பண்டைத் தமிழகத்தில் பாணர் வாழ்வு
முனைவர் சி. இராமச்சந்திரன்
ஆராய்ச்சி உதவியாளர்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.
முன்னுரை
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐவகை நிலங்களில் பல்வேறு இனமக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும், இவ்வைவகை நில மக்களின் பல்வேறு தொழில்கள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், வழிபாட்டு முறைகள் குறித்த பதிவுகளையும், பல நூற்றாண்டுகள் கழித்தும் நமக்கு உணர்த்தி நிற்பது சங்க இலக்கியமாகும். இவ்வைவகை நில மக்களாலும் ஆதரிக்கப்பட்டும் அரவணைக்கப்பட்டும் வாழ்ந்தவர்களாகப் பாணர்கள் அறியப்படுகின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களாலும் விரும்பப்பட்டுள்ளனர். நாட்டை ஆளும் வேந்தர்களாலும் ஆதரிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் இச்சங்க இலக்கியம் புலப்படுத்தி நிற்கின்றது. இவ்வாறு மக்களாலும் மன்னர்களாலும் போற்றிக் காக்கப்பட்ட பாணர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
இசைக்கலைஞர்கள்
யாழ், தண்ணுமை, வயிர் (ஊதுகொம்பு) முதலிய இசைக்கருவிகளை இயக்குவோர் இசைக்கலைஞர்கள் எனப்பட்டனர். இவர்கள் பொதுவாக இயவர், வயிரியர், வினையர் என அழைக்கப்படுகின்றனர்.
"தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம்குழல் ஆம்பலின் இனிய இமிரும்" (ஐங்.215:3-4, பதிற்.17:7, 19:7-8)
"புன்னை குறைந்த ஞான்றை வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.45:11-12, 155:13-15)
"கணையர் கிணையர் கைபுனை கவணர்" (நற்.108)
என்ற பாடல் வரிகளை நோக்கும் போது இயங்களை இயக்குவோரன்றி, பாடுவோரும் ஆடுவோரும் ஆகிய கலைவல்ல மக்களும் உள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. பாடல் வல்லாரைப் பாணன், பாடினி என்பர். பொருநர், கூத்தர், விறலி என்பார் ஆடற்கலையிலும் சிறந்தவர்களாக இருந்துள்ளனர். இந்நால்வகைக் கலைஞர்களும் ஒன்று கூடிச் சென்று ஊர் மன்றங்களில் தங்கி, தம் ஆடல் பாடல் திறம் காட்டிப் பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். விழா நாட்களிலும் இவர்தம் கூத்து நிகழ்ந்துள்ளதை சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. மேலும், அரங்கில் ஆடும் ஆடவன், கச்சு, கழல், மாலை முதலியன பூண்டிருப்பான் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. சிலப்பதிகாரக் காவியம் இதைப்பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றது.
"கச்சினன், கழலினன், தேம்தார் மார்பினன்
வகைஅமை பொலிந்த வனப்பு அமைதெரியல்
கரியல் அம் பொருநன்" (அகம்.79:7-9)
என்ற அகநானூற்றுப் பாடலால் இதனை அறியலாம்.
இசைக்கலைஞர்களின் நாடோடி வாழ்க்கை
இசையில் வல்லமை மிக்கவர்களான இம்மக்கள், ஊர் ஊராகச் சென்று ஆடல் பாடல் நிகழ்த்தியும், விழாக்காலங்களில் தமது கலைத்திறமையைப் புலப்படுத்தியும், மக்கள் ஆதரவையும் செல்வர்கள், மன்னர்கள் ஆதரவையும் பெற்று வாழ்ந்துள்ளனர். இதனால் பாணர், பொருநர், கூத்தர், விறலியர் என்னும் இவர்கள் ஒரு இடத்தில் நிலைத்து வாழாமல் நாடோடிகளாக வாழ்க்கை நடத்தியுள்ளனர். பல்வேறு காடு மலைகளைச் சுற்றித் திரிந்துள்ளனர். இவர்கள் வள்ளல்களை நாடிச் சென்று அவர்களின் புகழினைப் பாடிப் பரிசுபெற்றுள்ளனர் என அறியமுடிகின்றது.
