Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்தமிழரின் விழா மரபுகள்

முனைவர் ம. தமிழ்வாணன்
முதுநிலை ஆய்வு வல்லுநர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை - 113


முன்னுரை

பொதுவாக விழாக்கள் என்றாலே மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது. தொல்தமிழர்கள் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்த செய்திகள் செவ்விலக்கியங்களில் ஆங்காங்கே காணக்கிடக்கின்றன. அவை சமூகம் மற்றும் சமயம் தொடர்பானவையாகக் காணப்படுகின்றன. அவை இடம், பழக்க வழக்கங்கள், சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கொண்டாடப்பட்டன. இத்தகைய விழாக்களில் அலங்காரமும் ஆடலும் பாடலும் இடம் பெற்றுச் சிறப்புச் செய்தன. பாணரும் கூத்தரும் இடம்பெற்று ஆடியும் பாடியும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்தனர். இவை போன்ற பல்வகை விழாச் செய்திகளைச் சிறப்பு நிலையில் செவ்விலக்கியத்தின் வழி எடுத்துச் சொல்ல வருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது விழாக்கள்

பொதுமக்களின் வாழ்வு பல்வேறு சூழல்களை உடையது. இவர்களுக்குச் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். சமூகத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்ககாலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. “விழவுமேம் பட்ட பழவிறல் மூதூர்” (பெரும்.411) என்று சிறப்பிக்கப்பட்டுள்ளன. விழாக்காலங்களில் பெரியோர் முதல் சிறியோர் வரை மகிழ்ச்சிக் கடலில் வீழ்ந்திருப்பர்.

விழாக் கொண்டாடும் மரபுகள்

தொல்தமிழர் நற்காரியங்களான விழாக்களைக் குறிப்பிட்ட நல்ல நாளில் திட்டமிட்டுக் கொண்டாடினர். இதற்குச் சான்றாக நக்கீரரின்,

“மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,
அறுமீன் சேறும் அகலிருள் நடுநாள்;
மறுகுவிளக்கு உறுத்து மாலை தூக்கி,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம”(அகம்.141:6-11)

என வரும் பாடலில் வளர்பிறை மற்றும் முழுமதி நாட்களில் தொடங்கியமையைக் கூறலாம்.

விழாவின்போது நடைபெறும் செயல்முறைகள் மேற்கொள்வோரை விழாவாற்றுவோர் என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சொல்லப்படுகிறான். தொன்மைக் காலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்து வந்ததை,

‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலைமன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்.293:1-4)

என்ற பாடல் வெளிப்படுத்துகிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைத் தொல்மரபின் தாக்கம் எனக் கருதலாம். மேலும் நற்றிணை விழாவின் அறிவிப்பாளராகக் குயவர்கள் விளங்கியதையும் உணர்த்தி நிற்கிறது.


திருப்பரங்குன்ற விழா

தமிழ்க்கடவுளாகப் போற்றப்படும் முருகன் குறமகள் வள்ளியை மணம் முடித்ததை மணவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை,

“நிலவரை அழுவத்தான் வானுரை புகல்தந்து
புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து
அருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இருநிலத்தோரும் இயைக! என ஈத்தநின்
தண்பரங் குன்றத்து இயலணி நின்மருங்கு
சாறுகொள் துறக்கத் தவளொடு
மாறுகொள் வதுபோலும் மயிற்கொடி வதுவை” (பரி.19:1-7)

என்ற பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. இவ்விழாவில் பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு கலந்து கொண்டமையை அறிகிறோம்.

கார்த்திகை விழா

தமிழர் கொண்டாடும் கார்த்திகை விழாவின் போது இல்லங்களும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் மிளிர்கின்ற செய்தியை அகநானூறு 141ஆம் பாடல் விரிவாக எடுத்துரைக்கிறது. தொல்தமிழர் கொண்டாடிய சமய விழாக்களில் கார்த்திகைத் திருவிழாவும் ஒன்று. கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைப் பாடலொன்று சுட்டுகின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது. இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெருவிழாவில் ஏற்றப்பட்ட விளக்குப் போல் தோன்றியதாக நற்றிணையின்,

‘‘அருவி யான்ற உயர்சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில் மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே’’ (அகம்.185:10-13)

என்ற பாடல் எடுத்துரைக்கிறது.

