Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 10
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

செவ்வியல் இலக்கியங்களில் திணை மயங்கி வரும் அஃறிணை உயிரினப் பதிவுகள்

முனைவர் மு. சங்கர்

உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை,
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி - 626130.


குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலங்களை ஐந்தாகப் பகுத்து, அந்நிலங்களில் வாழக்கூடிய அஃறிணை உயிர்களைச் சங்கப்புலவர்கள் பதிவு செய்துள்ளனர். குறிஞ்சி நிலத்தில் கிளி, மயில், புலி, யானை, கரடி, குரங்கு ஆகிய உயிரினங்களும், பாலை நிலத்தில் புறா, பருந்து, எருவை, கழுகு, செந்நாய் ஆகிய உயிரினங்களும், முல்லை நிலத்தில் கானங்கோழி, மான், முயல் ஆகிய உயிரினங்களும் மருதநிலத்தில் வண்டானம், நாரை, குருகு, கம்புள், தாரா, எருமை, நீர்நாய் ஆகிய உயிரினங்களும், நெய்தல் நிலத்தில் கடற்காக்கை, அன்றில், மகன்றில், கொக்கு, அன்னம், சுறா ஆகிய உயிரினங்களும் வாழக்கூடியதாகச் சங்க நூல்கள் பதிவு செய்துள்ளன. இவ்வாறு சங்கநூல்கள் பதிவு செய்திருந்தாலும் இலக்கண மரபின்படி பார்க்கும்போது, மேலேகூறிய அஃறிணை உயிர்கள் தம் நிலத்திற்கு உரியதாக மட்டுமல்லாமல் பிற நிலங்களிலும் காணப்படுவதாகச் சங்கநூல்கள் கூறுகின்றன. இதனைத் ‘திணை மயக்கம்’ என்ற அடிப்படையில் அணுகலாம். இது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

திணைமயக்கம் - விளக்கம்

முதற்பொருள் நிலம் தவிர்த்த காலமாகிய முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் தத்தமக்கு உரிய திணையொடு கூடி வருதலன்றி ஏனைய திணைகளோடும் கூடி வருவதைத்தான் ‘திணை மயக்கம்’ என்றழைப்பர்.

திணை மயக்கம் பற்றித் தமிழ் இலக்கியக் கலைச் சொல்லகராதி கூறுகையில், “ஒரு நிலத்துக்குரிய காலம், உரிப்பொருள், கருப்பொருள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப் பாடலமைக்கை என்றும் அகம், புறம் என்ற திணைகள் ஒன்றோடொன்று மயங்கி வருகை என்றும்” (1) கூறுகிறது.

தமிழ் இலக்கணப் பேரகராதி, ‘திணை மயக்கம்’ என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறது.

“ஒரு நிலத்துக்குரிய காலம், உரிப்பொருள், கருப்பொருள்
மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப் பாடல் அமைத்தல்
அகம், புறம் என்ற திணைகள் ஒன்றோடொன்று மயங்கல்” (2 )

என்று கூறுகிறது.

‘திணை மயக்குறுதல்’ பற்றித் தமிழ் இலக்கணப் பேரகராதி கூறுகையில், “ஒரு நிலத்துச் செய்தி மற்றொரு நிலத்துச் செய்தியோடு கலந்து வருதல். ஒரு நிலத்தின் கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருதலும் காலம் இரண்டு தம்முள் மயங்கி வருதலும் ஓர் உரிப்பொருள் நிற்றற்குரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும் ஒரு காலம் நிற்றற்குரிய இடத்து ஒரு காலம் வந்து மயங்குதலும் அவ்வந் நிலங்களுக்குரிய முதலும் கருவும் வந்து உரிப்பொருள் மயங்குதல் போல்வன திணை மயக்கமாம். ஆகவே, முதற்பொருட்களுள் காலம் இரண்டு மயங்கினும் நிலம் இரண்டு மயங்குதல் கூடாது என்பது” (3) என்கிறது.

