திருமந்திரத்தில் அரசாட்சி
முனைவர் பா. கலையரசி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை
சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர்
முன்னுரை
நாயன்மார்கள் அறுபத்து மூவருள் திருமூலரும் ஒருவர். சித்தர் உலகின் தலைமைச் சித்தராக வாழ்ந்து சைவ நெறியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டவர். பன்னிரு சைவத்திருமுறைகளில் சாத்திர நூலாக விளங்கும் திருமந்திரத்தை இயற்றி, அதன் வாயிலாகப் பல ‘அருளியல் ஒழுக்கங்களை’ தமிழ்ச் சமூகத்திற்கு கற்றுக் கொடுத்தவர். இந்தத் தவ மனிதர் குறிப்பிட்டிருக்கும் ‘அரசாட்சி முறைகளை’ ஆராய்ந்தறிவதையே இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருமந்திரத்தில் அரசாட்சி முறை
திருமூலரின் திருமந்திரம் மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல இயல்புகளைக் குறிப்பிடுகிறது. இறைவனுடைய திருவருளைப் பெற்று வாழ, சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் பல வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கிறது. ஒன்பது தந்திரங்களை உடைய இந்நூலின் முதல் தந்திரத்தில் பெரும்பாலும் பொதுவான இயல்புகளைப் பற்றியே பாடியுள்ளார் திருமூலர். முதல் தந்திரத்தின் ஏழாவது பகுதியாக அமைந்திருப்பது ‘அரசாட்சி முறை’ என்ற தலைப்பாகும் .
அரசியலின் இரண்டு வகை
பொதுவாக அரசியலை,
1. அன்றன்று நிகழக்கூடிய நிகழ்வுகளோடு தொடர்புடைய நடைமுறை அரசியல்.
2. எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான அரசியல்
என இரண்டாகப் பிரிக்கலாம்.
திருக்குறளின் பொருட்பாலில் வள்ளுவர் எடுத்துரைத்திருப்பதும், திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிட்டிருப்பதும் இந்த இரண்டாவது வகை அரசியல் கருத்துக்களே ஆகும். அப்படியானால், இரண்டாவது வகை ‘அரசியல் நூல்களால் விளக்கம் பெறுவது’ என்பது தெளிவு.
திருவள்ளுவர், திருமூலரின் அரசியல் பார்வை
அரசனைப் பற்றிய இலக்கணங்களில் தனி மனிதன் என்ற முறையில் அவனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் ஒருவகை; குடிகளைப் பாதுகாக்கின்ற கடமையை மேற்கொண்ட ஆட்சித்தலைவனுக்கு அமைய வேண்டிய இயல்புகள் ஒரு வகை. இவ்விருவகை இயல்புகளையும் வள்ளுவர் பொருட்பாலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருமூலரோ அரசனிடம் உள்ள மனிதப் பண்பை ஒரு பாட்டிலும், ஆட்சிமுறையை மேற்கொண்ட அவன் செய்ய வேண்டிய கடமைகளை ஒன்பது பாட்டிலும் எடுத்துரைக்கிறார்.
அரசனின் முக்கியத் தகுதி கல்வி
ஒரு அரசன் கல்வியில் சிறந்தவனாக இருந்தால், முதலில் உள்ளம் ஒளிபெறும்; அவன் எண்ணங்கள் ஒளிபெறும். அதனால், அவன் மேற்கொள்ளும் செயல்களால் நாட்டிற்கு நலம் உண்டாகும். இதை உணர்த்த முற்பட்ட திருமூலர்,
“ கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்-ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகநில் லானே” (திருமந்திரம் -95)
என்று குறிப்பிட்டுள்ளார்.
அஃதாவது, நேரடியாக அரசன் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மறைமுகமாக, அரசன் கல்லாமல் இருந்தால் தீங்கு உண்டாகும் என்று சொல்கிறார்.
முதல் அடியில் காலனும், கல்லாத அரசனும் சரிசமமானவர்கள் என்று சொன்னவர், அப்படிச் சொன்னதனால் காலனை அவமதித்ததாக எண்ணிவிட்டார். உடனே, ஓர் திருத்தமொன்றைக் குறிப்பிடுகிறார். ‘கல்லாத அரசனைக் காட்டிலும் காலன் மிகவும் நல்லவன்’ என்று கூறியிருப்பது ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளதாகத் தோன்றினாலும், அதற்கான காரணத்தையும் தொடர்ந்து அடுத்தபடியே விளக்குகிறார்.
