கலித்தொகையில் உவமைகள்
முனைவர் துரை. மணிகண்டன்
முன்னுரை
உலக இலக்கிய வரலாற்றில் தமிழ் இலக்கியம் தனித்த இடத்தைப் பெற்றது. இதில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகள் வளர்ந்து, பூத்துக், காய்த்து, கனியாகி வளர்ந்து வந்துள்ளன. இத்தகு இலக்கிய வளத்தைப் பெற்ற தமிழ் இலக்கியத்தில் சங்ககாலம், சங்க மருவிய காலம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், இக்கால இலக்கியம் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். அவற்றில் சங்க இலக்கியம் காலத்தால் அழியாத புகழ்பெற்றது. இச்சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான கலித்தொகை பெரும் சிறப்புபெற்றது. இதனைக் ‘கற்றிந்தார் ஏத்தும் கலி’ என்று சிறப்புடன் அழைப்பர். இத்தகு சிறப்பு வாய்ந்த கலித்தொகை குறித்து, ‘கலித்தொகையில் உவமைகள்’ எனும் தலைப்பில் இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
கலித்தொகை
கலித்தொகையில் ஐந்து நிலத்தைப் பற்றிய பாடல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் குறிஞ்சிக் கலியில் 29 பாடல்களும், பாலைக் கலியில் 35 பாடல்களும், முல்லைக் கலியில் 17 பாடல்களும், மருதக் கலியில் 36 பாடல்களும், நெய்தற் கலியில் 33 பாடல்களும் சேர்த்து மொத்தம் 150 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
கலித்தொகைப் பாடல் சிறப்புகள்
கலித்தொகையில் பல்வேறு வகைப்பட்ட சிறப்புக்கூறுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சங்ககால மக்களின் வாழ்க்கை வரலாற்று முறைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள், காதல் வீரம் போன்ற நிகழ்வுகள் மட்டுமன்றி இயற்கை வளம், அரசர்களின் சிறப்புகள், மகளிர் கோட்பாடுகள் போன்றவையும் இதில் இடம் பெற்றிருப்பது சிறப்பே.
உவமை
‘கவிதை நன்கு சிறப்புற்று வாழ உதவுவன உவமை உருவகம் முதலிய அணிகையாம்’ என்று அ. சா. ஞானசம்பந்தன் கூறுவார். கவிதைக்கு அணி முக்கியம்; அதிலும் உவமையணி மிகமிக முக்கியமானது என்பதை இதன் மூலம் உணரலாம். தொடக்கக் காலத்தில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், இன்றளவில் நிலைத்து நிற்கும் அணி உவமையணிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இதனையே ஆசிரியர் தமிழண்ணல் ‘இலக்கியத்தை அழகுபடுத்தும் முதல் அணி அல்லது தாயணி உவமையேயாகும். அகப்பாடல்களில் ஏறத்தாழத் தொண்ணூறு விழுக்காடு உவமைகள் இடம் பெற்றுள்ளன. ஏனைய பத்து விழுக்காடு பிற அணிகள் இடம் பெற்றுள்ளன என்றும் சங்க இலக்கிய ஒப்பீடு என்ற நூலில் குறிப்பிடுவார்.
தொல்காப்பிய ஆசான், உவமை என்றால் என்ன என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். ஒரு பொருளொடு மற்றொரு பொருளினை ஒப்புமைப்படுத்தி, அப்பொருளினுடைய வண்ணம், வடிவு,தொழில் பயன் ஆகிய இயல்புகள் நன்கு புலப்படும்படிச் செய்வதாகிய பொருள் புலப்பாட்டு நெறியே உவமையாகும் என்கிறார். இதனையே;
“வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத் தோற்றம்” (தொல்-பொருள்-உவமை நூற்பா -1)
என்ற நூற்பா மூலம் கண்டுணரலாம்.
இப்போக்கில் நாம் கலித்தொகையை அனுகி ஆராய்ய்வோம்.
தலைவனின் மலைச்சிறப்பு
தலைவன் தலைவியைக் காண வருகின்றான். தோழி இடைமறிக்கின்றாள். ஏனென்றால், தலைவனைக் காணமல் தலைவி மிகவும் வருத்தமுற்றுக் காணப்படுகிறாள். உனது மலைவளக்காட்சியைக் நீ கண்டதுண்டா அது எப்படி இருக்கிறது?
