சித்தர் சிவவாக்கியார் கூறும் “முக்திக்கு வித்து”
கோ. ராஜ பிரியங்கா
ஆய்வியல் நிறைஞர்,
கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி, முசிறி.
முன்னுரை
இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் வேண்டி விரும்புவது இவ்வுலக வாழ்வினை இன்பமாய் கழித்தலும் மீண்டும் இவ்வுலகில் பிறவி எடுக்காமல் ‘முக்தியடைதல்’ வேண்டும் என்பதே. இவ்வெண்ணம் பல ஆண்டுகளாக இலக்கியங்கள் தொடங்கி இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சமயமும் இப்பிறவிப் பலனை அடைதலையும் முக்தியை அடைவதையுமே குறிக்கோளாகக் கொண்டது. ஒவ்வொரு சமயங்களும் தங்களது கொள்கைகளைப் பின்பற்றி இறைவனை அடைய கூறுவதன் அடிப்படையிலேயே சமய, பக்தி இலக்கியங்கள் தோன்றின. அதன் வரிசையில் சித்தர்கள் சமயக்கொள்கை பரப்புதல் போன்ற எண்ணங்கள் இன்றி தான் விரும்பி வேண்டி பெற்றவற்றினை அனைவரும் பெறவேண்டியே எளிமையாகவும் பழகு தமிழிலும் இவ்வுலக வாழ்க்கையினை அறிந்து அதிலிருந்து விடுபட வழிமுறைகளையும் கூறியுள்ளனர். முக்தி என்பதையும் அதனைப் பெறும் வழிமுறைகளையும் சிவவாக்கியாரின் வழி இக்கட்டுரையில் காண்போம்.
சித்தர்கள்
“கடவுளைக் காண முயல்கின்றவர்கள் பக்தர்கள் என்றால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்”
சித் என்றால் அறிவு (1). சித்தர்கள் என்றால் அறிவில் திளைத்தவர்கள் என்பது பொருள். இவ்வுலகில் எந்தவித அற்புதமுமின்றி, இயற்கையாக மனித உருவில் பிறந்தவர்களேச் சித்தர்கள். எந்தவித ஞானப்பாலும் அருந்தாமல், தன் அனுபவத்தினைக் கொண்டே அறிவில் திளைத்தவர்கள். பட்டறிவின் நகல்கள். அனுபவ ஞானத்தின் அச்சுக்கள். மனநோய் மற்றும் உடல்நோயினைத் தீர்க்கும் மாமருந்துகள். பொய்வாழ்வினைப் புரியவைத்து மெய் வாழ்வினை மலரச் செய்தவர்கள். சமயங்களைக் கடந்தவர்கள். சித்தர்கள், மருத்துவம், மந்திரம், யோகம், ஞானம் பெற்றவர்கள். சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டு எனக் கூறப்பட்டு வருகிறது.
“ஆமென்ற என்பே றகத்தியனாகும்
அருளினோ மென்னுடைய சிஷன் பதினென்பேர்” (2)
என அகத்திய சௌமிய சாகரம் என்னும் நூல் கூறுகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரே ‘சிவவாக்கியார்’. பதினெண் சித்தர்கள் என கூறப்படுவதால் 18 சித்தர்கள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தனர் எனக் கருதுவது தவறு. இன்றும் காடுகளிலும் மலைகளிலும் சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். அகத்தியர் வாழ்ந்த காலத்தில் 18 பேர் கொண்ட குழுவாகச் செயல்பட்டதால் அவ்வாறு வழங்கப்பட்டது.
சித்தர்களின் கொள்கைகள்
எந்தவிதத் தவறுகளும் செய்யாமல் பிறர்க்கு உதவிகளைச் செய்து அறவாழ்வு வாழ்வதே ஒரு சிறந்த மனிதனின் கொள்கை என நீதி இலக்கியம் கூறுகிறது. அதனைப் போன்றேச் சித்தர்களின் பாடல்களும் அறக்கருத்துக்களையே உணர்த்துகிறது. உடல் மாய்ந்ததும் உயிர் முக்தி பெறுவதே மீண்டும் பிறவாதிருக்க ஒரே வழி. மரணத்தால் சடலமாய் வீழ்வது முக்தியன்று. இவ்வுலகில் இருக்கும்போது சூக்கும உடலோடு இறையுடன் கலப்பதே முக்தி என்கின்றனர் சித்தர்கள்.
பிற உயிரிகளிடமோ, உறவுகளுடனோ பற்று கொள்ளாமல், ஆசையினைத் துறந்து வாழ வேண்டும். இவர்களும் ஆசையேத் துன்பத்திற்குக் காரணமாகக் கருதுகின்றனர். ஆசையே, நம்மை அடுத்தப் பிறவிக்கு அழைத்துச் செல்வதாகக் குறிப்பிடும் இவர்கள் பற்றினைத் துறந்து, இப்பிறவிப்பலனை முடிப்பதனையேக் கொள்கையாகக் கொண்டிருந்தனர்.
