திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்புமுறை உறுதுணையாதல்
முனைவர் ப. கொழந்தசாமி
பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி.
முன்னுரை
உலகப்பொதுமறை, வான்மறை, வாழும் வள்ளுவம் என்றெல்லாம் போற்றப்படும் திருக்குறள் ஓர் அரிய அற இலக்கியப்பனுவல். ஆகவே இதில் இலக்கியத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இயல்பே. அமைப்பியல், அழகியல், எடுத்துரைப்பியல், கருத்தியல் அன்னகாரணங்களால் திருக்குறளின் பல பகுதிகள் முயன்று பொருளுணரத்தக்கனவாக இயன்றுள்ளன. ஆனால் சரியான கருத்தை அறிந்தால்தான் திருக்குறளின் பயனும் பெருமையும் புலனாகும். பொருண்மையியல் அணுகுமுறையில் இத்தகைய பொருள்புரியா இடர்ப்பாட்டைக் களையலாம். இதற்கு மொழி அமைப்புகள் துணையாகும். அவ்வகையில் திருக்குறளின் பொருளுணர்தற்குத் தொடரமைப்பு முறை உறுதுணையாவதை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
செய்யுள்தொடரியல்
இரட்டை வழக்கு மொழியான தமிழில் செய்யுள் வழக்கும் உரைநடை வழக்கும் இயல்கின்றன. இவ்இரண்டிற்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக, தமிழ்த் தொடரமைப்பில், எழுவாய் +செயப்படுபொருள்+ வினைமுற்று என்னும் அமைப்பில், முருகன் வள்ளியை மணந்தான் என்றவாறு தொடர்கள் இயலும். இதை முறைமாற்றி, வள்ளியை மணந்தான் முருகன், வள்ளியை முருகன் மணந்தான் என்று அமைப்பதும் ஏற்புடையதே; இதனால் நடைமாற்றம் நிகழுமே தவிர, பொருள் மாற்றமோ குழப்பமோ ஏற்படாது. அவ்வாறே தோன்றா எழுவாய் அமைய, பாலைக் குடித்தான் என்றும் தொடர்கள் அமையலாம். தமிழின் வேற்றுமை இலக்கணம் இதற்கு வாய்ப்பாகின்றது. இத்தகைய தொடரமைவுகள் செய்யுளிலும் உரைநடையிலும் பயில்கின்றன.
குறள் தொடரியல்
குறள் வெண்பா யாப்பில் இயன்றுள்ளதால் ஒவ்வொரு குறட்பாவிலும் ஏழுசீர்கள் அமைவதால் திருக்குறளின் தொடரமைப்பு யாப்பியல் கட்டுப்பாடுக்கு உட்பட்டது. ஆயினும் வள்ளுவர் இந்தக் கட்டுப்பாட்டைச் செம்மையாக வென்றுள்ளார். சான்றாக,
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடிசேராதார்" (10)
என்னும் குறட்பாவைக் கருதலாம்.
இக்குறளில், இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர். இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடல் நீந்தார் என்னும் முரண்பொருள் கொண்ட இரண்டு முழுத்தொடர்கள் பொருள் நிலையில் அமைந்துள்ளன. ஆனால் புறவடிவில், முதல்தொடரில் இறைவனடி சேர்ந்தார் என்னும் எழுவாயும், இரண்டாம் தொடரில் பிறவிப் பெருங்கடல் என்னும் செயப்படு பொருளும் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய குறைத் தொடர்க் குறட்பாக்களைப் படிக்கும் போது முழுத் தொடர்களைப் பொருள் நிலையில் அமைத்துக் கொண்டால் தெளிவு ஏற்படும். இதனால் ஒரு திருக்குறளில் எத்தனைத் தொடர்கள் உள்ளன எனக் காண்பதும், அவற்றுள் ஏதேனும் உறுப்புக்குறைபாடு உள்ளதா? எனஅறிந்து நிறைப்பதும் தேவையானவை என்பதை அறியலாம்.
அடுத்ததாக, ஒரு குறட்பாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள் இருக்கும் போது, அவற்றுக்கிடையிலான பொருள் தொடர்பை உணர வேண்டும். காட்டாக,
“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” (01)
என்னும் குறட்பாவில் உள்ள இரண்டு தொடர்களுக்கிடையிலான பொருள் தொடர்பு அறியப்பட்டால் மட்டுமே இந்தக் குறட்பாவின் கருத்தை முறையாக உணரமுடியும். இதில் எழுத்தெல்லாம் அகரமுதல. உலகு ஆதிபகவன் முதற்று என்னும் இரண்டு கொள்கைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. இந்தத் தொடர்களுக்கிடையில் அதுபோல என்னும் உவமம் அமையுமானால் கண்ணுக்குத் தெரிந்த மொழியமைப்பைக் கொண்டு கருத்துக்குப் புலனாகும் செய்தியை உரைப்பதாக இயலும். உவமம் அமையாமல் தனித்தனித் தொடர்களாக எடுத்துக் கொண்டால் தத்துவ விளக்கமாக, பொருட்களின் இயல்பை எடுத்துரைப்பதாக உணரப்படும். எனவே இத்தகைய தொடர்ப் பொருண்மை அணுகுமுறையால் பொருள் தெளிவு வாய்ப்பாகும்.
முறைமாற்றம்
எழுத்துகள் சேர்ந்து சொல்லும், சொற்கள் பொருள் தரத்தக்க முறையில் இணைந்து தொடரும் ஆக்கப்படுகின்றன. தொடராக்கத்தில் அமைப்பியல்படி இடம் பெறும் சொற்கள் உறுப்புச் சொற்கள் எனப்படுகின்றன. ஒரு தொடரின் உறுப்பாகும் சொற்கள் பொருள் ஏற்புடைமையோடு இணைய வேண்டும். இதை வழக்கு வரையறை என்பர். சான்றாக, காகிதத்தை வெட்டினான் என்றும் மரத்தைக் கிழித்தான் என்றும் கூறுவது பொருள் பொருத்தமுடையதல்ல. காகிதத்தைக் கிழித்தான்; மரத்தை வெட்டினான் என்றே அமைக்க வேண்டும். இதை அண்மையுறுப்பு என்று கூறலாம். இத்தகைய தொடர்ப் பொருண்மையை இலக்கணிகள் பொருள் கோள் என்று குறிப்பர்.
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (45)
என்னும் குறட்பாவில் வள்ளுவம் இல்வாழ்க்கையின் பண்பையும் பயனையும் வகுத்துரைக்கின்றது. ஆயினும் கருத்துகளைச் சுட்டும் சொற்களைத் தொடர்ச்சியாக அமைக்காமல் நிரல்நிறையாகப் பெய்துள்ளார். இத்தகைய முறைமாற்றத்தை முறைப்படுத்தித் தெளிவு பெறலாம்.
ஒரு திருக்குறளில் எத்தனை தொடர்கள் உள்ளன எனக் காண்பதும், அவற்றுள் ஏதேனும் உறுப்புக் குறைபாடு உள்ளதா? முறைமாற்றம் காணப்படுகிறதா? என அறிந்து கொள்வதும் தேவையானவை. ஒரு குறட்பாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்கள் இருக்கும் போது, அவற்றுக்கிடையிலான பொருள் தொடர்பை உணர வேண்டும். இவ்வாறு, திருக்குறளின் பொருட்செம்மையை அறியத் தொடர்ப்பொருண்மை வாய்ப்பாகின்றது.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.