மதயானைக்கு வேங்கைமரம் பூத்துக் குலுங்குகிறது. அது யானைக்கு எதுபோல் தோன்றுகிறது தெரியுமா? புலிபோல இருக்கிறதாம். எனவே புலிதான் என்று நினைத்து யானை தன் தந்தத்தால் வேங்கைமரத்தை குத்துகிறது. விளைவு யானையின் தந்தம் வேங்கைமரத்தில் சிக்குண்டு கதறுகிறது. அதனால் காடே அதிர்கிறது. இத்தகைய மதயானைகளையும் வேங்கை மரத்தையுமுடைய தலைவனே கேள் என்று தோழி தலைவனுக்கு அவன் நாட்டின் மலையின் இயற்கையை புலி, யானையாக உவமைப்படுத்தியுள்ளார்.
“உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கயைக்
கறுவுகொண்டு அதன் முதல்குத்திய மதயானை
நீடுஇருவிடர் அகம் சிலம்பக் கூய் தன்
கோடு புய்க்கல்லாது உழக்கும் நாட” (கலித்தொகை, பாடல்-2)
இயற்கை அழகு
தலைவன் நாட்டின் மலையை உவமிக்கும் போது, ஆசிரியர் கபிலர் சந்திரன் மலை மீது செல்லும் போது எப்படி இருக்கிறதாம்? மலைமீது தேனடை இருப்பது போல தோன்றுகிறதாம். அந்த மலையிலே நீண்ட மூங்கில்கள் வளர்ந்திருக்கின்றன. அந்த மூங்கில்கள் மலை மீது இருக்கும் தேனடையை எடுப்பதற்கு ஏணி வைத்தாற் போன்று காட்சி வழங்குகிறது என்று தற்குறிப்பேற்ற அணியில் குறிப்பிடுடுள்ளார்.
“வானூர் மதியம்வரை சேரின் அவ்வரை
தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்” (கலித்தொகை, பாடல்-3)
நீலக்கல் மோதிரம்
காந்தள் மலரில் உள்ள தேனைக் குடிக்கத் தும்பிகள் உட்கார்ந்திருக்கின்றன. எதைப் போல? தலைவியின் கையில் அணிந்திருந்த நீலக்கல் மோதிரம் போல இருந்தது என்று ஆசிரியர் உவமிக்கின்றார்.
“தகையவர் கைச்செறிந்த தாள்போல காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்க” (கலித்தொகை, பாடல்-7)
என்று ஆசிரியர் வடிவ உவமையாக இங்கேக் கையாண்டுள்ள விதம் வியப்பிற்குரியதாக இருக்கின்றது.
அதைப்போன்று மலையில் யானைகள் தழைகளைத் தின்றுவிட்டு நடந்து செல்கின்றது. இதனைக் கண்ட கபிலருக்குக் காட்டில் மலைகளே நடந்து சென்றது போல இருந்தது என்று உவமையைப் பதிவு செய்திருக்கிறார்.
“புணர்நிலை வளகின் குளகு அமர்ந்து உண்
புணர்மருப்பு எழில்கொண்ட வரை புரை செலவின்…” (கலித்தொகை, பாடல்-2)
புலியின் மீது வண்டுகள்
“வேங்கையஞ் சினை என விறற்புலி முற்றியும்
பூம்பொறி யானைப் புகர்முகம் குறுகியும்
வலிமிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல்...” (கலித்தொகை, பாடல்-10)
என்ற நூற்பா வரியில் வேங்கை மலர் என்று எண்ணிப் புலியின் மீதும், யானைகள் மீதும் மாறிமாறி வண்டுகள் மொய்க்கின்றன. ஏனென்றால் இரண்டு விலங்குகளின் முகத்திலும் புள்ளிகளிருக்கின்றன. அதைப் பூக்கள்தான் என்று நினைத்த வண்டுகள் அறியாமையால் அங்கு சென்று தேன் குடிக்கச் செல்கின்றன. ஆனால் அங்கு தேனில்லை. இது எப்படி உள்ளது? இரண்டு மன்னர்கள் தமக்குள் மாறுபட்டு வாட்போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இருவரும் போரிடும் போது அவர்களின் நன்மை கருதி இருவருக்கும் அறிஞர் தூது செல்வதுபோல உள்ளது என்று ஆசிரியர் உவமிக்கிறார்.
