நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் அகச் சிறப்புகள்
முனைவர் மீ. கோமதி
உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை,
சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்
முன்னுரை
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் தோன்றியவை சங்க இலக்கியங்கள் எனப் போற்றப்பெறும் பாட்டும் தொகையும் ஆகும். இவை தோன்றிய பிறகு அற இலக்கியங்களும், அவற்றை ஒற்றிய காலக்கட்டத்தில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் தோன்றின. எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் 2381-ல் உள்ள 1862 பாடல்கள் அகப்பொருள் பற்றியன ஆகும். பொருளிலக்கியம் என்பது அகம், புறம் என்னும் இருதிணை வடிவமைந்ததாகும்.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்-பொருள்-பொருளியில் - 219 நூ)
அகப்பாடல்கள் உயிரிகள் பிறத்தற்கும், பிறப்பிப்பதற்கும் அடிப்படையான இன்ப உணர்வை உலகின் மருங்க அறாது வழிமுறைக் காக்கும் காமத்துடிப்பைக் பொருளாக கொண்ட தன்மையுடையது ஆகும்.
சங்ககால மக்களின் வாழ்க்கை முறையானது அகம், புறம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. அகம் என்பது உள்ளத்தால் மட்டும் உணரக்கூடிய உணர்வுகளையும், புறம் என்பது அகமல்லாதவற்றையும் குறிப்பது. சுருங்கக்கூறின் அகம் என்பது மக்கள் தம் காதல் வாழ்வினையும், புறம் என்பது வீரம், வெற்றி கொண்ட முதலியவற்றையும் குறிப்பது. அகவாழ்க்கை என்பது களவு, கற்பு என இருபாற்பட்டது. களவு என்பது திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வையும், கற்பு என்பது திருமணத்திற்கு பிந்தைய இல்வாழ்க்கையும் சுட்டுவதாகும். சங்க அகமரபை திவ்வியப் பிரபந்தம் அடியொற்றி பாடப்பெற்றது என்பதை ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
அகப்பாடல் மரபு
பக்தி இலக்கியத்தில் அகமரபு, பக்தியை வெளிப்படுத்துகின்ற கருவியாக விளங்குகின்றது. சங்க அக இலக்கியத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலிய மாந்தர்கள் இடம்பெறுவது போல பக்தி இலக்கியத்திலும் இடம்பெறுகின்றன. பழந்தமிழ் அகமரபினை ஒட்டி தலைமக்கள் இவரெனக் கூறுதல் இல்லை. பக்தி இலக்கியத்தைப் பொறுத்தவரை இறைவன் தலைவனாகவும் பாடுகின்ற அடியவர் தலைவியாகவும் சுட்டிக் கூறப்படுகின்றனர். இதனால் சங்க அக இலக்கிய மரபு பக்தி இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் அடிப்படையாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது. அகப்பொருளின் தலைமை மாந்தர்களாக தலைவனும் தலைவியும் விளங்குகின்றனர்.
அகத்தூது
ஒருவர் கருத்தை மற்றவருக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் தூது செல்லுதல் ஒன்று. தூது இலக்கியங்கள் தூதுக்குரியதாக அகப்பொருளை எடுத்துக் கொண்டன. இறைவனைப் பாடிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் தூதின் வழி இறையன்பை வெளிப்படுத்தினர். அத்தகைய வகையில் அடியார்கள் தன்னைத் தலைவியாகவும், இறைவனைத் தலைவனாகவும் பாவித்து அகப்பொருள் அமைப்பில் பாடிய பாடல்களில் தூது இடம்பெறுகிறது. ஆழ்வார்கள் தூது அனுப்பும் பாடல்கள் நம் உள்ளத்தை உருக்குவனாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் நாரையைத் தூது விடுகின்றார்.
தலைவனைப் பிரிந்த தலைவி காம மயக்கத்தால் அஃறிணை பொருள்களையும், உயர்திணைப் பொருள்களையும் கொண்டு தூதாக அனுப்புவது முறையாகும். அத்தகைய வகையில் கொடிய சிறகுகளை உடைய கருடனைக் கொடியில் உயர்த்திய இறைவனிடம் நம்மாழ்வார் நாரையைத் தூது விடுகின்றார். இதனையே;
“அஞ்சின்ற மடநாராய் அளித்தாய் நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் அது என்று எனக்கு அருவர்
வெஞ்சிறைப்புண் உயர்த்தாற்கு என விடுதூதாய் சென்றக்கால்
வன்சிறையில் அவன்னுக்கில் வைப்புண்டால் என் செயுமோ” (முதல் பத்து - நான்காம் திருவாய்மொழி பா- 2115)
என்ற பாடல் வரிகள் உணர்த்தும். அன்னத்தைத் தூது விட்டுத் தன் பக்தியினை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார்.
