Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஆற்றுப்படை இலக்கியங்களில் மேலாண்மை

முனைவர் சு. சீனிவாசன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 620 002.


முன்னுரை

சங்ககால மக்கள் காதலையும் வீரத்தையும் தம் இரு கண்களாகப் போற்றினர். எனவேதான் சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் பாடுபொருளாக அமைந்தன. காதலை அக நூல்களும் வீரத்தைப் புற நூல்களும் எடுத்தியம்பினும், அகநூல்களில் புறச்செய்திகளும், புறநூல்களில் அகச்செய்திகளும் இடம் பெறுவதைக் காணலாம். இவ்வகையில் பத்துப்பாட்டு நூல்களில் செம்பாதியாக விளங்கும் ஆற்றுப்படைப் புறநூல்களில் மேலாண்மை பற்றிய செய்திகள் பரவிக் கிடக்கின்றன. ஆட்சி மேலாண்மை, நில மேலாண்மை, தொழில் மேலாண்மை, வணிக மேலாண்மை, பண்டமாற்று மேலாண்மை, ஆடை சார்ந்த மேலாண்மை, உணவு மற்றும் அவை சார்ந்த மேலாண்மை, சமய மேலாண்மை என்பனவாகப் பகுத்து இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

ஆட்சி மேலாண்மை

மன்னன் என்பவன் தன் நாட்டில் அரசியல் (அ) ஆட்சியை நல்ல வழியில் நடுநிலையோடு ஆட்சி புரிதல் வேண்டும். ‘கோல்’ என்பது ஆகுபெயராய் நீதியைக் குறிக்கும். நீதியைப் பற்றி, “முறை செய்தல் கோலறமாகும். மன்னன் மக்கள் காணுவதற்கு எளியனாகக் காட்சி தந்து அறக்கடவுளை ஆராய்ந்தது போல ஆராய்ந்து நீதி வழங்குதல் வேண்டும்” என்று புறம் (பா.எ.35) கூறுகின்றது. “மன்னரின் செங்கோல் துலாக்கோலின் சமன் வாய் போல நடுவு நிலையை மாறாது செயல்பட வேண்டும்” (தி.அ.சொக்கலிங்கம், காப்பியச் சிந்தனைகள், ப.113) என்று கரிகிழார் அறம் உரைப்பர். இவ்வகையில் ஆற்றுப்படையில் கூறப்பட்ட மன்னர்கள் அறத்தோடு ஆட்சியை நல்கியுள்ளனர்.

செங்கோல் ஆட்சி

கரிகாலன், நானிலங்களும் ஒரு சேரத் திரண்ட இம்மண்ணுலகத்தே குற்றமறத் ஒரு குடையாலே தன் ஆணையையே உலகம் கூறும்படியாக நெடுங்காலம் ஆட்சி செய்தான். குடிமக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் அறங்கூறும் நூல்களை அறிந்து அதனைப் பின்பற்றியும் ஆட்சி செய்தான். தீமை இல்லாத ஆட்சியையும் ஆண்மையையும் பாராட்டுகின்றவன் என்பதனை;

“ஒரு குடையின் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனரி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குரிசில்”(பொருநர்: 228-231)

இவ்வடிகள் வழி அறிய முடிகின்றன. இக்கருத்துகள் மூலம் மன்னனின் ஆட்சிச் சிறப்பையும் அவன் குடிமக்கள் மீது கொண்டுள்ள கேண்மையையும் அறிய முடிகிறது.

சிறுபாணாற்றுப்படையில் நல்லியக்கோடனின் ஆட்சிச் சிறப்பானது. தன்னைப் பாடி வந்த பொருநர்களுக்கும், பாணர்களுக்கும், புலவர்களுக்கும், அந்தணர்களுக்கும் பல காலம் வறுமை தீரும் அளவிற்கு வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுத்தவன். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவும், அரண்மனை வாயிற் கதவும் எப்பொழுதும் அவர்களுக்காகத் திறந்தே இருக்கும் என்பதை (203-206) இவ்வடிகள் உணர்த்துகின்றன. மேலும், இவன் உழவனின் பெருமையை உணர்ந்து அவர்களால் உணவு மிகும் என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு துன்பமும் வராமல் காத்து நன்மை செய்யும் செங்கோலை உடையவனாக விளங்கியுள்ளான் என்பதனை;

“ஏறேர்க்கு நிழன்ற கோலின்” (சிறுபாண்: 231)

என்ற அடி உணர்த்துகிறது.

