பழந்தமிழரின் பல்துறை அறிவு மரபு
கு. பிரகாஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர்(ப/நே), தமிழ்த்துறை,
அ. அ.அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்-636 121.
முன்னுரை
மனித வாழ்வில் அடிப்படைத் தேவைகளின் நிறைவிற்காகவும், கால மேலாண்மைக்காகவும் பல்வகைத் தொழில் முறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஒரு சமூகம் ஆட்படுகிறது. அதன் விளைவால் உலகில் பல புதிய துறைகளின் அறிமுகம் ஏற்படவும், அதனோடு தொடர்புடைய இன்னபிற துறைகள் தோன்றவும் செய்கின்றன. புதியத் துறைகளின் விருப்பத்தையும், பல அறிவையும் தனக்கு மட்டுமே உரிமையுடையது என்று ஒரு சமூகம் காத்துக் கொள்ள முனைகிறது. இதனால்தான் அனைத்து நிலைகளில் தன்னிறைவு என்ற தம் இலக்கை அடைவதில் உலக அரங்கில் முன்னணியில் திகழ்வதைக் காணமுடிகிறது. அந்த வகையில் பழந்தமிழரின் சமூகம் பல்துறை அறிவினோடு சிறந்து விளங்கியதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன. பலவகையான துறைகளைப் பற்றிய அறிவால் சமூகத்திற்குத் தேவையான நன்மை, தீமைகளை முன்கூட்டியே அறிந்து, அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்துவதில் பழந்தமிழர்கள் முதன்மையானவர்களாகத் திகழ்கின்றனர். அதுமட்டுமின்றி, பேரிடர்களாலும் வறட்சி போன்றவற்றால் ஏற்படும் சமூகச் சிக்கல்களை எதிர்கொள்ளும் வன்மையைப் பெற்றனர்.
பழந்தமிழரின் சமூக மேம்பாட்டை மையமாகக் கொண்ட பல்துறை அறிவையும், பொருளாதார மேம்பாட்டினையும், தொழில்துறை சார்ந்த வளர்ச்சியையும் வைத்து இக்கட்டுரை அமைகிறது.
சூழல் அறிவு
உலகம் உருண்டை வடிவானது. அது மாபெரும் நெருப்புக் கோளாமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு, நெருப்பு உருண்டையாக ஒரு ஊழிக்காலம் விண்ணில் சுழன்று கொண்டிருந்தது. நாளடைவில் மேற்பகுதி வெப்பம் குறைந்து பனிப்படலமாகப் படிய ஒரு ஊழிக்காலம் எடுத்துக்கொண்டது. அதன்பின், பனி உருகி நீராக மாற தரைப்பகுதி தலைதூக்க அதில் உயிரினங்கள் உருவாகலாயின என்று உலகத்தின் உயிரினத் தோற்ற வரலாற்றை,
“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயர் தலைஇய ஊழியும்” (பரிபாடல் 2:5-6)
என்று கூறுவதை இன்றைய அறிவியல் அறிஞரும் வியக்கும் அளவிற்குப் பழந்தமிழரின் உயிரினத் தோற்றம் பற்றிய அறிவு விரிவானது.
நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பனவற்றைப் பற்றிப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். நிலம் முதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலகமென்பதைக் கண்டனர்.
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்” (தொல்.1589)
நிலம் பல அணுக்களால் செறிந்தது என்றும், ஆகாயம் அந்நிலத்தில் உயர்ந்து, பரந்து விளங்குவது என்றும், காற்று அவ்வாகாயத்தைத் தடவிக்கொண்டு வரும் என்றும், காற்றின்று தீ பிறக்கும் என்றும், தீயோடு மாறுபட்டு நீர்விளங்கும் என்றும், இவை ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் தோற்ற வளர்ச்சிநிலை என்பது பழந்தமிழரின் அறிவியல் தேடலின் உண்மையாகும். இதனை,
“மண்திணிந்த நிலனும்” (புறம்:2:1-6)
“நீர்நிலந் தீவளி விசும்போடு ஐந்தும்
அளந்துகடை அறியினும் அளப்பருங் குரையை” (பதிற். 24:15-16)
என்ற அடிகள் காட்டுகின்றன. இதன் மூலம் பழந்தமிழர்கள் ஐம்பூதங்களையும், அதன் தன்மைகளையும் அளந்து காணமுயன்றனர் என்பது சூழல் நிலையின் அறிவாகும்.
