சிறுபாணாற்றுப்படையில் மானிட மாண்புகள்
முனைவர் க.துரையரசன்
அறிமுகம்
சங்க இலக்கியம் தமிழ் இலக்கியப் பேழை: கருத்துக் கருவூலம்: பண்பாட்டுப் பெட்டகம்: கற்பனைக் களஞ்சியம்: ஈராயிரம் ஆண்டுப் பழமையானவை; தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவை:
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியம் அல்லது பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆயினும் சங்க இலக்கியம் என்பதே பெருவழக்காகும். பத்துப்பாட்டு என்பது நீண்ட பத்துப்பாடல்களின் தொகுப்பு ஆகும். இதில் 3552 அடிகள் உள்ளன. இதில் மிகப் பெரியது மதுரைக்காஞ்சி - 782 அடிகள்; மிகச் சிறியது முல்லைப்பாட்டு - 103 அடிகள்.
சிறுபாணாற்றுப்படை
பத்துப்பாட்டில் மூன்றாவது பாட்டு சிறுபாணாற்றுப்படை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இது 269 அடிகளை உடையது. இதனைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். இப்பெயரில் மூன்று செய்திகள் உள்ளன. அவை:
1) நத்தத்தனார் - இது புலவரின் இயற்பெயர். சிலர் தத்தனார் என்பதே இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு முன்னால் "ந" சேர்ப்பது பழங்கால மரபு. அதனால் தத்தனார் என்பதற்கு முன்பு "ந" சேர்ந்து நத்தத்தனார் என்றாயிற்று என்பர்.
2) நல்லூர் என்பது இவர் பிறந்த ஊர்.
3) இடைக்கழி நாடு: நல்லூர் என்னும் சிற்றூர் இருந்த நாடு. இது இன்றும் கூட மதுராந்தகத்துக்கு அருகில் எடக்கு நாடு என்னும் பெயரில் இருப்பதாகக் கூறுவர்.
நல்லியக்கோடன்
சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன். இவன் ஒய்மா நாட்டை ஆண்ட சிற்றரசன். ஒய்மா நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டிய பகுதி. இதன் தலைநகர் கிடங்கில். இதனைப் பெருமாவிலங்கை என்றும் கூறுவர். இவன் ஆட்சிக்குட்பட்ட ஊர்களாக மாவிலங்கை, எயில்பட்டினம், வேலூர், மூர் ஆகியவை இருந்தன.
மானிட மாண்புகள்
சமூகம் வெறுக்கின்ற எந்தக் குணங்களும் எந்த ஒரு மனிதரிடமும் இருத்தலாகாது. பிறருக்கு எவ்வகையிலும் சிறிய அளவில் கூட இடையூறு விளைவிக்காதவாறு ஒவ்வொரு மனிதர்களின் செயல்களும் இருத்தல் வேண்டும். எனவே சமூகம் மதிக்கின்ற எந்த ஒரு நல்ல குணங்களையும் மனித மாண்புகள் என்று கூறலாம்.
அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, ஈகை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை போன்ற அடுக்கடுக்காக வள்ளுவர் கூறுவதெல்லாம் மானிட மாண்புகளே அன்றி வேறில்லை.
சிறுபாணாற்றுப்படையில் மானிட மாண்புகள்
1. சிறுபாணாற்றுப்படையில் காணலாகும் மானிட மாண்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தி உரைக்கலாம்.