இளந்திரையனது செங்கோல் ஆட்சியானது, சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பரப்பினாற் போன்று திரையன் தான் பரந்த அருள் உணர்ச்சியுடன் சுற்றம் சூழ வீற்றிருந்து தன்னிடம் வரும் வழக்கினை நடுவு நிலையில் நின்று தெளிவான முடிவுகளைத் தரும் பேரறிவாளன் இல்லையென்று, வந்தவர்க்கு வேண்டியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர்களின் குறையை நீக்கும் ஆட்சியை உடையவன் (பெரும்பாண்: 441-444) என்ற இவ்வடிகள் மூலம் அறிய முடிகிறது.


நன்னனது செங்கோல் ஆட்சியால் நாடு அமைதியாகத் திகழ்கிறது. அவனது நாட்டிலுள்ள சிறிய மலை வழியில் தொடுத்த அம்பினை உடையவராய்த் தம் மனைவியுடன் கூடி வாழும் கானவர் வழிச் செல்வாரைத் துன்புறுத்தாது இருக்கின்றது என்று ஒரு கூத்தன் எதிர்ப்பட்ட கூத்தனிடம் கூறும் நிலையில் அவனது செங்கோல் ஆட்சியினைக் காண முடிகிறது. இதனை;

“தொடுத்த வாளியர் துணைபுனை கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்” (மலைபடு: 17-18)

இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.

அவையோர் மன்றம் (நீதி வழங்குதல்)

சங்க காலத்தில் மன்னனின் அரண்மனையில் அறவோர் மன்றம் இருந்திருக்கின்றது. அம்மன்றத்தில் மக்களின் குறைகளைக் கேட்டு அதனைச் சரி செய்யும் வழக்கம் மன்னனிடத்தில் காணப்பட்டது. அறவோர் மன்றம் தற்போது நீதிமன்றம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்றது. மக்களின் குற்றம் குறைகளைக் குறைத்து, மக்கள் நல்லிணக்கமாக வாழ உறுதுணையாக இருக்கின்றது. இவ்வகையில் கரிகாலன் நடுவுநிலையோடு இளமையில் நீதி வழங்கியமையை, முதியோர் இருவர் நீதி வேண்டி அறவோர் மன்றம் ஏறியபோதே அவருடைய உள்ளத்தே கிடந்த பகைக்குக் காரணமான மாறுபாடு அகன்று பகை தோன்றியவிடத்தே அன்பு கொள்ளுமாறு நீதி வழங்கியுள்ளான் என்பதன் மூலம் அறவோர் மன்றம் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இதனை;

“… … … … … … … … … முதியோர்
அவைபுகு பொழுதிற் பகைமுரண் செலவும்” (பொருநர் 187-188)

எனும் அடிகள் உணர்த்துகின்றன.

நில மேலாண்மை

உலகப் பொருள் அனைத்திற்கும் தோற்றம் உண்டு. அதுபோல் நிலத்திற்கும் தோற்றம் உள்ளது என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலை ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வானொடு முன் தோன்றிய மூத்தக்குடி’ என்று நிலத்தின் சிறப்பைக் கூறுகிறது. நிலம் உற்பத்திக் காரணங்களுள் ஒன்று. இவை அடிப்படைப் பொருளாகும்.

நில மாசு ஏற்படக்கூடாது என எண்ணி பழந்தமிழ்க் குடியினர் தம் வீடு, தெரு, கிராமம், நகரம் போன்றவற்றை அழகுற அமைத்துச் சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாத்துள்ளனர் என்பதனை
“இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்” (பெரும்பாண்: 154)

என்ற அடி சுட்டுகிறது. குப்பைகளை வெளியே வீசி எறிவதனால், சுற்றுப்புறத் தூய்மை மாசுறும் என்றும் நிலவளம் மாசுபடும் என்ற காரணத்தாலும் அவற்றை வைப்பதற்கென்றே தனியிடங்கள் ஒதுக்கப்பட்டதையும் குப்பைகள் சிதறி நிலவளம் பாழ்படுத்தாமலிருக்க அவற்றைச் சுற்றிலும் வேலிகள் அமைக்கப்பட்டன என்பதையும் உருத்திரங்கண்ணனார் அழகுற எடுத்துரைக்கிறார்.