ஆகாய அறிவு
பழந்தமிழர்கள் எந்த ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கிற ஆகாயத்தைப் பற்றியும் அறிந்துள்ளனர். அதில் விளங்கும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் முதலியவற்றின் செலவினையும் (பயணம்) பற்றியும் ஆராய்ந்து அறிந்திருந்தனர். காற்று இயங்குகின்ற திக்குகளையும், காற்று இல்லா அண்ட வெளியையும், சூரியனது வீதியையும், இயற்கை ஒளிபெற்ற கோள்களையும், சூரியனிலிருந்து ஒளிபெறும் மீன்களையும் அறிந்திருந்தனர். வானவியலைப் பற்றிய அறிவியல் நூல்களும் அக்காலத்து இருந்தன.
“செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்” (புறம்:301-5)
என்று புறநானூறுற்றுப் பாடலடிகள் இக்கருத்தை எடுத்துக் காட்டுகின்றன.
இயற்கை நிகழ்வு அறிவு
இயற்கையின் மாற்றத்தினைக் காட்டும் கோள்களின் நிலையை ஆய்ந்தனர். கோள்களின் விண்மீன்களின் அமைப்பினையும், தன்மையினையும் எரிக்கற்களின் செயல்பாடுகளையும் நன்கு அறிந்து அதனால் நாட்டில் நிகழவிருக்கும் நன்மை தீமைகளைக் கணித்தனர். வானில் இயற்கைக்கு மாறாக நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப, நாட்டில் இயற்கை முறைமையிலும் மாற்றம் ஏற்படும் என்பதனையும் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
மழை பெய்யும் என்பதனை இயற்கையில் நிகழும் வெள்ளி என்னும் சுக்கிரன் வடப்பக்கம் தாழ்வாக இருக்கும் என்றும், தெற்கு சாய்ந்தால் மழை பெய்யாது என்றும் பழந்தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.(பதிற்.24:23-28, புறம்.3:6-8, 117:1-3) பசும்பயிர்கள் அழிந்துவிழும் என்பதற்கு இயற்கையில் நிகழும் எரிநட்சத்திரம் விழும் போதும், இந்த எரிக்கல் விழுவது பின்னொரு நாளில் நிகழப்போகும் தீமையின் அறிகுறியாகும் என்பதனையும் (புறம்.229) கண்டறிந்தனர்.
வெள்ளி தனக்கேயுரிய இடத்தில் நின்று, மற்ற கோள்களும் அவ்வற்றிற்குரிய இடத்திலே நின்றால் மழைபொழிவது தப்பாது என்பது தமிழர்கண்ட இயற்கை அறிவாகும்.
கோள்நிலையில் தீமை விளையாத நல்ல நாளினை அறிந்து, அந்நாளிலே திருமணத்தைச் செய்தனர் பழந்தமிழர் (அகம்.86:6-7). இயற்கையில் நிகழும் வேறுபாடுகளை முன்கூட்டியே கணித்து தம் அன்றாடச் செயல்பாடுகளை முறைப்படுத்திக் கொண்டனர்.
வானில் விண்மீன்கள் முறை திரிந்ததனால் நாட்டிற்குத் தீமை விளையும் என்று மக்கள் வருந்தியிருக்க, அவர்கள் வருந்தியபடியே நாட்டை ஆளும் மன்னன் இறந்துபட்ட வரலாற்றுச் செய்தியும் உண்டு (கூடலூர் கிழார்) இன்றளவும் வியந்து பார்க்கும் அண்ட வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே காற்று இல்லாத நிலையினைப் பழந்தமிழர்கள் அறிந்தனர். அந்தப்பகுதியை “வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” (புறம்.365:3) என்கிறார் மார்க்கண்டேயனார்.
நில அமைப்பு(புவியியல் அமைப்பு) முறை
பழந்தமிழர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தால், இந்த உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிந்தனர். இதனை,
‘‘பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து’’
(புறம்.213:2)
‘‘முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ”
(புறம்.1-2)
‘‘இமிழ்கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கை”
(புறம்.19:1-2)
என்று சான்றுகள் காட்டுகின்றன.
