தொல்காப்பியத் திணை அடிப்படையில் ஔவையாரின் புறப்பாடல்கள்
முனைவர் த. டான் ஸ்டோனி
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னுரை
தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் முதலிய இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான பாடுபொருள்களையும், செய்யுளியல், மரபியல் போன்ற இயல்களில் இலக்கியம் பாடுவதற்கான இலக்கணத்தையும் வரையறை செய்கிறார். இதன் அடிப்படையில் ஔவையார், தொல்காப்பியர் இலக்கியம் பாடுவதற்காக வரையறை செய்துள்ள கூற்றுகளின் (தலைவன் கூற்று, தலைவி கூற்று, செவிலி, நற்றாய், கண்டோர் கூற்று), அடிப்படையில் அகப்பாடல்களையும், புறத்திணைகள் அடிப்படையில் புறப்பாடல்களையும் எவ்வாறு இலக்கணம் மாறாமல் படைத்திருக்கிறார் என்பதை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். சங்ககால ஔவை 26 அகப்பாடல்களையும், 33 புறப்பாடல்களையும் பாடியுள்ளார். தொல்காப்பியர்;
“வெட்சிதானே குறிஞ்சியது புறனே
உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே”
என புறத்திணைகளை ஏழுவகையாகக் கூறுகிறார்.
இவ்வேழு திணைகளில், ஔவையார் வெட்சித்திணையில் ஒரு பாடலையும் (269), கரந்தை திணையில் இரண்டு பாடல்களையும் (286, 290), தும்பைத்திணையில் ஆறு பாடல்களையும் (87, 88, 90, 295, 311, 89,), வாகைத்திணையில் ஆறு பாடல்களையும் (93, 98, 99,104, 315,100), பாடாண்திணையில் 14 பாடல்களையும் (91, 92, 94, 95, 96, 97, 101, 102, 103,140, 206, 367, 390, 392), பொதுவியல்திணையில் நான்கு பாடல்களையும் (187, 231, 232, 235) பாடியுள்ளார். பிற்காலத்தில் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்ட போது இவை புறப்பாடல்கள் என்பதால் இவற்றைப் புறநானூற்றில் சேர்க்கவே, தற்போது இப்பாடல்கள் அனைத்தும் புறநானூற்றில் காணப்படுகின்றன. புறநானூற்றில் முஞ்சியூர்முடிநாகனார் முதல் கோவூர்கிழார் வரை 153 புலவர்கள் 400 பாடல்கள் பாடியுள்ளனர். இதில் பாடியவர் பெயர் இல்லாத பாடல்களும் உண்டு. ஒரே ஒரு பாடல் பாடிய புலவர்களும் உண்டு. 17 பெண்பால் புலவர்களில் ஔவையார் மட்டும் 33 புறப்பாடல்கள் பாடியுள்ளார்.
தொல்காப்பியர் குறிப்பிடும் ஏழு திணைகளில் ஔவை ஆறு திணைகளில் பாடியுள்ளது உற்று நோக்கத்தக்கது. எனினும், திணைகளில் கூறப்படும் துறைகள் அடிப்படையில் காணும் போது ஔவை பாடல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. ஔவை பாடவில்லையா? அல்லது தொகுக்கப்பட்டபோது அவை கிடைக்கவில்லையா? என்பது ஆய்வுக்குரியது.
திணை, துறை அடிப்படையிலான ஔவையார் பாடல்கள்
தொல்காப்பியர், ஒவ்வொரு திணைகளிலும் உட்பிரிவாகத் துறைகளை வகுத்து அத்துறைகளின் அடிப்படையில் பாடல்கள் அமைக்க இலக்கணம் வகுத்துள்ளார். எடுத்துக்காட்டாக, வெட்சித் திணையில் ” வெட்சியரவம்… என்பன போன்ற துறைகளை வகுத்து… இந்த இந்தத் துறைகளில் இப்படியான நிகழ்வுகள் தான் நடக்கும் என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். இவ்வாறு, ஏழு திணைகளிலும், துறைகளை வகுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஔவையார் பாடாண்திணையில் ஒன்பது துறைகளிலும், தும்பைத் திணையில் மூன்று துறைகளிலும், வாகைத் திணையில் மூன்று துறைகளிலும், கரந்தைத் திணையில் இரண்டு துறைகளிலும், வெட்சித் திணையில் ஒரு துறையிலும், பொதுவியல் திணையில் இரண்டு துறைகளிலுமாக இருபது துறைகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
பாடாண்திணை
ஔவையார் பாடாண் திணையில் வாழ்த்தியல், இயன்மொழி, அரசவாகை, வாள்மங்கலம், பரிசில் விடை, பரிசில் கடாநிலை, பரிசில் துறை, விறலியாற்றுப்படை, கடைநிலை ஆகிய ஒன்பது துறைகளில் பாடியுள்ளார்.