2. பாணர்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
3. நல்லியக்கோடன் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
4. கடையெழு வள்ளல்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
5. பொதுமக்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
பாணர்களின் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
1. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த குணம்
2. வறுமையிலும் செம்மை
3. பகிர்ந்தளிக்கும் பாங்கு
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
சிறுபாணர்களின் வாழ்க்கை வறுமை நிறைந்தது. எனினும் அவர்களின் சிந்தனை வளமானது - பிறருக்கு உதவும் மனப்பான்மை மிக்கது. தாங்கள் இன்னாரிடம் சென்றோம்; அவர் தங்களுக்கு இன்னின்ன பொருள்களைப் பரிசிலாகத் தந்தார்; எனவே தங்களைப் போல வறுமையில் வாடுகின்ற பாணர்கள் தங்களைப் போலவே பரிசில்கள் பல பெற்று வறுமை நீங்கி வளமுடன் வாழ வேண்டும் என்று பாணர்கள் விழைந்ததனை - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பாணர்களின் பரந்த உள்ளத்தை சிறுபாணாற்றுப்படை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
சுரத்தின் தன்மை
சிறுபாணன் பரிசு பெற செல்லும் வழி பாலை நிலம் - இது நீண்ட மணல் பரப்பை உடையது. குடிப்பதற்கு நீரோ வழிக்களைப்பை நீக்கும் மர நிழலோ இல்லாதது. வெப்பம் மிகுதியானது. சூரைக்காற்று எப்பொழுதும் வீசிப் புழுதியைக் கிளப்பும். வழிப்பறி கொள்ளையர்களால் எப்பொழுதும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிரம்பியது.
கொடுமையான வறுமையை உடைய சிறுபாணன் இத்தகைய கடுமையான பாலை நிலத்தின் வழி செல்கிறான். வழி நடைக் களைப்பு அவனை வாட்டுகிறது. அப்பொழுதும்கூட அவனது சிந்தனை சுயநலம் உடையதாக இல்லை. பொது நலம் நாடியதாகவே இருக்கிறது.
தன் வறுமையைப் போக்குகிற வகையில் மிகுந்த செல்வத்தையும் தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் தனக்கு வழங்கிய நல்லியக் கோடனிடம் தன்னைப் போலவே வறுமையில் வாடுகின்ற - வழியில் கண்ட சிறுபாணர்களை அவர்கள் பால் ஆற்றுப்படுத்துகிறான.
இவன் தன்னலம் கருதுபவனாக இருப்பானானல் தனக்குக் கிடைத்தப் பரிசு பற்றியோ பரிசு வழங்கிய நல்லியக்கோடனைப் பற்றியோ அவர்களிடம் கூறியிருக்க மாட்டான். தான் பெற்றதைப் போல பெருஞ்செல்வத்தைப் பிறரும் பெற வேண்டும் என்னும் உயரிய சிந்தனை - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் பரந்த உள்ளம் இப்பாணனுக்கு இருந்ததைக் காண முடிகிறது.
தான் செல்லுகின்ற பாதை கொடுமை நிறைந்ததாகவும், கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் இருந்தும் கூட அதனைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் வறிய பாணர்களுக்கு மிகப் பொறுமையாக நல்லியக்கோடனை அடைவதற்கு உரிய வழி வகைகளையும் அவனது வள்ளல் தன்மைகளையும் எடுத்துக்கூறி ஆற்றுப்படுத்துவதிலிருந்து சிறுபாணனின் சிறந்த மானிடப் பண்பு வெளிப்படுவதைக் கண்டு வியப்படையத் தோன்றுகிறது.
வறுமையிலும் செம்மை
1. உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி முதலான பொருட்கள் இல்லாது அடுக்களை வெறிச்சோடிக் கிடந்தது. இதனால் அடுப்புப் பற்ற வைத்து வெகு நாட்களாகி விட்டது. இதனை அடுப்பளை ஆம்பிப் பூத்தது என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
2. பாணன் வீட்டில் வளர்ந்த நாய் குட்டிகளை ஈன்றிருந்தது. அக்குட்டிகள் இன்னும் கண்களைக் கூட திறக்கவில்லை. அவை பால் குடிப்பதற்காகத் தாயை நாடின. ஆனால் வறுமையில் வாடிய அந்நாய் பால் சுரக்காமையால் தன் குட்டிகளுக்குப் பால் கொடுக்காது துரத்தியது. அதனையும் மீறி குட்டிகள் தாயின் பால் மடியைப் பற்றி இழுத்தன. வலி தாங்காத அந்தத் தாய் நாய் அலறித் துடித்தது.
