Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்ககாலக் குறுந்தொழில்கள்

முனைவர் க. லெனின்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635 130.


முன்னுரை

இவ்வுலகம் பல்லுயிரினங்களால் சூழ்ந்தது. ஒவ்வொரு உயிர்களும் இப்புவியில் வாழ பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிர்களில் ஆறறிவுள்ளவனாக மனிதர்கள் சுட்டப்படுகிறார்கள். நாடோடியாக வாழ்நத மனிதர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து வாழத் தொடங்கினர். குடும்பமாய் வாழ்ந்த மனிதர்களில் அறிவு மிக்கவனும், சோம்பலை போக்கியவனும், உழைப்பை மேன்மையாகக் கொண்டவனே நல்ஆடவர் என அழைக்கப்பட்டான். 'வினையே ஆடவர்க்கு உயிரே' என்ற குறுந்தொகை வரிகளுக்கு ஏற்ப ஆண்மகன் என்பவன் உழைப்புக்கு முன்னுரிமை வழங்கினான்.

தொழிலும் தொழிற் பிரிவுகளும்

மலைகளை உடைத்துக் காடுகளாக்கியும், வயல்களாக்கியும் பெரும் நிலப்பகுதியை உருவாக்கினான். அப்பகுதிக்கு அவனே தலைவனாகவும் பின்னாளில் அரசனாகவும் முடிசூட்டப்பட்டான். மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள் எனத் தனக்கு வேண்டியதைத் தானே செய்து பழக்கப்படுத்திக் கொண்டான். அவ்வாறு செய்த வேலைகளில் உழவுத்தொழிலை முன்னிறுத்தியே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டான். 'சுழன்று ஏற்பின்னது உலகம்' என்பார் வள்ளுவர். மனிதர்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் ஏர்த்தொழிலின் பின்னால்தான் இவ்வுலகம் சென்று கொண்டிருக்கிறது. அன்றையச் சூழலில் அரசரின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அனைவரும் தனித்தனியே வேலை செய்வதற்கென ஒதுக்கப்பட்டனர். அரசர் கட்டளையிட்ட வேலைகளைத் தலைமேல் சுமந்து செய்யலாயினர். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பெருமையாக எண்ணினார்கள். தன்னுடைய வேலையைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கும் பொழுது உரிமைக்காகப் போராடி சண்டையிடவும் செய்தனர். பண்டையக் காலத்தில் அரசரால் வகுக்கப்பட்ட வேலைகள் பின்னாளில் அவர்களுடைய மரபுரிமையினர்களுக்குத் தொழில்களாக மாறிப்போயின.

“தொழிலில் திறமை பெற தந்தை தொழிலை மகன் ஏற்றதால் பரம்பரைத் தொழில்முறை உருவாகியது” (1) என்கிறார் பா.இறையரசன்.

நிலம் அதிகம் உள்ளவன் உழவுத்தொழில் செய்தான். அத்தொழிலுக்கு தகுந்தவாறு மக்களைப் பயன்படுத்திக் கொண்டான். பொருள் உள்ளவன் உள்நாட்டு வாணிபம் அயல்நாட்டு வாணிபம் செய்து, அதன் மூலம் நிறைய பொருட்களைச் சேர்த்தான். இன்னும் உள்ள சில மக்கள் அரண்மனைகளில் வேலை செய்து வந்தனர். படை வீரர்கள், காவல் காப்பவர்கள், ஊர்மன்றத் தலைவர்கள், ஒற்றர்கள் என அரசாங்கத் தொடர்புடைய வேலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர மக்கள் வாழ்கின்ற பகுதியில் அன்றாடம் நடைபெறக்கூடிய தொழில்களும் இருந்து வந்தன.

உழவு, வாணிபம், படைவீரர்கள் தவிர, சங்ககால மக்களிடையே இருந்து வந்த குறுந்தொழில்களை முன்னிறுத்தியே இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது. நிலவாரியாக தொழில்கள் நடந்து வந்திருப்பினும் மற்றத் தொழில்களுக்கான மக்கள் இருந்து கொண்டு, அவற்றைச் செய்தும் வந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்திலே கூறப்பட்டுள்ள தொழில்களை இங்கு காணலாம்.


