சிலப்பதிகாரத்தில் கற்பு மூலப்படிவம்
முனைவர் பா. பொன்னி
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவா்,
எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி.
இயற்கையின் படைப்புகளில் மிகவும் சிக்கலான ஒன்று மனித மனம். மனிதனின் எண்ணங்கள் செயல்பாடுகள் இவற்றிற்கான உண்மையான காரணங்களை வரைறுப்பது என்பது கடினமான ஒன்றாகும். எந்த ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடுகளுக்குப் பின்னரும் அவனது சூழலும் சமூகமும் ஆழ்மனமும் இன்றியமையாத இடம் வகிக்கும். அதன் அடிப்படையிலேயே இலக்கியப் படைப்புகளில் குறிப்பிட்ட சில கருத்துருவாக்கங்கள் ஒரே அடிப்படையில் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சிலப்பதிகாரக் காப்பியத்தில் கற்பு என்னும் மூலப்படிவம் பதிவு செய்யப்பட்டுள்ள தன்மையினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கூட்டுநனவிலிமனம்
கூட்டுநனவிலி மனம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவா் யுங் ஆவார். யுங் மனித ஆளுமையை நனவு ஈகோ (Conscious Ego), தனியா் ஈகோ (Personal Ego) கூட்டுநனவிலி (Collective or Transpersonal Unconscious) என்று மூன்று கோணங்களில் விவரித்துள்ளார்.
நனவிலி மனதிலிருந்து வேறுபட்டது கூட்டுநனவிலி மனமாகும். தனிமனித நனவிலி மன எண்ணங்கள் என்பவை அவனது நனவுமன எண்ணங்களே ஆகும். இவ்வெண்ணங்கள் காலப்போக்கில் நனவிலிமன எண்ணங்களாக மாறுகின்றன. மேலும் இவை பரம்பரை பரம்பரையாக மனித ஜீன்களின் வழியாகக் கடத்தப்பட்டு, கால எல்லை வேறுபாடுகளைக் கடந்து தங்களைத் தாங்களே வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக விளங்குகின்றன என்பது யுங்கின் கருத்து. இத்தகைய எண்ணங்களைக் கடத்துகின்ற மனப்பகுதியே கூட்டுநனவிலி மனமாகும். இந்தக் கூட்டுநனவிலி மனம் உலகப் பொதுமை வாய்ந்தது. இக்கூட்டு நனவிலி மனதிற்குள் இருக்கும் எண்ணங்களும் உலகப் பொதுமை (Universalization ) வாய்ந்தவை. இது நனவு நிலையால் எந்த வகையிலும் உணரமுடியாத இருண்ட பகுதியாக இருக்கக் கூடியதாகும். இந்தப் பகுதியை உள ஆற்றலின் தேக்கியாக யுங் கண்டறிந்தார். அந்த ஆற்றல் பல கூறுகளாகக் கூட்டுநனவிலியில் பொதிந்து கிடக்கின்றன. இவற்றையே யுங் மூலப்படிவங்கள் என்று குறிப்பிட்டார்.
மூலப்படிவங்கள்
தொன்மைக்காலம் தொட்டு மனித இன உள் அனுபவங்களால் பெற்றமைந்த அமைப்பியல் உளக் கூறுகளே மூலப்படிவங்கள் எனலாம். இவை கருத்துருக்களாக அமைந்து அனைவரின் நனவிலிக்குள்ளே பொதுநிலையில் உள்உணா்ச்சி போல் மனதிற்குள் செயல்படுபவை ஆகும். மறுபுறம் இவை தனியரற்ற நிலையிலும் (Impersonal) விளங்குகின்றன. யுங் படைப்பு ஆளுமை என்பது தனியரற்ற நிலையுடன் தொடா்புடையது என்று குறிப்பிடுகிறார். அதாவது ஒவ்வொரு படைப்பும் கூட்டுப்படைப்பு (Collective creation) என்பது அவரது வாதம்.
தாய், அனிமா, அனிமஸ், முதல் தந்தை, சாயல், தெய்வீகக் குழந்தை, அச்சுறுத்தும் தாய், ஞான முதியவன், ஏமாற்றுக்காரன் அல்லது குறும்புக்காரன், சுயம், மண்டலம், நாயகன் இவை அனைத்தும் இடவேறுபாடு இனறிக் காணப்படும் மூலப்படிவங்கள் ஆகும் என்று யுங் குறிப்பிடுகிறார்.
மூலப்படிவங்களின் இயல்புகள்
மூலப்படிவங்களின் முதன்மையான இயல்பு திருப்பம் ஆகும். சமய சந்தா்ப்பம் கிடைத்தவுடன் இவை உடனுக்குடன் வெளிப்படுபவை. குறிப்பாகக் கனவிலும் புனைவிலும் இவை எளிதாக வெளிப்பட்டு விடும். மனிதனின் முதல் இலக்கியம் முதல் இந்நாள் உள்ள இலக்கியங்கள் வரையிலும் இவை தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தது இல்லை. செவ்வியல் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், நவீன இலக்கியம் என்று எந்த வகையான இலக்கியமாக இருந்தாலும் இலக்கிய வடிவங்களுக்கு ஏற்ப மூலப்படிவங்கள் அவற்றுள் தம்மைக் கட்டமைத்துக் கொள்கின்றன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் கற்பு பற்றி குறிப்பிடடுள்ள கருத்துகள் கூட்டுநனவிலி மனதின் வெளிப்பாடே எனலாம்.