வீமனின் வீரம் உவமிக்கப்படுதல்
மலை நாட்டில் புலி ஒரு யானையின் பின்புறம் சென்று தாக்குகிறது. உடனே எச்சரிக்கையான யானை புலியைக் கிழேத் தள்ளி, தன் தந்தத்தால் குத்திப் பிளக்கிறது. இது எப்படி இருக்கின்றதாம்? பாரதப்போரில் வீமன் துரியோதனின் தொடையைப் பிளந்து இரத்தம் குடித்தது போல இருந்தது என்று கபிலர் மலைநாட்டின் நிகழ்வினை
“முறஞ்செவி மறைப்பாய்வு முரண்செய்த புலிசெத்து
மறந்தலைக் கொண்ட நூற்றருவர் தலைவனைக்
குரங்குஅறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்து அதன்
நிறம்சாட முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில் யானை” (கலித்தொகை, பாடல்-16)
மகாபாரதப் போரோடு இணைத்து உவமிக்கிறார்.
முழுமதி போன்ற முகம்
தலைவியின் முகத்தை உவமிக்கும் கபிலர் முழுமதி போன்ற முகம் என்று உவமிக்கிறார். ஒரு இடத்தில்,
“அகல் மதி
தீம் கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து
ஈங்கே வருவாள் இவள் யார் கொல்..” (கலித்தொகை, பாடல்-20)
உவமிக்கிறார்.
இது உலகில் உள்ள அனைத்துப் புலவர்களும் நிலவை ஒப்புமைப்படுத்தியது போன்று இல்லாமல், தீம் கதிர் என்று உவமிக்கும் பாங்கு கபிலரின் தனித்த ஆற்றலை இங்கு காணமுடிகிறது.
மேலும் தலைவியின் அழகான முகம் முழுநிலவைப்போல இருக்கிறது; கூந்தலோ மதியின் ஒளிக்குச் சற்றுங் குறையாது உள்ளது. கூந்தலில் சூடியுள்ள பூங்கருவழலைப் பாம்பின் மீது இருக்கும் ஆரல்வடிவெனதான வெண்கோட்டைப்போல உள்ளது என
“அணிமுகம் மதிஏய்ப்ப அம்மதியை மதிஏய்க்கும்
மணிமுக மாமழை நின்பின் ஒப்ப்ப் பின்னின்கண்
விரி நுண்ணூல் சுற்றிய ஈரிதழ் அலரி
அரவுக்கண் அணிஉறல் ஆரல்மீன் தகையொப்ப” (கலித்தொகை, பாடல்-28)
என மற்றொரு பாடலில் தலைவியின் முகத்தை நிலவுக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
தலைவியின் அழகு
கோதி முடித்தக் கூந்தல், வளைந்த முன்கை,நெடிய மென்தோள்கள்,பேரழகு வாய்ந்த நீலமலர் போன்ற மைத்தீட்டப்பெற்ற கண்களையுடையவள், மான் போன்ற மருண்ட பார்வையுடையவள், மழைக்காலத்து இளந்தளிரைப் போன்ற பளபளப்பான மேனி, ஒளிர்கின்ற நெற்றி, கூரிய முல்லை முகை போன்ற வெண்பற்கள், கொடி போன்ற நுண்ணிய இடை என தலைவியின் அழகை உவமிக்கும் பாங்கு வியப்பிற்குரியது. இதனை;
“வார்உறு வணர் ஐம்பால் வணங்குஇறை நெடுமென் தோள்
பேரெழில் மலர் உண்கண் பிணைஎழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிமேனி கவின்பெறு சுடர்நுதல்
கூர் எயிற்று முகைவெண்பல் கொடிபுரையும் நுசுப்பினாய்” (கலித்தொகை, பாடல்-22)
என்ற பாடல்வரியின் மூலம் காணலாம்.