மெல்லிய நடையை உடைய அன்னங்களே வாமன வடிவத்தால் விளங்கும் பிரமச்சாரியாக இருக்கும் பெருமானிடம் தூதாகச் செல்லுங்கள் என்று அன்னத்திடம் கூறுகின்றார்.
“விதையினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்கள்
மதியினாள் குறள்மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே”(முதல் பத்து - 4ம் திருவாய்மொழி- பா-2117)
என்ற திருவாய்மொழி பாசுரத்தில் தலைவனாம் தூது செல்ல அன்னத்தை அனுப்பிய தலைவியாக நம்மாழ்வார் தன்னை நிறுத்திப் பாடுகின்றார்.
வாடாத மலர் போன்ற திருவடிகளில் வைத்து வணங்குவதற்காகவே இவ்வுயிர்களைப் படைத்தவனிடம் பனிக்காற்றை அழைத்துத் தூதாக அனுப்பும் தலைவியின் மனநிலையைக் கூறுகின்றார்.
“நாடாத மலர்நாடி நாடாறும் நாரணன்றன்
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்றது
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என்செய்வதோ
ஊடாடு பனிவாடாய் உரைத்து ஈராய் எனது உடலே” (முதல் பத்து - 4ம் திருவாய்மொழி - பா-2123)
இப்பாடலில் நம்மாழ்வார் நாரை, அன்னம், காற்று ஆகியவற்றைத் தூதாக அனுப்பிப் பெருமானைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் பாவித்துப் பாசுரங்களை அகமரபினை ஒட்டி அமைத்துள்ளார்.
பசலை நோய்
தலைவனின் பிரிவால் தலைவியின் உடலில் ஏற்படும் வாட்டமும் மேனி மாறுபாடும் ‘பசலை நோய்’ என்று அழைக்கப்படுகிறது. தலைவியாய் பாவிக்கும் நம்மாழ்வார் தனக்கும் பசலை நோய் உண்டானதை உரைப்பதாக இப்பாடல் அமைகின்றது.
நாரையை நோக்கி என் தாயும் நித்திய சூரிகளும் தூங்கினாலும் நீ தூங்குவதில்லை. ஆதலால் நீயும் என்னைப் போல் பசலையாய் உடலெங்கும் பரவும்படி திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ எனக் கூறுகிறார்.
“வாயும் திரை உகளும் கானல் மடநாராய்
ஆயும் அமர் உலகம் துஞ்சினும் நீ துஞ்சாமல்
நோயும் பயலையும் மீதூர எம்மேபோல
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டவே” (இரண்டாம் பத்து - 1ம் திருவாய்மொழி பா- 2192)
என்ற பாசுரங்கள் மேனி முழுவதும் மாறுபட்டுள்ளதை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார். இளமையாலும் அன்புடன் கூடிய சொற்களாலும் வடிவில் பசுமையாலும் வாயில் பழுப்பாலும் தலைவனுடைய நினைவை உண்டு பண்ணுவதால் என் எலும்பைத் துளைத்து, அதில் நூல் இழையைக் கோர்த்தது போன்ற குளிர்ந்த வாடைக்காற்று அறுக்கிறது. எலும்பும் நரம்பும் ஆகும்படி உடல் இளைத்து மாறி வருவது என்பதை நம்மாழ்வார் இறைவனைக் காணாது தான் உடலாலும் மனத்தாலும் படும் துன்பத்தை எடுத்துரைக்கின்றார்.
“என்பு இழை கோப்பது போலப் பணிவாடை ஈர்க்கின்ற
என்பிழையே நினைந்தருளி அருளாக திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுத்தென்று ஒருவாய்சொல்
என்பிழைக்கும் இளங்கிளியே யான் வளர்த்த நீயலையே” (முதல் பத்து - 4ம் திருவாய்மொழி பா-2121)
என்று சந்திரனைப் பார்த்து நான் பசலை நோய்கண்டு மேனியழகை இழந்தது போல நீயும் பசலையற்று அன்றாட அழகில் குறைந்து கொண்டு வருகிறாயோ எனத் தலைவி வினவுவதாக அமைகின்றது.
