இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கியங்களில் காடுகள் - ஆக்கமும் அழிவும்

முனைவர் இரா. சுதமதி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி


முன்னுரை

சங்க இலக்கியங்களில் எங்கு நோக்கினும் காணக் கிடைப்பது காடுகள், காட்டுயிரிகள். பல்லுயிரிய வளமைக்குச் சாட்சியாக, காட்சியாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. இவ்விலக்கியங்கள் கூறும் காடுகள் வெறும் வருணனை மட்டுமல்ல, அவை பழந்தமிழகத்தின் வாழ்வியல் என்பதே உண்மை. காடுறை உலகம் முல்லைத் திணையின் முதற்பொருள் என்பதோடு பல்லுயிரியச் சூழலியலின் இன்றியமையாத அடையாளமும் ஆகும். இக்காடுகள் சங்கப் புலவர்களால் உற்று நோக்கப்பட்டுத் திணைப் பாடல்களின் வருணனைக்கும் கருத்து வளத்துக்கும் இடமளித்தன. அவற்றை விடுத்துக் காடுகள் பற்றிய புலவர்களின் பதிவுகளை ஆழ நோக்கினால் அவை பழந்தமிழகத்தில் பெற்ற ஆக்கமும் அழிவும் அப்பதிவுகளில் வெளிப்படுவதைக் காண முடியும்.

பெரும் சூழல் அழிவைக் காடுகளும் நிலப்பரப்பும் சந்தித்து வரும் இன்றையச் சூழலில் பழந்தமிழகத்தின் வனங்கள் குறித்த அறிவையும் அறிவியலையும் அறிந்து கொள்வது அவசியமாகும். இக்கட்டுரை சங்க இலக்கியங்களில் காடுகள் குறித்த கருத்து வளத்தை முன்னிறுத்தி, அவற்றின் ஆக்கத்தையும் அழிவையும் பற்றி ஆராய முற்படுகிறது.

காடு

மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு எனப்படுகிறது. காடுகளின் வகைகளைச் சங்கப் பாடல்கள் அழகிய பெயர்களால் சுட்டுகின்றன. மரங்கள் அடர்ந்த மலைக்காடுகள் கானகம் என்றும், முல்லை நிலக் காடுகள் புறவு என்றும், அரசனது காவலில் உள்ள காடு மிளை, அரண் என்றும், சிறு மரங்கள் நிறைந்த காடு இறும்பு என்றும், மரங்கள் கரிந்து போன காடு சுரம், பாலை என்றும், வெயிலால் வாடிய காடு முளி என்றும், காவலையுடைய இளமரச் சோலை கடிகா என்றும், பாழிடமாகிய புறங்காடு பறந்தலை என்றும், முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த காடு வன்புலம், புன்புலம் என்றும், உயர்ந்தோங்கிய மரங்கள் செறிந்த காடு கடறு என்றும், நீர் ஏறாத மேட்டு நிலமாகிய புன்செய் காடு விளை என்றும் அழைக்கப்பட்டன. இவை தவிர கா, கான், அடவி, வனம், அரணம், முதை, பொதி, அரில் போன்றன காடுகளைக் குறிக்கும் பல்வேறு சொற்களாகும். காடு பல்வேறு உயிரினங்களின் புகலிடம்; வாழ்விடம். காடுகளை மரங்களின் வகைமைகளைக் கொண்டே வகைப்படுத்தினும், காட்டுச் சூழல் மண்டிலம் என்பது விலங்குகள், பறவைகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். பல்லுயிரின வளர்ச்சிக்கு அடித்தளமாக இக்காடுகள் விளங்குகின்றன.

"முல்லை வைந்நுனை தோன்ற, இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக் கொடுப்ப
கருவி வானம் கதழ் உறை சிதறி
கார் செய்தன்றே கவின் பெறு கானம் " (அகம். 4:1-7)

எனப் பல்லுயிரியச் சூழலமைந்த காடும், மழை வளத்தால் அக்காடு பெற்ற கவினுறு காட்சியும் அழகுற கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.


"கார் எதிர் கானம்" (புறம்.144:3)

"இலை புதை பெருங் காட்டு" (புறம். 259:2)

"முள் உடுத்து எழு காடு" (பெரும்.184)

"வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்" (பெரும். 374)

"மலையும் சோலையும் மாபுகல் கானமும்" (மலை. 69)

எனக் காடுகள் சங்கப் புலவர்களின் உள்ளத்து உணர்வாக வலம் வருகின்றன. ஐந்திணைகளின் மீது தம் கவனத்தைப் பதிய வைத்திருந்த சங்கப் புலவர்களின் பாடல்களில் ஆங்காங்கே காடுகளின் உருவாக்கம் குறித்தும் அழிவு குறித்தும் செய்திகள் பதிவாகியுள்ளதைக் காணமுடிகிறது.