அது மட்டுமல்லாமல், கடலியல், வானவியல், உலகியல், காலநிலையியல் என்ற பல்துறையிலும், தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தியதையும் ஒவ்வொன்றின் தன்மையையும் அளந்தறிய முயன்றதையும்,
“இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்”
(புறம்.20:1-5)
என்ற அடிகள் சுட்டுகின்றன.
தென்குமரியிலிருந்து வடபெருமலையாகிய இமயம் வரையிலும், கிழக்கும் மேற்கும் அமைந்த கடல் எல்லை வரையிலும் உள்ள குன்று, மலை, காடு, நாடுகளைப் பற்றிய புவியியல் அறிவினைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் என்பதை,
“தென்குமுரி வடபெருங்கடல்
குணகட லாவெல்லை
குன்று மலை காடுநாடு
ஒன்றுபட்டு வழிமொழிய”
(புறம்.17:1-4)
என்று குறுங்கோழியூர்கிழார் கூறுகிறார். மேலும் இமையவரம்பன் இமயமும் குமரியும் கொண்ட எல்லையில் பெரிய புகழையுடையவன்.
இப்புகழ்பெற்ற நில அமைப்பில் தமிழ் வழங்கிய இடங்களையும் வகுத்துக் கண்டனர்.
“வையக உரைப்பில் தமிழகம் கேட்ப”
(புறம்.168:18)
“தண்டமிழ் வேலித் தமிழ் நாட்டகம்”
(பரி.8:1)
“தமிழ் அகப்படுத்த இமில்இசை முரசின்”
(அகம்.227:14)
என்று தமிழ் வழங்கிய இடங்களை மொழிகிறது இலக்கியம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரும்,
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து”
(தொல்.சிறப்புப்பாயிரம்)
என்று தமிழ் வழங்கும் நிலத்தினை வரையறுத்துள்ளார்.
வரலாற்றுப் பதிவு அறிவு
நிகழ்கால சமூகத்தைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்வதிலும், தனக்கு முன் நிகழ்ந்த வரலாற்றை மக்களிடையே பரப்புவதிலும் உள்ள முக்கியத்துவத்தை பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். புலவர்கள் தங்கள் பாடலில் நாட்டின் வரலாறு, அரசின் வரலாறு, சமூக நிகழ்வுகள், நீதி தவறுதலால் எற்பட்ட இன்னல்கள், சிறந்த போர்கள் போன்றவற்றையும் பதிவு செய்து மக்களுக்கு வரலாற்று அறிவினைப் புகட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வரலாற்றினைப் பதிவு செய்வதில் பரணர் சிறப்பிடம் பெற்றவராவார்.
கங்கையையும் இமயத்தையும் தாண்டி, அதற்கப்பால் உள்ள நிலப்பரப்பிற்கும் மக்கள் சென்று வந்துள்ளதோடு, ஆண்டுள்ள செய்திகளையும் தமிழகத்தில் பரப்பினர். தாம் ஆண்ட நிலப்பரப்பிற்கு அப்பால் நான்கு திசைகளிலிருந்தும், உலகப் பகுதிகளைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும் உள்ளன.
உயிரினங்களின் அறிவு மரபு
பழந்தமிழர் தாவரம், விலங்கினம் தொடர்பான உயிரியில் அறிவினைக் கொண்டுள்ளனர். உயிர்களின் அறிவு அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி அறிந்திருந்தான் என்பதை,
“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
… … … … … … … … … … ” (தொல்.1526)
என்று எடுத்துரைப்பார் தொல்காப்பியர். விலங்குகளின் தன்மைகளை விளக்கும் நூல்கள் இருந்தன. அதிகம் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்பட்ட குதிரை என்ற விலங்கிற்கு இலக்கண நூல்கள் இருந்ததை உணரமுடிகிறது. ‘நூல் அறி வலவ’(அகம், 114:8), நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி(அகம், 314:8), ‘வளைகண்டன்ன வானுளைப் புரவி’(பெரும்பா.486-487) என்று இலக்கியங்கள் காட்டுகின்றன.
யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுப் போரில் ஈடுபடுத்தப்பட்டன. அதற்கான பயிற்சியை வழங்கப் பயிற்சி பெற்றோர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், ‘விரவு மொழி பயிற்றும் பாகர்’ எனப்பட்டனர்.(மலைப்படு.327)
நாய்க்கு பயிற்சி அளித்து வேட்டையாடுதலுக்குப் பயன்படுத்தினர் என்பதை, ‘நாய் பயிர் குறிநிலை கொட்டு கோடே’ (அகம், 318:15) எனும் பாடலடியில் அறியமுடிகிறது. குதிரை, நாய், யானை போன்ற விலங்குகள் மட்டுமல்லாமல் பறவைகளுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டன. குருவிக்கூட்டம் கிளிகள் போன்றவற்றையும் அறிந்து பயன்பாட்டிற்கு வைத்திருந்தனர். ஒவ்வொரு உயிர்கள் பற்றிய அதன் செயல்பாடுகளைக் கொண்டே ஆரோக்கியம், நோய் தாக்குதல், உடல்நிலை, பசி போன்றவற்றை அறிந்து கொண்டனர். ‘பசித்த யானைப் பழங்கண் அன்ன’ (அகம்.32:1.1), நண்டு பிறக்கும் போது தாய் இறந்துபடும் என்பதையும், முதலை தன் குட்டிகளைத் தின்னும் என்பதையும் அறிவித்தனர். (ஐங்குறு.24:3,4 41:3)
தாவரம் பற்றிய அறிவை பழந்தமிழனை விட இன்றளவும் வேறு யாரும் ஆய்வு செய்யவில்லை என்பதற்கு 99 வகையான மலர்களைப் பற்றிய பெயர் பட்டியலிட்டுக் காட்டுவார் கபிலர். (குறிஞ்.61-97)
எண்ணியல் அறிவு
எண்ணும் எழுத்தும் கற்றவர் நாட்டில் நிரம்பி இருந்தனர் என்பதை,
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள்,392)
என்று கூறுவர் வள்ளுவர். எண்களாகிய ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், நூராயிரம், கோடி என்ற பெயர்களும் நெய்தல், குவளை, சங்கம், தாமரை, வெள்ளம், ஆம்பல், ஊதி என்ற பேரெண்களும் பழந்தமிழரின் எண்ணியல் அறிவினைக் காட்டுகின்றன. நாழி, கலம், மா, செறு, துலாம், கழஞ்சி முதலிய அளவைப் பெயர்களும் வழக்கத்தில் இருந்தன என்று பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
மருந்தியியல் அறிவு
முதலில் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து, நோயின் காரணம் எது என்பதை அறிந்து, அதனைத் தணிப்பதற்குரிய வழியைக் கண்டு, அந்த வழியையும் நோயாளியின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என மருந்தியலுக்கான இலக்கணத்தை வகுத்தவர் வள்ளுவர். இதனை,
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
(குறள்,948)
என்பதில் அறியலாம். மேலும் மருத்துவன் நோயுற்றவனின் வயதினையும் நோயின் அளவையும் காலத்தையும் ஆராய்ந்து செயல்படவேண்டும் என்ற அறிவையும்,
“உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்”
(குறள், 949)
என்று குறிப்பிடுகிறார். மேலும், நோயாளி வேண்டுவனவற்றை அளிக்காது, நோய்க்குத் தகுந்த நல்மருந்தினை ஆராய்ந்து கொடுத்து உடலை நோயிலிருந்து காத்துள்ளனர். இதனை,
“… … யாக்கையுண் மருத்துவ னூட்டிய
மருந்து போன் மருந்தாகி”
(கலித்.17:19-20)
என்ற பாடலிருந்தும்,
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல”
(நற்றி.136:2-3)
என்ற பாடலிலிருந்தும் அறியலாம்.
இயற்கையான மருந்துகளைப் பயன்படுத்தத் தாவரங்களை தம் ஆய்வால் அறிந்து பயன்படுத்தினர். நாடும் நாட்டு மக்களும் வளமாக வாழ மருந்தியியல் அறிவு இன்றியமையாதது. இத்துறை தொல்காப்பியர் காலந்தொட்டே இருந்தன என்பது அறிவாகும்.