திருவோண விழா

முப்பெரும் கடவுள்களில் ஒருவரான திருமாலோடு தொடர்புடைய நட்சத்திரம் (விண்மீன்) திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓணம் ஆகும். இச்செய்தியை,

‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக். 590-591)

என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. இந்நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பண்டிகையானது பிற்காலத்தில் சேரநாடான கேரள மாநிலத்து வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவாக மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.

தமிழர் திருநாள் (தைப்பொங்கல்)

பண்டைத் தமிழர்கள் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காகப் பூமி, பகலவன், உதவிய கால்நடை போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

தைப்பொங்கல் தை முதல் நாள் அன்று தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன்னரேக் கொண்டாட்ட வெடிகள் வெடிக்கத் தொடங்கி விடும். பொங்கலுக்குத் தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதி படைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றிக் கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று ”பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி மகிழ்வர். முதலில் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாகத் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.


காவிரிச் சமவெளியில் இப்பண்டிகை காலத்தில் புதுமணத் தம்பதியரின் தலைப்பொங்கலுக்கு முன் 3, 5, 7 எனும் ஒற்றைப்படை நாளில் தலைச்சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறும். மேலும் திருமணமான சகோதரிக்கு உடன்பிறந்த சகோதரன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் சீர் கொடுக்க வேண்டும் என்பது மரபாக உள்ளது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றிய செய்தியை,

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” (நற்.80:7)

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்.196:4)

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” (புறம்.70.6)

“தைஇத் திங்கள் தண்கயம் போல” (ஐங்.84:4)

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” (கலித்.59:13)

என்னும் பாடலடிகளால் அறியலாம்.

பாவை வழிபாடு

தமிழர் வாழ்வில் பாவை வழிபாடு ஓர் குறிப்பிடத்தக்க விழாமரபை உடையதாகும். இவ்விழா, தைத்திங்களில் கொண்டாடப்படுவது வழக்கம். தைத்திங்களில் குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழிகிய நெறியினையுடைய மகளிர் நீர், உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இந்நிகழ்வே பண்டைய பாவை வழிபாடு எனப்பட்டது. இவ்வழிபாடு பிற்காலத்தில் பாவை வழிபாடு, பாவை நோன்பு என்று மாறியது. திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய பக்தி இலக்கியங்கள் கூட இவை சார்ந்து தோன்றியவை ஆகும். இச்செய்தியை மதுரை மருதன் இளநாகனார்என்ற புலவர்,

‘‘தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்” (அகம்.269:14)

‘‘வண்டற் பாவை உணர்துறைத் தரீஇத்
திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகம்.269:19-20)

என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

மாட்டுப்பொங்கல் விழா

தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை மாட்டுப் பொங்கலாகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் சல், சல் சலங்கைக்கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி, குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக் கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பூலத் தட்டுகளில் தோட்டம், காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூசைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி, கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்துக் கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கிராமத்தினர் ஒன்று கூடி மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டுவர். அப்போது ‘கோவிந்தா’ என்று உரக்க கூச்சலிடுவர். கூடவே, பறை அடிப்பதும் உண்டு. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.


உழவர் திருநாள்

தை மாதம் மூன்றாம் நாள், உழவர் திருநாளான அன்று சீறிப்பாயும் காளைகளை அலங்காரம் செய்து வாலிபர்கள் காளையை அடக்கும் விழா சிறப்பானது. அப்போது பறை அடித்து மாடு திறக்கின்றனர். மகளிர் முறைமாமன்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றுவதும் வழக்கமாக உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளைப் பாடிய பாரதிதாசன்,

“ஏரோட்டும் இருதோல் - ஒரு
சீர் போற்றும் திருநாள்
ஆ ரோடும் உண்ணும் நெல்
அறுவடை செய் பெருநாள்
மாடுகளும் கன்றுகளும்
வாழியவே என்று
பாடுகின்ற நன்னாள்! கொண்
டாடுகின்ற பொன்னாள்” (பாரதிதாசன், தேனருவி, ப.25)

