புறநானூற்றில் மெய்ப்பாடுகள்
ரா. வனிதா
உதவிப்பேரசிரியர், மொழித்துறை,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த), கோயமுத்தூர் - 641 028.
முன்னுரை
பண்பாட்டுக் களஞ்சியமாகவும், இலக்கியக் கருவூலமாகவும் விளங்கும் புறநானூறு அக்கால மக்களின் வாழ்வியலையும், மறப்பண்புகளையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அக்கால மக்களின் உணர்வுகளை அதே உக்கிரத்தோடு அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவ்வுணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடுகளாக மிளிர்கிறது. அம்மெய்ப்பாடுகள், சங்கஇலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரைவழிக் காண்போம்.
மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாக,
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”(தொல்.மெய்:247)
என்று தொல்காப்பியா் விளக்கியுள்ளார். இதில் காணப்படும் மெய்ப்பாடுகளான நகை என்பது இகழ்ச்சியிலும், அழுகை என்பது அவலத்திலும், இளிவரல் இழப்பிலும், மருட்கை என்பது வியப்பிலும், அச்சம் என்பது அஞ்சத்தகுவனவற்றிலும், பெருமிதம் என்பது வீரத்திலும், வெகுளி என்பது வெறுக்கத்தக்கனவற்றிலும், உவகை என்பது சிருங்காரத்திலும் பிறக்கின்றது. இந்த மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு விளங்குகிறது.
நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”(தொல்.மெய்:248)
என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.
எள்ளல்
எள்ளல் என்பது இகழ்ச்சிக் குறிப்பாகவோ, நகைமொழியாகவோ, கேலி பேசுவதாகவோ அமையும். அந்த வகையில், நிலத்தே கிடந்த சிவந்த ஒளிவிடும் அணிகலன்களைக் கண்டெடுத்த மந்திகள் அவ்வணிகளன்களைத் தாம் அணிந்து விளங்குவதைக் காண்போர் கண்டு சிரித்து மகிழ்வதாகக் கூறுமிடத்து,
“நிலம் சோ் மாதா் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே” (புறம்:378:20-22)
என்னும் வரிகள் தெளிவுபடுத்துகிறது. மேலும், ஒருபாடலில் தன்னிடம் தோற்றோடிய பகைவனின் முதுகைக் கண்டு சிரிக்கும் இகழ்ச்சிக் குறிப்பை,
“தனக்கு இரிந்தானைப் பெயா் புறம் நகுமே” (புறம்:284:8)
என்ற பாடல்வரி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
“நாணாய் ஆயினும், நாணக் கூறி என்
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி” (புறம்:211:13-14)
இங்கு சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்ததன் காரணமாகப் பெருங்குன்றூர் கிழார் நீ நாணாய் ஆயினும் நாணுமாறு கூறிச் செல்வேன் பின் உன்னுடைய வெற்றியையும் வாழ்த்திப் போவேன் என்று கூறுவது இகழ்ச்சிக் குறிப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது.
இளமை
இளமை என்னும் பொருளைக் காணுமிடத்து, அது பிள்ளைத் தன்மைக் குறித்து அமைந்துள்ளது. புறநானூற்றில், கோப்பெருஞ்சேரல் இரும்பொறை நாட்டையே குழந்தையாகப் பாதுகாப்பதாகக் குறிக்கப்படுகிறது. இதனை,
“... ... ... ... ... காவல்
குழவி கொள்பவரின், ஓம்புமதி!” (புறம்:5:6-7)
என்று காட்டுகிறது. குழந்தையின் தன்மையை நாம் பார்த்தோமேயானால் புறநானூற்றில் அழகான ஒருபாடலை எடுத்துக்காட்டலாம்.
“குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை... ... ...” (புறம்:188:3-6)
என்னும் பாடல்வரி இளமை என்னும் நிலைக்களனைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது.
