வேளாண்மைத் தீர்வுகள் - அன்றும் இன்றும்
கு. பிரகாஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர்(ப/நே), தமிழ்த்துறை,
அ. அ.அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்-636 121.
முன்னுரை
இன்றைய வேளாண்மையில் ஏற்படும் சிக்கல்களும் அழிந்து வரும் விவசாயச் சூழல்களும், இதனால் நாளைய தலைமுறைக்கு உண்டாகும் தீங்குகளும் அவற்றால் ஏற்படும் விளைவுகளும், என்னவென்பதனையும், அடுத்தத் தலைமுறைக்கு வேளாண்மையில் சிக்கல்கள் இல்லாத தீர்வுகளைப் பழந்தமிழன் மேற்கொண்ட வழியில் நிலைகாட்டுவது இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர்கள் உழவுத் தொழிலை மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். அவர்களின் வேளாண் மரபுகள் வியக்கத்தக்கனவாகத் திகழ்ந்திருப்பத்துடன், வேளாண்மை குறித்த, அனைத்து விதமான அறிவிலும், தொழில்நுட்பத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்றால் அது மிகையே!
வேளாண் மரபு
‘வேளாண்மை’ என்ற சொல்லைத் தொல்காப்பியரும், சங்கப் புலவர்களும், திருவள்ளுவரும் பல்வேறு பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள்.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப” (தொல்-மரபு-84 நூற்பா)
“வேளாண்மை செய்வோர் தனக்காகவும், பிறர்க்காகவும் உழுது விளைவிப்பர்” என்று கூறுகிறது. வேளாண்மை என்ற சொல்லுக்கு - உதவி, கொடை, ஈகை, மெய் என்ற பொருள்களும் உள்ளன.
வேளாண்மையால் உண்டான தொழில், வேளாண்மை என்பது ஆதித்தொழில். இத்தொழில் பல கிளைத் தொழில்களைத் தம்முள் அடக்கியது. அவை;
1. கால்நடை வளர்ப்பு
2. கோழி வளர்ப்பு
3. காடு வளர்ப்பு
4. மீன் வளாப்பு
அடிப்படை இயற்கை அறிவு
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே” (புறம்: 18:21) என்ற தொடர் ஆழ்ந்த பொருள் உடையது. “நீரும் நிலனும் புரை ஈண்டு, உடம்பும் உயிரும் உருவாகும்” (புறம்: 18:22, 23)என்ற சிந்தனை, “பழந்தமிழர்களுக்கு அடிப்படை இயற்கை அறிவாக இருந்திருக்கிறது”
பூமிப்பந்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்களாகப் பழந்தமிழர்கள் பிரித்திருந்தனர். பூமியின் இயற்கை அமைப்பை உணர்ந்து கொண்டு வேளாண் நுட்பம் துவங்குகிறது.
உழவுத் தொழிலுக்கு நிலத்திற்கு அடுத்தப்படியாக இருக்கும் நீர், மழைப் பொழிவின் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் அருவிகள், ஆறுகள், ஓடைகள் மூலம் உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டது. அடுத்து நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கிணறுகள், சுனைகள் மூலம் பெற்றுச் சங்கால மக்கள் வேளாண்மை செய்தனர்.
கால நிலை அறிவு
‘காலம்’ உழவுத் தொழிலில் முக்கிய இடம்பெறுகிறது. காலத்தை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று பிரித்துக் கொண்டு தட்ப வெப்பத்திற்கு ஏற்றவாறு பழந்தமிழர்கள் வேளாண்மை செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.
பழந்தமிழர்கள் ‘நிலம், நீர், காலம்’ என்று மூலக்கூறுகளைப் பிரித்து அறிந்து கொண்டது சாதாரண நிகழ்வு அல்ல. இது ஒரு அடிப்படை அறிவியலாகும். இந்தப் பிரிவுகளின் அடிப்படையில் வேளாண்மை செய்தது ஒருவித வேளாண்மை அறிவியலாகும்.
பருவத்தேப் பயிர் செய்
மழை இயக்கத்தின் காலத்திற்கு ஏற்பப் பயிர்செய்தல் வேண்டும். பண்டைய நாளில் பருவம் தொடங்கும் முன், மழை பெய்யும் வாய்ப்பினை மேகத்தின் இயக்கத்தைக் கொண்டு கணித்து அறிந்தனர்.
அறுவடையின்போது “இரவு நேரங்களில் பலா மரத்திலுள்ள மின்மினியின் ஒளியில் மேகமண்டலத்தின் இயக்கத்தை அறிந்து மழை வராது” என்று தெரிந்துகொண்டு அறுவடையைத் தொடங்கினர் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வழி அறியலாம்.
“குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்து
செல்மழை இயக்கம் காணும்”(நற்றிணை பாடல் 44: வரிகள் 9-11)
நன்செய் - புன்செய் - விருநிலம்
நன்செய் - கழனி, பழமை, வயல், செறு என்று வழங்கியிருக்கிறார்கள்.
புன்செய் - தோட்டப்பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம் இதனைப் படப்பை என்று அழைத்திருக்கிறார்கள்.
விருநிலம் - ஊரில் உள்ள கால்நடைகளுக்கு என்று தனியே ஒரு நிலப்பரப்பை மேய்ச்சல் நிலம் என்று ஒதுக்கி இருக்கிறார்கள். இந்நிலத்திற்கு ‘விருநிலம்’ என்று பெயர். பொதுவில் உள்ள இந்நிலத்தில் யாரும் பயிர் செய்யக் கூடாது என்று எழுதாத சட்டமும் இருந்திருக்கிறது. கால்நடைகளின் மீது அன்றைய மக்கள் கொண்ட அன்பை இச்செய்தி தெரிவிக்கிறது.
நீர்த்தேக்கம்
அன்றும் இன்றும் வேளாண்மைக்கு முக்கியக் காரணியாக ‘நீர்த்தேக்கம்’ இடம் பெறுகிறது. கேணி, கூவல், குளம் போன்ற செயற்கை நீர்நிலைகளை அமைத்து சங்க கால உழவர்கள் ஆற்றுநீரைத் தேக்கி உள்ளார்கள்.
குளங்களை வெட்டும் போது இருபுறமும் இயற்கை அரண்களாகக் குறுமலைகள் உள்ள பரந்த பகுதியின் குறுக்கே வில் வடிவில் (எட்டாம் நாள் பிறை வடிவம்) கரைகள் அமைத்திருக்கிறார்கள். இன்றும் அணைகள் கட்ட இத்தகைய நில அமைப்பையேப் பொறியாளர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வியப்பாக உள்ளது.
அன்றைய நீர்நிலைகள் யாவும் தனி உடமையாக இல்லாமல், பொது உடைமையாக அல்லது அரசுடைமையாகவே இருந்தன. அரசர் அதற்கென்று தனியாகக் காவல்காரர்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியமும் கொடுத்து வந்திருக்கின்றார் என்பதை கீழ்க்காணும் பாடல் தெரிவிக்கிறது.
‘மாரிக் குளத்து காப்பான் அன்ன” (ஐங்குறுநூறு பாடல் 206, வரி 2)
இன்றும் நீர் மேலாண்மைத்துறை சார்ந்து ஊழியர்களை நியமித்து, அவர்களுக்கு அரசு ஊதியமும் கொடுத்து வருகிறது. ஆனால் நீர்நிலைகள் எங்குள்ளது? அவை யாரிடம் உள்ளது என்று நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
உழவு முறை
‘உழவு’ என்ற சொல்லின் செயலும், பொருளும் இன்றும் மாறாமல் உள்ளது. இன்று மகசூல் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், உழவுத் தொழில் அழிந்து வருகிறது. அன்றும் மகசூல் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டன. உழவுத் தொழில் வளர்ந்தன. இதற்கு என்ன காரணம் பழந்தமிழன் மேற்கொண்ட உழவு முறை என்ன?
நூற்றாண்டுகள் கடந்த பின்பும் ‘உழவு’ என்ற செயல் அப்படியேதான் உள்ளது. உழவின் போது மேல் மண் கீழே செல்கிறது. கீழ் மண் மேலே வருகிறது. மண்ணின் இறுக்கம் தளர்ந்து காற்று மண்ணின் உள்ளே புகுகிறது. உழவால் மேல் மண்ணில் உள்ள புல், பூச்சிகள், செடி, கொடிகள், பூமிக்குள் சென்று விடுகிறது. பச்சையான அத்தாவரங்கள் பூமிக்குள் புதைந்து மண்ணிற்கு உரமாகிறது.
“அகல உழுதலின் ஆழ உழுதல் நன்று” என்று சொல்கிறது ஒரு பழமொழி
“யானையின் வாய் போன்ற கலப்பையில் உள்ள கொழு முழுமையும் மண்ணில் மூழ்கும்படி உழுவர்” என்ற செய்தியை,
“பிடிவாய் அன்ன மழவாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி”(பெரும்பாணாற்றுப்படை வரி 198-200)
பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலடி மூலம் காணமுடிகிறது.