“அறாஅ யாணர் அகன் தலைப்பேரூர்
காறு கழிவழிநாள் சோறு நசைஉறாது
வேறு புலம் முன்னிய விரகு அறிபொருந” (பொருநர்.1-3)
என்ற பொருநராற்றுப்படைப் பாடலடிகளும்
“அழியா விழவின் இழியாத் திவனின்
வயிரிய மாக்கள் பண்அமைத்து எழீஇ
மன்றம் நண்ணி மறுகு சிறைபடார்
அகன் கண் வைப்பின் நாடு” (பதிற்.29:7-10)
என்ற பதிற்றுப்பத்துப் பாடலடிகளும் இவர்களின் வாழ்வியலை உணர்த்துவதைக் காணலாம். மேலும், பழுத்த மரத்தைத் தேடியலையும் பறவையைப் போல தமக்கு ஆதரவு கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்ற வண்ணம் இருப்பர் என ஒரு பாணனைப் பிரிதொரு பாணன் அழைக்கின்ற போது அப்பாணன் சுற்றத்தாருடன் கூடிப் பிழைப்பிற்கு ஏற்ற இடம் நாடிச் செல்லும் தன்மையை,
“பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய் பாண” (பெரும்பாண்.4-6)
என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடலடியால் அறியமுடிகின்றது.
கலைஞர்களின் இசைக்கருவிகள்
இசைக்கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அக்கருவிகளைப் பையில் இட்டுத் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். கூத்தர்களின் தலைவன் ஒருவன் பல்வேறு இசைக்கருவிகளைப் பையிலிட்டுக் கட்டிச் சென்றதை மலைபடுகடாமில் பார்க்கமுடிகின்றது. முழவு, ஆகுளி (சிறுபறை), பாண்டில் (கஞ்சதாளம்), கோடு (கொம்பு), நெடுந்தூம்பு (நெடுங்கியம்), குறுந்தாம்பு, குழல்தட்டை (கரடிகை), எல்லரி (சல்லி), பதலை ஒருகண் மாக்கினை என்பனவும் பிற வாத்தியக் கருவிகளையும் பையில் இட்டுக்கட்டி எடுத்துச் சென்றுள்ளனர் கூத்தர். அக்கட்டுகள் பலாக்காய்க் கொத்துகளைப் போல காட்சியளித்ததை,
“திழுமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்ணதிர் இமிழ்இசை கடுப்பப் பண் அமைத்துத்
… … … … … … … …
கண்ணிடை விடுத்த குறும்பரந் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம்குழல் துதைஇ
நடுவுநின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்”
(மலைபடு.1-13)
என்கிறது மலைபடுகடாம்.
பொருநர், பாணர் என்போர் தம் கையில் தாங்கிச் சென்ற யாழின் வருணனையை ஆற்றுப்படை நூல்கள் எடுத்தியம்புகின்றன (பொருநர்.4-22, பெரும்பாண்.1-16). மேலும், சீறியாழ், பேரியாழ் என்னும் இருவகை யாழினைக் கொண்டு வாசிப்பதில் தனித்தன்மை பெற்றோர் முறையே சிறுபாணர், பெரும்பாணர் என அழைக்கப்பட்டனர். சிறுபாணன் வாள்நுதல், விறலியரும் சூழ்ந்துவர கூத்தச் சுற்றத்தாருடன் இருந்தமையையும்
(மலைபடு.40-50) பொருநன் பெருந்தகு பாடினியுடன் இருந்தமையையும் நோக்கின், பாணர், பாடினி, பொருநர், விறலியர், கூத்தர் இவர்கள் ஐவரும் ஒன்றாய் இயங்கி ஊர் மன்றங்களிலும் விழா நாட்களிலும் ஆடல் பாடல் நிகழ்த்தினர் என்பதை அறியமுடிகின்றது.
