பழந்தமிழரின் அரசியல் அறிவு மரபு
கு. பிரகாஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர் (ப/நே), தமிழ்த்துறை,
அ. அ.அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர்-636 121.
முன்னுரை
ஒரு சமுதாயத்தின் மக்கள் வெவ்வேறு கொள்கைகளை மேற்கொண்டவர்களாக இருந்த நிலையில், அவர்களை ஒழுங்கு பெறச்செய்து, ஒரு அரசின் கீழ் கொண்டுவருதல் வேண்டும். இத்தகைய அமைப்பைக் கொண்டுவர நாடும் நாட்டிற்கு அரசும் தேவைப்பட்டன. நாட்டின் அரசு தலைச்சிறந்த நல்லமைப்புடனும், நீதி நெறிகளுடனும் தகுந்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். நாடும் அரசும் மேன்மை பெற்ற சமூகத்தை உருவாக்கி மக்களின் வாழ்க்கை முறையை உயர்த்துதல் வேண்டும் என்று பழந்தமிழர்கள் தங்களுக்குள் அரசியல் அறிவை இலக்கணமாக வகுத்துக் கொண்டனர்.
பழந்தமிழகத்தில் மக்களுக்கு மன்னன் உயிராகவும், மன்னனுக்கு மக்கள் உயிராகவும் விளங்கினர். பிறரால் விளையும் தீமையை விட ஆள்பவர் தீச்செயலால் மக்கள் அடையும் துன்பம் கொடுமையானது என்றும், ஆள்பவர் சரியில்லை என்றால் சமூகம் துன்பமுறும் என்பதை பழந்தமிழர் நன்கு உணர்ந்தனர். இதனை,
‘ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்’ (கலி.5:13)
என்ற பாடலடி விளக்குகிறது.
தலைமைப் பண்புகள்
முக்கியத்துவம் வாய்ந்த தலைமைக்கென்று சில அடிப்படைப் பண்புகளையும், தகுதிகளையும் பழந்தமிழர்கள் வரையறை செய்துள்ளனர். பழந்தமிழ் நூல்களில் பெருவேந்தர்கள் ஆளுமை நிறைந்தவர்களாகவே குறிக்கப்பட்டிருக்கின்றனர். சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டதாக விளங்கும் தொல்காப்பியமும்
‘போந்தே வேம்பே ஆரென வரூஉம்,
மாபெரும் தானையர்’ (தொல்.1006)
என்று அரசர்களை அடையாளப்படுத்துகின்றது. படை வலிமையும், கோட்டை, கொத்தளங்களும், வலியுடைய அரண்களும் அமையப்பெற்ற, செல்வவளம் மிக்கதாக அரசின் தலைமை சுட்டப்படுகின்றன.
“வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
… … … … … … … … … … …
அறநெறி முதற்றே ய்ரசின் கொற்றம்” (புறம்.55:6-10)
மேலும் தலைமை வேந்தர், அறத்தை மிகுதியாகச் செய்து தனது நாட்டில் வாழும் மக்கள் தம்முள் மற்றவரைத் துன்புறுத்தாமலும், மற்றவர்க்கு உரிமையுடைய, தமக்கு உரிமையில்லாதப் பொருளை விரும்பாமலும், குற்றம் இல்லாத அறிவு உடையவராய்ச் செம்மை நெறியில் தவறாது, தம்மிடம் அன்புடன் வாழும் வாழ்க்கைத் துணையைப் பிரியாமல் இருக்கவும், அனைவருக்கும் பங்கிட்டு தாமும் உண்டு இனிது வாழ, மூத்த உடலும் நோயும் இல்லாது, கடலும் காடும் தம்மிடத்து உண்டாகும் பொருள் பலவும் உதவ, அரசியலை முறையேச் செலுத்தி ஆளும் தலைமைப் பண்பை,
“தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப் பொருள் வெஃகாது
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்” (பதிற்று 22.5-11)
என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
எக்காலத்திற்கும் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்ய விரும்பும் வேந்தன் தனக்குரிய தலைமைப் பண்புகளைத் தவறாது பெற்றிருக்க வேண்டும் என்பது பழந்தமிழர் கண்ட அரசியல் அறிவாகும்.
பழிச்சொல்லுக்கு வேந்தர் அஞ்சுதல்
தான் அரசாட்சி மேற்கொள்ளும் நாட்டில் அனைத்து மக்களும் செழுமை பெற்று வாழவேண்டும். அவ்வாறின்றி மாறாக வறுமை நிகழ்ந்தால், அம்மக்கள் மன்னனின் ஆட்சி முறையையேப் பழித்துக் கூறுவர்,
நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் பருவமழை தவறாது பொழியும் என்று பழந்தமிழர்களிடம் நம்பிக்கை நிலவி வந்தது.
