பதினெண் மேற்கணக்கு நூல்களில் கதைப்பின்னல்
வ. மணிகண்டன்
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
தொடர்ச்சி - பகுதி 2
பயண உத்தி
பயணம் என்பது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லுதல் ஆகும். பயணிகள் பல்வேறு காரணங்கள் பற்றி செலவினை மேற்கொள்வர்.
சுற்றுலா, சுற்றுச்செலவு, பிரயாணம், யாத்திரை, வழிச்செலவு, வழிப்பயணம் என்பது பயணத்தைக் குறிக்கும் வேறுபெயர்கள் ஆகும். இவற்றிற்கு இடையில் நுண்ணிய வேறுபாடுகள் இருப்பினும் ‘இடம்பெயர்தல்’ என்ற பொருள் தெளிவாதல் வெளிப்படையாகும். ‘செலவு என்ற சொல்லுக்குப் பயணம், படையெடுப்பு, வழி’ என்று பொருள் தருகிறது தமிழ்ப் பெயர் அகராதி. இதைப்போலவே ‘யாத்திரை என்ற சொல்லுக்குப் படைஎழுச்சி, நடத்தல், பயணம், கடற்செலவு என்ற பொருள்கள் இருக்கின்றன’ என்றும் கூறுகிறது. சங்க இலக்கியத்தில் பயணம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் சங்க காலத்தில் பயணம் என்ற சொல் இடம்பெறவில்லை. வழிச்செலவு என்ற சொல்லே பயின்று வந்துள்ளது.
சங்க காலத்து வணிகர்கள் தரைப்பயணம் மேற்கொண்டனர் என்பதற்கு 'சங்க காலத்து வாணிகம் தரைவழியாகவே இருந்தது. தரை வாணிகம் செய்த பெருவணிகருக்கு மாசாத்துவான் என்று பெயர். தரை வாணிகத்தில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் தொல்லைக் கொடுத்தனர். எனவே வணிகர்கள் தங்களுடன் வில் வீரர்களையும், வாள் வீரர்களையும் உடன் அழைத்துச் சென்றனர். தரை வழியாக இந்திய நகரங்கட்குச் சென்று வாணிகம் செய்தவர்கட்குப் பெருங்குடி வணிகர் என்பது பெயர்”
(சி. பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியம் : சில பார்வைகள், ப.154)என்று சி. பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியம் : சில பார்வைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதே நூலில் கடலோரப் பகுதிகளில் வாணிபம் செய்ததை,
'கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் முதலான தமிழ்நாட்டுத் துறைமுகப் பட்டினங்களினின்று நாவாய்களில் புறப்பட்டுச்சென்று தமிழ் வணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி நெல்லூர், கலிங்கப்பட்டினம், தம்ரலிப்தி (வங்காளத் துறைமுகம்) முதலானப் பட்டினங்களுக்குச் சென்றனர். பிறகு கங்கையாறு கடலில் கலக்கின்ற புகார் முகத்தின் ஊடே கங்கையாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம், காசி முதலான ஊர்களில் வாணிகம் செய்து திரும்பினர்”
(சி. பாசுப்பிரமணியன், சங்க இலக்கியம் : சில பார்வைகள், ப.156) என்றும் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம் குறித்த செய்திகள் இருப்பதைக் கீழ்க்கண்ட செய்திகள் மூலமாக உணரமுடிகிறது.
(i) தரைவழிப் பயணம்
தரைவழிப் பயணமாக குடிகளைக் கடந்து செல்லல், நீர்ப்பாயல்துறை கடந்து செல்லல், கடுமையான நிலத்தைக் கடந்து செல்லல், நீர்ப்பாயல் துறைமுகம் கடந்து செல்லல் ஆகியவற்றைக் கடந்து பயணம் மேற்கொண்டதை அறியமுடிகிறது.