“பொன்வார்ந்தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”
(மலைபடு-21-37, சிறுபாண்.34-35)
என்ற பாடலடியும்,
“பெடைமயில் உருவின் பெருத்தகு பாடினி”
(பொருநர்.47)
என்ற பாடலடியும் கூத்தர், பாணர்களின் வாழ்வியலைப் புலப்படுத்துவதைக் காணலாம். இப்படி வாழ்க்கை நடத்தும் இவர்கள், தாம் செல்லும் வழிகளிலே ஒரு குழுவினர் பிறிதொரு குழுவினைச் சந்திப்பர். அப்படிச் சந்திக்கும் காலத்துப் புரவலர்களிடத்துப் பரிசில் பெற்று வருவோர் பெறாதார்க்குச் செல்லும் வழிகூறி, தமக்குக் கொடை நல்கிய பெருமகனின் கீர்த்தி முதலியனவும் அவர்க்கு உரைப்பர். இம்மரபு உட்கொண்டு எழுந்த இலக்கியமே ஆற்றுப்படை இலக்கியமாகும். இதனை,
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ
சென்று பயன் எதிர்ச் சொன்ன பக்கமும்”
(தொல்.பொருள்.புறத்.30)
என்று ஆற்றுப்படைக்கு இலக்கணம் வகுக்கின்றது தொல்காப்பியம். மேலும், இவ்வாற்ருப்படை இலக்கியங்களில் முன்னிலையில் வரும் ஒருமைச் சொல் பன்மைச்சொற் கண்டு முடிதல் நீக்கத் தக்கதன்று எனத் தொல்காப்பியர் வழுவமைதியைக் காட்டுகிறார். இதனை,
“முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கில் போற்றல் வேண்டும்”
(தொல்.சொல்.எச்ச.66)
என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறிய முடிகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, உரைகாரர் மலைபடுகடாம் என வழங்கும் கூத்தராற்றுப்படையை உதாரணங்காட்டுவர். இவ்வாறு சங்க இலக்கியம் இசைக் கலைஞர்களின் வாழ்வியற் கூறுகளை எடுத்தியம்புகின்றது.
பாணர்
பண்டைக்காலந்தொட்டு இசைக்கலையில் ஈடுபட்ட மரபினராக பாணர் விளங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இவர்களின் குலப்பெருமையினையும் பழமையினையும் ‘பாணன் பறையன் கடம்பன் துடிய’ என்ற புறநானூற்று அடிகள் புலப்படுத்துவதைக் காணலாம். மேலும், துடி அடிப்பவன் துடியன் என்றும், பறை கொட்டுபவன் பறையன் என்றும் குறிப்பிடப் பெற்றது போல பண் இசைப்பவன் பாணன் என்று அழைக்கப் பெற்றான் என்பதை அறிய முடிகின்றது. பாணர்களில் ஆடவரை சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப
(வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) என்கிறது பிங்கல நிகண்டு.
பாணருள் இசைப்பாணரும், யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) இருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் இசைப்பாணர் பாடற்பாணர், அம்பணவர், அகவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணர் யாழிசைத்துப் பாடுபவராவர். அவர்கள் வாசித்த யாழில் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவை சிறப்பாகக் கூறப்படுகின்றன. இந்நால்வகை யாழுள் பேரியாழ் வாசித்த பாணர் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழ் என்ற சீறியாழ் வாசித்த பாணர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். யாழ்ப் பாணர் யாழேயன்றிக் குழலையும் இசைக்கருவியாகக் கொண்டு தம் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. இதனை,
“குழலினும் யாழினும் குரல்முத லேமும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கை”
(சிலப்.35-37)
என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.
சென்னியர்
மண்டை என்னும் உண்கலத்தில் உண்ட காரணத்தினால் மண்டைப்பாணர் எனப்பட்ட இவர்கள் சென்னியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ் இசைப்பவர்களாகவும், கூத்து நிகழ்த்துபவர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. இதனை,
“பாணர் மண்டை நிறைய பெய்ம்மார்”
(புறம்.115)
“பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ”
(புறம்.235)
“மன்மகளிர் சென்னிய ராடல் தொடங்க
… … … … … … சென்னியர்”
(பரி.7:9)
“தெறலங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்”
(நற்.189)
என்ற சங்க இலக்கியப் பாடலடிகள் உணர்த்துகின்றன.