காடுகள் உருவாக்கம்

"காடுகள் இயற்கைப் பாரம்பரியத்தின் இனிமையான எச்சங்கள்; ஒரு பக்தனுக்குப் புனிதமான கோயில் வளாகம்; அலுப்பூட்டும் நகர்ப்புறச் சூழலிலிருந்து விடுபட இளைப்பாற்றும் இயற்கைத் தலம்; ஓங்கி வளர்ந்த திட மரங்களின் காட்சிச் சாலைகள்; அழிந்து வரும் தாவர, விலங்கினங்களுக்குக் காப்பகங்கள்; வாழிடம் பிறழ்ந்தவற்றிற்குப் புகலிடங்கள்; நீர்வளம் பேணும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்; மதிப்பு மிக்க அரிய தாவர இனங்களின் மரபணு வங்கிகள்; உயிரியல் வல்லுநர்க்கும் சூழல்வாதிகளுக்கும் பரிசோதனைக் கூடங்கள் " (1) என்கிறார் சிவ. மங்கையர்க்கரசி. காடுகள் இயற்கையாக உருவாகக் கூடியவை. இயற்கையாக உருவான காடுகள் குறித்த வருணனைகள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தவிர, கடும் கோடை வெப்பத்தாலும் வறட்சியாலும் அழிந்து போன காடுகள் மழை காரணமாக மீண்டும் தோற்றம் பெறுவதுண்டு.

"காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே
இந்நிலை தவிர்ந்தனம் செலவே வைந்நுதிக்
களவுடன் கமழ பிடவுத் தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் மாலை
மடப் பிணைத் தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் விரி நிழல் வதியும்" (நற். 256: 3- 10)

கடும் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்து, தன் இயல்பை முற்றிலும் இழந்த, கண்ணால் காண்போருக்கும் துன்பத்தைத் தந்த பாலை நிலம், கார்கால மழையால் களா, பிடவம், வேலம் முதலிய மரம் செடி கொடிகளுடன் தளிர்த்து, தழைத்துக் காண்போரைக் கவர்வதோடு மானினங்கள் கூடி மகிழும் செழுமையான காடாக மீண்டும் நிலைபெறுவதை இப்பாடல் அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம்.


"கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைது அறத் தெறுதலின் பயம் கரந்து மாறி
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி இனவண்டு ஆர்ப்ப, பலவுடன்
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீகமழ் கானம்" (அகம்.164:1-7)

என்னும் இப்பாடலடிகளும் ஞாயிற்றின் வெப்பத்தால் பசுமையிழந்து, வளங்குன்றி காய்ந்து, அழகு கெட்டு, எங்கும் வெடித்துக் கிடக்கும் நிலப்பரப்பு, மழையால் அழகினைப் பெற்று, பூக்களோடும் வண்டுகளோடும் மணம் வீசும் காடாக தோற்றம் பெறுவதை எடுத்துரைக்கின்றன.

காடுகள் உருவாக இன்றியமையாத காரணம் விதை பரவல். இன்றையச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விதை பரவல் மூலமாக காடுகளை உருவாக்க முயற்சி எடுத்து வருவது யாவரும் அறிந்ததே. விலங்குகள், பறவைகளின் எச்சம் மூலமாகவும் விதை பரவல் நிகழ்வதுண்டு.

"குமிழ் உண் வெள்ளை பகுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வண்காற் பந்தர்" (புறம்.324: 9,10)

என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகளில் குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடு தன் வாயினின்றும் துப்பிய விதைகள் எங்கும் பரவிக் காணப்பட்ட செய்தியை, காடுகள் உருவாகக் காரணமான விதை பரவலுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.

சங்கப் பாடல்களில் பல புறப்பாடல்கள், போர் வெறி காரணமாகப் பகை மன்னர்களின் ஊர்களும் விளைநிலங்களும் அழிக்கப்பட்டுக் காடாக மாற்றப்பட்ட செய்தியை வீரத்தின் இலக்கணமாக எடுத்துரைக்கின்றன.

“நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக” (மதுரை. 156-158)

எனப் பகைமையால் நல்ல நாடு பாழ்படுத்தப்பட்டதையும், அவ்வாறு பாழாக்கப்பட்டப் பகுதிகளில் காட்டு விலங்குகள் திரிய, காட்டுச் செடிகளும் மரங்களும் முளைத்து, நாடு என்னும் பெயர் மாறி, காடு என்னும் பெயருடன் நிலைபெற்றத் தன்மையையும் விரிவாகக் கூறிச் செல்கிறது மதுரைக்காஞ்சி. பழந்தமிழகத்தில் பகை நாட்டை, அந்நாடு மீண்டும் தலையெடுக்காதவாறு அழித்தலும் பாழ்படுத்தலும் போர்மரபாகக் கருதப்பட்டது. இதனை உழபுலவஞ்சி, மழபுலவஞ்சி எனப் புறத்திணைகள் பெருமிதமாகக் கூறுகின்றன. எனவே காடுகள், பகை காரணமாக அழிந்த நாடுகளிலிருந்தும் தோற்றம் பெற்றதை அறியலாம்.


பழந்தமிழகத்தில் காடுகள் மனித நடமாட்டம் இன்றி காட்டு விலங்குகளால் இயற்கையான பாதுகாப்பைப் பெற்றிருந்தன. (அகம்.362) தவிர, கானவர்களும் காடுகளைப் பாதுகாத்தனர்.

“காடு காத்து உறையும் கானவர் உளரே” (மலை.279)

அறிவியல் வளர்ச்சி, நவீனத் தொழில் நுட்பங்கள், மனித நாகரிகம், ஆக்கிரமிப்புகள் ஆகியன காடுகளை அழிக்காத காலக்கட்டத்திலேயே கானவர்களால் காடுகள் பாதுகாக்கப்பட்ட செய்தி வியப்பிற்குரியதாகும்.

காடுகள் அழிவு

“இதுவரை உலகில் நடைபெற்ற எந்த வகையான போராட்டங்களும் காடுகள், காட்டுயிரிகளின் அழிவைத் தடுக்க முடியவில்லை. அவை மெல்ல அழிந்துதான் போகின்றன. கானகத்தை அழிப்பதும் வனங்களை ஒழிப்பதும் நமக்கு நாமே நஞ்சூட்டிக் கொள்வதற்குச் சமம் என்று எவரும் உணர்ந்தாரில்லை” (2) என்கிறார் இடைக்காடன்.

சங்க இலக்கியங்களில் காடுகள் அழிந்த, அழிக்கப்பட்ட செய்திகளைக் கூறும் பாடல்கள் பரவலாகக் காணப்படுகின்றன. கடும் வெயில், காட்டுத் தீ, காட்டாற்று வெள்ளம், காட்டு விலங்குகள் இவற்றால் காடுகள் அடைந்த அழிவுகள் ஏராளம். கானவர்களின் வாழ்வியல் தேவைக்காகவும் நாடு சீரமைப்புப் பணிகளாலும் பகை காரணமாகவும் காடுகள் அழிக்கப்பட்ட செய்திகள் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

“கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்குநீர் வரைப்பின் கயம் பல உணங்க
கோடை நீடிய பைது அறு காலை” (புறம். 174: 24-26)

என நீடிய கோடையால் பசுமையிழந்து காய்ந்து போன காடு குறித்தும்,

“வேரொடு மரம் வெம்ப, விரிகதிர் தெறுதலின்
… … … … … உலறிய உயர்மர வெஞ்சுரம்” (கலி.10:4-7)

எனக் கதிரவனின் கொடிய வெப்பத்தால் வேரோடு வெம்பி அழிந்த காடு குறித்தும் சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.


காடுகளின் அழிவுக்குக் காட்டுத்தீ மிக முக்கியமான காரணமாகும். காற்றின் வேகத்தால் தீ எல்லா திசைகளிலும் பரவி, காடுகளைச் சூறையாடுவது இன்றும் உலகெங்கும் நடைபெறும் நிகழ்வாகும். மரங்கள் மட்டுமல்லாது அவற்றை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகளும் பறவைகளும் பற்றி எரியும் காட்டுத்தீயில் அழிந்து போவதுண்டு. காட்டுத்தீக்குக் கடும் வெப்பம், மரங்களின் உராய்வு, மனிதர்கள் அலட்சியமாக விட்டுச் செல்லும் நெருப்புத் துண்டுகள் ஆகியவையே மிக முக்கியமான காரணிகளாகும். கடுமையான வெப்பத்தால் காட்டுத்தீ எழுந்ததாகப் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.

“கனைகதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்புத்தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக் கொண்டென
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெஞ்சுரம்” (கலி.150:3-6)

ஞாயிறு சுடுதலால் மலை எங்கும் பரவிய காட்டுத்தீ விசும்புற ஓங்கி வெப்பத்தை வீசுவதால் விலங்குகள் அங்குமிங்குமாய் அலைந்து திரிகின்ற கொடிய சுரம் என காட்டுத்தீயின் கொடுமையைப் பறைசாற்றுகிறது கலித்தொகை.

“ஒலிகழை பிசைந்த ஞெலி சொரி ஒண்பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளி சுழன்று அறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்” (அகம். 39:6-9)

மூங்கில்கள் உராய்வதால் மூண்டெழுந்த நெருப்பைக் காற்றுச் சுழன்றடித்துப் பரவச் செய்து, காட்டைக் கடுந்தீ தன் கையகப்படுத்தியது என்கிறது அகநானூறு.

காட்டுத்தீயைப் போலவே காட்டாற்று வெள்ளமும் மரங்களின் அழிவுக்குக் காரணமாக அமைவதுண்டு.

“வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு
… … … … … … … … … … … … … … …
இழுமென இழிதரும் அருவி” (திருமுருகு.295-317)

என்னும் பாடலடிகள் மலையில் உள்ள மரங்களை வேரோடு இழுத்து வரும் அருவி வெள்ளத்தைப் பற்றிய செய்தியைக் கூறுவதைக் காணலாம்.

“ஒளி திகழ் உத்தி உருகெழு நாகம்,
அகரு, வழை, ஞெமை, ஆரம் இனைய,
தகரமும், ஞாழலும், தாரமும் தாங்கி,
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு” (பரி.12:4-8)

என பரிபாடல் காட்டில் உள்ள பலவகைப்பட்ட மரங்களை வையை வெள்ளம் இழுத்து வருவதைக் காட்சிப்படுத்துகிறது. கவிச்சுவையை மிகுதிப்படுத்த வருணனைக்காக வெள்ளக்காட்சிப் பாடப்பட்டிருப்பினும் கடுமையான காட்டு வெள்ளம் மரங்களைச் சாய்த்து இழுத்து வருவது உலகியல் உண்மை.


இயற்கைச் சீற்றங்களைத் தவிர காட்டு விலங்குகளால், குறிப்பாக யானைகளால் ஏராளமான மரங்கள் பேரழிவைச் சந்திப்பது உண்டு. மரங்களை முறிக்கின்ற, மூங்கில்களைத் தின்று மூங்கில் காட்டை அழிக்கின்ற யானைகளைப் பற்றிய பதிவுகள் குறிஞ்சி, பாலைத் திணைப் பாடல்களில் காணப்படுகின்றன.

“குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கில்” (குறுந்.179:5-7)

என்னும் வரிகளில் மூங்கில்கள் குருத்தாக இருக்கும் போதே, அவை யானைகளால் சுவைக்கப்பட்டு கூழையாக அழிவைச் சந்தித்ததை அறியலாம்.

“சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு
மையல் வேழம்… … … … … “ (குறிஞ்சி.164,165)

என மதம் கொண்ட யானை, சினத்தால் மரங்களை முறித்து அழிக்கும் செய்தியைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது. மேலும் மின்னலாலும் இடியாலும் மரங்கள் தீப்பற்றி எரிந்து அழிவதுண்டு. இதனை,

“மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு” (மதுரை.62, 63)

என மரங்களைத் தீய்த்து, மலைகளைப் பொடியாக்கும் மின்னலையும் இடியையும் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது.

கடும் வெயிலும், காட்டுத்தீயும், காட்டாற்று வெள்ளமும், காட்டு விலங்குகளும், கொடிய மின்னலும் காடுகளுக்கு அழிவை ஏற்படுத்தும் இயற்கைக் காரணிகள் எனில், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவைச் செயற்கைக் காரணிகள் எனலாம். காட்டு மரங்களை வெட்டி எரித்துச் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கும் முதல் காரணி மனிதனாவான்.

பழந்தமிழகத்தில் மலைவாழ் மக்களான கானவர்கள் மரங்களை அழித்தே தினைப்புனம் அமைத்தனர். அரிய வகை மரங்களை விறகாகப் பயன்படுத்தினர்.