“பற்றென்னும் பாசத்தளையும் பலவழியும்
பற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு” (3)
என வீடுபேற்றினை அடைய வழியாக நீதி இலக்கியங்கள் சித்தர்களின் கொள்கைகளைத் தழுவி நிற்கின்றன.
சித்தர் சிவவாக்கியார்
சிவவாக்கியார் முக்தி அடைவதையேக் கொள்கையாகக் கொண்டவர். அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர். சித்துக்களை அறிந்தவர். இரசவாதம், மந்திரம் முதலியவற்றையும் அறிந்தவர். பிற சித்தர்களைப் போன்று முற்றும் துறந்தவராய் வாழாமல், குடும்பத்துடன் சாதாரண மனிதரைப் போன்று இல்வாழ்கை நடத்தி, உள்ளத்தினையும், உடலினையும் செம்மையாக்கியவர். பொருளாசையற்றவர். மற்ற சித்தர்களைக் காட்டிலும் தனித்துவமானவர். எந்தச் சமயத்தையும் சார்ந்து நில்லாமல் சமரசஞானியாக விளங்கியவர். நிலையாமை, பகுத்தறிவினை வலியுறுத்தியவர். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் சாதி, சமயம் ஆகியவற்றிக்கு எதிராகவும் ஆண், பெண் வேறுபாடுகளை எதிர்ப்பவராகவும் விளங்குகிறார். பிறப்பு, இறப்பு பற்றிய உண்மைகளையும் தனது பாடல்களில் விளக்கியுள்ளார்.
“மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளிகைப் புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மை கண்டு உணர்கிலீர்” (4)
உடலைத் தவிர, உலகில் உள்ள மண்கலம் கூட மீண்டும் பயன்படும். நாம் பற்றுக்கொண்ட பொருள்கள், நம்மீது பற்றுக் கொண்டு நம்மைத் தொடரப்போவதில்லை என்கிறார் சிவவாக்கியார்.
வழிபாட்டு முறைகள்
இயற்கையை வழிபட்டு, பின்னர், ஐம்பூதங்கள், இறந்த முன்னோர்கள் எனத் தொடங்கிய வழிபாடு, ஆரியர்களின் வருகையால், பல்வேறு பிரிவுகளுடன் உருவ வழிபாடுகளும் தொடங்கி, சமயம் பவ்வேறு தோற்றம் பெறுகிறது. பின்னர் கடவுள் நம்பிக்கை வேரூன்றியது. மக்களின் வாழ்க்கைச் சூழல், அறிவு வளர்ச்சி, நாகரீக மேம்பாடு ஆகியவற்றிற்கேற்ப, கடவுள் நம்பிக்கை பலவகைப்பட்ட எண்ணங்களையும், கற்பனைகளையும் உருவாக்கியது. இதன் வெளிப்பாடே சரியை, கிரியை போன்ற வழிபாட்டு முறைகள். இதில் நாம் எதை எதைப் பின்பற்றக் கூடாது என்பதைச் சிவவாக்கியார் வரையறுக்கிறார். இந்து சமய வழிபாட்டு முறைகளில் முக்கியமாகக் கையாளப்படுவது சரியை, கிரியை முறைகள்.
சரியை என்பது கோயில்களில் செய்யப்படும் தொண்டு. அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைப்பணிகள். ஆலயங்களில் இறைவனை வழிபடல், திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், திருவிளக்கு ஏற்றல், நந்தவனம் அமைத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களுக்குச் சேவை செய்தல், கோயில்களைப் புதுப்பித்தல், யாத்திரை செய்தல் போன்றவை. கிரியை என்பது ஆன்மார்த்த பூசை.
‘மந்திரங்களை ஓதுவது கிரியை’ (5)
சரியை, கிரியை முறைகளைத் தொடர்ந்து யோகம், ஞானம் என்னும் படிநிலைகள் கூறப்படுகின்றன. ஞானம் என்பது ஒரு கனியாக ஒப்பிட்டால், சரியை என்பது அரும்பு என்றும், கிரியை என்பது மலர் என்றும், யோகம் காய் எனவும் கருதப்படுகிறது. இதனை முற்றிலுமாக மறுக்கிறார் சிவவாக்கியார்.
“பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்” (6)
என சரியை, கிரியை முறையினைப் பின்பற்றுபவர்களைப் பேதைகள் எனக் குறிப்பிடுகிறார். நவரத்தினங்களால் ஆன நகைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டு வண்டின் எச்சிலாகியத் தேனுடன் மற்ற பலப் பொருள்களும் சேர்த்துக் கற்களால் ஆன சிலையினை வழிபடுதல் நமக்கு எந்தப் பயனும் விளைவிக்கப் போவதில்லை. புறவழிபாட்டு முறையானது, மக்களின் மீது தேவையற்ற ஆசைகளைத் தூண்டுவதாகவும், பற்றுக்களை அதிகரிக்கும் நோக்குடனே அமைந்துள்ளது.
“கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்பதில்லையே” (7)
இம்மயக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க சிவவாக்கியார் முயலுகிறார். இதன் காரணமாகவே சரியை, கிரியையினைப் பயனற்ற வழிபாடாகக் கூறுகிறார்.
