செவ்விலக்கியத்தில் நிலமும் நீரும்
முனைவர் த. மகாலெட்சுமி
முனைவர் பட்ட மேலாய்வாளர் (யு.ஜி.சி.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113
முன்னுரை
அகன்ற பூவுலகில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் ஐம்பூதங்கள் இன்றியமையாதவையாக உள்ளன. இவற்றுள் நீரின் பயன்பாடு அளப்பரியது. உலகம் நீரால் இயங்குகிறது என்றால் மிகை இல்லை. உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீதமும், மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதமாகவும், குடிநீர் கிடைக்கும் அளவில் வெறும் 4 சதவீதமும் உள்ளது. தமிழகத்தில் 17 ஆற்றுப்பகுதிகள், 127 உபவடிநிலங்கள், 40 ஆயிரம் கண்மாய்கள், 35 லட்சம் கிணறுகள் உள்ளன. இருப்பினும், இங்குத் தண்ணீர் தேவை அதிகளவு இருப்பதால், பாசன நீர்ப்பற்றாகுறை மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது. தண்ணீருக்காக இந்திய மாநிலங்களுக்கிடையே பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. பழங்காலத்திலேயே நீரின் முக்கியத்துவம் அறிந்த திருவள்ளுவர்,
“நீர்இன்று அமையாது உலகுஎனில் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு” (குறள்.20)
என்று நயம்பட எடுத்துக்காட்டியுள்ளார். காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித குலத்தை நாகரிகமாக மாற்றிய பெருமை நீர்நிலைகளுக்கே உரியது. பண்டைத் தமிழர்கள் நீர்ப்பாசனத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருக்கிறார்கள். குமரிக்கண்டத்திலிருந்து தொடங்கும் தமிழர் வாழ்வியல் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இத்தொன்மைக்காலம் முதலே தமிழர்கள் ஆற்று நீரையும் மழை நீரையும் வேளாண்மைக்கும் பிற தேவைகளுக்கும் நன்கு பயன்படுத்தி வந்ததைச் செவ்விலக்கியத்தில் நிலமும் நீரும் என்ற பொருண்மையில் சுருக்கமாக ஆராய்வோம்.
ஐவகை நிலங்கள்
தொல்தமிழர் பகுத்த நிலப்பாகுபாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்நிலமும் அடங்கும். இவ்வைந்து நிலப்பகுதிகளிலும் நீர்நிலைகள் காணப்பட்டன. அவை: அருவி, ஆறு, குளம், ஏரி, கிணறு, குட்டை, சுனை, பொய்கை, கடல் போன்ற நீர்நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1. குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். இந்நிலத்தின் புன்செய் பயிரிடும் நிலத்தைத் துடவை என்று அழைத்தனர்.
பெரும்பாணாற்றுப்படை - 201
மலைபடுகடாம் - 122
குறுந்தொகை - 105:1, 130:5, 192:4
மரங்களை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய புனத்தை ‘இதை’ என்றும் பழமையான விளைநிலத்தை ‘முதை புனம்’ என்றும் அழைத்தனர்.
மதுரைக்காஞ்சி - 79. 376, 539
பரிபாடல் - 10, 53
அகநானூறு - 140:11, 394:3
நற்றிணை - 389:9
குறுந்தொகை - 204:3
அகநானூறு - 88:1, 262:1, 359:4, 393:4
மலையின் வழியே துள்ளிக்குதித்து ஓடிவரும் அருவிநீரில் தினை பயிரிடப்பட்டமையை,
“கொய்ய முன்னுகுங் குரல்வார்பு தினையே
அருவியான்ற பைங்கால் தோறும்
இருவி தோன்றின பலவே” (அகம்.28)
என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. குறிஞ்சி நிலத்தில் ஓடிவருகின்ற கான்யாற்றுக் கரையோரம் பொழில்கள் நிறைந்திருப்பதை,
“அணிமுலைத் துயல் வரூஉம் ஆரம்போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கோல்கரை நறும் பொழில் …” (சிறுபாண்.2-4)
என்னும் பாடலடிகள் எடுத்துரைப்பதைக் காணலாம். மேலும் குறுந்தொகைப் பாடலொன்றில்,
“கலிழை கெழீஇய கான்யாற்று இடுகரை
ஒலிநெடும் பீலி துயல்வர இயலி
ஆடுமயில் அகவும் நாடன்” (குறுந்.264:1-3)
என்று கூறும் கபிலர் ‘கான்யாற்று வழியாக மழைநீர் பெறப்பட்டது’ என்பதை விளக்குகிறார்.