பிற நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் ஒரு படையானது காவல்காடுகளை வெட்டி அழித்து அங்கே பாசறை அமைத்துத் தங்கியது. பகை நாட்டின் வளமிக்க காடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன.


ஆட்சியை மேம்படுத்த அரசன் காடுகளை அழித்து நாடாக்கினான். மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டிப் பாறைகளை உடைத்து மலைப்பாதைகள் அமைக்கப்பட்டன. சங்க இலக்கியங்கள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன.

“யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந்தாட் செந்தினை” (குறுந். 198:1, 2)

என யா மரங்களை வெட்டி எறிந்து, அம்மரங்களை எரித்து, ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் வளர்ந்த செவ்விய தினை பற்றியும்

“சுடுபுன மருங்கில் கலித்த ஏனல்” (குறுந். 291:1)

எனக் காட்டினை எரித்து அழித்த இடத்தில் தழைத்து வளர்ந்த தினை குறித்தும்

“நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை,நெடுங்கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு … … … … …” (மதுரை.286-288)

மணம் கமழும் அகில், சந்தன மரங்களை வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட தோரை, வெண்சிறு கடுகு, ஐவன நெல் ஆகியன பற்றியும் சங்கப் பாடல்கள் சான்று பகருகின்றன. இன்று மட்டுமல்ல, அன்றும் மலை வளங்கள் மனிதனால் அழிவை எதிர்கொண்டன என்பதை இதனால் அறியலாம்.

“கான யானை தந்த விறகின்” (புறம். 251:5)

“காடு கை காய்த்திய நீடுநாள் இருக்கை” (பதிற்.82:9)

என்னும் பாடலடிகள் விறகுக்காக மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றன.

“நெடுங்கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீ கமழ் நெடுஞ்சினை புலம்ப காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை” (புறம்.36:7-9)

எனக் காவல் மரங்களை அழித்த செய்தியும்

“கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டி காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇ
படுநீர்ப் புணரியின் பரந்த பாடி” (முல்லை. 24-28)

எனக் காட்டாறு சூழ்ந்த அகன்ற காட்டிடத்து, பிடவம், பசிய புதர்கள் போன்றவற்றை வெட்டியழித்துப் பாசறை அமைத்த செய்தியும் காடுகளின் அழிவுச் சூழலுக்குக் கட்டியம் கூறுகின்றன.

பகை நாட்டை மட்டுமன்றி, பகைவர் தம் காட்டையும் அழிப்பது அக்கால போர் மரபாகக் கருதப்பட்டது.

“சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்” (மதுரை.57, 58)

என்னும் பாடலடி யாரும் எளிதில் புக முடியாத பகைவரின் காடுகளைப் பல வழிகளை உடையனவாகப் பிளந்த பாண்டியனின் வீரத்தை எடுத்துரைக்கிறது. அடர்ந்த காடுகளில் மரங்களை அழித்தே பெரும் படை செல்வதற்கு வழி அமைத்திருக்க வேண்டும் என்பதை இதனால் அறியலாம்.

சங்க கால மன்னர்கள் தம் ஆட்சித் திறனை மேம்படுத்த நாடுகளைச் சீரமைத்தனர். அச்சீரமைப்பு பணிகளுள் ஒன்று காடுகளை அழித்து நாடாக்குதல் ஆகும்.

“காடே கடவுள் மேன புறவே
ஒள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத்து அன்றியும்” (பதிற்று.13:20-22)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தான் மக்களைப் புரந்த நாடுகளிலெல்லாம் பெருங்காடுகளை அழித்து நாடாக்கி வளப்படுத்தியதால் மக்கள் அங்கே வாழ்ந்து தமக்குரிய தெய்வங்களுக்குக் கோயில்களை அமைத்தனர். சிறு காடுகளெல்லாம் அவனது படைவீரர் தங்கும் இடங்களாயின. ஆறலைக் கள்வர்கள் திரியும் அடர்ந்த காடுகளும் அவ்வாறே ஆயின என்று பாடுகிறார் குமட்டூர் கண்ணனார்.

“காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி” (பட்டின.283, 284)

என்று சோழ நாட்டில் காடாக உள்ள இடங்களை அழித்துக் குடிமக்கள் தங்கும் பகுதிகளாக்கியும், குளங்கள் வெட்டி வளத்தைப் பெருக்கியும் கரிகாலன் தன் ஆட்சியைத் திறம்பட நடத்தியதாக கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடுகிறார்.

