சங்க இலக்கியத்தில் புகை
முனைவர் தி. கல்பனாதேவி
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
ஆ. கோ. அ. கலைக்கல்லூரி, திண்டிவனம்.
தொடர்ச்சி - பகுதி 2
6. முனைப்புலம் சுடு - மாப்புகை
அதியமான் நெடுமான் அஞ்சியின் புறப்பாடலில், முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த இருட்சியை உடைய கரிய புகை, மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும் என்பதனை,
“முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூர் மஞ்சின் மழகளி றணியும்” (புறம், பா.எ. 103: 6 - 7, ப.236)
எனும் இவ்வடிகளால் அறியலாம்.
7. புகையினை உவமையாகக் கையாளுதல்
திருமுருகாற்றுப்படை உவமை கந்தருவரின் ஆடை திருஆவினன்குடி பதிகத்தினுள், கந்தருவர் அணிந்துள்ள ஆடையைக் குறிப்பிடும் இடத்து புகையை முகந்து கொண்டாலொத்த நுண்ணிய, அழுக்கேறாத, ஆடையை உடையவர் என்று இந்நூல் குறிப்பிடுகின்றது. புகை என்பதற்குப் பாலாவி என்றார். ஆடையின் நுண்மைக்கம், நிறத்பிற்கம் ஈண்டுப் புகை உவமையாகலான் ஏனைப் புகைகள் கருப் பொருளாய் கருமை முதலிய நிறமுடையனவாதலும் உண்மையின் அவை உவமையாகாது.
மேலே “ புகை விரிந்தன்ன பொங்கு துகில்”
(புறம், பா.எ.39: 1-6)
புறம் 391. 6 என்பதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
“புகைமுகந் தன்ன மாசில் துாவுடை”
(திருமுருகு, பா.அ.138 - 142, ப.77)
அடி, ப.13. எனும் அடி இதனை மெய்ப்பிக்கின்றது.
கலி - புகையழல் - அரக்கு மாளிகை
வடமொழிப் பெயர் பெற்ற வயக்குறு மண்டிலம் போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே, ஐவரென்று உலகத்தார் புகழுந் தன்ம புத்திரர் முதலியோர் உள்ளேயாகக், கையாலே புனையப்பட்ட களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிறுகள் உள்ளேயாக, உலர்ந்த மூங்கிலை உடைய உயர்ந்த மலையைச் சூழ்ந்த முழுங்குகின்ற அழலைக் கணையத்தை மாறுகின்ற தடக்கையினையுடைய தன் இனத்தைக் காக்கும் அழகினை உடைய வேழம், புகையழலை உடைத்தாகிய ஔ்ளிய உருவத்தினை உடைய அவ்வரக்கில்லை அந்த வீமசேனன் அழித்துத் தன் உள்ளத்திற்குப் பொருந்தின சுற்றத்தோடே பிழைக்கப் போகின்றவனைப் போல, அதர்படும்படி மிதித்துத் தம்முடைய திரளோடே கூடிப் போதுங் காட்டுப் பரப்புச் சூழ்ந்த குன்று அழலும் வெய்தாகிய சுரம் என்பதை, பாலைக்கலிப்பாடல் சான்று பகர்கின்றது.
“எழுவுறழ் தடக்கையின் இனங்காக்கு மெழில்லேழம்
அழவஞ்சூழ் புகையழல் அதரபட மிதித்துத்தங்”
(பாலைக்கலி, பா.எ.25:9-10, பக்.67- 68)
எனும் பாடலடிகள் புகையழலைச் சுட்டுகின்றது.
புகை உவமை - வெண் மேகங்கள் தவழ்தல்
அகம் களிற் குரவம் மலர்ந்து முன்பனிக்காலம் நீங்கப்பெற்ற அரிய செவ்வியை உடைய இளவேனில் காலத்தே, அறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிடத்தே, துறையை அழகு செய்யும் மருத மரங்களோடு தொகுதியாக உயர்ந்து, அழகு ஒழுகும் தளிரைக் கொண்ட பெரிய கிளைகளை உடைய மாமரத்தின், கொத்துக்களாக நெருங்கிய புதிய பூக்கள் செறிந்த சோலைகளிலே, புகையினை ஒழித்த அழகிய வெண் மேகங்கள் தவழ்ந்ததை, அகம் நிறுவுகின்றது.
“கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்
திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
புகைபுரை அம்மஞ் சூர”
(அகம், களிற், பா.எ.97: 20 - 22, ப.249)
எனும் இப்பாடலடிகள் புகையினை வெண்மேகங்கட்கு பயன்படுத்தியதைச் சுட்டுகின்றன.
