ஒன்பதாம் திருமுறை உணர்த்தும் அகத்திணைக் கூறுகள்
முனைவர் கு. சரஸ்வதி
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்
முன்னுரை
தமிழ்மொழியின் முதன்மை இலக்கணமாகிய தொல்காப்பியப் பேரிலக்கணத்தை இயற்றிய தொல்காப்பியர் உலகப்பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கிப் பொருளை அகம், புறம் என்ற பாகுபாட்டில் அமைத்துக் கொண்டது தமிழ்மொழியின் செம்மைக்குச் சிறப்புச் சேர்பபனவற்றுள் ஒன்றாகும். அவற்றில் தொல்காப்பியரின் அகப்பொருட் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்பதாம் திருமுறையில் அமைந்த அகப்பொருட் செய்திகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியரும் அகப்பொருளும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியரின் அகப்பொருள் மரபுகள் தொடர்ந்து இழையோடக் காணலாம். ஆண், பெண் என்னும் இருபாலரது மனதில் அன்பென்னும் உயிர்ப்பண்பு வளர்ந்து நிற்றல் அகப்பொருள் வளர்ச்சி எனலாம். இருவர் உள்ளமும் ஒன்றுபட்ட நிலையில் உளங்கலந்து மகிழ்வுறும் நிலையே அகமாகும். இவ்வின்பம் கலப்புற்ற உள்ளங்களுக்கு புலப்படுமேயன்றிப் புறத்தார்க்குப் புலப்படாததாகும். தொல்காப்பியர் அகத்திணையை,
”கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப” (தொல்-பொருள்-நூ.1)
என்ற நூற்பாவின் வழி அகப்பொருளை எழுதிணைகளுக்கு உட்படுத்துகின்றார்.
அகத்திணைச் செய்யுள்
தொல்காப்பியர் கலிப்பாவையும், பரிபாடலையும் அகப்பொருளுக்குரிய செய்யுளாகக் குறித்துள்ளார். அவற்றுள் கலிப்பா கூற்றும் மாற்றமும் விரவி வந்து சுரிதகமின்றி முடியும். பரிபாடல் தொகைநிலை வகையால் பா இது என்று சொல்லப்படும். இலக்கணம் இன்றி எல்லாப்பாவிற்கும் பொதுவாய் நிற்பதற்கு உரியது. மேலும் கலிப்பா பொதுவாய் நிற்றலின்றிக் கொச்சகம், அராகம், சுரிதகம், எழுத்து என்னும் நான்கையும் தனக்குறுப்புகளாகக் கொண்டு காமப்பொருளாக வரும். இதனை,
“கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்குறுப்பாகக்
காமம் கண்ணிய நிலைமைத் தாகும்” (தொல்-பொருள்)
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சங்க இலக்கியங்களில் அகப்பாடல்கள் ஆசிரியப்பாவில் பாடப்பட்டுள்ளன. எனவே அகப்பாடலுக்குரிய பாவடியில் சங்க காலத்திலேயே நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பது அறிய முடிகிறது.
இலக்கியங்கள் அகப்பொருளை கையாண்ட பாங்கு
மரபிலக்கியங்கள் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய சங்க இலக்கியங்கள் முதல் இந்நூற்றாண்டு வரை படைக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்களில் அகப்பொருள் பல்வேறு படிநிலை வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. சங்க நூல்களில் அகப்பொருள் எழுதிணைகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு திணையிலும் பலதுறைகள் இடம் பெற்றுள்ளமை காணமுடிகிறது. அகத்திணையாகப் போற்றப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்து திணைகளும் நிறைந்த அளவு துறைகளைப் பெற்று அகப்பாடல் பெருகியுள்ளன. கைக்கிளை ஒரு தலைக் காதலாலும், பெருந்திணை பொருந்தாக் காதலாலும் குறைந்த துறைகளே பெற்றுச் சில பாடல்களே பெற்றுள்ளன.
