உளவியல் நோக்கில் தொல்காப்பியத்தின் பிரிவுக்கால மெய்ப்பாடுகள்
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
பிரிவுக்கால மெய்ப்பாடுகள் களவிலும் கற்பிலும் நிகழ்வன. இது இன்பத்தை வெறுத்தல் முதல் கலக்கம் வரையாக இருபது மெய்ப்பாடுகளை உடையது. அவற்றில் அவன் தமர் உவத்தல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல் என்பன உவகை சார்ந்தன. மற்றவை பதினேழும் பிரிவுத்துயரால் தொன்றுவன. இதனை,
“இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
பசியட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யே என்றல்
ஐயஞ் செய்தல் அவன்தம ருவத்தல்
அறனழிந் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல்
எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல்
நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே” (நூ.22)
என்பர் தொல்காப்பியர்.
இன்பத்தை வெறுத்தல்
தலைவனொடு கூடியிருக்கும் போது உடனுறை இன்பத்தை மிகுதிப்படுத்துவன எல்லாம் பிரிவுக்காலத் தலைவிக்கு வெறுப்பளிக்கின்றன. பிரிவாற்றாக் காதலர்க்கு இன்பப் பொருள்கள் அனைத்தும் வெறுப்பளிக்கும். ஒருவன் துன்பத்திற்குள்ளாகும் போது இன்பமளிப்பவை அனைத்தையும் வெறுக்கின்றர். இது உள்ளத்தின் இயல்பு. இதுவே ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடாகும். இதனை, “மிக வலிமையாக உணரப்பட்ட உளதுடிப்புக்கு எதிரான ஒரு மனப்பாங்கை நிலைநிறுத்துவது தான் எதிர்வினை அமைப்பில் உள்ள முக்கிய செயல்முறையாகும்” (உளவியல் துறைகள்-இரண்டாம் தொகுதி, ப.339.) என மு. இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.
துன்பத்துப் புலம்பல்
காதலர் பிரிவாற்றாது துன்புறும் போது தாம் அடையும் துன்பத்தை வாய் விட்டுக் கூறிப் புலம்புதல், துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “பிரிந்த காதலர் வரவை எண்ணி யெண்ணி ஏங்கும் இளநெஞ்சத்தில் நிறைந்துள்ள துன்பச் சுமையைத் தாங்கிவரும் பாடல்கள் பலஉள. ஆயின் அது துன்ப முடிவாக அமையவில்லை. தற்காலிகத் துன்பமேயாகும். அத்துன்பமும் ஏக்கமும் பெருகப் பெருக இறுதியில் அடையும் இன்பமும் பெருகக் காணலாம். எனவே, துன்ப உணர்ச்சிகள் சங்கப் பாடல்களில் பாடப்பட்டாலும் துன்ப முடிவுகள் கூறப்படவில்லை எனலாம்” (சங்க இலக்கியத்துள் துன்பியல், ப.12.) என ந. செயராமன் கூறியுள்ளார். துன்பத்துப் புலம்பும் பாடல்கள் சங்க இலக்கியத்தில் பல இருப்பினும் அவைகள் எல்லாம் துன்ப முடிவைத் தருவனவாக இல்லாமல் இன்ப முடிவை தருவனவாகவே உள்ளன. மேலும், காதலர்களின் பிரிவும் அதனால் ஏற்படும் துன்பமும் தற்காலிகமானதே தவிர நிரந்தரமானதல்ல என்பது இதிலிருந்து அறியப்படுகின்றது.
எதிர்பெய்து பரிதல்
பிரிவுக் காலத்தில் தலைவி, தலைவனது உருவளித் தோற்றங்கண்டும், தலைவன், தலைவியின் உருவெளித் தோற்றங்கண்டும் இரங்குதல் எதிர்பெய்து பரிதல் என்னும் மெய்ப்பாடாகும். எதிர்பெய்து பரிதல் என்பது உருவ வெளிப்பாடு. இதனை, “உருவெளித் தோற்றத்தில், நம் சிக்கலுக்கு உண்மை உலகில் நிறைவுதர நாம் முற்படுவதில்லை மாறாகச் சிக்கல்கள் கற்பனையான வகையில் நிறைவுபெறும் வண்ணம், மகிழ்வானக் கற்பனைக் காட்சிகள் மனதில் எழும்புவதன் மூலம் திருப்தி அடைகிறோம்” (பித்தரின் உள்ளம், ப.112.) என்பர்.