கோடியர்
கோடி (வளைந்த) ஆடுங் காரணத்தாலும், கோடு (ஊதுகொம்பு) இயக்கிய காரணத்தாலும் இவர்கள் கோடியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாணருள் ஒரு பிரிவினராவர். மேலும், இவர்களே முழவு முதலிய இசைக்கருவிகளை இசைத்துள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றது.
“குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த”
(சிறுபாண்.109)
“பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை”
(சிறுபாண்.125)
என்ற பாடலடிகள் கோடியரின் இசைப்புலமையை உணர்த்துவதைக் காணலாம்.
வயிரியர்
வயிர் என்ற ஊதுகொம்பு இசைக்கருவியுடன் தொடர்புடைய இவர்கள் வயிரியர்
(நற்.100:10, அகம்.45:11, 155:13, 328:1, புறம்.9:9, 164:12, பதிற்.20.16, 43:34) என்றழைக்கப்பட்டனர். இதனை,
“தேர் வணர் மலையன் முந்தை பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்”
என்ற பாடலடியால் அறியலாம்.
செயிரியர்
யாழ் முதலிய இசைக்கருவிகளைப் பொதுவாக இயக்கும் இவர்கள் செயிரியர்
(வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.326) என்றழைக்கப்பட்டனர்.
மதங்கர்
மாதாங்கி எனும் இசைத் தெய்வத்திற்குத் தம் கலைத் திறத்தால் வழிபாடியற்றிய ஆண் கலைஞர், மதங்கர் என்றும், பெண் கலைஞர் மதங்கி
(வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.326) என்றும் அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு பாணர்களில் பல பிரிவினர் இருப்பதையும், அவர்களின் இசைத்தொழில் திறன்கள் பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது.
பாணர்களின் வறுமை வாழ்வு
கேட்போர் பலரும் திறம் உணர்வோர் சிலருமாக இருத்தலின் இசைக்கலையைச்
“சில் செவித்தாகிய கேள்வி” (புறம்.68)
எனப் புறநானூறு பகருகிறது. எனினும், அக்கலையில் வல்லுநர்கள் தம் வாழ்க்கையில் ஒரு சீரான உயர்நிலை கொள்ளவில்லை. பாணர்கள் தூண்டில் முதலியவற்றைக் கொண்டு மீன் பிடிக்க, பாண்குல மகளிர் அம்மீனைக் கொண்டு போய் விற்றுவர, அதனால் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களாக இருந்தவர்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
“மீன் சீவும்பாண் சேரி” (புறம்.168)
“அஞ்சி லோதியசை நடை பாண்மகள்
இன்மீன் சொரிந்த பன்னெற் பெறூஉம்”(ஐங்.49, பெரும்பாண்.284-287)
பாணர் தம் பிழைப்பிற்காகப் பிறதொழில் நாடிய போக்கு அண்டை மாநிலமான கேரளத்திலும் காணப்பட்டது. கேரளத்தில் திருவரங்கப்பாணர், மீன் பிடிக்கும் பாணன், குடைக்கட்டிப் பாணன், புள்ளுவப் பாணன் என நான்கு பிரிவுகள் உண்டு. அவர்களுள் புள்ளுவப் பாணர் ஆடு மாடு மேய்த்து வரும் மலைச் சாதியினராய் மாறிவிட்டனர். இவர்கள், வில்கொண்டு பறவைகளை அடித்து வீழ்த்துவர். அந்த வில் நாணை விரல் கொண்டு மீட்டி இன்னிசை எழப் பாடுவர் என்ற குறிப்புகளை இசையும் யாழும் என்னும் நூலில் (இராகவன், இசையும் யாழும், ப.76) இராகவன் குறிப்பிடுகிறார்.