தற்காலத்தில் மலைப் பிரதேசங்களாகிய சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் செல்ல, மலைக்காடுகளை அழித்து வசதியான மலைப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே அக்காலத்திலும் மலைப்பாதைகள் பாறைகளைத் தகர்த்தும் மலைக்காடுகளை அழித்தும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக மோரியர்கள் தம் படைகளுடன் தமிழகத்தில் நுழைவதற்கு மலைப்பாதைகளை ஏற்படுத்திக் கொண்டதைச் சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன.

“விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய” (புறம்.175:6-8)

“விண் பொரு நெடுங்குடை இயல் தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர் ஆயினும்” (அகம்.69:10-12)

“மாக்கெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய் குறைத்த
இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர்” (அகம்.251:12-14)

“… … … … … … … … … … மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து
அறை இறந்து அவரோ சென்றனர்” (அகம். 281:8-12)

இப்பாடலடிகள் மலைப்பாதைகளை மோரியர் ஏற்படுத்திக் கொண்டதை உறுதி செய்கின்றன. எனவே மலைகளைத் தம் வாழ்விடமாகக் கொண்ட காடுகளும் விலங்குகளும் பறவைகளும் அழிவையும் பெரு இன்னல்களையும் சந்தித்திருக்கக் கூடும் எனக் கருத இடமுண்டு.

முடிவுகள்

காடுகளின் சூழல் அமைப்பைச் சார்ந்தே பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழிடச் சூழல் அமைகிறது. இன்று காட்டுயிரிகளின் சூழல் பாதுகாப்பு என்பது மாபெரும் தோல்வியின் விளிம்பில் இருப்பதைக் காணலாம். சங்க இலக்கியச் செய்திகளைக் கூர்ந்து நோக்குமிடத்து, மனித சமூகம் நாகரிக நிலையை நோக்கி நடை போட்ட நிலையில் காடுகளும் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்ததை அறிய முடிகிறது. இயற்கைப் பேரழிவால் காடுகள் அழிந்தாலும் மழையால் அவை மீண்டும் தம்மைத்தாமே சீரமைத்துக் கொண்டன. புதிதாகக் காடுகளை உருவாக்க மனிதன் முன்வரவில்லை. இருந்த காடுகளையும் தனது வளர்ச்சி, புகழ் காரணமாக அவன் இழக்கத் தயாராக இருந்ததையே சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன. அதே சூழல்தான் இன்றைய காடுகளின் அதிவேக அழிவுக்கும் காரணம் எனலாம்.

ஆயினும் பழந்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். இயற்கை மீதான ஒரு புரிதலுணர்வுடன் அதனை உற்று நோக்கி அதன் போக்குடன் வாழத் தலைப்பட்டனர். இன்றைய மனிதன் இயற்கையிடமிருந்து தன்னை விலக்கி வாழ்வதாலேயே பெரும் சூழல் அழிவைச் சந்தித்து வருகிறான். தன் வாழ்வைக் கட்டமைக்க இயற்கையின் கட்டமைப்பை அவன் உடைக்க முற்படுவதுதான் இன்று நாம் எதிர் கொண்டு வரும் சூழல் சீர்கேட்டிற்குக் காரணம் எனில் மிகையில்லை.

அடிக்குறிப்புகள்

1. சிவ. மங்கையர்க்கரசி, சூழலியல் தமிழ், ப.46

2. இடைக்காடன், காட்டுயிர்-ஒன்றரை ஆண்டு சிறப்பிதழ், டிசம்பர் 2014, ப.86

துணை நின்ற நூல்கள்

1. யாழ். சு. சந்திரா, இலக்கியமும் சூழலியலும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, முதற்பதிப்பு, ஏப்ரல் 2015.

2. சிவ. மங்கையர்க்கரசி, சூழலியல் தமிழ், உமா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு, ஆகஸ்ட் 2004.

3. தனிநாயக அடிகள், நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தமிழில்: பேரா. க. பூரணச் சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, முதல் பதிப்பு, செப்டம்பர் 2014.

4. காடு, சூழலியல் சிற்றிதழ், தடாகம் வெளியீடு, சென்னை, ஜூலை - ஆகஸ்ட் 2015.

5. உயிர், சூழலியல் சிற்றிதழ், உயிர் பதிப்பகம், சென்னை, ஜனவரி - பிப்ரவரி 2018.

6. காட்டுயிர் - ஒன்றரை ஆண்டு சிறப்பிதழ், Natural History Trust, பொள்ளாச்சி, டிசம்பர் 2014.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p188.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License