நைடதப் காப்பியத்தில் மெய்ப்பாடுகள்
இல. இராசதுரை
முனைவர் பட்ட ஆய்வாளர்,
கீழ்த்திசைச் சுவடிக்காப்பகம் மற்றும் ஆய்வு நிறுவனம்,
கேரளப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.
முன்னுரை
மகாபாரதத்தின் கிளைக்கதையாகிய நளன் கதையானது, தமிழ் இலக்கிய உலகில் முழுக்காப்பியமாக உருப்பெற்றது 13 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் தான். 13 ஆம் நூற்றாண்டில் வெண்பா பாடுவதில் வல்லவரானப் புகழேந்திப் புலவர், நளன்கதையை ‘நளவெண்பா’ என்றும், 16 ஆம் நூற்றாண்டில் விருத்தப்பா அமைப்பில், பாண்டிய மன்னரான அதிவீரராமப் பாண்டியர், ‘நைடதம்’ என்றும் நூலாக்கியுள்ளனர். நைடதத்தில் பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான ‘மெய்ப்பாடு’ அமைந்திருக்கும் விதத்தை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நூல் சுருக்கம்
நளன் அன்னத்தைத் தூது விட்டு, தமயந்தியைச் சுயம்வரம் மூலம் திருமணம் செய்கிறான். பின்பு கலியின் சூழ்ச்சியால் புட்கரனுடன் சூதாடி, நாட்டை இழந்து மனைவியுடன் காட்டை அடைகிறான். அப்போது அங்கு வந்த அன்னத்தைப் பிடிக்க முற்பட்ட நளனின் ஆடையை, அன்னம் கொண்டு செல்ல, இருவரும் அன்று இரவில் ஒற்றை ஆடையுடன் துயிலுகின்றனர். கலியின் சூழ்ச்சியால் நளன் தன் ஆடையை வகிர்ந்து, அவளைப் பிரிந்து காட்டிற்குள் செல்லும் வழியில், தீயில் கிடந்த பாம்பைக் காப்பாற்ற, அப்பாம்பு நளனைத் தீண்டுகின்றது. அப்போது நளன் வேறு வடிவம் பெற்று, அயோத்தி மன்னனான இருதுபன்னனிடம் ஏவலனாய்ப் பணிபுரிகிறான். தமயந்தியோ, அந்தணன் ஒருவன் உதவியால் வீமனின் அரண்மனை சேர்கிறாள். நளன், தமையந்திக்கு இரண்டாம் சுயம்வரம் என அறிந்து, இருதுபன்னனுக்குத் தேரோட்டியாக வருகிறான். அங்கு நளன், தன் குழந்தைகளைத் தழுவியதைக் கண்ட தமயந்தி, அவனை நளமகாராசன் என அறிந்து கொள்கிறாள். நளன் கலிதொடர் காலம் நீங்கித், தன் பழைய உருவம் பெற்று தமயந்தியை அடைந்து, மீண்டும் சூதாடி நாட்டைப் பெறுவதே நைடதத்தின் கதை.
1. மெய்ப்பாடு
தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும், அவற்றின் 32 வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிடும் எண்வகை மெய்ப்பாடுகளாவன,
”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப.” (தொல் - மெய்ப் - 1197)
என்கின்றார்.
I. நகை (சிரிப்பு)
இகழ்தல், இளமை, அறியாமை, அறிந்தும் அறியாதது போலிருத்தல் ஆகியவற்றால் நகை ஏற்படும் என்பதனை,
“எள்ளல் இளமை பேதமை மடன் என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (மேலது - 1198)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“நென்னல் வாட்டு நிலவுக் கதிர்மதி
யின்னு மெய்தி விறந்து படுமென” (நைடதம் - 10-2)
என்ற பாடல் வரிகளில், வருத்தத்துடன் காணப்பட்ட தமயந்தியின் பருவத்தை அறிந்த அவளுடைய தாயும் தந்தையும் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் தோழிகள், முன்னாள் நடந்த நிகழ்வின் காரணமாக மீண்டும் மதி தோன்றினால், தமயந்தி இறந்து விடுவாளோ என நினைக்கின்றனர். இங்கு தோழிமார்களிடம் அறியாமை என்ற ’மடன்’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
II. அழுகை
இழிவு, இழப்பு, தளர்ச்சி, வறுமை, அழிவில்லாக் கொள்கை ஆகியவற்றால் அழுகை ஏற்படும் என்பதனை,
“இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (தொல் - மெய்ப் - 1199)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“பாயரி நெடுங்கணீ ரருவி பாய்தரத்
தூயமென் மலர்க்கர நெரித்துத் துண்ணென” (நைடதம் - 23-11)
என்ற பாடல் வரிகளில், நடுக்காட்டில் நளனை இழந்தத் தமயந்தி அவனைக் காணாதவளாகிப் பெருமூச்சுவிட்டுக் கண்கலங்கினாள். இங்கு ’இழவு’ என்னும்
மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
III. இளிவரல்
முதுமை, நோய், துன்பம், எளிமை, இவற்றால் இழிவு ஏற்படும் என்பதனை,
“மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே” (தொல் - மெய்ப் - 1200)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“மனைவித னருந்துயர் நோக்கி மாழ்னினான்
வினைவலி யிதுவென மெலிவு நீக்கினான்” (நைடதம் - 22-11)
என்ற பாடல் வரிகளில், தமயந்தி உடுத்தியிருந்த ஆடையைக் கலியானவன் கவர்ந்து செல்ல, அச்சமயத்தில் துயரப்படும் அவளைக் கண்டு நளனானவன் வருந்துகிறான். இங்கு ’வருத்தம்’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
IV. மருட்கை (வியப்பு)