காலன் மனம் போனபடி யாரையும் கொல்வதில்லை; யாருடைய விதி முடிகிறதோ அவருடைய உயிரையே ஈர்த்துச் செல்லக் கூடியவன்; யமன் நல்லவர்களை அணுக மாட்டான். ஆனால், கல்லாத அரசன் செங்கோன்மையை விடுத்துக் கொடுங்கோலனாக வாழ்வான். அவனுக்கு எட்டிய அறிவால் அவன் அனைவரையும் துன்புறுத்துவான். ஆதலால், அவன் காலனை விடக் கொடியவன் என்கிறார் திருமூலர். திருவள்ளுவரும் ‘கல்வி’ அதிகாரத்தை அரசியலில் வைத்துள்ளமை இவ்விடத்து ஒப்பிடற்குரியது.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”(திருக்குறள் -396)
அரசனின் மிக முக்கியக் கடமை
அரசனுடைய கடமைகளில் மிகவும் முக்கியமானதாகத் திருமூலர்,
1. மக்கள் கடவுளை மறவாமல் வாழும்படி வேண்டியவற்றைச் செய்வது.
2. நாட்டில் தவ முனிவர்கள் ஒரு குறையும் இல்லாமல் வாழ வகை செய்வது
போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.
மக்கள் பலருக்கும் நலம் உண்டாக, நாட்டில் தவநெறி வாழவேண்டும். அதற்கு அரணாக அரசன் இருக்க வேண்டும். இராமனைப் பெற்ற தசரதச் சக்கரவர்த்தி வசிட்டருடைய அறிவுரையைக் கேட்டு வாழ்ந்தமை இவ்விடத்து நினைவுக் கொள்ளத்தக்கது.
அதே சமயத்தில், ‘உண்மையான தவம் உடையவர்கள் இன்னார்’ என்பதை இனங்கண்டு மன்னனும், மக்களும் பயன்பெறுவது அவசியம் என அறிவுறுத்தும் திருமூலர்,
“நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி யவன்நெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே”
(திருமந்திரம்-96)
என்று அரசனின் செல்வம் குறைவதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார்.
“அரசனின் குடைநிழல் மக்களுக்குக் குளிர்ச்சி உடையதாய் இருக்க வேண்டும்”
(நற்றிணை -146)
என்று சங்க இலக்கிய நூலாகிய நற்றிணை நவில்வதும் இவ்விடத்து ஆராய்தற்குரியது.
போலி வேடதாரிகளின் வேடத்தை பழிப்பது முறையல்ல
தவ வேடம் பூண்டவர்கள் அதற்கு ஏற்றபடி ஒழுக்கத்தில் சிறந்து வாழாவிட்டால் அத்தகைய போலிகளைக் கண்டு வேடத்தையேப் பலர் பழிக்கிறார்கள். இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்கிறார் திருமூலர். வேடம் நல்லவர்களை அடையாளங் காட்டவும், தன்னை ஏற்றவர்களுக்குரிய கடமைகளை நிலைநிறுத்தவும் உதவுவது. ஆதலால், அரசன் போலி வேடதாரிகளைத் திருத்தி வேடத்திற்கு ஏற்ற நெறியில் வைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இத்திருமூலஞானி. இதனை,
“வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்
வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடது வாகுமே” (திருமந்திரம் - 97)
எனத் தெளிவுபடுத்துகிறது திருமந்திரம். சேரமான் பெருமாள் நாயனார் உவர் மண்ணால் நனைந்து போய் நின்ற வண்ணான் ஒருவனைப் பார்த்து ‘சிவனடியாரோ?’ என்று வணங்கிய வரலாற்றினை இவ்விடத்து ஒப்பு நோக்குவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அரசனுக்கான அறநெறிகள்
மன்னர், வேந்தர் இவர்களுக்கு மேற்பட்டு உருவாகக் கூடியதையே ‘அரசு’ என்பர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறனை மருதனிள நாகனார்,
“வேந்து மேம்பட்ட பூந்தார் மாறனே! யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நால்வகைப் படைகளுடன் அரசு சிறப்புற்றதாக இருந்தாலும் ஆட்சியில் பின்பற்றப் பெறும் அறநெறியால் தான் சிறப்புறும்” (புறநானூறு-55)
எனக் குறிப்பிடுகிறார். அத்தகைய அரிய அறநெறிகளைத் திருமூலர் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வதிகாரத்தில் விளக்கியுள்ளார். அவையாவன,
1. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்
2. மகளிரைக் காப்பாற்ற வேண்டும்.
3. அறவோர்க்குத் தீங்கு வராமல் அரண் செய்ய வேண்டும்.
