மருட்கையெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத் திறன்
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர். (தொல்.மெய்.3) அவற்றுள் மருட்கையெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்பனவற்றை விரித்துரைக்கிறார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் மருட்கைக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கிறது.
மருட்கை தோன்றும் களன்கள்
மருட்கையெனும் மெய்ப்பாடு தோன்றும் களனைத் தொல்காப்பியர்,
”புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (நூ.7)
எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.
உரையாசிரியர்களின் பார்வையில் மருட்கை
மருட்கை வியப்பிற் பிறப்பது.(இளம்.மெய்.நூ.3) என இளம்பூரணரும், மருட்கையென்பது வியப்பு, அற்புதமெனினும் ஒக்கும் (பேரா.மெய்.நூ.3) எனப் பேராசிரியரும், மருட்கையாவது வியப்புறுதல். அஃது ஆராய்ச்சி முட்டுப்பாடுற்ற வழி எய்தும் அறிவு நிலையாகும். (ச.பாலசுந்தரம்.மெய்.நூ.3) என பாலசுந்தரமும், மருட்கை - வியப்பு (புலவர்குழந்தை, மெய்.நூ.3) எனப் புலவர் குழந்தையும் மருட்கையெனும் மெய்ப்பாட்டிற்கு விளக்கம் கூறியுள்ளனர். இதன்வழி, மருட்கையென்பது வியப்பு. அது ஆராய்ச்சிக்கு முட்டுப்பாடு ஏற்படும் போது எய்தும் அறிவுநிலை. இஃது அற்புதமெனினும் ஒக்கும் என்பது அறியப்படுகிறது.
புதுமை
புதுமையாவது யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தினுந்தோன்றாததோர் பொருள் தோன்றிய வழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன (இளம்.மெய்.நூ.7) என இளம்பூரணரும், புதிதாகக் கண்டன (பேரா.மெய்.நூ.7) எனப் பேராசிரியரும், புது ஐமயாவது அதுகாறும் காணாததைக் கண்டலும் நிகழாதது நிகழ்தலுமாம் (ச.பாலசுந்தரம்.மெய்.நூ.7) எனப் பாலசுந்தரமும், புதிதாகக் கண்ட பொருள். இது தன்னிடத்துண்டான புதுமை பற்றி வியத்தலும், பிறரிடத்துண்டான புதுமை பற்றி வியத்தலும் என இரண்டாம்.(குழந்தை. மெய்.நூ.7) எனப் புலவர் குழந்தையும் உரை கூறுவர். இவற்றின் வழி, புதுமையென்பது எக்காலத்திலும் எவ்விடத்திலும் காணாத ஒன்றனைக் காணுதலும் கேட்காததனைக் கேட்டலும் என்பதும் இது தன்னிடமும் பிறனிடமும் தோன்றும் என்பதும் அறியப்படுகிறது. மேலும் இளம்பூரணர் புதுமையை விளக்கப் பொதுவாகவும், ச. பாலசுந்தரனார் பிறனிடம் தோன்றும் புதுமையை விளக்கவும்,
”... ... ... ... ... பெருந்தேர்யானும்
ஏறியதல்லது வந்தவாறு
நனியறிந்தன்றோவிலனே
... ... ... ... ... இல்வயின்நிறீஇ
இழிமின்என்றநின்மொழிமருண்டிசினே” (அகம்.384)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், நானும் விரும்பியகாதலோடு பெரியதேரில் ஏறியதை அறிந்தேன். இங்கு வந்த வருகையை நான் அறியவில்லை. முயல்குட்டிகள் தாவிக்குதித்து மகிழும் முல்லைக் காட்டில் கவர்ந்த கதிரையுடைய தினைகள் பொருந்திய சிறிய ஊரில் மென்மையான தன்மையையுடைய தலைவியின் வீட்டின் முன்பு தேரை நிறுத்தி, இறங்குக என்ற உன் சொல்லைக் கேட்டு வியப்படைந்தேன். என்பதன் வழி, புதுமையெனும் மெய்ப்பாடு வெளிப்பட்டமையை அறிய முடிகிறது. மேலும், தன்னிடம் தோன்றும் புதுமையை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,
”மலர்தார்மார்பனின்றோற்கண்டோர்
பலர்தில்வாழிதோழியவருள்
ஆரிருட்கங்குல்அணையொடுபொருந்தி
ஓர்யானாகுவதெவன்கொல்
நீர்வார்கண்ணொடுநெகிழ்தோளேனே” (அகம்.82)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், தினைப்புனத்தில் ஒரு பால் நின்றோனாகிய மலர் தார்மார்பனைக் கண்டோர் பலர்.தோழியே! அவருள் அரிய இருட்கங்குலில் படுக்கையொடு பொருந்தி நீர்வாருங்கண்ணோடு நெகிழ்தோளினையுடையேன் யானொருத்தியுமே. அங்ஙனமாதற்குக் காரணம் என்னையோ?என்ற வழி தன்னிடம் தோன்றும் புதுமையை அறிய முடிகிறது.
