ஆற்றுப்படைகளில் மட்பாண்டப் பொருட்கள்
முனைவர் ம. தனலெட்சுமி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02.
நுழைவாயில்
மனிதன் நிலைத்த வாழ்வை எய்துவதற்குச் சமூக வளர்ச்சியில், நாகரீக வளர்ச்சியில் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளான். உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை மனிதனின் அடிப்படைத் தேவை. அவற்றைப் பெற்று வாழ்வில் சிறக்கப் பண்பாட்டிலும் பல வளர்ச்சிகளைப் பெற்று வந்துள்ளான். சமூக, வளர்ச்சியில் குடும்பம் ஓர் அடிப்படை நிறுவனமாகும். குடும்ப வளர்ச்சியே விரிந்து சமூகமயமாதலுக்கு வழிவகுக்கிறது. குடும்ப உருவாக்கம் அறியப்பெறும் நிலையில் ‘இல்லம்’ என்பதே அதன் தோற்றுவாயாக இருந்தது. இல்லத்தில் வாழும் மனிதன் அவன் வாழும் சூழலுக்கேற்றவாறு புழங்குப்பொருட்களைப் பயன்படுத்துகிறான். அந்த அடிப்படையில் ஆற்றுப்படை இலக்கியங்களில் வரும் மட்பாண்டப் பொருட்கள் பற்றி இக்கட்டுரைச் சுட்டுகிறது.
இல்லம் - சொற்பொருள் விளக்கம்
இல்லம் என்பதற்கு, “இடம், வீடு, இல்லறம், மனைவி, மருதமுல்லை நிலங்களில் தலைவியர் குடி, இராசி, தேற்றாங்கொட்டை”(ப.337) போன்ற பல பொருட்களைத் தமிழ்ப் பேரகராதி குறிக்கின்றது. தற்காலத் தமிழ்ப்பெயர் அகராதி, “இல்லம், வீடு என்று குறித்து மாணவர், அலுவலக ஊழியர், முதியோர் போன்றோர் உணவு உண்டு தங்கியிருக்கும் கட்டடம்” என்றுரைக்கின்றது. ஆகவே, இல்லம் என்பதற்கு ‘வீடு’ என்ற பொருளைக் கருத்தில் கொள்ளலாம்.
குடும்பத்தை மையமிட்டு இல்லத்தில் (வீடு) இடம் பெறும் பயன்பாட்டுப் பொருள்கள் பல இருந்தன. சமைத்தல், பரிமாறுதல், சேமித்தல், எறியுட்டுதல் என்பன போன்ற செயல்களுக்குப் பலவிதமான இல்லக் கருவிகளைப் பண்டையத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். அத்தகு பயன்பாட்டுக் கருவிகளில் மண்ணால் ஆன பாண்டங்களை உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.
மட்பாண்டப் பொருட்கள்
பொதுவாக, மட்பாண்டங்கள் தண்ணீர் உணவுப்பொருட்கள் முதலியவற்றைச் சேமித்து வைக்கவும், உணவு சமைக்கவும், சாப்பிடவும் உதவும் வகையில் அக்காலத்தில் சுடப்படாத மட்பாண்டங்களைக் காட்டிலும் சுட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர். ஏனெனில், சுட்ட மட்பாண்டங்கள் நீடித்திருக்கும் என்ற கருத்து வழக்கில் இருந்தது.
“… … … … … … பசுமண்
கலத்துணீர் பெய்திரிஇ யற்று” (குறள்.666)
என்ற குறள் கூறும் கருத்து இங்கு எண்ணத்தக்கது. பசுமண்ணால் குடம் செய்து நீர் நிறையப் பெய்து வைத்தால் அது ஊறிக் குடத்தையுடைத்து ஓடும் என்பதால் மட்பாண்டங்களைச் சுட்டுப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை உடையவர்களாகப் பண்டைத் தமிழர் விளங்கியமை உணரமுடிகிறது.
மண்ணால் செய்த பொருட்களைப் பெரும்பாலும் நீர், கள் சேகரித்து வைப்பதற்கும், சமைப்பதற்கும் சமைத்ததை வைத்துச் சாப்பிடுவதற்கும் பயன்படுத்தினர். அவற்றைக் குழிசி, மிடா, தசும்பு, குடம், சாடி, அகல், வள்ளம், பிழா, நெற்கூடு என்று ஆற்றுப்படை இலக்கியங்கள் சுட்டுகின்றன.