என்று இனிமையாகப் பாடினார். இத்திருநாள் காவிரிச் சமவெளியில் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளில் இளம் காளையர்கள் தங்களது வீரத்தைக் காட்டும் தகுந்த நாளாக உள்ளது. கண்ணதாசன் காளை அடக்குதலைப் பாடியபோது,

“அண்ணாச்சி வேட்டி கட்டும ஆம்பளையா நீங்க
யாராச்சும் ரோசமிருந்தா மாட்டுப் பக்கம் போங்க
தங்கத்தால் நெத்திப்பொட்டு கொம்புக்கு கட்டியிருக்கு
சிங்கப்பூர் சரிகைப்பட்டு செவலைக்கு சுத்தியிருக்கு”

என்று பாடினார். இப்பாடல் அழகுபடுத்திய முரட்டுக் காளையை அடக்க வீரமான ஆண்மகனை அழைப்பதாக உள்ளது.

காவிரிச் சமவெளியில் சில ஊர்களில் மாட்டு வேடிக்கை (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. பல ஊரிலிலிருந்து முரட்டுக் காளைகள் வரவழைக்கப்பட்டு அடைத்துவிடுகின்றனர். அப்போது துணிச்சலான இளம் வாலிபர்கள் காளையை அடக்க முயல்வர். பேறு பெற்ற காளையை அடக்குபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூரில் மிகச் சிறப்பாக நடைபெறினும் அது போன்ற வேடிக்கைகள் காவிரிச் சமவெளிப் பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன. இவை காவிரிக் கரையில் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதை இதனால் அறியலாம்.

தைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,

‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ (நற். 22:6-7)

என்ற குறிஞ்சித்திணைப் பாடல் சுட்டுகிறது.இளவேனில் விழா

இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகச் சொல்லப்படுகிறது. வில்லவனுக்குரிய விழாவென்பது காமனை வேண்டிச் செய்யும் விழாவாகும். தலைவியின் ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக் கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி கூறுகின்றாள். இச்செய்தியை,

‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி,
நாம்அமர் காதலர் துணைதந்தார், விரைந்தே’’ (கலித்.27:23-)

என்ற கலித்தொகையின் தோழி கூற்று பாடல் எடுத்துரைக்கிறது. காமவேள் விழாவிலே கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர். இதனை,

‘‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே’’ (கலித்.30:13-14)

மேலும் காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடும் செய்தியை.

‘‘மல்கிய துருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்;
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’ (கலித்.35:13-14)

என்ற கலித்தொகைப் பாடல் விளக்குகிறது.

இந்திர விழா

இந்திரவிழா சோழநாட்டுப் புகாருடன் தொடர்புடையதாக அறிகிறோம். இருப்பினும் இவ்விழா மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இந்திரனைப் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் குறைவாகவேக் காணப்படுகின்றன. புறநானூற்றில்,

“வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க” (புறம்.241:3-4)

என்று சுட்டப்பட்டுள்ளது. ஐங்குறுநூற்றில்,

“இந்திரவிழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

என்று உவமையாகக் கூறப்படும் அளவுக்கு இந்திரவிழா பேறு பெற்றிருந்தது. இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திரவிழா ஓர் அரசாங்க விழாவாகவே கொண்டாடிய செய்திகளை வெளிப்படுத்துகின்றன. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக் கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலையின் விழாவறைகாதை விளக்குகின்றது. இதனை,

“உலகம் திரியா ஓங்கு உயர் விழுச்சீர்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந்தவன் உரைப்ப
தூங்கு எயில் எரிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
மண்ணகத்து என்-தன் வான் பதி-தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நால் - ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக என” (மணி.விழாவறைகாதை.1-8)

என்று தொடங்கும் பாடலடிகள் எடுத்துரைக்கின்றன. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன் என்பவன் இவ்விழாவினைத் தொடங்கினான் என அறியப்படுகிறது.

பங்குனி விழா

தமிழகத்தில் பங்குனி மாதம் முழுவதும் விழாக்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த அளவு முக்கியத்துவம் பெற்ற விழாக்காலமாகும். பழங்காலத்துச் சோழநாட்டின் உறையூரில் பங்குனி விழா சிறப்பாக நடந்தேறிய செய்தியை உறையூர் முதுகூத்தனார்,

‘‘வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடும் கள்ளின் உறையூ ராங்கண்
வருபுனல் நெரிதரும் இடுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தன்பொழில்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்’’ (அகம்.137:5-9)

என்று நயம்படச் சுட்டிக்காட்டுகிறார்.