கூத்தராற்றுப்படையில் நிலம் பாதுகாக்கப்படுவதனை, சாணத்தால் வீட்டையும் கடைகளையும் மெழுகிய இல்லங்கள் அகன்றும் தூய்மை உடையதாகவும் காணப்பட்டுள்ளன. அந்தணர் இல்லங்களில் கோழி மற்றும் நாய் இவற்றைச் சேராமல் சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாத்து உள்ளனர். இதனை,

“மனை உறை கோழியொடு ஞமலி அல்லாது” (பெரும்பாண்: 299)

என்ற அடி உணா்த்துகின்றது. கோழி, நாய் போன்றவற்றின் கழிவுகள் சுற்றுப்புறத்தைப் பாழ்படுத்தும் காரணத்தினால் அவற்றை வீட்டில் வளர்ப்பதைத் தவிர்த்துள்ளனர். இல்லங்களின் தூய்மை மட்டுமின்றித் தெருக்கள் மற்றும் நகரங்களின் தூய்மையும் மிக நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற அதே கருத்தினை ,

“ஆறு கிடந்தன்ன அகன் நெடுந்தெருவில்
வேறு பண்ணியக் கடைமெழுக்கு உறுப்பு” (மதுரைக்: 359-360)

என்று மதுரைக்காஞ்சியும் எடுத்துரைக்கிறது. இவ்வாறு ஆற்றுப்படைகளின் நிலவள மேலாண்மையைக் காண முடிகிறது.

தொழில் மேலாண்மை

பண்டைக்காலத்தில் நிலத்தின் பகுப்பின் படி ஆயர், குறவர், உழவர், பரதவர், எயினர் என ஐவகை நில மக்கள் மேற்கொண்டிருந்த தொழில்கள்; இதனைத் தவிரக் கொல்லர், பொற்கொல்லர், தச்சர், ஆடை செய்யும் நெசவாளர், வாணிகம் பேணும் வணிகர் முதலியோரும் வாழ்ந்துள்ளனர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழிக்கேற்பத் தம் தொழிலில் அறம் தவறாது மேற்கொண்டுள்ளனர். இவ்வகையில் ஆற்றுப்படையில் தொழில் மேலாண்மையும் இருந்துள்ளன.

நாற்று நடுதல்

நிலத்தை நன்கு உழுத பின் அவற்றில் இருக்கும் களைகளை நீக்கிப் பின் கால்களால் மிதித்து நீர் பாய்ச்சப் பெற்ற வயல்களில் நாற்றுகளை நன்றாக அழுத்தி நடுவர் என்பதனை ‘முடி நாறழுத்திய நெடுநீர்ச் செறுவில்’ என்று நெற்பயிர் நன்கு படுத்து முதிர்வதற்கு நல்ல காற்று நான்கு திசையிலும் வீசியதால் நன்கு விளைந்தன எனக் காற்றின் இயக்கத்தைக் காரணமாக்கிப் பேசும் முறையினை;

“பால்வார்பு கெழீஇ பல்கவர் வளி பேகழ்வு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்நெல்” (மலைபடு: 114-115)

என்ற அடிகள் உணர்த்துகின்றன. இக்கருத்தின் மூலம் நாற்று நடும் மேலாண்மை முறையை அறிய முடிகிறது.
வணிக மேலாண்மை

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக இருப்பது உழவுத்தொழிலும் வாணிபமுமேயாகும். ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு இவ்விரு தொழில்களும் சிறப்புற்றிருத்தல் வேண்டும். ஓரிடத்தில் உண்டாகும் விளைபொருட்களை, அவை அருகில் கிடைக்கும் பிற இடங்களுக்கு அனுப்புவதும், கொண்டு சென்று விற்பதும், அவற்றைத் தத்தம் ஊர்களில் விற்றலும் வணிகர் தொழில். இத்தொழில் குறித்த குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கடல் கடந்த வாணிகமும் கப்பல்களும் செழிப்புற்றுச் சிறப்புற்றிருந்தன. நடுக்கடலில் திரியும் கப்பல்கள் இரவுக்காலத்தில் திசைமாறிப் போகாது கரைசேர்வற்குத் துறைமுகங்களில் கலங்கரை விளக்கங்களை அமைத்தனர். கடலில் செல்லும் கலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள விளக்குகளைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை,

“இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவுநீர முவத் தோருங் கரையும்
துறைபிறக் கொழியப் போகி” (பெரும்பாண்: 349-351)

இவ்வடிகள் மூலம் எடுத்துரைக்கின்றன. மேலும் சங்ககால மக்கள் வணிகத் தொழிலில் பொய் பேசாது, தங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை வெளிப்படையாகக் கூறி, நியாயமான விலையைக் கூறி அறத்தன்மையோடு விற்றுள்ளனர். பிறர் பொருள்தானே என்று பேராசை கொண்டு மிகுதியாகக் கொள்ளாமல் தம்முடைய பண்டங்களைக் குறைத்துக் கொடுக்காமலும் நடுவுநிலைமை பிறழாது வாழ்ந்தனர். தவறான வழியில் பொருளீட்டாமல் அறநெறி நின்று நேர் வழியில் வாழ்ந்து சமூகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். பண்டைத் தமிழரின் அறச்சிந்தனை வழுவா வாழ்க்கையை,

“அறநெறி பிழையா தாற்றி னொழுகி” (மதுரைக்: 500)

என்று மதுரைக்காஞ்சி விளக்குகிறது.


பண்டமாற்று முறையில் மேலாண்மை

பண்டைக் காலத்து மக்கள் தம் நிலத்தில் கிடைக்காத ஒரு பொருளைப் பணம் கொடுத்து வாங்கும் வழக்கமில்லை. அதனால் ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளைப் பண்டமாற்றுச் செய்தலே வழக்கமாக இருந்துள்ளது. இப்பண்டமாற்று முறையில் ஒரு நிலத்து மக்கள் இன்னொரு நிலத்து மக்களுடன் நல்லுறவு கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதனை;

“குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
ஆளைவிலை யுணவிற் கிளைமுதல் அருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளான்
எருமை நல்லான் கருராகு பெறூஉம்” (பெரும்.162-165)

எனும் அடிகள் மூலம் அறியலாம். ஆய்ச்சியர் நெய்யினை விற்று அதற்கு விலையாகக் கட்டிப் பசும்பொன்னைப் பெறாது எருமைகளைப் பெறுவாள் என்பதன் மூலம் மேலாண்மைச் செய்தியை உணரலாம்.

பொருநராற்றுப்படை பண்டமாற்று மேலாண்மையை, குறிஞ்சி நிலத்துக் கிடைத்தத் தேனையும் கிழங்கையும், அந்நில மக்கள் கொண்டு சென்று நெய்தல் நிலமக்களிடம் விற்பர். அதற்கு ஈடாக அல்லது விலையாக அந்நிலத்து மீன் நெய்யோடு நறவாகிய கள்ளையும் பெற்று வருவர். மருதநிலத்துத் தீஞ்சுவைக் கரும்போடு அவலையும் விற்றோர் முல்லை நிலத்து மானின் தசையொடு மதுவைப் பண்டமாற்றாகப் பெறுவர் என்பதனை,

“தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீநெய் யோடு நறவு மறுகவும்
தீங்கரும்போ மல் வகுத்தோர்
மான்குறையொடு மது மறுகவும்” (பொருநர்: 214-217)

என்கிற அடிகள் எடுத்துரைக்கின்றன.

ஆடைகளில் மேலாண்மை

சமுதாயத்தில் உணவினை அடுத்து இன்றியமையாது விரும்பி வேண்டப்படுவது ஆடை. விலங்குகளைப் போல் அல்லாமல், உடலை மறைக்கும் உடையினை அணிந்து மானத்துடன் வாழும் பண்பினை மக்கள் சிறப்புறப் போற்றி வருகின்றனர். நாகரிகம் வளராத ஆதிகாலத்தில் மக்கள் இலையை ஆடையாக அணிந்திருந்தனர் என்பதை அனைவரும் அறிவர். பின்னர் நாகரிக வளர்ச்சியினால் பலவித வண்ணமயமான ஆடைகளைத் தயாரிக்கத் தொடங்கினர். “இது வீட்டுத் தொழில்களில் முக்கியமானது. பண்டைத் தொழில்களுள் ஒன்று. விவசாயத்திற்கு அடுத்து மக்கள் நாகரீகம் அடையத் தொடங்கியதும் கையாண்ட முதல் கைத்தொழில்” என்று கலைக்களஞ்சியம் (ப.112) குறிப்பிடுகின்றது.