மேலே கூறிய விளக்கங்களிலிருந்து காலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவை மயங்கி வரும் என்பது தெளிவாம்.



திணைமயக்கம் பற்றித் தொல்காப்பியம்

திணை மயக்கம் பற்றித் தொல்காப்பியம் கூறுகையில், உரிப்பொருள் அல்லாத பிறபொருட்கள் மயங்கி வரும் என்கிறது. இதனை,

“உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே” (தொல்.பொருள்.அகத்.15)

என்ற சூத்திரத்தின் வாயிலாக அறியலாம்.

உரிப்பொருள் அல்லாத பிற மயங்கி வரும் என்று கூறிய தொல்காப்பியர் முதற்பொருளுள் நிலம் தவிர்த்து, காலம் மயங்கி வரும் என்றும் கருப்பொருளுள் பூ, புள் முதலியவை மயங்கி வரும் என்றும் கூறுகின்றார். இதனை,

“திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே
நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன் நன்கு உணர்ந்த புலமையோரே” (தொல்.பொருள்.அகத். 14)

என்றும்,

“எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொரு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்” (தொல்.பொருள்.அகத்.21)

என்றும் கூறுவதைக் காணலாம்.

உரிப்பொருள் மயக்கம் என்பது தொல்காப்பியருக்கு உடன்பாடன்று, ஏனெனில், மயக்கம் பற்றிக் கூறுகின்ற மூன்றிடங்களிலும் (14,15,21) பிற மயக்கங்களை வெளிப்படையாகக் கூறிய தொல்காப்பியர் உரிப்பொருள் மயக்கத்தைக் குறிப்பாகவும் கூறாது விட்டது பார்வைக்குரியது.

நச்சினார்க்கினியர் திணை என்பதற்கு ‘ஒழுக்கம்’ எனப் பொருள் கொண்டு ‘திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே’ (14) என்ற நூற்பாவின் மூலம் உரிப்பொருள் மயக்கம் கூறப்பட்டது என்று வாதிடுவார். (4)

இந்நூற்பாவையும் பிறிதொரு வகையில் பொருளுரைத்து, இந்நூற்பா உரிப்பொருள் மயக்கம் கூறிற்று என்பர் சோமசுந்தர பாரதி. எங்கு எவ்வொழுக்கம் நிகழினும் அதனால் நிலத்தியல்பு மாறாது. “காடு, புணர்ச்சி நிகழ்வதால் குறிஞ்சி ஆகாது, முல்லை நிலமேயாம். பிரிவாற்றாக் குறமகளிர் இரங்குவதால் மலைநிலம், நெய்தல் ஆகாது, குறிஞ்சியே யாம்” என்பர் சோமசுந்தர பாரதி.



முதல், கரு, உரிப்பொருள் மயங்கும் தன்மை

“முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய” (இ.வி.அகத்.22)

என்ற இலக்கண விளக்க நூற்பாவின் படி, “முதல், கரு, உரி என்னும் மூன்று கூற்றவாகிய பொருளும் தத்தமக்கு உரிய திணையொடு கூடி, இலக்கண முறையானே வாராது பிறவற்றிற்கு உரிய திணையொடு கூடி மயங்கி வருதலும் உரியவாம் என்றவாறு, ‘மரபின் வாராது’ என்றமையால் நிலம் என்னும் முதற்பொருள் ஒழித்து ஏனையவே மயங்கி வரும் எனக் கொள்க” என்பதை அறிய முடிகிறது. க.ப. அறிவாணன் கூறுகையில்,

“உரிப்பொருள் எதனுடனும் கலவாது, மயங்காது, ஆனால், அதனுடன்
முதற்பொருளும் கருப்பொருளும் சென்று கலக்கும். அன்றியும்
அவ்விரண்டும் தம்முடன் தாமும் கலக்கும்” என்கிறார். (5)

மேலே கூறியவற்றில் இருந்து, நிலம் தனக்குரிய நிலைத்த இயல்புகளை உடையது. இந்நிலம் பருவச் சூழல்களுக்கேற்ப மாற்றங்களை அடையும். நிலமும் பொழுதும் இணைந்த சூழலில் குறிப்பிட்ட தாவரங்கள் வளர்வதற்கும் குறிப்பிட்ட வகை விலங்குகள், பறவைகள் வாழ்வதற்குமான வாய்ப்புகள் அமைகின்றது என்பதை அறியலாம்.