2. முல்லை நிலம்
முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமுமாகும். முல்லை நிலத்தில் தரிசான நிலத்தைக் கொல்லை எனவும், மரங்கள் அடர்ந்த பகுதியை புறவு, கானம், பாட்டம், தோட்டம் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
இந்த முல்லை நிலத்தைக் குறிக்கச் சங்க இலக்கியங்களில் காடு, கானம், குறும்பொறை, கொள்ளை, செந்நிலம், செஞ்சுவல், புறவு, புனம், புன்புலம், மென்புலம், முரம்பு, வன்புலம் போன்ற பிற பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என வி.சி. சசிவல்லி குறிப்பிடுகிறார். (வி.சி. சசிவல்லி, முல்லை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.) செவ்விலக்கியங்களில் கொல்லை என்னும் சொல் 13 இடங்களிலும் பயின்று வந்துள்ளது. இவை அனைத்தும் முல்லை நிலத்தைக் குறிக்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. காட்டுநிலத்தில் மழை பொழிந்ததும் உழவுச் செய்ததை,
“நீலத்தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலந்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தே ருழவர் இன்குர லியம்ப” (அகம்.314:1-4)
என்ற பாடல் எடுத்துச் சொல்கிறது.
3. மருத நிலம்
மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமுமாகும். இந்நிலம் நீர்ப்பாசனம் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. கழனி, பழனம், வயல், சேறு போன்ற சொற்கள் இந்நிலத்தைக் குறிக்கும் சொற்களாகும். கழனி என்பது சேற்று வயலையும் பழனம் என்பது நெல்வயலையும் குறிக்கும்.
செவ்விலக்கியங்களில் கழனி என்ற சொல் 67 இடங்களிலும், பழனம் என்ற சொல் 16 இடங்களிலும், வயல் என்ற சொல் 52 இடங்களிலும் பயின்று வருகின்றன. இவை அனைத்தும் மருதநிலத்தைக் குறிக்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. கருங்குழலாதனார் பாடிய புறநானூற்றுப் பாடலொன்றில் கரிகாற்பெருவளத்தானைப் பாடும்போது,
“தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்”
(புறம்.7:11-12)
எனப் பாடியதில் ‘மண்ணால் கட்டிய அணை தாங்காத வெள்ளத்தை மீன்களால் அடைக்கும் மீன்வளம் பொருந்திய காவிரி நாடனே’ என்று சுட்டுகிறார். மருதநிலத்தில் கோடைகாலத்தின்போது நீர்நிலைகள் வறண்டு போவதால் மழைக்காலத்திலேயே குளத்தை நிறைத்து வைத்துப் பயன்படுத்தினர். இதனை,
“கோடை நீடினுங் குறைபட லறியாத்
தோடாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி வலைஞர் குடி”
(பெரும்.272-274)
என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. புதிதாகத் தோண்டி நீர்நிலை உருவாக்கக் காலதாமதம் ஏற்படும். அதனால் இயற்கையிலேயே அமைந்த நிலங்களில் நீரைத் தேக்கித் தருமாறு ஆழ்வாரிடம் முறையிட்ட செய்தியைக் குடபுலவியனார்,
“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரின்
உடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புலன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் தாட்குத வாதே யதனால்
அடுப்போர்ச் செழிய விகழாது வல்லே
நிலனொளி மருங்கி னீர்நிலைப் பெருகத்
தட்டோ ரம்ப விவட்டட்டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே”
(புறம்.18:18-30)
என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும்போது குறிப்பிட்டுச் செல்கிறார்.
பதிற்றுப்பத்து (28:30) மண்ணாலும் வைக்கோல் புரியாலும் அணைகட்டிய செய்தியை எடுத்துக்கூறுகிறது. மேலும் பாலைக் கவுதமனார்,
“வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும்
பலசூழ் பதப்ப பரிய வெள்ளத்துச்
சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம்
முழவிமிழ்மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்”
(பதிற்.30:17-20)
எனப் பாடியுள்ளார். இதில் ‘தண்ணீரைத் தேக்கி அணைகட்டிய செய்தி’ வெளிப்படுகிறது. பண்டைக்காலத்தில் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் உறுதியுடன் இருப்பது அக்கால அறிவியல் தொழில்நுட்பத்தை விளக்குவதாக அமைந்துள்ளது. அக்காலத்தில் நீரோடைகள் மற்றும் நீர்நிலைகளைக் கடக்க விளைந்த வேழங்கரும்புகளைக் கொண்டு புனைசெய்து போட்டு அதன்வழி பயணித்தச் செய்தியை,
“நட்பே
கொழுகோல் வேழத்துப் புணைதுணையாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே”
(அகம்.186: 7-9)
என்னும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன.