நெசவுத் தொழில் என்பது பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கியது. பட்டு உடைகளின் கரைகளில் திரள முடிந்த முடிகள் அழகுபெற அமைக்கப்பட்டன என்பதை

“கொட்டைக் கரைய பட்டை நல்கி” (பொருநர்:155)

என்ற அடியின் மூலமும் நெய்யப்பட்ட உடையில் நிறம் ஓடிய வழி இன்னதென்று பார்வைக்குத் தெரியாதவாறு தொழில் நுட்பத்துடனும் அறத்தன்மையோடும் ஆடைகள் செய்யப்பட்டன என்ற உண்மையை,

“நோக்கு நுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரியன்ன வறுமை … … …” (பொருநர்:82-83)

என்று இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன. சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெண்களும் நெசவுத் தொழிலைச் செய்து வந்துள்ளனர்.

“ஆளில் பெண்டிர் தாயில் செய்த
நுணங்கு நுண் பனுவல்” (பா:353)

என்று நற்றிணைப் பாடல் விளக்குகிறது. நூல் நூற்கும் பெண்டிர் ‘பருத்திப் பெண்டு’ என அழைக்கப்பட்டிருக்கின்றனர்.


உணவுப் பொருளில் மேலாண்மை

பண்டைய மக்கள் தாங்கள் சேகரிக்கும் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும் ஏழை எளிய மக்கள் உணவு சமைக்கவும் மண்பாண்டங்களைச் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் விலங்குகளின் தோலினாகிய பைகள், தாவரக் கனிகளின் ஓடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

அதிக அளவில் மண் பாத்திரங்கள் செய்யச் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை ,

“வனை கலம் திகிரியின் குமிழ் சுழலும்
துணைசெலில் தலைவாய் ஒவிறந்து விரிக்கும்” (மலைபடு:474-475)

என்ற இவ்வடிகள் வழி அறிய முடிகின்றன. அத்தொழிலைச் செய்யும் போது மண்பானையைத் தரமாகவும் நேரிய வழியிலும் செய்து வந்துள்ளனர். மேலும் புளியங்காய், நெல்லிக்காய் முதலிய ஊறுகாய்கள் வைக்கப்பட்ட மிடா ‘காடி வைத்த கலன்’ எனப்பட்டது. உணவுப்பண்டமான அப்பம் சுடுவதற்கும் மண்ணாலாகிய அகன்ற சட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ,

“கார்அகல் கூவியர் பாகொடு பிடித்த” (பெரும்பாண்: 373)

என்ற அடி விளக்குகிறது. பானையின் புறத்தே கரிபடிந்து கரிய சட்டியாகக் காணப்பட்டதைக் காண முடிகிறது.

தற்காலத்தே மண்பாண்டத் தொழில் அழிந்து கொண்டே வருகிறது என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பிற இரசாயனக் கலவைப் பையிலான பொருட்களின் மேல் மக்கள் அதிகம் மோகம் கொண்டுள்ளனர்.

உண்கலம்

உணவு உண்பதற்கு ஏற்ற கலங்களும் வழக்கத்தில் இருந்தன. தேக்கிலை, வாழைஇலை போன்ற பெரிய இலைகளை உண்கலமாகப் பயன்படுத்தினர். அரசர்கள் பொன்னாலும் வௌ்ளியாலும் செய்யப்பட்ட கலன்களில் பாணர் முதலியோர் உண்பித்தனர். இதனை,

“வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறௌ்ளுந் தோற்றத்து
விளங்கு பொற்கலம்” (சிறுபாண்:242-244)

என்றும்,

“மீன்பூத் தன்ன வான்கலம் பரப்பி”(பெரும்:477)

என்றும் எடுத்துரைப்பதன் மூலம் உணரலாம். மேலும் இந்த உண்கலத்தைப் பயன்படுத்துவதால் மக்கள் வளமான வாழ்வும், நீண்ட ஆயுள் கொண்டும் வாழ முடியும். இல்லையெனில் தரையில் உண்ணும்போது கல், மண் போன்றன கலந்து சாப்பிடுவதால் உயிருக்கு ஆபத்து நேரிடக் கூடும். எனவே சமுதாய மக்கள் அழிவுப் பாதையிலிருந்து காக்கும் பணியில் இவையும் ஒருவகை நன்மையைச் செய்திருக்கின்றன எனலாம்.