பேதைமை
அறிவின்மைப் பொருளை உணர்த்தும் பேதைமை என்னும் நிலைக்களனைக் காணுமிடத்து, பிறா்க்குக் கொடை அளிக்கும் போது அறியாமை உடையவனாக விளங்கும் பேகன், பிறா் படை வந்து போர் செய்யும் போது அப்படையிடத்து தான் அறியாமைபடான் என்பதை,
“கடாஅ யானைக் கழற்காற் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான்” (புறம்:142:4-6)
என்ற பாடலில் பேகனின், அறிவின்மை எவ்விடத்துத் தோன்றுகிறது எவ்விடத்துத் தோன்றவில்லை என்பதைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
மடன்
மடன் என்னும் பொருளைப் பார்த்தோமேயானால், புறநானூற்றில் உள்ள ஒரு பாடலில் நாஞ்சில் வள்ளுவனை ஔவையார், பிறா்க்குக் கொடுத்து உதவுவதில் எதையும் அறியாத மடன் உடையவனாக விளங்குகிறானே என்கிறார். இதனை,
“மடவன் மன்ற... ... ..." (புறம்:140:2)
" ... ... ... அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?” (புறம்:140:9)
என்ற பாடல் வரிகள் தெளிவுபடுத்துகிறது.
அழுகையும், அழுகைப்பொருளும்
கெடுதலில்லாத நிலையையுடைய அழுகை என்னும் மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும். அதனை,
“இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல்.மெய்:249)
என்ற தொல்காப்பியச் சூத்திரம் வழி அறியலாம்.
இழிவு
இழிவு என்னும் மெய்ப்பாட்டு நிலைக்களன் பிறரால் இகழப்பட்டு எளியராதலாகிய தாழ்வு நிலையைக் குறிப்பதாக வரும்.
“நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலா்கொல்?” (புறம்:15:15-16)
என்று பாண்டியனின் படையின் வலிமையை அழிக்குமாறு தம் ஆவல் செலுத்த வந்த பகைவா்கள் தற்போது அவ்வாவல் நீங்கி இகழ்ச்சியுடன் வாழ்பவா் ஆயினரே என்று விளக்கப்படுகிறது, மேலும்,
“குடி பழி தூற்றும் கோலோன் ஆகுக” (புறம்:72:12)
என்று பாடல் வரியில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போரில் வெற்றி பெறவில்லையெனில் பிறரால் இகழப்படும் தாழ்வுநிலை அடைவேனாகுக! என்று சபதம் செய்வதையும் காணமுடிகிறது. மேலும்,
“ஐயோ எனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே அகன்மார்பெடுக்க வல்லேன்
என்போற் பெருவிதுப் புறுக நின்னை
இன்னாதுற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிகழ் சோ்க நடத்திசிற் சிறிதே” (புறம்: 255)
என்ற இப்பாடல் இளிவு பற்றி வந்த அழுகையைக் குறிக்கிறது.
இழவு
உயிரானும், பொருளானும் இழந்து வாடும் தன்மையைக் குறிக்கும் இழவு என்னும் நிலைக்களனை, விளக்குமிடத்து மூதிற்பெண்டிரின் இழப்பை,
“எந்தையொடு கிடந்தோர்,; எம் புன் தலைப் புதல்வா்
இன்ன விறலும் உளகொல், நமக்கு? என
மூதிற் பெண்டிர் கசிந்து அழ” (புறம்:19:13-15)
என்றும், பாரியை நினைத்து கபிலா் அழும்நிலையை,
“பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேம் தொழுது” (புறம்:113:5-6)
என்றும், கணவனை இழந்த பெண் அழும் நிலையை
“அழுதல் ஆனாக் கண்ணள்” (புறம்:249:13)
என்றும் விளக்குகிறது.