பாணர்களின் உணவு
பல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி அவர்களின் புகழினைப் பாடிப் பரிசுபெற்ற பாணர், அவள்ளல்களும் மன்னர்களும் அளிக்கும் கள்ளுணவினையும் புலால் உணவினையும் உண்டு மகிழ்ந்துள்ளனர். மிகச் சிறப்பான உபசரிப்பு பாணருக்கு கிடைத்துள்ளது என்பதைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. பாணர்கள் இத்தகைய மதிமயக்கும் கள்ளுண்பதில் ஆர்வமிக்கவர்களாக இருந்துள்ளனர் என்பதை,
“பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தெக்கள் தேறல்” (புறம்.115)
என்ற புறநானூற்றுப் பாடலடிகள் புலப்படுத்துகின்றன. புலமைச்சிறப்பும் மதுப்பழக்கமும் பழந்தமிழர் வாழ்க்கையில் அறக்கழிவாகக் கடியப்படவில்லை. எனவே, பாணர்கள் அவ்வகைப் பழக்கமுடையவர்களாய் வாழ்ந்ததில் வியப்பில்லை. பெரும்பாலும் வறுமையுடையவர்களாய் வாழ்க்கை நடத்தியுள்ளனர். இருந்தாலும் அவர்கள் செம்மைநெறியில் வாழ முயன்றுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. சிலர் கல்வி மேம்பாடுடையவர்களாய் புரவலர்களிடம் போற்றுதலைப் பெற்றுள்ளனர்.
பாணர் குலத்தில் பிறந்த ஒளவையார் அதியமானைப் பாடிப் பரிசில் பெற்றிருக்கிறார். அவனுக்குச் சிறந்த நண்பராயும் இருந்திருக்கிறார் என்பதை அறியமுடிகின்றது. மேலும், இசையாலும் கூத்தாலும் மக்களை மகிழ்வித்த பாண் மகளிர் வறுமையிலும் கற்பு மேம்பாடுடையவர்களாய்த் தம் வாழ்நாளைக் கழித்துள்ளனர் என்பதைச் சிறுபாணாற்றுப்படை (சிறுபாண்.30-31) குறிப்பிடுகின்றது. பாணர்கள் தம்மைப் புரந்த வள்ளல்களிடம் நன்றி மேம்பாட்டுடன் வாழ்ந்தமைக்கு இலக்கியங்களில் நிரம்பச் சான்றுகள் இருக்கின்றன. அதியமான் காரணமாக ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
வாயில்களான பாணர் வாழ்வு
அகத்துறையில் தலைமகனுக்கும் தலைவிக்குமிடையே தோன்றும் ஊடலைத் தீர்க்கும் வாயில்களாகத் தூதுவர்களாகப் பாணர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களே சில வேளைகளில் தலைவனைப் பரத்தையரிடம் கொண்டு சேர்த்த நிலையில் தலைவியின் சினத்திற்காளாக, இடித்துரைக்கப்பட்டுள்ளனர். பாணர்களின் இத்தகைய நிலையைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணலாம். பாணரைப் புலையன் என்று கலித்தொகையும் குறிப்பிடுகின்றது. இதனை,
“கல்லாவாய்ப் பாணர்” (கலித்.70)
என்பதாலும்,
“நாணிலை மன்ற பாண நீயே
கோணே ரிலங்குவளை நெகிழ்த்த
காணலந் துறைவற்குச் சொல்லுகுப் போயே” (ஐங்குறு.136)
என்ற ஐங்குறுநூற்றுப் பாடலடிகளாலும் ,
“புலையன்” (கலித்.67)
என்ற கலித்தொகைப் பாடலடியாலும் அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், அக இலக்கியங்களில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் வாயிலாக இருக்கும் பாணர் பரத்தையர், தலைவி, தோழி போன்றோரால் மிகவும் இழிவாகப் பேசப்படுவதைக் காணமுடிகின்றது. இதற்கான எதிர்வினை இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம். இதற்குக் காரணமாக அவர்களின் வறுமை நிலையையும் மிகச் சிறுபான்மைச் சமூகமாக இருப்பதையும் குறிப்பிடலாம்.