யோகம்
யோகம் என்பது உடல் மற்றும் உயிரினை அடிப்படையாகக் கொண்டது. உடலே கோயில், உள்ளமே ஆலயம் என்பதனால், உடலாகியக் கோயிலையேத் தூய்மையாகவும் நோய்களற்றும் பாதுகாத்தல் வேண்டும். அதற்காகவே யோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் சிவவாக்கியார். மூச்சுப்பயிற்சி, பிரணாயாமம், குண்டலினி, நாடி முதலியவற்றினையும் பின்பற்றக் கூறுகிறார். இது உள்ளத்தினை மனக்கட்டுப்பாடு, உள்முகச் சிந்தனை, தவம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் யோகப்பயிற்சிகள் இவ்விரண்டுமே, உடற்பயிற்சி, ஆற்றல், வலிமை, இளமை ஆகியவற்றினை வழங்குவது. இவை நான்குமே நம்மை வலிமைப்பெறச் செய்வது.
“ஓடிஓடி ஓடிஓடி உள்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே” (8)
உடம்பில் கலந்திருக்கக் கூடிய உள் ஒளியாகிய சோதியை, நாடி எனப்படும் மூச்சினை அடக்கிச் செய்யப்படும் யோக நிலையினை அறியாத மாந்தர்கள் வாழ்வினைச் செம்மையாக்காமல் இறந்தனர் என்கிறார் சித்தர் சிவவாக்கியார்.
ஞானம்
ஞானம் என்பது அறிவில் தெளிவு பெறுதல். உடலானது அழியக்கூடிது. அதனை மெய் எனக் கூறுவது முற்றிலும் பொருந்தாது. எனினும், நம்மை முக்திக்கு வழிவகுப்பது உடலும் உயிருமே. அதனாலே ஞானம் பெற்றவர்கள் உடலினை மெய் என்கின்றனர். முக்தி அடையச் சில வழிமுறைகளையும் பின்பற்றுதல் வேண்டும். ஆசை, கோபம், பற்று, காமம் முதலியவற்றினை விட்டொழித்தல் மூலம் உள்ளம் தெளிவு பெறும். சாதி நிலை, சமயநிலை கடந்து பகுத்தறிவு கொண்டு நிலையாமையை உணர்ந்து உள்ளத்தால் தெளிதல் வேண்டும்.
“ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே” (9)
உள்ளத்தால் தெளிவுபெற உலக வாழ்வினை உணர்தல் வேண்டும். பிறப்பு, இறப்பினை கடந்து, காம எண்ணங்களைத் துறந்து பற்றுகளைக் கடந்து வாழ்தல் வேண்டும். இதனையேத் தமிழ் இலக்கியங்களும் உணர்த்துகின்றன.
முடிவுரை
அறிவியல் வளர்ச்சி, விஞ்ஞானம், பொருளாதாரம் என அனைத்துத் துறையிலும் நாம் வளர்ச்சியடைந்தாலும் குடும்பம், உறவு, நம்பிக்கை, தெய்வம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வாழ்ந்து வருகிறோம். நம் வாழ்வில் எவ்வளவு பணம், புகழ் முதலியன உண்டான போதும், நிம்மதி தேடி அலைகின்றோம். நாம் இக்கால வாழ்வில் அதிகமாகச் செல்லக்கூடிய இடங்கள் கோயில்களும், மருத்துவமனைகளுமே. இவை இரண்டுமே தேவையில்லை, நம்மை நாம் உணர்ந்தால், மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான். பிணி, நோய் உற்று ஒருநாள் சாக்காடு எய்துகிறான். அவ்வாறு இருக்க, உடலைக் கட்டுப்படுத்தும் உயிர் ஆற்றல் உறைந்திருக்கும் உடலே இறைவனின் உறைவிடம் என்பதனைத் தெளிதல் வேண்டும். கோயில், பூசை, புறவழிபாடு தேவையில்லை. சித்தர்கள் கூறிய வழியினைப் பின்பற்றுவதே வீடுபேற்றை அடையச் சிறந்த வழி யோகம், தியானம் உடலைச் செம்மையாக்கும். ‘ஞானம் அறிவினை செம்மையாக்கும். உடலும், உள்ளமும் தெளிதலே ‘முக்திக்கு வித்து’.
அடிக்குறிப்புகள்
1. சாமி சிதம்பரனார், சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் (ப - 23)
2. சி. எஸ். முருகேசன், பதினெண் சித்தர்கள் வரலாறு (ப - 16)
3. நல்லந்துவனார், திரிகடுகம் (பா.எ - 22)
4. முனைவர் அ. அறிவொளி, சித்தர் பாடல்கள் மூலமும் உரையும் (பா.எ -83), (ப-53)
5. ச. சாம்பசிவனார், திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்த கருத்துக்கள் (ப-21)
6. முனைவர் அ. அறிவொளி, சித்தர் பாடல்கள் மூலமும் உரையும் (பா.எ -37), (ப- 30)
7. மேலது, (பா.எ - 30), (ப- 26)
8. மேலது, (பா.எ -4), (ப-10)
9. மேலது, (பா.எ -114), (ப- 69)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.