இயற்கை உரம்
இன்றைய உழவுக்கு எத்தனையோ வகையான உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மையை வளர்க்கின்றனர். ஆனால், அவை அனைத்தும் இறுதியில் வினையாகவே (நோயாகவே) வந்து முடிகின்றன. இதிலிருந்து விலகி ஆரோக்கிய உணவை உற்பத்தி செய்ய மேற்கொண்ட விதம் என்ன?
சங்ககால உழவர்கள் பசுந்தழை உரத்தையும், கால்நடைகளின் சாணத்தில் இருந்து கிடைக்கும் எருவையும் உரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன்மூலம் நோய்களின்றி வாழ்ந்தான் என்பதனை குறள் வழி அறியலாம்.
“தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து
எருவும் வேண்டாது சாலப்படும்” (குறள்: 1037)
என்ற குறள் உழவின் மேன்மையையும், ஏரினும் நன்றாம் எரு இடுதல் என்ற குறள் எருவின் மேன்மையையும் விளக்குகிறது.
உயிர்களிடத்து அன்பு
பயிர் விதைத்தது முதல் அறுவடை வரை சங்ககால உழவர்கள் ‘தண்ணும்’ என்ற பறை போன்ற இசைக்கருவி மூலம் பேரோசை எழுப்பி, விளைந்த பயிரின் ஊடே கூடுகட்டி வாழும் பறவை இனங்களை விரட்டியிருக்கிறார்கள். இதனை,
“வெண்ணெல் அரிநர் தண்ணுடைய வெரீஇ
பழனப் புல்புள் இரிய…” (நற்றிணை பாடல் 350, வரிகள் 1-2)
என்ற நற்றிணைப் பாடல் வரிகள் விளக்குகின்றன.
இன்று இரசாயன வெடிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதன் விளைவு?
வேளாண்மை உற்பத்திப் பெருக்கம்
அன்று முதல் இன்றுவரை வேளாண்மையின் நோக்கம் தங்கள் உற்பத்தியைப் பெருக்குவதே நோக்கமாகக் கொண்டனர்.
சங்க கால உழவர்கள் “ஒரு பெண் யானை படுத்திருக்கும் அளவு இடத்தில் ஏழு களிறுகள் உண்ணும் அளவிற்கு நெல்லை விளைவித்தனர்” என்ற செய்தியை,
“ஒருபிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும்”(புறம் 40: 10, 11)
என்ற புறநானூற்றுப் பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன.
ஒரு நெல்மணி விதையில் இருந்து ஆயிரம் நெல்மணிகளை உற்பத்தி செய்து இருக்கிறார்கள் இதனை ‘முழுமேனி’ என்று அழைத்திருக்கின்றார்கள். ஒரு மரக்கால் விதைப்பாட்டில் அதாவது குறுனி நிலத்தில் ஒரு கோட்டை நெல்லை விளைவிப்பது தான் முழுமேனி மகசூலாகும். முழுமேனி நெல் அறுவடை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு சங்கத் தமிழர்கள் விவசாயம் செய்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு விதமான இடைவெளி தேவைப்படும்.
“நெல்லுக்கு நண்டு ஓட, வாழைக்கு வண்டி ஓட, தென்னைக்குத் தேர் ஓட” என்ற பழமொழி பயிருக்குப் பயிர் தேவைப்படும் இடைவெளியைக் கூறுகிறது.
இந்த வழிமுறையில் பழந்தமிழர் உழவு மேற்கொண்டான். இன்றைய விஞ்ஞானம் இதைத்தான் பரிந்துரைக்கிறது.
இன்றைய வேளாண்மை உற்பத்திக்குப் பழந்தமிழரின் தீர்வு
இயந்திரமயமாகிவிட்ட இன்றைய வேளாண்மையில் சென்ற நூற்றாண்டு வரை சங்ககால வேளாண் மரபுகளை மறந்து வருகின்றனர்.
நடவு முதல் அறுவடை வரை, மருந்து தெளித்தல் என்ற செயல் மட்டும் நடைபெற்றதாகச் சங்கப்பாடல்களில் குறிப்பு இல்லை. நிலம் மாசுபடாமல் இருந்ததால், சுற்றுச்சூழல் நன்றாக இருந்ததால், நன்னீர் பாய்ந்ததால், நோய்கள் எதுவும் தோன்றாததால் மருந்து தெளிப்பதும் தேவையற்றுப் போயிருக்கிறது.