தச்சுத்தொழில்

மரத்தை அறுத்து அதன் மூலம் பொருள்களைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். குறுந்தொகையில்,

'தச்சன் செய்த சிறுமா வையம்' (குறும்.61:1)

தச்சனால் செய்யப்பட்ட சிறிய தேரினைக் குதிரைகள் பூட்டியபடி இழுத்துச் செல்லும். குதிரைக் கட்டாத நேரங்களில் சிறுவர்கள் அத்தேரினை இழுத்து விளையாடுவார்கள்.

“தச்சர்கள் வீடுகட்டுதல், கப்பல், கட்டுமரம், படகு முதலியன கட்டுதல், தேர்களைச் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்” (2) என்கிறார் டாக்டர் ந. சுப்ரமண்யன்.

இதேச் செய்தியைப் புறநானூற்று ஆசிரியர் கூறுகையில்,

'எண்தேர் செய்யும் தச்சன்' (புறம்.87:3)

ஒரே நாளில் எட்டு தேர்களைச் செய்து முடிக்கக்கூடிய தச்சன் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது அதியமானுடைய வீரத்தைக் குறிப்பதாக இருந்தாலும் தச்சனுடைய உழைப்பை நமக்குக் காட்டுவதாக அமைகின்றது. மேலும், தச்சர்களின் பிள்ளைகள் சிறுதேர்களை உருட்டி விளையாடுதலைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படையிலும் (248), யானையின் தந்தத்தைச் சிறு உளி கொண்டு கட்டிலும், இலை வடிவத்தினாலான கால்களும் செய்கின்ற தச்சன் என நெடுநல்வாடையிலும் (118-119), காட்டிற்குச் செல்லும் தச்சன், தனக்கு வேண்டிய பொருளைச் செய்து மகிழ்வர் என புறநானூற்றிலும் (206:1), கண் இமைக்காமல் தச்சனால் செய்யப்பட்ட ஆரக்கால் (புறம்:290:4), கைத்தொழிலில் கைதேர்ந்த தச்சன் மரங்களை அடுக்கி வைத்து வாயில் கதவைச் செய்தான் (நெடுநல்:83-84) எனச் சங்கப்பாடல்கள் தச்சர் தொழிலைப் பற்றிக் கூறுகின்றன.

“குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நானிலத்தும் முறையே குறவர், ஆயர், உழவர், மீனவர் என நான்கு பிரிவினராய் அமைத்தனர். துணைத்தொழில் புரிந்தோர் தச்சர், குயவர், கம்மியர், கொல்லர், வண்ணார் எனப்பட்டனர்” (3) என்று பா. இறையரசன் குறுந்தொழில்களின் பிரிவுகளைக் குறிப்பிடுகிறார்.


கொல்லுத் தொழில்

கொல்லர்களில் இரும்புக் கொல்லர், பொற்கொல்லர் எனத் தனித்தனியாகத் தொழில் பாகுபடுத்தப்படுகிறது. ஒன்றை அழித்துச் செய்வதனால் கொல்லுதல் என வந்திருந்து, பிறகு கொல்லன், கொல்லர் என வந்திருக்கலாம். இரும்பு வேலைச் செய்யும் கொல்லர்களைப் (நற்:133) பற்றிக் கூறுகின்றது. அகநானூற்றில்,

'நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன்
குருகு ஊது மதிஉலைப் பிதிர்வின் பொங்கி' (அகம்.202:5-6)

கொல்லன் துருத்தியை மிதித்து ஊதுகின்றான். அப்போது உலைக்களத்திலே தீப்பொறிகள் எங்கும் எழுந்தது என்கிறார்.