சங்கப் பாடல்களை அடுத்து வந்த திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் ஐந்திணைக்கும் உரிய பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் திணை, துறை வகுத்துக் கூறப்பெறவில்லை. எனினும் சங்கப் பாடல்களின் அகச்சுவை உணர்வு இந்நூல்களில் சிறிதும் குறையவில்லை. பக்தி இலக்கியக் காலங்களில் அகப்பொருள் பாடல்களில் மாற்றத்தைக் காணமுடிகிறது. இக்காலத்தில் மானுடக் காதலை விடுத்து கடவுள் மீது காதல் கொண்டு கைக்கிளைத் திணையாகக் கொள்ளப்படும் ஒருதலைக் காதலைப் பாடினர். சங்ககாலத்தில் மடலேறுவேன் என்று கூறிய தலைவன் உண்டேயொழிய மடலூர்ந்த தலைவன் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் மடலூர்தலைக் காணலாம்.
சமயநூல்களில் அகப்பொருள்
சமயநூல்கள் இறைவனிடம் கொண்ட பக்தி உணர்வின் வெளிப்பாடாகும். இவ்வாறு போற்றி மதிக்கப்பெறும் சமயநூல்களில் அருளாளர்கள் அகப்பொருளை அமைத்துப் பாடுதல் தகுமா என்ற வினா எழும்.
”சங்க காலத்தில் மக்கள் இயற்கை இறந்தவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்று நிலைகளில் பொருளை வழிபட்ட பாங்கினைத் தொல்காப்பியர் குறிப்பர். மனமாசுகளை அகற்றிப் பேரின்ப நிலையை அடைய முயல்வது கடவுள் வழிபாட்டின் நோக்கமாகும். அன்பு நெறியையே இறைவனிடம் தங்களை ஒப்படைப்பதற்குரிய சிறந்த நெறியாகக் கொண்டனர்” என்று ந. வள்ளியம்மாள் தம் நூலில் கூறியுள்ளார். (தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள் - ப.93)
“காமப்பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)
என்பர் தொல்காப்பியர். இதன் வழி மக்களினம் இறைவனிடம் காதல் கொண்டு அவன் அடியை அடைய முயன்றதை அறியலாம்.
ஒன்பதாம் திருமுறையில் அகப்பொருள்
ஒன்பதாம் திருமுறையில் உள்ள 29 திருப்பதிகங்களில், 10 திருப்பதிகங்களில் அகத்துறைக் கோட்பாடுகளைக் காணமுடிகிறது. திருமாளிகைத் தேவர் பாடிய மூன்றாம் பதிகம் அகத்துறைப் பாங்கினைப் பெற்றதாகும்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் நிலையையும், ஆற்றா நிலையில் அவள் பிதற்றுதலையும், உச்சமாக அவள் பிச்சியான நிலையையும் எடுத்துரைத்து அகத்துறைத் தலைவி ஒருத்தியின் நிலை சித்தரிக்கப்பெற்றுள்ளது.
“செழுந்தென்றல் அன்றில் இத் திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்று என்மேல் பகையாட வாடும்
எனைநீ நலிவதென்னே? என்னும்” (திருவிசைப்பா 3.5)
என்று தலைவியின் வாட்டம் செவிலித்தாயால் நற்றாய்க்கு உரைக்கப் பெறுகிறது. காதல் வயப்பட்டோருக்குப் பால் புளிக்கும், பாகு கசக்கும் என்பது தமிழ் மரபு. பிரிந்திருப்போரை அந்திமாலை துன்புறுத்தும், தன்நிலவு சுட்டெரிக்கும், தென்றல் வருத்தும் என்பது சங்கப்பாடல்கள் தரும் செய்தி. இப்பாடற்பகுதியில் தென்றல் காற்று, அன்றில் பறவை, நிலவு, இரவு. கடல், குழலோசை, எருதின் மணிஓசை ஆகியன தலைவிக்கு வாட்டம் தந்தன என்று கூறி சமய இலக்கியத்தில் சங்க இலக்கிய அகக் காட்சியை காணச் செய்துள்ளார். காதலின் உச்சக் கட்டத்தை அடையும் தலைவி பிச்சியாகி விடுகின்றாள் என்பதை,
“திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்த்திரு முண்டத்திட்டுப்
பெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்” (திருவிசைப்பா 3:10)
என்ற திருப்பாடல் வழி அறியலாம். இவ்வாறு தலைவனைத் தலைவி தேடிச் செல்வதை,
“தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக்கிழவன் உள்வழிப் படினும்” (தொல்- பொருள்-நூ.ப.47)
என்ற தொல்காப்பிய நூற்பாவில் அறியலாம்
“இச்சூத்திரம் களவியலில் இடம் பெற்றிருப்பதால் தலைவனைத் தேடித் தலைவி செல்வது அகன் ஐந்திணையைச் சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை”என்று பழ. முத்தப்பன் என்பார் தரும் விளக்கம் இங்கு கருதத்தக்கது.