ஊரின் நடுவிலும், பாதை ஓரங்களிலும், பொதுமக்களும் வழிப்போக்கர்களும் உண்டு பசியாறப் பழமரங்களை நட்டு வைத்து, அவற்றைப் பேணிப் பாதுகாத்திருக்கிறார்கள் சங்ககால மக்கள்.
‘பயன் மரம் உள்ளுர் பழத்தற்றால்’ (குறள்: 216) என்று வள்ளுவரும் பேசுகிறார்.
சாலையோரங்களில் பயணிகள், களைப்பின்றிப் பயணம் செய்ய ஏதுவாக நிழல் தரும் மரங்களையும் நட்டு வளர்த்திருக்கிறார்கள். இது தவிர, விலங்குகளும், கால்நடைகளும் தங்கள் தினவைப் போக்கிக் கொள்ள ‘மாதீண்டு குறுகல்’ என்ற கற்றூண்களையும் நட்டு வைத்திருக்கிறார்கள். இதனை,
“குறவர் முன்றில் மாதீண்டு துருகல்” (ஐங்குறு நூறு பாடல் 96, வரி 1)
என்ற ஐங்குநுறூற்றுப் பாடல் வரி பறைசாற்றுகிறது.
முடிவுரை
சங்ககால உழவர் பெருமக்கள், இயற்கையை மிகக்கூர்ந்து கவனித்திருக்கிறார்கள். மண்ணின் வகை தெரிந்து, அதற்கேற்றவாறு அம்மண்ணில் பயிர் செய்திருக்கிறார்கள். நிலம், நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப அறிவு சங்ககால உழவர்களுக்கு இருந்திருக்கிறது. அவர்களால் உழவுக்கும், உயிரினத்திற்கும் எந்த விளைவும் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்றைய வேளாண்மை உற்பத்தி மனிதனுக்கும், பிற உயிரினத்திற்கும் விளைவுகளை முன்வைக்கின்றன. இதனைப் போக்கிக்கொள்ள பழந்தமிழர் மேற்கொண்ட வேளாண் முறைகளைப் பயன்படுத்துவதே தீர்வாகும்.
பழந்தமிழ் வேளாண் மரபு |
இன்றையவேளாண்மை சிக்கல்கள் |
விதை (இயற்கை) |
விதை (கலப்பினம்) |
மண் |
மண் |
உழவு - மாடு |
உழவு (இயந்திரம்) |
எரு (இயற்கை உரம்) |
வேதியியல் உரங்கள் (செயற்கை உரம்) |
களை எடுத்தல் (மனிதன்) |
களைக்கொல்லி (மருந்து) |
பயிர் செழிப்பு |
பயிர் செழிப்பு |
இசைக்கருவி (பறவை விரட்டல்) |
வெடி வைத்தல் (பறவை விரட்டல்) |
இசைக்கருவி (பறவை விரட்டல்) |
வெடி வைத்தல் (பறவை விரட்டல்) காற்று மாசுபடுதல் |
அறுவடை (உயிர்காத்தல்) |
இயந்திரம் வழி அறுவடை (உயிர் அழிதல்) |
செல்வம் பெருகுதல் |
செல்வம் பெருகுதல் |
மீண்டும் விதைத்தல் (சுழற்சி முறை) - தாய்நாட்டு வளர்ச்சி |
மேலை நாட்டில் விதைவாங்குதல் (சுழற்சி முடக்கம்) - மேலை நாடு வளர்ச்சி |
துணைநூற்பட்டியல்
1. தொல்காப்பியம் தெளிவுரை, ச.வே.சுப்ரமணியன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2003
2. சங்க இலக்கியத்தில் அறிவியற்கலை, பி.எல்.சாமி, சேகர் பதிப்பகம், பதிப்பு:1928
3. அகநானூறு, உ.வே.சாமிநாதர் நூல் நிலையம், சென்னை, பதிப்பு:1990
4. கலித்தொகை மூலமும் உரையும், மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2000
5. நற்றிணை மூலமும் உரையும், எச்.வெங்கடராமன், உவே.சா. நிலையம், சென்னை, பதிப்பு:1990
6. புறநானூறு (மூ.உ), உ.வே.சாமிநாதர், உவே.சா. நிலையம், சென்னை, பதிப்பு:1971
7. பத்துப்பாட்டு (மூ.உ), உ.வே.சாமிநாதர், உவே.சா. நிலையம், சென்னை, பதிப்பு:1931
8. திருக்குறள், பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, பதிப்பு:2001
9. தமிழில் அறிவியல் அன்றும் இன்றும், ந.சுப்புரெட்டியார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, பதிப்பு:1990

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.