காணாததைக் காணல், அளவிற்கதிகப் பெருமை, அளவிற் குறைந்த சிறுமை, ஒன்று பிறிதொன்றாகும் ஆக்கம் இவற்றால் மருட்கைத் தோன்றும். என்பதனை,
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (தொல் - மெய்ப் - 1201)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“ஈந்த வாலரி மெய்தபொற் குருசிதீ யின்றி
யாய்ந்த கேள்வியான் றொடுதலு மடிசிலா யமைய” (நைடதம் -27-13)
என்ற பாடல் வரிகளில், தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்திற்கு, இருதுபன்னனுடன் தமயந்தி இல்லம் வந்த நளன், அரிசி போடப்பட்ட பொன் குடத்தைக் கையால் தொட, அவ்வரிசி தீயின்றிச் சோறாகியது. இவ்வதிசயத்தைக் கண்ட தமயந்தியின் தோழியான ’கேசினி’ வியப்பு அடைந்தாள். இங்கு ’பெருமை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
V. அச்சம்
தம் ஆற்றலால் துன்பத்தைத் தரும் தெய்வங்கள், கொடிய விலங்குகள், கள்வர்கள் போன்றவர்களால் காரணங்களான அச்சம் தோன்றும் என்பதனை,
“அணங்கே விலங்கே கள்வர் தம்இறை எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல் - மெய்ப் - 1202)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“அணுகி யாங்குப் புலம் பெய்து மலர்பு+ங் கோதை மயிலெழிய
வணிக மாக்க ளியாவரையு மதவால் யானை கொன்றேகத்” (நைடதம் - 23-29)
என்ற பாடல் வரிகளில், காட்டினில் தனியாக நிற்கும் தமயந்தி, வியாபாரிகளை வழித்துணையாகக் கொண்டு செல்லும் வேளையில், மும்மதம் பொருந்திய யானை அனைவரையும் கொன்று விட்டு, தமயந்தியை மட்டும் விட்டுவிட்டுச் செல்கின்றது. இங்கு ’அணங்கு’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
VI. பெருமிதம்
கற்ற கல்வி, அஞ்சாமை, நன்னடை, வரும்புகழ், வரையாது கொடுக்கும் வள்ளன்மை ஆகியவற்றால் ஒருவர்க்கு பெருமிதம் தோன்றும். என்பதனை,
“கல்வி தறுகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல் - மெய்ப் - 1203)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“அனைத்தும் வல்ல அறநெறி அந்தணர்
நினைத்த யாவையு நீரொடு நல்கினான்” (நைடதம் - 14-5)
என்ற பாடல் வரிகளில், நளனின் திருமணத்திற்கு வருகை புரிந்த நான்கு வேதங்களையும் கற்றறிந்த அந்தணர்களுக்கு, அவர்கள் நினைத்த அனைத்தையும் நளன் தானமாகக் கொடுத்தான் என்னும் கருத்தில் ’கொடை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
VII. வெகுளி
உறுப்புக்களை அறுத்தல், தம் கீழ் வாழ்வோரைத் துன்புறுத்தல், அடித்தல், கொலைபுரிதல் ஆகியவற்றால் சினம் தோன்றும். என்பதனை,
“உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (தொல் - மெய்ப் - 1204)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“றொய்யின் முலைமேற் புல்லுதற்குத் தொடரத் துஞ்சா வருங்கற்பின்
தையல் முனிந்து நோக்குதலும் சாம்பராயிற்று அவனுடலே” (நைடதம்- 23-24)
என்ற பாடல் வரிகளில், நளனைப் பிரிந்து காட்டில் தனியே நிற்கும் தமயந்தியின் அழகைக் கண்டு, வேடன் ஒருவன் அவளை அணைக்கப் பின் தொடர்கின்றான். அப்போது அவனைத் தமயந்தி சினந்து பார்த்த வேளையில், அவ்வேடனின் உடல் சாம்பலாயிற்று. இங்கு ’கொலை’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
VIII. உவகை
செல்வம், அறிவு முதிர்ச்சி, புணர்ச்சி, விருப்பமுடையாருடன் விளையாடுதல் போன்றவற்றால் மகிழ்ச்சி ஏற்படும் என்பதனை,
“செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று
அல்லல் நீத்த உவகை நான்கே” (தொல் - மெய்ப் - 1205)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்து நைடதத்தில்,
“பொன்னவி நிளமுலைப் பூவை தன்னோடு
மண்ணிய மணியனார் வளைந்திட்ட டார்ரோ” (நைடதம் - 18-19)
என்ற பாடல் வரிகளில், திருமணம் முடிந்து விந்த மாநகரம் அடைந்த நளனும், தமயந்தியும், அந்நகரில் உள்ள தடாகத்தில் விளையாடி இன்பம் அடைந்தார்கள். இங்கு ’விளையாட்டு’ என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.
தொகுப்புரை
சீரானக் கதையமைப்பைப் பெற்றுள்ள நைடதக் காப்பியத்தில், பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான எண்வகை மெய்ப்பாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
துணைநூற்கள்
1. வழித்துணை ராமன் ஏ.எஸ்., நைடதம், பாரிநிலையம், சென்னை. 600 108 (2005)
2. கதிரைவேற்பிள்ளை. நா, நைடதம் மூலமும் விருத்தியுரையும், வித்யாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை. (1930)
3. ச.வே. சுப்பிரமணியம், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.