தரையின் வழியாகப் பயணத்தை மேற்கொள்வது தரைவழிப் பயணமாகும். பயணம் செய்யும் போது ஒரு இடத்தைக் கடந்து அடுத்த இடத்திற்குச் செல்லும் பயண வழியை இடமுறை மாறால் உரைப்பது போல் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பாடல் அமைகிறது.
'பகன்மகிழ் நூங்குந் தூங்கா இருக்கை
முரண்டலை கழிந்த பின்றை”
(பெரும். 146-147)
ஆகிய பாடல்வரிகள் பகல் நேரத்தில் ஆடி மகிழ்கின்ற சோம்பல் இல்லாத குடிகளை உடைய இடங்களைக் கடந்து சென்றதைக் கூறுகிறது.
'வன்புல மிறந்த பின்றை”
(பெரும். 206)
என்ற வரி கடுமையான நிலத்தைக் கடந்துச் சென்றதைக் கூறுகிறது.
'நீர்பெயற் றெல்லைப் போகி”
(பெரும். 319)
என்ற வரி ஒளிவிட்டுத் தோன்றுகின்ற நீர்ப்பாயல் துறை என்னும் ஊரில் எல்லையில் சென்றதைக் கூறுகிறது.
'துறைபிறக் கொழியப் போகி”
(பெரும். 351)
என்ற வரி நீர்ப்பாயல் துறைமுகம் பின்னே செல்லுமாறு அதனைக் கடந்து சென்றதைக் கூறுகிறது.
முதலான தொடர்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையினைத் தெளிவாகச் சுட்டிச் செல்கின்றன.
கலித்தொகையில், தலைவி ஒருத்தி தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டாள். அவளைக் காணாது தவித்த செவிலி எங்கும் காணாது அலைந்து சோர்ந்தாள். அப்பொழுது வழியில் அந்தணர் ஒருவரைச் சந்திக்கின்றாள். நிலைமையை விளக்குகிறாள். அதற்கு அவர் செவிலித்தாயிடம்,
'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவட்க் கல்லிதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
நினையுங்கால் நும் மகள் நுமக்குமாங் கனையளே”
(கலி. 9:12-14)
என்று பலவாறு அறிவுரை கூறுகின்றார். இச்செவிலியின் பயணத்தை உத்தியாகப் பயன்படுத்தி, புலவர் ஒரு வீட்டில் வளரும் பெண் கணவன் வீட்டிற்குச் செல்லுதல் உலகநியதி என்பதை எடுத்துரைக்கின்றார்.
வாணிகப் பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்ல எருது, கழுதை, வண்டி, படகு, பாய்க்கப்பல்களைப் பயன்படுத்தினர். சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. இவை வணிகப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அரசரும் செல்வந்தரும் ஊர்தியாகப் பயன்படுத்தினர்.
'கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண”
(அகம். 350; 6-7)
'கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே”
(நற். 273:7-9)
என்ற பாடல்கள் வெளிநாடுகளிலிருந்து அத்திரி என்னும் கோவேறு கழுதைகள் வரவழைக்கப்பட்டதையும், அவை ஊர்தியாகப் பயன்பட்டதையும் அறிய முடிகிறது.
பல நாட்டிற்குச் சென்று பயணம் மேற்கொண்டதை, 'கங்கை வங்கம் போகுவர் கொல்லோ”
(நற்றிணை, 189:5) என்ற நற்றிணைப் பாடல்வரி சான்றாக அமைகிறது. தரைவழிப்பயணத்தின் மூலமாகச் சங்ககால மக்கள் பயணம் மேற்கொண்டதையும், வாணிபம் செய்ததையும் இச்சான்றுகளின் மூலம் அறிய முடிகிறது.
ii) கடற்பயணம்
கடலில் பயணத்தை மேற்கொள்வது கடற்பயணம் ஆகும். கடலில் செல்லும் கப்பல்கள் காற்றினால் திசைமாறிச் செல்லும்போது பரதவர் அவைகளை அடக்கினர் என்பதை,
'முரசு கடிப்படைய அருந்துறை போகிப்
பெருங்கடல் நீந்திய மரம்உலி யுறுக்குப்
பண்ணிய விலைஞர் போல”
(பதி. 76;3-5)
என்னும் பதிற்றுப்பத்து அடிகள் வலியுறுத்துகின்றன.
