற்றில் அவரது அருளுள்ளம் புலப்படுகிறது. போர்க்களப் பாசறையில் வேந்தனுடன் புலவர் இருப்பர். படைவீரர்களுக்கு ஊக்கமளிக்க அரசவைப் புலவர்களையும் போர்க்களத்திற்கு அழைத்துப் போவது அன்றைய வழக்கம் (20) எனக் கூறும் குஞ்ஞன்பிள்ளையின் கருத்தும் இதனை உறுதி செய்கிறது.

சான்றெண் விளக்கம்

1. குறள். 448

2. புறம். 5 : 5 - 8

3. பதிற். 22 : 1 - 11

4. புறம். 366

5. மேலது. 35

6. மேலது. 18 : 18 - 23

7. மேலது. 184

8. மேலது. 55 : 11 - 14

9. மேலது. 208 : 6 - 7

10. மேலது. 27 : 15 - 17

11. மேலது. 36 : 9 - 13

12. மேலது. 46

13. மு. வரதராசன், புலவா; கண்ணீh; ப. 80

14. புறம். 213 : 15 - 19

15. மேலது. 47

16. கலிங்கத்துப்பரணி. 196

17. விக்கிரம சோழனுலா. 13 - 14

18. உ. வே. சாமிநாதையர் (பதி), புறநானூறு மூலமும் உரையும் ப. 177

19. புறம். 13 : 8 - 9

20. இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை, பண்டைய கேரளம் பக். 44

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p144.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License