“உரும் அயலும் சேரியோடும்,
நோய் மருங்கு அறிநரும்”
(தொல்.144)
என்று வெளிப்படுத்துகிறது.
உலோகவியல் அறிவு
பூமிப்பரப்பில் பரவிக்கிடந்த தாதுக்களைக் கண்டறிந்து அவற்றை வெட்டி எடுத்தும், உருக்கியும், பிரித்தெடுத்தும், பிரித்தெடுத்த பல்வேறு உலோகங்களைக் கொண்டு கருவிகள், அணிகலன்கள், எந்திரங்கள், இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள், படைக்கலன்கள் என்று பலவற்றைத் தோற்றுவித்தும் பயன்படுத்தவும் கற்று அறிந்திருந்தனர்.
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவற்றின் உற்பத்தியும் அவற்றினாலியன்ற அணிகலன் முதலிய கருவிகளின் பயன்பாடும் அதனை விற்பனைக்குத் தனியே தெருக்கள் அமைத்திருந்தனர். பொன்னின் தரத்தைக் கான ‘கட்டளைக் கல்’ பயன்படுத்தப்பட்டது. கொல்லன், கம்பியன் ஆகியோர் உலோகத் தொழிலில் ஈடுபட்டனர்.
நுண்கலையியல் அறிவு
மிக நுணுக்கமாகச் செயல்படும் கலைகளை நுண்கலை என்பர். இதில் இசை, ஓவியம், சிற்பம், கட்டடம், நடனம் போன்றவை அடங்கும். மிகச் சிறப்புமிக்க வகையில் கைவினைப் பொருள் உற்பத்தித் துறையிலும் பழந்தமிழர் செயல்பாடுகள் காணப்படுகின்றன.
பழங்காலத்திலிருந்து கட்டடக்கலை தொடர்பான நூல்களைப் பற்றியப் பழந்தமிழ் இலக்கியங்கள் சில சான்றுகளைக் காட்டுகின்றன. மனை வகுப்பதற்கென்று தனி இலக்கண நூல் இருந்ததையும், அந்நூலில் தேர்ச்சிப் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. ‘நூலறிபுலவர்’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஓவியம் வரைவோர் ‘கண்ணுள்வினைஞர்’ எனப்பட்டனர். (மதுரைக்காஞ்சி, 516-18) சுவர் ஓவியம், மணல் ஓவியம், தூணோவியம், தோலோவியம், துணியோவியம் எனப் பல நிலைகளில், பல தன்மையிலான ஓவியங்களை பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படுகின்றன.
திருப்பரங்குன்றத்தில் உள்ள சித்திரச் சாலையைப் பரிபாடல் காட்டுகிறது. ‘புனையா ஓவியம்’ (நெடுநல்.147) கோடுகளாலான, வண்ணம் தீட்டப்படாத ஓவியம் என்பர். ‘ஓவச் செய்தியின் ஒன்று நினைத்து ஒற்றி’ (அகம், 5:20) என்பதில் ஓவியத்தின் முகத்தில் தோன்றும் மெய்ப்பாட்டால் அதன் உள்ளத்துக் கருத்துக் காண்பவர்க்குச் சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஏர்த்தொழிலிலும், போர்த்தொழிலிலும் இசை முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆடலும், பாடலும் இசைத்தலும், பொழுது போக்கின் முக்கிய நிகழ்வுகளாய் அமைந்தன. சங்க இலக்கியம் 24 ஆண் கலைஞர்களையும், 6 பெண் கலைஞர்களையும் பதிவுசெய்துள்ளது. (சங்க இலக்கியத்தில் இசை, ப.309) இசை தொடர்பான நூல் இருந்ததை,
“நல்இசை நிறுத்த நயம் வரு பனுவல்
தொல்இசை நிறீஇய உரைசால் பாண்மகள்” (அகம்.352:13-14)
என்ற அடிகள் காட்டுகின்றன.