3. அவனது வீடும் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பழமையானது - சிதிலமடைந்தது - இடிந்த சுவர்களை உடையது - சுவரில் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் கிளம்பி இருந்தன - வீட்டுக் கூரையில் இருந்த மூங்கில் கழிகள் கட்டுகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருந்தன - கூரையில் கீற்றுகள் இருந்தும் இல்லாதது போல தோன்றியது.
4. பாணனின் மனைவியும் வறுமையில் வாடினாள். அவள் தோற்றத்தைப் பாருங்கள்: பசியால் இளைத்த உடல். ஒட்டிய வயிறு. கைகளில் வளையல்களைத் தவிர வேறு அணிகலன்கள் எதுவும் இல்லை. இத்தகைய வறுமையிலும் கூட கற்பு நெறி பிறழாதவளாக பாணினியர் இருந்தனர்.
5) அவர்கள் அன்றாட உணவிற்கே மிகுந்த அல்லலுக்கு உள்ளானார்கள். அவர்கள் உணவு உண்டு வெகுநாட்களாகி விட்டன. பசியோ கட்டுக்கடங்கவில்லை. எனவே பசித்துன்பம் வாட்டியதால் தன் வீட்டுக் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைப் பறித்து வந்தாள். தன் கை நகங்களினால் கிள்ளி வேக வைத்தாள். பணச் செலவு இல்லாமல் கிடைத்த அந்தக் கீரைக்கு இட வேண்டி உப்புக்கூட அந்த வீட்டில் இல்லை. எனவே, உப்பில்லாமலேயே அந்தக் கீரையை உண்பதற்கு வலுடன் பலர் காத்திருந்தனர்.
வறுமையிலும் செம்மை என்பது போல தன் குடும்ப வறுமை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வீட்டு வாயில் கதவைத் தாழிட்டு மூடினாள். உப்பில்லாமல் சமைத்த வேளைக் கீரையை அனைவரும் உண்டனர். இவ்வாறு "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்" என்ற வறிய சூழலில் பாணனின் குடும்பம் இருந்தாலும் வறுமையிலும் செம்மை நிலைப் பிறழாது வாழ்ந்ததைக் காண முடிகிறது.
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சிநாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் .... (135-140)
பகிர்ந்தளித்தல்
கடுமையாக வறுமையில் வாடிய சிறுபாணன் தான் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பாதுகாப்பாகத் தான் மட்டுமே வைத்து அனுபவித்தான் இல்லை. தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று சேமித்து வைத்தானில்லை - மறைத்து வைத்தானில்லை. தன்னை நாடி வந்தவர்களுக்கும் உற்றார்களுக்கும் உறவினர்களுக்கும் அதனைப் பகிர்ந்தளித்தான். இத்தகைய உயரிய உள்ளம் செல்வந்தர்களுக்குக் கூட வாய்த்தல் அரிது. ஆனால் இந்த வறிய பாணனனுக்கு வாய்த்திருக்கிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வள்ளுவன் காட்டும் உயர்ந்த உள்ளம் இவர்களிடத்து இருக்கிறது. இத்தகைய மனித மாண்பு வாய்க்கப்பெற்ற மனிதர்களால்தான் இந்த உலகம் நீடு வாழ்கிறது.
நல்லியக்கோடன் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
நல்லியக்கோடனைச் சான்றோர்கள், வீரர்கள், அரிவையர், பரிசிலர் என்று பலரும் புகழ்ந்து கூறுகின்றனர். இதன் மூலம் நல்லியக்கோடனின் சிறந்த மாண்புகள் வெளிப்படுகின்றன. இவை மனித சமுதாயத்தில் நிலைத்து நிற்க வேண்டி பண்புகளாக இருக்கின்றன.
சான்றோர் புகழ்தல்: இன்முகம் உடையவன் - சிற்றினம் சேராதவன் - உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவன்.
வீரர்கள் புகழ்தல்: பகையைக் கண்டு அஞ்சாது அவர்களை அழிக்கும் பேராற்றல் மிக்கவன் - அடி பணிந்தாரிடத்து இரக்கமும் அருள் உள்ளமும் உடையவன்.