4. சிவ வேடம் உடையவர்களைத் தேவர்களும் போற்றுவார்கள் என்பதால், அத்தகையவர்களையும் மன்னவன் காக்க வேண்டும்.
ஒரு வேளை, இவர்களைப் பாதுகாவாமல் ஒழிந்தால் அரசனுக்கு ஏற்படும் துன்பத்தையும் எடுத்துரைத்து வழிகாட்டுகிறார் திருமூலர்.
“காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே” (திருமந்திரம் -100)
என்பது திருமந்திரம்.
செங்கோல் மாறாத அரசன்
ஒரு நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காப்பாற்றும் கடப்பாடு உடையவனாக இருக்க வேண்டும்.
“அரசனது செங்கோல் தவறுமாயின் குடிமக்கள் பழிதூற்றூவர்” (புறநானூறு -72)
ஏனெனில், குடிமக்களைப் பாதுகாப்பாகக் காக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை ஆகும். மன்னன் மனம் போன போக்கில் நடவாமல், தன் வாழ்வைக் கருதி ஆட்சி புரியாமல், சிந்தை முழுதும் குடிமக்களின் மீது கொண்டு ஆட்சியை மேற்கொள்வதே நலம் பயக்கும்.மேலும், காற்றை அடக்கி மூலக் கனலை மேலே ஏற்றி, ஆதாரங்கள் ஆறையும் கடந்து, அமுதப்பாலை உண்ணக் கூடியவர்களே ‘யோகியர்கள்’ என அடையாளப்படுத்தும் திருமூலர் போலிகளைப் பற்றிக் கூறாமல் விடவில்லை.
யோகியர்களைப் போல் அமுதுண்டு மகிழ்ந்திராமல், மரத்திலிருந்து இறக்கும் ‘பாலை’ (கள்) உண்ணக் கூடியவர்கள் இந்தப் போலிகள் என்கிறார் திருமூலர். அதுமட்டுமின்றி கள்ளுண்ணும் கயவர்களைத் தண்டித்தல் வேந்தனுக்குரிய கடமை எனக் குறிப்பிடுகிறார். இதனைப் போன்றே, ‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தை தனிமனிதனுடைய ஒழுக்கத்தை வரையறுக்கும் அறத்துப்பாலில் வைக்காமல், அரசனால் நிகழும் ஆட்சி முறையைச் சொல்லும் பொருட்பாலில் வைத்துள்ளார் வள்ளுவர். இவ்விரு யோகிகளின் பார்வையிலுமே கள்ளுண்ணாமல் இருக்கவேண்டும் என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தைக் குறிக்கும் நீதி தான்; ஆனால், அது நடைமுறையில் நடக்காது என்பதை அறிந்து, அரசினரே கள்ளுண்ணாமையை நிலைநிறுத்த வேண்டுமென்று எண்ணியிருப்பது மேற்கண்ட சான்றாதாரங்களால் தெளிவாகிறது.
“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு” (திருக்குறள் -930)
என்பது திருக்குறள்.
தொகுப்புரை
ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு எவ்வகையால் துன்பம் ஏற்படினும், அதனை நீக்கி மக்களைக் காப்பதே அரசனின் கடமை ஆகும். ‘நாட்டின் நலம்’ என்ற இலட்சியத்தின் வழிச் செல்லும் இலட்சியத் தலைவனாக ஒவ்வொரு அரசனும் ஆட்சி புரிய வேண்டும்.
“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையனாம் வேந்தர்க் கொளி” (திருக்குறள் -390)
என்பது திருக்குறள். அந்த வகையில், அரசன் தீயவர்களைத் திருத்தி, அவர்களால் மற்றவர்களுக்குத் தீங்கு வராமல் காப்பாற்றும் செயலையேச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார் திருமூலர்.
‘பயிருக்கு வேலி போல மக்களுக்கு வேலியாக நிற்பவன் அரசன்’ என்பதை திருமூலரின் திருவாக்கினால் உணர இயலுகிறது.
துணைநின்ற நூல்கள்
1. இராமநாத பிள்ளை, ப. (வி.ஆ), சிதம்பரனார், அ.(கு.ஆ), திருமூலரின் திருமந்திரம் மூவாயிரம், தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், சென்னை -18. (1942)
2. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை உரை, புறநானூறு (இருபகுதிகள்), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -18. (1956)
3. திருவள்ளுவர், திருக்குறள் (திரு.மு.வரதராசனார் (தெளிவுரை), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -18. (2004)
4. பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் உரை, பொ.வே சோமசுந்தரனார் இலக்கணக் குறிப்பு ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை (1962)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.