மயக்கம் என்ற சொல்லைத் திணைக் கோட்பாட்டின்படி பார்த்தால் ‘திணைக்கலப்பு’ என்பதே பொருளாக உள்ளது.

“ஒரு திணைக்கு உரிய முதற்பொருள் மற்றோர் திணைக்குரிய முதற்பொருளோடு சேர நிற்றலும் கடியப்படாது. ஆண்டு நிலம் சேர நிற்றல் இல்லை என்று சொல்லுவர். எனவே காலம் மயங்கும் என்றவாறாயிற்று” என்பர் இளம்பூரணர்.

ஒரு திணையின் எல்லைக்கே உட்பட்ட சில பொருட்கள் பிறிதோர் திணையின் கட்டுக்கோப்போடு கலந்து நிற்கவும் கூடும் என்பதைத் ‘திணை மயக்கம்’ எனலாம் என்பர் ப. அருணாசலம்.

திணை மயக்கத்தில் இருதிணைக் கூறுகள் தம்முள் கலந்து நிற்கப் பெறும். உரிப்பொருளே பாடுபொருளாக வரும்போது, இரண்டு திணைக்குரிய உரிப்பொருட்கள் கலந்து ஒரு பாடலில் வர முடியாது. எனவே, இரண்டு உரிப்பொருட்கள் தம்முள் மயங்கிவரும் என்று கூறுவது பொருந்தாது. ஆனால், முதலும் கருவும் ஒரு திணைக்கு உரியனவாகவும் உரிப்பொருள் பிறிதொரு திணைக்குரியதாகவும் அமையப்பெறலாம்.

“ஒரு திணைக்கு நிலமே மாறுதல் இல்லாத முதன்மையான கூறு ஆகிறது. இதனாலேயே நிலம் முதற்பொருள் எனப்பட்டது. காலத்தை விடவும் நிலத்திற்கே முதன்மைத் தரப்பட்டது. அகப்பாடல் ஒன்று இன்ன திணையைச் சார்ந்தது என்று வரையறை செய்வதற்கும் திணை மயக்கம் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்துக்கள் நமக்குத் துணையாக உள்ளன. அகப்பாடல் ஒன்று இன்னதிணைப்பாடல் என்று கூறுவதற்கு முதல், கரு, உரிப்பொருள்கள் பிணைந்து மயக்கமின்றி வரவேண்டும்” (6) என்கிறார் பெ. மாதையன்.



திணை மயங்கிக்கூறப்படும் அஃறிணை உயிர்கள்

குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்று வழங்கப்படும் ஐந்திணைகளுக்குக் கூறப்படும் அஃறிணை உயிர்கள், தத்தமக்கு உரிய திணைகளோடு மட்டுமல்லாது பிற திணைகளோடும் மயங்கி வரப்பெறும். இதனை,

“எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
வந்த நிலத்தின் பயத்தவாகும்’ (தொல்.பொருள்.அகத்.21)

என்ற தொல்காப்பிய நூற்பாவில், பூவும் புள்ளும் மயங்கி வரும் என்று கூறுகின்றார் தொல்காப்பியர்.

பறவைகள், விலங்குகள் வேறொரு இடத்திற்கு இரை தேடிச் செல்லும் இயல்பு வாய்ந்தவை. எனவே, இவை ஒரு திணைக்கு உரியதாக மட்டுமின்றி, பிற திணைகளில் மயங்கி வரப்பெறும். அதனடிப்படையில் நிலம் மயங்கி வரும் அஃறிணை உயிர்களைக் காணலாம்.