அசைவு
முன்பு வேட்டைக்காரனாக இருந்தவன் தற்போது தாளி இலையைப் பறித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை,
“சொல் வலை வேட்டுவன் ஆயினன், முன்னே!” (புறம்:252:5)
“அள் இலைத் தாளி கொய்யுமோனே” (புறம்:252:3)
என்று முந்தைய நன்னிலைக் கெட்டு தன்னிலை தாழ்ந்த அசைவு என்னும் நிலைக்களனை இப்பாடல் வரிகள் தெளிவுபடுத்தியுள்ளது.
வறுமை
இல்லாமை என்னும் பொருளைக் குறிக்கும் வறுமை என்னும் நிலைக்களனை, புறநானூற்றில் இரவலா்களின் வறுமையைக் காட்டும் வகையில் பலபாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு சிலவற்றைக் காணுமிடத்து,
“நின்நசை வேட்கையின் இரவலா் வருவா் அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவா்
இன்மை தீர்த்தல் வன்மையானே” (புறம்:3:24-26)
என்றும்
“வல்லார் ஆயினும், வல்லுநா்ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள, வல்லை ஆகுமதி” (புறம்:27:17-18)
என்றும்
“... ... ... வயிரியா்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே” (புறம்:164:12-13)
என்றும் கூறப்படுவதிலிருந்து அறியலாம்.
இளிவரல்
இளிவரல் என்னும் மெய்ப்பாடு,
“மூப்பே பிணியே வருத்த மென்மையொடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல்.மெய்:250)
என்ற நான்கு விதமான பொருளையும் வெளிப்படுத்துகிறது.
மூப்பு
இளிவரல் என்னும் மெய்ப்பாட்டின் நிலைக்களன்களில் முதலில் வருவது மூப்பே. மூப்பின் பொருளான இளமை கழிந்ததைப் பல பாடல்களில் காணமுடிகிறது. அவ்வகையில்
“... ... ... நரை முதிர் திரை கவுள்,
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே!” (புறம்:195:2-3)
என்றும்
“... ... ... யாண்டு உண்டு கொல்லோ
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று
இரும் இடை மிடைந்த சில சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?” (புறம்:243:11-14)
என்ற பாடல் வரிகள் மூப்பைப் பற்றி விளக்கியுள்ளது.
பிணி
நோய்பட வருந்தும் பிணி என்னும் நிலைக்களனை விளக்குமிடத்து பெண்களின் கண்கள் பசலை பாய்ந்து, தோள் மெலிந்து வாடும் பசலை நோயால் பாதிக்கப்பட்டதை,
“பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று” (புறம்:96:4-5)
என்ற வரிகள் தெளிவுபடுத்தும்.
வருத்தம்
மனச்சோர்வு பெற்று வருந்தும் நிலையை எடுத்துக்காட்டும் விதமாக,
“... ... ... பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப” (புறம்:194:3-4)
என்கிறது. இதில் கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களினின்றும் கண்ணீர் சொரியக் கலங்குவதாகக் காட்டுகிறது. மேலும்,
“தொடா்ப்படு ஞமலியின் இடா்ப்படுத் திரிஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுரை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணு மளவை
ஈன்ம ரோவிவ் வுலகத் தானே” (புறம்:74)
என்ற பாடல்வரிகள் வருத்தமென்னும் நிலைக்களனைக் காட்டி நிற்கின்றது.
மென்மை
ஒருவன் தான் வாழுங்காலத்திலே புகழுக்குரிய பல செயல்கள் செய்திருப்பினும், கூட அவனால் மாண்ட பின்பு திரும்பி வர இயல்வதில்லை என்னும் அவனின் இயலாமையைக் குறித்து அமைந்த மென்மை என்னும் நிலைக்களனை,
“படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!” (புறம்:239:21)
என்ற வரி தெளிவுபடுத்துகிறது.
மருட்கை
புதுமையையும், பெருமையையும், சிறுமையையும், ஆக்கத்தையும் வெளிப்படுத்துமிடத்து மருட்கை என்னும் மெய்ப்பாடு தோன்றுவதாகத் தொல்காப்பியா் கூறுகிறார்.