காக்கைக்குச் சோறு இடுதல்

பண்டைய மக்கள் உணவை உண்பதற்கு முன் காக்கைக்குச் சோறு இடுவது வழக்கம். இவ்வழக்கம் இன்றும் தொடர்கிறது. விரத நாட்களில் காக்கையைக் கூவி அழைத்துச் சோறிட்டு பின்பு உண்பர்.

உயரமான தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையில் வயலில் நெற்கதிர் நிற்கின்ற குடிசைகளில் குடியிருந்தவர் இரத்தங்கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அப்பலியுணவைக் கருங்காக்கைகள் உண்டன. இதனை,

“தாழ்தலைத் தன் தண்டைக்
கூடு கெழிஇய குடிவயினான்
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை…………….” (பொருநர்: 181-184)

என்ற அடிகள் விளக்குகின்றன.

பகிர்ந்துண்டு வாழும் பண்பு

பண்டைய கால மக்கள் தன்னிடத்தில் இல்லாத பொருளையும் இருக்கின்ற பொருளையும்; ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்க்கையைச் சிறக்கச் செய்தனர். மன்னனிடத்தில் பொருள் பெற்ற புலவர், கலைஞர் ஆகிய அனைவரும் பொருளைப் பாதுகாக்காமல் தன் சுற்றத்திற்குப் பகிர்ந்து கொடுத்து வாழும் பண்பினராகக் காணப்பட்டனர்.

காட்டு வழியிலும் நாட்டு வழியிலும் செல்லும் மக்களுக்கு ஆங்காங்கே வாழும் மக்கள் உதவி செய்த வகையை ஆற்றுப்படை காட்டுகின்றது. காட்டில் உறையும் கானவர் அங்கே வந்து வழியறியாது திகைத்து நிற்கும் பிறருக்கு உற்ற உறுதுணையாய் வந்து அவர்களுக்கு வழிகாட்டி உணவு முதலியன கொடுத்து அனுப்பியுள்ளார்கள் என்பதனை (மலைபடுகடாம்:278-287) என்ற அடிகள் மூலம் உணரலாம்.

சமய மேலாண்மை

வழிபாடு என்பது மக்கள் அனைவரும் ஒன்றுபடும் ஒரு நிகழ்வு ஆகும். மக்களை நல்லிணக்கப்படுத்த முன்னோரால் உருவாக்கப்பட்ட மரபாகும். இச்செய்தி பற்றிய குறிப்புகளும் இவற்றில் நவில்கின்றன.

கடலால் சூழப்பட்டு வானங்கவிழ்ந்த இடமகன்ற உலகத்து நகரங்களில் வைத்தும் எல்லாச் சமயத்தாரும் தொழும்படி எடுத்த விழாக்களாலே பழமையுடைய மேலான சிறப்புடைய பழைய ஊர் என்பதனை,

“… … … … … … … பலர் தொழ
விழவு மேம்பட்ட புழவிறல் மூதூர்” (பெரும்பாண்:410-411)

இவ்வடிகள் உணர்த்துகின்றன. மேலும் இடையறாத செல்வ வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களில் விழாக்கள் நடந்தன. விழாக்காலங்களில் அயலூரார்க்கும் பொருநர்களுக்கும் போரூர்களில் சோறு வழங்கப்பட்டுள்ளது (1-2) என்று பொருநராற்றுப்படைக் கூறுகிறது. தவம் செய்யும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது (பெரும்பாண.; 91-92) தவம் செய்யும் போதும் வழிபாடு செய்யும் போதும் மனதை ஒருமுகப்படுத்தி எந்த வித தீய எண்ணமும் இல்லாமல் வழிபடுவர். இவ்வழிபாடு மூலம் அறநிலையை மேற்கொள்ளும் பழக்கம் அதிகமாக இருந்தது எனலாம்.