அரிவையர் புகழ்தல்: பெண்கள் வசப்படாதவன் - பெண்களின் வருத்தத்தைப் போக்குபவன் - பெண்களைப் பாதுகாப்பவன்.
பரிசிலர் புகழ்தல்: அறிவு மடம்படுதல் - வா¢சையறிந்து பா¢சு நல்கல் - வரையாது வழங்குதல்.
அறிவு மடம்படுதல்: அறிவு நிரம்பப் பெறாதவர்கள் தன்னிடம் வந்து தவறானவற்றறைக் கூறினால், அவற்றை அறியாதவன் போல் விரும்பிக் கேட்பான். அறிந்தும் அறியாதவன்போல் இருக்கும் இப்பண்பை அறிவு மடம்படுதல் என்பர்.
வாஞ்சையறிந்து பரிசு நல்கல்: பரிசில் பெறும் நோக்கோடு தன்னிடம் வந்த பரிசிலர்களுக்கு வேண்டுவன வழங்கும் வள்ளல் குணம் கொண்டவன் இம்மன்னன். ஆயினும் பரிசிலர் தகுதி அறிந்து அவர்களின் தகுதிக்கு இழுக்கு ஏற்படாதவாறு வாரி வழங்குவான். இதனை வாஞ்சையறிந்து பரிசு நல்குதல் என்று கூறுவர்.
வரையாது வழங்குவோன்: பரிசிலரின் மனம் மகிழ்ச்சி அடையுமாறும், அவர்கள் மட்டுன்றி, அவர்களது உறவினர்களும் பெற்றுப் பயன் அடையும் வகையிலும் அளவில்லாப் பரிசுப் பொருட்களை வாரி வழங்குவான். இதனை வரையாது வழங்குதல் என்று கூறுவர்.
அருள் உள்ளம்
1. சேர நாட்டில் மனிதர்களே அன்றி விலங்குகள் கூட எவ்வித துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததை சிறுபாணாற்றுப்படை 41-48 அடிகள் சுட்டுகின்றன.
2. அன்று முதல் இன்று வரை மக்கள் தங்ளுக்கு விருப்பமான விலங்குகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். இதனை வீட்டு விலங்குகள் அல்லது வளர்ப்பு விலங்குகள் (Pet animals) எனலாம். இவற்றைத் தங்கள் பிள்ளைகளைப் போல மக்கள் பாசத்துடன் வளர்ப்பர். இது பற்றிய ஒரு செய்தியும் சிறுபாணாற்றுப்படையில் காணப்படுகிறது.
கொற்கை மாநகர உப்பு வணிகர் உமணர். இவர்கள் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர்கள் தோறும் சென்று விற்பர். அப்பொழுது தம் மனைவி மக்களையும் அழைத்துச் செல்வர். அது மட்டுமன்றித் தம் குழந்தைகளைப் போல வளர்த்த மந்தியையும் உடன் அழைத்துச் செல்வர். அம்மந்தியை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துத் தம்முடன் அழைத்துச் செல்வர்.
அம்மந்திகள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் முத்துக்கள் பெய்த கிளிஞ்சல் சிப்பிகளைக் கொண்டு கிளுகிளுப்பை ஆட்டி மகிழும். இவற்றின் மூலம் சேர, பாண்டிய நாடுகளின் அரசர்களின் அருள் உள்ளம் வெளிப்படுகிறது.
இதனைப் போலவே நல்லியக்கோடனும் தன் குடி மக்களிடம் மட்டுமல்லாது தன்னை அடி பணிந்து தன் கீழ் அடங்கி ஆட்சி செய்யும் பகைவரிடத்தும் கோபம் கொள்ளாது இரக்கம் காட்டும் அருள் உள்ளம் உடையவன் என்பதை, அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும் (210) என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
கொடைத்தன்மை
தன்னிடம் வருகின்ற இரவலர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்குகின்ற வள்ளல் குணம் நிறைந்தவன் நல்லியக்கோடன். அதாவது மழை மேகம் போன்று பலனை எதிர்பாராது வாரி வழங்குகிறவன். இதனை, "பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை" (124) என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பித்துக் கூறுகின்றது.