அழகியல் கலையில் ஆடவரும், பெண்டிரும் தமது தலைமுடியை அழகுபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பெண்கள் நீராடிய பின் தமது கூந்தலைக் கையால் கோதிவிட்டு உலத்தியும், அதற்கு நறும்புகை ஊட்டியும் பேணிக் காத்தனர். எண்ணெய் தடவியும், மயிர்ச்சாந்து அணிந்தும் இருந்ததை (புறம்.279:9, குறிஞ்.108, பதிற்.89:16) சுட்டிக்காட்டுகின்றன. கத்திரியினால் வெட்டிப் பல்வேறு வகையில் அலங்காரம் செய்து கொண்டனர். (புறம்,257:5, 83:11, அகம்.297:5-6)
பழந்தமிழர்கள் பல்துறையிலும் ஆய்ந்து கொண்டதில் மனித ஆற்றலுக்குக் கட்டுப்படாத சிலவற்றையும் சுட்டிச்சென்றனர்.
“நீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளிமிகின் வலியும் இல்லை” (புறம், 51:1-3)
என்ற அடிகள் இயற்கை பற்றிய ஆய்வாக அமைகிறது. நீர், தீ, காற்று, என்ற மூன்றும் மனிதனின் ஆற்றலுக்குக் கட்டுப்படாதிருப்பதையும், இவை சீற்றங்கொள்ளுமானால், அதனால் ஏற்படும் தீய விளைவுகள் அதிகம் என்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர்.
இவைபோன்ற எண்ணற்றத் துறையிலும் பழந்தமிழர்கள் தங்கள் அறிவைச் செலுத்தியுள்ளனர் என்பது இலக்கியங்கள் வழி அறியப்படுகின்றன.
முடிவுரை
பல்வகையான பொருட்களைக் கண்டறியவும், உற்பத்தி செய்யவும், அவற்றின் பயனை அனுபவிக்கவும், அவற்றால் மற்ற தேவைகளை நிறைவு செய்யவும், தன்னை உலக அரங்கில் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்வதில் பழந்தமிழர்கள் முதன்மையானவர்களாக இருந்துள்ளனர்.
மேலும், அக்கால மக்களின் நுகர் சக்தியின் தேவையை நிறைவு செய்யவும் மற்ற நாட்டின் தொழில் நுட்பத்தையும், தொழில்துறையும் சார்ந்திருக்காமல், தன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு அறிவை பயன்படுத்தியுள்ளனர். பல்துறைத் தொழிலில் சிறந்து விளங்கும் நாடுகளின் பிடியிலிந்து நேரடித் தலையீட்டை தடுத்து, மீளாக் கடனாளியாக்காமல் மக்கள் நலத்தினைப் பேணிக் காப்பதில் பழந்தமிழர் அறிவு சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவு. பல்துறை அறிவைப் பெற்று தம்மை இவ்வுலகத்திலிருந்து என்றும் அழியாப் புகழைக் கொண்டவர் பழந்தமிழர் என்பதனை இக்கட்டுரையின் மூலம் உறுதிப்படுத்தலாம்.
துணைநூற்பட்டியல்
1. அகநானூறு, உ.வே.சாமிநாதர் நூல் நிலையம், சென்னை, பதிப்பு:1990
2. கலித்தொகை மூலமும் உரையும், மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2000
3. சங்க இலக்கியத்தில் அறிவியற்கலை, பி.எல்.சாமி, சேகர் பதிப்பகம், பதிப்பு:1928
4. தொல்காப்பியம் தெளிவுரை, ச.வே.சுப்ரமணியன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2003
5. திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2001
6. நற்றிணை மூலமும் உரையும், எச்.வெங்கடராமன், உவே.ச.நிலையம், சென்னை, பதிப்பு:1990
7. பத்துப்பாட்டு(மூ.உ),உ.வே.சாமிநாதர், உவே.ச.நிலையம், சென்னை, பதிப்பு:1931
8. புறநானூறு(மூ.உ), உ.வே.சாமிநாதர், உவே.ச.நிலையம், சென்னை, பதிப்பு:1971
9. தமிழில் அறிவியல் அன்றும் இன்றும், ந. சுப்புரெட்டியார், உலகத்தமிழ் ஆராயச்சி நிறுவனம், சென்னை, பதிப்பு:1990

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.