குழிசி
‘குழிசி’ என்பதற்குப் பானை என்று பொருள். தடாவும் குழிசியும் மிடாவும் பானை என்று சேந்தன் திவாகரம் குறிப்பிடுகின்றது. ‘குழிசி’ என்னும் பெயர் பத்துப்பாட்டினுள் பெரும்பாணாற்றுப்படையில் மூன்று இடங்களில் பயின்று வந்துள்ளன. ‘குழி’ என்றால் பள்ளம் என்று பொருள். எனவே, குழிவான அமைப்புக் கொண்ட பானை குழிசி என்று பெயர் பெற்றுள்ளது. இதனை, உணவு சமைப்பதற்கு மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், விளிம்பு உடைந்து போன வாயினையுடைய குழிசியில் கிணற்று நீரை முகந்து உலையாக அடுப்பில் ஏற்றியுள்ளனர். இதனை,
“… … … … … … நெடுங்கிணற்று
வல்லூற்றுஉவரி தோண்டி தொல்லை
முரவுவாய் குழிசி முரியடுப் பேற்றி” (பா.வரி.97-100)
என்னும் பெரும்பாணாற்றுப்படை அடிகள் சுட்டுகின்றன. உழவர் மகளிர் புதியோருடைய மிக்கபசி தீரும்படி சோற்றையாக்கும் குழிசி அசையும்படி அடுப்பேற்றியதை,
“சோறடு குழிசி இளக... ... ...” (பா.வரி.367)
என்ற அடிகள் உணர்த்தும்.
”... ... ... ... ... ... நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி புஞ்சுமட்டு இரீஇ” (பா.வரி.158-159)
”ஆறு செல் வம்பலர் காய்ப்பசித் தீர
சோறடு குழிசி இளக, விழூஉம்” (பா.வரி.365-366)
காடி
காடி என்பது பானையின் பெயர்களுள் ஒன்றாகும். இக்காடி குறித்த செய்தி, பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.
“நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்இயம் கடுப்பக் கயிறுபிணித்துக்
காடி வைத்த கலனுடைய மூக்கின்”(பா.வரி.55-57)
என்னும் அடிகளுக்கு விளக்கம் கூறுமிடத்து, ‘காடி வைக்கப்பட்ட மிடாவினையுடைய மூக்கின் மீது’ என்று நாடக மகளிரின் முழவுக்கும் காடி உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, மேற்பக்கம், கழுத்துப் போன்று நீண்டும் அடிப்புறம் முழவு போன்ற அமைப்பும் கொண்ட வடிவினது ‘காடி’ எனக் கொள்ளலாம். இக்காடியில் ஊறுகாய் வைத்திருந்தமையை,
“நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த
தகைமான் காடியின் வகைபடப் பெறுகுவீர்” (பா.வரி.309-310)
என்னும் பாடலடிகள் சுட்டும். எனவே, புளிப்புத் தன்மையுடைய காடியைக் ‘காடி வைத்த கலன்’ என்று அழைத்தமை விளங்கும்.
தசும்பு
தசும்பு என்பதற்குக் குடம் என்று பொருளுரைக்கின்றது தமிழ்ப்பேரகராதி
“இடங்கள் தசும்பு கடம் கும்பம் குடம்
கன்னல் என்று கருதுவர்புலவர்”
எனக் குடத்தின் பெயர்களில் ஒன்றாகத் தசும்பைச் சுட்டுகின்றது திவாகரம். தசும்பு குறித்த செய்தி பத்துப்பாட்டில் மலைபடுகடாத்தில் இடம் பெற்றுள்ளது. உணவு சமைக்கவும் தேறல் பெய்து வைக்கவும் தசும்பு பயன்பட்டுள்ளது என்பதை,
“வளஞ்செய் வினைஞர் வல்சி நல்கத்
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல்
இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் தொறும் பெருகுவீர்” (பா.வரி.461-463)
என்னும் வரிகள் உணர்த்தும். இவ்வகையில் தசும்பு உணவு சமைக்கவும், பால், தயிர், கள் ஆகியவற்றை நிறைத்து வைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப் பெற்றுள்ளது.
குடம்
குட என்பது ‘வளைந்த’ குடக்கம் என்னும் பொருளினைத் தருவது. நீலநிறம் அமைந்த பையாகிய குடம் போன்றிருந்த முகம் என்பதை,
“நீலப்பைங்குடம் தொலைச்சி நாளும்” (பா.வரி.374)
என்னும் பாடலடி விளங்குகின்றது.
சாடி
பண்டைக்கால மக்கள் கள்ளை நிரப்பி வைத்துக் கொள்ளப் பயன்படும் பண்டமாகச் சாடியைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சாடி குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. இதனை,
“வல்வாய்ச் சாடியின் வழைச்சற விளைந்த” (பா. வரி.)
என்னும் பாடலடி உணர்த்தும். மீன்பிடிப்போராகிய வலைஞர்கள் மதுவினை அருந்தினர். அத்தகைய மதுவினை உறுதியான வாயையுடைய பெரிய சாடியில் பாதுகாத்தனர் என்பது இதன்வழி அறியப் பெறுகின்றது.