உடை: தன்னிடம் வருகின்ற பாணர்களின் வறிய நிலையை நல்லியக்கோடன் நன்கு விளங்கிக் கொண்டான். பாணர்கள் கிழிந்த கந்தல் ஆடையை உடுத்தி இருந்தனர். உயிரினும் மானம் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழர்கள். ஆதலால் பாணர்களின் மானம் காக்கும் வகையில் முதல் வேளையாக தன்னிடம் வந்த பாணர்களின் கந்தல் ஆடையை நீக்கி விலை உயர்ந்த மூங்கிலின் உள்பட்டையை உரித்தது போன்ற தூய்மையான, மென்மையான ஆடையைக் கொடுத்து உடுத்தச் சொல்வான்.
உணவு: மானம் காத்த நல்லியக்கோடன் அடுத்து அவர்களின் உயிர் காக்கும் பணியைச் செய்தான். வழிநடைக் களைப்பும், பசிக் களைப்பும் பாணர்களை வருத்தியதை நன்கு உணர்ந்த அரசன் அவர்களுக்கு, மயக்கமும் மகிழ்ச்சியும் தருகின்ற தெளிந்த கள்ளைக் கொடுத்துப் பருகச் செய்வான். சமையில் கலையில் வல்லவனான வீமன் எழுதிய நூலில் கூறியவாறு சுவை தரும் வகையில் சமைத்த பல்வேறு உணவு வகைகளைப் பொன் பாத்திரத்தில் இட்டு பாணர்களுக்கு உண்ண வழங்குவான். அவ்வுணவையும் அருகிலிருந்து அவனே வழங்குவான்.
பரிசுப் பொருள்கள்: தன்னிடம் வறுமையுடன் வந்த பாணர்களுக்கு மீண்டும் வறுமை என்பது எட்டிக்கூட பார்க்கக் கூடாது என்றும் அவர்கள் மீண்டும் யாரிடமும் சென்று இரத்தல் கூடாது என்றும் கருதி பொன்னும் பொருளும் அளித்தான். சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த தேர், குதிரைகள், யானைகள், அணிகலன்கள் முதலான அளவிறந்த பொருள்களைப் பா¢சாக வழங்கினான்.
இங்ஙனம் பாணர்களின் மானமும் உயிரும் காக்கும் வகையில் மனம் நெகிழ்ந்து நல்லியக்கோடன் செயல்படுவது அவனிடம் மானிட மாண்பு மிக்கிருப்பதையே காட்டுகிறது.
கடையெழு வள்ளல்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்:
கடையெழு வள்ளல்களின் வள்ளல் தன்மை அவர்களின் இரக்க உணர்வுக்கும் வள்ளல் தன்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பேகன்: காட்டில் மயில் அகவியதைக் கேட்ட இவன் குளிரால்தான் இது அகவியது என்று நினைத்து அதன் மீது இரக்கம் கொண்டு தனது விலை உயர்ந்த கலிங்கப் பட்டாடையை அதற்குப் போர்த்தினான்.
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
........ . ..... ........
பெருங்கடல் நாடன் பேகன் (85-87)
பாரி: முல்லைக் கொடி தான் பற்றிப் படர்வதற்கு ஏற்ற கொழு கொம்பின்றி தவித்தது. இதனைக் கண்ணுற்ற பாரி தான் ஏறிச் சென்ற தேரை அவ்விடத்தில் நிறுத்தி அlதில் முல்லைக் கொடியைப் படர விட்டான்.
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
....... ........ .........
பறம்பிற் கோமான் பாரி (89-91)
காரி: உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்.
ஈர நன்மொழி இரவலர்க்கீந்த
.......... ......... .........