ஏதம் ஆய்தல்
ஏதம் ஆய்தல் என்பது குற்றம் ஆராய்தல் எனப் பொருள்படும். களவுக்காலத்தில் தலைவனும் தலைவியும் விழையும் கூட்டத்திற்கு இடையூறுகள் பல நேரிடும். அத்தகைய இடையூறுகள் பலவற்றையும் ஆராய்தல் ஏதம் ஆய்தல் என்னும் மெய்ப்பாடாகும்.
பசியட நிற்றல்
தலைவியின் கற்புத் திறத்தை இம்மெய்ப்பாடு புலப்படுத்துகின்றது. பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவை மறுத்தல், பசியட நிற்றல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “பிரிவுத் துயரால் தலைவியிடம் இம்மெய்ப்பாடு தோன்றுகின்றது. இன்பத்தை வெறுத்து, துன்பத்துப் புலம்பும் தலைவி உணவையும் வெறுத்தொதுக்குவாள். பசி தோன்றினும் உண்ணாது தன் உள்ளத்துணர்வை இம்மெய்ப்பாடு மூலம் புலப்படுத்துவாள்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.148.) என்பர்.
பசலை பாய்தல்
இம்மெய்ப்பாடு பசலை எனவும் பசலை பரத்தல் எனவும் பசலை பாய்தல் எனவும் வழங்கப்படும். களவு, கற்பு என்னும் இருநிலை வாழ்விலும் நேரும் பிரிவால் ஆற்றாத் துயருறும் தலைவியின் மேனியில், தோலில் தோன்றும் நிற வேறுபாடே பசலை பாய்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை, “தலைவனைப் பிரிந்ததும் தலைவியிடம் தோன்றும் மெய்யின் நிற வேறுபாடாகிய பசலை உள்ளத்தின் துன்பம் உடலளவில் நிலைமாற்றம் பெறுவதற்கான சான்றாகும்” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.168.) என சிவராஜ் கூறியுள்ளார்.
உண்டியிற் குறைதல்
உண்டியிற் குறைதல் என்பது தான் இயல்பாக உண்ணும் உணவின் அளவிலிருந்து சிறிது குறைதல் என பொருள்படும். இதனை, “பிரிவாற்றாத் துயரில் இருக்கும் தலைவி வேண்டா வெறுப்போடு உண்ணும் உணவில் சிறிதளவு உண்ணல் உண்டியிற் குறைதல் என்னும் மெய்ப்பாடாகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.148.) என்பர்.
உடம்பு நனி சுருங்கல்
பிரிவின் காரணமாக உணவைக் குறைப்பாள் தலைவி. இதனால் உடல் சுருங்கும். இதற்கு முக்கியமான காரணம் பிரிவின் துயரமேயாகும். இதனை ‘உடம்பு நனி சுருங்கல்’ என்பர்.
கண் துயில் மறுத்தல்
பிரிவுத் துயரால் தலைமக்கள் உறக்கம் கொள்ள மாட்டார்கள். இதுவே கண்துயில் மறுத்தல் என்னும் மெய்ப்பாடாகும். துயர உணர்வின் மிகுதியாலும் தலைவனைப் பற்றிய இடையறாத எண்ணத்தாலும் தலைவியிடத்து துயில் கொள்ளுதல் நடைபெறாது. இம்மெய்ப்பாட்டால் தலைவியின் மேனியழகும் அழியும். தலைவன் தலைவி இருவரிடமும் பிரிவுத் துயரால் களவிலும் கற்பிலும் கண்துயில் மறுத்தல் என்னும் இம்மெய்ப்பாடு தோன்றுகின்றது. இக்கருத்துக்கு ஆக்கம் தரும் வகையில் மு. பொன்னுசாமி அவர்கள், “பிரிவுத்துயரால் காதலர் உறக்கம் கொள்ளாமையே கண்துயில் மறுத்தல் என்னும் மெய்ப்பாடாகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப - 156) எனக் கூறியுள்ளார்.