பிறரிடம் தோன்றும் புதுமையை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,
”மந்திநல்லவைமருள்வனநோக்கக
கழைவளர்அடுக்கத்தியவியாடுமயில்
விழவுக்களவிறலியில்தோன்றும்நாடம்” (அகம்.82)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலில், நல்ல மந்தித்திரள் ஆச்சரியப்பட்டு நோக்க மூங்கில் வளரா நின்ற மலைப்பக்கத்து உலாவியாடும் மயில் விழவுகளத்திற்புக்கு நடிக்கின்ற விறலியைப் போலத் தோன்றுகின்ற நாட்டையுடையவன் என்ற வழி பிறனிடம் தோன்றும் புதுமையை அறிய முடிகிறது.
பெருமை
பெருமையென்பது பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலையும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும் என இளம்பூரணரும், கழியப் பெரியனவாயின எனப் பேராசிரியரும், பெருமையாவது அளவையின் இகந்து கழியப் பெரிதாயினது எனக் கருதிக் கோடலாம் (பெருமை-பெருக்கம்) எனப் பாலசுந்தரனாரும், பெருமை - மிகப்பெரியது. இது, தன் கட்டோன்றிய பெருமை பற்றி வியத்தலும், பிறன் கட்டோன்றிய பெருமை பற்றி வியத்தலும் என இரண்டாம் எனப் புலவர் குழந்தையும் உரை கொள்வர். இவற்றின் வழி, பெருமை என்பது இது கண்காணாத பெரிய அளவிலானதைக் கண்டு வியத்தலாகும். இஃதுதன் கட்தோன்றல், பிறன் கட்டோன்றல் என இருவகையாம் என்பது அறியப்படுகிறது. இதில் தன்கட்டோன்றிய பெருமையை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் குறுந்.3ஆம் பாடலையும், ச.பாலசுந்தரனார் குறள்.1127 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும், பிறன் கட்டோன்றிய பெருமையை விளக்கக் குறள்.1146 ஐ ச. பாலசுந்தரனார் எடுத்தாண்டுள்ளார்.
சிறுமை
சிறுமையென்பது பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது “கடுகின்கட்பலதுளை“ போல்வன என இளம்பூரணரும், இறப்பச்சிறியனவும் எனப் பேராசிரியரும், அளவையின் இகந்துதவச் சிறிதாயினது எனக் கருதிக்கோடல்.(சிறுமை - சிறுத்தல்) எனப் பாலசுந்தரனாரும், மிகச்சிறியது. இது, தன்னிடத்துண்டான சிறுமை கண்டு வியததலும், பிறனிடத்துண்டான சிறுமை கண்டு வியத்தலுமென இரண்டாம் எனப் புலவர் குழந்தையும் உரை கொள்வர். இவற்றின்வழி, சிறுமையென்பது ஓர் அணுவின் பல்கூறு போன்றது. அஃதாவது ஏனையவற்றைக் காட்டிலும் மிகச்சிறிது. இஃது தன்கட்டோன்றல், பிறன்கட்டோன்றல் என இரு வகையாகும் என்பது அறியப்படுகிறது. இவற்றுள் தன்கட்டோன்றும் சிறுமையினை விளக்க ச. பாலசுந்தரனார் குறள்.1233 ஐ எடுத்தாண்டுள்ளார்.
