சங்க இலக்கியத்தில் சந்தனம்
முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.
தொடர்ச்சி - பகுதி 2
2. சந்தன மணமேற்ற காற்று - கமழ்புகை
பரிபாடலில், பசிய அணிகலன் அணிந்த செவ்வேளே! நினது பரங்குன்றம் எப்பொழுதும் மைந்தர் அணிந்த சந்தன மணமேற்ற காற்றும், மகளிருடைய மணப்பொடி தூவாய கூந்தலினை அசைத்து அந்நறுமணமேற்ற காற்றும், நின் பூசைக்கண் எழுந்த நறும்புகையூடு புகுந்து அந்நறுமணத்தை ஏற்ற காற்றும் உலவி நிற்கும். (36)
'வண்டார் பிறங்கன் மைந்தர் நீவிய
தண்கமழ் சாந்தத் தைஇய வளியும்
... ... ... ... ...
முருகு கமழ்புகை நுழைந்த வளியும்” (37)
மைந்தர்கள் சந்தனம் பயன்படுத்தியமையைப் புலப்படுத்துகின்றது.
சந்தனத்தின் பயன்
பாலைக்கலியில் முக்கோல் பகவர் செவிலித்தாய்க்கு, உடன்போய தலைவன், தலைவி செயல் பற்றி அஃது அறம் எனக் குறிப்பிடுகின்றார். அப்போது நறியன பலவுங் கூடும் நறிய சந்தனம் தம்கண் மெய்ப்படுப்பார்க்குப் பயன் கொடுப்பதல்லது மலையிடத்தே பிறந்தன ஆயினும் அச்சந்தனம் தாம் அம்மலைக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராயுங்காலத்து நும்முடைய மகளும் பயன்படும் பருவத்து நுமக்கும் பயன்படாள் என்று இவ்விதம் குறிப்பிடுகின்றார்.
'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே” (38)
சந்தன மரங்கள் - நீரின் தன்மை
வெந்திறற்றடக்கை எனும் தலைப்பில் உள்ள பாடலில், பொறையனின் தன்மையைக் குறிப்பிடும் இடத்து, சந்தன மரங்கள் மிதந்து வரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும் தெளிவாக இனிய தண்ணிய மென்மையை உடையனாவான் என்பதனை,
'சாந்து வருவாணி நீரினும்
தீந்தன் சாயலன் மன்ற தானே” (39)
வானியாறு நீலகிரியில் தோன்றிச் சந்தனமரம் செறிந்த காட்டு வழியாக வருதலின், 'சாந்துவருவானி” என்றார். அதன் நீர் மிக்க தட்பமுடையது என்பது அது காவிரியொடு கலக்குமிடத்தே இக்காலத்தும் இனிது காணலாம். சாயற்கு நீரை யுவமம் கூறுவது. 'நெடுவரைக் கோடுதோறிழிதரும், நீரினும் இனிய சாயற் பாரிவேள்” (புறம் 105) என வரும் கபிலர் பாட்டாலும் அறியலாம். (40)
சந்தனத்தின் தன்மை
பொதியமலையில் உள்ள தெய்வங்களை உடைய பக்கங்களிலே தோன்றிய சந்தனத்தைப் போன்று தலைவி குளிர்ச்சி உடையவள் என்பதை,
'மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப” (41)
எனும் வரிகள் இதனை நிறுவுகின்றன.
குறிஞ்சி நிலப்பாடலில், நறிய மணம் கொண்ட சந்தன மரத்தை முழுவதும் வெட்டி உழுது விதைத்த தினையினைக் குறிப்பிடும் இடத்து,
'நறுவிரை ஆரம் அறவெறிந் துழுத” (42)
என்று குறிப்பிடுகின்றார்.
'சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து” (43)
எனும் அடி சாந்து மார்பில் பூசப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
வயிரம் முற்றிய சந்தனமரம்
பெருங்குன்றூர் கிழாரின் குறிஞ்சி நிலப்பாடலில், கொல்லையின் கண்ணே குறவர் வெட்டியழித்தலாலே குறைபட்ட மிக்க நறைக்கொடி மீண்டுந் தளிர்த்துக் கொடியாகி நறுமணங் கமழ்கின்ற வயிர முற்றிய சந்தன மரத்தின் மீது படர்ந்து சுற்றியேறியதை,
'குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன அலைப்பப்” (44)
எனும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
நல்வெள்ளியாரின் பாலைநிலப் பாடலில், தண்ணிதாகிய நறுமணங்கமழும் மலைப்பக்கத்திலே துஞ்சாநிற்கும் சிறிய இலையையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்தினை,
'தண்ணறுஞ் சிலம்பில் துஞ்சுஞ்
சிறியிலைச் சந்தின வாடுபெருங் காட்டே” (45)
எனும் இப்பாடல் அடிகள் குறிப்பிடுகின்றது.
அகம் - களிற் குறிஞ்சி நிலப் பாடலில்,
'கரிவளர் சாந்தம் ஏறல் செல்லாது” (46)
மிளகுக்கொடி படர்ந்த சந்தன மரத்தில் கடுவன் ஏறி உறங்கும்.
பாலைநிலப் பாடலில், தட்பம் வாய்ந்த திருப்பரங்குன்றமாகிய நல்லந்துவனார் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலை என்பதனை,
'அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை” (47)
எனும் இவ்வடி சான்று பகர்கின்றது.
3. சந்தனம் பூசப்பெற்ற கட்குடம்
பதிற்றுப்பத்து புறத்தே சந்தனம் பூசப்பெற்ற கட்குடம் தசும்பு துளங்கிருக்கை எனும் தலைப்பில் உள்ள பாடலில் புறத்தே சந்தனம் பூசப் பெற்ற கட்குடங்கள், அசைகின்ற இருக்கைகளில் வைத்து, அவற்றில் நிறைத்த தீவிய சுவை நிறைந்த நீலமணி போலும் கள்ளினை தனக்கெனச் சிறிதும் கருதாது ஈயும் இயல்பு (48) பற்றியச் செய்தியினை,
'சாந்துபுறத் தெறிந்த தசும்புதுளங் கிருக்கைத்
தீஞ்சேறு விளைந்த மணிநிறமட்டம்” (49)
எனும் பாடல் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
4. சந்தனமாலை
பாலை நிலப்பாடலில் முத்துமாலை, சந்தனமாலை பற்றி பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார். தனது தென்கடலில் தோன்றிய முத்தாகிய ஆரமும், பகைவர் திறை கொடுக்கும் வலிமையை உடையதான தனது பொதியில் மலையில் உள்ள அடியார்களைத் துன்புறுத்தலில்லாத முருகவேளை வழிபட்டு, குறவர்கள் கொண்டு வந்து தரும் சந்தனமாகிய ஆரமும் ஆகிய இவ்விரு பெரிய ஆரங்களையும் அழகுற அணியும் திருவீழ் மார்பினையுடைய பாண்டியனது படைத்தலைவன் என்பதை, அகநாநூறு சான்று பகர்கின்றது. (50)
'குறவர் தந்த சந்தின் ஆரமும்” (51)
5. சந்தனக் கட்டைகள்
அக - நித், நெய்தல் நிலப்பாடலில், வடநாட்டில் உள்ளார் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக்கல்லில், குடமலையாய பொதியிற் சந்தனக் கட்டையால் பிற மணப் பொருள்களையும் கூட்டியுண்டாக்கிய, வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினை அணிவிப்பேம் என்பதனை,
'வடவர் தந்த வான்கேழ் வட்டம்
குடபுல உறுப்பிற் கூட்டுபு நிகழ்த்திய
வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவம் திண்டிமில்” (52)
எனும் பாடல் அடிகள் சான்று பகர்கின்றன.