சேந்தனார் அகப்பாடல்கள்
சேந்தனாரின் திருவிடைக்கழி பதிகத்தில் புதிய அகப் பொருள் மரபான பெண்பால் மடலேற்றத்தைக் கூறியுள்ளார்.
“எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மையான”
(தொல்-பொருள்-நூ.35)
என்பது தொல்காப்பியர் கூறும் இலக்கணம்.
“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்”
(குறள்-1137)
என்னும் திருக்குறள் கருத்தும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும். ஆயினும் பக்தி இலக்கியங்களில் காணும் இந்நிகழ்ச்சி ஒரு மரபு மாற்றமாக அமைந்துள்ளன.
“தொகை மிகு நாமத் தவன்திரு வழக்குஎன்
துடியிடை மடல்தொடங் கினளே”
(திருவிசைப்பா.3:8)
என்று செவிலித்தாய் ஒரு பாடலை முதலில் கூறி அடுத்து,
“தொடங்கினள் மடலென்று அணிமுடித் தொங்கல்
புறவிதழ் ஆகிலும் மருளான்”
(திருவிசைப்பா 3:9)
என்று மொழிகிறாள். மடலேறிய பிறகும் இறைவன் அருள் கிடைக்கவில்லை என்பதை இப்பகுதி வழி அறியமுடிகிறது. இதனால் பெண்பால் மடலேறிய புதுமரபைக் காணமுடிகிறது. “ இந்த அடிப்படையில் தான் ஆழ்வாரின் சிறிய திருமடலும், பெரிய திருமடலும் அமைந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது” என்ற பழ. முத்துப்பன் என்பார் கூற்று நினையத்தக்கது. எனவே தொல்காப்பியர் கால மரபு ஆழ்வார்கள் காலத்தில் மாற்றம் பெற்றுள்ளது எனவும், அந்த மாற்றத்தைச் சேந்தானரும் பின்பற்றியுள்ளார் என்றும் கருதலாம். இங்கு மடல்தலைவியின் நோக்கம் தலைவன் அணிந்த மலர் அல்லது மாலை பெறுதல் ஆகும். எனவே சீவான்மா பரமான்மாவை அடையத் துடிக்கும் நிலையை இம்மடல் வழி வெளிப்படுத்தினர் எனலாம்.
கருவூர்த்தேவரின் அகப்பாடல்கள்
புறப்பொருள், அகப்பொருள் ஆகிய இருவகை இலக்கியங்களிலும் தூது அனுப்புதல் உண்டு என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாகவும், சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் அறியலாம். தலைவன் தலைவியரிடையே மட்டும் இருந்த அகப்பொருள் சார்பான தூது விடு மரபுகளைத் தொல்காப்பியம் “வாயில்கள்” வழி விளக்கிக் காட்டும். உயர்திணையேயின்றி அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன் தலைவியரிடையே பிரிவுத் துன்பம் மிக்க வழி உண்டு.
“செல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்” (தொல்-பொருள்-நூ.3)
என்று தொல்காப்பியம் தூது மரபுக்கு இலக்கண விதி வகுத்துள்ளது. ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்து அவற்றிற்கேற்றபடி அஃறிணைப் பொருள்கள் நடக்கும் உணர்வு பெற்றவை அல்லவேனும் அங்ஙனம் அவற்றை முன்னிலைப்படுத்தி உரைப்பது ஒரு மரபாக வழிவழியாக இலக்கியங்களில் புலவர் கொண்டிருந்தனர். ஒன்பதாம் திருமுறையில் தலைவி “ திருக்கீழ்க்கோட்டூர் மண்யம்பலத்தில் திருக்கூத்தியற்றுகின்ற இறைவனைக் கண்டு திரும்பி வருகின்ற வண்டுகளே தன் மனத்தினை அவரிடமிருந்து பெற்று வாருங்கள்” என்று தூதனுப்புகின்றாள். இதனை,
“திருநுதல் விழியும் பவளவா யிதழுந்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய் வருந் தும்பிகள் இங்கே
... ... ... ... ... ... ... ... ...