இதேச் செய்தி, இரும்பைப் பயன்படுத்தும் உலைக்களத்திலே இருக்கும் கொல்லன் (புறம்:170:5), வலிய கையையுடைய கொல்லன் இலையுடைய நெடிய வேலை வடித்தான் (புறம்:180:3), கொல்லனுடைய வேலை வேல் முதலிய படைக்கருவிகளைச் செய்து தருதலே ஆகும் (புறம்:312:3).

“போர்ப்படைக்கலங்களை ஆக்கவும் திருத்தவும் கொல்லர் பட்டறைகள் இருந்தன. இப்பட்டறைத் தீயில் இரும்புச் சக்கரங்கள், வீட்டுச் சாமான்கள் முதலியன ஆக்கப்பெற்றன” (4) என கொல்லன் பட்டறைப் பற்றி டாக்டர் ந. சுப்ரமண்யன் கூறுகிறார்.

கொல்லன் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறியானது எங்கும் படரும் (நற்:13:5). காலால் மிதித்துத் துருத்தியை ஊதும் கொல்லன் (பெரும்:207), யானையானது பகைவருடைய மதில்களை அழித்தலால் அதனுடைய முகத்தில் உள்ள பூண்கள் சிதைந்து விடுமாம். அப்பூனை கொல்லன் சம்மட்டியால் வைத்து அடித்து சரிச்செய்வானாம் (பெரும்:437), கொல்லனது உலைக்களத்தில் அம்பை கூர்மையாக்குதல் (குறுந்:12), இரும்பினைக் காய்ச்சி அடிக்கும் கொல்லன் (அகம்:72) போன்றவை கொல்லர் வேலை செய்பவர்களுக்கு சான்றாகக் காட்டப்படுகின்றன.

பொன் வேலைத் தொழில்

பொன் வேலைச் செய்யும் கொல்லர்களைப் பொற்கொல்லர் என அழைப்பதுண்டு. நற்றிணைப் பாடல் ஒன்றில்,

'பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப' (நற்.313:2)

பொற்கொல்லர்கள் பொன் வேலை செய்யும் இடத்தில் எப்போதும் இனியதான ஓசைப் பிறக்குமாம் என்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும், பொன்னை விற்பவர்கள் பவளச் செப்பிலே பொன்னைச் சேர்த்து வைத்திருப்பாராம் (அகம்:25:11), குற்றம் இல்லாத பொற்கொல்லன் செய்த பொற்காசுகளும், மேகலையும், மாலையும் (புறம்:353:1) என்றும் சிறப்புடையது என்றும், பொடியுடைய நெருப்பிலே பூக்கள் வடிவம் கொண்ட பொன் (கலி:54:2), பொன்னை உரைத்துப் பார்த்து ஆராய்ந்து அறியும் திறனும் அன்றைய மக்களிடம் இருந்து வந்துள்ளது (நற்:25,3:3), (மதுரை:513) என்பன போன்றவையும், சிலம்பில் பொற்கொல்லனால் மதுரையே அழிந்தது என்பதும் அனைவரும் அறிந்தச் செய்தி ஆகியன சான்றாகக் கொள்ளலாம்.


மட்பாண்டத் தொழில்

மண்ணைக் கொண்டு பொருள் செய்வோரை குயவர் என்று அழைப்பர். இவர்களுடையத் தொழில் முழுக்க முழுக்க மண்ணை நம்பியே இருந்தது எனலாம். ஐங்குறுநூற்றில்,

'புதுக் கலத்தன்ன கனிய ஆலம்' (ஐங்.303:1)

ஆலம்பழத்தைப் போன்றும், உருண்டை வடிவாலும் பார்த்துப் பார்த்துச் செய்த குயவன் என ஆசிரியர் கூறுகின்றார். மேலும், மண்ணால் சுடப்பட்ட தாழி என்னும் பானையை தயிர் ஊற்றி கடையும் போது உடைந்து விட்டதாம் (நற்:84), மண்ணால் நிறைய கலங்கள் செய்யும் குயவன் (புறம்:228:1) தான் மண் வேலை செய்யும் முன்னர்; பலியிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் (நற்:293), ஊரில் நடக்கும் விழாவிற்குக் குயவர்கள்தான் வருக வருக என்று அழைப்பார்களாம் (நற்:200) போன்றவை கூறப்படுகின்றன.