சந்தனக் கட்டை நெருப்பு
வீரை வெளியனார் தம் பாடலில் சந்தனக் கட்டையால் ஆகிய நெருப்பில், சுட்ட உணவினைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பாணனே! மான்தோலின் மேல் பரப்பி உலர வைத்த தினையரிசியை காட்டுக்கோழியும், இதற்பறவையும் கவர்ந்துண்டு அகப்பட்டனவாக, சந்தனக்கட்டையால் ஆகிய நெருப்பில் ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒருங்கு கூடியிருந்து இனிதுண்டு அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக! (53)
“ஆர நெருப்பி னார னாரத்
தடிவார்ந் திட்ட முழுவள் ரம்” (54)
என்று குறிப்பிடுகின்றார்.
சந்தனக்கட்டை எரிக்கப் பெறல்
ஐங்குறுநூற்றில்,
'குன்றக் குறவன் சாந்த நறும்புகை
தேங்கமழ் சிலம்பின் வரையகங் கமழுங்” (55)
எனும் பாடலடிகள் சந்தனக்கட்டை எரிக்கப் பெற்றதை பறை சாற்றுகின்றது.
சந்தனக்கட்டைகள் - விருந்தினர்கட்கு அளித்தல்
அகன்ற நீர்துறைக்கண் தம் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் கொழுவியவூனும், மலைப்பிளவுகளையும், குகைகளையுமுடைய மலைப்பக்கத்தே கிளை தழைத்து நிற்கும் சந்தனக்கட்டையும், புள்ளி பொருந்திய வலிய புலியினுடைய வரியமைந்த தோலின் மேல் குவித்து, விருந்தினர்க்குக் கொடுக்கும் நாட்டை உடையோன் ஆகிய எம் தலைவன் ஆய்அண்டிரன் என்று புறப்பாடல் சான்று பகர்கின்றது.
'சினை முதிர்சாந்தம்” (56)
வழங்கப் பெற்றமையை அறியலாம்.
தென்கடலிற் குளித்தெடுத்த முத்துமாலை சூடி, வடமலையிற் பெற்ற சந்தனத்தை அணிந்து, கடல் போன்ற தானையையும் இனிய புகழையுமுடைய, போர் வென்றியைமுடைய பாண்டியருடைய வலிமிக்க தானைத் தலைவன் எனும் வழி, தென்கடல் முத்துக்கும், வடமலை சந்தனத்துக்கும் பெயர் பெற்றவை. வடமலை என்றது இமயமலையை வேங்கட மலைலயுமாம். வடவர் தமிழ்நாட்டிற்குள் வந்த போது ஒரு வகைச் சந்தனங் கொணர்ந்தனர் என்பர்.
'வடவர் தந்த வான்கேழ் சந்தம்”
(அகம் 340;)
என்பதனால் வடமலை சந்தனம் சிறப்புப் பொருந்தியது என அறியலாம். (57)
சாந்தம் ஞெகிழி :- கொள்ளிக்கட்டை
பெருவழுதியின் பாடலில், தோழி அன்னையை நோக்கி, அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக்காட்டி அன்னாய்! இவ்விறகினை அடுப்பிலிடுதலும் இதிலுள்ள சுரும்புகள் இவளுடைய தோளில் மொய்க்கின்றன காண் என மறைத்துக் கூறியதை,
ஞெகிழி - கொள்ளி.
'யாங்குணர்ந் துய்குவள் கொல்லென மடுத்த
சாந்தம் எஞகிழி காட்டி” (58)
என்றதை இவ்வடிகள் பறை சாற்றுகின்றது.
சந்தனக் கட்டைக் கட்டுப்பரண்
மதுரைக் கண்ணத்தனார் பாடலில், கரிய அடியையுடைய வேங்கை மரங்கள் நிரம்பிய சிறிய குன்றினிடத்திலே சந்தன மரத்தால் செய்த களிற்றி யானையின் வலிமைக்கஞ்சாத புலித்தோலால் வேய்ந்த கட்டுப் பரணிடத்திலே தங்கியிருந்து சிறிய தினைப்புனத்தை மறுபடியும் சென்று பாதுகாத்து இருப்பாளாயின், எனும் செய்தியினை,
'வருந்தல் வாழிவேண்டு அன்னை கருந்தாள்
வேங்கைஅம் குவட்டிடைச் சாந்தில் செய்த
களிற்றுத்துப்பு அஞ்சாப் புலியதள் இதனத்துச்” (59)
எனும் வரிகள் இதனைச் சுட்டுகின்றன.