மேலும் தாமரையின் மொட்டுக்களைப் போலப் பொன்னிலே முத்துக்களைப் பதித்த அழகான தொடி என்னும் பொன்நகையை அணிந்தவளே, காந்தள் மலர் போன்ற விரல்களையுடையவளே துடுப்புப் போன்ற திறண்ட நீண்ட கைகளையுடையவளே என்று தலைவியின் உடல் உறுப்புக்களைக் கபிலர் காந்தள் மலர், துடுப்பு போன்ற பொருள்களுடன் உவமிக்கிறார்.
“தளைநெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை
முளைநிமிர்ந் தவைபோலும் முத்துக்கோல் அவிர்தொடி
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண்ஏர்தண் ஏருருவின்
துடுப்பெனப் புரையும் நின்திரண்ட நேர்அரி முன்கைச்” (கலித்தொகை, பாடல்-23)
சூரியனின் நிறம்
பாலை நிலத்தின் கொடுமைகளை ஆசிரியர் சேரமான் பெருங்கடுங்கோ பல நூற்பாக்களில் உவமைகளாகப் பயன்படுத்தியுள்ளார். அவைகளில் பாலை நிலத்தில் சூரியன் எவ்வாறு தீம்பிழம்பாக வருகின்றான் என்பதை. ‘முப்புரம் எரித்த சிவனின் முகம் எவ்வாறு தீம்பிழம்பாக இருந்ததோ அதைப்போன்று இருந்தது’ என்று உவமைப்படுத்துகிறார்
”மாயம்செய் அவுணரக்
கடந்த அடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்
சீறரும் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்.” (கலித்தொகை, பாலைக்கலி - 30)
மேலும் பாலை நிலத்தின் கொடுமையை அடுத்து விளக்கும் ஆசிரியர் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடந்து இறுதியில் வெற்றி பெற்ற மன்னன் அந்த ஊரைத் தீவைத்துக் கொளுத்தி விடுவான். அப்படி தீவைத்துக் கொளுத்திய இடம் எப்படி காட்சியளிக்குமோ, அதுபோலப் பாலை நிலம் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
“செருமிகு சினவேந்தன் சிவந்து இறுத்த புலம்போல
எரி மேய்த்த கரிவறல்வாய் புகவு காணாவாய்
பொறி மலர்ந்தன்ன பொறிய மட மான்” (கலித்தொகை, பாலைக்கலி -41)
தலைவியின் உடல் நலம்
தலைவன் இல்லாமையால் தோன்றும் மாற்றத்தையும் வருத்தத்தையும் ஆசிரியர் குறிப்பிடும் பாங்கு பாராட்டுக்குரியது. தலைவியின் முகம் தலைவனைப் பிரிந்ததால் எப்படி இருந்தது என்பதை ராகு கேதுகளால் விழுங்கப்பட்ட மதிபோல இருந்தது என்று உவமிக்கிறார்.
“தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம் அம்முகம்
பாம்பு சேர் மதிபோல பசப்பு ஊர்ந்து
தொலைந்தகால்” (கலித்தொகை, பாலைக்கலி -43)
என்றும்,
தலைவியின் அழுத கண்ணீர்த்துளி எப்படி இருந்தது என்பதை, எரியும் திரியினின்றும் தெறித்து விழும் எண்ணெய்த் துளிபோல கண்ணீர்த்துளி சிந்தும் என்றும் தெரித்துவிழும் எண்ணைத் துளிக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
“புரி அவிழ் நறுநீலம் புரை உன்கண் கலும்புஅனா
திரிஉமிழ் நெய்யே போல் தெண் பணி உறைக்குங்கால்
என ஆங்கு...” (கலித்தொகை, பாலைக்கலி -43)
தலைவன் செலவு தவிர்த்தல்
தலைவன் பொருள்தேடச் செல்ல ஆயத்தமாகின்றான். செய்தி தலைவிக்குத் தெரிந்து தோழிக்குச் செல்கிறது. தோழி உடனே தலைவனைக் கண்டு, பலவாறு பாலைநிலத்தின் பாதகத்தை எடுத்துக் கூறுகிறாள். அதனால் அவன் செலவு செய்வதைத் தவிர்க்கின்றான். இந்தச் செய்தியை ஒரு நல்ல உவமையைக் கொண்டு ஆசிரியர் விளக்குகிறார்.