குருகு

பூவும் புள்ளும் மயங்கி வரும் என்று தொல்காப்பியர் வெளிப்படையாகக் கூறியமையால், ‘குருகு’ என்ற நெய்தல் நிலப்பறவை, குறிஞ்சி, மருதம் நிலங்களில் மயங்கி வரக் காணலாம்.

களவிலே இன்புற்ற தலைவன், தன்னை வரைந்து கொள்வதற்குக் குறித்த காலத்தில் வராமையால், மனம் நொந்த தலைவி, தன் தோழிக்குத் தன் நிலையைக் கூறுகிறாள். அவ்வாறு கூறும் போது,

“தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே” (குறுந்.25;3-5)

என்கின்றாள் தலைவி. இவ்வரிகள் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதில் ‘குருகு’ என்னும் பறவை ஓடிவரும் நீரில் நீந்தி வரும் ஆரல் மீனையே பார்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது.


சங்க நூல்கள் தவிர்த்த இலக்கண நூல்கள் குருகு என்பது மருத நிலத்தைச் சார்ந்ததாகக் கூறியிருந்த போதிலும், சங்கப்பாடல்களில் குருகு நெய்தல் நிலத்தைச் சார்ந்த பறவையாகவே கூறப்பட்டுள்ளது. டாக்டர். உ. வே. சா குறுந்தொகை ஆராய்ச்சி உரையில் குருகு நெய்தல் நிலத்தைச் சார்ந்த பறவையாகும் என்று கூறுகின்றார். இவ்வாறு இருந்த போதிலும், ஒரு சில பாடல்களில் குருகு மருத நிலம் சார்ந்ததாகக் கூறப்படுகின்றது. அகம்.176, அகம்.226, நற்.70 ஆகிய பாடல்களில் மருத நிலம் சார்ந்து குருகு கூறப்பட்டுள்ளது.

“இரைதேர் வெண்குருகு அஞ்சி” (அகம்: 176;9)

“வெண்குருகு ஓப்பும்” (அகம்: 226;6)

“சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே” (நற்:70;1-3)

ஆகிய அடிகளில் இதனைக் காணலாம்.

குறிஞ்சி, பாலை சார்ந்தும் குருகு கூறப்பட்டுள்ளது. அகம்.178ஆவது பாடலில், குறிஞ்சி நிலம் சார்ந்தும் அகம்.217, குறுந்.260 ஆகிய பாடல்களில் பாலை நிலம் சார்ந்தும் கூறப்பட்டுள்ளது. இச்செய்தியை,

“யாறு சேர்ந்தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகு இருந்தன்ன” (அகம்: 178;7-8)

என்றும்,

“புலம்தொறும் குருகினம் நரல” (அகம்: 217;11)

என்றும்,

“குருகும் இருவிசும்பு இவரும்” (குறுந்: 260;1)

என்றும் கூறப்பட்டுள்ளது.

அன்னம்

அன்னப்பறவை மருத நிலம் சார்ந்தும், நெய்தல் நிலம் சார்ந்தும் கூறப்பட்டிருந்த போதிலும் குறிஞ்சி, முல்லை நிலங்கள் சார்ந்தும் கூறப்பட்டுள்ளது.

நற்.356, குறுந்.300, அகம்.34, அகம்.234 ஆகிய பாடல்கள் முறையே குறிஞ்சி, முல்லை நிலம் சார்ந்து அன்னப் பறவையைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. இதனை,

“நிலம்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்குமென் துhவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி” (நற்:356;1-3)

ஆகிய அடிகள் மூலமும்,

“குறுங்கால் அன்னம் குவவுமணல் சேக்கும்” (குறுந்:300;6)

என்ற அடி மூலமும்

“துறைவிட்டன்ன துர்மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்” (அகம்:34;12,13)

என்ற அடிகள் மூலமும்

“நுண்அயிர் பரந்த தண்அயம் மருங்கின்
நிரைபறை அன்னத்து அன்ன” (அகம்: 234;2,3)

என்ற அடிகள் மூலமும் காணலாம்.