1. தொல்காப்பியர் கூற்றுப்படி வாழ்த்தியல்துறை என்பது தலைவனை வாழ்த்திக் கூறல் என்பது ஆகும். ஔவையார் இத்துறையில் எண் 91, 367 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். பாடல் 91-ல் அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற போது அவனைப் புகழ்ந்து பாடுவதாகவும், பாடல் 367- ல் சேர,சோழ, பாண்டிய மன்னர்களான மாவண்கோ, உக்கிரப் பெருவழுதி, பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஓரிடத்தில் இருந்தபோது அவர்களைப் புகழ்ந்து பாடுவதாகவும் அமைந்துள்ளன.
2. இயன்மொழி துறை என்பது ஒருவர் இயல்பைக் கூறுதலும், அவர் முன்னோர் செய்தியை அவர் மேல் ஏற்றிக் கூறுதலுமாகும். ஔவையார் இத்துறையில் பாடல் 92, 96, 97, 102, 392 ஆகிய ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார்.
3. அரசவாகை துறை என்பது அரசனின் வெற்றியைக் கூறும் துறையாகும். ஔவையார் பாடல் 93, 94 ஆகிய இரு பாடல்களைப் பாடியுள்ளார்.
4. வாள் மங்கலம் என்னும் துறை, தலைவனின் வாளைப் பற்றிக் கூறும் துறையாகும். ஔவையார் இத்துறையில் பாடல் எண் 95 என்ற ஒரு பாடலை மட்டும் பாடியுள்ளார்.
5. பரிசில் கடாநிலை என்னும் துறை, புலவர் “நின்னைப் பாடிய பலரும் பரிசில் பெற்றார். யாம் பெற்றிலோம். எமக்கு அருள்க” என்று புரவலனிடம் கேட்கும் துறையாகும். ஔவை பாடல் எண் 101 பாடலை மட்டும் பாடியுள்ளார்.
6. பரிசில் விடை என்னும் துறையானது, “பரிசில் பெற வந்தவன் அதனைப் பெற்றாயினும், பெறாமலாயினும் பரிசில் நாடி வந்தோனிடம் விடை பெறுதல் என்பது போல் பாடப்படும் துறையாகும். ஔவை நாஞ்சில் வள்ளுவன் என்பவனைப் பாடல் எண் 140 இல் பாடியுள்ளார்.
7. பரிசில் துறை, புரவலனிடம் பரிசிலர் “தாம் நினைத்து வந்த பேறு இது” என்று கூறும் துறையாகும். பாடல் எண் 206இல் இத்துறையில் பாடியுள்ளார்.
8. விறலியாற்றுப்படை என்னும் துறையானது, “அரசன் புகழ்பாடும் பாடினியை வழி கூறிச் செல்லுமிடம் செல்ல விடுத்தல் என்பது போல பாடும் துறையாகும். பாடல் 103, இத்துறையில் அமையும்படி ஔவை பாடியுள்ளார்.
9. கடைமொழிநிலை என்ற துறை, அரசனின் அரண்மனை வாயிலில் நின்று பாடும்படியான துறையாகும். ஔவை 392 எண்ணில் உள்ள பாடலைப் பாடியுள்ளார்.
தும்பை
ஔவையார் தும்பைத் திணையில் தானைமறம், உவகை கலுழ்ச்சி, பாண்பாட்டு ஆகிய மூன்று துறைகளில் பாடியுள்ளார்.
1. தானை மறம் என்னும் துறை, இருபக்க படைகளும் தங்களுக்குள் போரிட்டு மடியாதவாறு ஒரு வீரன் பாதுகாத்த வீரத்தைப் பற்றிப் பேசும் துறையாகும். ஔவை இத்துறையில் நான்கு பாடல்களைப் பாடியுள்ளார் (87, 88, 89, 90). நான்கு பாடலிலும் அதியமானைப் பற்றிப் புகழ்ந்து பாடுகிறார்.
2. உவகைக் கலுழ்ச்சி என்னும் துறை, புண்ணுற்ற கணவனைக் கண்டு மனைவி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தல். (கலுழ்தல் - அழுதல்) மேலும் மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தலுமாகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (295) மட்டும் பாடியுள்ளார்.
3. பாண்பாட்டு என்னும் துறை, போரில் இறந்துபட்ட வீரருக்குப் பாணர் “சாப்பண்” பாடித் தம் கடன் கழிதல் என்பது போல பாடும் துறையாகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (311) மட்டும் பாடியுள்ளார்.
கரந்தை
ஔவையார் கரந்தைத் திணையில் வேத்தியல், குடிநிலை உரைத்தல், ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.
1. வேத்தியல் என்னும்துறை, அரசவீரர் போரில் தம் மேம்பாடுகளை எடுத்துக்கூறுதலாகும். இதனை வேத்தியல் மலிபு என்றும் கூறுவர். கள் உண்ணல் குறித்துப் பாடுவதும் ஆகும். ஔவை இத்துறையில் ஒரு பாடலை (286) மட்டும் பாடியுள்ளார்.
2. குடிநிலை உரைத்தல் என்ற துறை “பழமையும், வீரமும் மிக்க குடியின் வரலாற்றைச் சொல்லுதல். ஔவை இத்துறையில் ஒரு பாடலைப் (290) பாடியுள்ளார். பாடலில் “வீரனுக்கு முதலில் கள் தருக” எனக் கூறும்படியாக இப்பாடல் அமைந்துள்ளது.