புனலாட்டு விழா

வான்மழை பொழிந்து நீண்ட ஆற்றில் நீரோட்டம் ஏற்பட, அதில் நீராடி வழிபடுவதே புனலாட்டு விழா என்பர். தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நீரை வாழ்த்தி, வழிபடுவது வளமை வேண்டிச் செய்யப்பட்ட செயலாகக் கருதலாம். ஆற்றில் புனலாடியதைப் பரிபாடலும் “நீரணி காண்போர் நிரைமாடம் ஊர்குவோர்” (பரி.10:27) கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் “தீது நீங்கக் கடலாடியும்” (பட்டி.99) சுட்டுகின்றன. மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். தொன்மைக்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டமையை அகநானூற்றுப் பாடல்கள் 222, 376 எடுத்துக்காட்டுகின்றன. சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடியதை வெளிப்படுத்துகின்றன.

வையை ஆற்றைப் பாடிய நல்லந்துவனார் பறையறிவித்துப் புனலாடியதைப் பரிபாடலில்,

“ஊரூர் பரையொலிகொண்டன்று உயர்மதிலில்
நீரூர் அரவத்தால் துயில் உண்ர்பு எழீஇ” (பரி.20:14-15.)

என்று குறிப்பிடுவதைக் காணலாம். மேலும் பெண்கள் பொன்னாலான சங்கு, நண்டு, வாளை முதலியவற்றைப் புதுப்புனலில் இட்டு வேண்டியதை,

“நத்தொடு, நள்ளி, நடையிறவு, வயவாளை,
வித்தி அலையில், விளைக! பொழிக! என்பார்” (பரி.10: 85-86)

காவிரி வெள்ளத்தில் நீராடும் போது ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டதை அகநானூற்றின் 45ஆம் பாடல் எடுத்துரைக்கிறது.

திருப்பதியில் விழா

திருமாலின் குன்றாகப் போற்றப்படும் திருவேங்கட மலையில் பெருமாளுக்கு விழாக்கள் எடுக்கப்பட்டன. இத்தலத்தில் திருமாலின் நின்ற கோலம் சிறப்பிற்குரியது. இங்குள்ள நெடியோனைப் பாராட்டிய மாமூலனார்,

‘‘விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’’ (அகம்.61:13)

என்று பாடியதை அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.உள்ளி விழா

இவ்விழா கொங்கர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வுள்ளி விழாவைப் பற்றி மதுரை மருதன் இளநாகனார்,

‘‘அம்பனை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர்
வெண்கொல் வாழிதோழி கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலராகின்றது பலர் வாய்ப் பட்டே’’ (அகம்.368:14-19)

என்று குறிப்பிடுகிறார். இதனால் கொங்கர்கள் இடுப்பைச் சுற்றிலும் மணியைக் கட்டிக்கொண்டு தெருவில் ஆடிய செய்தி வெளிப்படுகிறது.

கடலன்னை வழிபாடு

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் வாழும் பரதவ மக்கள் மீன் பிடித்தும், உப்பு விற்றும் தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். இவர்களுடைய வாழ்க்கை கடலை நம்பியே இருந்தமையால் இவர்கள் அக்கடலையே கண்கண்ட தெய்வமாக எண்ணி வழிபடலாயினர். இந்நில மகளிர்கள் தங்கள் ஆடவர்கள் நடுக்கடலுக்குச் சென்று மீன்பிடித்துப் பாதுகாப்பாக ஆபத்தில்லாமல் விரைவில் அவர்கள் மீன்களோடு வீடு திரும்ப வேண்டும் என்று கடலையேப் பெண்தெய்வமாகக் கருதி வழிபட்டு ஆடவர்கள் வீடு திரும்பும் வரை காத்திருப்பர். தொல்தமிழகத்தில் கடலன்னை வழிபாடு இருந்ததைப் பாலைத்திணைப் பாடலில் மாமூலனார்,

‘‘பழையர் மகளிர் பனித்துறைப் பரவப்
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு’’ (அகம்.201:7-9)

என்று பாடியுள்ளார். இதனால் பரதவர்களின் தெய்வமான கடலன்னையைப் பெண்கள் அனைவரும் கடற்கரையில் கூடி நின்று வழிபாடு நடத்திய செய்தியை உணரமுடிகிறது.