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (தொல்.மெய்:251)
என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இதனை விளக்குகிறது.
புதுமை
மருட்கை என்னும் மெய்ப்பாட்டின் முதல் நிலைக்களனாக அமைவது புதுமையாகும். புதுமை என்பது யாதோன்றானும் எவ்விடத்தும் எக்காலத்திலும் தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தலாகும்.
“முன்னோர் செல்லவும் செல்லாது, இன்னும்” (புறம்:365:7)
“நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால், உணர்ந்திசினோரே” (புறம்:365:10-11)
இங்கு நிலமகள் அழுததாகச் சொல்லப்படுவது புதுமை என்னும் நிலைக்களனைத் தெளிவுபடுத்தும் விதமாக உள்ளது.
பெருமை
முன் கண்டு பழகியன போல் அல்லாது அளவில் மிக்கன கண்டு வியத்தலைக் குறிக்கும் பெருமை என்னும் நிலைக்களனைக் காணுமிடத்து,
“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம்: 16: 12)
என்ற பாடல் வரி முன் எப்போதும் போல் அல்லாது தற்போது முருகனைப் போன்று சீற்றத்துடன் போரிட்டுப் பகைவரின் நாடழித்த சோழனின் பெருமையைக் கண்டு வியக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைகிறது.
ஆக்கம்
ஒன்றன் பரிணாமம் கண்டு வியத்தலாகிய ஆக்கம் என்னும் நிலைக்களனைக் காணுமிடத்து,
“எழுவா்நல் வலம் கடந்தோய்!” (புறம்:19:18)
என்பது நெடுஞ்செழியன் தன்னை இளையன் எனக் கருதிப் போரிட்ட எழுவரையும் தலையாலங்கானத்தில் வென்றான் என்னும் செய்தியைக் குறிக்கிறது. அதுமட்டுமல்லாது,
“இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்’ என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே” (புறம்:19:5-7)
என்னும் வரிகளில் அவனைக் குடபுலவியனார் தழுவிய வண்ணம் அவனின் வீரத்தைப் புகழ்ந்து கூறுவதாகச் சொல்லப்படுவதிலிருந்தும் அவனது ஆக்கம் வெளிப்படுகிறது.
அச்சம்
முரண்படுதல் அமையாத அச்சமானது,
“அணங்கே விலங்கே கள்வா்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல்.மெய்:252)
என்னும் வகையில் அமைந்துள்ளதாகத் தொல்காப்பியம் காட்டுகிறது.
அணங்கு
அச்சம் என்னும் மெய்ப்பாட்டில் முதலில் வருவது அணங்கு எனும் நிலைக்களனாகும். தமிழ் இலக்கியங்களில் அணங்கு என்பதை யாரும் கண்டு உயிருடன் மீள முடியாத அழகின் எல்லையானது காண்பாரை வருத்தும் உருவாக அமைகின்றது, என்கின்றனர்.
“அணங்குடை அவுணர்” (புறம்:174:1)
“அழு குரற் பேய்மகள் அயர” (புறம்:370:25)
இவ்வரிகள் அணங்கின் பொருளைத் தெளிவுபடுத்துகிறது.
விலங்கு
கொடிய விலங்குகளின் செயல்களைக் காணுமிடத்து, புலிதான் செய்யும் வேட்டைக்கண் பசியுற்றபோதும் இடப்பக்கம் வீழ்ந்ததை உண்ணாது செல்லும், பின்பு களிற்றை வலப்பக்கத்தே வீழுமாறு கொன்று உண்ணும். இதனை,
“பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன” (புறம்:190:8-10)
என்று விளக்குகிறது.