மேலே கூறிய அடிகளின் பின்புலத்தைக் காணும்போது நெய்தல் நிலத்தையே பிரதிபலிப்பதைக் காணலாம்.

அன்றில்

அன்றில் என்னும் பறவையை நெய்தல் நிலத்ததாகப் பெரும்பாலான சங்கப்பாடல்கள் கூறுகின்றன. குறுந்தொகை 301ஆவது பாடலில் குறிஞ்சி நிலம் சார்ந்ததாக அன்றில் பறவையைக் கூறுகின்றது. இதனை,

“முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமடல் இரைத்த சிறுகோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கருஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்” (குறுந்:301;1-4)

என்ற அடிகள் மூலம் அறியலாம். பனை என்ற மரம் நெய்தல் நிலக் கருப்பொருள் ஆகும். அம்மரத்தில் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத அன்றில் பறவைகள் தங்கும் என்று கூறுப்பட்டுள்ளது. எனவே, இவ்வடிகள் நெய்தல் நிலத்தையே பிரதிபலிக்கக் காண்கின்றோம்.


கிளி

அழகிய வண்ணம் கொண்ட கிளிகள் அகம்.34, அகம்.324 ஆகிய இரு பாடல்களில் முல்லை நிலம் சார்ந்ததாகக் கூறப்பட்டுள்ளன. ‘கிளி’ என்ற பறவையை இலக்கண நூல்கள் குறிஞ்சி நிலம் சார்ந்ததாகக் கூறியுள்ளன.

“செந்தார்ப் பைங்கிளி” (அகம்:34;14)

என்ற அடி முல்லை நிலம் சார்ந்து கூறப்படுகிறது.

“கிளியெனச் சிறிய மிழற்றும் செவ்வாய்” (அகம்:126;18)

என்ற அடி மருத நிலம் சார்ந்து கூறப்பட்டுள்ளது.

“தளிர் இயல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன” (அகம்:324;3,4)

ஆகிய அடிகளில் முல்லை நிலம் சார்ந்து கிளியைக் கூறக்காணலாம்.

நீர் நாய்

மருதநிலக் கருப்பொருட்களுள் கூறப்படும் நீர்நாயை நற்றிணை 195ஆவது பாடல் நெய்தல் நிலத்ததாகக் கூறுகின்றது. ஏனெனில் மருதநிலக் குளங்களில் நீர்நாய் வாழும் விலங்கு. நெய்தல் நிலத்தில் கடல் உள்ளதால் அங்கும் நீர்நாய் காணப்படும் என்பதை ஒருவாறாக உணரலாம்.

“… … இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழுமீன்மாந்தி” (நற்:195;1,2)

என்னும் அடிகளில் உப்பங்கழியிடத்துள்ள மீனை உணவாக நீர்நாய் உண்டது என்பதை அறியலாம்.

எருமை

எருமையை மருதநிலம் சார்ந்த உயிரினமாகக் கூறுவர் புலவர். அவ்வாறு இருந்த போதிலும் குறுந்தொகை 279 ஆவது பாடல் முல்லை நிலம் சார்ந்தும் நற்றிணை 271 ஆவது பாடல் பாலை நிலம் சார்ந்து எருமையைக் கூறுகின்றன. இதனை,

“திரிமருப்பு எருமை இருள்நிற மைஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெள்மணி” (குறுந்: 279;1,2)

என்ற அடிகள் மூலமும்,

“இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி
பைந்தாது எருவின் வெடுதுயில் மடியும்” (நற்:271;1,2)

என்ற அடிகள் மூலமும் அறியலாம்.