ஆக்கம்
ஆக்கம் என்பது ஒன்றன் பரிணாமங் கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மர முதலியன ஆகிய வழி வியத்தலும் நல்கூர்ந்தான் யாதொன்றுமிலாதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரணமுரணாதலின் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங்கண்டு வியத்தலுமாம், பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லாம் இவற்றின் பாற்படுத்திக் கொள்க என இளம்பூரணரும், ஒன்று ஒன்றாய்த் திரிந்தன எனப் பேராசிரியரும், ஒன்றினின்று அதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று பிரிதொன்றாய்த் திரிதலுமாம் என ச. பாலசுந்தரனாரும், ஒன்று வேறொன்றாய்த் திரிதல், ஒன்று திரிந்தொன்றாதல் எனினுமாம். இது தன்னிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலும், பிறனிடத்துண்டான ஆக்கம் பற்றி வியத்தலுமென இரண்டாம் எனப் புலவர்குழந்தையும் உரைகொள்வர். இவற்றின் வழி, ஆக்கமென்பது ஒன்றன் பரிணாம வளர்ச்சியடைதலாகும். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதைப் போன்றது. இஃது தன்கட்டோன்றல், பிறன்கட்டோன்றல் என இரண்டாகும் என்பது அறியப்படுகிறது. இவற்றுள், தன்கட்டோன்றும் ஆக்கத்தினை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் புறம்.5 ஆம் பாடலையும், ச. பாலசுந்தரனார் குறள்.1259 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும், பிறன்கட்டோன்றிய ஆக்கத்தினை விளக்கப் பேராசிரியரும் புலவர்குழந்தையும் நாலடி.28 ஆம் பாடலையும், ச. பாலசுந்தரனார் குறள்.1120 ஐயும் எடுத்தாண்டுள்ளனர்.
முடிவுரை
மருட்கையெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் அகப்பாடல் ஒன்றினையும், பேராசிரியரும், புலவர் குழந்தையும் அகப்பாடல், குறுந்தொகை, புறப்பாடல், நாலடியார் ஆகியவற்றில் தலா ஒன்றும், ச. பாலசுந்தரனார் அகப்பாடல் ஒன்றையும், ஆறு குறள்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியரும், புலவர் குழந்தையும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளை எடுத்தாண்டுள்ளனர். உரையாசிரியர்கள் (இளம்., பேரா., ச.பால., குழந்தை) அகநானூற்றில் இரு பாடல்களையும் (82, 384), குறுந்தொகையில் (3) ஒரு பாடலையும், புறநானூற்றில்(5) ஒரு பாடலையும், திருக்குறளில் (1104, 1146, 1259, 1120) நான்கு குறள்களையும், நாலடியாரில் (28) ஒரு பாடலும் என ஒன்பது பாடல்களை இம்மெய்ப்பாட்டினை விளக்க எடுத்துக் காட்டியுள்ளனர்.
இவற்றுள் திருக்குறள் அதிகப்படியாக எடுத்தாளப்பட்டிருப்பதும் அதற்கடுத்தப்படியாக அகநானூறு எடுத்தாளப்பட்டிருப்பதும் அறிய முடிகிறது. இவற்றின் வழி உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் அகநானூற்றையும் ஏனைய இலக்கியங்களைப் போலத் திருக்குறளுக்கு அடுத்தாற்போல் எடுத்தாண்டுள்ளனர் என்பது முடிபு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.