வாகை
ஔவையார் வாகைத் திணையில் அரச வாகை, வல்லாண் முல்லை ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.
1. அரசவாகை என்னும் துறையில் ஔவை ஒரு பாடலை (104) மட்டும் பாடியுள்ளார். இத்துறையானது அரசனின் வெற்றியைக் கூறும்படியாகப் பாடப்படுவதாகும்.
2. வல்லாண் முல்லை என்னும் துறையில் ஒரு பாடல் (315) பாடியுள்ளார். “ஒரு தலைவன் வீடு, ஊர், இயல்பு ஆகியவற்றைச் சொல்லி அவன் ஆளும் தன்மையைப் பெருகக் கூறும்படியாகப் பாடும் துறையாகும்.
பொதுவியல்
ஔவையார் பொதுவியல் திணையில் பொருண்மொழிக்காஞ்சி, கையறு நிலை ஆகிய இரண்டு துறைகளில் பாடியுள்ளார்.
1. பொருண்மொழிக்காஞ்சி என்ற துறையிலும் ஔவை, ஒரு பாடலைப் (187) பாடியுள்ளார். “உயிருக்கு நலம் செய்யும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறும்படியாக இத்துறையில் பாடல்கள் அமைத்துப்பாடப் படுவது வழக்கம்.
2. கையறு நிலை என்னும் துறை, “தலைமகன் இறக்க அவன் பெருமையைச் சொல்லி வருந்தி நிற்றல்” என்னும் பொருண்மையில் பாடப்படுவதாகும். ஔவை இத்துறையில் 231, 232, 235 ஆகிய எண் கொண்ட மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
வெட்சி
ஔவையார் வெட்சித் திணையில் உண்டாட்டு என்னும் துறையில் மட்டும் பாடியுள்ளார்.
1. உண்டாட்டு என்னும் துறை, போரில் வெற்றிப் பெற்ற பிறகு வீரர்கள் மது உண்டு மனம் களிப்புறும் போது பாடுவது பாடும் துறையாகும். இத்துறையில் ஔவை ஒரு பாடலைப் (269) பாடியுள்ளார்.
என இருபது துறைகளில் மட்டும் பாடல்களைப் பாடியுள்ளார். ஔவையார் இருபது துறைகளில் மட்டும் தான் பாடல்கள் பாடியுள்ளாரா? அல்லது அவர் பாடிய மீதி பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லையா? என்பதும் ஆய்விற்குரியனவாகும்.
பாடப்பட்டோர்
ஔவை விறலி என்பதால் பாடிய பாடல்கள் அனைத்தும் அரசர்களைப் பற்றியே அமைந்துள்ளது. அதியமான், பொகுட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் மற்றும் சேர,சோழ,பாண்டியன் பெருநற்கிள்ளி ஆகிய ஆறு அரசர்களைப் புகழ்ந்தும், இகழ்ந்தும், அறிவுறுத்தியும், தூது உரைப்பதுமாகத் தம் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஆறு அரசர்களில் அதியமான் நெடுமான் அஞ்சியை மட்டும் அதிகபட்சமாக 28 பாடல்களும், அதியமான் மகன் பொகுட்டெழினி பற்றி மூன்று பாடல்களும் (96, 102, 392), நாஞ்சில் வள்ளுவன் என்னும் மன்னனைப் பற்றி ஒரு பாடலும், சேரமான் மாவண்கோ - கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி பாண்டியன் - சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரையும் ஒரே பாடலில் (367) பாடியுள்ளார்.
முடிவுரை
இக்கட்டுரையானது ஔவையார் பாடிய புறப்பாடல்கள், தொல்காப்பியர் கூறும் புறத்திணை, துறை அடிப்படையில் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை ஆராயும் நோக்கில் மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரையாகும். இக்கட்டுரையை மையமாக வைத்து அவை என்ன பாடல்கள், அப்பாடல்களில் உள்ள மையக் கருத்து யாது? அக்கருத்து வழி அறியலாகும் தமிழரின் பண்பாடு, வீரம், கொடை இன்ன பிற செய்திகளை உள்ளடக்கியும், தொல்காப்பிய உரையாசிரியர்களான இளம்பூரனார், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார், வெள்ளைவாரணார், இராமலிங்கம் போன்றோரின் உரைகளை முன்வைத்து விரிவான ஆராய்ச்சி செய்தால், ஒரு மிகச் சிறந்த ஆராய்ச்சித் தளம் உருவாகும் என்பது உறுதி.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. அண்ணாமலை (பதிப்பாசிரியர்கள்), சங்க இலக்கிய மக்கள் பதிப்பு வரிசை தொகுதிகள், கோவிலூர் மடலாயம், கோவிலூர், மக்கள் பதிப்பு, காரைக்குடி, முதற்பதிப்பு - 2003.
2. இளம்பூரனார், தொல்காப்பியம், பாவை பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, பதிப்பு - செப்.2010
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.