கற்பு மூலப்படிமம்
கற்பு என்ற மூலப்படிமத்தினை நாம் சங்க காலம் தொடங்கி இன்று வரையுள்ள இலக்கி்யங்கள் வரையிலும் காண இயலுகின்றது. சிலம்பில் கண்ணகி, கோப்பெருந்தேவி என்ற பாத்திரங்களோடு நின்று விடாமல் வஞ்சின மாலையில் இடம் பெறும் பத்தினிப் பெண்டிர் தொடா்பான கதைகளும் கற்பு மூலப்படிவத்திற்கும் கூட்டுநனவிலிக்கும் சான்றாக அமைகின்றன.
கற்பு - விளக்கம்
கற்பு என்ற சொல் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
“கற்பு என்ற சொல்லிற்கு ‘chastity’, ‘conjugal’, ‘fidelity’ ஆகிய பொருட்கள் தரப்பட்டுள்ளன. ‘Chastity’ என்பதற்குக் கன்னிமை, தூய்மை, தற்கட்டுப்பாடு என்ற பொருட்கள் தரப்படுகின்றன. ‘Conjugal’, ‘fidelity’ என்ற சொற்களுக்கு, மணவாழ்வில் கணவன் - மனைவி இருவரிடத்தும் ஏற்படும் பற்று, மாறா உறுதிப்பாடு என்ற பொருள் தரப்படுகிறது. அதாவது கணவன் மனைவியிடத்தும், மனைவி கணவனிடத்தும் பற்று மாறாமல் இருக்கும் தன்மை” (இரா. பிரேமா கற்பு - கலாச்சாரம் பக் - 7-8) என்று குறிப்பிடுவா்.
இலக்கியங்களில் கற்பு என்ற சொல்லாட்சி
அகநானூற்றில் கற்பு என்ற சொல்லாட்சி, பயிற்சி என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது.
"இகல்அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி" (அகம் 396 - 5)
என்ற பாடலடியில் தான் சொல்லிய சொல் பிழையாது போர் வெல்லும் பயிற்சியுடைய மிஞிலி என்றும்,
"வெளிறு இல் கற்பின் மண்டு அமா் அடுதொறும்" (அகம் 106 - 11)
என்ற பாடலடியில் குற்றம் இல்லாத படைப்பயிற்சியுடன் கூடிப் போர் செய்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறியலாகின்றது.
பதிற்றுப்பத்தில் கற்பு என்னும் சொல் கற்றல் என்னும் பொருளில் ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உலகந்தாங்கியமேம்படுகற்பின்
வில்லோர் மெய்ம்மறை" (பதி 59-8 - 9)
என்ற அடியில் கற்க வேண்டியவற்றைக் கற்றவன் என்னும் பொருள்பட கற்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறியலாகின்றது. இருப்பினும், கற்பு என்ற சொல்
பெண்ணோடு தொடா்புபடுத்தப்பட்டு பெண்ணுக்குரிய பண்புகளில் ஒன்றாகச் சுட்டப்படுவதனை
“முல்லைசான்றகற்பின்
மெல் இயற் குறுமகள் உறைவின் ஊரே” (நற் 142 9-10)
“நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்” (அகம் 9- 24)
“மனைமாண் கற்பின் வாணுதல் ஒழிய” (அகம் 33 - 2)
“திருநகா் அடங்கிய மாசுஇல் கற்பின்” (அகம் -114 -12)
“உவா் நீங்கு கற்பின் எம் உயிர் உடம் படுவி” (அகம் 136 - 19)
“முல்லைசான்றகற்பின்
மெல்இயற் குறுமகள்” (அகம் 274 13-14)
என்ற அடிகளால் அறியலாகின்றது.
சங்க இலக்கியங்கள் கணவன் இறந்த உடனேயே தானும் இறந்த பெண்கள் (புறம் 62, குறுந் 57 69) கணவனோடு உடன்கட்டை ஏறிய பெண்கள் (புறம் 240 ) ஆகியோரைச் சிறப்பிப்பதனைக் காணமுடிகிறது. வேறு சில கடமைகளுக்காக கணவனுக்குப் பின்னரும் உயிர் வாழும் பெண்கள் கைம்மை பூண்டு வாழ்ந்தமையையும் சங்க இலக்கியங்கள் (புறம் 125, 224, 237, 242, 246, 248, 249, 250, 253, 261, 272, 280, 326, 353) பதிவு செய்துள்ளன. இதன் வழி கற்பு என்பது சமூகத்தின் கூட்டுநனவிலியாக விளங்கியமையை அறியலாகின்றது. இதன் தொடர்ச்சியினைக் காப்பியங்களிலும் காணமுடிகிறது.
