பரணர் பாடல்கள் காட்டும் போரியல் உலகம்
முனைவர் கோ. தர்மராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை- 630 303.
முன்னுரை
தொன்மை மிக்க சமூகத்தில் பண்டைய காலந்தொட்டே இலக்கிய வளத்தாலும், இலக்கண வளத்தாலும் செம்மாந்த சீரமைப்பினைக் கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி. அத்தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதினுள் முதன்மையாகத் திகழ்வது சங்க இலக்கியம் என்றாலும், அவை தமிழர்களின் காதலையும், வீரத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாடுவதில் வல்லமை பெற்றவையாகத் திகழ்கிறது. காதற்பாடற்களை மிகுதியாக இலக்கியத்தில் புலவர்கள் பாடினாலும், பண்டைய சமூகத்தில் மன்னர் ஆட்சியின் கீழ் மக்கள் வாழ்ந்ததால் அம்மன்னர்களின் போரியல் குறித்த உலகத்தைப் பாடுவதில் புலவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அந்த அடிப்படையில் புறநானூற்றில் பரணர் பாடிய பதிமூன்று பாடல்களில் காணலாகும், மன்னர்களின் போரியல் உலகம் குறித்த செய்திகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பகைநாட்டின் நிலையுரைத்தல்
அசைந்தாடும் பிடரி மயிர் உடைய குதிரைகள் பூட்டிய பொன் தேரில் அமர்ந்து அழகான தோற்றத்திலும் நீலவண்ணக் கடலில் மென்மையாகத் தோன்றிய எழும் அழகிய சிவந்த இளஞ்சூரியனைப் போல் வருகின்ற சோழமன்னன். நீ வலிமை உடையவன் என்பதால் உன்னை கோபத்துக்கு ஆளாக்கி உன்னோடு போரிட்டுத் தோல்வியுற்ற பகைநாடு உண்ண உணவின்றி வாடும் தாயில்லாப் பிள்ளைப் போல மிகுந்த துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறார். இதனை,
“நீயே அலங்கு உளைப் பரீஇஇவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக்கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே”(புறம்.4;13-19)
என்ற பாடலின் வாயிலாக அறியமுடிகிறது. போரில் தோல்வியுற்ற நாட்டின் நிலையினை வெற்றி பெற்ற சோழமன்னனுக்குப் பரணர் எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது.
போரால் பாழான நாடு
இருபெரு வேந்தர்களாகிய சேரரும், சோழரும் நாட்டைக் கைப்பற்றும் நோக்கில் போரிட்டதால் தங்களின் நாட்டிற்குச் சொந்தமான யானைகள் அம்புகளால் தாக்கி ஆற்றல் இழந்து இறந்தது. வெற்றிப் புகழெய்தி வீர விருதுகள் பெற்ற குதிரைகள் வீழ்ந்தன. தேர்ப்படையில் வந்த வீரர்களும், வெற்றி பெற்றதும் முரசு அரைந்து முழங்குவோர் இல்லாமல் முரசு அநாதையாகக் கிடக்கின்றது. மார்பில் வேல் பாய்ந்து இருபெரும் வேந்தர்களும் போர்க் களத்தில் இறந்து கிடக்கின்றனர். வளமும், வருவாயும் அகன்ற இடமும் கொண்ட நாடாக இருவர் நாடும் இருந்தது. ஆனால் போரால் அழிந்து துயர் நேர்ந்த நாட்டினை எண்ணி பரணர் முறையிடுகிறார். இவற்றை,
“எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
விளைக்கும் வினையின்றிப் படை ஒழிந்தனவே
விறற்புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட்டனவே
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம்
பொருக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே
சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே” (புறம்.63;1-10)
என்ற பாடல் வழி அறியமுடிகின்றது. பண்டைய கால மன்னர் ஆட்சியில் இருபெரும் வேந்தர்கள் போரிடும் முறையைத் தவிர்க்க வேண்டி புலவர்கள் முறையிட்டுப் பாடியிருப்பதைக் காணலாம்.
பேகனைப்புகழும் புலவர்
மதயானைப் படையும், வீரக்கழல் கால்களில் அணிந்து போரிடும் பேகன், வாரி வழங்குவதில் தெரிந்தவர், தெரியாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று தராதரம் பார்க்க மாட்டான் என்றாலும் எதிர்நாட்டுப் படையுடன் மோதிப் போராடும் போது, தனக்குச் சமமான வீரருடன் மட்டுமே போரிடுவான். மற்றவரிடம் போரிட மாட்டான். இதனை,
“கடாஅ யானைக கழற்கால் பேகன்
கொடை மடம் படுதல் அல்லது
படை மடம் படான்பிறர் படைமயக் குறினே!” (புறம்.142;4-6)
என்ற பாடல் உணர்த்துகிறது. போரியல் உலகத்தில் மன்னர்களும், குறுநில மன்னர்களும் தன்னை ஒத்த வீரருடன் போரிட்டுள்ளதைப் பரணரின் பாடலின் வாயிலாக அறிய முடிகின்றது.