இறை வணக்கம்

தமிழர் எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும், முதலில் கடவுளைத் தொழுது வணக்கம் கூறிய பின் அதனைத் தொடங்குவர். ஒரு நூல் இயற்றும் போது, கடவுளை வணங்கி வாழ்த்து பாடிய பின்னர் எழுதத் தொடங்குவர். திருமண நிகழ்ச்சிக்கு முன்பு கடவுள் வழிபாடு செய்து அதனைச் சாட்சியாக வைத்துத் திருமணம் நடத்துவர். பாணர்கள் தாங்கள் இசையைப் பாடத் தொடங்கும் முன் முதன் முதலில் கடவுள் வாழ்த்தை இசைத்த பின் மன்னனைப் பாடத் தொடங்கினர். நாள்தோறும் கடவுட்பணி பாடுதலை இவர்கள் கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதனை;

“பாடின பாணிக்கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர்க் கானத்தல்கி
இலைமின் மராத்த எவ்வந் தாங்கி
வலை வலந் தன்ன மென்னிழன் மருங்கி
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்” (பொருநர்:48-52)

இவ்வடிகள் எடுத்துரைக்கின்றது. அரசவையில் அரசரை வாழ்த்தும் முன்பு கடவுள் வணக்கம் செய்த பின்னரே மன்னனைப் புகழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள்

* ஆட்சி மேலாண்மையில் மன்னன் என்பவன் தன் நாட்டில் உள்ள மக்கள் துன்புறாதவாறு செங்கோல் ஆட்சியை மேற்கொண்டுள்ளான் என்பது புலப்படுகிறது.

* மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வண்ணம் அறங்கூறும் அவையோர் மன்றம் அமைத்திருந்த மேலாண்மைச் செய்தியினை அறிய முடிகிறது.

* சுற்றுப்புற மேலாண்மையில் குடிமக்கள் தாம் வாழக்கூடிய வீடு, தெரு போன்றவற்றைத் தூய்மையாக வைத்தும், வீட்டைச் சுற்றி வேலி வளர்த்த செய்தியினையும் காண முடிகிறது. மேலும் நாய், கோழி போன்றவைகளின் கழிவு சுற்றுப்புறத் தூய்மையை பாழ்படுத்தும் என எண்ணி வீடுகளில் சேராதவாறு வாழ்ந்துள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.

* தொழில் மேலாண்மையில், நிலங்களில் நாற்று நடும் தன்மையையும் அவற்றில் விளையக்கூடிய நெற்கதிர்களைப் பற்றியும் காண முடிகிறது.

* வாணிக மேலாண்மையில், வணிகர்கள் வாணிகத் தொழிலை அற நிலையோடு நின்று வாணிகம் செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

* சங்ககால மக்கள், தங்கள் நிலத்தில் கிடைத்த பொருளை ஒருவருக்கொருவர் பண்டமாற்று முறையில் பெற்று சமுதாய மேலாண்மைக்கு வழி வகுத்துள்ள செய்தியினைக் காண முடிகிறது.

* ஆடை மேலாண்மையில் நெசவாளர்கள் ஆடைகளை நுட்பத்துடனும், அற வழியிலும் செய்துள்ள தன்மையைக் காண முடிகிறது.

* உணவு மற்றும் அவை சார்ந்த மேலாண்மையில் உணவினைச் சமைக்கப் பானை பயன்படுத்தப்பட்டது என்றும், உணவுப் பொருட்களை வைப்பதற்குச் சாடி பயன்படுத்தப்பட்டது என்றும், உணவு உண்ண பொன்கலம் பயன்படுத்தப்பட்டது என்றும், கிடைத்த உணவினை பகுத்துண்டு வாழக்கூடியவர்களாக இருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

* சமய மேலாண்மையில் விழா மற்றும் இறை வழிபாடு பற்றிய செய்தியினையும் காண முடிகிறது.

* ஆற்றுப்படை இலக்கியங்கள் சுட்டும் மேலாண்மை பற்றிய செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. இவற்றில் கூறப்படும் செய்திகள் அறிவியல் சார்ந்தவையாகவும் மக்களின் மேலாண்மை பற்றிய வாழ்வியல் செய்தியாகவும் காணப்படுகின்றது.

துணைநின்ற நூல்கள்

1. சொக்கலிங்கம் தி.அ., காப்பியச்சிந்தனைகள், செல்வம் பப்ளிஷர்ஸ், (பதிப்பு - 1977)

2. சோமசுந்தரனார் பொ.வே., புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை - 600 018 (பதிப்பு- 1955)

3. பெரியசாமி தூரன் (ப.ஆ.), கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னை. (பதிப்பு-)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p213.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License