8. சூளைப்புகை கிள்ளி வளவனின் தாழிப்புகை
ஐயூர் முடவனார் பாடலில் அடுகலம் வனையும் வேட்கோவே! சுடு கலம் வனையும் வேட்கோவே! இருள் நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய், திரண்டமிக்க புகை, அகலிய பெரிய ஆகாயத்தின் கண் சென்று தங்கும் சூளையையுடைய அகலிய இடத்தினை உடைய பழைய ஊரின்கண் கலம் வனையும் வேட்கோ என்று கலம் - சூளைப்புகை ஆனது புறப்பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. (புறம், பா.எ. 228:1 - 4, ப.62)
9. செங்கண் புகை
புறம் ஔவையார் தம் பாடலில், ஒரு அருவீரனின் வீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்துரைக்கின்றார். போர்க்களத்தில் துணையாக ஒருவரும் இல்லாமல் தான் ஒருவனே நின்று சிறப்புடைய தன் கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, தன் ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைகளைத் தடுக்கும் வலிமையுடையவன் என்பதை,
“சிறப்புடைச் செங்கண் புகையவோர்
தோல்கொண்டு மறைக்குஞ் சால்புடை யோனே” (புறம், பா.எ. 311: 6 - 7, ப.219)
என்று அவனின் சினப் புகையினை இங்கே குறிப்பிடுகின்றார்.
10. ஊர் எரி புகை
அண்டர் நடுங் கல்லினார் பாடலில் பண்பில் ஆண்மையாவது மக்கட்பண்பாகிய அருளும், அறமும் இன்றிக் கொலை விலங்கு போல உயிர்கட்குத் தீமை தருவது. ஒரு மகளைக் கொள்வோன், அவளுடைய தந்தை, தன்னையரைக் கொன்று, அவள் பிறந்த ஊரையும், மனையையும் தீக்கிரையாக்கிக் கோடல் பெரியதொரு பண்பில் செயல் என்று புறப்பாடல் சான்று பகர்கின்றது.
“புகைபடு கூரொடி பரப்பி பகைசெய்து
பண்பி லாண்மை தருத லொன்றோ” (புறம், பா.எ.344: 5 - 6: ப.288)
எனும் இவ்வடிகள் சான்று பகர்கின்றது.
ஊர் சுடு புகை
மேலும் பதிற் அம்புக்கட்டுடைமையால் கடத்தற்கரிய அகமதிலும் உடைய அகநகரை அழித்து ஊர் சுடு புகை படிந்த பகைவரை அட்ட செருக்கினால் விரிந்த மார்பினை உடையவன். 10. அட்டுமலர் மார்பன் எனும் தலைப்பில் “அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்” என்பதனால் அறியலாம். (பதிற், பா.எ.20: 21, ப.57)
11. ஈமவிளக்கு
காடு படர்ந்து கள்ளி மிகுந்து, பகற் தீயாகிய விளக்காலும், அகன்ற வாளையுடைய பேய் மகளிராலும், இந்தப் புகை தவழும் சுடுகாடு என்று கதையங் கண்ணனார் புறப்பாடல் சான்று பகர்கின்றது.
“ஈமவிளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகிடு” (புறம், பா.எ.356: 3 - 4: ப.311)
எனும் அடிகள் இதனை மெய்ப்பிக்கின்றது.
12. விண்மீன்கள் புகை
மதுரை நக்கீரர் பாடிய பெருஞ்சாத்தன் பாடலில், எப்படிப்பட்ட தீய நிலைகள் ஏற்பட்டாலும் இம்மன்னன் குறைவில்லாது சிறந்து வாழ்க என வாழ்த்தினார்.
வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும், குளமீனும், தாள்மீனுமாகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும், இம்மன்னன் பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய நகம் போலும் சோற்றை, பசிய துண்டுகளாகிய பொரிக்கறியும், சூட்டிறைச்சியுடனும் உண்டு விளைத்த ஒன்று வௌ்ளமென்னும் அளவிற்றாக விளையக் கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு வாழ்த்தினச் செய்தியை,
“மிகவானு ளெரிதோன்றினும்
குளமீனொடுந் தாட்புகையினும்” (புறம், பா.எ.395: 34 - 35: ப.444. செய்தி 1-11 அடிகள், ப.68)
எனும் புறப்பாடலடிகள் எரிகொள்ளிகள் எரிநட்சத்திரங்கள் இவற்றின் புகைகள் இங்கே சுட்டப் பெறுகின்றன. மண்ணிற்கு அழிவினைத் தரும் போது அவை தோன்றும். அப்படி அவை தோன்றினாலும் அம்மன்னன் அவன் தாளாண்மையால் சிறந்தே வாழ்வான் என்று அவனை வாழ்த்தும் போது இச்செய்தி இடம் பெறுகின்றது.