பெண்ணால் வரும் போர்
முடியுடைய வேந்தன் தான் விரும்பிய பெண்ணை, பெண் விட்டாரிடம் பெண் கேட்டு வந்திருக்கிறான். இதனை உணர்ந்த பெண்ணைப் பெற்ற தந்தை பெண்ணுக்கு மணம் முடிப்பது தன் கடமை என்ற உண்மையை உணர்ந்து மன்னனுக்குப் பெண் தர மறுக்கிறான். இப்படி இருவரும் நேர் எதிராக இருப்பதால் நாட்டின் நிலை போர் நிகழும் சூழ்நிலைதான் உருவாகும் என்கிறார். இதனை,
“வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே” (புறம்.336;1-5)
என்ற பாடலடியின் வாயிலாகப் பரணர் கூறியிருப்பதைக் காணலாம். நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும், பெண்ணுக்காகப் போரிட்டதைக் காணும் போது, இன்றைய காலத்தைப் போல அன்றைக்கும் பெண்ணுக்காகச் சண்டையிடும் நிகழ்வு இருந்துள்ளதைக் காணமுடிகின்றது. மேலும்,
“வேந்து குறைஉறவும் கொடாஅன் ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
செம்மொழிச் சிலம்பின் இளையோள் தந்தை” (புறம்.341;1-3)
வேந்தன் ஒருவன் பெண் கேட்டு வருகிறான். பெண்ணின் தந்தையும் ஒரு வேந்தன். பெண் தர மறுத்து விட்டான். இதனால் இருபெரும் வேந்தர்க்கும் போர் நடக்கின்றது. இப்படி ஒரு பெண் பொருட்டு இரு பெருவேந்தர்கள் போரிட்டுக் கொண்டால் ஊரின் வளமும், நலமும் பாழாகிப் போகும் என்று போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் புறநானூற்றுப் பாடலை பரணர் பாடியுள்ளார். பெண்ணுக்காக ஊரை அழிக்கும் போர்கள் பண்டைய போரியல் உலகத்தில் நிகழ்ந்துள்ளதைக் காணலாம்.
ஏன் பெற்றாள் - இவள் தாய்
இயற்கைச் சூழ்ந்த ஊர்க்குளத்தில் பூத்த குவளைமலர் போன்ற கண்ணையுடைய அழகியப் பெண்ணை, அவள் தாய் பெற்றதால் பெரியதேர்கள், யானைகள், எங்கள் ஊர், வளமான நீர்நிலை, பெரிய மரங்கள் போன்றவை பாழாகும் படியாகி விட்டது. இத்தகையப் பேரழிவிற்குக் காரணமான பெண்ணை, இவளின் தாய் பெறாமலே இருந்திருந்தால் போர் நிகழ்ந்திருக்காது என்கிறார். இதனை,
“குவளை உண்கண் இவளைத் தாயே
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
செந்நுதல் யானை பிணிப்ப
வருந்தின மன்எம் பெருந்துறை மரனே” (புறம்.348;6-10)
என்ற பாடலின் வழியாக உணரலாம். அழகு பொருந்திய ஆடவளை, அவளின் தாய் பெறாமல் இருந்திருந்தால் நாடு பாழாகாமல் இருந்திருக்கும் என்று அவல நிலையில் பாடியிருப்பதைக் காணமுடிகின்றது.
பெண்ணால் ஊர்நலம் கெடுதல்
தேமல் படர்ந்த அழகிய இளமார்புடைய மூங்கில் போன்ற வளைந்த தோளினையுடைய அழகிய பெண்ணின் மான் போன்ற கண்களின் மருண்ட பார்வை, மூவேந்தர்களையும் மயக்கும் அளவிற்கு இருப்பதால், அம்மூவேந்தர்களும் பெண்ணை அடையும் பொருட்டு தங்களுக்குள் போரிட்டு ஊரை அழிக்கின்றனர். இதனை,
“சுணங்கணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை அன்ன மகிழ்மடநோக்கே!”(புறம்.354;8-10)
என்ற பாடலடி உணர்த்துகிறது. வாழ வேண்டிய வளமான ஊர். ஒருபெண்ணின் பொருட்டுப் போரிட்டு அழிகிறதே என்று வருந்திப் பரணர் பாடியுள்ளதைக் காணமுடிகின்றது.
நிறைவுரை
* எதிர் நாட்டினைக் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சியின் கீழ்க்கொண்டு வருவதே நோக்கமாக மன்னர்கள் செயல்படுவதால், தோல்வியுற்ற நாட்டின் நிலையினை எண்ணிப் பாருங்கள் என்று மன்னர்களுக்குப் புலவர்கள் சுட்டிக் காட்டியுள்ளதைக் காணமுடிகின்றது.
* யானைக்கு ஒத்த யானைகள் எப்படி மோதிக் கொள்கின்றனவோ, அதுபோல வீரத்தில் மன்னர்கள் தனக்கு ஒத்த மன்னருடன் மட்டுமே போரிடுவார்கள் என்பதை அறிய முடிகின்றது.
* ஒரு பெண்ணின் அழகை அடைவதற்குப் போரிட்டு ஊரையும், மக்களையும் தீக்கிரையாக்கும் சூழலைப் போரியல் உலகத்தில் மன்னர்கள் பின்பற்றியுள்ளதைக் காணலாம்.
* ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்ற பழமொழிக்கேற்ப, பல ஊர்களின் வளங்களையும், மக்களையும் மன்னர்கள் அழிப்பதற்குக் காரணம் பெண்ணின் அழகை அடையும் நோக்கு என்பதைப் பரணர் பாடலின் வாயிலாக உணர முடிகின்றது.
* பெண்ணிற்காக ஊரே அழிவதால் அப்படிப்பட்ட அழகு பொருந்திய பெண்ணை அவளின் தாய் பெறாமல் இருந்திருக்கலாம் என்று பரணர் புலம்புவதைக் காணலாம்.
* மன்னர்கள் மத்தியில் மண்ணாசைப் போரை விட பெண்ணாசைப் போரினால் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதை போரியல் உலகத்தில் காணமுடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.