திருந்திய உடலுள் மருத்துவன் ஊட்டிய மருந்தைப்போல என் சொற்கள் அவன் மனமாசு போக்கும் நல் மருந்தாக இருந்தன என்று
‘பொருந்தியான் தான்வேட்ட பொருள்வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்து ஆகிமனன் உவப்ப
பெரும்பெயர் மீளி” (கலித்தொகை, பாலைக்கலி -45)
ஆற்றின் அழகு
ஆற்றங்கரையிலே உள்ள குளங்கள் நீர் நிரம்பியிருக்கின்றன. மலர்களும் நிரம்பியிருந்தன. அக்காட்சி எப்படி இருந்தது? அந்த ஆறு தன் கண்களை அகல விரித்து நோக்கியதுபோல இருந்தது என்று உவமையாக்கியுள்ளார். இதனை;
“வீருசால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறுகண் விழித்த போல கயம் நந்திக் கவின்பெற” (கலித்தொகை, பாலைக்கலி -61)
என்றும், இலவமரத்திலிருந்து பூத்தப்பூக்கள் கிழே விழுகிறது. இது எப்படி உள்ளது? தலைவியைக்கண்டு நகைப்பது போன்று உள்ளது என்று உருவகம் செய்துள்ளார்.
ஆறு முழுவதும் நீர் ஓடுகிறது. ஆற்றின் கரையிலிருந்த மரங்கள் நல்ல நீர் உண்டு மலர்களைச் சொறிந்தது நன்றி தெரிவிக்கின்றன. அதுபோல செல்வம் மிகுதியான் பலருக்கு வாரி வாரி வழங்கினான். அதனால் வறியவன் ஆனான். அவன் பால் பயன் பெற்ற ஒருவன் அவருக்குப் பொருள் தந்து பாதுகாப்பதைப்போல இருந்தது என்று உவமையால் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.
“மன்னுயி ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று
பல்நீரால் பாய்புனல் பரந்து ஊட்டி இறந்தபின்
சில்நீரால் அறல்வார் அகல்யாறு கவின்பெற
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்வர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல்” (கலித்தொகை, பாலைக்கலி -62)
மகளிர் ஆடுவது மயில் ஆடுவது போலவும், மயிலின் ஆடலுக்கேற்ப வண்டு பாடுகின்றதாம் என்று மயிலின் ஆடல் பாடலுக்கு உவமையாக
“கொடுமிடல் நாஞ்சிலான்தார் போல் மராத்து
நெடுமிசைச் சூழும்மயில் ஆலும் சீர்
வடி நரம்பு இசைப்போல வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
தொடிமகள் முரற்சிபோல் தும்பிவந்து இமிர்தர” (கலித்தொகை, பாலைக்கலி -64)
முல்லைக்கலி
சோழன் நல்லுருத்தினரால் பாடப்பட்ட முல்லைக்கலியில் பல்வேறு வகைப்பட்ட உவமைகள் கையாளப்பட்டுள்ளன. முல்லைக்கலியில் காளைகள் வீரர்களைத் தன் கொம்புகளால் குத்தியதால் குடல் சரிந்து இறந்து கிடக்கின்றனர். அந்தக் குடலைப் பருந்துகள் தூக்கிக்கொண்டு சென்று மரக்கிளையில் தொங்கவிட்டன. இது மரத்தடியின் கீழ் இருக்கும் சாமியை வணங்கச் சென்றவர்களுக்கு மரத்திலிந்து மலர் மாலைகள் தொங்குவது போன்று இருந்தன என்று ஆசிரியர் உவமிக்கிறார்.