கடுங்காற்றினால் தாக்குண்டு திண்மையான கயிறுகளையும் அறுத்துப் பாய்மரத்தை ஒடித்து நாவாயை அடித்துச் சென்று பாறைக்கல்லில் மோதி நீர்ச்சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகிறார்.
'பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்
... ... ... ... ...
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்”
(மதுரை, 375-379)
காற்றினாலும், மழையினாலும், புயலினாலும் இடுக்கண்கள் நேர்ந்த போதும் அஞ்சாமையுடன் கடலில் நாவாய்களை செலுத்தி வணிகம் மேற்கொண்டதை மதுரைக்காஞ்சி கூறுகிறது.
பரதவர்கள் பயணத்தின் போது ஏற்படும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல் துணிவுடன் செயல்பட்டதை இச்சங்க இலக்கியச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது.
கற்பனை உத்தி
கற்பனை என்பது மனத்தின் ஆற்றல். ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத தகுதி அவனது கற்பனை ஆற்றலேயாகும். புலன் காட்சிகளால் பெறுகின்ற அனுபவத்தை மாற்றியும், திரித்தும், கூட்டியும், குறைத்தும் உணர்ச்சியூட்டக்கூடிய வகையில் கலைவடிவமாகப் படைப்பது கற்பனை.
கற்பனையையும், அதன் இலக்கணங்களையும் நினைவு கொள்ளும் போது, 'கவிஞன் தான் உணர்ந்த உணர்ச்சியையோ பெற்ற அழகின்ப அனுபவத்தையோ கண்டகாட்சியையோ நாமும் முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்தோ, அனுபவித்தோ, கண்டோ இன்புறுமாறு அமைத்துக்காட்டும் அரிய கலைத்திறனே கற்பனை”
(சு. பாலச்சந்திரன், இலக்கியத்திறனாய்வு, பக்.95-96) என்ற சு. பாலச்சந்திரனின் கருத்து எண்ணுதற்குரியது.
'கற்பனையின் ஆற்றலை உணரமுடிகிறது. உணர்த்த முடிகிறது. ஆனால் அதனை வரையறை செய்வது எளிதன்று.”
(Winchester, C.T., Some Principles of Literary Criticism P.18) என்று வின்செஸ்டர் கற்பனைக்கு விளக்கம் தருகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வின்செஸ்டர் என்னும் திறனாய்வாளர் தமக்கு முன்னர்க் கற்பனையைப் பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களையெல்லாம் தொகுத்து ஆராய்ந்து அவையனைத்தையும் உள்ளடக்கியக் கற்பனையை மூவகையாகப் பாகுபடுத்திக் கூறியுள்ளார்.
அப்பாகுபாடு இன்றுவரை திறனாய்வாளர்களால் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அவர் கற்பனையைப், படைப்புக் கற்பனை (Creative Imagination), இயைபுக் கற்பனை (Associative Imagination), கருத்துவிளக்கக் கற்பனை Interpretative Imagination) என மூவகைப்படுத்துகிறார்.
(i) படைப்புக் கற்பனை (Creative Imagination)
அனுபவம் நமக்குத் தந்திருக்கும் கூறுகளைத் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து ஒரு முழுமையாகப் படைக்கின்ற மனத்திறன் படைப்புக் கற்பனையாகும். இப்படிப் படைக்கின்ற முறை கட்டற்றதாகவும், பகுத்தறிவுக்கும் மாறானதாகவும் இருக்குமானால் அதனை மிகை கற்பனை என்றும் கூறலாம்.