பாணரும் புலவரும்
வாய்ப்பாட்டுக் கலைஞர்களான பாணருக்கும், புலவர்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிகின்றது. அதாவது நாற்றமடிக்கும் சிப்பியினின்றும் மதிப்பரிய நன்முத்து வெளிப்படுவதே போன்று பாணர்களின் தாழ்ந்த வாழ்வியற்கிடையேயும், உயர்தரமான இசைமாட்சி வெளிப்பட்டது எனலாம். மேலும், முதிர்ந்த இசை மரபுகளைக் காலங்காலமாகக் காத்த பாணர்கள் தம் இசைக்கலை இன்பத்தை மக்கள் துய்க்குமாறு செய்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இதனை,
“துறைபல முற்றிய பைதீர் பாணரொடு” (மலைபடு.40)
என்று மலைபடுகடாமும்
“பாடுதுறை முற்றிய பயந்தெரி கேள்வி” (சிறுபாண்.226)
என்று சிறுபாணாற்றுப்படையும்
“மூவேழ்துறையும் முறையுளிக் கழிப்பி” (புறம்.125)
என்று புறநானூறும் குறிப்பிடுவதனால் அறியலாம். இதனால் பாணரின் இசைப் புலமையும் அறிவாற்றலையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
பாணர்களின் குறிக்கோள்
நாடோடிகளாய்த் திரிந்த பாணர்கள் மிகுந்த இசைப்புலமையும் கலைத்திறனும் மிக்கவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பிக்கப் பெற்றுள்ளனர். உணவளித்து உடைகள் வழங்கி புத்துயிர் பெற்று வாழ்ந்திருக்கின்றனர். தாம் பாடியும் இசைத்தும் பெற்ற அரிய பரிசுப்பொருளைத் தம்மைப் போல் வறுமையில் வாடும் பிற இசைக்கலைஞர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். தமக்கென்று பெரிதாக ஒன்றும் சேர்த்து வைக்கும் குறுகிய மனம் அவர்களிடம் இல்லை என்பதைச் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. மேலும், பாணர் தம் குறிக்கோளானது தம் கலையாற்றலைப் பல்லோர்க்கும் புலப்படுத்த வேண்டும் என்பதாகவே இருந்துள்ளது. அதற்காகத் திருவிழா நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று தம் திறனை வெளிப்படுத்துவதில் தனியார்வங்காட்டியுள்ளனர். வயிறாரச் சோறு கிடைக்குமிடங்களில் மனநிறைவுடன் தங்கிவிட இவர்கள் திட்டமிடுவதில்லை. அத்தகைய சுவை உணவுக்கு மயங்கி ஓரிடத்தில் கிடக்காத இவர்களைப் பற்றி,
“அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருநர்.1-3)
என்னும் பொருநராற்றுப்படை வரிகள் புலப்படுத்துகின்றன.
கலை நாட்டங்கொண்ட பாணர்கள் தம் கலை நேர்த்தியை உணர்ந்து போற்றும் புரவலர்களை நாடிச் சென்றுள்ளனர். கலைஞர்களின் தேர்ந்த புலமையைச் சுவைக்க விரும்பிய புரவலர்களும் வரவேற்று அவர்களுக்கேற்ற இனிய சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதை இதனால் அறிந்து கொள்ள முடிகின்றது.
கலைக்காகவே தம்மைக் கரைத்துக்கொண்டு காடு, மலைகளைக் கடந்து சென்று தம் இசையை வெளிப்படுத்திய பாணர்கள், இசைக்கலையைத் தொழிலாகக் கருதாமல் உயிராகக் கருதியிருக்கின்றனர். இக்காரணத்தினால் தான் பல நூறாண்டுகள் கழித்தும் பாணர்கள் மறக்கப்படாமல் தமிழர்களின் மனங்களின் நிறைந்திருக்கின்றனர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.