கனவொடு மயங்கல்
பிரிவின் போது நனவில் தோன்றும் இடையறாத நினைவால் கனவில் காதலரைக் கண்டு, விழித்த பின் கனவுக்கும் நனவுக்கும் வேறுபாடு அறியாது இருப்பது இம்மெய்ப்பாடாகும். இதனை உளவியலார் “வாழ்வியல் நிகழ்வுகளை ஏற்க இயலாத சூழலில் உள்ளம் தன்னிச்சையாக ஒரு கற்பனை விளையாட்டில் ஈடுபடுகின்றது. உலகையும், வாழ்வையும் உள்ளம் விரும்புமாறு படைத்துக்கொண்டு மனம் தம் போக்கில் மகிழ்கின்றது. இதனைப் பகற் கனவு என்று திறனாய்வாரள்கள் குறிப்பிடுவர்” (உளவியல்துறைகள்-இரண்டாம் தொகுதி, ப.343.) என்று மு. இராசமாணிக்கனார் கூறியுள்ளனர்.
பொய்யாக்கோடல்
காதலர்களிடையே ஐயம் ஏற்பட்டவழி தலைவனின் செயல்களை, சொற்களை நம்பாமை இயல்பு. அதன்வழி தலைவன் உண்மையாகக் கூறுவனவற்றை எல்லாம் கூட தலைவி பொய்யாகவே ஏற்றுக்கொள்வார். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, “தலைவன் கூறும் உண்மையைக் காதல் மிகையால் தலைவி பொய்யாக் கொள்ளுதல் பொய்யாக் கோடல்’ ஆகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.160.) என்பர்.
மெய்யே என்றல்
தலைவன் பொய்யே கூறினாலும், அவன் சொல்லை உண்மை என்று துணிந்து கூறுதல் ‘மெய்யே என்றல்’ எனும் மெய்ப்பாடாகும். இதனை, “தலைவன் பொய்ப்பினும் அவன் சொல்லை மெய்யெனத் துணிந்து கூறுதல் மெய்யே என்றல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவன் வாய்மை தவறாதவன் எனத் தன் உள்ளத் துணிவை வெளிப்படக் கூறுகின்றாள் தலைவி” (மேலது, ப.162.) என்பர்.
ஐயஞ்செய்தல்
இன்னதென ஒன்றைத் துணிந்து கூற இயலாத, மயக்கத்திற்கு உள்ளான மனநிலையில் தோன்றுவது ‘ஐயஞ்செய்தல்’ என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “துணியத் தகாததைச் சொல்லியேனும் பார்க்கும் செயற்படுத்துதல்” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.181.) என சிவராஜ் கூறியுள்ளார். மேலும், களவுக் காலத்தில் ஐயம் என்பது, கண்ணுற்ற தலைமகன் கொடியல்லள் பெண்ணென்றறிந்து, இங்ஙனங் காட்சியிற் சிறந்து தோன்றிய இவள் தெய்வப் பெண்களில் எத்தெய்வப் பெண்ணோ என்று ஐயப்பட்டுக் கூறல் ஆகும்.
அவர்தமர் உவத்தல்
தலைவி, தலைவனது உறவினர்களைக் கண்டவழி மகிழ்ச்சிக் கொள்ளுதல் அவர் தமர் உவத்தல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை மு.வ அவர்கள் கூறுமிடத்து, “நண்பனைக் காண விரும்பும் மனம், அவனுடைய கடிதத்தைக் கண்டாலும் மகிழும், அவன் கனவில் வந்ததாகக் கண்டாலும் ஒருவகை ஆறுதல் பிறக்கும்” (குறுந்தொகைச் செல்வம், ப.101.) என்பர்.
அறனழித்துரைத்தல்
அறத்தினையே அழித்து வெறுத்துக் கூறல் இம்மெய்ப்பாடாகும். சூள்மொழிப்படி தலைவன், தலைவியை மணந்து கொள்வதுதான் அறம். ஆனால், வரைவு நீட்டித்தமையால் தலைவன் பொய்த்தான் எனத் தலைவி நினைப்பது ‘அறனழிந்துரைத்தல்’ எனும் மெய்ப்பாடாகும். இதனை, “அறத்தினையே அழித்து வெறுத்துக் கூறுதல் அறனழித்துரைத்தல் என்னும் மெய்ப்பாடாகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.167.) என மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.