“ஏறு தம் கோலம்செய் மருப்பினால் தோண்டிய வரிக்குடர்
ஞாலம்கொண்டு அழூஉம் பருந்தின் வாய் வழீஇ
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல்
தூங்கும் சினை ஆங்கு” (கலித்தொகை, முல்லைக்கலி -70)
தலைவியை நீராட்ட அவள் தாய் அழைக்கின்றாள். தலைவியும் செல்கின்றாள். யாருக்கும் தெரியாமல் தலையில் அணிந்திருந்த பூவைத் தலைவி எடுக்க முற்படுகிறாள். அதற்குள் அது கீழே விழுந்து விடுகிறது. இதனை இல்லத்தில் இருந்த அனைவரும் பார்த்து விடுகின்றனர். ஏனெனில், அவள் வைத்திருந்த மலர் இவர்கள் நிலத்திற்குரியது அல்ல. பிற நிலத்தைச் சார்ந்த மலர். அதுவும் தன் தலைவன் நாட்டின் மலர். இதனைக் கண்ட இல்லத்தார்கள் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். அது எவ்வாறு இருந்தது என்பதை
“நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு” (கலித்தொகை,முல்லைக்கலி -79)
நெருப்பைத் தொட்டவர்கள் போன்று அனைவரும் திகைத்துப் பார்த்தனர் என்று உவமைப்படுத்தியுள்ளார்.
மருதக்கலி
மருதக்கலியின் ஆசிரியர் மருதன் இளநாகனார் ஆவர். இதிலும் பல்வேறு பாடல்களில் உவமை பொதிந்துள்ளன.
தாமரைப் பொய்கையில் அன்னப்பறவை தாமரை மலரைத் தன் பெடையுடன் சுற்றிச் சுற்றி வருகின்றன. இது ஆசிரியரின் பார்வைக்குக் கணவன் மனைவி இருவரும் திருமணம் நாளில் தீ வலம் வந்ததுபோல இருக்கின்றது என்று குறிப்பிடுகிறார்.
“மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை தன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் போல” (கலித்தொகை, மருதக் கலி -85)
முல்லை நிலத்தலைவன் ஆடல்மகளிர் இல்லத்திலிருந்து வருகின்றான். அவனைக் கண்ட தலைவி எங்கே சென்று வருகிறாய் என்கிறாள். அவன் ஏதேதோ பிதற்றுகின்றான். தலைவி கேட்கிறாள், வயலில் நண்டு ஊர்ந்தால் எப்படிச் சுவடும், கீறலும் இருக்குமோ அந்த மாதிரி இருக்கிறது உன் முகமும், மார்பும் நீ என்னடா என்றால் ஒன்றும் தெரியாதவன் போல் பேசுகின்றாய் என்பதைனை
“இஃது ஒத்தான் புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் போல” (கலித்தொகை, மருதக்கலி -104)
என்ற பாடல் வரியால் தலைவனின் முகத்தி ஏற்பட்டுள்ள வடுவை நண்டு ஓடிய பாதையாக உவமிக்கிறார்.
நெய்தற்கலி
நெய்தகலியைப் பாடியவர் அந்துவனார் ஆவர்.
“நிலவுக்காண்பது போல அணி மதி ஏர்தர
கண் பாயல்பெற்ற போல் கணைக் கால் மலர் கூம்ப
தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம் துஞ்ச
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்புபுதல் நந்த” (கலித்தொகை, நெய்தற்கலி -118)
என்று தாமரை மலர்கள் கணவனைத் தழுவிய மகளிர்போல கண் துயில்கின்றன. தன் புகழ் கேட்ட சான்றோர்கள் போல முல்லை மலர்கிறது. பிரிந்த மகளிரைக் கண்டு நகைப்பதுபோல வண்டுகள் பாடுகின்றன. வேய்ங்குழல் ஊதுவதுபோல பறவைகள் எல்லாம் தன் கூடு நோக்கிச்செல்கின்றன. என்பதை இயற்கையோடு பல்வேறு உவமைகள் வாயிலாக ஆசிரியர் இனிமை பயக்கத் தருகிறார்.
திருமால் கடலில் பள்ளிக்கொள்வதை ஆசிரியர் கடல் அமைதியாக இருக்கின்றன. வண்டினங்கள் ஒலிக்கின்றன; தும்பிகள் ஊதுகின்றன. வண்டின் ஒலியும் தும்பியின் ஊதலும் எப்படி இருக்கிறது யாழிசையும் பாட்டிசையும் போல உள்ளன. அந்த இசையில் மயங்கித் திருமால் துயில் கொள்கிறார் என்ற உவமை பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இதனை,
”சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இருந்தும்பி இயைபு ஊத
அருங்குடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
அறம் பொருள்மரபின் மால்யாழ் கேளாக் கிடந்தான் போல..” (கலித்தொகை, நெய்தற்கலி -122)
என்று நெய்தல் நில வருணனை அழகான உவமைக்கொண்டு படைத்துள்ளார்.