பிறந்தநாள் விழா

தொல்தமிழகத்திலேயே தமிழர்கள் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர். மன்னர்கள் தமது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இச்செய்தியைத் தொல்காப்பியத்தின் வழி அறிகிறோம்.

‘‘பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்’’ (தொல்.பொருள்.புறத்.36:8)

மேலும் மன்னன் நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சியால் அறியலாம்.

பூந்தொடை விழா

போர்வீரர்களுக்குப் பயிற்சி அவசியமான ஒன்றாகும். இப்பயிற்சித் தொடக்க விழாவினைப் பெருமையோடு கொண்டாடியதைப் பூந்தொடை விழா என்பர். கலைப்பயிற்சிக்குரிய இடத்தை கோர்த்த மாலைகளால் அழகுபடுத்துவர். பயிற்சி மேற்கொள்ள இருக்கும் வீரனையும், அழகுபடுத்துவர். இதனை,

‘‘தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி
வார்கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’ (அகம்.187:6-9)

என்னும் அகப்பாடல் சுட்டுகிறது. பொதுவாக வீரனின் வில்லில் நாணேற்றி இலக்கினைக் குறிபார்த்து எய்யும் விழாவாகப் போற்றப்படுகிறது.

புதுமணல் பரப்புதல்

இல்லறச் சடங்கின் போதும், பொதுவிழாக்களின்போதும் புதுமணல் பரப்பி வைத்தல் மரபாக உள்ளது. அகநானூற்றில் விழாவிற்குப் புதுமணல் பரப்பிய செய்தியை,

‘‘பூந்தொடை விழவின் தலைநாளன்ன
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’’(அகம்.187:8-9)

என்று மாமூலனார் தோழி கூற்றாக எடுத்துக்கூறுகிறார்.கோடியர் விழா

பழங்காலத்தில் ஆடும் கலைஞர்கள் கோடியர் என்று அழைக்கப்பட்டனர். விறலியர் மயில் போல அசைந்தாடும் தோறும் கூத்தருள் முழவினை முழக்கிக் கொண்டு பின்னே செல்வர். இச்செய்தியை,

‘‘… … … … … கோடியர்
விழவுகொள் முதூர் விறலி பின்றை
முழவன் போல்’’ (அகம்.352:4-6)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.

வெறியாட்டு விழா

பழந்தமிழகத்தில் பெருவழக்காக இருந்த விழாக்களில் முதன்மையானது வெறியாட்டு விழாவாகும். தமிழ்க்கடவுளான முருகனுக்கு எடுக்கப்படும் இவ்விழாவில் வேலனாகிய முருகன் கையிலே வேலேந்தி ஆடிவருவான். அப்போது இன்னிசைக் கருவிகள் முழக்கப்படும். தினையரிசியையும் மலர்களையும் தூவிவிடுவர். ஆட்டுக்கிடாயை அறுத்துக் குருதியைக் கீழ்விடுவர். இவ்விழாவினைப் பற்றிய செய்திகளை நக்கீரர்,

‘‘சிறுதினை மலரொடு சிரைஇ மறியறுத்து
வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ
ஊருர் கொண்ட சீர்கெழு விழவினும்’’ (திரு. 218-220)

என்று எடுத்துக்கூறி ஊர்தோறும் இவ்விழாவினைக் கொண்டாடிய செய்தியையும் பதிவு செய்துள்ளார். வெறியாடக்கூடிய இடம் வெறியர் களம் என்பர். காலம் நள்ளிரவு, வேலன் என்று அழைக்கப்படும் தன் பூசாரி மீது முருகன் ஆவியுருவில் புகுந்து குறி சொல்வான் என்று மக்கள் நம்பினர். இச்செய்தியை,

‘‘களம்நன் கிழைத்துக் கண்ணிசூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்’’ (அகம்.22:8-11)

என்ற பாடல் எடுத்துரைப்பதைக் காணலாம். வெறியாட்டின் போதும், பிறவகை விழாக்களின் போதும் இன்னிசைக் கருவிகள் முழங்கக் குதூகலத்துடன்ஆடலும் பாடலும் நிகழ்வது வழக்கமாக இருந்தது. இதற்கு,

‘‘வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவயரு வியலாவணத்து’’ ( பட்டின. 155-158)

என்ற அடிகள் சான்று பகர்கின்றன. பொதுவிழா நடத்தும் பொழுது அதற்கெனக் கொடிகள் பல ஏற்றப்பட்டதுண்டு. இதனை,

‘‘சாறு அயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி’’ (மதுரைக்.366)

எனற அடி குறிப்பிடுகிறது.