வேனிலின் வெம்மையால் நீரற்று வறண்ட மலைநிலத்துச் சீறூர் ஒன்றனைக் கயமனார் தம் அகநானூற்றுப் பாடலில் கற்பனைப் படைப்பாகத் தருகிறார். சீறூர்ச் சார்ந்த மலைச்சுனைகளில் நீரில்லை. பசிமிகுந்த யானையின் பசுமையற்ற கண்போல அவை விளங்குகின்றன. அவற்றில் புகுந்துவருகின்ற மேல்காற்று, இழுத்துக் கட்டப்பெற்ற பறையொலி போல் ஒலிக்கின்றது. அங்கே குதிர் போன்ற அடிமரத்தினைக் கொண்ட இருப்பை மரத்தில் வெண்ணிறப்பூக்கள் உள்ளன. அவற்றைக் கண்ட ஆண்மான் தான் உண்ணாமல் தன் பிணை உணற்பொருட்டு அதனை விளிக்கின்றது.
கன்றோடும், களிற்றோடும் வந்த மடப்பிடியொன்று, பசுக்கூட்டம் நீர் பருகுவதற்காக அங்கே கோவலர் வெட்டிய கிணற்றினைத் தண்ணீர் பெற வேண்டித் தடவிப் பார்க்கின்றது.
'பசித்த யானைப் பழங்கண் அன்ன
... ... ... ... ...
புன்றலை மன்றத் தங்குடிச் சீறூர்”
(அகம், 321;1-10)
எனக் கயமனார் சீறூர் பற்றிக் கூறுகின்றார்.
கயமனாரின் இக்கற்பனையில் சுனை, மேல்காற்று, இருப்பை மரம், மான், யானை முதலியன இடம்பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் புனைந்துரைப்பதன் மூலம் வேனிலால் வெம்பிய சுரநெறியில் உள்ள ஒரு சிற்றூரைக் கற்பனையாகக் காட்டுகிறார்.
இரண்டு மான்கள் உண்பதற்குக் கூட போதுமான பூக்கள் இல்லாத அளவிற்கு இருப்பை மரம் செழிப்பின்றி இருந்தது என்பதனைக் கயமனார் குறிப்பாக உணர்த்தி அந்நிலத்தின் வறட்சியைப் புலப்படுத்துகின்றார். பயிரிடுதற்கு உரியதன்று எனப் புறக்கணித்துவிடப்பட்ட நிலத்தில் கற்களை உடைத்துக் கோவலர் தோண்டிய கிணற்றில் சிறிதும் நீரில்லாத போது களிறும், பிடியும், கன்றுமாக ஓர் யானைக்குடும்பமே வந்து அதனைத் தடவித் துன்புறும் காட்சியினைக் கற்பனை செய்திருப்பதன் மூலம் நீரற்ற கொடுந்துன்பத்தை நம் நெஞ்சம் உணருமாறு செய்கின்றார்.
சுரநெறியின் இயல்பினைப் பாட நினைத்த புலவர் மனத்தில் நினைவாற்றலும் அனுபவமும் பல காட்சிகளைத் தோற்றுவிக்கின்றன. அவையனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிகழ்ந்தனவாகிய உண்மை நிகழ்ச்சிகள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அவற்றுள் சில உண்மை நிகழ்ச்சிகளாக இருக்கலாம். சில கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். அவையனைத்தையும் இணைத்து ஒரு முழுமையினைப் படைத்துக் கூறுதலின் இது படைப்புக் கற்பனை எனப்படும்.
(ii) இயைபுக் கற்பனை (Associative Imagination)
புலவன் ஒரு காட்சியைக் காண்கிறான். அக்காட்சி அவன் உள்ளத்தில் ஓர் உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அவ்வுணர்ச்சியை மிகைப்படுத்தக்கூடிய வேறுசில கருத்தியல் வடிவங்களை நினைவாற்றல் அவன் உள்ளத்திற்குத் திரும்பக் கொண்டு வருகின்றது. அவற்றை இணைத்து அவன் ஓர் அழகிய கற்பனையைப் படைக்கின்றான்.