வெண்டலைச் செம்புனல் சந்தனக் கட்டைகளோடும், அகிற் கட்டைகளோடும் மிக்கு வரும் நுரைகளைச் சுமந்து கொண்டு தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், வெண்டலைச் செம்புனல் நுரையால் வெளுத்த அலையுடன் கூடிய சிவந்த புதுப்புனல் பெருகிய ஆறு என்பதனை,
'சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல்” (60)
எனும் பாடல் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
6. சந்தன விறகின் புகை- சந்தனம் - விறகாகப் பயன்பட்டமை - சந்தனப் புகை
வேள்பாரி நாடு பறம்பு மலையில் குறத்தி சமைத்தல்
குறத்தி மடுத்து எரிக்கப்பட்ட வற்றிய கடைக்கொள்ளி ஆரம் - சந்தனம் ஆதலின் அதன் அழகியதாகிய புகை அதற்கு அருகாகிய சாரற் வேங்கைப் பூஞ்சினையின் கண் பரக்கும் பறம்பு. பாடுவோர்க்குக் கூறிட்டுக் கொடுத்தலின் அவருடையதாயிற்று. சந்தனப் புகை வேங்கையின் மிசைத் தவழும் பறம்பு எனவே இவை ஒழிய மரம் இன்மையும், பகைவர் சுடும் புகையின்மையும் குறிப்பிடப் பெற்றது.
“குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆர மாதலி னம்புகை யயலது
சாரல் வேங்கைப் பூங்சினைத் தவழும்” (61)
எனும் பாடல் அடிகள் சந்தன விறகு எரிந்ததைச் சான்று பகர்கின்றது. (புறம், பா.எண்.108, ப.242)
சாந்தம் விறகு
பிட்டங்கொற்றன் பாடலில், முற்பட விளைந்த புது வருவாயாகிய கதிரை நல்ல நாளின் கண்ணே புதிதுண்ண வேண்டி, மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை, மான்தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது, நிணந்தோய்ந்த வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலைநீராக வார்த்து ஏற்றி, சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றை, கூதாளி கவின் பெற்ற மலை மல்லிகை நாறும் முற்றத்து, வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற இலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும், ஊரப்படாத குதிரை யென்னும் மலைக்குத் தலைவ! என்பதை,
'வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகி னுவித்த புன்கம்” (62)
சாந்த விறகினால் சமைத்த உணவின் தன்மையைப் இப்பகுதி புலப்படுத்துகின்றது.
சாந்தப்புகை : சாந்தம்பூ, அகில் 63;
அகிற்புகை
பரிபாடலில் செவ்வேள் பற்றிய பாடலில், திருப்பரங்குன்றத்தின் கண் உலகத்தார் செய்யும் பூசைக்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை வானுலகத்தும் பரவுதலானே தேவர்கள் இமையாது நிற்பர். ஞாயிற்று மண்டிலமும் அப்புகையால் மறையும்,
'கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப” (64)
'ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ
விடையரை அசைத்த வேலன் கடிமரம்” (65)
வேன்மகள் சந்தனந் தெளித்து ஆட்டுக்கிடாவினை அடியிலே கட்டின முருகவேளின் பூசனைக்குரிய மரமாகிய கடம்பை புகழுமிடத்து இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ளது. (66)
7. சந்தனத்தாது
நற்றிணை சந்தனத்தாது பற்றி கபிலரின் குறிஞ்சிப் பாடலில், தாமரையின் தண்ணிய தாதினையும், மேலோங்கிய சந்தனத்தின் தாதினையும் ஊதி, அந்தச் சந்தன மரத்தில் வைத்த இனிய தேன் போல என்ற அழகிய உவமை கையாளப் பெற்றுள்ளது. சாந்து - சந்தனமரம்.