4. நெய்தல் நிலம்
நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த இடமுமாகும். மழை பொழிந்தால் இந்நிலத்தில் நெல்விளையும் மழை பொழியாவிட்டால் உப்பு விளையும் என்பதை நற்றிணையில்,
“பெயினே, விடுமான் உளையின் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணர்அஃதே
வறப்பின் மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள்உப்பு விளையும்” (நற்.311:1-4)
என்ற பாடலடிகள் உணர்த்தக் காணலாம். இந்நிலப்பகுதிகள் அடைகரை, எக்கர், பரப்பு, கழி, கானம் எனக் குறிப்பிடுகின்றன. இவற்றுள் எக்கர் என்பது 54 இடங்களிலும், பரப்பு என்பது 64 இடங்களிலும், கழி என்பது 171 இடங்களிலும், கானம் என்பது 130 இடங்களிலும் இடம் பெற்றுள்ளன.
உப்பை விற்று அதற்கு ஈடாக நெல்லினைப் (பண்டமாற்றாக) பெற்று வந்த படகுகளை உப்பங்கழியில் தறிகளில் கட்டியிருந்த செய்தியை,
“வெள்ளையுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியினணை முதற் பிணிக்கும்
கழிசூழ்ப் படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவிற் பூந்தண்டலை” (பட்டின.28-32)
என்ற பாடல் சுட்டுகிறது. நெய்தல் சார்ந்த கழிமுகத்திலும் பொய்கையிலும் நீரால் பயிடச் செய்தாலும் கடல்வளமே பெரிதும் பேணப்பட்டிருந்ததை,
“தொறுத்த வயலில் ஆரல் பிறழ்நவும்
ஏறுபொருதசெறு உழாறு வித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கள் எருமை நிரை தடுக்குநவும்
கலிகெழு துணங்கையாடிய மருங்கின்
புனல்வாயில் பூம்பொய்கை
பாடல் சான்ற பயங்கெழு வைப்பு” (பதிற்.13:1-9)
என்னும் பாடல் தெரிவிக்கிறது. மற்றொரு பாடலில் அரிசில்கிழார்,
“பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும்
பண்ணிய விலைஞர் போலப் புண்ணோரீஇ” (பதிற்.76:4-6)
எனப் பாடுகிறார். இதனால் ‘கடல் வணிகர் விலைஞர்’ என்று அழைக்கப்பட்டமையை அறியலாம். காற்றுவீசும் திசையில் ஓடும் பாய்மரக்கப்பலில் வணிகர்கள் பயணம் செய்ததை நற்றிணையின் 363ஆவது பாடல் எடுத்துரைக்கிறது. உலோச்சனார் என்னும் புலவர்,
“கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத்
தெண்கடல் நாட்டுச் செல்வன் யானென”(நற்.363:1-3)
என்று பாடுவதினால் உப்பங்கழி வழியாக வணிகமும் போக்குவரத்தும் நடைபெற்றமை வெளிப்படுகிறது. இந்நிலத்தில் உப்பு விளைவித்தல், கடல்வழி வணிகம், மீன்வளம் பெறுதல், மழைக்காலத்தில் பயிர்செய்தல் போன்றவை நீர்வளப் பயன்பாடாக அமைந்துள்ளன.
5. பாலை நிலம்
பாலை என்பது மணலும் மணல் சார்ந்த இடமுமாகும். இதனைச் சுரமும் சுரஞ் சார்ந்த நிலம் என்றும் அழைப்பர். ‘பாலை எனும் படிவம் கொள்ளும்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பொதுவாக இவ்வகை நிலங்களையும் அவற்றின் மண்வளம், நீர்வளம், ஆகியவற்றின் அடிப்படையில் வன்புலம், மென்புலம், விடுநிலம் என வகைப்படுத்தலாம். மண்வளமும், நீர்வளமும் குறைந்த பகுதியை வன்புலம் எனவும், மண்வளமும் நீர்வளமும் நிறைந்த பகுதியை மென்புலம் எனவும், விதையை விதைத்துவிட்டு மழையை எதிர்பார்த்து வறண்டு காணப்படும் நிலங்களைப் புன்புலம் எனவும், கால்நடைகளின் மேய்ச்சலுக்குரிய பயிட முடியாத நிலங்களை ‘விடுநிலம்’ எனவும் அழைத்தனர்.