'புலவனின் உள்ளத்தில் ஓர் உணர்ச்சி ஆற்றல் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் போது, அந்த ஒரே வகை உணர்ச்சியைத் தூண்டுகின்ற வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்து அவற்றை அவன் இணைத்துப் பாடுவதும் உண்டு. இவ்வாறு பாடுவது இயைபுக் கற்பனையாகும்.”
(Winchester, C.T., Some Principles of Literary Criticism P.127) என்று வின்செஸ்டர் வரையறை செய்கிறார்.
பரணரின் அகநானூற்றுப் பாடலொன்று இயைபுக் கற்பனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. பொய்கைக் காட்சியொன்றனைப் புலவர் கற்பனைத் திறனோடு படைத்துக் காட்டுகின்றார். நீண்ட பெரிய பொய்கை. வெள்ளிய வாளை மீன் இரைவேட்டு எழுகின்றது. பொய்கைக் கரையில் இருந்த நாரை அந்த வாளைமீனைப் பற்றி உண்ணுதற்பொருட்டு அதனை நோக்கி நடக்கின்றது. தன் அடியின் ஒலியினை வாளைமீன் அறிந்து தப்பிச் சென்றுவிடுமோ என்றஞ்சி மெல்ல மெல்லத் தளர்ந்து நடக்கின்றது.
இக்காட்சியினைக் கற்பனைச் செய்கின்ற பரணர் நாரையின் நடைக்கு ஓர் உவமை கூறுகின்றார். காவல் மிகுந்த வீட்டுள் புகுகின்ற கள்வன் எவ்வாறு தன் அடியொலியைப் பிறரறியாதவாறு மெல்ல மெல்ல நடப்பானோ அவ்வாறு அந்த நாரை நடந்துச் செல்வதாகக் கூறுகின்றார்.
'நீளிரும் பொய்கை யிரைவேட் டெழுந்த
... ... ... ... ...
சாஅய் ஒதுங்குந் துறை”
(அகம்.276:1-5)
வாளைமீன் அறியாதவாறு அஞ்சி நடக்கின்ற நாரையின் நடை, கடியிலம் புகூஉம் கள்வனின் நடையினை அவர் நினைவுக்குக் கொண்டு வந்தது. வாளையை உண்ண வேண்டுமென்ற நாரையின் குறிக்கோளும், பொருளைக் கவரவேண்டும் என்ற கள்வனின் குறிக்கோளும் ஒத்த உணர்வினவாக இருத்தலின் அவற்றை இயைத்து அமைத்துள்ள இக்கற்பனை இயைபுக் கற்பனை எனப்படும்
(iii) கருத்து விளக்கக் கற்பனை (Interpretative Imagination)
'உணர்ச்சிக்கு உண்மையான காரணமாக விளங்குகின்ற ஆன்மீகத் தகுதி வாய்ந்த காட்சிகளைக் காணும் போதே கற்பனை செயல்படத் தொடங்குகின்றது. கவிஞன் தான் காணும் காட்சிகளைக் கூற முயல்கின்றான். காட்சி முழுவதையும் விளக்குவது அவன் நோக்கமன்று. ஆன்மீகத் தகுதிவாய்ந்த அக்காட்சியின் சில கூறுகளையே படைத்துக் காட்டிச் சிறந்த கருத்துக்களை விளக்குகிறான்.”
(Winchester, C.T., Some Principles of Literary Criticism P.130) என்று வின்செஸ்டர் விளக்கம் தருகிறார்.
இன்பமும், இளமையும் இவ்வுலகத்தில் நிலையற்றவை. அவற்றின் நிலையாமையினை நற்றிணைப் பாடலொன்று,
'வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும்”
(நற். 46;1-2)
எனக் கூறுகின்றது. வில்லினின்றெய்யப்படும் கணையின் நிழல் விரைந்து சென்று அழிவது போல் இன்பமும் இளமையும் விரைந்து அழியும் என்றும் புலவர் கூறுகின்றார். இத்தகைய அழகிய உவமை வாயிலாக நிலையாமையினை உணர்த்துகின்ற புலவரின் பெயர் தெரியவில்லை. இத்தகைய தம் பாடலின் தொடரால் பெயர் பெறும் புலவர் சிலர் போல இவரும் ‘எய்கணை நிழலார்’ என வழங்கப்பெறலாம்.