தாமரைத்தாது தலைவன் உள்ளத்திற்கும், சந்தனத்தாது தலைவி உள்ளத்திற்கும் உவமையாக்கி இருவருட் கருத்தும் ஒத்த வழி சாந்திலே தீந்தேனில் வைத்தது போலத் தலைவன் தலைவிபால் அன்பு வைத்தான் என்பதனை,
'தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்” (67)
எனும் பாடல் அடிகள் சான்று பகர்கின்றன.
8. சந்தன உரல் - உலக்கை
குறிஞ்சிக்கலியில் தலைவி அழுகு கொண்ட தினைப்புனத்தில் முகத்திற்குப் பொருந்தின கண்ணினையும், மகிழ்ச்சியைத் தரும் மொழியினையுமுடைய நல்ல மகளிர் நாணி இறைஞ்சும் நிலை போல முற்றித் தாழ்ந்த கதிரை உருவி அரும்பி வளர்ந்த சந்தனமரத்தால் செய்யப் பெற்ற உரலிலே பெய்து, முத்து நிறைந்த யானைக்கொம்பால் வகுத்த நிறைந்த உலக்கையை என்னிடத்தும், நின்னிடத்தும் உயர்த்திக் குறா நின்று மருந்தில்லாத நோயைச் செய்தவனுடைய பயன் தருகின்ற மலையை வாழ்த்தி நாம் நம் கருத்திற்கு வேண்டியவாறெல்லாம் அழைத்துப் பாடக் கடவேம் என்று தோழியுடன் உடன்பட்டாள்.
அக்காலத்தில் உலக்கைப்பாட்டு பாடும் வழக்கம் இருந்ததையும், சந்தன உரல், தந்தம் உலக்கை பயன்படுத்தப் பெற்றமையும் இவ்விலக்கியம் சான்று பகர்கின்றது. இதனை,
“முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஓச்சிப்” (68)
எனும் அடிகள் அக்காலத்தில் உரல் - உலக்கை எப்பொருட்களால் பயன்படுத்தப் பெற்றது என்பதைத் தெரிவிக்கின்றது. இதனைப் பயன் படுத்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படும்.
9. சந்தன உலக்கை
குறிஞ்சிக்கலியில் தையலாய்! இருவேமும் ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையாகிய உரலிலே சொரிந்து, புலியைக் கொன்ற மதத்தான் மயங்கின புகரை உடைய யானையினது தலையேந்தின கொம்பாலும், இனமான வண்டுகள் ஒலித்துத் தாது ஊதுஞ் சந்தன மரத்தினாலும் பண்ணின உலக்கைகளாலே குற்று, முருகனைப் புகழுவேம் போல அழகு பெற்ற மேகம் உண்டாகின்ற தலைமையினை உடைய பயனை உடைத்தாகிய மலை நடை;டை உடையானைப் பாடுவோம் என்று குறிப்பிடுகின்றது.
“வேங்கை தொலைத்த வெறிபொறி வாரணத்
தேந்து மருப்பின் இனவண் டிமிர்பூதுஞ்
சாந்த மரப்பின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அரையுரலுட் பெய்திடுவாம்” (69)
எனும் பாடல் அடிகள் சந்தன உலக்கையினைப் பயன்படுத்தியமையைப் பறை சாற்றுகின்றது.
இவ்விதம் சங்க இலக்கியத்தில் சந்தனத்தின் பயன்பாடு பல்வேறு நிலைகளில் பயன் பெற்றவற்றை நாம் அறியலாம். சந்தனம் மருத்துவப் பொருள். எனவே உடலுக்கு அதிக நன்மை தருவது. சங்க கால மக்கள் இதனை சிறப்பாய் பயன்படுத்தி உள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியமே சிறந்த சான்று!
சான்றெண் விளக்கம்
1. புறம் பா.எ. 63: 9 - 10: ப.164.
2. புறம் பா.எ. 16: 11 - 12: ப.44.
3. புறம், பா.எ. 152: 10, ப.320 - 321.
4. ஐங், பா.எ. 240: 2-3: ப.355.
5. மே, ப.407- 408.