ஆடை வெளுத்தல்

துணிகளை துவைத்தல் இவர்களுடைய தொழிலாகக் கருதப்படுகின்றது. இவர்களை காழியர் - வண்ணார், புலைத்தி - வண்ணாத்தி என்று அழைக்கின்றனர். அகநானூற்றிலே,

'பசைவிரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும், பொலன்காழ் அல்குல்' (அகம்.387:6-7)

உவர் மண்ணை சுமத்தலால் தேய்ந்து போன தலையை உடையவள் வண்ணாத்தி. அவள் கூர்மையான நகத்தினையும், நீண்ட விரல்களையும் கொண்டவள். கஞ்சி போட்டு நீண்ட நேரம் ஊர வைத்துத் துணியினைத் துவைக்கக்கூடியவள். அவ்வாறு துவைக்கப்பட்ட ஆடையானது அழகியதாக விளங்கும் என்றும்; அந்தக் காலத்திலே சோப்பு கிடையாது. அதனால் அழுக்கைப் போக்குவதற்காக உவர் மண்ணைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆடைகள் விரைப்பாக இருப்பதற்குக் கஞ்சி போட்டு வெளுத்து இருக்கிறார்கள்.

“சாயம் தோய்த்தல் ஒரு பெருவாரியான கைத்தொழில். நீலச்சாயம் தோய்த்த அரை வேட்டிகளைத் துணி வாங்குவோர் மிகவும் விரும்பினர்” (5) என டாக்டர் ந. சுப்ரமண்யன் கூறுகின்றார்.

வண்ணார்கள் எடுத்த உவர்மண் (அகம்:89:7), உவர்நிலத்தில் கிணறு தோண்டி நாள்தோறும் ஆடையை வெளுப்பவர்கள் (புறம்:311:2), ஆடையை வெளுக்கக்கூடிய வறுமையுற்ற புலைத்தி (நற்:90:3), ஊரில் உள்ள மக்களின் ஆடையை வெளுக்கும் வண்ணாத்தியர்கள் (கலி:72:14), கஞ்சி போட்டு ஆடையை வெளுத்தல் (அகம்:34), ஆடையை வெளுப்பவர்கள் கஞ்சியில் தொய்த்து நீரில் அலசி எடுத்தல் (குறுந்:330), வண்ணார்கள் (அகம்:89) ஆகியவை சான்றுகளாகச் சுட்டப்பெறுகின்றன.


சானைப்பிடித்தல்

கூர்மை மலிந்து போன கருவிகளை மீண்டும் கூர்மைப்படுத்தித் தருவோர் சானைப்பிடிப்போர் என அழைக்கப்படுகிறார்கள். இன்றும் நமது வீதிகள் தோறும் இவர்கள் வருவதைக் காணலாம். அகநானூற்றில்,

'சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல்போல் பிரியலம் என்ற சொல்தாம்' (அகம்.1:5-6)

தோல் என்னும் சிறு தொழில் செய்பவன். இவன் சானைக்கல்லில் கொஞ்சம் அரக்கினைச் சேர்த்து அதனோடு தேய்ப்பான். அப்போது கத்தியானது மிகுந்த கூர்மைபெறும். இச்செய்தி அகநானூறு (356,355) பாடலிலும் இடம்பெற்றுள்ளது.

முத்துக்குளித்தல் சங்கு எடுத்தல்

கடலில் உள்ளேச் சென்று சிப்பியைக் கொன்று முத்தை எடுத்து வெளியில் கொடுப்பவர்கள். இவர்கள் ஒவ்வொரு கடற்கரையோர அரசவையிலும் இருந்திருக்கிறார்கள். ஐங்குறுநூற்றிலே,

'திரை தரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென' (ஐங்.105:2-3)

முத்துக் குளிப்பார் மூச்சடக்கி அரிதாகக் கொணரத்தக்க முத்துக்களை தலைவனுடைய நாட்டில் அதிகம் இருக்கும் என ஆசிரியர் கூறுகின்றார். அதைப்போல சங்கினையும், முத்தினையும் கடலிலே மூழ்கி எடுப்பார்கள் என மதுரைக்காஞ்சி (135-136) கூறுகின்றது. இச்சங்கும் முத்துக்களும் வாணிபத்தில் சிறந்ததொரு இடத்தில் இருந்து வந்தது எனலாம்.