யானை

குறிஞ்சி நிலம் சார்ந்த அஃறிணை விலங்காக யானையைச் சங்கப் பாடல்கள் இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆனால் சில சங்கப்பாடல்களில் முல்லை நிலம், மருத நிலம் சார்ந்ததாக யானையைக் கூறக் காணலாம். இதனை,

“கயம்நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கும்” (அகம்:6;9)

என்ற அடியும்

“பெருங்கதவு பொருத யானை மருப்பின்” (அகம்:26;6)

என்ற அடியும்

“மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ” (அகம்:266;3)

என்ற அடியும்

“பள்ளி யானையின் உயிர்த்தன்ன நசைஇ” (குறுந்:359;4)

என்ற அடியும்

“பெருங்களிற்று எவ்வம்போல” (அகம்:216;15)

என்ற அடியும் யானையை மருத நிலம் சார்ந்து கூறப்படுகின்றதைப் பார்க்கலாம். இவ்வடிகளைக் காணும்போது, போருக்கான பின்னணியைப் பார்க்கலாம். போரில் யானையைப் பயன்படுத்திய செய்தியை மருதத்திணைப் பாடல்கள் கூறுகின்றன. மேலும்,

“நுதிமுகம் மழுங்கிய மண்ணை வெண்நோட்டுச்
சிறுகண் யானை நெடுநா ஒண்மணி” (அகம்:24;12,13)

என்ற அடிகள் முல்லை நிலம் சார்ந்து யானையைக் கூறப் பார்க்கலாம்.


எருது

மருத நில மக்களால் வளர்க்கப்பட்ட எருது, பாலை, குறிஞ்சி நிலங்கள் சார்ந்தும் ஒரு சில பாடல்கள் கூறுகின்றன. இதனை,

“மருத மர நிழல் எருதொடு வதியும்” (அகம்:37;16)

என்ற அடி மூலம் மருதமர நிழலில் எருதுகள் தங்கியிருந்தன என்று பாலை நிலம் சார்ந்து கூறப்பட்டுள்ளது.

“வேங்கைக் கண்ணியர் எருதுஎறி களமர்
நிலம் கண்டனன்” (நற்:125;9,10)

என்ற அடிகள் மூலம், ‘எருதுகளைக் கொண்டு கதிர் போர் அடிக்கும் மருத நிலத்தார் களம் செம்மை செய்தது போல’ என்ற உவமை குறிஞ்சித்திணை சார்ந்து கூறப்பட்டுள்ளது.

மான்

நம்பியகப்பொருளும் சங்க இலக்கியமும் மானை முல்லை நிலம் சார்ந்த விலங்காகப் பதிவு செய்திருந்த போதிலும், சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணை, மருதத்திணை ஆகிய திணைகளில் உள்ள ஒரு சில பாடல்களில் மான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை,

“ஏமான் பிணையின் வருந்தினெ னாக” (நற்:61;3)

என்ற அடி மூலமும்,

“பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகால் உழையினம் கவரும்” (குறுந்:68;1,2)

என்ற அடிகள் மூலமும்,

“ஈன்று இளைப்பட்ட வயவுப்பிணைப் பசித்தென
மடமான் வல்சி தழீஇய நடுநாள்” (அகம்:238;2,3)

என்ற அடிகள் மூலமும்

“வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ” (நற்:250;9)

என்ற அடி மூலமும் அறியலாம்.

ஆய்வு முடிவுகள்

* திணை மயக்கம் என்பது நிலம் தவிர்ந்த காலமாகிய முதற்பொருளும் கருப்பொருளும் மயங்கி வரக்கூடியது ஆகும். உரிப்பொருள் என்பது மயங்கி வருவது இல்லை.

* தொல்காப்பியம் கூறும் ‘எந்நில மருங்கின் பூவும் புள்ளும்’ என்ற நூற்பாவின் வாயிலாகக் கொண்டு சங்கப்பாடல்களை அணுகும் போது புள் (பறவை) மயங்கி வரும் என்பது தெளிவாகின்றது. பறவைகள் மயங்கி வரும் என்று தெளிவாகக் கூறிய தொல்காப்பியர் விலங்குகள் மயங்கி வரும் என்பதைத் தெளிவாகக் கூறவில்லை.