நீலக் கடலை ஒட்டிய மணல் மேட்டிலே காவியுடுத்த துறவிகள் ஒருபால்; பெருநாரைகள் ஒருபால், அப்படி நாரைகள் பொழுது முழுதும் மீன்களைத் தின்றுவிட்டு கடற்கரை ஓரங்களில் மணல்மேட்டில் நிற்கும். அப்படி நிற்கும் போது, நாரைகளின் அலகு மிக நீண்டதாக இருக்கும். அது நிலத்தில் ஊன்றியப்படி இருக்கிறது இதனைக் கண்ட ஆசிரியருக்கு காவியுடை அணிந்த துறவிகள் கையில் தடி ஊன்றிச் செல்வது போல இருந்தது என்று உவமிக்கிறார்.
“செக்கர்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல
எக்கர்மேல் இறைகொள்ளும் இலங்கு நீர்த் தண்சேர்ப்ப
அணிச்சிறை இனக்குருகு ஒலிக்குங்கால் நின் தின்தேர்” (கலித்தொகை, நெய்தற்கலி -125)
என்று கவிதைமொழி பற்றிப் பேசும் அரிஸ்டாட்டில் கவிதையில் உவமை, சிறந்த பொருள்களையே உவமானமாகவும் உருவாகமாகவும் அழகாகவும் அமைதல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். (It is metaphor above all thing perspicuity pleasure and foreignair) கலித்தொகையில் ஆசிரியர் அரிஸ்டாட்டில் குறிப்பிட்ட கவிதைமொழி அழகையும் கையாண்டுள்ளதை நாம் காணலாம்.
நல்ல அரசன் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான். இடையில் இறந்து விடுகின்றான். இடையில் ஒரு குறுநில மன்னன் ஆட்சி செய்கின்றான். அது எப்படி இருக்கிறது? யானை இருந்த இடத்தில் பூனை இருப்பது போல இருக்கிறது என்று குழப்பத்தைக் கொண்டு வரும் மாலைநேரம் என்று மாலைநேரத்திற்கு உவமையாக விளக்கியுள்ளார்.
“எல் உருதெரு கதிர் மடங்கி தன் கதிர் மாய
நல் அறநெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலைவர” (கலித்தொகை, நெய்தற்கலி -128)
முடிவாக...
* கலித்தொகையில் உவமைகள் என்ற இத்தலைப்பில் கலித்தொகையில் இருக்கும் 150 பாடல்களில் நூறு பாடல்களுக்கு மேல் உவமைகள் பயின்று வந்துள்ளன. * பல்வேறுவகைப்பட்ட உவமைகளை விளக்கித் தொல்காப்பியர் குறிப்பிட்ட முப்பத்தாறு உவம உருபுகளும் அவையல்லாமல் பிறவுமாகக் கூறும் உவம உறுபுகளும் இடம் பெற்றுள்ளன.
* அணிகளுக்கெல்லாம் தாய் அணியாக விளங்குவது உவமையணியே என்ற கூற்று முற்றிலும் உண்மையே.
ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட நூல்கள்
1. அ. ச. ஞானசம்பந்தன் , இலக்கியக்கலை, கழக வெளியீடு, 1964.
2. ச. அகத்தியலிங்கம், தொல்காப்பியக் கவிதையியல்,மணிவாசகர் பதிப்பகம், 1999.
3. சு. சக்திதாசன், கலித்தொகை மூலமும் உரையும், செம்பியன் பதிப்பகம், புதுச்சேரி.
4. க. வெள்ளைவாராணனார், தொல்காப்பியம் பொருளதிகாரம், உவமையியல் மாணவர் பதிப்பகம், தியாகராயர் நகர், சென்னை.
5. அ. அ. மணவாளன், அரிஸ்டாடிலின் கவிதை இயல், நியூசெஞ்சுரி புக் கவுஸ், சென்னை, 98. மு.ப.1991.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.