பிறை வழிபாடு

தொல்தமிழர்கள் காலம் முதல் தற்காலம் வரை தொடர்ந்து பிறைவழிபாடு நடைபெற்று வருகிறது. இசுலாமியர்களும் வளர்பிறை வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். பழங்காலத்தில் மணமாகாத பெண்கள் தங்களுக்கு மணம் முடிய வேண்டும் என எண்ணிப் பிறையை வணங்கிய விழாவினை எயினந்தை மகன் இளங்கீரனார்,

‘‘ஒள்இழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை யாம்இவண் ஒழிய’’(அகம்.239:9-10)

என்ற அடிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். இதனால் ஒளி மிகுந்த அணிகலன்களை அணிந்த பெண்கள் மாலை நேரங்களில் பிறையினைத் தொழுதமையை அறியலாம்.

முடிவுரை

தொல்தமிழகத்தில் தமிழ்மக்கள் கூடி வாழ்ந்து சுற்றமுடன் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து இன்பத்தில் திளைத்தச் செய்தியை அவர்களின் விழாமரபு உணர்த்தி நிற்கிறது. விழாக்காலங்களில் விருந்தினர்க்கு விருந்து படைத்தும் மகிழ்ந்தனர். தொன்மைக் காலத்திலேயே இவ்வாறு பல்வேறு விழாக்களைக் கொண்டாடிய முறையைப் பார்க்கும் போது அவர்கள் அறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட வாழ்வை வாழ்ந்து பேறுபெற்றமையை நன்கு உணரலாம். இத்தகைய விழாக்களைத் தமிழர்கள் எக்காலத்தில் கொண்டாட ஆரம்பித்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படாதத் தொன்மை நிலை வியக்க வைக்கிறது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு உலகமே காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தமிழினம் மட்டும் பண்பாட்டில் மேம்பட்டு நாகரிகத்தில் சிறந்து விளங்கியமை தமிழராகிய நம்மை இறுமாப்புக்கொள்ள வைக்கிறது. எனவே நாமும் சிறந்த மரபுரிமையான விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்து அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்போமாக...!

துணைநூற்கள்

1. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ), புறனானூறு மூலமும் உரையும், உ.வே.சா நூல் நிலையம், சென்னை.(முதற்பதிப்பு 1894)

2. இராஜகோபாலையங்கார்.வே. (ப.ஆ), அகநானூறு மூலமும் உரையும் (உ.வே.ரா.இராகவையங்கார் சோதித்தது) (1923)

3. சௌரிப்பெருமாளரங்கன் (ப.ஆ), குறுந்தொகை வித்தியாரத்திநாகரம் பிரஸ். (1915)

4. இராகவையங்கார். ரா. (ப.ஆ), பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் (1949)

5. மகாதேவ முதலியார் (ப.ஆ), பொருநராற்றுப்படை லோகநாதன் & பிரதர்ஸ். (1907)

6. சாமிநாதையர். உ. வே. (ப.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை. (1920)

7. தாமோதரம்பிள்ளை சி.வை. (ப.ஆ), தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ், சென்னை. (1885)

8. மீனாட்சிசுந்தரம்பிள்ளை.ஆர். (ப.ஆ), திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும். பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை. (1938)

9. இராகவையங்கார். ரா (ப.ஆ), பெரும்பாணாற்றுப்படை ஆரய்ச்சி உரையும். (1949)

10. கம்பராமாயணம் (பாலகாண்டம் தெளிவுரை விளக்கம்), முதற்பதிப்பு வில்வபதி.கோ, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. (1993)

11. சுப்பிரமணியன் ச. வே. (ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. (2008)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p202.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License