பொய்கை நீரில் மீன் ஓடுகின்ற வழி, விரைவில் மாறி இருந்தஇடம் தெரியாமல் மறைந்து விடுதல் போல, பொருட்செல்வம் இருந்த இடம் தெரியாமல் மறையும் இயல்பினது என்பதனை,
'பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமீன் வழியி;ற் கெடுவ”
(நற். 16:4-6)
என்று சிறைக்குடியாந்தையார் கூறுகின்றார்.
இளமை, இன்பம், பொருள் முதலியவற்றின் நிலையாமையினைக் கூறுவதன் வாயிலாக மாந்தர் குறிக்கோள் மிக்க வாழ்வு வாழவேண்டும் என்பதனை உணர்த்தப் புலவர்கள் விரும்புகின்றனர்.
ஊழின் வழியே உயிர் செல்லும் என்னும் உண்மையை உணர்த்த விரும்பும் கணியன் பூங்குன்றனார்,
'கல்பொரு திரங்கும் மல்லல் பேரியாற்று
நீட்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம்”
(புறம். 192;8-10)
எனக் கூறுகிறார்.
நீரின் வழியே புணை செல்வதுபோல் ஊழின் வழியே உயிர் செல்லும் என இரண்டனையும் இணைத்துக் கூறியுள்ள கற்பனைத்திறம் போற்றத்தக்கது. உலகத்தின் அழியாத உண்மைகளைத் தான் உணரும் உட்பொருள் விளங்குமாறு கற்பனை செய்து ஆன்மீகத் தகுதியினைப் புலப்படுத்துவது கருத்து விளக்கக் கற்பனையாகும். இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாக அமைந்து, அதற்குச் சுவையூட்டும் ‘கற்பனை’ சங்க இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நிலை பொதுவகையாக இங்கு ஆராயப்பெற்றுள்ளது.
உரையாடல் அல்லது கருத்துப் பரிமாற்றத்தின் முதன்மை நோக்கங்களாக அறிந்ததை வெளிப்படுத்தல், அறியாததைத் தெரிந்து கொள்ளல், தேவைகளைப் பெறுதல், உறவுகளை மேம்படுத்தல், சிக்கல்களுக்குத் தீர்வு காணல் ஆகியவை அமைவதைக் காணமுடிகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் நிகழ இருப்பதை நினைக்கும் பொருளமைப்பு முன்னோக்கு உத்திக்கு நிலைக்களனாகவும், நிகழ்ந்ததைக் கூறும் பொருளமைப்பு பின்னோக்கு உத்திக்கு நிலைக்களனாகவும் அமைவதைக் காட்டுகிறது. சங்ககால மக்கள் தரைவழியாகவும், கடல்வழியாகவும் பயணம் மேற்கொண்டனர் என்பதையும் அறியமுடிகிறது. இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாக அமைந்து அதற்குச் சுவையூட்டும் ‘கற்பனை’ சங்க இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நிலை பொதுவகையாக இங்கு ஆராயப்பட்டுள்ளது.
பார்வை நூல்கள்
1. மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் சிறுகதைக்கலை, சர்வோதய இலக்கியபண்ணை, மதுரை, 1976.
2. மா. இராமலிங்கம், நாவல் இலக்கியம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1975.
3. சாலை.இளந்திரையன், தமிழ்ச்சிறுகதை, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1966.
4. சு. பாலச்சந்திரன், இலக்கியத்திறனாய்வு, அணியகம், 1976.
5. முருகு. இராஜேந்திரன், சகுனம் பார்ப்பது எப்படி?,
6. கா. காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
7. சி. பாலசுப்பிரமணியன், சங்க இலக்கியம் : சில பார்வைகள்,
8. Winchester, C.T., Some Principles of Literary Criticism, Macmillan, London, 1950.
(முற்றும்)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.