புறநானூற்றில் உணவு
முனைவர் ப. மீனாட்சி
(உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, எஸ். எஃப். ஆா் கல்லூரி, சிவகாசி)
இலக்கியமென்பது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. மக்களது வாழ்வியல் கூறுகளை வகைமையுடன் எடுத்துரைப்பவை இலக்கியங்கள். இவ்விலக்கியங்களை சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியமெனப் பகுக்கலாம். தொன்மையும் பொருட்செறிவுமிக்க பழந்தமிழ்ச் சொற்கள் சங்க இலக்கியத்தின் வாயிலாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. இத்தைகய சொற்கள் குறித்த ஆய்வு மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன. அதனை நிறைவு செய்யும் பொருட்டு புறநானூற்றை மையமாகக் கொண்டு “உணவு” என்னும் சொல் இடம்பெறும் தன்மையை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
உணவு b>
மனிதனது அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானதாகக் கருதப்பெறுவது உணவு. ஆண்டாண்டு காலமாக ஓடி உழைத்து ஓடாக மனிதன் தேய்வதும் ஒரு சாண் வயிற்றை நிரப்பும் உணவிற்காகவே. சங்க காலத்தைச் சார்ந்த புரவலர்கள் தம் இல்லம் தேடி வரும் புலவர்களின் வயிறும் மனதும் நிறையும் படியாக பரிசில் தருவர் என்பது கூற்று. இதில் முதலிடம் பெறுவது உணவு. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் உணவினை உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனப் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இத்தகைய உணவு பல்வேறு பெயர்களால் பல வடிவம் பெற்றுள்ளதை இங்கு காண்போம்.
உணவினைக் குறிக்கும் பொதுப்பெயர்கள்
அமுது, அயினி, இரை, உண்டி, உணவு, ஊண், பதம், கிளவி, மிசைவு என்பவையாகும்.
சோறு
அடிசில் ஆக்கல், கூழ், சோறு, நிமிதல், புன்கம், மடை ஆகியவை சோற்றைக் குறித்தன.
கள்
அரி, அரியல், கந்தாரம், கலங்கல், கள், ஒனை, மட்டு என்பவையாகும்.
உவியல்- அவியல்
கருணை- பொரிக்கறி
புழுக்கல்- அவித்த இறைச்சி
யெப்பு- தாளித்தல்
இவைத்தவிர அரிசி, உழுந்து, ஐவினம் போன்ற சொற்களும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
அசும்பு
மதுவுடன் கூடிய சோறு “அசும்பு” என்பதாகும்.
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகும் முன்றில்” (புறம்:114:5)
புரிமகளிரைப் பற்றிக் கபிலர் கூறும் இப்பாடலில் மதுச்சோறு பற்றிய செய்தி பதிவாகியுள்ளது.
அடிசில்
“சோறு” என்னும் பொருள்படத்தக்கது.
“அமிழ்தட் டானாக் கமழ்குய் அடிசில” (புறம்:10:7)
“சுவைக் கினிதாகிய குய்யுடை அடிசில்” (புறம்:127:7)
“குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில” (புறம்:160:7)
“நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து” (புறம்:188:5)
“குய்குரன் மலிந்த கொழுந்துவை அடிசில்”(புறம்:250:1)
“அமிழ்தன மரபி னூன்துவை யடிசில்”(புறம்:350:17)
இவ்வரிகள் சோறு என்னும் பொருளில் நெய் கலந்த, ஊன்கலந்த சோறு இரவலர்களுக்கு உணவாக அளிக்கப்பட்ட செய்தியை பதிவு செய்துள்ளன.
அமலை
அமலை என்பதற்கு ஆரவாரம், கூத்து, மிகுதி, திரளை, திருமகள், ஒலி, சுத்தம், கடுக்காய், கொப்பழ்க் கொடி எனப் பலபொருள் உண்டு.
சோற்றுத்திரளை என்னும் பொருள்படத்தக்கது.
“ஊன்சோற் றமலை யிண்கடும் பருத்தும்” (புறம் 33:14)
“அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு” (34:14)
“வைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை” (புறம்:177:14)
மாசிகம் கலந்த உணவிற்கு அமலை எனப் பெயரிட்டுச் சுட்டியமை மேற்கூறப்பட்ட வரிகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
அமுது
அமுது என்றால் உணவு எனப் பொருள்படும்.
“இசையிற் கொண்டா னசையமு துண்கென” (புறம் 399:21)
அயினி
உணவு எனப் பொருள்படும்.
“-பாலீவிட்
டயினியும் இன்றயின் றனனே” (புறம்:77:8)
அவிழ்
“நீர்உலை யாக ஏற்றி மோரின்
றவிழ்பதம் மறந்து” (புறம்:159:12)
“அவிழ்புகு வறியா தாகலின் வாடிய” (புறம்:160:5)
“புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறம்:360:18)
“மூழ்ப்பப் பெய்த முழவவிழ்ப் புழுக்கல்” (புறம்:399:9)
உணவு
“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” (புறம்:18:21)
“காலுண வாகச் சுடரொடு கொட்டும்” (புறம்:43:3)
“அல்லி யுணவின் மனைவியோ டினியே” (புறம்:250:5)
“இந்நாள் கல்லது உணவும் இல்லை” (புறம்:335:6)
“முகந்து கொள்ளு முணவென்கோ” (புறம்:396:20)
“கடிய முணவென்னக் கடவுட்குந் தோடேன்” (புறம்:399:26)
இரை
“ஊன்நசை உள்ளம் துரப்ப விரை குறித்துத் (புறம்:52:3)
“அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன” (புறம்:78:3)
“வாளை நீர் நாய் நாளிரை பெநூஉம்” (புறம்:283:2)
அளை
அளை என்பதற்கு தயிர், வெண்ணெய், மோர், முழை, புற்று, வளை, குகை, நண்டு எனப் பொருள்படும்.
அளை என்பது மோர் என்னும் பொருள் உடைத்து.
“செம்புற் றீயலின் இன்னளைப் புளித்து” (புறம்:119:3)
தொகுப்புரை
* புறநானூறு சொல்லாய்விற்கான கலைக்களஞ்சயம் என்றே சொல்லலாம்.
* புழமையான சொற்களை இலக்கியத்தில் திறனாய்வு செய்வதன் மூலம் பொருள் நிறைந்த பழம் சொற்கள் வெளிக்கொணரப்படுகின்றன.
* ஒரு சொல் பலபொருள் மற்றும் பலசொல் ஒரு பொருள் தொடர்பான சொற்களை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.
* காலமாற்றம் சொற்சிதைவுக்கான களம் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
* அமலை, அவிழ் என்பன போன்ற சொற்கள் உணவிறனை குறிப்பதற்குப் பயன்படுகிறது.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.