ஆங்கு நெஞ்சழிதல்
அறத்தினை அழித்துக் கூறிய தலைவி, பின் அவ்வளவிற்கு நெஞ்சழிந்து கூறுதல் இம்மெய்ப்பாடாகும். பொருள் வயிற்பிரிவுப் பாடல்களிலும், பருவங்கண்டு ஆற்றாமை அடைந்ததாக அமையும் பாடல்களிலும் வன்பொறை எதிரழிந்த துறைப் பாடல்களிலும் தலைவி பிரிவாற்றாமையால் நெஞ்சழிந்துக் கூறுகின்றாள். இதனை, “இயல்பாய் பொங்கும் வெள்ளம் தானே வடிதல் போல இயற்கையாய் எழுந்த துயர உணர்வுகள் அலையாடித் தலும்பி வழிந்து தம் அளவையும் நிலையையும் குறைத்துக் கொள்ளுகின்றன” (சங்க இலக்கியத்தில் உளவியல், ப.179.) என்பர் உளவியலார்.
எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்
எவையேனும் ஒன்றனைத் தான் கண்டவழி அதனை தலைவி தலைவனோடு ஒப்பிட்டுக் கூறுதல் இம்மெய்ப்பாடாகும். இதனை, “தலைவி தான் காணும் பொருளிலெல்லாம் ஒப்புமை கண்டு கூறுவது, ‘எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்’ என்னும் மெய்ப்பாடாகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.169.) என மு.பொன்னுசாமி கூறியுள்ளார்.
ஒப்புவழி உவத்தல்
தலைவனோடு மற்ற பொருட்களை ஒப்புமைப்படுத்திப் பார்த்த தலைவி அவ்வாறு ஒப்புமை செய்யும் போது ஒப்புமை உண்டாகிய வழி மகிழ்ச்சி கொள்வாள். அதனால் அவளிடம் உவகை தோன்றும் அதுவே, ‘ஒப்புவழி உவத்தல்’ என்னும் மெய்ப்பாடாகும். இக்கூற்றினை உளவியலார், “ஒருவரின் பிரிவால் துன்புறும் உள்ளம் அவரோடு இயல்புடைய பொருளின் தொடர்பால் நிறைவு பெறுதலை ஈடுசெய்தல்” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.140.) என்பர்.
உறு பெயர் கேட்டல்
காதல் வயப்பட்டோரிடம், அவர்தம் காதலர் உறையும் இடம், புகழ் முதலியவற்றைக் கூறுங்கால் மன மகிழ்வடைதல் உள்ள இயல்பு. இதனை, “தலைவன் பெயரும், புகழும் பிறர் கூறக் கேட்டுத் தலைவி மகிழ்வடைதலே உறுபெயர் கேட்டல் என்னும் மெய்ப்பாடாகும்” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.171.) என மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.
கலக்கம்
கலக்கம் என்பது மனம் கலங்கி நிற்கும் நிலை ஆகும். இதனை உளவியலார், “உள்ளத்தின் முறிவாலும் போராட்டத்தாலும் மனம் கலக்கமடைகின்றது. இக்கலக்கத்தின் விளைவே கவலை” (உளவியல் துறைகள் - இரண்டாம் தொகுதி, ப.326.) என்பர்.
அறியப்படுவன
பிரிவுக்கால மெய்ப்பாடுகள் தலைவன், தலைவி ஆகிய இருவரது அன்புள்ளத்தை காட்டுவனவாக அமைந்துள்ளது. பிரிவுத் துயர உணர்ச்சியால் தலைவியின் உள்ளம் பாதிக்கப்படுவதையும், நோய் பாலுள்ள நெஞ்சத்தைப் புலவர்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இம்மெய்ப்பாடுகள் களவிலும் கற்பிலும் வருவன. தலைவனோடு கூடியிருக்கும் போது உடனுறை இன்பத்தை மிகுதிப்படுத்துவன அனைத்தும் பிரிவுகாலத் தலைவிக்கு வெறுப்பளிப்பனவாக அமைந்துள்ளன.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.