“கோஓல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயர்பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே” (புறம்.117:6-7)
என்றும், நாட்டில் பருவ மழை பொய்த்தாலும், நாட்டின் வருவாய் குறைந்தாலும், இயற்கைக்கு மாறான செயற்கைத் தீங்குகள் நிகழ்ந்தாலும் மக்கள் அரசனையும் அவனது அரசியல் அறிவையும் பழிக்கும் உரிமையுடையவராய் திகழ்ந்தனர், என்பதை
“குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே” (புறம்.75:4-5)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
மக்களின் பழிச் சொல்லுக்கு மன்னன் அஞ்சினான் என்று குறிப்பிடுகிறது, தன் நாட்டின் குடிகளை நன்னடத்தை உடையவர்களாக, தன்னோடு விளங்கச் செய்தல் அரசனின் அறிவுமரபாக வலியுறுத்தப்பட்டதை,
“நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (புறம்.312:4)
என்ற பாடலடி சுட்டிக்காட்டுகிறது.
நடுவுநிலை வேந்தர்
அருளையும் அன்பையும் நீக்கி, பாவம் செய்து நீங்காத நரகத்தை அடைபவருடன் சேராது, தான் ஆட்சி செய்து காக்கும் நாட்டை, ஒரு குழந்தை வளர்ப்பது போல நடுவுநிலைமையோடு காப்பது மன்னனின் அரசியல் அறிவு என்பதை,
“அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஒம்புமதி” (புறம்.5.5-7)
என்று நரிவெரூஉத்தலையார் குறிப்பிடுகிறார்.
“குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்” (குறள். 549)
என்று வள்ளுவரும் சுட்டுகிறார். மேலும் ‘செங்கோண்மை’ என்று நடுவு நிலை வேந்தர்களுக்குத் தனி அதிகாரமே இயற்றி விளக்கியுள்ளார்.
அரசியல் ஆளுமை
மக்களின் எண்ணத்திற்கு உருக்கொடுத்து, செயல்திறன் உடைய, ஆளுமை உடைய அரசன் திகழவேண்டும். பழந்தமிழர்கள் ‘இதனை முடிக்காவிடில் இன்னோன் ஆகுவேன் என்று வஞ்சினம் கூறும் ஆளுமை பெற்றவராய் திகழ்ந்தனர்.
எண்ணியது முடிக்காவிடில், தாம் ஆளும் குடி தம்மை கொடுங்கோலனென்று பழிதுற்றட்டும் என்றும், தாம் தலைமையைப் புலவர் பாடாது போகட்டும் என்றும், தம் மக்கள் இரப்போர்க்கு ஈய இயலா இழிநிலையான வறுமையை எய்தட்டும் என்றும் வஞ்சினம் கூறினர் என்பதை,
“குடிபழி தூற்றம் கோலேன் ஆககு
புலவர் பாடாது வரைக என் நிலவரை” (புறம்,72.12,13)
என்ற பாடலடியும்,
“புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயர இன்மையான் உறவே” (புறம்.72.17,18)
என்ற பாடலடிகள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மொழியும் ஆளும் வஞ்சினம் குறிப்பிடப்படுகின்றன.
அரசியல் பிழையாமை
தனது ஆளுமையின் கீழ் நிகழும் ஆட்சியானது, மக்கள் சுவைத்திடும் நல்லாட்சியாக இருக்க வேண்டுமெனில் பழந்தமிழர்கள் குறிப்பிடும் அரசியல் பிழையாமை என்ற அறிவைப் பெற வேண்டும். அரசியலில் நேர்மையும், அறவுணர்வும் அரசன் பெற்றிருக்க வேண்டும் என்பதை,
“அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்ன’’ (அகம்.188.4)
என்ற பாடலடி சுட்டுகிறது.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்” (சிலம்பு,பதிகம் 55-56)
சிலப்பதிகாரம் இயற்றப்படுதற்கு ஆசிரியல் கூறும் மூன்று காரணங்களுள் பதிற்றுப்பத்தும் மன்னன் அரசியல் பிழையாமை வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
“அரசியல் பிழையாது செருமோத் தோன்றி” (89.12)
மேலும்,
“அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது” (மதுரைகாஞ்சி 191-192)
என்றும்,
“கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு” (குறள். 554)
என்று எச்சரிக்கை விடுத்தும்,
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (குறள்.388)
என்ற குறளில் முறைசெய்து காப்பாற்றும் மன்னவனை தெய்வத்திற்கு ஒப்பாக எண்ணிப் போற்றியது பழந்தமிழ்ச் சமூகமாகும்.
காட்சிக்கு எளிமை
பழந்தமிழகத்தில், அரசன் என்பவன் காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் அற்றவனாக இருந்தான். இதனால் குடிமக்களுக்கும் அரசனுக்கும் நல்லுறவு ஏற்பட்டன. அரசனைச் சென்று காணும் அரசியல் அமைப்பினைக் கொண்டதே நல்லாட்சி என்று இலக்கணம் வகுக்கப்பட்டது.
கண்ணகி, பாண்டியனிடம் நேரடியாகச் சென்று தன் குறைகளைக் சொல்ல அரண்மனை புகுவதும், பாண்டியனும் தடையேதும் கூறாது. கண்ணகியை அழைத்துவர அனுமதிப்பதும், காட்சிக்கு எளிமையானவன் என்பதை உணர்த்துகிறது.