கள்வா்
நீரில்லா நெடிய வழியில் வரும் புதியவா்களை வருத்துதற்குத் தொலைதூரத்தில் இருந்தும், பார்த்தும், அம்புகளைத் தவறாது விடும் திறம் உடைய மறவரிடம் அம்புக்கு இலக்காகி வீழ்ந்தோர் நிலையை,
“கவிகண் நோக்கின்
செந்தொடை பிழையா வன்கண் ஆடவா்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்” (புறம்:3:19-21)
என்றும்,
“அன்பு இல் ஆடவா்கொன்று ஆறு கவர,
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று
வன் கலை தெவிட்டும் அருஞ் சுரம் இறந்தோர்க்கு” (புறம்:161:9-11)
என்றும் விளக்குகிறது. இதில் வழிச்செல்வார் பொருளைப் பறித்தும், உயிரைப்பறித்தும் கொடுஞ்செயல் புரியும் கள்வரைப் பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இறை
இறை என்னும் நிலைக்களன் தந்தையா், ஆசிரியா், அரசா் என்று சுட்டப்படுகிறது. அந்த வகையில்,
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்:312:2)
என்பதில் தன்குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி, அதனைப் பெறுவதற்குரிய அறிவு, அதற்குரிய செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாக தன் மகனை ஆக்குதல் தந்தைக்குக் கடமையாகச் சொல்லுமிடத்தும், அதுபோல ஆசிரியரைப் பற்றிக் காணுமிடத்து,
“உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே” (புறம்: 183:1-2)
என்கிறது. இதில் தன் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து அது தீர்த்தற்கு உதவி செய்தல் வேண்டும், மிக்க பொருளை அவா்க்குக் கொடுக்க வேண்டும். மிக்க பொருள் கொடுத்தும் ஆசிரியரை வழிபடுதற்கு வெறுப்படைதல் கூடாது என்று ஆசிரியருக்கு மதிப்பு கொடுப்பதை விளக்குமிடத்தும், மேலும் அரசரைப் பற்றிக் காணுமிடத்து,
“கொடியன் எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பி” (புறம்:72:11)
இங்கு போரில் வெற்றி பெறவில்லை எனில் மக்கள் ‘எம் அரசன் கொடியவன்’ என்று என்னைப் பழி தூற்றும்படி ஆகட்டும் என சபதம் ஏற்று நெடுஞ்செழியன் செல்லுமிடத்தும் இறை என்னும் நிலைக்களனின் தன்மையைத் தெளிவுபடுத்துகிறது.
பெருமிதம்
“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.மெய்:253)
இங்கு சொல்லப்பட்டுள்ள பெருமிதம் கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்னும் நான்கு பொருளையும் காட்டி வருகிறது.
கல்வி
தவமுதலாகிய வித்தை, கல்வி என்னும் பொருளில் எடுத்தாளப்படுகிறது.
“கல்வியென் என்னும், வல் ஆண் சிறாஅன்” (புறம்:346:3)
ஆண்மையையுடைய இளையோனாகிய வீரன் ஒருவன் கல்வியுடையேன் என்ற பெருமிதம் கொண்டவனாய் உள்ளான் என்றும் விளக்கப்படுவது கல்வியின் பெருமிதத்தைக் காட்டுகிறது.
தறுகண்
அஞ்சத்தக்கன கண்டு அஞ்சாமையைக் குறிக்கும் தறுகண் என்னும் பொருளை ஆராயுமிடத்து,
“ஊர் பெரிது இகந்தன்றும் இலனே, அரண் எனக்
காடு கைக் கொண்டன்றும், இலனே” (புறம்:257:6-7)
என்று சொல்லப்படுகிறது. இதில் வீரன் ஒருவன் அஞ்ச வேண்டிய சூழல் உருவான நிலையிலும் அஞ்சாது பேராண்மையோடு விளங்கியதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோல கூற்றைக் கண்டும் அஞ்சாதத் தன்மையை,
“... ... ... ஆராக் கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ” (புறம்:361:2-3)
என்று சொல்லப்படுவதன் மூலம் தறுகண் என்னும் நிலைக்களன் தெளிவுபடுத்தப்படுகிறது.