13. போர்ச் சுடு கமழ் புகை: பகை புலத்து எரி புகை
பதிற்றுப்பத்து அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்து முதல் பாடல். 1. குறுந்தாண் ஞாயில் போரின் கண்ணே சுடுதற்காக எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால் சுடு நாற்றம் நாறுகின்ற புகை, மிக்கெழுந்து பரந்து, திசைகளை மறைத்தது, என்பதனை, (மே, ப.340)
“ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப” (பதிற், பா.1: 9 - 10, ப.339)
இவ்வரிகள் சுட்டுகின்றன.
போருடற்றுவோர் பகைப்புலத்தே தீ வைத்தல் முறையாகலின், போர்ச்சுடு என்றார். இதனை எரிபரந்தெடுத்தல் என்றும், உழபுல வஞ்சி என்றும் ஆசிரியர் கூறுவர். ஊர் முழுவதும் எரி பரவுவதால் புகை மிக்கெழுந்து எம்மருங்கும் சூழ்ந்து கொள்ளும் திறத்தை, “உருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப” இனி, 'உருத்தெழுந்துரை ஊர் கவர” என்று இயைப்பினுமமையும் பழைய வுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர் எரி கவர எனக் கூட்டுக” பகைவர் ஊரிடத்தே நீ எடுத்த தீயானது அவ்வூர்களைக் கவர்ந்துண்ண, அதனால் எழுந்த பெரும்புகை மாதிரம் மறைக்க, நீ அப்பகைவருடைய எயிலை வௌவினை என்பார். (மே, ப.342)
14. மழைப்புகை
பெரும்பாணாற்றுப்படையில் குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்னைப் புரப்பாரைப் பெறாமல், பெய்கின்ற மழை துறத்தலாலே நிலத்தின் கண் எழுந்த ஆவி சூழ்ந்த மலையிடத்து என்பதனை,
“தண்கடல் வரைப்பி தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்” (பெரும், பா.அடி. 18 - 19, ப.17. செய்தி, ப.45)
எனும் இப்பாடல் அடிகள் சான்று பகர்கின்றன.
15. ஈயல் புகை
நற்றிணையில் அன்பு மிகுதலாலே உள்ளங் கலந்து நம்பால் விரும்பிய கொள்கையுடனே என்றுந் தன்னெஞ்சிலே எம்மை நினைந்துறையுங் காதலியினூர், பகற்பொழுதெல்லாம் சூழ ஆடை பரப்பி நின்று கலைத்த வழி வெளி வந்த உடும்பை ஈட்டியாலே குத்தி, மண்ணின் முழுகி மறைந்து கிடக்கும் வரிகளையுடைய நுணலையை மண் வெட்டியாலே பறித்தெடுத்து, நெடுகிய கோடுகளையுடைய புற்றுக்களை வெட்டிப் புகை மூட்டியை வைத்துழி வெளி வந்த ஈயலைத் தாழிலே பெய்து கொண்டு, வளை தடியாலே முயலையெறிந்து பற்றிய வேட்டுவன்.
ஈயல் பிடிப்பது கபிலர் முல்லை நிலப்பாடல் கோடுகளை ஒழுங்கு பெறச் செய்து சிதைத்து மேலே விழலால் முடிமீது சேற்றைப் பூசி ஒரு துளை வைத்து அதில் புகை மூட்டியை வைத்தூதினால் உள்ளிருந்த ஈயல் வெளிவரும். அங்கே வேறொரு புழை செய்து புகை போகும் வழியுண்டாக்கி அதில் ஒரு தாழியை வைத்திருந்தால் வந்த ஈயலெல்லாம் தாழியிலே படியும் என்பதாம். (நற், பக். 76 - 77)
“ உடும்பு கொளீஈ வரிநுணல் அகழ்ந்து
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி
எல்லுமுய லெறிந்த வேட்டுவன் அம்சுவல்
பல்வேறு பண்டத் தொடைமறந் தில்லத்து
இருமடைக் கள்ளின் இன்களி செருக்கும்” (நற், பா.எ.59: 1 - 5, ப.76)
எனும் பாடல் அடிகள் புகையினால் பெற்றப் பயனைக் குறிப்பிடுகின்றது.