புறநானூற்றுப் பாடலொன்றில் ஔவையார், அதியமானை தம்மக்களுக்குக் காட்சிக்கு எளியவனாகவும், பகைவர்க்கு அருமையானவனாகவும் விளக்கியதை,
“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னரும் கடாஆம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே" (புறம்.94)
இப்பாடலடிகள் சுட்டுகின்றன.
பகுத்து வழங்கும் பண்பு பிறர் உற்ற துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பம் போல எண்ணும் எண்ணமே அரசனை உயர்நிலைக்குத் தூண்டுவதாகும், இதனை,
“பிறர்க்கு என முயலும் பேரருள் நெஞசம்” (நற். 186:8)
என்ற பாடலடி சுட்டுகின்றன.
“பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்துவற்றுள் எல்லாம் தலை” (குறள். 322)
என்று வள்ளுவரும் சுட்டுகிறார்.
உண்டாரை நீண்ட நாள் வாழவைக்கும் நெல்லிக்கனியை அரிதிற் பெற்று வந்தும், தானுண்ணாமல், தன்பால் அன்புகொண்ட ஔவைக்கு கொடுத்தது (புறம்.91) பகுத்துண்டு வாழ்வதற்கான சரியான அரசியல் நெறியாகும். இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தனியே உண்ணாத குணம் கொண்டவர் பழந்தமிழர் (புறம். 182) என்று குறிப்பிடுகின்றன.
பொருளாதார வல்லமை
நாட்டின் பொருளாதாரம், மக்கள் வளம், வருவாய் வழிகளைக் கண்டறிதல் மற்றும் பெருக்குதல், பொருளாதார மேம்பாடு, வருவாய்ப் பகிர்வு, அடிப்படை மூலதனங்களைக் காத்தல் மற்றும் பெருக்குதல், இயற்கை வளம் பேணுதல், பாதுகாப்பு, தனிமனித உரிமை மற்றும் செயல்பாடுகள், நீதி கல்வி, சுதந்திரம், சமத்துவம், பால், இன இட வேறுபாடின்மை ஆகியவற்றை கொண்ட நாட்டைத் தன்னிறைவு கொண்டதாகவும், பொருளாதார வல்லமை கொண்டதாகவும் உயர்ந்த அடிப்படை அரசியல் அறிவாக அமைகின்றன.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்துலும் வல்ல தரசு” (குறள்.385)
என்று வள்ளுவர் வகுத்த இக்குறள் ஒன்றே சான்றாகக் கூறலாம்.
“உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்” (குறள்.756)
என்ற குறள், பூமியில் கண்டெடுக்கப்பட்ட பொருள், வாரிசு இல்லாதோர் பொருள். ‘உறுபொருள்’ என்றும், வாணிகச் சாத்துகளிடமிருந்து பெறும் வரி ‘உல்கு’ பொருளென்றும், பகைவரை வென்று அந்நாட்டிலிருந்து கொண்டுவரும் பொருள் ‘தெறுபொருள்’ என்றும் வழங்கப்பட்டன. அரசு அவற்றைப் பெற்றுப் பொருளாதரத்தை வல்லமைப்படுத்தினார்கள்.
முடிவுரை
பழந்தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்கள் மக்களிடம் மனிதவளத்தையும், மக்கள் நல்வாழ்வையும், அவர்களுக்குப் போர்க்காலத்தில் குடிநீர் வசதியும், மருத்துவமுறையும், வயது முதிந்துவரைப் போற்றியும், பெண்களைப் பேணுதல், சமூகத்தில் நிகழ்ந்த அநீதிகளைக் களைத்து, நீதியை நிலைநாட்டி நடுவுநிலை தவறாது அரசியலில் அறிவு மரபை பழந்தமிழர்கள் கடைபிடித்து வந்துள்ளனர் என்பது மேற்கண்ட இலக்கியச் சான்றுகள் இக்கால அரசியல் முறையில் பின்தொடர்ந்து வந்தால், என்றும் நல்லாட்சி முறையேத் தொடரும்.
துணை நூற்பட்டியல்
1. புறநானூறு மூலமும் உரையும், சாமிநாதையர், உ.வே. (பதிப்பு:1971)
2. இலக்கிய அரசியல்,செல்வராசு, சிலம்பு.நா. அனிச்சம் பதிப்பகம், புதுச்சேரி, (பதிப்பு:1997)
3. தமிழக வரலாறு சங்ககாலம், அரசியல், த.நா.பா.நிறுவன, சென்னை-06 (பதிப்பு:1983)
4. தமிழர் வாழ்வியல், சிவகாமி.ச. மாதவி பதிப்பகம், சென்னை (பதிப்பு:1998)
5. பண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை, பாலசுந்தரம்பிள்ளை, கழகவெளியீடு, சென்னை, (பதிப்பு:1966)
6. திருக்குறள், பரிமேலழகர் உரை, கழகவெளியீடு, (11ஆம்பதிப்பு:1976)
7. சங்க இலக்கியம் - சில பார்வைகள், பாலசுப்பிரமயின், சி. நறுமலர் பதிப்பகம், சென்னை (பதிப்பு:1989)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.