புகழ்
இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமையே ஒருவனுக்கு புகழைக் கொடுக்கும். அதனை,
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது” (புறம்:195:6-8)
என்று தீவினைகளைச் செய்யாது விலக்கும்போதே எல்லாராலும் புகழப்படும் நிலை எய்த முடியும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்கிறது.
கொடை
உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தும் உதவும் உதவியைக் கொடை என்னும் நிலைக்களனாகச் சொல்லப்படுகிறது. இங்கு நலங்கிள்ளி, சமையற்கலங்கள் எப்போதும் நிறைந்திருக்குமாறு, வழங்குவதோடு மதுரையையே தரும் தன்மை கொண்டவன் என்பதை
“கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்,
... ... ... ... ...
மாடமதுரையும் தருகுவன்” (புறம்:32:1-5)
என்றும், வாழ்நாள் நீட்டிக்கும் என்று அறிந்திருந்தும் அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாமல் ஔவைக்குக் கொடுத்த அந்தக் கொடையினை,
“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!” (புறம்:91:7-11)
என்றும், அறிவில்லாதாரும், புல்லிய குணத்தாரும் சென்றாலும்கூட பாரி மகிழ்ச்சியுடன் வாரி வழங்குவதைக் கடமையாகவுடையவன். மேலும் பரிசாக நீயே வேண்டும் என்று இரப்பாராயின் அப்போதே அவா்உடைமையாகிவிடும் இயல்புடையவன் என்பதை,
“மடவா்மெல்லியா் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே” (புறம் 106:4-5)
என்றும்
“பாரியும்; பரிசிலா் இரப்பின்,
வாரேன் என்னான் அவா்வரையன்னே” (புறம் :108:5-6)
என்றும் விளக்கப்படுகிறது.
வெகுளி
வெறுத்தலால் வரும் வெகுளியை,
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே” (தொல்.மெய்:254)
என்னும் நான்கு பொருளால் காட்டுகிறார் தொல்காப்பியா்.
உறுப்பறை
உறுப்பறை என்பது அங்கமாயினவற்றை அறுத்தல் என்னும் பொருளில் வருகிறது. வல்வில் ஓரியின் அம்பு யானை, புலி, கலைமான், பன்றி என்ற அனைத்து விலங்குகளையும் கொன்றுவிடும்படி அவற்றின் உடம்பினைச் சிதைத்து அழித்தது. இதனை,
“வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
... ... ... ... ...
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்” (புறம்:152:1-7)
என்று விளக்கப்பட்டுள்ளது.
குடிகோள்
கீழ்வாழ்வாரை நலிதல் என்னும் குடிகோள் நிலைக்களனைக் காணுமிடத்து குடிமக்களின் அன்பு கெடும்படி பெறும்; பொருளின்தொகுதியை, அரசன் விரும்புவானேயானால் அதனை அவனும் உண்ணப்பெறாமல், அவனது உலகமும் கெடும்படி செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது. அதனை,
“வரிசை அரியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே” (புறம்:184:8-11)
என்று தனக்குக் கீழ் வாழ்வாரை நலிதலால் உண்டாகும் தீமை எடுத்துச் சொல்கிறது இப்பாடல்.
அலை
“வரிவயம் பொருத வயக் களிறு போல
இன்னும் மாறாது சினனே” (புறம்:100:7-8)
புலியால் அலைக்கப்பட்ட யானை பொருது போந்தும், அதனை நினைந்து சினம் கொள்ளும் வைதலும், புடைத்தலுமாகிய தன்மையை அலை என்னும் நிலைக்களன் வழி விளக்கப்பட்டுள்ளது.
கொலை
பகைவா்களைக் கொல்லுதற்கு ஒருப்படுதல் என்பது கொலை என்னும் நிலைக்களனைக் குறித்து அமையும்.
“உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி,
... ... ... ... ...