16. தீய புகை
மலைபடுகடாம் மலையைச் சேர்ந்த வழியினை உடைய காட்டிடத்தே செல்லுங்கால் பரணகத்தேறி உயர இருக்கும் கானவன் எய்த கணையேறுண்டு, ஓடி நெய்யிழுதை ஒத்த வெள்ளிய நிணம் நெருக்குற்று, மார்பிடத்தே புண் மிக்கதாய், நிலத்தை அகழ்தலாலே மண்ணாற் தேய்க்கப்பட்ட கொம்பினை உடையதாய் நெறி கெட்டு வீழ்ந்து கிடக்கின்ற கரிய பிணரையுடைய கழுத்தினையுடைய இருளை அற்றுக் கிடந்தாலொத்த பன்றியைக் காண்பீராயின், அதனை உலர்ந்த மூங்கில் தம்முள் இழைந்தமையானே தோன்றிக் காடெங்கும் பரவிய தீயினாலே செறிந்த புகை நாறாதவாறு வாட்டி மயிர் போகச் சீவித்தின்று என்று பதிவிடுகின்றது. நளிபுகை - செறிந்த புகை. புகை கமழ்தலாவது வாட்டுங்கால் புகை மிக்குத் தசையின் சுவையினைக் கெடச் செய்தல். தீயினில் வாட்டி வதக்குதல். (மலை, ப.105)
“முளிகழை இழைந்த காடுபடு தீயின்
நளிபுகை கமழா திறாயினர் மிசைந்து” (மலை, பா.அடி 248 - 249, ப.22)
எனும் அடிகள் இந்தச் செய்தியினைத் தெரிவிக்கின்றது.
17. பல மணம் நாறும் புகை
புறம் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடலில் நின் பகைவரது நாட்டைச் சுடும் பல மணம் நாறும் புகையுறைதலான் வாடுக நினது சினம் என்பதனை,
“வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே” (புறம், பா.எ.6, 21 - 22, ப.16)
எனும் இவ்வடிகள் இதனைப் பதிவிடுகின்றது.
18. நிணஞ்சுடு புகை
மேலும் பதிற் 3. ஏறாவேணி எனும் தலைப்பில் நிணஞ்சுடு புகை பதிவாகியுள்ளது. வளவிய கொடையினை உடைய அரசே துாங்கலோசைத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவினையும், நிணத்தைச் சுடுகின்ற புகை நாற்றத்துடன் இருந்ததைப் பதிவிடுகின்றது. அக்காலத்தில் கள்ளுண்பார்க்கு நிணமும் உடனுண்ண வழங்குபவாதலின் “நிணஞ்சுடு புகை” என்றார். (பதிற், பா.எ.43: 32, ப.194)
19. மீன் சுடு புகை
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை மருதனிளநாகனார் பாடிய பாடலில் ஊார் தொறும் மீன் சுடுகின்ற புகையினது புலால் நாறும் நெடிய ஒழுங்கு வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சுழ்ந்தது என்பதைப் “ஊர்தோறும் மீன்சுடு புகையின் ” பதிவிடுகின்றது. (புறம், பா.எ.52: 8 - 9, ப.136)
நற்றிணையில் உலோச்சனார் பாடலில் நம் மூதுார் ஆனது கொழுத்த மீன் சுடு புகை ஆனது தெருக்களினுள்ளே கலந்து காணப்படுகின்றது என்பதனை, “கொழுமீன் சுடுபுகை” என்பதைப் பதிவிடுகின்றது. (நற், பா.எ.311, 6, ப.384)
20. புகை நிழலை ஒக்கும் தலைவியின் கண்கள்
அகம் மணி நெய்தல் நிலப்பாடலில் புகைநிழல் கடுக்கும் என்பதனால் புதுக்கொல்லை ஆக்க முயலும் குறவன் மரங்களைச் சுட்டெரிக்கும் தீயின் புகை நிழலை ஒக்கும் தலைவியின் கண்கள் என்கின்றது. பழுப்பேறிய கண்கள். (அகம், மணி, பா..எ.140: 11, ப.51)
பதிற் மூன்றாம் பத்து 5. நிரைய வெள்ளம் எனும் தலைப்பில் உள்ள பாடலில் போர் முனைப்பட்ட ஊர்களில் தீப்பரவக் கொளுத்தி அழிக்க எழுந்த நெருங்குதற்கரிய சினத்துடன் காற்று மோதுதலால் கொடி விட்டெழும் பிசிராக உடைந்து நிறமமைந்த புகை கெட்டதை “கொடிவிடு குரூஉப்புகை” எனும் அடி மெய்ப்பிக்கின்றது.(பதிற், பா.எ.15: 6, ப.29)
இவ்விதமாக சங்க இலக்கியத்தில் பல்வேறு வகையில் புகை எனும் சொல்லாட்சியின் பயன்பாட்டினைப் பயன்படுத்தியுள்ளதை நாம் அறியலாம்.
(நிறைவடைந்தது)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.