கழல்தொடித் தடக்கைக்காரி (93-95)
ஆய்: இனிய மொழிகளைப் பிறா¢டத்துப் பேசி மகிழ்பவன். பெறற்கா¢ய மணிகளையும் டைகளையும் பெற்றிருந்தான். சிவன் மீது கொண்ட பற்றினால் அவற்றை இவன் சிவபெருமானுக்கு வழங்கினான். இதனை,
........ ........... நிழல் திகழ்
நீலம் நாகம் நல்கிய கலிங்கம்
ல் அமர்செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாகிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ ன்மொழி ஆயும் (95-99)
என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.
அதிகன்: தனக்குக் கிடைத்த அ¡¢ய வகை நெல்லிக்னியைத் தான் உண்ணாது அதனை வைக்குக் கொடுத்து அழியாப் புகழ் பெற்றவன்.
அமிழ்துவிளை தீங்கனி வைக்கு ஈந்த
......... . ....... ........
அரவக் கடல்தானை அதிகனும் (101-103)
நள்ளி: உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதலும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் பயன் தராது என்ற கொள்கை உடைய வள்ளல். தன்னிடம் வந்தவர்கள் வறுமையில் வாடாதவாறும், வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்புடையவன். இதனால் இவன்,
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
. ....... ........... . .......
நளிமலை நாடன் நள்ளி (105-107)
என்று பாராட்டப் பெற்றான்.
ஓரி: புன்னை மரங்களையும், குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்கு வாரி வழங்கியவன்.
நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
.. ..... ......... ..........
ஓரிக் குதிரை ஓரி (107-111)
இங்ஙனம் கடையெழு வள்ளல்களின் கொடையின் மூலம் அவர்களது சிறந்த மாண்புகள் வெளிப்படுகிறது.
பொதுமக்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
பாணர்கள் நல்லியக்கோடனை நாடிச் செல்லும் வழிநெடுக உள்ள ஊர் மக்கள் அவர்களுக்கு வழங்கிய விருந்து மானிட மாண்புகள் சங்க காலத்தில் மிக்கிருந்ததை வெளிப்படுத்துகிறது.
முதற்கண் அவர்கள் எயிற்பட்டினம் என்ற கடற்கரைப் பட்டினம் வழியாகச் செல்கின்றனர். அங்குள்ள பரதவர்கள் இவர்களுக்கு வடிகட்டிய கள்ளையும், குழல் மீன் சூட்டையும் (ஒரு வகை சுட்ட மீன்) விருந்தாகப் படைப்பர்.
இரண்டாவதாக அவர்கள் வேலூர் வழியாகச் செல்கின்றனர். அவ்வூர் இடையர்கள் வாழும் பகுதி. அவர்கள் இப்பாணர்களுக்கு மான் இறைச்சியுடன் கலந்த புளியஞ்சோற்றை விருந்தாகப் படைப்பர்.
அடுத்து பாணர்கள், மருத நிலமாகிய மூர் வழியாகச் செல்வர். அங்குள்ள உழவர் பெருமக்கள் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின் கறியுடன் சேர்த்துப் படைப்பர். இங்ஙனம் நல்லியக்கோடனின் நாட்டு மக்களும் கூட முன் பின் தெரியாத இந்த பாணர்களுக்குச் சிறந்த உணவாகிய விருந்தைப் படைத்துள்ளனர்.
இவ்வாறாக சிறுபாணாற்றுப்படையை நுணுகி நோக்கும் பொழுது,
1. வறுமையுற்ற நிலையிலும் பாணர்கள் மானிட மாண்புகள் மிக்கிருந்தனர்.
2. நல்லியக்கோடன் மனித மாண்புகளின் கொள்கலனாக விளங்கினான்.
3. கடையெழு வள்ளல்கள் வள்ளன்மையில் மிக்கிருந்தனர்.
4. தமிழர்களின் சிறந்த மாண்புகளுள் ஒன்றான விருந்தோம்பும் தன்மையில் பொதுமக்களும் மிக்கிருந்தனர் முதலானவைத் தெரிய வருகிறது. இம்மாண்புளை எல்லாம் இக்கால மக்களும் பெற்று மனித சமுதாயம் தழைத்தோங்க வழி வகுக்க வேண்டும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.