பூ விற்றல்

பெண்கள் தலையில் பூச்சூடிக்கொள்வது வழக்கம். நற்காரியங்களுக்கு செல்லும் மகளிர்கள் தலையில் பூ வைக்காமல் செல்வதில்லை. ஒரு மொக்காவது தலையில் இருக்கும். இதனால் ஆங்காங்கே பூக்கடைகள் இருந்தன. மேலும், பூவைப் பறித்து தெருவெங்கும் விற்கும் செய்தியும் இலக்கியத்திலே வந்துள்ளன. அகநானூற்றிலே,

'பைங்குழைத் தழையர் பழையர் மகளிர்
கண்திரள் நீள்அமைக் கடிப்பின் தொகுத்து
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்' (அகம்.331:5-7)

வெண்மையானப் பூக்களை ஆடுகளும் ஆட்டுக்குட்டிகளும் தின்னுமாம். தின்றதுபோக மீதியுள்ளப் பூக்களைப் பறித்து தன்னுடையக் கூடையிலேப் போட்டுக் கொண்டாள் எயின மகளிர். பக்கத்தில் உள்ள சிற்றூரில் தெருக்களைச் சுற்றியும் சுழன்றும் பூக்களை விற்பாளாம் என ஆசிரியர் கூறுகின்றார். இச்செய்தி, பூந்தட்டில் கட்டு மணம் வீசுகின்ற நறிய பூவினை உடையவர்கள் (மதுரை:397-398), பூ விற்கும் பெண் (நற்:118), பூக்களோடு சந்தனத்தையும் சேர்த்து விற்றல் (மதுரை:515) சான்றுகளாக இங்கு சுட்டப்படுகின்றன. இன்றும் பூக்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றன. விலையுயர்ந்தாலும் மங்கையர்கள் பூவைச் சூடிக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அணிகலன் செய்தல்

அணிகலன்களைச் செய்பவர்கள் கம்மியர் என்றும் கம்மாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். நற்றிணையில்,

'கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய' (நற்.86:5-6)

கைவினையில் வல்ல கம்மியர்கள். பலவண்ணக் கற்களைக் கட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியினைத் தலைவி அணிந்து கொண்டாள் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும், செம்பினால் செய்த பானை (நற்:153:2-3), தொழில் வல்லவன் வாளரத்தால் அறுத்து வளையல்கள் செய்யப்பட்டன (நற்:77), (அகம்:345,351) போன்றவை உதாரணமாகச் சுட்டப்பட்டுள்ளன.

கிணறு வெட்டுதல்

கிணறுகள் வெட்டி தண்ணீரைத் தேக்கி அதன் மூலம் குடி தண்ணீர், வயல்களுக்குத் தண்ணீர் போன்றவை சங்ககாலத்திலே நடைபெற்று வந்திருக்கின்றன. அகநானூற்றில்,

'கனைபொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல்உவர்ப்ப படுவல்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய' (அகம்.79:2-4)

வலிமைப் பொருந்திய கையினை உடைய ஆடவர்கள், தோளிலே சோற்று முடிச்சு தொங்க கிணறு வெட்டும் தொழிலுக்குச் செல்வார்கள். தீப்பொறிக் பறக்க பாறைகளை வெட்டி மிக்க உவரையுடைய கிணற்றினைத் தோண்டுவர் என ஆசிரியர் குறிக்கின்றார். அப்போது குந்தாழியால் குழி தோண்டுதல் (அகம்:399), கோசர்கள் பாறையை குடைதல் (அகம்:252) போன்றவை எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் எண்ணெய் ஆட்டும் செக்கர்களும் சங்ககாலத்தில் இருந்திருக்கிறார்கள். (நற்:328:8-9) என ஆசிரியர் குறிக்கின்றார். கயிறு மேல் நடக்கும் கழைக் கூத்திகளும் இருந்திருக்கிறார்கள் (நற்:95)