“தொண்டி ஆமூர்ச்சாத்தனார் அகநானூற்றில் ‘உமணர் வணிகத்தின் பொருட்டுச் சென்ற பாலை நிலத்தில் தீமூட்டி சுனை நீர்ப்பெய்து உணவுச் சமைத்துண்டதை,
“புலிதொலைந்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோட் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்
கடல்வினை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்று உலைக் கூட்டும்
சுரம்பல கடந்த நம்வயின்” (அகம்.169:3-8)
என்னும் பாடல் அறிவிக்கிறது. பாலையின் களர்நிலத்தில் ஊறும் உவர்நீர் ஆடையில் உள்ள அழுக்கினைப் போக்கும் தன்மையுடையது என அறிந்திருந்த செய்தியை அகம்.387:5-8 பாடலின் வழி அறியலாம். உவர்நீர்ப் பயன்பாட்டை மாங்குடி மருதனார்,
“ஊமுறு விளைநெற்று உதிரக் காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய” (அகம்.89:7-8)
“களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை” (புறம்.311:1-2)
என்னும் பாடலினால் எடுத்துரைக்கிறார்.
செவ்விலக்கியத்தில் பாலைநிலத்தில் வற்றிவரும் சுனை பற்றிப் பல பதிவுகள் காணக்கிடக்கின்றன.
“சுனைவாய்ச் சிறுநீரை எய்யாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டி கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம்” (ஐந்திணை ஐம்பது,38)
மேலும் நீரைப் பாய்ச்சுதல் களையெடுத்தல், விதைவிதைத்தல், நாற்றுநடுதல், உழவுசெய்தல், அறுவடை செய்தல் எனப் பல்வகையிலும் அறிவியல் உணர்வைப் பெற்றுச் சிறந்து விளங்கியதற்கான சான்றுகளும் செவ்விலக்கியத்தில் நிறைந்து அணிசெய்கின்றன.
பண்டைய தமிழ் மன்னர்களின் பெயர்களில் ஏரிகளும் குளங்களும் வட்டாரத் தலைவர்களின் பெயர்களில் கிணறுகளும் இருப்பது நீர்நிலை மரபுசார்ந்த அறிவுத்தொடர்புடையது எனலாம். மன்னர்களால் கல், மண், சுண்ணாம்புக்காரை போன்றவற்றால் கட்டிய அணைகள் இன்றும் உறுதியுடன் இருப்பது அவர்களின் நீர்ப்பயன்பாட்டில் கொண்ட அக்கறையை வெளிப்படுத்துகிறது. உதாரணமாகக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கல்லால் காவிரியின் குறுக்கே கரிகாற் சோழன் கட்டிய கல்லணையும், சின்னக் கல்லணையும் (வெண்ணாற்றில் குறுக்கே கச்சமங்கலத்தில் கட்டிய தடுப்பணை) இன்றும் நீர்ப்பகிர்வு பயன்பாட்டிற்குப் பயன்பட்டு வருவது சுட்டத்தக்க அம்சமாகும்.
முடிவுரை
இக்கட்டுரை வழி பண்டைத் தமிழர்கள் ஐந்நிலத்திலும் நீரை நன்குப் பயன்படுத்தி பல்வேறு நுட்பங்களைக் கையாண்டதும் அவர்களின் தொழில் சார்ந்த மேம்பாட்டிற்கும் நாகரிக மாற்றத்திற்கும் நிலநீர் உறுதுணையாக அமைந்தமையும் வெளிப்பட்டு நிற்கின்றன. மேலும் நீர் மேலாண்மை பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்பிற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் இன்றைய வறட்சியினால் குடிநீருக்கும், வீட்டுத் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளிலும் மாபெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கான நிரந்தரத் தீர்வை காண்பது மிகவும் அவசியமானது. நீர் சேமிப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து குளங்களையும், குட்டைகளையும், கண்மாய்களையும், ஊருணிகளையும் தூர் எடுக்கவும், ஆழப்படுத்தவும் வேண்டும். சமீப காலத்தில் ஏற்பட்ட ஆற்றுநீர்ப் பகிர்வுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஆறுகள் தேசியமாக்கப்பட வேண்டும். இந்திய நதிகளை இணைத்தல் வேண்டும். இச்சூழலில் நாமும் நிலத்தடி நீரையும் மேற்பரப்பு நீரையும் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் சேமிக்க உதவுவோம்.
துணைநூற்கள்
1. தட்சிணாமூர்த்தி.அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, அண்ணாநகர், சென்னை. (1980)
2. காந்தி. க., தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. (1980)
3. வையாபுரிப்பிள்ள. ச., சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரி நிலையம், சென்னை. (1967)
4. சுப்பிரமணியன்.ந., சங்க கால வாழ்வியல், நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை. (1986)
5. சாமிநாதையர். உ. வே., பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கியருரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (1961)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.