அகல்
தமிழ் லெக்சிகன் ‘அகல்’ என்பதற்குச் ‘ சட்டி’ என்று விளக்கம் தருகின்றது. இவ்வகல் என்னும் சொல் விசாலித்தல் (அ) விருத்தியடைதல் என்னும் பொருளினைத் தருகின்றது. அகல் என்றால் ‘விரிவு’ என்று பொருள். எனவே, அகன்ற வாயினையும், கீழ்ப்பகுதி தரையில் வைக்கும்படியான அமைப்பினையும் கொண்ட கலன் ‘அகல்’ எனப் பெயர் பெற்றுள்ளது.
இவ்வகல் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது. அப்பம் விற்கும் வணிகர் கரிய அகலில் பாகொடு கூட்டிச் செய்து நூல் போல் கிடக்கும் இடியாப்பத்தைப் பாலிட்டு வைப்பர். இதனை,
“காரகற் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல்“ (பா.வரி.377-378)
என்னும் அடிகள் விளக்குகின்றன. இதிலிருந்து அகல் உணவு சமைப்பதற்கும், சமைத்ததை வைத்து உண்ணுவதற்கும் கலமாக அகல் என்னும் கலத்தைப் பயன்படுத்தியமை விளங்கும்.
வள்ளம்
‘வள்ளம்’ என்பது உண்கலமாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. இவ்வள்ளம் குறித்த செய்திகள் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளன. மகளிர் கள்ளைச் சமைப்பர். கள்குடித்த பின்பு கழுவிய பாத்திரங்களிலிருந்து வடித்த நீர் சேறாக ஓர் இடத்தில் தேங்கி நிற்கும். இதனை,
“கள்அடு மகளிர் வள்ளம் நுடக்கிய’ (பா.வரி.339)
என்னும் பாடலடி விளக்கி நிற்கின்றது.
பிழா
குற்றாத கொழியல் அரிசியை அழகினையுடைய களியாகத் துழாவிட்ட கூழை, அகன்ற வாயையுடைய தட்டிலிட்டு உண்ணும் பிழாவை உண்கலமாகப் பயன்படுத்தியமை விளங்கும். இதனை,
“அசையா வரிசி யங்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி” (பா.302)
என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் சுட்டும்.
நெற்கூடு
நெல்லைச் சேமித்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பெற்ற கருவி. ‘நெற்கூடு’ என்பதாகும். இதன் பெயர் நெடுங்கூடு. தொடுகூடு என்றெல்லாம் வழங்கப் பெற்றுள்ளது. இக்கூடு நெல், வரகு முதலிய தானிய வகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்பட்டுள்ளது. இக்கூடு ஏணிக்கும் எட்டாத அளவு மிக நெடிய வடிவுடனும் மேல்பகுதி திறந்து நெல்லைக் கொட்டுவதற்கு ஏற்றாற்போல் இருந்திருக்க வேண்டும். ஏணிக்கும் எட்டாத மிகவும் நீண்ட உயரமான நெற்கூடு இருந்ததை,
“ஏணியெய்தா நீணெடு மார்பின்
முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவிற்
குமரிமூத்த கூடோங்கு நல்லில்” (பா.307-309)
என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடும். மேலும்,
“பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற்” (பா311.)
என்றும் சுட்டும். இதற்கு விளக்கம் கூறுமிடத்து பெண்யானைத்திரள் முன்றிலில் நிற்கும். வரகு நிறைந்த குதிர்க்கட்டு உவமை என்பதால் குதிர்களில் வரகை நிறைத்து வைத்துக் கொண்டமை விளங்கும். இந்நெற்கூட்டை இன்னும் கிராமப்புறத்து வீடுகளில் நெல்லைப் பாதுகாப்புடன் வைத்தெடுக்கப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நெற்கூடு என்ற பெயர் வழக்கிழந்து குதிர்களுக்கை என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.
முடிவாக
மக்கள் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும், உணவு சமைக்கவும் நீர், கள் ஆகியவற்றைச் சேகரித்து வைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மட்பாண்டங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. தமிழ்ப் பேரகராதி, 1982, சென்ளைப் பல்கலைக்கழகம்.
2. திருக்குறள், 2002, சாரதா பதிப்பகம், சென்னை.
3. சேந்தன் திவாகரம், கழகவெளியீடு, திருநெல்வேலி.
4. ச. வே. சுப்பிரமணியன், 2010, சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும், (பத்துப்பாட்டு) மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை.
5. வி. சி. சசிவல்லி, 1989, பண்டைத் தமிழர் தொழில்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 13.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.