காப்பியங்களில் கற்பு மூலப்படிவம்
இளங்கோவடிகளின் கூட்டு நனவிலி மனத்திலும் இத்தகைய கற்பு பற்றிய மூலப்படிவங்கள் பதிந்து இருந்தமையாலே அவரது காப்பியத்தில் பெண் பாத்திரங்களைக் கற்புக்கு முதன்மை தரும் பாத்திரங்களாகப் படைத்துக் காட்டியுள்ளனா் எனலாம். சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையில் இடம் பெறும் பத்தினிப் பெண்டிரின் கதைகள் கற்பு குறித்த கூட்டுநனவிலி கருத்துருவிற்குச் சிறந்த சான்றாக அமைகின்றன.
பூம்புகார் நகரத்துக் கற்புடைய மகளிர்
அஃறிணைப்பொருள்களான வன்னி மரத்தினையும் மடைப்பள்ளியையும் பேசச் செய்தல், கணவன் என்று கூறப்பட்டதால் மணலால் ஆன பாவையினை நீங்காது இருந்த பெண், காவேரியில் மூழ்கிய கணவனை மீட்ட ஆதிமந்தி, பொருளீட்டச் சென்ற கணவன் வரும் வரை கல்லுருவம் கொண்ட பெண், கிணற்றில் வீழ்ந்த மாற்றாளின் குழந்தையை மீட்ட பெண், கணவனைத் தவிர வேறு எவா்க்கும் அழகாகத் தெரியக் கூடாது எனத் தன் முகத்தைத் தானே குரங்காக மாற்றிக் கொண்ட பெண், தாயின் உறுதிமொழிக்காக ஆண்குழந்தையைக் கணவனாக ஏற்றுக் கொண்ட பெண் என்று பத்தினிப் பெண்களின் கதை கூறப்பட்டுள்ளது.
இவை வழி வழியாக வழங்கி வந்த, பெண் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கூட்டுநனவிலியின் வெளிப்பாடே எனலாம்.
கண்ணகி
கண்ணகி என்ற மூலப்படிவம் கணவன் எந்தத் தவறு செய்தாலும் எதிர்த்துப் பேசாத இல்லறக் கடமையினை மட்டுமே கருத்தில் கொண்டு தன் துயரை மறைத்து வாழும் கற்புடை பெண்ணிற்கான படிவமாகும். கணவன் எத்தகைய துன்பத்தைத் தந்தவனாக இருப்பினும் அவனுக்குப் பழி ஏற்பட்டால் அப்பழியில் இருந்து கணவனைக் காப்பதே கற்புடைய பெண்ணின் கடமை . அவ்வாறு இருந்தால் அவள் உலகோர் புகழும் சிறப்பினை அடைவாள் என்பதும் இதன் வழி மகளிர்க்குப் புலப்படுத்தப் படுகிறது எனலாம். சங்க காலத்திலும் பேகன் என்னும் மன்னன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்த நிலையிலும் அவள் கணவனுக்காகவே வாழ்ந்த நிலை பதிவு செய்யப்பட்டுள்ளது இங்கு சுட்டத்தக்கது.
தேவந்தி மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஆதிரை பாத்திரங்களும் இவ்வகையில் படைக்கப்பட்டனவே எனலாம்.
கோப்பெருந்தேவி
அரண்மனை வாழ்வு பெருஞ்செல்வம் அனைத்தும் இருப்பினும் கணவன் உயிர் இழந்த பின் உயிர் வாழ்தல் கற்புடைய மகளிர்க்கு அழகன்று என்பதனைப் புலப்படுத்துவதான மூலப்படிவம். சங்க காலத்திலும் கணவன் இறந்த பின்னா் மகளிர் உயிர் துறந்தமை குறிப்பிடப்படுவது இங்கு சுட்டத்தக்கது.
மாதவி
ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையில் பரத்தை குலத்தைச் சார்ந்தவராக இருப்பினும் ஒருவரோடு ஒருவா் என்று வாழ்வதனை வெளிப்படுத்தும் கற்பு என்னும் மூலப்படிவம்.
கற்பு என்ற மூலப்படிவம் அரசநிலையில் இருக்கும் கோப்பெருந்தேவி, அரசா்க்கு அடுத்த நிலையில் இருக்கும் வணிக குலத்தைச் சார்ந்த கண்ணகி என்ற இரு பாத்திரங்களிலும் தன்னை வெளிப்படுத்துவதனைக் காணமுடிகிறது. இவ்விரு பாத்திரங்களையும் தாண்டி பரத்தை குலத்தைச் சார்ந்த மாதவியின் பாத்திரத்திலும் வெளிப்படுவதனைக் காணலாகின்றது.
துணை நூற்பட்டியல்
1. இரவிச்சந்திரன் தி.கு, சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005.
2. ------------------------, ஃப்ராய்ட் யூங் லக்கான்: அறிமுகமும், நெறிமுகமும், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2007.
3. இரவிச்சந்திரன் தி.கு, புதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும் (ஃப்ராய்ட்: யூங்: லக்கான்), அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2017
4. நடராசன் தி.சு, திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், சென்னை, 2016. 10வது பதிப்பு.
5. பிரேமா இரா, கற்பு - கலாச்சாரம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. 2006.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.