புறநூல்களும் பத்துப்பாட்டும் கூறும் தொழில்கள்

மேற்கூறிய அனைத்து தொழில்களும் எட்டுத்தொகை அக இலக்கியங்களைக் கொண்டு எடுத்தாளப்பட்டவைகள். புறநூல்களிலும் பத்துப்பாட்டு இலக்கியங்களிலும் குறுந்தொழில்கள் பயின்று வந்துள்ளமையை காணமுடிகிறது. இங்கு தொழில் பெயரும் அதனோடு சேர்த்து பாடல் எண்களின் குறிப்புகளும் தரப்படுகின்றன.

1. நெசவாளர் மதுரைக்காஞ்சி:521

2. கட்டில் பின்னுபவர் புறநானூறு:82:3

3. பிணம் சுடும் புலையர்கள் புறநானூறு:36:19

4. நீர் இறைக்கும் தொழுவர் மதுரைக்காஞ்சி:89

5. நெல்லரியும் தொழுவர் புறநானூறு 379:3,209:2,24:1

6. விறகு விற்போர் புறநானூறு:70:17

7. பாசவர் எனும் ஆட்டு வணிகர்கள் பதிற்றுப்பத்து:21:9,67:16

8. கச்சு முடிவோர் மதுரைக்காஞ்சி:513

9. கட்டடக்கலைஞர் நெடுநல்வாடை:76-78

10. ஓவியர் நெடுநல்வாடை:110-114,மதுரைக்காஞ்சி:516

சங்ககாலத்தில் தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட குழுக்கள் பின்னாளில் குலமாக மாறியது எனலாம்.

“தொழில் பிரிவினர் காலவோட்டத்தில் குலங்களாய் குடிகளாய் ஆயின” (6) என பா.இறையரசன் கூறுகின்றார். சாதிகள் பெருகுவதற்குத் தொழில்களே காரணமாக இருந்தன என்பது அடிப்படை உண்மை.

முடிவுரை

முன்னோர்கள் சேர்த்து வைத்தச் சொத்துக்களை உட்கார்ந்து கொண்டு அழிப்பவன் மனிதன் அல்லன். சொத்து சேர்த்து வைக்காவிடிலும் தனக்குண்டானச் சோற்றையாவது தான் சம்பாதித்த பணத்தில் சாப்பிடுவது நன்று. நம் நாட்டின் இழிவு என்பது சோம்பேறித்தனமும், பிச்சை எடுப்பதும்தான். அவர்களுக்குத் தகுந்த வேலையைக் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். இன்று உடல் ஊனமுற்றோர்கள் கூட தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள். நல்ல வேலை என்று ஒன்றும் இல்லை. கிடைத்த வேலையைச் செய்து கொண்டே பிடித்த வேலையைத் தேடுதலே சாலச்சிறந்து. இவ்வுலகில் பொய் உரைக்காமலும், மற்றவர் பொருளினை அபகரிக்காமலும், யாரையும் ஏமாற்றாமலும் எந்தவொரு வேலையினைச் செய்தாலும் அத்தொழிலானது மகிழ்ச்சிக்குரியதாகும்.

சான்றெண் விளக்கம்

1. இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு - ஜுலை 1993, ப.192

2. சுப்ரமண்யன், ந., சங்ககால வாழ்வியல், NCBH, சென்னை-98, இரண்டாம் பதிப்பு - 2010, ப.304

3. இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு - ஜுலை 1993, ப.192

4. சுப்ரமண்யன்,ந., சங்ககால வாழ்வியல், NCBH, சென்னை-98, இரண்டாம் பதிப்பு - 2010, ப.304

5. மேலது. ப.303

6. இறையரசன்,பா., தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு - ஜுலை 1993, ப.192

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p194.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License