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக!” (புறம்:72:6-12)
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன்னை எதிர்க்கும் பகைவா்களைக் கொல்லுவதற்கு ஒருபடுதலை இப்பாடல் வரிகள் தெளிவுபடுத்துகிறது.
உவகை
துன்பத்தை நீக்கும் மகிழ்ச்சி எனும் மெய்ப்பாடு
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல்.மெய்:255)
என்று செல்வநுகா்ச்சி, ஐம்புலன் நுகா்ச்சி, வாழ்க்கை நுகா்ச்சி, மற்றும் ஒன்றுசோ்ந்து ஆடும் விளையாட்டு ஆகியவற்றை விளக்குகிறது.
செல்வம்
செல்வ நுகா்ச்சியைக் காணுமிடத்து, பெருஞ்செல்வமாகிய இன்பத்தை நுகர விரும்பியவன், நிலம் பொதுவாய் அமைந்தது எனும் சொல் பொறுக்க முடியாது தவித்ததாகச் சொல்வதை,
“போகம் வேண்டி பொதுச் சொல் பொறாஅது” (புறம்:8:2)
என்றும்
“செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” (புறம்: 189:7-8)
என்றும் செல்வ நுகா்ச்சிக்கானப் பொதுவான கருத்தையும் பதிவு செய்கின்றனர்.
புலன்
ஐம்புலன்களின் நுகா்ச்சியைக் காணுமிடத்து,
“மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல்” (புறம்:161:28)
என்றவரி புலன் என்னும் நிலைக்களனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
புணர்வு
இங்கு மனைவியும், கணவனும் சோ்ந்து வாழும் வாழ்க்கை நுகா்;ச்சியின் இனிமையைக் காட்டும் புணர்வு என்னும் நிலைக்களனை விளக்கும் வகையில்,
“நெஞ்சு அமா்காதல் நின்வெய்யோளொடு” (புறம்:391:18)
இங்கு நெஞ்சமார்ந்த காதலை உடைய என்றும் நின்னால் விரும்பப்பட்ட மனைவி என்றும் சொல்லப்படுவதிலிருந்து தலைவனும் தலைவியும் மனம்ஒத்து அன்புடன் சோந்து வாழ்ந்துள்ளதைக் காட்டுகிறது.
விளையாட்டு
ஒன்று சோ்ந்து ஆடும் விளையாட்டை, குறிக்குமிடத்து இளமகளிருடன், ஓளிவு மறைவறியாத இளமைந்தா் விளையாடுவதைச் சுட்டும் விதமாக,
“இனி நினைந்து இரக்கம் ஆகின்று, திணி மணல்
... ... ... ... ...
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு” (புறம்:243:1-5)
என்றும், மகளிர் மணல்திடலில் உள்ள மேட்டில் விளையாடுவதை,
“முதிர் வார் இப்பி முத்த வார் மணல்
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்” (புறம்:53:1-3)
என்றும் சொல்லி விளக்கப்படுகிறது.
முடிவுரை
* மெய்ப்பாடுகள், புறநானூற்றில் எவ்வாறெல்லாம் எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.
* புறநானூறு, அறிவுப் பெட்டகமாக விளங்குவதால் அதில் அள்ள அள்ளக் குறையாமல் உணர்வுகள் பொதிந்துகிடக்கின்றன. அவ்வுணர்வுகளின் வெளிப்பாட்டில் சிலவற்றை மட்டுமே இக்கட்டுரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
* புறநானூறு, உணர்ச்சிகளின் இருப்பிடமாகவே அமைந்துள்ளது.
* ஒவ்வொரு உணர்ச்சியும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது.
* மெய்ப்பாட்டின் நிலைக்களன்களை ஆராய்வதற்கு புறநானூற்றினை ஒரு பொpய ஆய்வுக்களமாகவே அமைக்க இயலும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
துணை நின்றவை
1. தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
2. புறநானூறு, முனைவா் கு. வெ. பாலசுப்பிரமணியன், அ. விசுவநாதன், நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை.2011
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.