பொதுவாகச் சொன்னால் யோக மார்க்கமும் ஞானத் தேடலும் உடையவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றிப் பல கதைகள் பேசப்படுகின்றன. இருப்பினும் திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மையாகிறது. இவர் நந்தீசரின் சீடராவார். இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர். திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார். தாமறிந்த உண்மைகளை உலகத்தவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார்.
"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே" (திருமந்திரம் பதிக எண்: 5 திருமூலர் வரலாறு 13)
இங்குத் திருமூலரும் சித்தரும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.
மானிட சமூகத்தில் சித்தர்கள் மிக உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். தங்களுடைய ஆன்மிக பலத்தால், உள்ளறிவால், தூய கரணங்களால், தெளிவான சிந்தனையால், தம்முள் பெற்ற இறை உணர்வினால், பரந்த மனிதாபிமானத்தால் சித்தர்கள் மக்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழ்கின்றார்கள். சித்தர்களை எல்லா நாடுகளிலும், சமுதாயம், சாதி போன்றவற்றிற்குச் சித்தர்கள் அப்பாற்பட்டவர்கள். அவர்களுடைய குறிக்கோள் ஒன்றே! அவர்கள் நாடுவதும் ஒன்றே! அவர்கள் அடைவதும் ஒன்றே! அவர்களுடைய அறிவுரைகளும் ஏறத்தாழ ஒரே தன்மையைப் பெற்றவைகளாலும் இருக்கின்றன. சித்தர்கள் வரலாற்றைப் பொறுத்தவரை நமது நாடு தனிப்பட்ட பெருமைக்குரியது. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களின் உணர்வுகளிலே ஊறி நிற்கின்ற ஆன்மிகமும் அவர்களுடைய வாழ்க்கையுடன் பின்னிக் கிடந்து இருக்கின்ற சமய நெறிகளும் எளிமையான வாழ்வும் உயர்ந்த பண்புகளும் சித்தர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நன்கு உழப்பட்ட நிலங்களாக அமைந்திருக்கின்றன. ஆகவே, சித்தர்கள் என்றால் இந்திய நாட்டுச் சித்தர்களைக் குறிப்பிடுவதே வழக்கமாகும்.
பக்தியால் உண்டாகும் இறை அனுபவத்தை முற்றிலும் பெற்ற காரணத்தினால் திருமூலர் ஓர் ஒப்பற்ற சித்தராக விளங்குகிறார். சித்தர்களுக்கெல்லாம் தலைவராவார். அவரைத் தொடர்ந்து வந்த பல அருளாளர்கள் தாங்கள் திருமூலர் உருவாக்கிய சித்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்று பெருமை கொள்கிறார்கள். சித்தர் இலக்கணத்திற்குத் திருமூலர் வழிவகுத்தார் என்றும் கூறலாம். திருமூலர் இறைவனின் முதற் சீடனான நந்தி தேவனிடம் உபதேசம் பெற்றவர். எண்ணற்ற காலம் தவம் செய்தவர். இறைவனைத்தன்னுள் முழுமையாக உணர்ந்தவராக அறியப்படுகிறார்.
“செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே”
(திருமந்திரம், பாயிரம் 13)
நமது வாழ்வில் பெறும் அறிவைச் சிற்றறிவு என்று மெய்யுணர்வாளர்கள் குறிப்பிடுவதைக் காணலாம். அதைத் தவிர பேரறிவு என்று ஒன்று இருக்கின்றது. அதுதான் இறைவனைப் பற்றிய அறிவு. நாம் எல்லாவிதமான அறிவைப் பெற்றிருந்தாலும், பேரறிவைப் பெறாதவரை நாம் இந்த உலகில் பிறந்து வாழ்வதனுடைய நோக்கம் நிறைவேறாது என்பது மெய்யுணர்வாளர்களுடைய கருத்தாகும். இந்த அறிவை நாம் பெற வேண்டும். இறை அறிவைப் பெற்ற மாத்திரத்திலேயே நான் என்னும் தன்மை மாறி, இறை என்னும் உணர்வு பிறந்து, அந்த உணர்விலே மூழ்கிக் கிடந்து பேரின்பத்தைப் பெறலாம்.
மகான் திருமூலர் அவர்கள் பேரறிவை அனுபவித்த காரணத்தால், தனது சிந்தனையைத் தெள்ளத் தெளிவாக நமக்கு அருளிச் செல்வது சிறப்பாகும்.
“எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே”
(திருமந்திரம் - 2596)
அறிவியல் அறிவைப் பயன்படுத்திப் பல பொருள்களை விளக்கி விடலாம். ஆனால் இறைவனைப் பற்றிய பேரறிவை நமது சுட்டறிவால் மட்டும் அடைந்துவிட முடியாது. இறைவன் நமது அறிவுக்கு எட்டாதவன் ஆவான். அவன் காட்டும் குறியும் கடந்தவன். கரையில்லாத கடல் போன்றவன். அவனைப் பற்றிய அறிவை ஏடுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும் பெற இயலாது. அவனுக்கு உரை காண்பதும் கடினம். “நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக!” என்பார் காரைக்கால் அம்மையார். “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதீ” என்பது திருஞானசம்பந்தரின் கூற்றாகும்.