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையுங் கொண்டு போதுமினே” (கருவூர்த்தேவர் திருவிசைப்பா-3:3)
என்ற பாடல் வழி கருவூர்த்தேவர் குறிப்பிட்டுள்ளார்.
சேதிராயரின் அகப்பாடல்
சேதிராயரின் அகப்பாடலில் “தில்லை அம்பலவனே! நீ என் மகளை வருந்தச் செய்தாய்! அவள் தான் வளர்க்கும் கிளியை நோக்கி நின் சிறப்பை கூறினாலாவது மகிழ்வேன் என்கின்றாள்” (சேதிராயர் திருவிசைப்பா 1:6) என்ற நற்றாய் கூற்று இடம் பெற்றுள்ளது. இது ஒரு புது மரபு என்றாலும் இம்மரபை
“சிறையாரும் மடக்கிளியே யிங்கேவா தேனொடு பால்
முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் றிருநாமம் மெனக்கொருகாற் பேசாயே” (திருஞான சம்பந்தர் தேவாரம் 1:60:10)
என்று திருஞானசம்பந்தர் திருமுறையிலும் காணமுடிகிறது.
“ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொலிளம் பைங்கிளியே
பாமாலை யாழ்முரியப் பாயழியப் பண்டருள் செய்
மாமான சுந்தரன்வன் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே” (நம்பியாண்டார் நம்பி திருக்கலம்பகம் பா.26)
என ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்திலும் இம்மரபைக் காணலாம்.
தொகுப்புரை
பக்தி இலக்கியமே எனினும் ஒன்பதாம் திருமுறை என வகுக்கப்பெற்றுள்ள திருவிசைப்பா பகுதியில் பத்து பதிகங்களில் அகத்துறைச் செய்திகள் அமைந்துள்ளன. அருளாளர்கள் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் கருதி களவு, கற்பு நெறிகள் அனைத்திலும் அமைத்துப்பாடி சிற்றின்பத்துறைகளைப் பேரின்பத் துறைகளாக மாற்றி அமைத்தனர். பக்தி இலக்கியக் காதல்கள் அனைத்தும் ஒரு தலைக் காதலாகவே உள்ளன. சங்க காலத்தில் ஆண் மடலேறுவேன் என்று கூறும் மரபு உண்டு. ஆனால் ஒன்பதாம் திருமுறையில் பெண்ணின் மடல் ஏற்றத்தைக் காணமுடிகிறது.
ஒன்பதாம் திருமுறையில் திருமாளிகைத் தேவர் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் நிலையையும், ஆற்றா நிலையில் அவள் பிதற்று தலையும், அவள் பிச்சியான நிலையையும் எடுத்துரைத்து அகத்துறைத் தலைவி ஒருத்தியின் நிலையை விளக்குகிறார். தலைவி தலைவனைத் தேடி சென்றதாக இவர் கூறுவது தொல்காப்பிய நெறிக்கு உட்பட்டதேயாகும்.
பார்வை நூல்கள்
1. தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் கொள்கைகள், ந. வள்ளியம்மாள், மக்கள் வெளியீடு, சென்னை, மு.ப.1980.
2. திருமுறைகளின் அகக்கோட்பாடு, பழ. முத்தப்பன், மீனாட்சி நூலகம், மயிலம், மு.ப. 1986
3. திருஞான சம்பந்தர் தேவார திருப்பதிகங்கள், சோமசுந்தர தம்பிரான் (ப.ஆ), தருமபுர ஆதின வெளியீடு, தருமபுரம், மு.ப.1984
4. தொல்காப்பியம் - பொருளதிகாரம், இளம்பூரணர் (உ.ஆ) -கழக வெளியீடு
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.