அற இலக்கியப் பனுவலான திருக்குறள் இலக்கிய / மொழித் தொழில்நுட்பத்துடன்படைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவையான அளவு மொழி / இலக்கியத் தரவுகளைஅறிந்து கொண்டால் வள்ளுவத்தின் கருத்தை, அறக்கொள்கைகளை, வாழ்க்கை வள நெறிகளைப் புரிந்து கொண்டு பயனுற முடியும். இதற்குப் பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாகின்றது. அதாவது, ஒரு சொல்லின் பொருட்பன்மையால், அந்தச்சொல் சூழலுக்கேற்பப் பொருள் குறிப்பதையும், குறிப்பிட்ட தொடரில் அந்தச்சொல் சுட்டும் கருத்தையும் அறிந்து தெளிதலாகும். இந்த அணுகுமுறையில் வள்ளுவத்தில் இற என்னும் அடிச்சொல் ஆளப்பட்டுள்ள பாங்கை இனிக் காணலாம்.
வள்ளுவத்தில் இறப்புகள்
இற என்னும் சொல் வள்ளுவத்தில் சாதல், அளவுமீறுதல் / கடத்தல், இல்லாமல் இருத்தல் என்னும் பொருள்களில் ஆளப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே இலக்கண வகைமையில் மாறுபட்ட பொருள்களில் ஒத்த வடிவச் சொல்லாக ஒரு சொல் ஆளப்படும் போது, படிப்பாளிக்குப் பொருத்தமானக் கருத்தை உணர இடர்ப்பாடு நேர்கின்றது. இத்தகைய பொருளுணர் இடர்ப்பாட்டைப் பொருண்மையியல் அணுகுமுறையால் போக்கலாம். அதாவது, ஒரு சொல்லின் பொருளைச் சூழலுக்கேற்பப் புரிந்து கொள்ள வேண்டும் என்னும் விழிப்புணர்வும் பொருண்மை அறிவும் தேவையானவையாகும். இனி, இது பற்றி விளக்கப்படுகிறது.
22, 42 ஆகிய குறட்பாக்களில் சாதல் என்னும் பொருளிலும், 145, 146, 152, 159, 283, 310, 432, 476, 531, 586, 900, 977, 1138, 1157, 1254,1275 ஆகிய குறட்பாக்களில் அளவு மீறுதல் / கடத்தல் என்னும் பொருளிலும், 971ஆம் குறட்பாவில் இல்லாமல் இருத்தல் என்னும் கருத்திலும் இற என்னும் அடிச்சொல் இறந்த, இறந்தார், இறந்து, இறவா என்னும் வடிவங்களில் திருக்குறளில் ஒத்த வடிவச்சொல்லாக ஆளப்பட்டுள்ளது. சான்றாக,
“துறந்தார் பெருமைதுணைக் கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று”
(22)
என்னும் குறளில், பிறந்து இறந்து போனோர் என்னும் இயல்பான இன்றைய பொருளில் இறந்தார் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சங்ககாலத் தொல் வழக்காக, மற்றொரு பொருளான அளவு மீறுதல் / கடத்தல் என்னும் பொருளிலும் இற என்னும் அடிச்சொல்,
“துறந்தாரின் தூய்மையுடையர் இறந்தார் வாய்
இன்னாச் சொல் நோற்கிப்பவர்”
(159)
என்னும் குறளில், இறந்தார் என்னும் சொல் அளவு மீறுதல் / கடத்தல் என்னும் பொருளில் வழங்கப்பட்டுள்ளது. இன்னாச்சொல்லை அளவு மீறிக் கையாள்வோரைப் புறக்கணித்து விடுக என்னும் அறவுரை இங்கு வகுத்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறே145, 146, 152, 283, 310, 432, 476, 531, 586, 900, 977, 1138, 1157, 1254, 1275 ஆகிய குறட்பாக்களின் கருத்தையும் அறியலாம். இதோடு,
“ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்”
( 971 )
என்னும் குறளில், ஊக்கமிகுதியுள்ளவரைப் போற்றும் வள்ளுவம், ஊக்கமில்லாதவனைச் சாடுகின்ற நோக்கில் இறந்து என்னும் சொல்லை இல்லாமை என்னும் கருத்தில் பெய்துள்ளார். இந்தக் குறட்பாவில் இரண்டு தொடர்கள் எதிர்மறை நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. ஊக்கமுள்ளவரையும் ஊக்கமில்லாதவரையும் இணைத்து, ஊக்கமுள்ளவர் புகழ்பெறுவர்; ஊக்கமில்லாதவர் மதிக்கப்பட மாட்டார் என்னும் சமூக அறத்தை வகுத்துரைத்துள்ளார். இதனால் இற என்னும் அடிச்சொல்லின் பொருட்பன்மையையும், அந்தச் சொல் சூழலுக்கேற்பப் பொருள் குறிப்பதையும், குறிப்பிட்ட தொடரில் அந்தச்சொல் சுட்டும் கருத்தையும் அறிந்து தெளிய முடிகிறது.
இவ்வாறாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள சொற்களைப் பொருண்மையியல் அணுகுமுறையில், அதாவது, சொற்கள் சூழலுக்கேற்பப் பொருள் குறிப்பதையும், குறிப்பிட்ட தொடரில் அந்தச் சொல் சுட்டும் கருத்தையும் அறிந்து படித்தால் திருக்குறளின் உண்மைக் கருத்தை முறையாக அறிந்து சிறக்கலாம்.