தாய் இரங்குதல்
சங்க அக இலக்கியங்களில் நற்றாய், செவிலித்தாய் ஆகிய இருவரும் தாய் நிலையில் சித்தரிக்கப்படுகின்றனர். தலைவியின் உடல் மன வேறுபாடுகளைக் கண்ணுறும்பொழுது நற்றாய், செவிலித்தாய் இருவரும் கவலை கொள்வதும் அவள் நிலை கண்டு இரங்குதலும் அகமரபுகளின் சுட்டப்பெறுகின்றது.
ஆழ்வார் இப்போது தாமான தன்மை இழந்து தலைவி நிலையில் நிற்கிறாள். பராங்குச நாயகியாகிய இவளுடைய நிலைமையைத் தாயானவள் தலைவியை நோக்கிக் கூறுவதாக இத்திருமொழி அமைகின்றது.
தலைவியானாவள் ஓர் இடத்தில் இல்லாமல் பல இடங்களிலும் உலாவி மனமும் கரைந்து இசையோடு பல பாடி எல்லா இடங்களிலும் இறைவனைத் தேடுகிறாள்.
“ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வான்னுதலே” (இரண்டாம் பத்து நான்காம் -திருவாய்மொழி பா- 2225)
என திருவாய்மொழி உணர்த்துகிறது.
குவளை மலர் போன்று அவள் கண்களில் நீர் வருவதைக் கண்ட தாய், துளசி மாலையை அவளுக்குத் தரலாகதோ என வினவுகிறாள்.
“இவன் இராப் பகல்லாய் வெரி இத்தனை
குவளை ஒண்கண்ணீர் கண்டாள் வண்டு
திவளும் தண் அம்துழாய் கொடீர் என
தவள வண்ணர் தகவுகளே” (இரண்டாம் பத்து -நான்காம் திருவாய்மொழி - பா-2229)
என்று குறிப்பிடுகின்றார். இதனை அவளுடைய கண்களிலிருந்து நீர் வருவதைக் கண்டு தன் பக்தியினை நம்மாழ்வார் வெளிப்படுத்துகின்றார்.
என் மகள் உன்னை நினைத்துச் செயல்களாலும் குணங்களாலும் வஞ்சித்தவனே என்று உன்னை வணங்குகின்றாள். இவள் படுகின்ற துன்பங்கள் கணக்கற்றவை. உடல், உள்ளம், சொல் ஆகிய முக்காரணங்களால் இவள் இத்தனையும் படவேண்டியது என்கின்றாள் தலைவி.
“வஞ்சனே என்னும் கைதொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சமென் றிவள்பட்டனவே” (இரண்டாம் பத்து - நான்காம் திருவாய்மொழி - பா-2232)
இப்பாடலில் தாய் இரங்கிக் கூறுவதாக ஆழ்வார் தம் பாசுரங்களில் அகமரபினை ஒட்டி அமைத்துள்ளார்.
தொகுப்புரை
இவ்வாறாக, சங்க இலக்கியத்தில் அகம், புறம் கோட்பாடுகளின் நீட்சியாக விரிந்த ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல புதிய உண்மைகள் வெளியாகும் என்பதில் ஐயமில்லை.
பார்வை நூல்கள்
1. அருணாசலம். ப, பக்தி இலக்கியம், முல்லை நிலையம், சென்னை.
2. இராமசுப்ரமணியம் வ. த., (பதிப்பாசிரியர்), ஸ்ரீ வைணவத் திருத்தொண்டர், மூதறிஞர், வி.எஸ்.வி. இராகதாசன், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - மூலமும், தெளிவுரையும், மூன்றாம் ஆயிரம், முல்லை நிலையம், 9, பாரதிநகர், முதல் தெரு, தி.நகர். சென்னை-6000017.
3. தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், 6/161 தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005.
4. முனைவர் சு. ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி-2.
(குறிப்பு: பார்வை நூல்களில் நூல்களின் பதிப்பு, ஆண்டு குறிப்பிடுவது மேலும் சிறப்பாக இருக்கும்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.