* ‘தெய்வம் உணாவே மா மரம் புள் பறவை’ (தொல்.பொருள்.அகத்.18) என்ற நூற்பாவால் மட்டுமே கருப்பொருட்களைப் பட்டியலிடுகின்றார் தொல்காப்பியர். ஆனால் இன்னின்ன திணைக்குரிய கருப்பொருட்கள் இவையிவை என்று கூறவில்லை. தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர்தான் இதனைப் பட்டியலிடுகின்றார். ஆனால் தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய நம்பியகப்பொருள், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்கள்தாம் கருப்பொருட்களைப் பட்டியலிடுகின்றன. அவ்வாறு கருப்பொருட்களைப் பட்டியலிட்டு, இன்னின்னத் திணைக்கு இவையிவை உரியன என்று கூறுகின்றன.

* திணை மயக்கம் என்பதை நச்சினார்க்கினியர் உரிப்பொருள் மயக்கம் என்று கூறி வாதிடுகின்றார். இளம்பூரணரோ நிலம் மயங்கி வராது, காலம் மயங்கிவரும் என்றும் கருப்பொருள் மயங்கி வரும் என்றும் உரிப்பொருள் மயங்கி வாரா என்றும் கூறுகின்றார்.

* விலங்குகளும் பறவைகளும் ஓரிடத்தில் என்றுமே நிலைத்து வாழ்வதில்லை. எங்கெங்கு உணவு கிடைக்கின்றதோ அங்கெல்லாம் செல்லும் இயல்புடையவை. குறிஞ்சி நிலத்தில் கூறப்படும் மயில், கிளி, யானை, புலி ஆகியவை முல்லை, மருதம், பாலை நிலங்களிலும் வரக்கூடும். எனவேதாம், இவை நிலம் மயங்கிக் கூறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புலவர்கள் இயற்கையைப் பாடுபொருளாகக் கொண்டு பாடுகையில், பிற நிலத்திற்குரிய விலங்குகளையும் பறவைகளையும் தம் நிலத்தில் கண்டதாகப் பாடினாலும், அவற்றிற்கான பின்னணி என்னவோ அவை வாழும் நிலங்களுக்கு ஏற்பவே கூறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புகள்

1. டாக்டர் ப.கோபாலன், தமிழ் இலக்கியக் கலைச் சொல்லகராதி, ப.123.

2. தி.வே.கோபாலையர், தமிழ் இலக்கணப் பேரகராதி பொருள். அகம்.3, ப.56.

3. மேலது, ப.57.

4. க.ப.அறவாணன், அற்றைநாள் காதலும் வீரமும், ப.99.

5. மேலது, ப.99.

6. பெ.மாதையன், அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், ப.61.

துணைநூற்பட்டியல்

1. அறவாணன், க.ப., அற்றைநாட் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2002 (மு.ப.)

2. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதல் பகுதி), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1953 (மு.ப.)

3. கோபாலன், ப., தமிழ் இலக்கியக் கலைச் சொல்லகராதி, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1989 (மு.ப.)

4. கோபாலையர், தி.வே., (பதி.), இலக்கண விளக்கம் அகத்திணையியல் (முதல் பகுதி), வைத்திநாத தேசிகர், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு, 1972 (மு.ப.)

5. கோபாலையர், தி.வே., தமிழ் இலக்கணப் பேராகராதி, பொருள், அகம் - 3, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2013 (மு.ப.)

6. கோவிந்தராச முதலியார், கா.ர., (குறிப்புரை), நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1948 (மு.ப.)

7. சாமிநாதையர், உ.வே., (உரை), குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா. நிலையம், சென்னை, 2009 (மு.ப.)

8. செயபால், இரா., (உரை), அகநானூறு (புத்தகம் - 1 ரூ 2), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,சென்னை, 2004 (மு.ப.)

9. பாலசுப்பிரமணியன், கு.வெ., (உரை), நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004 (மு.ப.)

10. மாதையன், பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேசன்ஸ், சென்னை, 2009 (மு.ப.)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p218.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License