நல்லறிவின் வழியாக இறைவனை அறிந்து கொள்ள முயலுவதை விட்டு உணர்வின் வாயிலாகத் அறிந்து தெளிவதுதான் சித்தர்களுடைய ஞானமாகும். எந்த வாக்கினாலும், எந்த விரிவுரையானாலும் பிற பொருளைப் போல் அறிய முடியாத பொருளே இறைவனாகிய பரம்பொருளாகும். இந்த இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் முதலில் சிந்தையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். களங்கங்களை நீக்க வேண்டும். திரையற்ற நீர்போல் அசைவற்று நிற்க வேண்டும். இந்த உயர்ந்த தியான நிலையில் இறைவன், மாசு, மறு, அற்றவன், வெளிப்பட்டு அருள் செய்வான் என்பது தெளிவாகும்.
“உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே”
(திருமந்திரம் - 2955)
தன்னுடைய அறிவுக் கண்களால் பார்ப்பதைவிட அருள் கண்களால் பார்ப்பதே இறைவனை அடைவதற்கு ஒரு முக்கிய சாதனமாகும் என்பது சித்தர்களுடைய ஞானமாகும். சித்தர்கள் முழுமையாக இந்த அருள் அனுபவத்தைப் பெற்றவர்கள், தன்னை மறந்து, தனது கரணங்களை மறந்து, உடலை மறந்து, சித்தத்தைச் சிவமாக்கி அந்த சிவானந்தப் பேரின்பத்தில் திளைப்பவர்கள் சித்தர்கள். எனவேதான் சித்தர்களை அருளாளர்கள் என்றும் மெய்யுணர்வாளர்கள் என்றும் அழைக்கின்றோம். சித்தர்கள் வெறும் சித்த வேலைகளைச் செய்பவர்கள் மட்டுமல்லர். பல சித்தர்கள் பல வியப்புச் செயல்களைச் செய்து காட்டியது உண்மைதான். ஆனால், அவர்கள் வெறும் சித்து வேலைக்காரர்கள் மட்டுமல்லர். தங்கள் பயிற்சிகள் மூலம் பல ஆன்ம ஆற்றல்களை அவர்கள் பெறுகின்றார்கள். முக்திப் பேற்றை நோக்கி வழி நடக்கும் பொழுது பல சித்திகளைச் சந்திக்கின்றார்கள். ஆனால், அவர்களுடைய நோக்கம் ஆன்மிகப் பாதையின் எல்லையை அடைந்து, இறைவனுடைய திருவடிகளிலே தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அத்தகையவர்கள் சித்துகள் போன்ற சாதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் இறைவனை அடைவதே. அதற்காக எல்லாத் தத்துவங்களையும் படிப்படியாகத் தங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றார்கள். தத்துவங்களை அறிந்து கட்டமென்று சித்தர் பெருமக்கள் நமக்கு விளக்குகின்றார்கள். சொல்லுவதற்கு அரிய பரம்பொருளை அனுபவித்துத் தெளிவடைகின்றார்கள். ஒப்பில்லாத ஆனந்தம் பெறுகின்றார்கள். ஒளிமயமான நிலையில் புகுந்த பேரின்ப நிலையில் தங்களை அமர்த்திக் கொண்டு இன்புறுவர்.
“முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத் துள்ளளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந் தாரே”
(திருமந்திரம் - 126)
இறைவனுடைய திருநாமங்களைத் தொடர்ந்து பல காலம் ஓதி. இறைவனைப் பொருந்தி வழிபட்டு. பேரறிவாகிய இறைவனின் நிழலில் அமர்ந்து. இனிமையான அனுபவத்தைப் பெற்றதைத் திருமூலர் பெருமானே விளக்கக் காணலாம்,
“இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே”
(திருமந்திரம், பாயிரம் 19)
மெய் ஞானம் பெற்ற சித்தர்களுடைய நிலை ஒர் உணர்வு நிலையாகும். உணர்வு உள்ளத்தைச் சார்ந்தது. அந்த உள்ளமாகிய பெருங்கோயிலில் இறைவன் குடி கொண்டுள்ளான். அதை ஆய்ந்தறியாமல் சீவன் பொறிகளின் அட்டகாசத்தினால் புறத்தே செல்கின்றது. அவற்றைத் திருப்பி உள்ளடக்குவது சித்தர்களுடைய சாதனையாகும். அப்பொழுது சீவன் உள்ளமாகிய பெருங்கோயிலில் கலந்து நிற்கும். அதாவது சிவமயமாகி விடும். அதற்கென்று ஆசைகளோ பாசங்களோ இருக்காது. தன் செயல் சிவத்தின் செயல் என்று இருக்கும்.
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தன் எனக்கு அருளியவாறார் பெறுவார் அச்சோவே”
(திருவாசகம்-அச்சோப் பதிகம் 1:3-4)
இது மாணிக்கவாசகரின் கூற்றாகும். இது அவருடைய ஆழ்ந்த அனுபவத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. சீவனுக்கு அறிவு உண்டு. சிவத்தை உணர்ந்த நிலையில் சீவனுடைய அறிவாகிய ஒளி சிவத்தின் ஒளியில் போய் ஓடுங்கும்.
“சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்”
(திருமந்திரம் - 135)
இந்த நிலையைப் பெற்றவர்கள் சிவசித்தர்கள் என்று திருமூலர் கூறுகின்றார். இதுவரை அந்தத் தளைகளிலிருந்து விடுபட்டு, தான் பெற்ற உலகியல் அறிவை உதறித் தள்ளி விட்டுச் சிவமாகிய பேரறிவில் நிற்கும் நிலையைச் சித்தர்கள் பெற்று சிறப்பு செய்கிறார்கள்.
“வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே”
(திருமந்திரம் - 124)
சித்தர்கள் சிவத்தைக் காண உலகெங்கும் சுற்றவில்லை. அவர்கள் சிவத்தை இங்கேயே தரிசிக்கின்றார்கள். தம்முள் கண்டுகொள்கின்றார்கள். "சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்" என்பார் திருமூலர். அவர்களுடைய உணர்வுகளெல்லாம் சிவமயமாகி நிற்கின்றன. அவர்களுடைய செயல்களெல்லாம் சிவனை நோக்கியே அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன.
(திருமந்திரம் - 127) சித்தர்கள் இறைவன் தன்னுடைய அன்பர்களுக்குத் தரும் சாலோகம். சாமீபம், சாரூபம் போன்ற பதங்களை வேண்டுவதில்லை. பாசங்களை வலுப்படுத்தும் மாயாகாரியங்களைப் பற்றுவதில்லை. ஆணவமாகிய இருளைத் தன்னிடமிருந்து அகற்றி, தான் என்னும் நினைப்பையும் ஒழித்து, இறைஉணர்வுடன் எங்கும் எப்போதும் கலந்து நிற்பதையே சித்தர்கள் விருப்பம் கொள்கிறார்கள்.
(திருமந்திரம் - 2525)
இறைவனால் அளிக்கப்படும் எல்லாவிதமான பதங்களுக்கும் சித்தர்கள் முழுமையாகத் தகுதி பெற்றவர்களாக இருந்தாலும், இறைவனுடைய வியாபகத்தில் ஒன்றிக் கொண்டதால் அவற்றிற்கும் மேலான நிலைமை அடைந்து இறைத் தன்மையைப் பெறுவார்கள்.
“சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே”
(திருமந்திரம் - 2526)
கடவுள் காலனை வென்றவன். காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலம் போன்ற கலைகள் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. காலனை வென்றவன் குறிப்பு அறிந்த சித்தர்கள் தங்களுடைய உடலைப் பற்றியும், உயிரைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் முழுமையான ஞானத்தைப் பெற்றவர்களாக இறைவனுடைய ஒளியைத் தன்னொளியாகப் பெற்று நிற்கின்றார்கள். அதனால் அவர்கள் காமம், வெகுளி, மயக்கம் போன்ற முக்குற்றங்களை அறவே நீக்கி விடுவார்கள். உடல் இருப்பதையும், இல்லாமல் போவதையும் பற்றிச் சித்தர்கள் கவலைப்படுவதில்லை. இதுவே சித்தர்கள் அடையும் ஒளி நெறி அல்லது சன்மார்க்க நெறி என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
சித்தரின் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. அது இறைவனைப் பற்றுதலாகும். அந்த நோக்கத்தை நாம் அறிந்து கொள்ளாதவரை ஓயாத துன்பம் தரும் உலக வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்போம். உலக வாழ்க்கையும் ஓயாது அடித்து வரும் கடலில் அலைகள் போல உள்ளத்தில் விளங்கும் ஒளியை நாம் எல்லோரும் நாட வேண்டும். அங்கே ஒளிக்கு ஒளியாய்ச் சிவன் விளங்குகின்றான். அந்தச் சிவத்தை நாடிப்பற்றிக் கொள்ள வேண்டும். துன்பக் கடலைக்கடக்க உதவும் தெப்பமும் அதுவே எனலாம்.
“கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளளி நாடி
உடவிலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே”
(திருமந்திரம் - 3028)
மேற்கண்ட செய்திகளால் திருமூலரும் சித்தரும் பற்றிய செய்திகள் வெளிப்படக் காணலாம். மேலும் திருமூலரின் திருமந்திரம் இறைவனை அறியாது இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களை உய்விக்கச் செய்யும் பாதையைக் காட்டுகிறது. அதனால் இறை மெய்ஞ்ஞான அறிவைப் பெற திருமந்திரத்தைக் கற்று, உணர்ந்து, தெளிந்து, இறைவனுடைய அருள் பெற்று, இம்மைக்கும் மறுமைக்குமான எல்லாவிதமான பயன்களையும் பெற்று, இறைவன் திருவடிகளைச் சார்ந்து இன்புறுவோம்.
1. திருமந்திரம் மூலமும் உரையும், ராமையா பதிப்பகம், சென்னை. (2010)
2. பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம், முனைவர் சுடலி தியாகராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. (2009)
3. திருமந்திரம் விரிவுரை, ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை. (2012)