6. மே, பா.எ.21: 25 - 26: ப.409.
7. மே, பா.எ.2: 64 - 84: ப.451.
8. மே, பா.எ.2: 84 - 85, ப.456.
9. மே, பா.எ2: 84: ப.456.
10. பதிற், 1: 7 - 8: ப.288.
11. பதிற், 1: 7 - 8: ப.287.
12. மே, பதிற், பா.எ.7: 17-18: ப.316.
13. மே, ப.319.
14. மே, பா.எ.394: 7 - 8: ப.484.
15. புறம், பா.எ.140: ப.175.
16. மே, பா.எ.168: 10 - 11: ப.211.
17. மே, பா.எ.259: 5 - 6: ப.322.
18. மே, பா.எ.261: 8 - 9: ப.324.
19. மே, பா.எ.292: 1 - 2: ப.360;.
20. மே, பா.எ.344: 6: ப.424.
21. மே, பா.எ. 354: 9-10: ப.121.
22. பொ.வே.சோ, சிறு, ப.33.
23. பொ.வே.சோ, சிறு, பா.அடி: 116-117: ப.4.
24. திருமுருகு, ப.93.
25. மே,ப.அடி: 193-194: ப.14.
26. அகம் - களிற், பா.எ.22: 11: ப.68.
27. அகம்- களிற், பா.எ.36: 18: ப.102.
28. மே, பா.எ.100: 1-2: ப.257.
29. மே, பா.எ.102: 10: ப.262.
30. புறம், பா.எ.239: 3: ப.85.
31. புறம், பா.எ.347: 5: ப.295.
32. குறுந், பா.எ.273: 3: ப. 492.
33. குறுந், பா.எ.321: 1: ப.578.
34. குறுந், பா.எ.198: 71: ப.354.
35. பதிற். பா.எ.8:30,ப.413.செய்தி, ப.418.
36. பரி, பாஎ.21: 46-53: ப.408.
37. மே, ப.410.
38. நச்சர், கலி - பா.எ.9: 12-14: ப.28.
39. பதிற்., பா.எ.6: 12-13: ப.408.
40. மே. பக்.409 - 410.
41. குறுந், பா.எ.376: 1 - 3: ப.671.
42. மே, பா.எ.388: 3, ப.194.
43. மே, பா.எ.388: 16: ப.194.
44. நற், பா.எ.5: 3-4: ப.8.
45. மே, பா.எ.7: 8-9: ப.11.
46. அகம் - களிற், பா.எ.2: 6: ப.10.
47. அகம் - களிற், பா.எ.59: 11-12: ப.158.
48. பதிற், பா.எ.2: 10-15: ப.190.
49. மே, பா.எ.2: 11-12: ப.188.
50. அகம் - களிற்,13: 1-6: ப..45 - 46.
51. அகம் - களிற், பா.எ.13: 4, ப.45.
52. அகம் - நித், பா.எ.340: 16-18: ப.92.
53. புறம், பா.எ.320: 10-14: ப.236.
54. புறம், பா.எ.320: 12-13: ப.235.
55. ஐங், பா.எ.253: 1-2: ப.377.
56. புறம், பா.எ.374: 10-16: ப.366.
57. புறம், பா.எ.380: 1-3: ப.388.
58. நற், பா.எ55. 10-11: ப.71.
59. நற், பா.எ.351: 5-7: ப.432.
60. பதிற், பா.எ.7: 2-3: ப.410 - 411.
61. புறம் பா.எ. 108: 1-3: ப.242.
62. புறம், பா.எ.168: 10-11: ப.211- 362.
63. ஐங், பா.எ 212: 1-2: ப.312.
64. பரி, பா.எ.17: 26 - 32, ப.330.
65. பரி, பா.எ.17: 2 - 3, ப.331.
66. மே.ப.333.
67. நற், பா.எ.1: 3 - 4: ப.3.
68. நச்சர், கலி, பா.எண், 40: 4 - 5, ப.114.
69. மே, பா.எ.43: 1 - 4 - 84: ப.128.
(நிறைவடைந்தது)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.